இருளும் ஒளியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2024
பார்வையிட்டோர்: 209 
 
 

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

6. வீணாகானம்

சாவித்திரி -ரகுபதி விவாகம் ‘ஜாம், ஜாம்’ என்று நடந்தேறியது. பணத்தைப் ‘பணம்’ என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். சம்பந்தி வர்க்கத்திலும், ‘நொட்டைச் சொல்’ சொல்ல யாரும் இல்லை. ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைத்தனர். அவ்வளவு தடபுடலாகக் கல்யாணம் நடைபெறுவதில் அவர்களுக்குப் பரமதிருப்தி.

அன்று சித்திரை மாதத்துப் பௌர்ணமி. பால் போன்ற நிலவொளியில் அந்த ஊரும் அதன் சுற்றுப்புறங்களும் மூழ்கிக் கிடந்தது. அந்த ஊரில் பல இடங்களில் கல்யாணம். நாதஸ்வரத்தின் இன்னிசையும் நிலவின் குளுமையும், ‘கம்’மென்று காதவழிக்கு வாசனை வீசும் மல்லிகை மலர்களுமாகச் சேர்ந்து ஸ்வர்க்கத்தில் இவ்வளவு இன்பம் உண்டா என்கிற சந்தேகத்தை எழுப்பின. ராஜமையர் பூந்தோட்டத்திலிருந்து குண்டு மல்லிகையாகவே கல்யாணத்திற்கு வரவழைத்திருந்தார். கரு நாகம்போல் வளைந்து துவளும் பெண்களின் ஜடைகளின் மீது வெள்ளை வெளேர் என்று மணம் வீசும் மல்லிகையின் அகு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. முகூர்த்தத்தன்று இரவு விருந்துக்கு அப்புறம், கொட்டாரப் பந்தலில் ஊஞ்சலில் பெண்ணையும், பிள்ளையையும் உட்கார வைத்தார்கள். ஊஞ்சல் வேடிக்கையை ரசிப்பதற்கு ஆண்களை விடப் பெண்களின் கூட்டமே வழக்கம்போல் அதிகமாக இருந்தது.

” என்னடி இது? ஊஞ்சலில் அவர்களை உட்கார்த்திவைத்து விட்டு எல்லோரும் பேசாமல் இருக்கிறீர்கள்? நறுக்கென்று நாலு பாட்டுகள் பாடமாட்டீர்களோ” என்று கூறிவிட்டு ‘கன்னூஞ்சல் ஆடினாரே, மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ என்று இரண்டு கட்டை ஸ்ருதியில் பாட ஆரம்பித்தாள் பெரிய சுமங்கலியாகிய ஒரு அம்மாள்.

யுவதிகள் கூட்டத்திலிருந்து கலீர் என்று சிரிப்பொலி எழுந்தது. பொங்கிவந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டுச் சீதா அடக்கிக்கொண்டு. “ஸரஸு! பாட்டுத் தெரிந்தும் பாடாமல் இருப்பவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை! புரிந்ததா உனக்கு?” என்று கேட்டாள். ஊஞ்சல் பாட்டை அரைகுறை பாக நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த அம்மாள், ‘லாலி –லாலய்ய லாலி’ என்று ஆரம்பிக்கவே, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ராஜமையர் சுவாதீனமாக அவளைப் பார்த்து, “அம்மாமி! வருகிற மாசந்தானே மாமாவுக்குச் சஷ்டியப்த பூர்த்தி? ஜமாய்த்துத் தள்ளிவிடுவாய்போல் இருக்கிறதே!” என்று கேலி செய்தார்.

“போடா அப்பா! சிறுசுகள் எல்லாம் பாடாமல் உட்கார்ந்திருந்தால் கிழவிதானே பாடவேண்டும்?” என்று கூறி அந்தப் பாட்டையும் அரைகுறையாகவே நிறுத்தி விட்டாள், அந்த அம்மாள்.

இதற்குள்ளாகச் சந்துருவின் கண்கள் ஆயிரம் முறை ஸரஸ்வதியின் பக்கம் பார்த்து, ‘உன் கானத்தைக் கேட்பதற்காகவே தவம் கிடக்கிறேனே’ என்று சொல்லாமல் சொல்லின. புன்னகை ததும்ப நிலத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்த ஸரஸ்வதி திடீரென்று நிமிர்ந்து பார்த்து, “சாவித்திரி! பெண் பார்க்க வந்த அன்றே எங்களை எல்லாம் நீ ஏமாற்றி விட்டாய். அத்தானுடைய விருப்பப்படி என்னிடந்தான் நீ பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பாட்டு உனக்குத் தெரிந்தவரையில் பாடு பார்க்கலாம்” என்று கொஞ்சுதலாகக் கூறினாள்.

எதிலும் கலந்து கொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாவித்திரி, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்: பிறகு கடுகடுவென்றிருந்த முசுபாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டு புன்சிரிப்புடன், “எனக்குத் தெரியாது என்று அன்றே சொல்லி இருக்கிறேனே” என்றாள்.

“பேஷ், பேஷ்… பாட்டு பாட்டு என்று மாய்ந்துபோனவனுக்கு இந்த மாதிரி மனைவியா வந்து வாய்க்க வேண்டும்? ரொம்ப அழகுதான் போ” என்று ரகுபதியின் அத்தை பரிகாசம் செய்யவே, சாவித்திரிக்கு ரோஷம் பொத்துக்கொண்டது. சிறிது அதட்டலாக, “எனக்குப் பாடத் தெரியாது என்றால் பேசாமல் விட்டுவிட வேண்டும். இது என்ன தொந்தரவு?” என்று கூறி முகத்தை ‘உர்’ ரென்று வைத்துக்கொண்டாள்.

இதுவரையில் பேசாதிருந்த ரகுபதி ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி, “ஸரஸு! நீதான் பாடேன். இதில் நான், நீ என்று போட்டிக்கு என்ன இருக்கிறது?” என்று கூறினான்.

ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே உள்ளே போய்த் தன் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் நின்று இதுகாறும் ஸரஸ்வதியின் பரிகாசங்களைக் கவனித்துவந்த சந்துரு பந்தலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.

ஸ்ருதி சேர்த்து முடிந்ததும் ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, “அத்தான்! எந்தப் பாட்டை வாசிக்கட்டும்?” என்று கேட்டாள். அதற்குள் ராஜமையர், ”குழந்தை! ‘ஷண்முகப்-பிரியா’ ராகத்தை நீ அற்புதமாக வாசிப்பாயாமே. எல்லோரும் சொல்லுகிறார்கள்: அதையே வாசி, அம்மா கேட்கலாம்” என்றார்.

வீணையின் மதுர ஒலி, அந்த மோகன நிலவிலே தேவலோகத்துக் கின்னரர்கள் எழுப்பும் யாழின் ஒலிபோல் இருந்தது. குழந்தைகள் கொஞ்சும் மழலையைப்போல் மனதுக்கு இன்பமளித்தது. மகான்களின் உபதேச மொழிகளைக் கேட்டு ஆறுதல் கொள்ளும் மன நிலையை அங்குள்ளவர்கள் அடைந்தார்கள். தெய்வ சந்நிதானத்தில் நிற்கும் பரவச நிலையைச் சிலர் அடைந்தார்கள். சந்துருவின் உள்ளம் கிளுகிளுத்தது. நொடிக்கொரு முறை அன்புடன் ஸரஸ்வதியை அவன் பார்த்த போது அவன் பார்வையின் தாக்குதலைச் சகிக்க முடியாமல் ஸரஸ்வதி தலையைக் குனிந்து கொண்டே பாடினாள்.

வெளியே பாலைப் பொழிவதுபோல் நிலவு வீசிக்கொண்டிருந்தது. களி நடனம் புரியும் மோகன சந்திரிகையிலே, ஸரஸ்வதியின் குரல் இனிமையோடு, இழைந்து வரும் வீணா கானம் ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொருவிதமான உணர்ச்சியை ஊறச் செய்தது.

‘ஷண்முகப்பிரியா’ ராகத்தில், ‘வள்ளி நாயகனே’ என்கிற கீர்த்தனத்தை முடித்த ஸரஸ்வதி ‘சங்கராபரண’ த்தில் ஒரு ஜாவளியையும் வாசித்தாள். மதுர கீதத்தைப் பருகியவாறு அங்கிருந்தவர்கள் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர்.

7. ரகுபதியின் கடிதம்

கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் ‘கலீர், கலீர்’ என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, சந்துருவின் மனதில் அழியாத ஓவியமாகப் பதிந்து விட்டன. தனிமையில் உட்கார்ந்து அவன் மானசிகமாக ஸரஸ்வதியை நினைத்து. நினைத்துப் பார்த்துக் களிப்பெய்தினான், அவளைப்பற்றி வீட்டிலே யாராவது பேசிக் கொண்டிருந்தால் ஆனந்தம் பொங்க அங்கு நின்று அதை முற்றும் கேட்டு விட்டுத்தான் நகருவான். படிக்கும் போது ஒருவருக்கும் தெரியாமல் காகிதத்தில், ‘ஸரஸ்வதி, ஸரஸ்வதி’ என்று எழுதிப் பார்ப்பதில் அவன் மனம் திருப்தியடைந்தது.

கல்யாணமெல்லாம் கழித்து, பாலம் டில்லிக்குப் புறப்படுவதற்கு முதல் தினம் சாப்பிடும் கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். சீதா கல்யாண அவசரத்தில் ஸரஸ்வதியிடமிருந்து புதுப் பாட்டுகளாக இரண்டு கற்றுக் கொண்டிருந்தாள். பூஜை அறையில் அவள் தம்பூரை மீட்டி அதைப் பாடும்போது சந்துரு அங்கு வந்து சேர்ந்தான். பாட்டைச் சிறிது நேரம் கேட்டுவிட்டு அவன், “இந்தப் பாட்டில் தானே அநுபல்லவியில் ‘நிரவல்’ செய்தாள் ஸரஸ்வதி? அபாரமாக இருந்தது. இப்பொழுது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சீதா” என்றான் அவன்.

“செதுக்கி எடுத்த சிலை மாதிரி மூக்கும், விழியும், பாவம், பச்சைக் கிளிமாதிரி இருக்கிறது அந்தப் பெண்; கால்கூட அப்படி ஒன்றும் ஊனம் இல்லை; வெளியிலே ஒன்றும் தெரியவில்லை. ஒரே பிடிவாதமாகக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளாமே. நான்கூட என் மைத்துனனுக்குப் பண்ணிக்கொள்ளலாம் என்று சம்பந்தி அம்மாளை விசாரித்துப் பார்த்தேன்” என்றாள் பாலம்.

“தகப்பனார் வெளிநாட்டில் இருக்கிறாராம். மாசம் இந்தப் பொண்ணுக்கென்று நூறு ரூபாய் அனுப்புகிறாராம். கல்யாணத்துக்கென்று பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாராம்! ‘ பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விடுகிறேன் அத்தை’ என்று சொல்லுகிறதாம் அந்தப் பெண்! அங்கங்கே கல்யாணத்துக்குப் பணமில்லாமல் பெண்கள் நிற்கறதுகள். இது என்னடா என்றால் புதுமாதிரியாக இருக்கிறது’ என்று மங்களம் நாத்தனாரிடம் சொல்லி அதிசயப்பட்டாள்.

“அதிசயந்தான்! இந்தக் காலத்தில் பெண்களும், பிள்ளைகளும், கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது ஒரு ‘பாஷன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறதுகள். நம்ப சுப்பரமணியின் பெண்ணும் பி. ஏ. பாஸ் பண்ணிவிட்டு ஆபீஸுக்குப் போய் உத்தியோகம் பண்ணுகிறதாமே! ‘ஏண்டி புருஷாள் எல்லாம் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறாளே, நீ ஆபீஸுக்குப் போய்ச் சம்பாதித்துத்தான் ஆகவேண்டுமாடி?’ என்று கேட்டால், ‘எதற்கெடுத்தாலும் புருஷன் கையை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?’ என்று கேட்கிறாளே! அதிசயந்தாண்டி அம்மா. என் காலத்திலே புருஷனுக்குத் தெரியாமல் நாலு காசு வைத்துக்கொள்ளத் தெரியாதே எனக்கு?” என்று சொல்லி மிகவும் அதிசயப்பட்டாள் பாட்டி.

”இதல்லாம் ஒன்றும் அதிசயம் இல்லை பாட்டி. நீ அத்தையுடன் வடநாட்டுக்குப் போய் அங்கே நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காமல் காப்பியையே விட்டுவிட்டு வரப்போகிறாயே, அது தான் ரொம்பவும் அதிசயம் பாட்டி! காசிக்குப் போனால் தனக்குப் பிடித்தமான பண்டம் எதையாவது சாப்பிடுவதில்லை என்று விட்டுவிட வேண்டுமே. காப்பியை விட்டுத் தொலைத்து விடேன்” என்று சீதா பாட்டியைக் கேலி செய்தாள்.

பாட்டியும், பாலத்துடன் காசி க்ஷேத்திரத்தைத் தரிசிக்கப் புறப்பட ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள். ‘அங்கே போனால் கோதுமை ரொட்டிதான் சாப்பிடவேண்டும்’ என்று சாவித்திரி பயமுறுத்தினாள் பாட்டியை. ‘நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காது’ என்று சீதா பயமுறுத்தினாள். ‘எச்சில், விழுப்பு ஒன்றும் பார்க்கக்கூடாது’ என்று சந்துரு மிரட்டினான்.

“நீ பேசாமல் இரு அம்மா. அதுகள் தமாஷுக்குச் சொல்லுகிறதுகள்” என்று பாலம் தாயாரைச் சமாதானப்படுத்தினாள். மாமியாரும், நாத்தனாரும் ஊருக்குக் கிளம்பியதுமே வீடு வெறிச் சென்று போய்விட்டது மங்களத்துக்கு. இன்னும் இரண்டொரு மாதங்களில் சாவித்திரியும் புக்ககம் கிளம்பிவிடுவாளே! மங்களம் இதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.

அம்மாவுக்குப் பாட்டியின் துணப்பன் இல்லாமல் பாத்த, பாசு இருக்காது போல் இருக்கிறது” என்று சந்துரு தாயைக் கேலி செய்தான்.

பாட்டியும், பாலமும் ஊருக்குச் சென்ற ஒரு மாதத்துக்கு அப்புறம் சம்பந்தி வீட்டாரிடமிருந்து ராஜமையருக்குக் கடிதம் வந்தது. அதில் சாவித்திரியை நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.

“எல்லோரும் இப்படி ஒரேயடியாய்க் கிளம்பிவிட்டால் நான் எப்படி ஒண்டியாக இருக்கிறது இந்த வீட்டில்? சந்துரு அவன்பாட்டுக்கு மாடி அறையில் உட்கார்ந்து இருப்பான். சீதாவுக்கு ஹிந்தி வகுப்புக்குப் போகவும், சங்கீதப் பள்ளிக் சுடத்துக்குப் போகவுமே பொழுது சரியாக இருக்கிறது. கொட்டுக் கொட்டென்று வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு எப்படி இருக்கிறது?” என்று மங்களம் அலுத்துக்கொண்டாள்.

கடிதத்தின் வாசகத்தை உரக்க ஒரு தரம் மனைவியிடம் படித்துக் காண்பித்தார் ராஜமையர் :

அன்புள்ள மாமா அவர்களுக்கு ரகுபதி அநேக நமஸ்காரம். உபய க்ஷேமம். சௌ. சாவித்திரியை இந்த மாசக் கடைசிக்குள் நம் வீட்டில் கொண்டுவந்து விடும்படி அம்மா தங்களுக்கு எழுதச் சொன்னாள். வரும் தேதியை முன்னாடியே தெரியப்படுத்தவும். மாமிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.

தங்கள் அன்புள்ள,
ரகுபதி.

காதில் ஜ்வலிக்கும் வைரக் கம்மல்களைப் புடைவை முன்றானையால் துடைத்துக் கொண்டே மங்களம், “என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கணவரைக் கேட்டாள்.

ராஜமையர் யோசனையுடன் தலையைத் தடவிக்கொண்டார், பிறகு, கம்மிய குரலில் வருத்தம் தேங்கும் முகத்துடன், பார்த்தாயா மங்களம்! நேற்றுவரை பெற்று வளர்த்தவர்களுக்கு இல்லாத உரிமை ரகுபதிக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது! பெண்ணை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் கதறிக்கொண்டு ஓடுகிறோம். இது விந்தை அல்லவா?” என்றார்.

“ஆமாம். . ஆமாம் . . உங்கள் காலத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். நமக்குக் கல்யாணம் முடிந்ததும், ‘என் அண்ணா பிள்ளைக்கு ஆண்டு நிறைவு. அத்தை பெண்ணுக்குச் சீமந்தம்’ என்று என்னை எங்கே பிறந்தகத்தில் தங்கவிட்டீர்கள்? வேண்டியதுதான் உங்களுக்கும்!” என்று மங்களம் பழைய விஷயங்களை நினைவு படுத்தினாள். இருந்தாலும், அவள் குரலும் கம்மிப்போயிருந்தது.

இவர்கள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம் காமரா அறையில் சாவித்திரி தன் கணவன் எழுதி இருந்த கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். திரும்பத் திரும்பப் படிக்கும்படியாக அக்கடிதம் காதல் ரஸத்தில் தோய்ந்த தாகவோ, சிறிது இன்ப மொழிகளைக் கொண்டதாகவோ இல்லை. அதற்கு மாறாகக் கடிதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், ஸரஸ்வதி, சாவித்திரியைத் தினமும் எதிர்பார்ப்பதைப் பற்றியும், அவன் மனம் கோணாமல் அவள் ஸரஸ்வதியிடம் சங்கீதம் பயின்று இன்னும் சில வருஷங்களில் ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எழுதப்பட்டிருந்தது.

சாவித்திரி பற்றிவரும் எரிச்சலுடன் கடிதத்தைப் பெட்டியில் வைத்து, ‘டப்’ பென்று அகங்காரத்துடன் மூடினாள். கீழே சந்துருவின் குரல் பலமாகக் கேட்டது.

“ஊருக்குப் போகும்போது நல்ல வீணையாக ஒன்று வாங்கித் தந்துவிடேன். மாப்பிள்ளைக்குப் பரம திருப்தியாக இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சந்துரு.

தடதடவென்று கோபத்தில் இரண்டொரு படிகளைத் தாண்டி இறங்கிக் கீழே வந்தாள் சாவித்திரி. வந்த வேகத்தில் மேல்மூச்சு வாங்குவதையும் பாராட்டாமல், “எனக்கு வீணையும் வேண்டாம்! பூனையும் வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா என்ன?’ என்று எரிந்து விழுந்தாள் அவள்.

சீதாவும், சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்னைச் சிமிட்டிக்கொண்டனர்.

“நம் வழக்கப்படி சீர் செய்து விடுவோம்; புருஷன்பாடு, மனைவி பாடு. நாம் ஒன்றும் வீணை வாங்கவேண்டாம்” என்று கூறி மங்களம் அங்கே ஆரம்பிக்க இருந்த சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்,

8. பொறாமை

ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் பெரும்பாலோர் நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள். ரகுபதியின் தகப்பனார் அவன் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். ஊர் ஜனங்கள் நல்லவர்களாக இருந்ததால் பால்ய விதவையான ஸ்வர்ணாம்பாள் ஒருவித வம்புக்கும் ஆளாகாமல் அந்த ஊரிலேயே காலம் தள்ளி வந்தாள். ரகுபதி தாய்க்கு அடங்கிய பிள்ளை. ஆனால், தாயார் தான் பிள்ளைக்கு அடங்கி நடந்துவருவதாகச் சொல்லும்படி இருந்தது. பெரிய படிப்பெல்லாம் படித்துத் தேறிவிட்டு ரகுபதி வேலைக்குப் போகாமல் வீட்டுடன் இருந்தான்.

சிறு வயதில் ஸ்வர்ணாம்பாள் – நன்றாகப் பாடுவாள். அவள் குரலினிமைக்கு ஆசைப்பட்டே ரகுபதியின் தகப்பனார் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண் டாராம். அவரும் சங்கீதப் பித்துப்பிடித்த மனுஷன். இந்தக் காலத்தைப்போல் சங்கீத சபைகளும், நாடக மண்டலிகளும் அப்பொழுது அவ்வளவாக இல்லை. நல்ல சங்கீதத்தைக் கேட்க வேண்டுமானால் கோயில்களின் உற்சவகாலங்களிலும், பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலுமே முடியும். பெரிய வித்வான்களை அழைத்துக் கோயிலில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு. அவர்களைத் தம் வீட்டிலேயே அழைத்து வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுப்பார் ரகுபதியின் தகப்பனார். அவருக்கு வாய்த்திருந்த மனைவியும் அவர் எடுத்த காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டு சண்டை, பூசலுக்கு இடம் இல்லாமல் நடந்து கொண்டாள். பரம்பரையாக இருந்துவந்த சங்கீத ஞானம் ரகுபதியையும் பிடித்துக்கொண்டது. அவனும் தகப்பனாரைப்போலவே சங்கித விழாக்கள் நடத்தினான். அதற்காக நன்கொடைகள் கொடுத்தான்.

குழந்தைப் பருவத்திலிருந்து தாயை இழந்து தன்னுடன் வளர்ந்து வந்த ஸரஸ்வதிக்கும் அவ்வித்தையைப் பழுதில்லாமல் கற்பித்தான். தனக்கு வாய்க்கும் மனைவியும் அம்மாதிரி இருக்க பேண்டும் என்று அவன் ஆசைப்படுவது இயற்கையே அல்லவா?

அன்று கோழி கூவுவதற்கு முன்பே ரகுபதியின் வீட்டில் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டார்கள். வேலைக்காரி, வரப்போகும் தன் புது எஜமானிக்காக விதவிதமாகக் கோலங்கள் போட்டு, செம்மண் பூசிக்கொண்டிருந்தாள். சமையலறையில் ஸ்வர்ணாம்பாளும், ஸரஸ்வதியும் காலை ஆகாரம் தயாரிப்பதில் முனைந்திருந்தனர். எவ்வளவுதான் பணம் காசில் மூழ்கி இருந்தாலும், சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் அவ்வூரில் இல்லை. யார் வீட்டில் எந்த விசேஷம் நிகழ்ந்தாலும் ஊரில் உள்ள அத்தனை பெண்களும் ஒன்று சேருவார்கள். தலைக்கொரு வேலையாகச் செய்வார்கள். வேலையும் அழகாகவும் ஒழுங்காகவும் முடிந்துவிடும். அன்றும் கோடி வீட்டிலிருந்து பாகீரதி அம்மாமி வந்திருந்தாள். வயது அறுபது இருக்கும். வாய் படபடவென்று எதையாவது பொரிந்து தள்ளுவதற்கு ஈடாக கையும் சரசரவென்று லட்சியமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இதற்கு நேர் விரோத குணம் படைத்தவள் ரகுபதியின் தாய் ஸ்வர்ணாம்பாள். கறிகாய் நறுக்க உட்கார்ந்தால் மணிக் கணக்காக அங்கேயே உட்கார்ந்திருப்பாள்!

பாகீரதி அம்மாமி மற்றக் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்க, ஸ்வர்ணம் ஒரு கூடை நிறையக் காய்கறிகளை வைத்துக் கொண்டு அரிவாள்மணைக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். உள்ளே யிருந்து கமகமவென்று சமையல் வாசனை கிளம்பிக் கொண்டிருந்தது. பாகீரதி அம்மாமி பாயசத்துக்குச் சேமியாவை வறுத்துக்கொண்டே, “ஏண்டி ஸ்வர்ணம்! நீ முன்னாடி அந்த இடத்தை விட்டு எழுந்திரு பார்க்கலாம். மீதியை நான் நறுக்கிக் கொள்கிறேன்” என்றாள்.

“இருக்கட்டும் அம்மாமி, நீங்கள் எத்தனை காரியங்கள் தான் செய்வீர்கள்?”

”நான் என்னத்தைச் செய்ய இருக்கிறது? அடுப்பில் வைத்தால் தானே ஆகிறது. ஏண்டி! புடலங்காயைக் கூட்டுக்கு நறுக்கச் சொன்னால் விரல் பருமனுக்கு நறுக்கி வைத்திருக்கிறாயே!” என்று கூறினாள் பாகீரதி அம்மாமி.

“த்ஸொ …… த்ஸொ . . . . திரும்பவும் நறுக்கிவிடட்டுமா மாமி?” என்று கேட்டாள் ஸ்வர்ணம் பாகீரதியைப் பார்த்து.

”வேண்டாம்; வேண்டாம். நாட்டுப்பெண் வருகிற நாழிகை ஆகிறது. நீ போய் மற்றக் காரியங்களைக் கவனி” என்றாள் அந்த அம்மாள்.

அவள் சொல்லி வாய்மூடுமுன் வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மங்களமும், சந்துருவும், சாவித்திரியும் இறங்கினார்கள். ஸரஸ்வதி பரக்கப் பரக்க ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தைக் கண்டு சந்துரு வியப்படைந்தான்.

“வா, சாவித்திரி! வாருங்கள் மாமி” என்று புன்முறுவலுடன் வரவேற்றாள் ஸரஸ்வதி. அவர்களை அழைத்துவிட்டு அவள் திரும்பியபோது சந்துரு தன்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்ததும் அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ரகுபதி அதுசமயம் வெளியே சென்றிருந்ததால் சங்கோஜத்துடன் ஸரஸ்வதி அவனைப் பார்த்து, “வாருங்கள்” என்று அழைத்தாள்.

பல வருஷங்களுக்கு அப்புறம் அவ்வீட்டிற்கு ஒளி தர வந்திருக்கும் சாவித்திரி, மாமியாரை நமஸ்கரித்தபோது ஸ்வர்ணாம்பாள் உணர்ச்சி மிகுதியால் வாயடைத்து நின்றாள். கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உவகையுடன் உள்ளம் – பூரிக்க, பெருமிதத்துடன் சாவித்திரியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

“வீட்டிலே எல்லோரும் சௌக்யந்தானே, மாமி?” என்று ஸரஸ்வதி மங்களத்தை விசாரித்தபோது, ‘சௌக்யந்தானே?” என்று தன்னை நேரில் கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி மறைமுகமாகத் தன் தாயை விசாரிப்பதாக நினைத்த சந்துரு, ”சீதா உன்னை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள். உன்னிடம் கற்றுக்கொண்ட பாட்டுகளைப் பாடம் பண்ணிவிட்டதாகவும் சொன்னாள்” என்றான்.

“ஓஹோ!” என்று அவனுக்குப் பதில் அளித்துவிட்டு ஸரஸ்வதி மற்ற அலுவல்களைக் கவனிக்க உள்ளே சென்றாள்.

இதற்குள்ளாக வெளியே போயிருந்த ரகுபதி திரும்பி விடவே சாவித்திரியும், மங்களமும் கூடத்திலிருந்து பின் கட்டுக்குச் சென்றார்கள்:

“வந்தவர்களை வா என்று கூடச் சொல்லத் தெரியாமல் பிரமித்து உட்கார்ந்திருக்கிறாயே ஸ்வர்ணம். நாலு வார்த்தைகள் நறுக்கென்று பேசத் தெரிய-வில்லையே உனக்கு!” என்று பாகீரதி அம்மாமி கையில் பிடித்த கரண்டியுடன் சம்பந்தி அம்மாளை வரவேற்று. ஸ்வர்ணத்தைப் பரிகாசம் செய்தாள்.

ஸ்வர்ணம் நிஜமாகவே பிரமித்துப்போய் இருந்தாள். ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து தகப்பன் இல்லாமல் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்திருக்கிறாள் என்றால் அது எளிதான காரியமா? நாலு பேரைப்போல் அவளும் பேரன் பேத்தி எடுக்கப் போகிறாள். இருண்டிருந்த வீட்டில் ஒளி வீசப்போகிறது. இனிமேல் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே அவளுக்குத் தோன்றியது.

சாவித்திரி புக்ககம் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் ஸ்வர்ணம் நாட்டுப்பெண்ணுக்கு விதவிதமாகப் பூவைத்துப் பின்னினாள். நகைகள் பூட்டி அழகு பார்த்தாள். ஒரு வேலையும் செய்யவிடாமல் தானே எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டாள். சாதாரணமாகத் திருப்தி யடையும் மனமிருந்தால், மாமியாரின் இந்தச் சரளமான சுபாவத்தைப் புரிந்துகொண்டு சாவித்திரி ராஜாத்தி மாதிரி இருந்திருக்கலாம். அந்த வீட்டுக்கு நாட்டுப்பெண்ணாகவும், பெண்ணாகவும் இருந்து அருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால், லேசில் ஒருவரையும் நம்பும் சுபாவம் படைத்தவள் அல்ல சாவித்திரி. அவள் எதிரில் தங்கப் பதுமைபோல் வளையவரும் ஸரஸ்வதியைப் பார்த்தபோதெல்லாம் அவள் நெஞ்சு பொறாமை யால் வெடித்துவிடும் போல் இருந்தது.

”இவளுக்கு என்ன இந்த வீட்டில் இவ்வளவு சலுகை?’ என்று தன்னைக் கேட்டு அதற்கு விடை புரியாமல் தவித்தாள் சாவித்திரி, சதாகாலமும் முகத்தை ‘உப்’ பென்று வைத்துக்கொண்டு கணவன் கேட்கும் வார்த்தைகளுக்குப் பதில் கூறாமல் இருந்தாள் அவள்.

ஓர் இரவு கணவனும், மனைவியும் தனியாகச் சந்திக்கும் போது சாவித்திரியின் கண்கள் கோவைப் பழம்போல் அழுது சிவந்திருந்தன. திறந்த மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த வண்ணம் தொலைவில் தெரியும் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சாவித்திரி.

அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண் ணீர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிறாள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார். நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்றான். பிறகு அன்புடன், “சாவித்திரி! ஏன் அழுகிறாய்?” என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.

9. மனித சுபாவம்

கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை – சந்தேகத்தை – பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை ‘மனிதன், அல்ப சந்தோஷி’ என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் படி கணவன் நடப்பதோ, கணவனின் விருப்பப்படி மனைவி நடப்பதோ இயலாத காரியம். வெவ்வேறு குடும்பத்திலிருந்து தெய்வ ஆக்ஞையால் சேர்க்கப்பட்ட இருவரின் உள்ளங்களும் ஒன்றுபடச் சில வருஷங்களாவது அவகாசம் வேண்டி இருக்கும். சாவித்திரி அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு ஸரஸ்வதிக்கு அளித்திருக்கும் உரிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பீரோவிலிருந்து அத்தானுடைய கைச் செலவுக்குப் பணங்கூட அவள்தான் எடுத்துக் கொத்தாள். வரவு-செலவைக் கணக்கெழுதி வைத்தாள். ஸரஸ்வதிக்கு என்று சங்கீத சபைகளில் ஒன்றுக்குப் பத்தாகப் பணம் செலவழித்துக் கச்சேரிகளுக்கு ரகுபதி டிக்கெட்டுகள் வாங்கினான்.

தன் கணவன் இப்படிச் செலவழிப்பதை சாவித்திரி ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டாள். என்ன தான் தகப்பனார் மாதந்தோறும் ஸரஸ்வதிக்காகப் பணம் அனுப்பினாலும், பணத்தில் ’என்னுடையது உன்னுடையது’ என்று எங்கே வித்தியாசம் தெரிகிறது? ரகுபதி வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது சாவித்திரி கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வந்ததைக்கூட லட்சியம் செய்யாமல் தன் அறையில் கதவைச் சார்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். வேலை செய்து களைத்துப்போய் ஸ்வர்ணம் படுத்துத் தூங்கிவிடுவாள். அப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அத்தானுக்குப் பரிந்து உபசரித்துக் காபி கொடுத்து, உணவு பரிமாறி, கவனித்துக் கொள்வாள். ”அவள் ஏன் அதைச் செய்யவேண்டும்? அவனுடையவள் என்று உரிமை பாராட்ட ஒருத்தி இருக்கும்போது ஸரஸ்வதிக்கும், இன்னொருத்திக்கும் அந்த இடத்தில் என்ன வேலை இருக்கிறது? ‘எனக்குச் சாதம் போட வா’ என்று கணவன் வந்து தன்னைக் கூப்பிடட்டுமே! தன்னைக் காணாவிடில், ’ஸரஸு” என்று அவளைக் கூப்பிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சாவித்திரி எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள்.

குழந்தை மனம் படைத்த ஸரஸ்வதிக்குச் சாவித்திரியின் போக்கு புரியவில்லை. ஒரு வேளை கணவன், மனைவிக்குள் ஏதாவது ஊடலாக இருக்கும். நாம் ஏன் இதில் தலையிடவேண்டும்?’ என்று அவள் என்றும் போல் பழகி வந்தாள்.

நீல வர்ணப் பட்டுப் புடைவை உடுத்தி, இளம் பச்சை ரவிக்கை அணிந்து சாவித்திரி அழகாகத் தோன்றினாள் ரகுபதிக்கு. சிரித்துப் பேசும் சமயத்தில் கண்ணீரும், சண்டையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கீழே தூக்கம் வராமையால் ஸரஸ்வதி வீணையில் ‘ஸஹானா’ ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்: சங்கீதத்துக்கே குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரையில் யாவரையும் ‘மயக்கும் சக்தி’ உண்டு. சாவித்திரி வீணாகானத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். ரகுபதி அவளை அன்புடன் பார்த்து, “சாவித்திரி! அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு விட்டாயா? ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதாக்கும்!” என்று கொஞ்சினான்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை.” – முகம் சிவக்கக் கண்களை மூடிக் கொண்டாள் அவள்.

கீழே ‘ஸஹானா’ ராகத்தை முடித்துவிட்டாள் ஸரஸ்வதி. அடுத்த பாட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. ’தூண்டிற் புழுவினைப்போல்’ வீணையில் ஒலிக்க ஆரம்பித்ததும், ரகுபதி, “இதோ பார்த்தாயா? இந்த வீணையின் நாதத்துக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக வைத்து விடலாம். அதன் தந்திகளை மீட்டும்போது எழும் ஓசைக்கு ஈடு வேறு எதையும் சொல்ல முடியாது. சாவித்திரி! ஸரஸுவிடம் நீ பாட்டுக் கற்றுக் கொள்ளலாமே. முன்பு ஒரு தடவை கேட்டாயே, ‘உங்களுக்கு என்ன பிடிக்கும்!’ என்று. எனக்குப் பிடித்தது இது ஒன்றுதான். என் மனைவி என் எதிரில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாட வேண்டும். காலம் நேரம் போவது தெரியாமல் நான் அதை அனுபவிக்க வேண்டும்.”-ரகுபதி உணர்ச்சி யுடன் பேசினான்.

மகுடி ஊதுவதைத் திடீரென்று நிறுத்தியதும் சீறும் சர்ப்பம் போல் சாவித்திரி ‘விசுக்’கென்று அவன் மடியிலிருந்து எழுந்தாள்.

“எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணத்தின் போதே எனக்குத் தெரியுமே! மணிக் கணக்கில் ஸரஸ்வதியைப் பாடச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தீர்களே! மறந்து போய்விட்டேன் என்றா பார்த்தீர்கள்? மறக்க வில்லை!” என்று கோபமும், பரிகாசமும் தொனிக்கக் கூறிவிட்டு சாவித்திரி அவனிடமிருந்து ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள்:

ரகுபதி பொறுமையை இழக்காமல் சாவித்திரியைப் பார்த்து. “என்னவோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாயே! அயலாரிடம் உன்னைப் பாட்டுக் கற்றுக்கொள்ளச் சொல்லவில்லையே! ஸரஸ்வதி நம் வீட்டு மனுஷிதானே?” என்று கேட்டான்.

“உங்கள் – ஸரஸ்வதி எனக்கு ஒன்றும் வாத்தியார் ஆக வேண்டாம். அந்தப் பெருமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும். எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். எனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை வற்புறுத்த வேண்டாம். என் பிறந்த வீட்டிலேயே என்னை யாரும் எதற்கும் வற்புறுத்த மாட்டார்கள். ஆமாம்..” என்று படபடவென்று பேசிவிட்டுப் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது ‘பொத்’தென்று: உட்கார்ந்து கொண்டாள்.

வெளியே சென்று வந்த கணவன் சாப்பிட்டானா என்று விசாரிக்கவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. ரகுபதி சப்பிட்ட மனத்துடன் படுக்கை அறையில் நுழைந்து அன்று வந்த தினசரி ஒன்றைப் படிப்பதில் முனைந்தான். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போயிருந்தது. சிறிது நேரம் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி கீழே ஸரஸ்வதி பாட்டை முடித்ததும் “அப்பாடா! பாதி ராத்திரி வரைக்கும் பாட்டும் கதையும்! தூ . ” என்று கூறிக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனைவி தன்னை இவ்வளவு உதாசீனம் செய்வாள் என்று ரகுபதி எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கோபமும். வெட்கமும் நிறைந்த மனத்துடன் அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் யோசித்த படி குறுக்கும், நெடுக்குமாக உலாவும்போது கீழே ஸரஸ்வதி மங்கிய விளக்கொளியில் படுக்கையை உதறிப்போட்டுக்கொண்டு படுப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்-கெல்லாம் அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். சலனம் இல்லாத அவள் முகத்தில் புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது.

ரகுபதி மகத்தான தவறு செய்துவிட்டான். கை எதிரில் இருந்த கனியை அருந்தாமல், காயைக் கனிய வைக்கும் விஷயத்தை அவன் மேற்கொண்டால் அது எளிதில் நடந்துவிடுகிற காரியமா? ரகுபதி சிலைபோல் நின்று அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். பிறகு, சாம்பிய மனத்துடன் அவன் அறைக்குத் திரும்பியபோது சாவித்திரி. ‘புஸ்’ ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அனல் தெறிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். அவளைக் கவனியாதவன் போல் ரகுபதி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தான். கணவன், மனைவிக்கு இடையே சாண் அகலம் இடைவெளி இருந்தாலும், சாவித்திரியும், அவனும் எங்கோ ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பதாகவே நினைத்தார்கள்.

‘நாம் சொல்வதைத்தான் இவள் கேட்டால் என்ன?’ என்று அவன் பொருமிக்கொண்டே படுத்திருந்தான்.

‘போயும், போயும், அவளிடந்தான் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்! பாடு என்றால் பாடவேண்டும். ஆடு என்றால் ஆட வேண்டும்! ஓடு என்றால் ஓட வேண்டும்! வா என்றால் வர வேண்டும்! இந்தப் புருஷர்களுடைய அதிகாரத்துக்கு அளவில்லையா என்ன? ஸ்திரீகளைச் சமமாகப் பாவிக்கிறார்களாம்! பேச்சிலே தான் எல்லாம் அடிபடுகிறது. வீட்டிலே அவனவன் மனைவியை இன்னும் அடிமையாகத்தான் வைத்திருக்கிறான்.’– சாவித்திரி பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்விதம் நினைத்தாள்.

‘ நான் சொல்லுவதை இவள் ‘ உத்தரவாக’ ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? கணவனின் அன்புக் கட்டளை என்று கொள்ளக்கூடாதா? வீட்டிலே பாட்டியும், பெற்றோர்களும் இடங்கொடுத்துத் தலைமேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். வந்த இடத்திலும் பணியும் சுபாவம் ஏற்படவில்லை. ஆகட்டும்…. பார்க்கலாம்’ என்று தீர்மானித்துக்கொண்டு ரகுபதி தூங்க ஆரம்பித்தான்.

நிம்மதியாகத் தூங்கும் ஸரஸ்வதி ஒரு கனவு கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அழகிய மலர் மாலை ஒன்றைக் கையில் எந்திச் சந்துரு அன்புடன் அவளை நெருங்கி வருவதை உணர்ந்து ஸரஸ்வதி சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகிப் போகிறாள்.

“ஸரஸ்வதி! உன்னிடம் ஒரு குறையும் இல்லை. அற்ப விஷயம் அது. நான் அதைப் பாராட்டுகிறவன் அல்ல, ஸரஸ்வதி” என்று சந்துரு உண்மை ஜ்வலிக்கும் பார்வையுடன் அவளிடம் கூறுகிறான்:

ஸரஸ்வதி திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்து வந்த போது சந்துரு அவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எவ்வளவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டாலும் ஸரஸ்வதி அதற்கு இடங்கொடாமல் உறுதியுடன் இருந்தாள்.

“சீதா உன்னை எங்களுடன் அழைத்து வரச் சொன்னாள்” என்று மங்களம் கூப்பிட்டபோது, “ஆகட்டும் மாமி, வரு கிறேன். சீதாவைத்தான் இங்கே அனுப்பி வையுங்களேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஸரஸ்வதி.

இது என்ன கனவு? கனவில் காண்பதெல்லாம் வாழ்க்கையில் உண்மையாக நடக்குமா? நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனாலும் போகலாம்; அவள் படுக்கை அறைக்கு எதிரில் பூஜை அறை இருந்தது. அன்று அறைக்கதவு சார்த்தப் படாமலேயே திறந்திருந்தது. உள்ளே பூஜையில் மாட்டியிருந்த நடராஜனின் உருவப்படம் லேசாகத் தெரிந்தது. ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வ’த்தின் கலை அழகைக்கண்டு ரசித்தாள் ஸரஸ்வதி. உன்னதமான கலையைத் தனக்கு அருளி இருக்கும் ’அவன்’ தன்னைக் கேவலம் இந்த உலக இன்பங்களில் சிக்க வைக்கமாட்டான் என்கிற உறுதியும் கூடவே ஸரஸ்வதியின் மனதில் உதித்தது. இருந்தாலும் திடீர் திடீர் என்று சந்துருவின் நினைவு அவளுக்கு ஏன் தோன்றவேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் என்று புரிந்து கொள்ளவில்லை ஸரஸ்வதி.

10. ‘வானம்பாடி’

அந்த இரவுக்கு அப்புறம் கணவனும் மனைவியும் பல முறைகள் தனிமையில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், மனம் விட்டுப் பேசவோ, அளவளாவவோ அவர்களுக்கு முடியவில்லை. கணவனுக்கு உணவு பரிமாறும் போது சாவித்திரி அவன் முகத்தைப் பார்க்காமல் யாரோ அன்னியனுக்குப் படைப்பது போல் கலத்தில் பரிமாறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்று விடுவாள். அவன் அவளை நிமிர்ந்து பாராமல் உண்டு விட்டுப் போய்விடுவான். ஒரு தினம் தலை வாரிக்கொள்ள சாவித்திரியை அழைத்து சீப்புக் கேட்டபோது அவன் எதிரில் மேஜை மீது ‘பட்’ டென்று சீப்பு வந்து விழுந்தது! ‘இந்தத் துணிகளை இன்று சோப்புப் போட்டுத் துவைக்க வேண்டும்’ என்று அவன் தயங்கிக் கொண்டே யாரோ மூன்றாவது மனிதரிடம் சொல்லுவது போல் கூறிவிட்டு வெளியே போவான். மாலை வீடு திரும்பும் போது ஒவ்வொரு தினம் அவை துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்டு இருக்கும். பல நாட்கள் அவை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றும் கிடப்பது உண்டு.

“அத்தான்! மாடியில் உன் அறைப்பக்கம் போனேன்: துவைப்பதற்குத் துணி இருக்கவே துவைத்து மடித்து வைத்தேனே பார்த்தாயோ?” என்று ஸரஸ்வதி அவனைக் கேட்ட பிறகுதான் அவைகளைத் துவைத்தது யார் என்பதும் அவனுக்குப் புரியும்.

படுக்கை அறையில் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீது தூசு படிந்து கிடக்கும். படங்களில் மலர் மாலைகள் வாடிக் கருகித் தொங்குவதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. பெரியவர்கள், ‘ஆணுக்குப் பெண் துணை’ என்றும் ‘ பெண்ணுக்கு ஆண் துணை’ என்றும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? உடல் இன்பத்திற்காக என்றால் புனிதமான தாம்பத்ய உறவு அவசியம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உத்தியோக நிமித்தம் சென்றிருக்கும் கணவனின் சுக வாழ்வுக்காக மனைவி ஊரில் அவனையே நினைத்துத் தவங்கிடந்து நோன்புகள் செய்வானேன்?

தாம்பத்ய உறவில் உள்ளம் இரண்டும் ஒன்று சேர்ந்து உறவாடுவதுதான் இன்பம். சாவித்திரி தினம் இரவு நேரத்தில் பால் டம்ளருடன் படுக்கை அறைக்குள் நுழைவாள். ‘நக்’ கென்று அதை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் ‘ பொத்’ தென்று சாய்ந்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விடுவாள்.

ரகுபதி ஒரு சங்கீதப் பித்தன். இரவில் நகரத்தில் சங்கிதக் கச்சேரி கேட்டுவிட்டு வீடு திரும்பும்போது பொழுதாகிவிடும். வீடு திரும்பும் கணவனை மலர்ந்த முகத்துடன் சாவித்திரி வரவேற்க மாட்டாள். கூடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணத்தை எழுப்புவதற்கு ரகுபதிக்கு மனம் வராது. ஸரஸ்வதியைக் கூப்பிட இனி, அவள் யார்? அவன் யார்? தளர்ந்த மனத்துடன் ரகுபதி, மாடிக்குப் போய்ச் சாவித்திரியை அழைக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் படி களில் ஏறும்போது தடதடவென்று சாவித்திரி மாடிப் படிகளில் இறங்கி வேகமாக அவனைத் தாண்டிச் செல்வாள். அப்ப! ஒரு ஸ்திரீக்கு அகங்காரமும், கோபமும் ஏற்படும் போது உண்டாகும் வேகம் ஓர் அணு குண்டுக்குக்கூட இருக்காது என்று சொல்லலாம்! அடுத்தாற்போல சமையலறைக் கதவைப் ‘பட்’ டென்று திறந்து சாப்பிடும் தட்டை ‘நக்’ கென்ற ஓசையுடன் வைத்து விட்டு உறுமும் பெண் புலியைப்போல் காத்து நிற்பாள் சாவித்திரி. ‘உங்களுக்குச் சாதம் போடும் வேலை ஒரு கடன்’ என்று சொல்லுகிற மாதிரி இருக்கும் அவள் செய்கைகள் எல்லாம்! குமுறும் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துவிட்டாலும் பரவாயில்லையே! எண்ணங்கள் மனத்துள் குமுறக் குமுற, எழப்போகும் அனல் விபரீதமாக அன்றோ இருக்கும்? குமுறும் எரிமலையை எவ்வளவு காலந்தான் அடக்கி வைக்க முடியும்?

ரகுபதி சாப்பிட்டு முடித்தவுடன் குடிப்பதற்கு ஜலம் தேவை யென்று டம்ளரைச் சற்று நகர்த்தி வைப்பான். அதை கவனியாதவள் போல் சாவித்திரி ‘விர்’ ரென்று மாடிப் படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிடுவாள். வேதனையும், கோபமும் நிறைந்த மனத்துடன் ரகுபதி அறைக்குள் சென்று ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வைத்துக்-கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவான்.

இப்படியே பேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இல்வாழ்க்கை ஆரம்பமானவுடன் பாலில் சொட்டுப் புளி விழுந்ததுபோல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எழுந்த மனஸ்தாபம் சிறிது சிறிதாக நாளடைவில் வளர்ந்துவிட்டது. கணவனுக்காகப் பிடிவாத குணமுடைய சாவித்திரி தன் போக்கை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. மனைவியைத் தன் கொள்கைக்கு இணங்கி வரும்படி வற்புறுத்த வேண்டாம் என்கிற பிடிவாதத்தையும் ரகுபதி தளர்த்தவில்லை.

இவர்கள் இருவருடைய மனஸ்தாபத்துக்கும் இடையில் சரஸ்வதி மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள். வலுவில் அவளாகவே சென்று சாவித்திரியுடன் பேசினாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாவித்திரி போய்விடுவாள். ஒரு தவறும் செய்யாத தன்னிடம் சாவித்திரிக்கு என்ன கோபம் ஏற்பட்டிருக்கும் என்பது ஸரஸ்வதிக்குப் பல நாட்கள் வரையில் புரியவே இல்லை.

நாளாக நாளாக, சாவித்திரியின் கோபம் தன்மீது மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை, அது தன் அத்தான் மீதும் பாயத் தொடங்கி இருக்கிறது என்பதையும் ஓரளவு ஸரஸ்வதி ஊகித்துக் கொண்டாள். ‘நிலவு பொழியும் இரவுகளை, இளம் மனைவியைப் படைத்திருக்கும் அத்தான் ரகுபதி, திறந்த வெளியில் சாய்வு நாற்காலியில் தனியாகக் கழிப்பானேன்?’ என்று தன் மனத்தையே கேட்டுப் பார்த்தாள் ஸரஸ்வதி. அவளுக்கு அதற்கும் விடை புரியவில்லை. ஆகவே, ஒரு தினம் ஸரஸ்வதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கீதை படிக்கும் தன் அத்தை ஸ்வர்ணத்தினிடம் சென்று நெருங்கி உட்கார்ந்து கொண்டு, “அத்தை” என்று மெதுவாகக் கூப்பிட்டாள். இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனதை லயிக்கவிட்டிருந்த ஸ்வர்ணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து. “நீ இங்கேயா அம்மா இருக்கிறாய்? மாடியில் சாவித்திரியுடன் இருப்பதாக அல்லவோ நினைத்துக்கொண்டிருந்தேன்?” என்று வியப்புடன் கூறினாள்.

“சாவித்திரி தூங்குகிறாள் அத்தை. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் இங்கு வந்தேன்” என்றாள் ஸரஸ்வதி. அவள் குரலில் ஏமாற்றமும், ஏக்கமும் நிரம்பி இருந்தன.

ஸ்வர்ணம் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, ‘உனக்கு மத்தியான்ன வேளைகளில் தூக்கமே வராதே. எதையாவது. ”கொடை, கொடை’ன்னு குடைந்துண்டே இருப்பாயே குழந்தையிலிருந்து! ஒரு தரம் உங்கம்மா இருக்கும் போது ….” என்று ஸ்வாதீனமாகப் பழைய கதை ஒன்றை ஆரம்பித்தாள்.

“உஸ். . . . உஸ்” என்று ஸரஸ்வதி வெகு ஸ்வாதீனமாக அத்தையின் வாயைப் பொத்திக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “அம்மா இருக்கும் போது நான் செய்த விஷமங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது! அதெல்லாம் பழைய விஷயங்கள்! புது விஷயமாக – ஒன்று சொல்லப்போகிறேன்” என்றாள் ஸரஸ்வதி.

“சொல்லேன்! அதற்கு இவ்வளவு பீடிகை வேண்டுமா என்ன?” என்று கேட்டாள் ஸ்வர்ணம்.

ஸரஸ்வதியின் முகத்தில் சிறிது முன்பு நிலவிய குறும்புச் சிரிப்பும் குறுகுறுப்பும் திடீரென்று மறைந்தன. நிலத்தைக் காலால் கீறிக்கொண்டே தரையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு நீர் நிறைந்த கண்களுடன், அத்தை ஸ்வர்ணத்தை ஏறிட்டுப் பார்த்து, ”அத்தை! என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு. நான் அவருடனேயே இனிமேல் இருந்துவிடுகிறேன்” என்றாள், பொங்கி வரும் துயரத்தை அடக்கிக்கொண்டு.

ஸ்வர்ணத்தின் கையில் இருப்பது கீதையானாலும், அவள் இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனத்தை லயிக்க விட்டிருந்தாலும், அவள் ஒரு சாதாரண அஞ்ஞானம் நிரம்பிய பெண்மணி என்பதை அவள் வேதனை படரும் முகம் தெள்ளெனக் காட்டியது. ‘என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு’ என்னும் வார்த்தைகள் அவள் மனத்தில் வேல் போல் பாய்ந்தன. அளவுக்கு மீறிய துயரத்துடன் ஸரஸ்வதியின் முகவாயைத் தன் கையால் பற்றிக்கொண்டு, “ஏன் அம்மா ஸரஸு?” என்று கேட்டாள் ஸ்வர்ணம். கையில் தாங்கி இருக்கும் ஸரஸ்வதியின் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்பு இறந்துபோன தன் மதனீயின் பரிதாபமான முகம் தோன்றி மறைவதுபோல் இருந்தது ஸ்வர்ணத்துக்கு.

தங்கப் பதுமைபோல் மாலையும், கழுத்து மாய் ஸரஸ்வதியின் தாய் நேற்றுதான் ஸ்வர்ணத்தின் தமையனைக் கைப்பிடித்து வீட்டில் நுழைந்தது போல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு. பெண்ணைப்பெற்று, திக்கில்லாமல் விட்டுவிட்டுப் போய் விட்டாள். அவளுக்குத்தான் ஸ்வர்ணத்தினிடம் எவ்வளவு அன்பு! நாத்தனாரும் மதனியும் கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரி இருந்தார்கள். அவள் மறைவுக்குப் பிறகுதான் ஸ்வர்ணத்தின் தமையன் மனம் வெறுத்து எங்கோ இருக்கிறான். பெற்ற பெண்ணைப்போல் வளர்த்த ஸரஸ்வதியைப் பிரிந்து ஸ்லர்ணத்தால் இருக்க முடியுமா?

ஸ்வர்ணம் ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் பெருமூச்சு விட்டாள். பிறகு அங்கு நிலவி இருந்த அசாதாரணமான அமைதியைக் கலைத்துக் கனிவுடன், “உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஸரஸு?” என்று கேட்டாள் ஸரஸ்வதியைப் பார்த்து.

“கஷ்டம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கும் வெளி ஊர்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொஞ்ச காலம் அப்படித்தான் பார்த்துவிட்டு வருவோமே என்று தோன்றுகிறது” என்று வெகு சாமர்த்தியமாக மனக் கஷ்டத்தை மறைக்க முயன்றாள் ஸரஸ்வதி.

ஸ்வர்ணத்தின் இளகிய மனதால் அதற்குமேல் நிதானமாக இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக ஸரஸ்வதியைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, ”அம்மா! திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்று சொல்லுகிறாயே, உன்னை அனுப்பி விட்டுத் தனியா இந்த வீட்டில் எப்படி இருப்பேன் சொல்?” என்றாள் ஸ்வர்ணம். ஸரஸ்வதி அத்தையின் கைகளை ஆசை யுடன் பற்றிக்கொண்டு, “நீயும் அத்தானும் அடிக்கடி என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! கல்யாணம் ஆன பிறகு புக்ககம் போக வேண்டாமா அத்தை? இதற்கே இப்படிப் பிரமாதப்படுத்துகிறாயே நீ?” என்று கண்ணைச் சிமிட்டிக் குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே அத்தையைக் கேட்டாள்.

“அசட்டுப் பெண்ணே! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று திகைப்புடன் தன்னைப் பார்க்கும் அத்தையிடம், ஸரஸ்வதி ரகசியம் பேசும் குரலில், “என்னால் அத்தானுக்கும் சாவித்திரிக்கும் ஏதாவது சச்சரவு வந்துவிடும். நான் நன்றாகப் பாடுகிறேன் என்று சாவித்திரிக்குப் பொறாமை போலிருக்கிறது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மனஸ்தாபப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் உன் மனம் நிம்மதியாக இருக்குமா அத்தை?” என்று கேட்டாள்.

ஸ்வர்ணத்திற்கு க்ஷணப்பொழுதில் எல்லாம் விளங்கிற்று. ஸரஸ்வதி அந்த வீட்டில் இருப்பதனால் சாவித்திரியும் ரகுபதியும் மனஸ்தாபப்படுகிறார்களா? இதென்ன விந்தை? கபடமற்ற இந்தப் பேதைப் பெண்ணைப் பார்த்துச் சாவித்திரிக்கு இரக்கம் தோன்றாமல் பொறாமை ஏற்பட்டிருப்பதும் ஆச்சர்யந்தான். ஸ்வர்ணம் கண்ணீர் பெருகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தாள். அத்தையின் தோளில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு ஸரஸ்வதி கண்ணீர் உகுத்தாள்.

வானவெளியில் மனம் போனபடி ஆடிப் பாடிப் பறந்து செல்லும் வானம்பாடியைப் பிடித்து யாரோ கூட்டில் அடைத்துச் செய்யுளும், இலக்கணமும் கற்றுக்கொடுக்கும் கட்டுப்பாடான நிலையை அடைந்து ஸரஸ்வதியின் மனம் வேதனையுற்றது. ஒருவருக்காக அவள் தன் சங்கீதக் கலையை அப்யாசிக்காமல் விட்டு விடவும் மனம் ஒப்பவில்லை.

– தொடரும்…

– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *