இரவல் தீர்வுகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 9,679 
 
 

வழக்கமாக வரும் காய்கறி வண்டியை எதிர்பார்த்து வாசலில் நின்ற ஜானகிக்கு எதிர் வீட்டு வாசல் பார்வையில் பட்டது.

‘மீனாட்சி இன்றைக்கு ஆபீஸ் போகவில்லையா?’ என்று யோசித்தாள்.

அதே நேரம் மீனாட்சியும் ஜானகியைப் பார்த்துவிட்டு, சோகையாய்ப் புன்முறுவலித்தாள்.

“லீவா இன்னைக்கு…” என்று கத்தினாள் ஜானகி.

“ஆமா மாமி!… உடம்பு சரியில்லை…”

“மத்தியானமா வாயேன்!…ராஜா ஸ்கூலுக்குப் போயிட்டானா?…”

“ம்” என்று தலையசைத்தாள் மீனாட்சி.

ஜானகி. ஐம்பது வயது முடிந்து விட்டது. மீனாட்சிக்கும் அவளுக்கும் இருபது வயது வித்தியாசம். எதிர் வீட்டில் குடிவந்த முதல் நாளே மாமியைப் பார்த்துவிட்டு அருகில் வந்தாள். தானாகவே அறிமுகம் செய்து கொண்டாள்.

“உங்களைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மாமி!” என்றாள் வெள்ளையாய்.

அன்றிலிருந்து இருவரும் சமவயதுத் தோழிகள் போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவதும், விசேஷ தினங்களில் பரஸ்பரம், வீடுகளுக்கு விஜயம் செய்வதும், புதிதாக எது செய்வதானாலும் கலந்து ஆலோசிப்பதும் பழக்கமாகி விட்டது.

ஜானகி வீட்டில் எது செய்தாலும் ‘இது மீனாக்கு’ என்று எடுத்து வைக்க மறப்பதில்லை. அதே போல ‘இது மாமிக்கு’ என்று மீனாட்சியும் கொண்டு வந்து தரத் தவறுவதில்லை.கொஞ்ச நாட்களாகவே மீனாவின் முகம் இருண்டு, களையிழந்து காணப்படுவதை ஜானகி கவனித்துக் கொண்டுதானிருக்கிறாள். பெரிதாக ஏதும் பிரச்னை என்றால் தன்னிடம் சொல்லாமலா போவாள் என்ற நம்பிக்கைதான் ஜானகிக்கு.

மதியம் மீனா வந்தபோது இன்னமும் அலுப்பாக இருந்தாள்.

“என்ன சமையல் பண்ணே?”

“ப்ச்” என்றாள் மீனா.

ஜானகிக்குத் திடீரென சந்தேகம் வந்துவிட்டது.

“ஏண்டி! நெஜம்மா சொல்லு, நீ ஏதாவது சாப்பிட்டியா?” என்றாள் பரபரப்பாக.

“இல்லே மாமி!” என்றாள் மீனா. அதற்கு மேல் தாங்கமாட்டாதவளாய் அழுதாள்.

அடிப்பாவிப் பெண்ணே! இப்படியா வயிற்றைக்காயப் போடுவாய்!”

ஜானகி பதறிப் போய் எழுந்தாள். ரசம் சாதமாகக் கலந்து எடுத்து வந்தாள்.

“இதை முதல்லே சாப்பிடு!” என்றாள் குரலில் கண்டிப்பு தொனிக்க.

“வேண்டாம் மாமி!”

“சாப்பிடுறி! உனக்கு நான் வேணுமா, இல்லே இன்னியோட முகம் முறிச்சுக்கப் போறியா?”

வாங்கி மடமடவென்று விழுங்கினாள். அடுத்ததாக மோர் சாதமும் கலந்து தர, முகத்தில் லேசாகத் தெளிவு வந்தது.

“இப்ப சொல்லு! என்னடி ஆச்சு?”

“என்னால தாங்கவே முடியலே மாமி!”

“யார்… உன் வீட்டுக்காரரா?”

“ம்! எப்பப் பார்… ஏதாவது குறைசொல்லி…பணம் பிடுங்கி… நான் கொண்டு வர பணம் பத்தாதுன்னு… எங்கப்பாவைக் கேட்கச்சொல்லி… பாவம் ராஜா!… குழந்தை!… அவன்கிட்டே கூட சிரிச்சுப் பேசறதில்லே”

ராமநாதன் கொஞ்சம் முசுடுதான். அவ்வப்போது மீனா முகவாட்டம் காட்டினாலும் இயற்கையிலேயே கலகலப்பான பெண்ணாதலால் தெளிந்து சகஜமாகிவிடுவாள். எதுவும் ஒரு எல்லை வரைதானே.

“இப்பல்லாம் சுள்ளுன்னு அடிச்சுடறார் மாமி! ‘கை நீட்டாதீங்க, அசிங்கமா இருக்கு’ அப்படீன்னா… ரொம்பக் கேவலமாப் பேசறார். ஆபிஸ்ல யாரையாவது தயார் பண்ணிட்டியா? அதான் எதிர்த்துப் பேசறியான்னு கேட்கறார்” – அழுதாள். மாமிக்குத் திணறியது. இந்த முப்பது வருஷத் தாம்பத்தியத்தில் ஜானகி மாமிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கோபாலனும் சமயங்களில் கோபமாய்ப் பேசுகிற மனிதர்தான். ஆனால் கை நீட்டியதில்லை. மீனாவின் கணவன் இந்தத் தலைமுறை மனிதன். மனிதர்களை மதிக்கவேண்டும்… குறிப்பாய் மனைவியை என்பது பரவலாய்ப் புரிகிற கட்டத்தில் இப்படியா அநாகரிகமாய் நடப்பான்! அதுவும் மீனா மாதிரி நல்ல பெண்ணையா…!

“அவருக்கு ஆபீஸ்ல ஏதாவது பிரச்னையா இருந்திருக்கும். அந்த டென்ஷன்ல…” என்றாள் சமாதானமாக.

“இல்லே மாமி! இப்பல்லாம் அவர் நேரத்தோட வீட்டுக்கு வரதில்லே. சம்பளப் பணத்தையும் ஒழுங்காத் தரதில்லே. வீட்டுச் செலவுகளுக்கு என் சம்பளத்தையே எடுத்துக்கச் சொல்லிட்டார். அது மட்டும் இல்லே, அவருக்கே நான் பணம் தர வேண்டியிருக்கு. அப்படி என்னதான் செலவு பண்றார்னும் புரியலே.”

இருவரும் வேலைக்குப் போகிற வீடுகளில், சிலவற்றில் இம்மாதிரியும் நிகழ்ந்து விடுகின்றன.ஜானகி என்ன சொல்வதென்று புரியாமல் மௌனமாய் இருந்தாள்.

“நான் முடிவு பண்ணிட்டேன் மாமி!” – மீனாட்சியின் குரலில் ஒருவிதப் பிடிவாதமும் அழுத்தமும் தெரிந்தன.

“என்னம்மா அது?” என்றாள் ஜானகி மென்மையாய்.

“எங்க ஆபீஸ்லயும் சொன்னா… என்னோட வேலை பார்க்கிறவதான்… நாம ஒண்ணும் அடிமை இல்லை. நாமும் கை நிறைய சம்பாதிக்கறோம். எதுக்காக இப்படி பயந்து பயந்து சாகணும்? நியாயத்துக்கு எப்ப அவர் கட்டுப்பட்டு வரலையோ, அப்ப நமக்கு மட்டும் எதற்கு விலங்குன்னா.” என்றாள் படபடப்புடன்.

பாவம்! சூழ்நிலை எதிர்மறையாய் இயங்கும்போது ஏதேனும் ஒரு முடிவை நோக்கி மனிதன் தள்ளப்படுகிறான். இது இயல்புதான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டுப் பிரச்னையைப் பார்க்கும்போது தவறான முடிவுகள் கூடச் சரியானதாகப்படும்.ஜானகி ஆறுதலாய்அவள் தோளைப் பற்றி அழுத்தினாள்.

“உன் கோபம், வருத்தம் இதெல்லாம் புரியறது. ஆனா அவசரப்படாமே நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கறியா”

“என்னது?”

“இப்போ, எங்காத்துல பால், சர்க்கரை ஏதாவது இல்லை… உறவுக்காரா யாராவது வந்துட்டா… அவசரம்னா… உன்கிட்டதான் வருவேன்… இரவல் கேட்டு… இல்லையா?…”

“ஆமா… அதுக்கென்ன?…” என்றாள் மீனா புரியாதவளாய்.

“இந்த மாதிரி, சாமான் எல்லாம் இரவல் வாங்கலாம்மா! ஆனா தீர்வுகளை இரவல் வாங்க முடியாது. உன் சினேகிதி சொன்னது அவ சூழ்நிலைக்குச் சரி. அதுவே உனக்கும் தீர்வுன்னு எப்படி நம்பறே? உன்னை இப்படிச் செய், அப்படிச் செய்யின்னு நான் எதுவும் சொல்லப் போறதில்லே. நீ படிச்சவ. சுயமா சிந்திக்கிற மனசு இருக்கு. யோசி! எதனால இப்படி ராமநாதன் நடந்துக்கிறான்னு பாரு! பிரச்சினையை உன்னால தீர்க்க முடியுமான்னு பேசிப்பாரு! இல்லே, ரெண்டு வீட்டுலயும் பெரியவங்க இருக்காங்க. சட்டுன்னு முடிவு எடுக்க, இரவல் வாங்க, இது அல்ப சமாச்சாரம் இல்லேம்மா! வாழ்க்கை!…” என்றாள் நிதானமாக.

மீனாட்சிக்குக் கொஞ்சம் அமைதி வந்தது. ஆபீசில் பேசியபோது இருந்த பதற்றம் இப்போது இல்லை. ஜானகி மாமி மேம்போக்காகத் தீர்வு சொல்லவில்லை. தன்னையும் தன் எதிர்காலத்தையும் மனதில் கொண்டுதான் பேசுகிறாள் என்று புரிந்தது.

“எப்படி வேணா முடிவெடு! ஆனா சுயமா… யோசிச்சு… இரவல் வேண்டாம்”

“சரி மாமி!” என்றாள் தெளிந்து.

கையைப் பற்றி அழுத்தியதில் பலம் வந்தது மனசுக்குள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *