(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வேறு யாருடையதோ முகத்தைப்போல் கண்ணாடியில் தன் முகத்தை ஒருதடவைகூட அவள் பார்த்துக்கொண்டாள்.
அப்படியொன்றும் அவலட்சணமாகத் தோன்றவில்லை. தலையில் மயிர் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் ஜடை பின்னிப் போட்டால் அது அவ்வளவாக வெளியில் தெரியாது. முகத்தில் புருவங்கள், விழிகள், மூக்கு, வாய் இப்படித் தனித்தனியாப் பார்க்கும்போது பெரிய கவர்ச்சியாகத் தோன்றாவிடிலும், எல்லாமாகச் சேர்க்கையில் ஒரு அடக்கமான அழகைக் காட்டத்தான் செய்கிறது.
நிறம்… அசல் வெள்ளை இல்லாவிடிலும் வெளுப்புத்தான்…
உடல்… பருமனில்லை… ஆனால் உயரம் கம்மி… குறிப்பாக அவன் உயரத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது ரொம்பக் குட்டையான ஒரு தோற்றம்.
அவன் காரியாலயத்திற்குச் செல்லும்போது ‘உன் முகத்தை எங்கிட்ட காட்டாதே… பேசாமல் உள்ளே தொலைஞ்சு போ…’ என்று கோபத்தில் சொல்லிவிட்டு பஸ்ஸுக்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடியது, மீண்டும் அவளுக்கு ஞாபகம் வந்தது.
அன்றைய சண்டையின் காரணம் உடனடியாக அவளுக்கு ஞாபகம் வரவில்லை.
கல்யாணமாகி இந்தப் பத்தாண்டு காலத்தில் இந்தத் தன் முகத்தை அவன் எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்யாணம் ஆகும் முன் ஒரு தடவைகூட அவன் இந்த முகத்தைப் பார்த்ததில்லையாம்… பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்… பெண்ணை ஒருதடவை பார்க்க வேண்டாமா என்று கேட்டபோது, ‘அப்பாவும் அம்மாவும் பார்த்துக்கொண்டுவரும் பெண் எனக்குப் பரிபூரண சம்மதம்தான்…’ என்று அவர்களுக்கு அவன் மனமார இதற்கு லைசன்ஸ் வழங்கியிருந்ததாக, அவனே சொல்லி அவள் அறிந்திருக்கிறாள்.
‘அப்படிப் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் எனக்கு இல்லாதிருந்ததால் வெளியழகைப் பொறுத்தவரையில் எனக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை. மேலும் ஒரு பெண்ணுக்கு வெளியே தெரியும் கழுத்தின் மீதிருக்கும் அவள் முகம் தவிர, அவள் கணவனுக்கு மட்டுமே தெரியும் இனி ஒரு முகமும் உண்டு… இந்த உலகத்தில் உள்ள சகலமான பெண்களுக்கும் இந்த இரண்டாவது முகம் ஒன்றுதான்…!’ என்று கல்யாணமான புதிதில் அடிக்கடி ஒரு விதப் பரவசத்துடன் சொன்னவாறு அவன் தன்னை அணுகியதுண்டு.
இந்த முகத்தை அவன் ஒப்புக் கொண்டதன் அடையாளச் சின்னங்களாக இப்போது நான்கு குழந்தைகள்… மூத்தவளுக்கு ஒன்பது வயது… இளையவளுக்கு இன்னும் இரண்டு மாசத்தில் மூன்று வயசு திகைத்து விடும். இப்போதும் கை விட்டுச் செய்யும் கழைக் கூத்தாட்டம்தான் என்று ஐந்தாவதில் விடியுமோ தெரியவில்லை…! இருந்தும், இப்போதெல்லாம் அடிக்கடி இந்த ‘முகத்தைக் காட்டாதே’ என்று விரட்டியடிக்கிறானே…!
இந்தப் பத்தாண்டு காலத்தில் நேற்றுவரை எத்தனைமுறை தங்கள் சங்கமம் நேர்ந்திருக்கும் என்றுகூட அவள் சம்மதம் இல்லாம லேயே அப்போது அவள் அந்தராத்மா கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது அவளுக்குத் தன் மீதே எரிச்சலாக வந்தது. பசித்தவனின் பழங்கணக்கா…?
தன்னுடைய இந்த அரிப்புத்தானே எப்போதும் தன்னை அவனுக்குச் சரணடையச் செய்திருக்கிறது! முன்பெல்லாம் தன்னைச் சீண்டிவிட, தன்னை, தன் குடும்பத்தை எல்லாம் அவன் வம்புக்கிழுக்கும்போது, அதைப் பாராட்டாதிருக்கும் அளவுக்கு தன் உடல் உபாதைகளுக்கு அவன் தீனியாக இருந்திருக்கிறான்… இப்போ…! இப்போதும் வேறு எதற்கு வலுவிருந்தாலும், இல்லா விட்டாலும் இதற்கு அவன் எப்போதும் தயார்! ஆனால்… நாலு பெற்ற அசதியோ, இல்லை உடம்பின் சுதாவான பலவீனமோ, மறுநாள் தலை சுற்றல், வாந்தி, வயிற்று வலி இத்யாதி இத்யாதி உபத்திரவங்கள் தன்னைப் படுக்கையில் தள்ளி விடுகின்றன… இதைப் பயந்து ஆசை அங்கே தள்ளுது, கர்மம் இங்கே தள்ளுது என்று ஒதுங்கிப் போய்விடும் பரிதாபம் தனக்கு! இந்தத் தாழ்வு மனப்பான்மையினால்தானோ, இல்லை தெரியாதவர்களுக்குப் பிரம்மச்சாரியாகத் தோன்றும் இவன் நடை பாவனைகளால்தானோ (அவன் கண்ணின் ஆழத்தில் தனக்கு மட்டும்தான் அந்த நிரந்தர சோக சுபாவம் தெரியும்) தெரியவில்லை, தனக்கு எல்லாவற்றின் மீதும் ஒரு வெறுப்பு.
அவளுக்கு அசதியாக இருந்தது. மூத்த குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டிருந்தார்கள். கடைக்குட்டி ஜ்வாலா கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பொன்னம்மா கொல்லையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.
சற்று முன்தான் பையன் வந்து அவனுக்கும், ஆயா வந்து குழந்தைகளுக்கும் மதிய சாப்பாட்டை எடுத்துச் சென்றார்கள். மணி இப்போ ஒன்றுகூட இருக்காது. மத்தியான வெயில் வெளியில் தீயாக எரிந்து கொண்டிருந்தது. ஒரே புழுக்கம்… அவளுக்குச் சோர்வாக வேறு இருந்தது. மின் விசிறியைப் போட்டு விட்டு, ரவிக்கையின் பட்டனை அவிழ்த்தவாறு கட்டிலில் படுத்தாள்.
‘நீ ஞாபக மறதி, ஞாபக மறதிண்ணு இவ்வளவு நாள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது எல்லாம் பொய்யுண்ணு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு… உனக்கு அசாத்திய திமிர்… போ… உன் முகத்தைப் பார்த்தாலே பாவம்…’ என்று நேற்று அவன் சத்தம் போட்டதும் ஞாபகம் வருகிறது.
திமிர் என்று அவன் சொன்னது உண்மையாக இருக்குமா…?
இருக்கலாம்…!
வீட்டில் யாராவது வந்து போனால் அவன் வெளியிலிருந்து வந்தவுடன் அதனைத் தெரிவித்து விடவேண்டியது!
வந்தவர்களிடம் நிகழ்ந்த உரையாடல்களை ஒன்று விடாமல் சொல்ல வேண்டும்.
அவன் எதையாவது பேசும்போது, அது சின்ன விஷயமானாலும் பெரிய விஷயமானாலும் சரி, திருவாக்குக்கு எதிர்வாக்குப் பேசலாகாது.
குழந்தைகளை அழ விடக்கூடாது.
இனி வீட்டில் அவன் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கும் பொருள்கள் எல்லாம் அப்படி அப்படி எப்போதும் ஒழுங்காக இருக்க வேண்டும்.
வீட்டில் ஓரிடத்திலும் ஒரு போதும் குப்பை கூளங்கள் எதுவும் கிடைக்கலாகாது.
அவன் ‘எள்’ என்று சொன்னால் எள்ளைத்தான் கொண்டு கொடுக்க வேண்டும், தவறிப் போய்கூட அது எண்ணெயாகி விடக்கூடாது.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மூடில் அவன் வருவான். இதற்கெல்லாம் தகுந்தவாறு தன் மூடையும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு குறிப்பறிந்து அவனுக்குப் பணி புரிய வேண்டும்.
-இப்படி இப்படி இன்னும் சொல்லித் தீராத எத்தனை எத்தனையோ கொள்கைகள்!
தன் வாழ்க்கை நரகமாக ஒரு பெண்ணுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்…!
இந்தக் கெடுபிடிகளில் நாள் செல்லச் செல்ல, தனக்கு வெறுப்பு ஏற ஏற அவனுக்குக் கடுமையான பிடிப்பும், புதிய புதிய லட்சியங்களை மோகித்துள்ள வைராக்கியமும் கூடிக்கொண்டே இருந்தது.
பிறகு என்றும் மோதல்கள்தான்…!
அவன் இரு தம்பிகளும் இரண்டு மூன்று நாட்களாக ஆசுபத்திரியில் கிடக்கிறார்கள். ஒருவனுக்கு ஜுரம், இன்னொருவனுக்கு அப்பன்டிக்ஸ் ஆப்பரேஷன்.
‘அப்பா இல்லாததால் குடும்பத்தில் மூத்தவன் நான் எவ்வளவு மன உளைச்சலில் கிடந்து தவித்துக்கொண்டிருக்கேன் தெரியுமா?’ என்று அவன் கேட்டபோது, ‘அதைப்பற்றி எனக்கென்ன கவலை! அவரவர் கவலை அவரவர்களுக்கு’ என்றுதான் தன்னால் சத்தம் போட முடிந்தது.
‘கவலைப்பட்டுக் கவலைப்பட்டு எங்க அப்பாவைப்போல் ஹார்ட் அட்டாக்கில் நானும் சாகணும். அப்போதுதான் உனக்கு நிம்மதி இல்லையா’ என்று அவன் கேட்டபோது, ‘ஆம் இப்போ சாகிறவங்ககூட யாரும் உடன்கட்டை ஏறுவதில்லையே…’ என்று அவள் சொன்னதும் அவளுக்கு இப்போ நினைவு வந்தது.
‘உன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கல்லே, போ… போ… தொலைஞ்சு’ என்று கத்தினான் அவன்.
சடக்கென்று அவளுக்கு வினோதமான ஒரு ஆசை -ஆவேசம் எழுந்தது. இந்த முகம், இப்போ இருக்கும் இந்த அலங்காரம் எதுவும் இல்லாத தோற்றத்தில் வேறு யாருக்காவது பிடிக்குமா?
அவள் கட்டிலிலிருந்து எழுந்து முன் அறைக்கு வந்தாள்.
வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவளுக்குக் கண் கூசியது. ரோடில் ஈ காக்காய் இல்லை. அது தன்னை யாரோ வேண்டுமென்றே அவமானப்படுத்தச் செய்யும் சதியாக அவளுக்குப் பட்டது! அப்படியா…! அடுத்தது இந்த வீட்டின் நடை வழிப் போகிறவன், அவன் யாராகத்தான் இருக்கட்டும். அவனிடமே பரீட்சை செய்து பார்த்து விடுவது என்ற ஒரு வைராக்கியத்துடன், அவள் வீதியையே துழாவிக் கொண்டு ஜன்னல் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.
அதோ… தூரத்தில் யாரோ வருகிறார்கள்.
இதோ… பக்கத்தில் வந்து விட்டான். அவன் உடையையும் நடையையும் பார்க்கும்போது அசிங்கமாகத்தான் இருக்கிறது. இதுவும் தனக்கு ஒரு சவால்தான், இதை ஏற்றுக்கொண்டே தீருவது என்ற ஒரு வெறியில், அவள் ஜன்னல் கதவுகள் முழுவதையும் பலமாய்த் தள்ளித் திறந்தாள்… ஜன்னல் கதவுகள் சுவரில்போய் மோதி படார் என்று ஒரு ஓசையை எழுப்பியது.
சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு அவன் நடந்துகொண்டே இங்கே திரும்பிப் பார்க்கிறான்.
அவள் தன் முகத்தை முழுவதையும் அவனுக்கு நன்றாகக் காட்டி பல் முழுதும் வெளித் தெரிய சிரிக்கிறாள்…
அவன் இப்போது நிற்கிறான்.
ஒரு கணம் தயங்கிவிட்டு அவனும் சிரித்துவிட்டுக் கண்ணைச் சிமிட்டுகிறான்.
இவள் வெளியில் வந்து அடைத்துக் கிடந்த கதவின் தாழ்பாளை விலக்கி, கதவை நன்றாய்த் திறந்து விடும்போது, தன் கணவனைப் பழி வாங்கிவிட்ட ஒரு ஆத்ம திருப்தி அவள் உள்ளத்தில் நிறைந்து நின்றது.
– 09.03.1973
– கண்ணதாசன் 4.1973.
– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.