இராணுவத்தில் சித்தார்த்தன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 7,665 
 
 

புத்தூர் வடக்குச் சந்தியிலிருந்து சுன்னாகம்போகும் வீதியில் வரும் நிலாவரைக் கிணற்றுக்கு ஒரு கி.மீ முன்பதாக வரும் சிறிய செம்பாட்டுக் கிராமந்தான் நவற்கீரி. வாழை, வெங்காயப் பயிர்ச்செய்கைக்குப் பெயர்போன பூமி. அங்கே வாழ்ந்த எளிய விவசாயக் குடும்பஸ்த்தர் சண்முகம்.

எல்லா இளைஞர்களைப்போலவும் கல்லூரிக்குச்சென்று சோதனைகளில் சித்தியடைந்து ஏதோவொரு தொழிலைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு பிள்ளை மாறாக இயக்கத்தில் சேர்ந்துகொண்டு தற்கொடைப்போராளியாகி விடுதலைக்குத் தன்னையே கொடுத்திருக்கும் குடும்பம் அது. அப்பா சண்முகத்துக்கு தன் மகனையிட்டுப் பெருமையாக இருந்தாலும் ‘தான் பெற்றுத்தூக்கி அளைந்து காலடியில் விளையாடி வளர்த்தபிள்ளை இப்போது சூனியவெளிக்குள் ஆகுதியான அநித்தியக்கூத்தை’ நினைக்கும் போதெல்லாம் நம்பமுடியாமல் அவர் மனமும் ஒரு சூனியவெளிக்குள் புகுந்துவிடும்.

அனுராதபுர விமானத்தளத்தாக்குதலான ஒப்பிறேஷன் – எல்லாளனில் கொல்லப்பட்ட அனைத்துப்போராளிகளின் உடல்களையும் இராணுவத்தினர் உழவுஇயந்திரப்பெட்டியில் நிர்வாணமாக வரிசைக்குக்கிடத்தி நகரம் முழுமைக்கும் கொண்டுசென்று காட்சிப்படுத்தினார்கள். அந்நிகழ்வின் காணொலியில் அவ்விளைஞர்களின் உடலங்களைக்கண்ட பிள்ளைகளைப் பெற்ற சிங்களத் தாய்மார்கள்கூட ‘ யார் பெற்ற பிள்ளைகளோ………. அநியாயம் அக்கிரமம் ’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.

கொஞ்சம் நடுநிலையான ஊடகங்கள் ஒப்பிறேஷன் – எல்லாளன் தாக்குதலில் 6 குண்டுவீச்சு விமானங்களையும் ஒரு உலங்குவானூர்தியையும் அழிப்பதற்குப் பகரமாக 21 இளந்தற்கொடைப்போராளிகளை அனுப்பி அழித்தது அநியாயம், அக்கிரமம், அவிவேகம் என்றெல்லாம் அரற்றின.

உக்கிரமான 30 ஆண்டுகாலப் போர் விளைவித்த இளவயது மரணங்களும் விதவைகளும் முதிர்கன்னிகளும் வாழாவெட்டிகளும் மலிந்த தமிழ்ச் சமூகத்தில் இன்னும் இளைஞர்கள் உயிர்தரித்திருப்பதுதான் அதிசயம். நித்திய இருளில் விடியலும் பகலும் கனவென்றானது.

சண்முகத்தின் மனைவி கலையரசிக்கும் வயது 41 தான் ஆகிறது, விகசித்த முகத்தோடு சதா கலகலப்புடனிருப்பவள் மகனைப் பிரிந்தநாள் முதல் சிரிப்பதை மறந்திருந்தாள், அதுபோலவே தன்னை அலங்கரிப்பதையும் பட்டு உடுத்துவதையும் தவிர்த்திருந்தாள். தினசரி அடுப்பெரிக்கவே அக்கப்பாடுபடும் சராசரி விவசாயக் குடும்பங்களுக்கு நாடு போருக்குள் அகப்பட்டு வலியைத் துய்க்கையில் பட்டுச்சேலையுடுத்துவதன்ன சிறிய சந்தோஷங்களுக்கான சந்தர்ப்பங்களே அருகலாக இருந்தன.

***

சண்முகம் குடும்பத்துக்கு மொத்தமும் 4 பிள்ளைகள். மூத்தவன் மாதவன் டோஹாவுக்குப்போய் பாரவுந்துச்சாரதியாய் ஏதோ புலுண்டுறதில (தேட்டம்) குடும்பம் இயங்குது. அவனுடைய உதவியோடுதான் சண்முகம் நவற்கீரியில் குடியிருந்த கல்லுக்காணியையே வாங்கிக் கல்லுடைத்துப் பண்படுத்தி நிலாவரைத் தண்ணீரின் சகாயத்தால் வெங்காயம் மிளகாய் தக்காளி, கத்தரி, பயத்தங்காய் பயிரிடுகிறார். இந்த இழவெடுத்த போரால யாழ்மண்ணின் விளைச்சல்கள் கொழும்புக்கு நகராததிலே பணப்பயிர்ச்செய்கையால பெரிசாய் சுகமென்றில்லை. பணப்புழக்கம் குறைந்ததில் மக்களின் நுகரும் சக்தி நலிந்துவிட்டது. இரண்டாமவன்தான் வான்புலி துஜீவன், அடுத்தவள் மாலதி. க.பொ.த, உயர்தரம் முயன்றவள். உயர்கல்வி வாய்ப்பு அமையவில்லை. கடைசிப்பையன் பத்தாவது படிக்கிறான், வரும் மார்கழியில் பரீட்சை.

மாலதிக்கு தூரத்துச்சொந்தத்தில லண்டனில ஒரு பையனைப் பேசிவைச்சிருக்கு. பையனுக்கு கலாமோகன் என்று பெயர். வெளியூர்த்தரகர் பையன் மாணவருக்கான வதிவிட அனுமதியில் லண்டனில இருக்கிறான் என்று கொண்டுவந்து பொருத்தியபிறகுதான் கலாமோகன் ஒரு சுற்றுவழியில் இவர்களுக்குச் சொந்தமாக இருப்பதுவும் தெரியவந்தது. கலாமோகன் வணிக முகாமைத்துவத்தில் (MBA) மேல்மாணிப்படிப்பு முடியவும் லண்டனில் ஒரு வணிகக்குழுமத்தில் கொழுவிவிட்டான், கைவசம் தொழிலிருந்தாலும் கமறொனின் அரசு அவனுக்கு நிலையானதும் ஒருத்தியை அழைத்து தன்னுடன் வைத்துக்கொள்ளும் வலுவான வதிவிடவனுமதியை வழங்குவதில் இழுத்துப்பறித்துக் கொண்டிருக்கிறது.

அப்பிரச்சனைக்குரிய ஒரே மாற்றுவழி இந்தியாவுக்கோ சிங்கப்பூருக்கோ பெண்ணைவரவழைத்து பதிவுத்திருமணத்தை முடித்துக்கொண்டு லண்டனுக்கு வந்து தன்னை மனைவியுடன் சேர்ந்துவாழ அனுமதிக்கும்மாறு பிரிடிஷ் அரசிடம் விண்ணப்பிப்பதுதான். பையன் சம்பந்தமான அனைத்துக் கோப்புகளும் மெல்லக் கசிந்து இரங்கி பெண்ணுக்கு வதிவிட அனுமதியை வழங்கியபின்னால் இணையை அங்கே அழைத்துக்கொள்ளுதல். அதுவும் உடனடியாக நிகழ்ந்துவிடாது, ஓராண்டோ ஈராண்டோ இழுபடும். தாமதமானாலும் இப்போ அநேகரும் செய்வதும், செயற்படுத்த இருப்பதான ஒரேமார்க்கமும் அதுதான்.

***

மாலதிக்கு இந்தியாவுக்குச் செல்வதுக்கான விஸாவுக்கு விண்ணப்பித்தபோதுதான் புதிய சிக்கல் ஒன்றுந் துளிர்த்தது. உக்கிரமாகப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில், இன்றிருப்பதைவிடவும் இந்தியவிஸாவுக்கு விண்ணப்பிப்பதிலும் அதைப்பெற்றுக்கொள்வதிலும் ஏராளம் கெடுபிடிகள் இருந்தன.

விண்ணப்பதாரி வதியும் பிரதேசத்துக்கான / மாவட்டத்துக்கான இராணுவப்பணிப்பாளரின் அலுவலகத்திலிருந்து அவன் / அவள் போராட்டக்குழுக்களுடன் சம்பந்தமில்லாதவரென்ற சான்றிதழையும் விஸாவிண்ணப்பத்துடன் சேர்த்து இணைக்கச்சொல்லி இந்தியத்தூதரகம் கோரியது. இராணுவப்பணிப்பாளரிடம் அனுமதிபெறுவதாயின் அதுக்கு விண்ணப்பதாரியின் பகுதிப்பிரதேச அலுவலரின் அத்தாட்சிப்பத்திரம் தேவை. பிரதேச அலுவலர் (Divisional Secretariat) அதை உறுதிப்படுத்த வேண்டின் அவர் பிறந்தவூர் கிராமஅலுவலரிடம் உறுதிப்பாட்டுப்பத்திரம் தேவை. பிறந்த இடங்களைவிட்டு மக்கள் செவ்விகிதமும் இடம்பெயர்ந்து வாழும் ஒரு காலத்தில் எந்தக்கிராமத்தின் அலுவலர் எந்தக்கிராமத்து மூலையிலிருந்து இயங்குகிறார் என்பதைக் கண்டுபிடிப்பதே வல்லையாயிருக்கும். ஒன்றோடொன்று பின்னப்பட்ட சிக்கலான இச்செயற்பாடு அனைவரையும் விசனமூட்டியது. இவர்கள் எல்லோரிடமும் அனுமதிபெறுவதைவிடவும் இலேசாகச் சோனியாவிடமோ, பிரணாப் முகர்ஜியிடமோ அனுமதியைப் பெற்றுக்கொண்டுவிடலாம். ஈழத்தமிழருக்கு விஸாவழங்கும் நடைமுறையையாவது இந்தியா தளர்த்தித் தமிழர்களிடம் சற்றே தாராளமாக இருந்திருக்கலாம். புலம்பெயர்ந்து வேறொருநாட்டில் வதியும் ஒரு இலங்கையர் விஸாவுக்கு விண்ணப்பிப்பதானால்கூட அவர் சார்ந்த பத்திரங்கள் தரவுகள் அனைத்தும் இலங்கையிலுள்ள இந்திய தூதுவராலயத்துக்கு தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டு அவர்களால் மேலே இராணுவம், காவல்திணைக்கள உதவியுடன் புலனாயப்பட்டுப் பச்சைக்கொடி காட்டப்பட்டாலே விஸா வழங்கப்படும், அல்லது நிராகரிப்புத்தான். ஒரு முறை நிராகரிக்கப்பட்டுவிட்டால் மறுமுறையும் விஸா எடுக்கப் ‘பிரம்மப்பிரயத்தனம்’ செய்யவேண்டும்.

கிராம அலுவலருக்கு வேண்டிய சம்பாவனையையூட்டி மாலதி துஜீவனின் சகோதரி என்பதை மறைத்து பிரதேசசெயலரிடம் அத்தாட்சிப்பத்திரத்தைப் பெற்ற பின்னாலும் ஊரின் நல்லூழியக்காரரின் கைங்கரியமோ, இல்லை அவளது பெயர் மாலதியாக இருந்து தொலைத்ததாலோ (மாலதி ஈழப்போராட்டத்தில் முதல் வித்தாகிய தமிழ் மாவீராங்கனை) இராணுவந்தான் தம் உளவாய்வுகளால் அறிந்துகொண்டார்களோ, முயன்ற மூன்று தடவைகளும் மாலதிக்கான நற்சாட்சிப்பத்திர விண்ணப்பத்தை இராணுவப்பணிப்பாளர் காரியாலயம் நிராகரித்துவிட்டது. மாலதிக்கும் 27 வயசாகிவிட்டது. ‘குமர் முத்தினால் குரங்கு’ என்பார்கள். பிறகு அவளைக் கட்ட எவன் விரும்பி வருவான்? திருமணம் நிச்சயமாகிய பின்னரும் இக்கரையில் இவளும் அக்கரையில் அவனும் வாடிக்கொண்டிருக்கின்றனர். மாலதிபற்றிய கவலையே சண்முகத்தையும் கலையரசியையும் குறுக்காலபோனவனின் கவலையோடு சேர்ந்து தின்றுகொண்டிருக்கிறது.

***

எட்டரைச்சுத்து மாட்டுவண்டி ஒன்று வேலியில் உரசாமல் கொழுவாமல் போகக்கூடிய அவர்களின் வீட்டுக்கான ஒடுங்கலான பாதையில் யாழ்ப்பாணம் இராணுவ பிராந்திய அதிகாரி சமிந்த நாணயக்காரவின் டிரக்வண்டி இரைந்துகொண்டு வேலியில் சடைத்துநின்ற பாவெட்டை, கிழுவங்கதியாலினது குறுக்கோடிய சில கிளைகளையெல்லாம் முறித்துக்கொண்டு நுழைந்துபோய் சண்முகம் வீட்டுவாசலில் நின்றது. வேலியில் குறுக்குப்பிடிக்க பனைமட்டைகளைக் கருக்குச்சீவிக்கொண்டிருந்த சண்முகம் டிறக் வண்டியைப்பார்த்ததும் பயந்து உடல் விதிர்த்துப்போனார். இதிலேயே வைத்துச்சுடுவாங்களோ, அள்ளிக்கொண்டுபோய் மறைவாய் வைத்துத் தட்டுவாங்களோ என்பதைத்தவிர வேறெதையும் அவரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஜீப்பைவிட்டுக்குதித்து இறங்கிய சமிந்த நாணயக்கார, கும்பிட்டபடி வாசலுக்கு வந்த சண்முகத்தைப்பார்த்து “ நீங்கள்தானே சம்முவம்” என்றார் அதிகாரதோரணையுடன். அவருக்கு காவலுக்கு மேலும் இரண்டு இளம் இராணுவத்தினர் உடன் வந்திருந்தனர்.

அந்த இராணுவதிகாரியை சண்முகம் ஒருபோதும் பார்த்ததில்லை. தோள்களிலும், நெஞ்சிலும் மூன்று அணில்வரிகள் உள்ள பட்டைகள் மாத்திரம் அணிந்திருந்தார், பயந்து கெடிக்கலக்கத்திலிருந்த சண்முகம் அவர் என்ன தரத்திலுள்ள அதிகாரியாயிருப்பார் என்பதை ஆராயும் மனநிலையில் இல்லை.

“ ஓம் ஐயா………… ஓம் ஓம் ஓம் நான்தான்……… அது ”

“ நாங்கள் ஒங்கள விசாரிக்கத்தான் வந்தது, உண்மை சொன்னாப் பிரச்சனை இல்லை. ஒண்டுக்கும் பயப்பட வாணாம்” என்றார்.

எந்த ஒரு இராணுவத்தினனுமே சண்முகத்தை இந்த ஜீவிதத்தில் வாங்க போங்கவென்று விளித்துப்பேசியதில்லை. அதனாலேயே மேலும் பயமாக இருந்தது அவருக்கு, அதை மறைத்துக்கொண்டு

“ சரி……ஐயா ” என்றபடி மீண்டும் கும்பிட்டார் சண்முகம்.

“ துஜீவன் ஒங்க மகன்தானே………… ”

“ ஓம் ஐயா”

“ என்ர தலைச்சன் பிள்ளை ”

“ அப்பிடீன்னா……….நீங்க அடொப்ட் பண்ணி வளர்த்த பிள்ளையா.”’

”இல்லை ஐயா……என்ர சொந்தப்பிள்ளை, மூத்த பிள்ளையைத்தான் தலைச்சன் என்றது.”

“ என்னப்பா கொடுத்து வளர்த்தீங்க அவனுக்கு…….”

இப்போ சண்முகத்துக்கு மாத்தையா என்ன கேட்கிறாரென்று புரியவில்லை. அலமலங்க அவரைப்பார்த்தார்.

“ இல்லை…. துஜீவன் அனுராதபுரம் ஏர்பேஸ் தாக்குதலில் இறந்தவொரு மாவீரன்தானே……….”

மாவீரன்போன்ற சொற்கள் எல்லாம் இராணுவத்திடமிருந்தல்ல எந்தவொரு சிங்களவர் வாயிலுருந்தும் எப்போதுமே வந்துவிடாது.

பாகிஸ்தான் வங்கத்தை ஆக்கிரமித்தபோது ஆயிரக்கணக்கில் இளம்பெண்கள் இராணுவத்தால் தூக்கிவரப்பட்டு முகாம்களிலும், பதுங்குகுழிகளிலுமாக வன்புணரப்பட்டனர். வங்கம் சுதந்திரம் பெற்ற பின்னரும் இவர்களுக்கான இழப்பீட்டையோ, சர்வதேசநீதியை வங்க அரசு பெற்றுத்தரவில்லை, அற்பமான சில சலுகைகளைப்பெறவே அப்பெண்கள் போராடவேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் தம் தாய்ச்சமூகத்தினால் இழித்துப்பழிக்கப்படாதிருக்க அவர்களை வீராங்கனைகள் (பிரங்கோனா) எனவே அரசு அழைத்தது.

ஆச்சரியம், பயம் எல்லாவற்றினதும் கலவையாய் தொடர்ந்து தலையைக் கவிழ்ந்துகொண்டு நின்றார் சண்முகம்.

“ இல்லை இப்படிப்போய் உயிரைக்கொடுத்து மாவீரன் ஆகிறதுக்கு ஏதும் விசேஷமான முறையில அவனை வளத்தீங்களான்னு நான் கேட்குது ”

சண்முகத்துக்கு மாத்தையா கிண்டல் பண்ணுகிறாரோ இல்லை நிஜமாய்த்தான் கேட்கிறாரோ என்று சந்தேகமாயிருந்தது.

“ கயிடப்பட்ட குடும்பம் ஐயா…….வசதிஇல்லாதனாங்கள், தோட்டவேலை, கூலிவேலைசெய்துதான் சீவியத்தைத் தள்ளின்னான், மற்றப்பிள்ளைகளைப் போலத்தான் இவனையும் வளர்த்தனான், 2001ம் ஆண்டு கடைசியில பத்தாம் வகுப்பு சோதனை எழுதவேணும், சோதனைக்கு முதலே சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிட்டான். நாலு வரிசங்கழிச்சு ஒருநாள் மோட்டச்சைக்கிளில வந்தான், ஆறுதலாய் இருந்தொரு வார்த்தை கதைக்கேல்ல, பேந்தும் பறந்திட்டான் ஐயா……. இப்ப அனுராதபுரம் சமரோடை ஒரேயடியாய் பறந்திட்டான்…… ” என்று சொல்ல புத்திரசோகத்தால் சண்முகத்துக்கு குரல் கட்டிக்கொண்டுவந்தது, கைகளால் முகத்தைப்பொத்திக்கொண்டு உடைந்து அழுதார். பிறகு இடுப்பில் கட்டியிருந்த துண்டையவிழ்த்துக் கண்களைத்துடைத்தார்.

சண்முகத்தின் மனைவி கலையரசி வீட்டுக்குள்ளிருந்து ஒரே நெகிழிக்கதிரையைக் கொண்டுவந்து முற்றத்தில் வைக்கவும் நாணயக்கார மாத்தையா அதில் கம்பீரமாய் அமர்ந்தார்.

“ உங்களோட வீட்டில இருந்த காலத்தில படிக்கிற காலத்தில எல்லாம் எப்பிடி…. துஜீவன் கோவக்கரனாக சண்டைக்காரனாக கலகக்காரனாக இருப்பானோ………..”

“ ஐய்யோ…….ஐயா என்ர பிள்ளை மிரிச்சவிடத்துப் புல்லுச்சாகாது, அவன் தரவளிப்பயலுகள் ஆராவது வளியில தெருவில அவனை முட்டினாச் சொட்டினாக்கூட நேர என்னட்டைத்தான் வந்து சொல்லுவானே தவிரத் திருப்பி அடிக்கத்தெரியாத அப்பாவி ஐயா……..”

“ சரி……. அவன்ர கூட்டாளிகள் எப்படி……….. இயக்கப்பெடியள் யாரும் இவனுக்கு கூட்டாளிகளா இருந்தாங்களா……….. வந்து புத்திசொல்லிச்சொல்லி அவனையும் இயக்கத்துக்குக் கூட்டிப்போனாங்களா……….”

“ ஐயோ ஐயா இந்தச்சுற்றுவட்டாரத்தில அவனுக்கு இயக்கப்பெடியளோ……… கூட்டுக்களோ யாரும் இருக்கேல்ல……….. ஒரே யொருத்தன் இருந்தான்…… அவனுமிப்போ ஆளில்லை.”

சொல்லி முடித்தபின்னால்த்தான் ‘ முட்டாள்த்தனமாய் வாயைக்கொடுத்துத் திட்டேனோ ’ என்று சலம்பலை நிறுத்தி யோசித்தார்.

“சம்முவம் நீங்க எங்கிட்ட சொல்றதுக்குப் பயப்பிடவாணாம்……….நாங்கள் இந்தப் போராளிப்பெடியங்கள் எப்படி உருவானாங்கள், இயக்கங்கள் எப்பிடி உருவாச்சு என்கிறதை இராணுவமும் அரசாங்கமும் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி செய்யுது…….. ஒண்ணும் பயப்படுறதுக்கில்ல ஒளிக்காம உங்களுக்குத் தெரிஞ்ச அவங்கள் பற்றிய எல்லாத்தகவலையும் சொல்லுங்கோ……. வேறு போராளிகளைப்பற்றிய கதைகள் தெரிஞ்சாலும் சொல்லுங்கோ எங்களுடைய ஆராய்ச்சிக்கு உதவும்……..சரி, யாரு அந்த மற்றக்கூட்டாளி?”

இப்போது சண்முகத்துக்குக் கொஞ்சம் துணிச்சல் வந்தது. அவனும் இப்போ ஆள் இல்லைத்தானே. சரி சொல்லுவம் என்று நினைத்துவிட்டுச் சொல்லலானார்.

“ பரதவன் என்று என்னோட மருமோன் ஒருத்தன் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பில இருந்தவன், அவனையும் புலியள் 1994 இல திருநெல்வேலிச்சந்தியில வைத்துப்போட்டுட்டாங்கள்……… அவனைத்தான் சொந்தமென்று சொல்லலாம்”

“புலி விமானப்படையில துஜீவன் இருக்கிறான் என்கிறதை நீங்கள் அறிந்திருக்கேல்லலையா சம்முவம்?”

“ விமானப்படை ஒன்று இயக்கத்திட்ட இருக்கென்றும் இல்லையென்றும் எங்களுக்கும் சமுசிமாய்த்தான் ஐயா இருந்திச்சு…………….காரே ஓடத்தெரியாத இவன் அதில இருந்திருக்கிறான் என்டது….. அவன் அதிலபோய்த் தொலைஞ்சாப்போலத்தான் ஐயா தெரிஞ்சுது ”

பிறகும் சண்முகத்துக்கு கண்கள் குளம் கட்டிவழிய ஆரம்பித்தன.

துஜீவனின் பத்தாம் வகுப்பு சோதனை எழுதுவதற்கான அறிமுக அட்டைப் போட்டோவொன்றைத் தன் பொக்கட்டிலிருந்து எடுத்துக்காட்டிய சமிந்த நாணயக்கார “ இதைவிட வேற போட்டோக்கள் ஏதும் வீட்டில இருந்தால் தாங்கோ ” என்றார்.

துஜீவனின் படத்தைப்பார்த்ததும் கலையரசி தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். அனுராதபுரம் விமானநிலையம் தாக்கப்பட்டு துஜீவன் இல்லாமல்போன செய்திவந்ததும் அவனது பிறந்தநாட்களில் எடுத்திருந்த படங்கள் அனைத்தையும் கலையரசியின் தங்கை ஜெயந்தினி அதுகளாலும் ஏதும் பிரச்சனைகள் வரலாமென்று மறவன்புலவுக்கு எடுத்துச்சென்றிருந்தாள்.

***

“ ஐயாவுக்கு இளனி கொண்டுவரட்டே………..”

மாத்தையாவுக்கும் தாகமாகத்தான் இருந்தது.

“சரி, கொடுங்க………….. மிச்சந்தூரம் போகணுன்னா வுடுங்க வேண்டாம்.”

“ இதில பின் வளவுக்க நிக்குது நல்ல வத்தாவி இளனி ஐயா…….. நல்லாயிருக்கும்” என்றபடி பின்வளவுக்குள் ஓடிப்போய் கொக்கையினால் இரண்டு இளனிகளைப் பறித்து வந்து வெட்டினார். பயம் கொஞ்சம் தெளிந்து சகஜநிலைக்கு வந்து இளனியை வெட்டிக்கொண்டிருக்கும்போது மாத்தையாவைத் துண்டாய்த்தெரியேல்லை ஆனால் கூடவந்த மற்ற ஆமிக்காரனைத் தான் முதல்ல எங்கேயோ பார்த்தமாதிரி அவருக்கு இருந்தது. ஒட்டுப்படையிலுள்ள தமிழ்ப்பெடியனாய் இருப்பானோ………….சாய் அப்பிடியிருக்காது என்று நினைக்கையில் திடீரென்று அவருக்கு அந்த நெல்லியடிச் சம்பவம் நினைவில் தெறித்தது. ‘ஓ…….இவன் அன்றைக்கு ஐஸ்கிறீம் வாங்கிக்குடிச்ச பெடியனல்லே………சரி…சரி இப்போ கொஞ்சம் மீசையும் கறுத்து கூடவே ஆளும் கறுத்துப்போயிருக்கிறான்……….அவன்தான் ஆள்’ இளனியை வெட்டிக்கொண்டிருக்கும்போது அவர்கண்ட நெல்லியடி முன்னிகழ்வு மனதிலோடியது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் மிதியுந்தில் அரைச்சாக்கு தக்காளிக்காயும், பிஞ்சுமிளகாயும் கட்டிக்கொண்டுபோய் நெல்லியடிச்சந்தையில் விற்றுவிட்டு மகாத்மா படமடுவத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தார். அடுத்து வரும் தோட்டவெளியில் ஈ.பி.டி.பியினரின் பாசறையும், இராணுவமுகாமும் இருக்கின்றன. அந்நிய முகத்தைப்பார்த்து நிறுத்தி ஏதும் குடைவார்களோ என்று உள்ளூரச் சற்று உதறல் இருந்தாலும் மிதியுந்தை மிதித்து வந்துகொண்டிருந்தார். 14 வயதிருக்கக்கூடிய ஒரு ஐஸ்பழ மிதியுந்துப்பையன் அவரை விலத்திக்கொண்டு செல்லவும் இராணுவமுகாமின் வாசலில் நின்றிருந்த ஒரு இராணுவத்தினன் அவனைக் கைதட்டிக்கூப்பிட்டான். மீசையே சரியாக முளைத்திராத அந்த இராணுவத்தினனுக்கும் வயது 17 அல்லது 18 தானிருக்கும்.

ஐஸ்பழமொன்று தரச்சொல்லிக்கேட்டுவிட்டுத் தன் காற்சட்டைப்பையுக்குள் கையைவிட்டு கிடந்த சில்லறைகளை வெளியே எடுத்து எண்ணியபடி

“கீயத மல்லி?” (என்னவிலை) என்றான்.

சிறுவன் “ பத்துரூபாய்” எனவும்

அவனிடம் தேறிய சில்லறை ஐஸ்பழத்துக்குப் போதாது போலும்

“யண்ட மல்லி ……… எப்பா” (தம்பி நீ போ……வேண்டாம். ) என்றான்.

சிறுவன் “பரவாயில்லை” என்றபடி ஒரு ஐஸ்பழத்தைத் தூக்கி ஒரு நண்பனுக்குக் கொடுப்பதைப்போல அவனுக்கு இலவசமாகவே கொடுத்துவிட்டு தன் மிதியுந்திலேறிச்சென்று கொண்டிருந்தான்.

இவன் அன்று ஐஸ்கிறீம்வாங்கிய அதே இராணுவப்பையன்தான் சந்தேகமே இல்லை. ‘ஐயா நீங்கள் நெல்லியடி முகாமில வேலை செய்யிறீங்களோ’ என்று கேட்கலாமோவென்று ஒரு கணம் நினைத்தார். ஆனாலும் மாத்தையா இருக்கும்போது அவரின் மெய்ப்பாதுகாவலனிடம் பேசுவது மரியாதையாக இருக்காதென்று விட்டுவிட்டார்.

சண்முகம் இளனியை வெட்டிக்கொண்டிருக்கும்போது கலையரசியின் மூளைக்குள் மின்னல் பொறித்து அந்த அற்புத எண்ணம் வந்தது.

“மெய்யப்பா……… ஐயா நல்லவராய்த்தெரியுறார், பிள்ளையின்ர விஸாப்பிரச்சனையை ஒருக்கால் இவரிட்ட கதைச்சுப்பார்ப்பமே………..”

“சரி,சரி…….. கதைச்சுப்பார்ப்பம்”

சண்முகம் கொடுத்த இளனியை சமிந்த நாணயக்கார மாத்தையா ருசித்துக் குடித்துக்கொண்டிருக்கையில் கலையரசி ஏதோ அலுவலாகப்போகிறவள் மாதிரி வீட்டுக்குள்போய் கைபேசியில் மாலதியைக்கூப்பிட்டு “இங்கே ஏதோ ‘செக்கிங்’ செய்யவெண்டு ‘அவை’ வந்திருக்கினம், நான் சொல்லுமட்டும் வீட்டுக்கு வந்திடாதை” என்று எச்சரித்துவிட்டு வெளியே வந்தார்.

மாத்தையா முதலாவது இளனியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு அடுத்ததைக் குடிக்கும்போது கேட்டார்.

“ சொல்லுங்க சம்முவம் இந்தப்போரில புலியள் வெல்லுவாங்களா……..?”

“ வெல்லுவமெண்டு சொல்லித்தான் இவ்வளவு பெடி, பெட்டையளையும் இழுத்து வைச்சுக்கொண்டு போராடி அழியிறாங்கள்…….. வெல்லுவாங்களோ இல்லையோ……….. அதெல்லாம் கடவுள் காட்டிற வழி ஐயா…..”

என்றுவிட்டு கண்களைச்சுழற்றி வானத்தைப் பார்த்தார் சண்முகம்.

“ நீங்கள் எதை விரும்புறீங்கள்……………மனதில வாறதை அப்பிடியே பயப்பிடாம சொல்லுங்கோ…….. நான் ஆர்மிக்காரன் ஏன்ட பயம் வாணாம்………மின்ன சொன்னமாதிரி இது நாங்கள் செய்யிற ஒரு கருத்துக்கணிப்புத்தான்.”

“ ஈழந்தான் அமையாவிட்டாலும்……. வாழப்பிறந்த இளைஞர்கள் இரண்டுபக்கத்திலும் சண்டையிட்டு மேலும் அழிஞ்சுதொலையாமல் ஒரு நிலைச்ச சமாதானமும், நிம்மதியான வாழ்க்கையும் கெதியில வந்திடோணுமெண்டு விரும்புறன் ஐயா…………”

“ செரி செரி பார்ப்பம்……. சண்டை யாருக்குத்தான் வாணும்……… திரும்பி வரமாட்டன் என்று தெரிஞ்சும் அனுராதபுர ஏரோடிறோமைத் தாக்கப்போனானே துஜீவன் அவனுக்கு என்ன சொல்லிக்கொடுத்து வளர்த்தீங்க………….அதையுங்கொஞ்சம் சொல்லுங்க……….சம்முவம், தனியீழம் இல்லேன்னா இனி எங்களுக்கு மூச்சேவிடேலாமப்போகும் அப்பிடீன்னு ஏதாவது அவனுக்குச் சின்னவயதில படிச்சுக்கொடுத்தீங்களா…….. ”

” சிவசத்தியமாய் அப்படி ஒன்றுமே நாங்க அவனுக்குச் சொல்லிக்கொடுக்கேல்லை ஐயா….எனக்கு அரசியல் விஷயங்களே தெரியாது படிப்பில்லாதவன் ஐயா……… இந்தப்போராட்ட விஷயங்கள்பற்றி அவன் எங்களோட ஒண்டும் கதைக்கவும் மாட்டான், மூச்சுவிடான் ஐயா……… அமைதியாயிருந்த பிள்ளை இயக்கத்துக்கு ஓடினதும்…… தொலஞ்சுபோனது எல்லாம் ஒரு கனவைப்போல இருக்கையா…….. நம்பமுடியேல்ல………… எங்கேயோ போயிருக்கிற என்ர பிள்ளை நாளைக்கோ, நாளையின்றைக்கோ திரும்பி எங்களிட்ட வந்திடுவான்போல இருக்கையா…….”

சொல்லிமுடிக்கையில் சண்முகம் மீண்டும் உடைந்து விம்மினார்.

“சரி…… சம்முவம் நாங்கள் இன்னொரு சமயத்தில பேசிறது…….. அதுக்கிடேல உங்களுக்கு ஏதாச்சும் என்ட உதவி தேவையெண்டால் எனக்குப் போன் எடுத்துச்சொல்லிட்டு வாசல்ல காத்திருக்காம, நீங்கள் எங்கிட்ட நேரடியா வரலாம்……. ” என்றுவிட்டுத் தன் விசிட்டிங்கார்ட்டைக் கொடுத்துவிட்டுப்போக எழுந்தார்.

கலையரசி அருகில்வந்து “ஐயாட்ட இப்பவே கேளுங்கோவன் ” என்று சொன்னார்.

“ நோனா என்ன கேக்கச்சொல்லுது……….”

“ இல்லை ஐயா என்னுடைய மகளோட விஸா விஷயமாக ஒரு பிரச்சனை”

“ என்ன அவளும் இயக்கத்தில இருக்காளா………”

“இல்லை ஐயா அவளுக்கு லண்டனில ஒரு பெடியனைக் கல்யாணம்பேசி வைச்சிருக்கிறம், இந்தியாவிலபோய்க் கல்யாணத்தை வைக்கலாமென்றால் விஸா எடுக்க இராணுவப்பணிப்பாளரின் அனுமதி தேவையாயிருக்கு……….போய் அப்பிளை பண்ணின்னாங்கள், துஜீவனாலயோ என்னவோ நிராகரிச்சுப்போட்டினம்……… ஐயா ஒருக்கால் எங்களுக்கு கருணைகாட்டி அதைப் பெற்றுத்தரவேணும்”

சமிந்த நாணயக்காரவுக்கு அப்பா தன் காதலை மறுத்ததுக்காக 18 வயதில் தற்கொலை செய்துகொண்ட சூட்டித்தங்கை பிரதீபாவின் சிவந்த முகம் நினைவில் வந்தாடியது.

ஒரு சிகரெட்டை எடுத்து நிதானமாக வாயில் பொருத்திவிட்டு பெட்டியை சண்முகத்துக்கும் நீட்டினார். சண்முகத்தைச் சிகரெட்டின் வாசம் சபலப்படுத்தினாலும் மரியாதைக்காக மறுத்தார்.

“ இல்லை…..ஐயா, நான் பத்துறேல்லை………..”

“ சரி……….நெக்ஸ்ட்வீக் எனக்குப் போன்பண்ணிப்போட்டு நீங்க அங்கே போறது…….. நான் சொல்லிவைக்கிறன்.”

சண்முகம் அவரைக்கையெடுத்து வணங்க, கலையரசி குனிந்து அவர் கால்களைத் தொட்டுக்கும்பிட்டார்.

சமிந்த நாணயக்கார மாத்தையாவுக்கு போன் பண்ணியபோது அவர் “சம்முவம் நீங்க இங்கேவரத்தேவையில்லை. நீங்கள் முன்னைக்கொடுத்த அப்பிளிகேஷனையே சாங்ஷன்பண்ணி அனுப்பச்சொல்லிச் சொல்லியிருக்கிறன். உங்க பொண்ணுபேர் என்ன?

“மாலதி ஐயா.”

“ அதுவும் ஒரு போராளியில்லையா………….”

“ அப்படியெல்லாம் இல்லை ஐயா…………. இது ஒரு அப்பாவிக்குழந்தை ஐயா ”

“இல்லை…….. ‘போராளி மாலதி’யைச்சொன்னேன்……… பயப்பிடாதீங்க………… ஒரு கிழமையில் உங்களுக்கு ஔதென்ரிகேஷன் டொகுமென்ட் கிடைச்சிடும். கவலைப்படாம இருங்க சம்முவம்…….. எல்லாம் நல்லபடியாவும்” என்றார்.

மாத்தையா சொன்னபடியே நலைந்துநாட்களில் இராணுவதிகாரியின் உறுதிப்பாட்டுக்கடிதம் வந்து சேர்ந்தது.

விக்கினங்கள் இல்லாமல் இந்தியவிஸா கிடைக்கவும், அதேமாதம் வாராவாரம் கட்டுக்கட்டாக எழுதும் இலிகிதங்களும் கனவுகளுமாக வாழ்ந்துகொண்டிருந்த கலாமோகன்-மாலதி இணைக்குச் சென்னையில் திருமணமாகியது.

இராணுவத்தில் சில சித்தார்த்தன்களும் இருப்பார்களோ…………..!

(நிலாவரை – அப்பிரதேசத்திலுள்ள மிக ஆழமான மேட்டுநில நீர்ப்பாசனக்கிணறு, சீதையை மீட்க இலங்கைக்கு வந்த இராமன் தன் பரிவாரங்களின் தாகந்தீர்க்க அம்பினால் துளைத்து ஏற்படுத்தியது என்பது ஐதீகம்.)

– ஜீவநதி (27.01.2018)

Print Friendly, PDF & Email

1 thought on “இராணுவத்தில் சித்தார்த்தன்

  1. நல்ல கதை-சில வித்தியாசமான சின்ஹல,தமிழ் உறவுகளை யதார்த்த ரீதியாக எழுதப்பட்டிடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *