இருட்டும் வரை காத்திரு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 2,781 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 2 | அத்தியாயம் 3

அப்புவும் ஆச்சியும் அன்று மாலையே வீட்டிற்கு வந்து விட்டார்கள். வரும் போது அப்பு மாதுளங்கன்று ஒன்றையும் வெகுகவனமாக வாங்கக்கொண்டு வந்து, அன்னலெட்சுமியின் கையிலே மிகக்கனிவோடு கொடுத்தார்.

“நல்லசாதி மாதுளை. திணத்தடியில் வைச்சால் நல்லா வளரும் பத்திப் பக்கமாக இப்பகொண்டுபோய் வை. உன்ரை கையாலை வைச்சா நல்ல வளரும், முந்தியும் உன்ரை கையாலை வைச்ச மாதுளை நல்லாக் குலுங்கிக் காச்சுது”.

அன்னலெட்சுமி மனதை அமுக்கும் இறந்த காலத்தின் நினைவுகளோடு அந்த மாதுளங்கன்றை அப்புவிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் திண்ணை யோரமாகப் பத்தியிலே சார்த்தி வைத்தாள். ஆச்சி, மணியையும் சின்னராசாவையும் உச்சி மோர்ந்து கொஞ்சிவிட்டு, மடிக்குள்ளிருந்த விளாம்பழங்களை எடுத்து அவர்களின் கைகளிலே கொடுத்தாள். கசிந்து போன இனிப்புச் சரையை எடுத்து சின்ன ராசாவின் கையிலே கொடுத்து “அண்ணணுக்கும் குடுத்துத்தின்” என்றாள் ஆச்சி வெகு ஆதரவோடு.

“இரண்டு கிழமையாலை ஒருக்கால் பரிமளத்திட்டைப் போய் நிண்டுவர வேண்டியிருக்குது. அவளுக்குப் பெறுமாதம். என்னை வரவேணும் வரவேணும் எண்டு வழிக்கு வழி சொல்லி விட்டவள். உன்னையும் பிள்ளைகளையும் விசாரித்தவள்”.

அன்னலெட்சுமி ஆச்சி சொன்னதற்குப் பதில பேசவில்லை. ஒரு கணம் தமக்கை பரிமளத்தை நினைத்தாள் பரிமளம். அசமுகியின் மறு அவதாரம். கேட்பவர்கள் தூங்கிச் சாகத் தக்க கதைகளைக் கதைப்பதற்கு அவளிற்கு நிகர் அவள் தான். அன்னலெட்சுமியைக் கண்டால் பரிமளத்திற்கு முற்றாகவே பிடிக்காது எலியைக் கண்ட பூனையாகிவிடுவாள்.

அடுத்த நாள் மாலை வழமை போலவே அன்னலெட்சுமி கடலை விற்கப்போனாள். இப்போதெல்லாம் அவள் நேரத்திற்கு வீட்டிற்குத் திரும்பி விடுவாள். ஐந்தாம் நாள் அவள் கடலை விற்கப் போகவில்லை; நாலு மணிக்கே வத்தகக் காய், பூசணிக் காய்களைக் கடகத்தினுள் வைத்து அடுக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். இரவு எட்டு மணியாகிவிட்டது, அவள் வீடு திரும்ப, மணியும், சின்னராசாவும் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சி அடுக்களையில் ஏதோ அலுவலாக இருந்தாள். கடலைக்கடகத்தை பெட்டகத்தில் இறக்கி வைத்துவிட்டு, குடிசைக்குள் அன்னலெட்சுமி வந்தாள். கதவின் மறைப்பில் நின்று வேறு சீலை மாற்றிக் கொண்டாள். மணி இலேசாக நிமிர்ந்து பார்த்தான். விளக்கின் திமுதிமுக்கும் ஒளியில் சுவரிலே அவளது உருவம் நாட்டியமாடிக்கொண்டிருந்தது. வேடிக்கையான ஆட்டம். பிறகு மணி குனிந்து கொண்டான்.

முகம் கழுவி விட்டுத் திரு நீறு பூசிக்கொண்ட அன்னலெட்சுமி பெட் டகத் தடிக்குப் போய்க் கடலைக் கடகத்தினுள்ளிருந்த பெரிய பையொன்றை எடுத்துக்கொண்டு அவர்களிருக்குமிடம் வந்தாள். இருவரிடம் இரண்டு சேர்ட்டுகள் கொடுத்தாள். அவர்களின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. ஒரு நாலு முழத்தையும், சுங்கானையும் எடுத்து, “இதைக் கொண்டு போய் அப்புவிடம் கொடு” என்று மணியிடம் கொடுத்தாள். பத்து ரூபா கோட்டொன்றையும், இரண்டு புகையிலையும் சின்னராசாவிடம் கொடுத்தாள், சின்ன ராசா “ஆச்சி” என்றபடி அடுக்களைக்குப் போனான்.

இருவரும் திரும்பி வந்ததும் அந்தச் சேர்ட்டுகளைப் போடும்படி தாய் சொன்னாள். அவர்களுக்கு அது அழகாயிருந்தது. அன்னலெட்சுமி நிறைவோடு சிரித்துக்கொண்டே “அப்பு ஆச்சிக்கு காட்டிக்கொண்டு வாருங்கோ” என்றாள்.

“அச்சாச் சட்டை…கொம்மா தனக்கொண்டும் வாங்கிக்கொண்டு வரேல்லையோ?”

“இல்லை யெண்டு தான் நினைக்கிறன்”

மணி உறுதியோடு சொன்னான்.

“அவள் இப்ப சாப்பாட்டிலும் கவனமில்லை; தனக்கெண்டு ஒண்டும் கூட வாங்கிறேல்லை, இவளின்ரை போக்கே விளங்கயில்லை”

அன்னலெட்சுமியின் நெஞ்சு அடைந்துக்கொண்டது. மனம் தளுதளுக்கக் கண்ணீர் உடைந்து கன்னங்களில் வழிந்தது.

“நீங்க கொம்மா விட்டை இதொண்டும் கேட்கிறதில்லையடா?” சின்னராசாதான் பதில் சொல்லிக் கேட்டது.

“அம்மாவுக்குக் கவலை. ஆச்சி தன்னைச் சும்மா சும்மா பேசிற தெண்டு…” குடிசைக்குள்ளிருந்து அன்னலெட்சுமி கண்களைத் துடைத்துக்கொண்டாள். குரல் அதட்டிற்று.

“ராசா, கதையள் போதும் வந்து படி”

கடைசியாக அன்றைக்கு அன்னலெட்சுமிதான் சாப்பிடப் போனாள், அன்னலெட்சுமியோடு கதைக்கவேண்டும் என்ற எண்ணம் நெஞ்சினைத் தாக்க ஆச்சி அடுக்களைக்குள் போய் எதையோ வெகு அவசரமாகத் தேடுவது போலப் பாவனை செய்துவிட்டு மகளுக்குச் கிறிது தள்ளியுள்ள திருவலையில் உட்கார்ந்தான். குனிந்திருந்த மகளையே, முதுமையிலும் சக்திகுன்றாத கண்களினால் கூர்ந்து பார்த்தாள். அன்னலெட்சுமி எவ்வளவு அழகானவள்? ஒரு தக்காளிப் பழம்போல. பசுமையான பூங்கொத்தைப் போல. கிணற்றடியில் வளரும் மதமதர்த்த பச்சை வாழைபோல. அவளின் அழகைப் பலவிதமாக நினைக்கலாம். அந்த நினைவு நியாயபூர்வமான உண்மை. அன்னலெட்சுமி ஏதாவது சொன்னாளாயின் அதைத் தட்டிச் செல்வது கடினம். அவளின் கண் பார்வை, சொற்கள் ஆகியவற்றில் அப்படியொரு மந்திரமான வசீகரமிருந்தது. அத்தகைய அவளது வாழ்க்கை இன்று எப்படியெல்லாம் மாறிப் போய் விட்டது? ஊரெல்லாம், மறைவிலும் அவள் பின்னாலும் அன்னலெட்சுமியைப்பற்றி எத்தனை கதைகள். ஈவிரக்கமற்ற, முதுகெலும்பற்ற கதைகள்.

ஆச்சி தன் மகளைப் பற்றிய கதைகளை, சொன்னவர்களுக்கு முன்னே ஓங்கி மறுதலித்தாள். ஏனோ? தன் மனத்திலே, அவளே தான் ஒரு குற்றவாளியென, பொய்காரியென நின்றாள். அந்த முதிய கண்களினால் தன் மகளை நோட்டம் விட்டு, ஊரின் வார்த்தைகளோடு அவள் ஒப்பிடுகையில் ஊரின் சொற்கள் உண்மை பொதிந்தனவென மனம் எண்ணி முடிவுக்கு வந்தது. ஆனால் அன்னலெட்சுமியிடம் அவள் அது பற்றி எதுவும் வினவியதில்லை. வினவ நினைத்து அவளின் முகத்தினைப் பார்க்கையிலோ, கேட்கும் சக்தி கரைந்து போய்விடுகின்றது.

“பிள்ளை, வரவர இப்ப நீ ஏன் ஒண்டிலும் கவனமில்லை? சாப்பிடுறதில்லை. என்னத்தை மனதுக்குள்ள வைச்சுக்கொண்டு இப்பிடி இருக்கிறாய்?” அன்னலெட்சுமி தலைகுனிந்த படி மௌனமாக இருந்தாள்.

ஆச்சி அவளின் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பரிவோக மனதினாலே வருடிக் கொடுத்தாள்.

“சொலுமோனை… உன்னைப் பார்க்கப் பார்க்க என்ரை வயிறெறியுது. மூத்தவள் பரிமளம் ஆறோடை ஏழாவதும் பெறப்போறாள். அவளாலை எனக்கொரு சந்தோஷமும் இல்லை. துக்ககமுமில்லை. நீதான் எனக்கு எல்லா வழியிலும் மகள், திரவிய எங்கடை விதி. கடவுளுக்கும் யொறுக்கயில்லை. எள்வளவு சந்தோஷமாயிருந்த சீவியம்…”

ஆச்சியின் குரல் தொய்ந்தது.

“ராசாச்தி, ஒண்டு சொல்லிறன் கேள். இனி நீ கடலை விக்கிறதுக்குப் போகாதை”

குனிந்த சிந்தனையிவிருந்த அன்னலட்சுமி ஆச்சியை நிமிர்ந்து அவளுக் கேயுரிய தீட்சண்பத்துடன் பார்த்தாள். கவிய புருவங்கள் நெளிந்தன.

“அப்புவும், நானும் அடிச்சுப் போடுறம். கிடைக்கிறதை வைச்சுக் கொண்டு சீவிச்சிடலாம்”

ஆச்சி நிமிர்ந்து வெறும் உறியைப் பார்த்தாள். சொல்லவந்த வார்த்தைகள் நெஞ்சினுள் சிக்கிக்கொண்டன.

“ஏன்?”

அழுத்திக் கேட்டாள் அன்னலட்சுமி. நெஞ்சிற்குள்ளே தேக்கிவைத்திருந்த உணர்ச்சிகளெல்லாம் திரண்ட சொல் அது

“உனக்குத் தெரியாதா?”

கண்டிப்புத் தளர்ந்த குரலில் கேட்டாள் அன்னலட்சுமி;

“சுத்தி வளைச்சுச் சொல்லாமை, என்னெண்டு சொல்லுங்க”

ஆச்சி மனத்தெம்போடு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“இந்தவீட்டுக்கு வெளியில எல்லாரும் சிரிக்குதுகள். என்னென்ன கதையளெல்லாம் வருகுதுகள், என்னத்தை நான் சொல்ல?”

அன்னலட்சுமி புலியானாள். கண்கள் ஜுவாலை வீசின,

“என்ன கதைக்கினை? ஆரைப் பற்றி?”

ஆச்சிக்கு உடல் நடுங்கிற்று. துணிவோ தலை குனியவில்லை.

“உன்னைப் பற்றி”

“என்ணைப் பற்றியோ?”

அன்னலட்சுமியின் குரல் சீர, முகம் சிவந்து பொருமியது, ஏறிய புருவத்தில் சினம் துடித்தாற் போல ஆச்சி உணர்ந்து பார்வையைத் திருப்பினாள்.

“நான் என்ன வேசையாடித் திரியிறனோ?”

இந்த சொற்களை ஆச்சி எதிர்பார்க்கவில்லை. நடுங்கிப் போனாள். ஏனே குபீரென்று கேவினாள்.

அன்னலட்சுமி பற்களைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தோடு சோற்றுக் கோப்பையை அடுப்பு மேட்டில் சுழற்றி வீசினாள். அந்த வேகத்தில் பத்ரகாளி போல எழுந்தாள்,

அன்று தான் அவள் நெருப்பானாள்.

அதுவரை மாமரத்தின் ஒதுக்கில் நின்ற மணி விரைவாக உள்ளே போய்ப் பாயில் படுத்துக் கொண்டான்.


இரண்டு வாரங்கள் ஆச்சியோடு ஒன்றுமே முகம் கொடுத்துக் கதைக்காமல் தானும், தன்னுடைய அலுவல்களுமாய் நடந்து கொண்டாள் அன்னலட்சுமி. வழமையான அதே சுறுசுறுப்பு, உற்சாகம் யாவும் அவளிடம் இருந்தன. மணிக்குத் தாய் அதிசயமாகத் தோன்றினாள். இரண்டு வாரங்களின் முன்னர் ஆச்சியும், தாயும் வாக்கு வாதப்பட்டதின் பின்னர் தாய் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய் திண்ணையிலிருந்து வெற்றிலை போட்டுவிட்டு பாயில் வந்து படுத்து இரவு முழுவதும் மெது மெதுவாக விம்மி அழுததை இன்னும் மறக்கவே இல்லை. அவனுடைய தாய் அழும்போது அவனது நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்கள் கலங்க அப்படியே சோர்ந்து நித்திரையாகிப் போய் விட்டான்.

அன்று மாலை ஆச்சி, அப்புவையும் கூட்டிக்கொண்டு மூத்த மகளின் வீட்டிற்கு போய் விட்டாள். மறுநாள் அதிகாலையிலேயே அன்னலட்சுமி சித்திரையால் எழுத்து விட்டாள். வீடெல்லாம் கூட்டி துப்பரவாக்கினாள். பிள்ளைகள் இருவரையும் தானே குளிக்க வார்த்தாள். தானும் முழுகித் தலைமயிரை தளையத் தழையக் கொண்டை கட்டியிருந்தாள். சிவப்பு நிறச்சேலை ஒன்றை உடுத்தி அன்றைக்கு அவள் வெகு லட்சணமாக விளங்கினாள். இடியாப்பம் பிழிந்து கொண்டே அடிக்கொரு தரம் வெளியே படலையை எட்டிப் பார்த்ததை மணி அவதானித்து விட்டான். வாழைக்காயையும், கத்தரிக்காயையும் நறுக்கி அவள் அன்றைக்கு நல்ல சாம்பாறு வைத்தாள். வழமை போல இடியப்பத்துக்கு சம்பல் தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு வழமைக்கு மாறாக இருந்தது. பாலைக் கறந்து சட்டியில் ஊற்றிக் காய்ச்சிய அன்னலட்சுமி அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் பாலை வாற்றித் தேனீர் கலந்து கொடுத்துவிட்டு மிகுதிப் பாலை எடுத்து சட்டியோடு உறியில் வைத்து மூடினாள்.

அடிவளவு வேம்பில் கட்டி நிற்கும் மாட்டைப் போய்ப் பார்க்கும்படி அன்னலட்சுமி மணியிடம் சொன்னாள்.

மணி மாட்டைப் பார்த்து விட்டு மீண்டும் முன்புறமாக வந்த போது கலகலப்பான சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. வேகமாகக் காலை எட்டி வைத்தான். வீட்டின் முன்புறத் திண்ணையில் விரித்த பாயின் மீது ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனது மடியிலே சின்னராசா இரண்டுதோடம்பழங்களுடன் இருந்தான், அவர்கள் இருவருக்கும் எதிர்த்தாற்போல் விரித்த குரலுடன் தாய் நின்று கதைத்துக் கொண்டிருந்தாள். மணியின் மூளையினுள் ஏதோ தாக்கினாற் போல் இருந்தது. அந்த மனிதனைத் திரும்பவும் பார்த்தான். அவனுக்கு உருண்டையான முகம், சிவந்த நிறம். மீசையை வழித்திருந்தான்.

அந்த வானவேடிக்கை நாள் மணியின் நினைவிலே வந்து மோதியது. அவளுடைய தோள்களில் அன்றைக்குத் தட்டிக் கதைத்தவன் இவன்தான்; நிச்சயமாக இவனே தான், அன்றைக்குத் தாய் எந்தச் சிவப்பு சிறச் சேலையை உடுத்தியிருந்தாளோ அதையே தான் இன்றும் உடுத்திருக்கிறாள். மணியின் முகம் திடீரென்று கறுத்துச் சுருங்கியது. அங்கிருந்து போவதற்குத் திரும்பினான்.

“இவர் தான் மூத்தவரோ?” என்று வந்திருந்தவன் மணியைக் காட்டிக் கேட்ட போது, அன்னலெட்சுமி அவனைப் பார்க்கத் திரும்பினாள். அவளின் பார்வையை, மணியின் பார்வை வன்மத்தோடு சந்தித்தது. அவனின் பார்வையின் அர்த்தமே விளங்காதவள் போல “மாமாவோடை வந்து கதை” என்று அன்னலட்சுமி மணிக்குச் சொன்னாள், மணி அப்போதும் அசையவில்லை. அன்னலட்சுமி மீண்டும் மணியைப் பார்த்தாள். அந்தக் கண்களை அவ்வளவு பயங்கரமாக என்றுமே மணி கண்டதில்லை. “வந்து கதை அல்லது தொலைத்து விடுவேன்” என்பது போலப் பயம் காட்டி தின்றன அந்தக் கண்கள், மணி வேண்டா வெறுப்பாக அவனுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.

சின்னராசாவுக்கு அந்த மாமாவை மிகவும் பிடித்து விட்டது. அவர் மிகவும் இனிமையாகக் கதைக்கிறார். அவர் தந்த தோடம்பழங்கள் கூட நல்ல வாசமாய் இருக்கிறது. தான் படிக்கும் வகுப்பு, தனக்கு என்ன பிடிக்கும், என்பதையெல்லாம் அவர் நிறைய ஆசையாகக் கேட்டார். அவருடைய பெயர் செல்லச்சாமி, வவுனியாவில் தான் வயல் செய்கிறவர். வயலுக்குள் வரும் குரங்குகள் பற்றி அவர் கதை, கதையாகச் சொன்னார். சின்னராசா தனச்கு மயிலிறகுகள் மீது அதிக ஆசை என்று சொன்னபோது அடுத்த முறை கட்டாயம் மயிலிறகும், குரங்குக் குட்டியும் கொண்டு வந்து தருவதாக செல்லச்சாமி வாக்களித்தார். சின்னராசா மிகவும் வெட்கத்தோடு மெல்லிய குரலில் “நீங்க நல்ல மாமா” என்று சொன்னபோது செல்லச்சாமி அன்னலட்சுமியின் முகத்தைப் பார்த்தான். அன்னலட்சுமி வெட்கத்தோடு சிரித்துக்கொண்டு முகம் குனிந்தாள். செல்லத்சாமி தனக்குப் பக்கத்திலிருந்த மணியின் தோள்களில் கையைப் பேட்டு “உம்முடைய பெயர் என்ன?” என்று கேட்டான். கடுகடுத்த முகத்தோடு மணி செல்லச்சாமியைப் பார்க்காமலே தன்னுடைய பெயரைச் சொன்னான். பிறகு அவனுடைய படிப்பு விருப்பங்களைக் கேட்டபோது மணி படிக்கும் வகுப்பை மட்டும் சொல்லிட்டுப் பேசாதிருந்தான். அன்னலட்சுமி அவனைப் பார்த்துக் கேட்டாள் “உனக்கொன்றும் விருப்ப மில்லையா?”. மணி அதற்குப் பதிலாகத் தலையசைத்தான்.

அன்னலட்சுமி பிறகு சின்னராசாவிடம் ஒரு துவாயைக் கொடுத்து “நீங்க போய் முகம் கழுவிக் கொண்டு வாருங்கோ” என்று செல்லச்சாமியிடம் கூறினாள். செல்லச்சாமி முக கழுவி விட்டு வந்த பின் அவனுக்கு இடியப்பமும், பால்த் தேத்தண்ணியும் கொடுத்தாள் அன்னலட்சுமி. சின்னராசா செல்லச்சாமிக்குப் பின்னும், முன்னுமாகத் திரிந்தான். சாப்பிட்டு முடிந்து திண்ணையில் உட்கார்ந்து அன்னலட்சுமி கொடுத்த வெற்றியயை வாங்கிச் சப்பிக்கொண்டே சின்னராசாவைப் பார்த்துச் செல்லச்சாமி கேட்டாள் “என்னோடை நீர் வவுனியாவுக்கு வாறீரோ?”.

“ஆச்சி வந்த உடளை கேட்டுக் கொண்டு வாறன்” என்று உடனே சொன்னான் சின்னராசா.

அன்னலட்சுமியின் முகம் பேசாமற் கறுத்தது. அவளது முகத்தைப் பார்த்து விட்டுச் செல்லச்சாமி சின்னராசாவுடைய கன்னங்களை வருடிய படியே சொன்னான்: “நான் தமாஷ்சுக்குத் தான் கேட்டனான்” என்று சொன்னான். தமாஷ் என்ற சொல்லின் அர்த்தம் சின்ன ராசாவுக்கு விளங்கவில்லை. அதை விளங்கிக்கொண்டவன் போலச் செல்லச்சாமி சொன்னான்:

“இலங்கைக்கு நான் வந்து இவ்வளவு வருடமாகியும் இன்னும் எங்கடை ஊர்ப்பாஷை என்னை விடவே இல்லை, அப்படித்தானே அன்னம்?”

மணி அந்தத் திண்ணையில் இருந்து ஒன்றும் பேசாமல் இறங்கி அடுக்களைக்கு முன்னாலிருந்த வாளியைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிப் பக்கமாகப் போனான்.

அன்னலட்சுமி சின்னராசாவைப் பார்த்து “அண்ணனோடை போய் வத்தகக் கொடிகளுக்கு தண்ணி ஊத்து” என்று சொன்னாள்.

அன்னலட்சுமி சிறிது நேரம் செல்லச்சாமியைப் பார்த்துக் கொண்டு பேசாமலே நின்றாள்.

“என்ன அன்னம் பேசாமலே நிற்கிறீர்?”

அன்னத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவளின் குரல் தன தளத்தது.

“ஊரிலையெல்லாம் எத்தினை கதை கதைக்குதுகள், இந்த வேதினையை என்னால நெடுகத் தாங்கிக் கொண்டிருக்கேலாது. இருட்டானாப் பிறகு தான் உங்களைச் சந்திக்காணும் எண்டு நெடுக எனக்கு விதி இருக்கிறதோ? ஊரவையளின்றை சொல்லுகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் ஒன்றுமே செய்யேலாது, எல்லாரையும் போல ஒருத்தருக்கும் பயப்பிடாமல் சீவிக்க வேணும். என்னைச் சுருக்காக் கலியாணம் முடியுங்கோ.”

சொல்லி முடிக்க முன்னர் அவனுடைய முழங்கால்களில் தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அன்னலட்சுமி.

செல்லச்சாமி அவளின் தோளில் பிடித்துத் தூக்கித் தனக்குப் பக்கத்திவிருத்தி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

“அன்னம் எனக்குக் கட்டாயம் பிரஜா உரிமை எடுத்துத் தாறதாக ஒருவர் வாக்களித்துள்ளார். அது மட்டும் பொறும். பிறகு உம்மை ஆரும் பேசேலாது.” அன்னலட்சுமி அதற்கொன்றும் பதில் சொல்லவில்லை. பிறகு அவர்கன் இருவரும் தங்கள் வாழ்க்கையைய் பற்றி நிறையக் கதைத்துக் கொண்டார்கள்.

“நான் பல ஊர் கண்டனான் உழுத்துப் போன சாத்திரங்கள் சம்பிறதாயங்களுக்காக வாழ்க்கையைப் பலியிடத் தேவையில்லை. மனிசன் மனிசனுக்காக ஆக்கினது தான் சட்டம். அது மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்தால் அதை நொறுக்கி எறியவேணும் அடங்கிப் போறது நெஞ்சிலை துணிவில்லாதவனின்றை வேலை……..”

அவன் தேற்றியதன் பிறகு அன்னலட்சுமிக்குப் புதிய பலம் வந்துவிட்டது. எல்லோரையும் போலத் தானும் இனி தலை நிமிர்து நடக்கலாம். பயந்து, பயந்து பெறும் ஆனந்தமான அனுபவங்கனயெல்லாம் அச்சமேது மின்றி அடையலாம் என்றும் அவள் நினைத்தாள், அந்த நினைவுகளுக்கு நடுவே திடீரென்று பயம் மீ தூர கேட்டாள்.

“உங்களுக்குப் பிரஜாவுரிமை இல்லையெண்டு சில வேளை ஏதாவது கவுண்மேந்து செய்திட்டால்?”

செல்லச்சாமி அவளைப் பார்த்துத் சிரித்தான்.

“ஒருக்காலும் அப்பிடி நடவாது.”

மத்தியானமும் அங்கேதான் செல்லச்சாமி சாப்பிட்டான். பின்னேரம் நாலுமணி போல அவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு போகும் போது சின்னராசா அவனுடைய கைகளைப் பிடித்துத் தடவியபடியே “அடுத்த முறை வரேக்குள்ளை கட்டாயம் குரங்குக் குட்டியும், மயிலிறகும் கொண்டு வர வேண்டும்” என்று சொன்னான். செல்லச்சாமி சிரித்துக் கொண்டு தலையசைத்தான். செல்லச்சாமி அங்கிருந்து போனதும் மணியையும், சின்னராசாவையும் பார்த்துக் கண்டிப்பான குரலில் அன்னலட்சுமி சொன்னாள்: “அவர் இஞ்சை வந்து விட்டுப் போனதென்று ஆச்சி, அப்புவுக்கு ஒருத்தரும் சொல்லக் கூடாது”.


கிணற்றடியில் அன்னலட்சுமி சின்னராசாவுடன் குளித்துக்கொண்டு நிற்கிறாள், நாட்டிப் புதிதாகப் பாத்தி கட்டிய மாதுளங் கன்றிற்கு நீர் திருப்பப்பட்டிருக்கிறது. அதை நாட்டி ஐந்தே மாதங்களாயினும் தன் வயதினை மீறிய பசுமையோடு மாதுளை படர்ந்து நிற்கின்றது. அந்தச் செடியிலே சிவப்புநிறப் பூக்கள் பொலிந்திருந்ததைப் பார்க்கின் போதினிலே அவள் நெஞ்சினுள் கதிரவேலுவின் நினைவுகன் மணத்தன.

உச்சியில் சூரியன் நின்றாலும் சோம்பேறி வெயில், மந்தாரம். அன்னலட்சுமி அந்த எரிச்சலூட்டும் மந்தாரமே தன்னுடைய மனதினுள்ளும் நிறைந்திருப்பது போல அலுத்துக் கொண்டாள்.

மாட்டுக்குப் பிண்ணாக்குக் கரைத்து வைப்பதற்காக வாளியினைக் கிணற்றடியில் வைத்து விட்டு பணி பேசாது நின்றான் மணியின் மாற்றம், அவன் தன்னோடு இப்போது பழகும் விதம் ஆகியன இப்போது அவளுடைய மனதினைக் குடைந்து கொண்டிருக்கின்றதாயினும் அது சம்பந்தமாக என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. அவனுக்கும் தனக்குமிடையே ஒரு திரையே விழுந்து விட்டது போல அவளிற்குப் பயம். அன்னலட்சுமி தன்னுடைய கண்களாலும், சொற்களாலும் தன்னைப் பற்றிக் குறை கூறித்திரிபவர்களையெல்லாம் தலை குனிந்து, மெளனமாகத் தோற்று நடக்க வைத்தாள். ஆனால் மணிக்கு முன்னால் அவளினுடைய கண்கள் நேர் நிற்கத் தயங்கின. வார்த்தைகள் அவளை நிர்க்கதியாக்கிவிட்டன. செல்லச்சாமி அங்கு வந்து போனதின் பின் ஒரு நாள் அவனுடைய போக்கைப்பற்றி, முற்ற வெளியடியிலை செல்லச்சாமி அவளோடு கதைத்திருக்கின்றான். மௌனம் என்ற கவசத்தை ஆயுதமாசுப் பூண் கொண்டே தன்னை அந்தச் சிறுவன் சித்திரவதை செய்கிறானே என்ற எண்ணமும் அவள் மனதை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது.

அவள் மணியைக் கூர்ந்து பார்த்தாள்.

அவன் புருவத்தைத் தாழ்த்தி, பூக்கள் சிலிர்த்த மாதுளங்கன்றையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அன்னலட்சுமி தண்ணீரை அள்ளிப் பிண்ணாக்கு வாளிக்குள் ஊற்ற அவன் வாளியைத் தூக்கிக் கொண்டு அடிவளவுப் பக்கமாக நடந்து சென்றான்.

“நிண்டு ஊறாமல்க் கிட்ட வா ராசா”

என்று கூறியபடியே சின்னராசாவுக்கும் தண்ணீர் அள்ளிக் குளிப்பாட்டினாள் தாய். அவள் கன்னங்கரேல் திறப்பாவாடையைக் குறுக்குக் கட்டாகக் கட்டியிருந்தாள் . நீர் முத்துக்கள் உருண்டோடும் தேகம் இள வெய்யிவில் சிவப்பாய்த் தகதகத்தது. கைகளும் கால்களும் உருண்டு மொமுமொழுவென்றிருந்தன. கறுப்புப் பாவாடை கட்டியிருந்தமையினால் அவளின் சிவப்பு நிறம் மிகைப்பட்டுத் தெரிந்தது.

“காலெல்லாம் சிதம்புது” என்று கூறியபடியே அன்னலட்சுமி குனிந்து அவனுடைய பாத்ங்களில் அழுக்குத் தேய்த்தாள். அவனது கண்களுக்குக் கீழே அந்த வழுவழுப்பான மூதுகும் அடர்ந்த கூந்தலும் தெரிந்தன.

சின்ன ராசாவுக்குத் தாயின் கூந்தலைப் பார்த்ததும் மயிலிறகு ஞாபகம் வந்தது. அது மனதினுள்ளே திடீரென்று குகத்த ஞாபகம்தான். குரங்குக் குட்டியையும், மயிலிறகையும் தவறாது கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற வவுனியா மாமாவைப் பற்றிக் குளித்துக்கொண்டிருக்கும் போது கிசுகிசுத்தபடி கேட்டிருக்கிறான் சின்னராசா. தனக்கு விளாம்பழம் கொண்டு வந்து தருவதாகச் சொல்லித் தினசரி பள்ளிக்கூடத்தில் ஏமாற்றும் ஸ்ரீயைப் போலத்தான் அவளும் அந்தப் மாமாவைப் பற்றிப் பொய் சொல்லுகிறாள். இன்றும் அவன் அதனை நினைவுப்படுத்திக்கொண்டு கேட்டான் தாயிடம்.

ஈரம் துடைத்துக்கொண்டே அன்னலட்சுமி சின்னராசாவை கனிவான குரலில் மெதுவாகக் கேட்டாள்.

“அந்த மாமாவை உனக்கு பிடிச் சிருக்குதோ!”

தண்ணிரால் நனைந்த பிடரியைத் தடவிக்கொண்டு கண்களைக் கூசியபடி அவளைப் பார்த்து சின்னராசா முகம் நிறைந்து பொங்கும் குதூகலத்தோடு சொன்னான்:

“அந்த மாமாவின் எனக்கு நல்ல விருப்பம். சிவப்பு மாமா”

அந்த நிலையிலும் அன்னலட்சுமியின் முகத்தில் பளீரென்ற புன்னகை.

“அவர் எங்களோடை, எங்கடை வீட்டிலை வந்திருந்தால் உனக்கு விருப்பமோ”

சின்னராசா கன்னத்தில் சொறிந்து கொண்டான்.

“எனக்கு நல்ல விருப்பந்தான்”

அவன் சொல்லிவிட்டுச் சிறிது கணம் யோசித்தான்,

“அந்த மாமா எங்கடை வீட்டுக்கு வாறதை ஆச்சிக்கும் சொல்ல வேணம் எண்டு நீங்க எங்களுக்குச் சொன்னனீங்கதானே … பிறகு அவர் எப்பிடி இஞ்சை வந்திருக்கிறது? ஆச்சி பிறகு புறு புறுப்பா ….?”

அன்னலட்சுமி அவனது உடம்பை உலர்த்திய துவாயை அடித்து உதறிக் கொண்டாள்,

“சரி ராசா, நீ ஓடிப்போய்த் திருநீறைப் பூசு”

அன்னலட்சுமியின் மனத்திலே சின்னராசாவின் கேள்விகள் ஒலித்து ஒலித்துக் கேட்டன. அவளுக்கு என்ன முடிவிற்கு வருவதென்றெ தெரியவில்லை. செல்லச்சாமியோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதினிலேயோ இந்த உலகம் முழுவதையுமே எதிர்த்து உடைத்தெறியும் ஆற்றல் அன்னலட்சுமிக்கு வந்து விடுகின்றது.

செல்லச்சாமியின் அணைப்பினின்று விடுபட்டு, வீதி வருகின்ற போதிலோ அவளை வெறித்துப் பார்க்கின்ற கண்களும், பார்வையாலேயே பேசுகின்ற ஏச்சுக்களும் அவளது எண்ணங்களையும், எதிர்காலம் பற்றிய எல்லாப் பூங்கற்பனைகளையும் நொருக்கி, வேதனைப்படுத்தி இறுக்கி விலங்கிட்டு விடுகின்றன.

அன்னலட்சுமி மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கின்றாள் : அவள் தன்னுடைய இருபத்தினாலாவது வயதிலே கணவனை இழந்து தனியளாகப் போனாள். கொடுமையான தனிமை. அரும்பிலேயே கருகிய ஆசைகள், மீண்டும் பசுமையான தளிர்களாகத் துளிர்விடத் தொடங்கிய போதோ எதிர்படுமிடங்கள் யாவிலும் அவளிற்கு வன்மத்தோடு கலந்த எதிர்ப்புக்களே இரும்புச் சுவரமைத்து நின்றன. அவள் யாருக்கும் சிறு வயதிலிருந்து பயந்தவளில்லை. இப்போதோ? இப்போதோ வெனில் எத்தனை பேருக்கு அவள் பயப்பட வேண்டியிருக்கிறது. நீர்ப்பந்தம். இவைகளை உடைத்தெறிய வேண்டும். அவள் மனதினுள்னே செல்லச்சாமி வந்து நின்றான்.

“நாங்க ஒருதருக்கொருத்தர் துணையாயிருக்கத்தான் கலியாணம் முடிக்கப் போறம், இதிலை ஒரு பிழையுமில்லை, நீர் ஒண்டுக்கும் பயப்பட வேணாம். நீர் தனியாயிருந்து கஷ்டப்படுகிற தெண்டு ஆராவது உதவி செய்யவரு கினையா? இல்லை. நான் பல ஊர் அடி பட்டனான், பல பேரைக் கண்டனான். உழுத்துப் போன சாத்திரங்கள், சம்பிற காயங்களுக்காக வாழ்க்கையைப் பலியிடத் தேவையில்லை மனிசன், மனிசனுக்காக ஆக்கினது தான் சட்டம். அது மனிதனுக்குத் தடையாயிருந்தால் அதை நொறுக்கி எறிய வேண்டும். அடங்கிப் போறது நெஞ்கிலை துணிவில்லாதவன்ரை வேலை”

அன்னலட்சுலி தன் நரம்புகளிற்குப் பலம் கொடுத்த அந்த வார்த்தைகளிலேயே மூழ்கிப் போனாள்.

அவளோடு கடலை விற்கும் மனோன்மணியின் கதை அன்னலட்சுமிக்கு அடிக்கடி ஞாபகத்தில் வரும். அன்னலட்சுமியைப் போலவே மனோன்மணியும் சிறு வயதிலேயெ கணவனை இழந்தவள். இனமையின் பூரித்த ஆசைகள், மீட்டமுன்னரே அவளிற்குப் பறிபோயிற்று, அவளது தாய், மனோன்மணியை ஒழுக்கமாகவே இரு. ஒழுக்கமாக இரு என அடிக்கடி போதித்து நெறிப்படுத்தினாள். உடலோடு போரிட்டு ஒப்புக்கொள்ள முடியாது வெறும் நடை முறையில் மனோன்மணி நடித்து வந்தாள். அவள் தாய் செத்தாள். மனோன்மணிக்குத் துணை தேவைப்பட்டது. அவள் துணையில்லாமலிருக்க முடியாது என்று நிர்ப்பந்திக்கப்பட்ட அதே வேளையில் துணையோடு வாழவும் கூடாது என்று சமூகத்தினால் போதிக்கப்பட்டாள். முடிவில் அவள் வேசையானாள். வாழ விரும்பியவளின் கதை அப்படி முடிந்து போயிற்று.

மனோன்மணியைக் காணும்போதெல்லாம் அன்னலட்சுமிக்கு மனம் துணுக்குற்றத் துடிக்கும். ஒழுக்கமாய் வாழவேண்டும் என்று புலம்பும் சனங்களின் பொய்வேஷத்தை ஏற்றுக் கொண்டே மனோன்மணி வாழ்க்கை நடத்துகிறாள் பரிதாபம்!

மத்தியானச் சாப்பாட்டை அன்று அவள் தான் குழைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். மணியை அவள் பார்த்தபோது, அவனது பார்வை வெறுமையாய் வந்து மோதிற்று. ஆனால் மணிக்கு இன்றைக்கு ஆச்சரியம். தாயின் பார்வை, தன் பார்வைக்கு முன்பாகத் தாழ்ந்து விழவில்லையே என்று எண்ணி அதிசயமுற்றான். அதே கூர்ந்த, கெம்பீரமான தலை குனிய வைக்கும் பார்வை. கண்கள் மந்திர வார்த்தைகளைச் சொல்வன போல ஜொலித்தன. பழைய தாயை இப்போது அவன் கண்டான்.

“மணி, முந்தியைப் போல நீ சந்தோஷமாய்க் கதைக்கிறதில்லை. நீ நினைக்கிற மாதிரி இஞ்சை ஒண்டும் ஒருத்தரும் பிழையாய் நடக்கவில்லை. நீ சின்னப்பிள்ளை, உனக்குக் கன விஷயங்கள் விளங்காது”

மணி மௌனமாய் அவளைப் பார்த்தான்.

“ராசா என்னோடை நீ கோவமே?”

அவள் குழைந்த குரலில் மணி நெகிழ்ந்தான்.

“என்ன பேசாமலிருக்கிறாய்?”

மணி உணர்ச்சி வசப்பட்டவன் போல அவளைப் பார்த்தான். அன்னலெட்சுமிக்கு கண்கள் கலங்கின.

“அம்மாவிலை உனக்கு விருப்ப மில்லையாடா?…”

தாய் அழுவதைக் கண்டதும் சிள்னாசா மணியைப் பார்த்துப் பற்களை நரும்பினான்.

“அம்மா அழுகிற எல்லா ?……. சொல்லன்…”

மணி சோற்றுக் கையைப் பார்த்தபடி தள தளத்தான்.

அம்மாவிலை விருப்பம். ஆச்சியலை அப்புவிலை, ராசாவிலை விருப்பம்”

அன்ன வட்சுமி பெருமூச் செறிந்தாள்.

“எனக்குக் காணும்”

மணி எழுந்து போனான். அவனின் பாதங்களையே அன்னலட்சுமியின் கண்கள் தொடர்ந்து போய்த் திரும்பின.

“இவர் ஒரு பெரிய ஆளாம் கடுக்காயர்”

சின்னராசா எரிச்சலோடு சொன்னான்.

“அம்மா நீங்க சாப்பிடுங்கோ ….”

ஆதுரமாகச் சொன்ன அவன் கன்னத்திலே செல்லமாக அவள் திமிண்டிக் கொண்டதும் சின்னராசா கிசு கிசுத்தான்;

“அம்மா, அந்த வவுனியா மாமா எப்ப வருவார்?”

அன்னலட்சுமியின் முகத்தில் பரவசம் பூத்து மணந்தது.

மகனின் முகத்தையே பார்த்தாள் நிறைவோடு.

இலேசான புன்னகை அவளின் முகத்தை அழகாக்கியது.

(முற்றும்)

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஆகஸ்ட் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *