இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 5,399 
 
 

பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய மூன்று வயது, ஐந்து வயது பசங்களைக் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டில் விட, சென்னைக்கு இன்று காலை 10.00 மணிக்கே பேருந்து ஏறிவிட்டான். ஆள் வர்றதுக்கு எப்படியும் இரண்டு நாட்கள் கண்டிப்பா ஆகும் !

வீட்டுல …அவன் மனைவி மல்லிகா மட்டும் தனி. ஒன்னும் பிரச்சனை இல்லே ! வாழ்க… பள்ளிக்கூட கோடை விடுமுறை !’நினைக்கும்போதே மகேசுக்குள் மனம் துள்ளி, குத்தாட்டம் போட்டது.

‘அதே சமயம் இங்கே…!’ நினைத்த அடுத்த வினாடி…….

ஏறிய குதிப்பும், குத்தாட்டமும் அவனுக்குள் சுர்ரென்று சுதி இறங்கியது.

‘பக்கத்து வீட்டில் தடுப்பு, தொந்தரவு இல்லை. ரூட் கிளியர். இங்கே மனைவியும், இரண்டு வயது குழந்தை விமலும் இருந்து கொண்டு வழி மறைப்பு , தடுப்பு !!

இவர்களையும் இரண்டு நாட்களுக்கு வீட்டை வீட்டுக் கிளப்பி விட்டால்…? இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!!! நினைக்கவேத் தித்திப்பாக இருந்தது.

இவர்களைத் திடுதிப்பென்று கிளப்புவதென்பது குதிரைக்கொம்பு. எப்படிக் கிளப்ப..?? .

பக்கத்து வீட்டுச் சமாச்சாரம் இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்திருந்தால்…, மனைவி மாலினியை தாஜா செய்து, சாக்கு போக்கு சொல்லி அனுப்பி இருக்கலாம். இப்போது எப்படி அனுப்ப…?! – இப்படி யோசித்து மூளையைப் போட்டுக் கசக்கினான்.

வெகு நேர… கசக்கலில் மூளைதான் குழம்பியதேத் தவிர வழி பிறக்கவில்லை.

“என்னங்க யோசனை…? சாப்பிட வாங்க…”என்று மனைவி அழைத்ததும் பளிச்சென்று மகேஷ் மனசுக்குள் மின்னல்.!!

“ஆ……!! அதான் வழி…!” முகம் பிரகாசம்.

அவ்வளவுதான்…..!!

துள்ளல் நடையுடன் சாப்பிடச் சென் றான்.

சாப்பாட்டு மேசையில் மாலினி ஆசையுடன் சோறு, குழம்பு, கூட்டு என்று பரிமாறினாள்

பிசைந்து ஒரு கவளம் வாயில் வைத்த மகேஷ்….தன் திட்டத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக முகம் சுளித்துத்’தூ ’ வென்று துப்பினான்.

“என்னங்க..! ஏதாவது கல்லா…?” மாலினி பட்டென்று பதறினாள்.

“ம்ம்… உன் மூஞ்சி !” உறுமினான்.

“என்ன சொல்லுங்க..?” இவள் முகத்தில் கலவரம்

“உப்பில்லாம ஒண்ணுமில்லாம சப்புன்னு இருக்கு..!” முறைத்தான்.

“ஐயோ ! உப்பு போட்டேன் !” என்று படபத்து அவன் தட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து ருசி பார்த்துவிட்டு திருப்தியாய்…

“நல்லாத்தானே இருக்கு..!” என்றாள்.

“ஆமா..! நீ சமைச்சதை நீதான் மெச்சிக்கணும்…”கத்தி கோபப்பட்டான்.

‘ம்க்கும். ! மூச்சுக்கு முந்நூறு தரம் வெறும் சிகரெட்டா குடிச்சி வாய் மரத்துப்போக வச்சா ருசி எப்படித் தெரியும்..?” முயக்கினாள்.

‘சக்கிலித்தொடராய்’ புகை பிடிப்பதை அவள் குத்திக்காட்ட அவன் தன்மானம் சுறுசுறுவென்று குதித்தது.

“சமைக்கத் துப்பில்லாம தப்பு செய்துட்டு எதிர்த்தா பேசறே..?”உச்ச பட்ச நடவடிக்கையாய் சடக்கென்று எழுந்து கோபத்தில் பளீரென்று கன்னத்தில் அறைந்தான்.

‘பாவம் !’எதிர்ப்பாராத தாக்குதல் ! அப்படியே ஒரு வினாடி திக் பிரமை பிடித்த மாலினி…. அடுத்த நொடி…உட்கார்ந்து…..’ஓஒ….’வென்று அழ ஆரம்பித்தாள்.

கூடவே அவளுக்கு கோபமும் முசுமுசுவென்று முகத்தில் முட்டியது.

“இப்போ என்ன ஆச்சு, சொல்லிட்டேன்னு என்னை அடிச்சீங்க..?”கத்தினாள்.

இதுதானே அவனுக்கு வேண்டும் !

“வாயைத் திறந்தே…..!” அவன் உறுமி கர்ஜிக்க…

“வாய்க்கு ருசியா பார்த்துப் பார்த்து சமைச்சிப் போடுறதுனாலதானே கொழுப்பு வைச்சி அறையிறீங்க. ரெண்டு நாளைக்குப் பட்னி போட்டாத்தான் கொழுப்பு அடங்கும் !” என்று முணுமுணுத்துக் கொண்டே கோபமாக எழுந்து விடுவிடுவென்று உள்ளே சென்றாள்.

கொடியில் அகப்பட்ட தன் துணிமணிகளை உருவி ஒரு துணிப்பையில் திணித்துக் கொண்டாள்.

தூளியில் தூக்கத்தில் இருக்கும் குழந்தை விமலை அள்ளிக் கொண்டு வாசலைத் தாண்டினாள்.

மகேஷ் படபடத்தது போல் நடித்து, வழியை மறைத்து…

“மாலினி !! நான் முணுக்குன்னா மூட்டையைக் கட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுறீயே ..! இது நியாயமா..?” – இதுதான் சாக்கு என்று திரும்பிவிடக் கூடாதே ! என்று மனதில் வேண்டிக்கொண்டே….சொன்னான்.

அவள், இவன் மறைப்புக்கு நின்று ஒரு முறைப்பு முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“சரி. சரி. மொறைக்காதே. ! நான் இப்போ என்ன சொன்னாலும் கோபத்துல நீ கேட்க மாட்டே. ரெண்டு நாளைக்கு அம்மா வீட்டுலே இருந்துட்டு கோபம் தணிஞ்சி வா. புள்ளையைத் தூக்கிக்கிட்டு தனியா போறது சிரமம். வேணாம். நானே வந்து பேருந்து ஏத்தி விடுறேன்.” என்று சொல்லி சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான்.

நல்ல வேலையாய்ப் பேருந்து நிலையத்தில் இவள் செல்ல வேண்டிய வண்டி தயாராய் இருந்தது.

ஏற்றி அனுப்பி விட்டு நிம்மதியாய் வீடு திரும்பினான்.

‘இன்னும் ஒரு மணி நேரத்தில் மாலினி பத்திரமாய் அம்மா வீட்டிற்குப் போய் சேர்ந்து விடுவாள்!’என்று நினைக்க மனம் துள்ளிக் குதித்தது.

வேகமாக வந்து வீட்டிற்குள் நுழைந்து கதவைத் தாழ் போட்டுவிட்டு…

‘பக்கத்து வீடு, தன் வீடு…. பெண்டு, பிள்ளை, குழந்தை குட்டிகள் தொந்தரவில்லாமல் இரண்டு இரவு, ஒரு பகலுக்குள் மனதுக்குள் உதித்த கதையை தட்டச்சு செய்து முடித்து மின்னஞ்சல் செய்துவிட வேண்டும் !’நினைப்பில்… திருப்தியாய் , மகிழ்ச்சியாய் கணனி முன் அமர்ந்தான் மகேஷ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *