மாயவனுக்கு தொலைக்காட்சியில் அந்த செய்தியைக்கேட்டதும் மனம் அதிர்ச்சியிலிருந்து மீள சற்று நேரம் ஆனது.
முகம் வியர்வையால் நனைந்திருந்தது.
அவரது முகத்தைப்பார்த்த மனைவி ஓடிச்சென்று டர்க்கி டவல் ஒன்றை எடுத்து வந்து கொடுத்து விட்டு “ஏங்க ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா?” எனக்கேட்க , “ஆபீஸ்ல பிரச்சினையில்லை. இந்த சனியனுக்குத்தான் மறு படியும் பிரச்சினை” என தனது பீரோவைக்காட்டிச்சொல்ல, மனைவியும் புரியாமல் விழித்தவாறு அன்றைய நாடகத்தை பார்க்க எண்ணி சேனலை மாற்ற, அனைத்து செய்தி சேனல்களும் ஒரே செய்தியைச்சொன்னதைக்கேட்ட போது மாயவனைப்போலவே அவரது மனைவி அபிராமியும் அதிர்ச்சியில் தலை மேல் கை வைத்தவாறு, திக்பிரமை பிடித்தவள் போல் வரவேற்ப்பறையில் போடப்பட்டிருந்த உயர் ரக சோபாவில் தனது நூறு கிலோ எடையுள்ள உடலைத்தொப்பென போட்டு அமர்ந்தாள்.
தம்பதிகளை ஆட்டிப்படைத்த அந்த செய்தி ‘இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி செல்லாது’ என்பது தான். நான்கு நாட்களுக்கு முன்புதான் பீரோவில் வைக்க இடம் நெருக்கடியானதால் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஒரு ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொடுத்து இரண்டாயிரமாக மாற்றியிருந்தார். இந்த செய்தியைப்பார்த்தும் அதே ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டுக்களை திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என போன் போட்ட போது அவர் எடுக்கவில்லை.
முன்பு ஒருமுறை பழைய ஆயிரம், ஐநூறு செல்லாமல் போன போது கமிசன் வாங்கிக்கொண்டு மாற்றிக்கொடுத்த குபேரனுக்கு போன் போட்டார். போனை உடனே எடுத்தவன்” என்ன சார் மாத்தனுமா?” என கேட்டதும், ‘இவ்வளவு வேகமாக இருக்கிறானே…? ‘ என ஆச்சர்யப்பட்டவர். “ஆமாம், பத்து மட்டும்” என்றார்.
“பெருசா சார்” என கேட்டதும், “ஆமாம்” என்றார். “ஒன்னும் கவலைப்பாடாத சார். எங்கிட்ட ஐநூறு பேர் ஆளுங்க இருக்கறானுங்க. ஒருத்தனுக்கு ஒரு கட்டு கொடுத்திடலாம். ஒரு மாசத்துல திரும்ப கெடைச்சிடும். ஆனா இப்ப வெலைவாசியெல்லாம் ஏறிப்போச்சு சார். போன தடவ பத்து சதம் கமிசன் வாங்கியிருப்பேன். இப்போ இருபத்தஞ்சு சார்” என்ற போது சற்று தயங்கியவாறு யோசித்தவர், “இருபது போட்டுக்கலாம், காலைல வா” எனக்கூறிவிட்டு போனை வைத்தார்.
“என்னங்க இது? பூமி தரகர், மாட்டுத்தரகர், பொண்ணுத்தரகர் மாதர இப்ப புதுசா பணத்துக்கு தரகர் உருவாயிட்டாங்க. போனாப்போகுது உடுங்க. உங்கப்பன், எங்கப்பன் சம்பாதிச்சதா போச்சு. நீங்க வாங்குன லஞ்சப்பணந்தானே? நீங்க தினமும் கத்தை கதையா கொண்டு வரும்போதே ஏதாவது பாவம் புடிச்சுக்குமோன்னு யோசிப்பேன். இப்படி கமிசன் கொடுக்கிறதால வாங்கிய பாவம் தொலையட்டும். நீங்க வீணா கவலைப்பட்டு உடம்பக்கெடுத்துக்காதீங்க” எனக்கூறிய மனைவியை ஆச்சர்யமாகப்பார்த்தார் மாயவன்.
காலையில் சரக்கு ஆட்டோவில் பழைய பொருட்களை வாங்க வந்தவன் போல் அட்டைப்பெட்டியுடன் வந்த குபேரன், மாயவன் வீட்டு பீரோவை காலி செய்து கிளம்பினான். எழுத்தில் ஒன்றுமில்லை. எல்லாம் பேச்சு தான்.
கடந்த முறை ஏற்பட்டிருந்த அனுபவ நம்பிக்கையில் மொத்தமாக ஏற்றி அனுப்பினார்.
ஒரு மாதம் உருண்டோடிய பின் பெரிய புது காரில் வந்து இறங்கிய குபேரன், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை பெட்டியைத்திறந்து காட்டிய போது தான் மாயவனுக்கு உயிரே வந்தது போலிருந்தது.
“உங்களுக்கு கமிசன் போக எட்டு பெருசு கொடுக்கனம். இப்போ ஏழு இருக்குது. வாங்கினதுல பத்துப்பேர் செத்துட்டானுங்க. பதனைஞ்சு பேருக்கு ஒடம்புக்கு செரியில்லாம ஆஸ்பத்திரிக்கு கட்டிட்டானுக. இருபது பேர் ஆளையே காணோம். அஞ்சு பேரு கிட்ட கொடுத்தது போலி ரூபாவாம். பொய்யோ, நெசமோ. நான் நம்பறேன் சார். நீங்களும் நம்பனம். வெளிய சொல்ல முடியாது. காந்தி கணக்கு தான்” என்றதும் இந்த முறை குபேரன் தன்னை ஏமாற்றி விட்டதாக புரிந்த போது மன வேதனை அதிகரித்தது மாயவனுக்கு.
“என்ன சார் கவலைப்படற மாதர முகத்த காட்டிக்கிறே…? பல பேருக்கு மாத்த முடியாம முழுசா போகப்போகுது. இதனால ரியல் எஸ்டேட் தொழில் மொத்தமா படுத்திருச்சு. அநியாயத்துக்கு வெலைய ஏத்தி உட்டுட்டானுக. அந்தப்பாவம்தான் சார் இது. உங்களுக்கு இந்தக்குபேரன் புண்ணியத்துல தேவல சார். ஏதோ மறுபடியும் இப்ப ஒரு செய்தி வந்திருக்குன்னாங்க. நாலு மாசத்துக்கப்புறம் இந்த ஐநூறும் செல்லாம போகப்போகுதாம். நீங்க இந்த குபேரன் இருக்கிற வரைக்கும் கவலைப்படாதீங்க. செய்தி டிவில வந்ததும் கூப்பிடுங்க. இதையும் மாத்தித்தரேன்” எனக்கூறியதைக்கேட்டு தலை சுற்றியது மாயவனுக்கு.