கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 1,393 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சோமையா….சோமையா…. இங்க வா….உதய்யைக் கொஞ்சநேரம் வாக்கிங் கூட்டிட்டுப் போ… ஒரேகத்தல்…அதான்”

“தோ…வரேம்மா…” ஸ்விட்சைத் தொட்டவுடன் மணியடிப்பதுபோல் குரல் கேட்டவுடன் ஓடி வருகிறான் சோமையா. பெற்ற மகளை, தந்தையின் உதவியின்றித் தனக்குரியவனைத் தேர்ந்தெடுத்தவளை மகிழ்வுடன் ஆசீர்வதித்துவிட்டு, இந்த வீட்டுக்கு வேலைக்காரனாய் வந்து சேர்ந்தவன். முதலாளி ராம்நாத் தங்கம் போன்றவர். இருபத்திநான்கு காரட் தங்கம் என்று சொல்லலாம். அவ்வளவு நல்லவர்.

“உதய்யை கூட்டிக்கொண்டு வாக்கிங் சென்றவர், திரும்பி வந்தவுடன், சோமையா, இன்னக்கி வீட்டுக்கு விருந்தாள் வராங்க… அதனால் நீ மார்க்கெட் போய், கறிகாயெல்லாம் வாங்கிட்டு வந்திடு…. வரும்போது உதய்க்கு நல்ல இனிப்பு வாங்கிட்டு வந்துரு…”

“சரீங்கய்யா” ராம்நாத் குரலுக்குப் பதில் தந்தவன், எங்கு வெளியே சென்றாலும் எதை மறந்தாலும் உதய்க்கு ஏதாவது வாங்கிக்கொண்டு வராமல் இருக்கமாட்டான். ஆண் குழந்தை மேல் அதிக விருப்புக் கொண்டவன் ஏன் வெறி கொண்டவன் எனலாம்.

உதய் அப்போது மூன்று வயது முடிந்த நிலையில், அவனைப் பள்ளிக்கு அனுப்ப பள்ளிக்கு அனுப்ப அனைவரும் விரும்பினர். பணத்தில் புரளும் ராம்நாத் தன் ஒரே மகனை ஊட்டி கான்வெண்டில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். சோமையாவும் உதயின் தாயும் வேப்பங்காய் சாப்பிட்டது போல் இந்த விஷயத்தை வெறுத்தனர். ஆனால் அவர்கள் சொல் பலிக்க முடியுமா என்ன? ராம்நாத்துக்கு நூறு சதவீத வெற்றி!

அந்தச் செய்தி கேட்டதிலிருந்து உதய், தினமும் விழித்தது முதல் உறங்கப்போவது வரை சோமையாவிடம்தான் இருந்தான். அவனைச் சோமையா விடுவதேயில்லை. உதயும், சோமு..கத்தச் சொல்லு…என்க்கு கத்தச்ச்சொல்லு…. அந்த புலிக்கத்தச் சொல்லு…ம்…ம்…” பிரிவது தெரிந்தோ என்னவோ மிகுந்த ஒட்டுதலாய் இருந்தான். புலி வந்தால், மாடுகள் எப்படி இணைந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டன என்று கதை சொல்லும்போது, சோமையா கண்களில் நீர் வழியும்; உப்பு நீர் வாயில் வந்து படும்வரை அழுவான். ஒன்றும் புரியாமல் விழித்த உதய், “ஏன்…. சோமு…. அந்தப் புலி உனக்குத் தெரியுமா? அது ஓடிடுச்சின்னு நீ அளுவுர்யா?….” கேட்கக் கேட்க மிகுதியாக அழுவான் சோமு. எதையும் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சூடான பொருளை வாயில் போட்டவனைப்போல் துடித்தான். அப்போதைக்கு அப்போது இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் உதயின் அம்மா பொங்கி வரும் தாய்மையை அடக்கமாட்டாமல் ‘ஓ’வென்று அழுவாள்.

குறித்த நாளும் வந்தது. அனைவரும் ஊட்டிக்கு அம்பாசிடரில் போனார்கள். கான்வெண்ட் வாசலில் அடியெடுத்து வைக்கும்போது, உதய்க்கும், ராம்நாத்துக்கும் ஊட்டியைப் போல் மனம் ‘ஜில்’லென்றிருந்தது. சோமுவுக்கும் உதயின் தாய்க்கும் மிதியடியைத் துளைத்துக் கொண்டு உஷ்ணம் பரவியது.

மற்றக் குழந்தைகளைப் பார்த்த உதய் தானும் அவர்களோடு விளையாட விரும்பினான். தனிமரமாய், கறிவேப்பிலைக் கொத்தாய் இருந்தவன், தன்னைப் போன்ற பலரைப் பார்த்ததும் வானளவு உயரத்துக்குச் சென்று விட்டான். அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்கு. ஆனால், முதலாளியம்மாவுக்கும், வேலைக்காரனுக்கும் அவனைப் பிரியும் சோகத்தில் பலத்த ஒருமைப்பாடு இருந்தது.

ஒருவழியாக அவனைச் சேர்த்து விட்டார்கள். உதய், அப்போதைக்குத் தந்தையிடமிருந்தும், தாயிடமிருந்தும் ஒரு முத்தத்தை எதிர்பார்த்தான். ஆனால், சோமையாவிடம் மட்டும், அவன் கழுத்தில் ஏறி உட்கார வேண்டும். ஒரு கதையை அவனிடம் கேட்க வேண்டும் என்று விரும்பினான்.

அதேபோல், சோமையாவின் கழுத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அவன் சொல்லும் கதையைக் குனிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு விதத்தில் இது அவனது பெற்றோர்க்குப் பாசப் பொறாமையாக இருந்தது.

நாட்கள் மெல்ல உருண்டன; யாரும் சொல்லாமல் தன் கடமையைச் செய்யும் காலம், சூரிய சந்திரனைவிட அதிகக் கடமை நிறைந்ததாக இருந்தது. உதயைப் பிரிந்தபின் சோமையா ஒருமாதம் கூட அந்த வீட்டில் இருக்கவில்லை. அந்தச் சின்ன உயிர் அவனது உள்ளத்தை ஊசிகொண்டு குத்திக் கொண்டேயிருந்ததால், அவன் அங்கிருந்தே சென்று விட்டான். வேலைக்காரன், அவன் போகலாம். ஆனால் உதயின் அம்மா? அவ்வப்போது டெலிபோனில் மிகுந்த சிரமத்திற்கிடையில் தொடர்பு கொள்வாள்.

சோமையா, செங்கல்பட்டில் வாழ்ந்த தன் மகளைத் தேடிச் சென்றான். சென்றான். மகள் முன்பு குடியிருந்த இடத்தில் தற்போது இல்லை. அவனது மனம் வருந்தியது. அவளுக்கு என்ன சோதனை ஏற்பட்டதோ? யாருக்குத் தெரியும்? மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டிலிருந்து காலி செய்து கொண்டு போய்விட்டாளாம். மகளைப் பார்க்கச் சென்ற மனம், அவள் பாதம் பட்ட மணலைப் பார்த்து விட்டு வந்தது. உழைக்க நாடியது; ஆனால், உதய் வீட்டை நாட மனமில்லை.

அருகிலுள்ள மூட்டையடுக்கும் தொழிற்சாலையில் மூட்டை தூக்குபவனாக இருந்தான். கையில் வூக்கைப் பிடித்துப் பருத்த உடலையும், சாக்கு உடையையும் கொண்டிருந்த அந்த மூட்டைப் பெண்ணின் வயிற்றைக் குத்தி, ‘அலாக்’காக முதுகில் சுமப்பான். அப்போது கூட அந்த நூறு கிலோ மூட்டை மூன்று வயது உதய்யாகவே தோன்றும்.

“உனக்கு அந்தப் புலிமாடு கத சொல்லவா ஒரு காட்ல ஒரு புலி இருந்துதால்…நாலு மாடு இருந்துதால்…”. இப்படி கதை சொல்லிக் கொண்டே மூட்டை தூக்கிக் கொண்டு செல்பவன், பக்கத்தில் சகதொழிலாளிகள், “அப்றம்….” என்று கேட்க, “அப்றமா.. சொல்றன்…நாலு மாடும் தனித்தனியா மேஞ்சுதா…புலி வந்துதா…” என்று விட்டதைத் தொடர்வான்.

கிடைத்த பணத்தில் சாலையோரச் சகுந்தலாவிடம், சோற்றை வாங்கி வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு, ‘பிளாட்பாரத்’தில் வேப்ப மரத்தடியில் தூங்கிக் காலத்தைக் கழிப்பான். இது கூட அவனுக்கு நிரந்தரமாகவில்லை… இதுதான் சோதனையும் வேதனையும்…

தேனீயை விட வேகமாக ஓடி ஓடி உழைத்தவன், ஒவ்வொரு பொருளையும் உதய்யாகவே, அதாவது அவன் வண்ணமாகவே பார்த்தவன், இனிப் பார்க்கக்கூடாது என்று இறைவன் சதி செய்தான். வெள்ளைப் பாலில் மிதந்த திராட்சையாக இருந்த கரு விழியை முழுவதும் வெள்ளைத் திரை கொண்டு மூடினான். பணம் இருந்தாலும் மனம் இல்லாத உலகில், அவன் நாடிய வைத்தியர் அவனைக் கைவிட்டுவிட்டார். குறித்த காலத்தில் பயன் பெறாதவன், முழுக்க வளர்ந்த மரத்தை வெட்ட இயலாதவனானான். பணமிருந்தால் எமனையும் எதிர்த்துப் போராடும் வைத்தியரும், வைத்தியமும் கைவிட்டதால் பைத்தியமானான்.

இளமையிலேயே தடியூன்றிப் பலருக்கு உதவி செய்த அந்தக் கை தடியும் தட்டுமாக அலைந்தது. அலைந்தது. அதற்குத் துணையாகக் கால்களும் நடை போட, “அம்மா…ஐயா…நீங்க நல்லாயிருப்பீங்கம்மா…உங்க புள்ள குட்டி நல்லாருக்குங்கய் …யா….! கடவுள் ஒங்களுக்குக் கருணை காட்டுவாரய்யா…” தனக்கு உதவாத கடவுளை எதிரியிடமும் தோழமை பாராட்டுவதுபோல வாழ்த்தித் தனது வாழ்வை நடத்தினான்.

பாத்திரத்தில் விழும் ஐந்து, பத்துக் காசுகளுக்காக அதிகமான வரங்களை அள்ளித் தந்தவன் மெல்ல மெல்ல நடந்து, சென்னையை அடைந்து விட்டான். இப்படிக் கடப்பதற்குக் குறைந்தபட்சம் ஆறுமாதமாவது ஆகியிருக்கும். இறுதியில் சென்னையின் நீள அகலங்களைத் தன் காலாலும் தடியாலும் அளக்க ஆரம்பித்தான் அந்த பாதயாத்ரிகன்.

சுமார் இருபது வருடங்கள் கடந்த நிலையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு மூன்று காலால் நடந்து ஓர் ஓட்டலின்முன் சென்று தன் கடையை விரித்தான்.

“அம்மா… சாப்பிடப்போறவங்களே… உங்க சாப்பாட்ல ஒரு பருக்கயை எனக்குப் போடுங்கம்மா!… நீங்க நல்லாயிருக்கணும்… ய்யா உங்கா குடும்பம் நல்லாயிருக்குமய்யா… உங்க அப்பாவுக்கு ஆயுள் கூடுமய்யா! அஞ்சு காசு போடுங்கய்யா…” தனது ஒரே பல்லவியை அனுபல்லவி, சரணம் என வேறு வேறு சுருதிகளில் பாடினான்; பேசினான்; யாசித்தான்.

பத்து வருடங்களுக்கு முன் முளைத்த அந்த ஓட்டல் அதிபர் தினமும் இவனது தொழிலைப் பார்த்துப் பார்த்து வயிறு எரிமலையாய் எரிய ஆரம்பித்தான். நல்ல வாலிபத்தின் வசந்தமாய் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து விளங்கியவனுக்குக் கொண்டு, இவன் பிச்சையெடுப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

“ச்சே…இவன் என்ன?…கிழிஞ்ச சட்டையும், அடச்சே…சட்டையா அது.. கறுத்த பனியனும், உடம்பை நல்லா மூடக்கூட முடியாத நெலய்ல ஒரு வேட்டியும் போட்டிருக்கான். கிராமத்துக் காஞ்ச நெலத்த மாதிரி சொட்டையும் மேடுமா ஒரு நெளிஞ்ச தட்டு, கைல ஒரு முருங்கமரத்துக் கொம்பு…ம்… இவன் சீக்கிரமே ஒரு நாள்ல போவான்னு பாத்தா நகரவே மாட்டங்கிறானே…என் ஃப்ரண்ட்ஸ் ஒரு நாளைக்கு
வந்தா, “என்னடா ரிசப்ஷனிஸ்ட் நல்லா இருக்காங்களே”ன்னு சொல்வாங்களே……ச்சே… இவன எப்டி நகத்துறது…”

மனத்துள் புதியதாக ஓர் அம்சத் திட்டம் ஒன்றை உருவாக்கியவன், அந்தக் கிழவனிடம் ஏதும் சொல்லாமல் தன் திட்டத்தைச் செயல்படுத்தினான்.

“ஏம்பா…சர்வர்…நீ என்னா பண்ற… ஒரு பக்கெட்ல நல்லா சூடான தண்ணிய ‘பைலர்’லர்ந்து ஊத்திட்டு வா…உம்…சீக்ரம்”. கட்டளை, கடமையால் செயல்வடிவம் பெற்றது.

கொதிக்கக் கொதிக்க ஆவி பறந்த நீரினை, அப்படியே தூக்கமுடியாமல் தூக்கியவன் ஏகப்பட்ட பாவத்தைத் தூக்குவதுபோலக் கிழவன்மேல் ஊற்றி…னான்… அவ்வளவுதான்… ப்பப்பா… உலக மொழிகள் எதிலுமே இல்லை, அந்த வார்த்தை…ஆம்…அவன் துடிப்பதை எந்த வார்த்தையாலும் சொல்லிவிடமுடியாது, உடல் புழுவாகத் துடிக்கக்… கேவலம் அதை விடத் தாழ்வாக மனமும் துடித்தவனால், மண்ணில் விழுந்து புரளவும் முடியவில்லை. உடலை ஒட்டிய சிற்றாடை விலக அவனது தன்மானம் இடம் தரவில்லை.

“அடப்பாவி..நான் என்னடா பண்ணுனேன்… என்னால ஒங்கடைக்கு எந்த விதத்துலடா வருமானம் போச்சு…இந்தக் கெழவனை, குருடனை இப்டி கொதிக்ற தண்ணியால் வதைக்கிறியே…அதவிடக் கழுத்த வெட்டிக் கெணத்துல தள்ளியிருலாமேடா.. என் ஒடம்புல எப்டி சுடுத்தண்ணீயை ஊத்தி என்னத் துடியா துடிதுடிக்க வச்சியோ அதுமாதிரி நீயும் துடிக்க ஒந்தலையில வெள்ளி இடி விழ”. அதற்கு மேல் ஒன்று பெரிய சாபம் இல்லை என்று பேசாமல் இருந்தான் கிழவன். உணவு உண்டுவிட்டு வந்தவர்கள் அனைவரும், “ச்சே…இவன் கடைய்லயா சாப்ட்டோம்? இவன் பாவம் நமக்கும் ஒட்டியிருக்குமே?” என்று வெறுத்த நிலையில் வாயில் சுரந்த வெறுப்பை எச்சிலாய்த் துப்பினர்.

“உம்… இவனோட அப்பன் ராம்நாத் எப்படிப்பட்டவன் தெரியுமா? அதான் இவன் கோலத்தைப் பாக்காமச் சீக்ரம் போய் சேந்துட்டாரு புண்ணியவான்…. இது ஊட்டியில படிச்ச லூட்டில்ல… அதான் இப்டி பண்ணிருக்கு…பாவி இன்னும் நாக்கைப் பிடுங்கிக்காம இருக்கானே…” பக்கத்துக் கடைக்காரர் வரலாற்றைச் சொன்னவுடன் இருபது ஆண்டுகட்கு முன்னால் சென்ற கிழவனது மூளை, “அடப்பாவி…நான் தூக்கி…கொஞ்சின…உ…த….” உயிர் ஓடிவிட்டது. ‘ய்’யைச் சொல்லாமல் அவன் வாய் மூடியது. அப்போது கூட அந்த மனித எருமைக்கு ஏதும் உறைக்கவில்லை. இது நடந்த ஜூன் 15-ஆம் நாள், அவனது வாழ்வில் ஒரு பெரிய கருமையாக, பாவப்புள்ளியாக வடிவெடுத்தது.

அடுத்த ஆண்டு ஜூன் 15-ஆம் நாள்….

“ம்மா…. நான் நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவுல எம் ப்ரண்ட் ஒருத்தனோட வெட்டிங் அனிவர்சரிக்குப் போய் வரேன்” மகிழ்வு மீதூர ஸஃபாரி சூட்டில் வெளிநாட்டு இண்டிமேட் செண்ட்டுடன் இறுக உறவாடிய நிலையில் சென்றவன்,

மேகம் கருத்திட, இடி இடிக்க வானமகள் தன் வீட்டுச் சண்டையில் மனம் வருந்தி உதிர்த்த உதிர்த்த கண்ணீருக்காகச் சற்று நின்று செல்லலாம் என்று கார் ஓட்டுநரிடம் சொன்னான். அவரும் காரை நுங்கம்பாக்கம் குப்பை மேட்டருகில் நிறுத்திவிட்டுக் காரின் உள்பக்கக் கண்ணாடியைத் துடைத்துவிட்டு, நனைந்து கொண்டே வெளியேயும் துடைத்தார். அப்போது, மழைக்கு இதமாகப் புகை விட்டுச் சூட்டினை உருவாக்கிட விரும்பிய பணக்காரப் பொம்மை, “டிரைவர்….! போய் ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டர் வாங்கிட்டு வர்றியா…ந்த….கொடைய எடுத்துட்டுப் போ….” போ….” என்றான். ஏதோ அந்த அளவில் புண்ணியம் செய்தவன், செய்தவன், சிகரெட் வாங்கிவரும் சாக்கில் நல்லவனை அங்கிருந்து நகர்த்தினான். வெகு சாவகாசமாகத் தன் மனத்திற்கேற்பப் பொழிந்த மழையை ரசிக்க, எங்கிருந்தோ வந்த இடி, இந்தப் பாவியின், ஆம்! தலைப்பிள்ளையான அவன் தலையில் நெருப்புக் குடும்பமாய் வந்து விழுந்தது.

“அம்மா…ய்யோ…” அலறியவன் கண்ணில், காரின் முன்பிருந்த ஜூன் 15 என்ற பிளாஸ்டிக் என்ற பிளாஸ்டிக் நாள்காட்டியை ஏந்திய பொம்மை சிரிப்பது தெரிந்தது…

– 1988, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *