இரண்டாயிரத்து ஒன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 155 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மண்ணும் மரமும் மேகமும் மழையும் இசைந்தும் பிணங்கி யும் வெளியே அவனைச் சூழ்ந்து கொள்வோமெனத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்தன. காற்று இந்தக் கூட்டத்தில் இன்னும் சேர்ந்து கொள்ளாததில், அவன் குடிசை இன்னும் அது இருந்த இடத்திலேயே இருந்தது. அவனும் அவன் பிள்ளைகளும் அவன் மனைவியும் முடங்கி ஒரு மூலையில் குடியிருந்தார்கள். இரவில் இருளும் சூழ்ந்து கொள்ளும். விடியும் வரைக்கும் அந்த இருளில் இருந்து தப்ப முடியாது.

அதற்குப் பின்னர்…

வெளிச்சமும் நெடுநேரம் நிலைக்கப்போவதில்லை. இன் னோர் இரவும் இருளும் வரவேபோகின்றன. அதற்குப் பின்னர்…ஒரு பகல்!

அந்தக் குடிசையில் ஒரு லாந்தர் விளக்கு உண்டு. அதற்கு மண்ணெண்ணெய் இல்லை. ஒரு வாரமாக இல்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த லாந்தர் விளக்கு அவனிடமிருந் திருக்கிறது. அது அவனிடமிருந்த வண்டியில் இருந்தது. குடிசை யில் இருந்தது உடைந்து போக, வண்டியும் அவனிடமிருந்து போக, இப்போது குடிசையில் இருக்கிறது. விளக்கு விலை முதலில் ஏறியதா அல்லது எண்ணெய் விலை முதலில் ஏறியதா என்பது அவனுக்கு ஞாபகமில்லை. நினைவில் நிற்பதெல்லாம் அதிகமாக ஒரு மூடை நெல் விளைந்தால் தான் ஒரு லாந்தர் விலைக்கு வாங்க முடியும். இந்த எண்ணெய் எங்கோ தூர தேசத்திலிருந்து வருகிறதாம்! மண்ணுக்கு அடியிலிருந்து வரு கிறதாம். தண்ணீருக்குக் கிணறு இல்லையா? அது மாதிரி!

விபரம் தெரிந்த அவன் நண்பன் ஒருவன் சொல்கிறான். இந்தக்கிணறு வற்றிக்கொண்டு வருகிறதாம்.

எண்ணெய் கிணற்றிலிருந்து வருமானால், எங்கிருந்தோ எண்ணெய் ஊற வேண்டும். அங்கெல்லாம் எண்ணெய்மழை பெய்யுமோ?

விலை ஏறி ஏறி இப்போது, முன்னொரு காலத்தில் ஒரு வாரத்துக்குப் போதுமான எண்ணெய்க்கான விலை ஒரு நாளைக் குத்தான் போதுமான எண்ணெய் விலையாக இருக்கிறது.

என்ன நடக்கிறது?

பேரீச்சை மரம் இருக்கிற பாலைவனத்தில் எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றனவாம். யாருக்குத் தெரியும்?

பேரீச்சை மரம் வளர்ந்தால், கீழே எண்ணெய் ஊறக் கூடும்.

அந்த தூர தேசங்களுக்கு வேலைக்குப் போய் வந்திருக்கிற தச்சன் மகன் சொல்கிறான். அங்கெல்லாம் எண்ணெய் தண்ணி மாதிரி, தண்ணி எண்ணெய் மாதிரி என்று.

இருக்கும்.

‘சொர்’ என்று மழை வெகு ஒழுங்காகப் பெய்து கொண் டிருந்தது. குடிசையின் கரையோரம் மெல்லமெல்ல இந்தச் சீரான மழையால் கரைந்துகொண்டிருந்தது.

வானம் பொய்க்காது மழை பெய்து, தப்பாது நேரத்துக்கு வெய்யில் அடித்து, சீராக எல்லாம் நடந்து, கிடைக்கிற ஐம்பது மூடை நெல் தன்னுடைய தகப்பன் காலத்தில் என்னத்துக் கெல்லாம் போதுமானதாக இருந்தது.

இப்போது? மழை. ‘சர்’ என்று முதலில் மின்னல் விழ , ‘ட்டுரும்’ என்று இடி விழுந்தது. மெல்லவே அரை இரவாக இருந்த மாலையும் கரைந்து கொண்டிருந்தது. வானம் தலைக்கு மேலே இருக்கிறது. எண்ணெய்க் கிணறு?

எண்ணெய்க் கிணறுகள் எங்கோ வெகு தொலைவில் பாலைவனத்தில் இருக்கின்றனவாம். அடுப்பு மூலையில் இருந்த தணலில் மடியிலிருந்த பீடியைப் பற்றவைத்துக்கொண்டு, இந்த மழையைப் பார்க்கிற செய்கையில் மௌனமாக நிலைத்துக் கொண்டான். அவன் மனைவி, தன் ஒரு பழைய புடவையால் பிள்ளைகளைப் போர்த்துவிட்டு, ‘இது என்ன மழை’ என்று சிலிர்த்துக்கொண்டாள்.

‘ம்….ம்’ எச்சிலை நேராக வெளியே துப்பினான், அவன் ட்ராக்றர் வாடகை, உரம். ஓ, எல்லாமே விலை ஏறிப்போயிருக்கிறது.

கால்மூடை நெல்லுக்கான பணத்தில் பாதி வேண்டும், இப்போது போய் எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்து விளக்கேற்ற, மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.

அவன் தன் கந்தல் சட்டையில் இருந்த பணத்தைத் திரும்பவும் எண்ணிக்கொண்டான். இது நூறாவது முறை இருக்கும்.

மனைவி அவனைப் பார்த்தாள். அவன் காசை எண்ணு வதைப் பார்த்தாள்.

திரும்பவும் சரீரென்று மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும்.

இந்தப் பணத்திற்கு ஒரு கையளவு எண்ணெயும் வாங்க முடியாது. சாப்பிட ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். கொஞ்ச மாவது கிடைக்கும். ஒரு வாரமாக இரவில் விளக்கில்லாது சுருண்டு படுத்திருப்பதில், இந்த எண்ணெய்ப் பிரச்சினை தொந்தரவு தராமல் இருந்தது.

பகலிலேயே இருள் சூழ்ந்துகொண்டிருக்கும் போது, ஒரு விளக்கு வேண்டும் போல இருக்கிறது.

கிராமத்து விறகுகள் எல்லாம் பட்டணத்திற்குப் போய் விட, காய்ந்த சருகுகளை வைத்துச் சமைத்துச் சமைத்து…

ஓ! இந்த மழையில் அவையுமல்லோ நனைந்து போயிருக்கும்.

பீடி முடிந்து, கையைச் சுடும் வரைக்கும் இழுத்து அதை எறிந்தான். பீடிப் புகை நின்றுபோனது. நெஞ்சை என்னமோ செய்தது. ‘லொக்’ கொன்று இருமிக்கொண்டான்.

‘அம்மா’ என்று பிள்ளைகள் முனகி, காலை ஒருமுறை நீட்டித் திரும்பவும் சுருங்கிக்கொண்டன.

‘இந்த மழையைப் பார்த்தால் ஒன்றும் செய்ய முடியா’ தென்று முனகிக்கொண்டு எழுந்தான். மனைவி, அவன் எழும் பியதை விரும்பவில்லை என்பது தெரிந்தது. என்னத்தைப் போர்த்துக்கொண்டு வெளியே போவோமென மூலையிலிருந்த வெற்றுச் சாக்கை எடுக்கப் போனபோது…

அதற்கு மேலே இருந்த அந்தப் பாம்பைப் பார்த்தான். ஒரு சின்னப் பாம்பு இயக்கமற்றுச் சுருண்டு கிடந்தது. வெகு நேரமாக அப்படிக் கிடந்திருக்க வேண்டும் போல இருந்தது. அவன் ஒரு கணம் கவனமற்றுப் போனதை அவன் மனைவியும் பார்த்துப் பிள்ளைகளை எழுப்பி ஒதுங்கிக்கொண்டாள்.

“எல்லாம் விலகுங்குகள்” என்று அவன் கட்டளையிட்டான். பாம்பு படுத்திருப்பதையே பார்த்தபடி, பின்னால் நடந்துவந்து குடிசையின் மரக்கதவைத் திறந்தான்.

‘சர்’ரென்று மழையின் சத்தம் அதிகரித்து, குடிசையின் உள் மண்ணில் மழைத்துளிகள் விழுந்து, அதை அரிக்கிற முயற்சியில் ஈடுபட்டன.

வேகத்துடன், ஆனால், சத்தமில்லாது நடந்து வந்து அத்தச் சாக்கின் நான்கு மூலைகளையும் பற்றிக் கதவுக்கு வெளியில் வெகு வேகமாய்ச் சுழற்றி எறிந்தான்.

‘தொப்’பென்று சாக்கு ஒரு தொலைவில் விழுந்தது.

‘சரீரெ’ன்று மின்னல் விழ, பாம்பு துடித்தபடி வானத்தில் நெளிவது தெரிந்தது. தொடர்ந்து ‘ட்டுரும்’ என்று இடி விழுந்தது.

உலகம் இருண்டு வருகிறபோது பாம்புகள் எப்படியோ பெருகத்தான் செய்யும் என்று நினைத்துக் கொண்டான். பாம்பு திரும்பியும் வரக்கூடும். அதன் வரவை இந்த இருட்டில் யாருமே தடுக்க முடியாது.

யாரோ தன்னைக் கூப்பிடுவதை அவன் கேட்டான். பக்கத்து வயல்காரனாக இருக்க வேண்டும்.

என்ன வேண்டும் இவனுக்கு? திருப்பி உரக்கப் பதில் கொடுத்தான். அந்த உரத்த சத்தத்தில் பிள்ளைகளும் அவன் மனைவியும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார்கள். மாலையும் முடிந்து, இருள் கவ்வத் தொடங்கிய நேரம், குடிசையில் அடுப்பிலிருந்த சாம்பலைப் போர்த்தியிருந்த தணலின் மௌன ஒளியே, ஒளி!

இவனுடைய பதிலுக்கு, அவன் பக்கத்து வயல்காரனின் பதிலைக் காணவில்லை. எல்லோரும் காதை நீட்டிக்கொண்டு விறைப்பாக இருந்தார்கள். திரும்பவும் “என்ன வேண்டும்” என்று குரல் கொடுத்தான்.

அவன் பதில் இப்போது வந்தது. ஆனால், மழைச் சத்தத்தில் ஒன்றுமே கேட்கவில்லை.

சிறிது நேரம் சென்றபின்னர் மழையில் தப்… தப்… என்று யாரோ நடந்துவருவது கேட்டது. தன் பக்கத்து வயல்காரன் என்பதை இவன் உணர்ந்து கொண்டான். அவன் கையில் ஒரு சிறு குப்பி இருந்ததை, இவன் ஒரு மின்னலின் ஒளிப் பின்னணி யில் கண்டுகொண்டான். அவனும் இவன் குடிசை விளக்கு எரியாததைக் கண்டு கொண்டான். இவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘தன்னிடம் எண்ணெயில்லை என்பது இவனுக்குத் தெரிந்திருக்கக்கூடாதா’ என்று முணுமுணுத்துக் கொண்டான். கோபம் இவன் பதிலின் மொழி வழக்கில் தெரிந்தது. பக்கத்து வயல்காரன் திரும்பி நடந்தான்.

அதைக் கேட்டு, மனைவியும் பிள்ளைகளும் சிரிப்பது பக்கத்து வயல்காரனுக்கும் கேட்டது. இவனுக்கும் இப்போது சிரிப்பு வந்தது. அவன் சிறு தொலைவு சென்ற பின்னர், “இவன் என்ன மடையன்!” என்று மெல்லிய குரலில் மனைவியிடம் சொல்லித் திரும்பவும் சிரித்தான். சிரிப்பில் அலைகள் ஓய்ந்து கண்களை மூடிக்கொள்கிறபோது பாம்பின் ஞாபகம் வந்தது. பாம்பு திரும்பி வரக்கூடும். உன்னிப்பாக மழையொலியின் சீர்மையைக் குலைத்துக்கொண்டு ஏதேனும் வேறு ஒலி வருகிறதா என்று விறைப்பாகக் கவனித்துக்கொண்டான். இது சிறிது நேரத்தின் பின்னர் முடியாமற்போக, தொலைவில் வள்…வள்… என்று நாய் ஒன்று குலைக்கும் ஒலி கேட்டது. பக்கத்து வயல்காரன் எங்கோ எண்ணெய் தேடிக்கொண்டு போகிறான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். “இந்த நேரத்தில் யார் இவனுக்கு எண்ணெய் தரப்போகிறார்கள்” என்று உரக்கவே மனைவியிடம் சொன்னான். “இவனுக்கு இப்போ என்னத்திற்காக விளக்கு தேவைப்படுகிறது” என்று மனைவியும் கேட்டுக்கொண்டாள்.

பிள்ளைகள் இப்போது திரும்பவும் சுருண்டு கொண்டார்கள். மனைவியும் இப்போது அலுத்துக்கொண்டாள். ‘இது என்ன மழை!’

அப்போது மழை ஒலியுடன், மரக்கிளைகளைக் காற்று உரசி எழுப்பும் ஒலியும் சிறிது சிறிதாகச் சேர்ந்து கொள்வது கேட்டது. இப்படியான மழை முன்னரும் பெய்திருக்கிறது. ஐந்து வருஷத்துக்கு முன்னால் வந்த வெள்ளம்.

ஓ…பெரிய வெள்ளம்!

இந்தக் கணத்தில் சீராக வானத்திலிருந்து மழை பொழி கிறது. அது பொய்த்த காலங்களும் உண்டு. அதுவும் கஷ்டப் படுத்தியது உண்டு. வயல்கள் பள்ளம்பள்ளமாகப் பொருக்கு வெடித்துக் காய்ந்து பயிர்களையும் எரித்தது முண்டு.

மண்ணின் கீழே இருக்கிற எண்ணெய், இதோ இந்த மழை பொழிவதுபோல் நிலத்திலிருந்து பிரவாகமாக மேலே பீய்ச்சுமானால்…

அது வேறு.

இது மழைகாலம். எவ்வளவுதான் இதை எதிர்பார்த்து நடந்தாலும் ஒன்று பொய்க்கிறது அல்லது மிகுந்து பிரவாக மெடுக்கிறது. பயிர்கள் இந்த மழையை நம்பி வாழ்கின்றன. பயிர்களை நம்பி…? கோர்க்கப்பட்ட சங்கிலியில் உயிர்கள் ஊசலாடுகின்றன. சங்கிலியில் வளையங்கள் தெறிக்க, ஊசலா டுது இசை தப்பி, இயக்கப் பாதை தப்பி, இன்னொரு சங்கிலியைப் பற்றி…

உழவு காலத்திலோர் ஒலி. விதைப்புக் காலத்தில் இன் னோர் ஒலி. அறுவடைகாலத்தில் இசை, கூத்து.

இப்போது எல்லாமே போய், மழையின் உக்கிர ஒலியும் காற்றின் பேயாட்டமுமே மேலோங்கியிருக்கின்றன. நெடுகவே நிலைக்குமா?

நிலைக்கும் போல் தான் இப்போதிருக்கிறது. என்ன பேயாட்டம் ஆடிவிட்டு இவை ஓயப்போகின்றன?

“நானும் போய்ப் பார்த்துவிட்டு வரட்டுமா?” என்று கேட்டவனை, மனைவி தடுத்தாள். என்ன பார்க்கப் போகிறீர் கள்?’ என்ற கேள்வி தொக்கியே நின்றது.

வெகு தொலைவில்லாத பாதையில் சென்ற ட்ராக்றர் ஒன்றின் ஒலி கேட்டது – மழையின் பின்னணியுடன். கதவை நகர்த்தி அதைப் பார்க்க முயன்றான். அதன் ஒற்றை விளக்கொளி தூரத்தில் மங்கியே தெரிந்தாலும், அதைப் பார்த்து விட்டு, ‘….னுடை ட்ராக்றர்’ என்று முணுமுணுத்துக் கொண்டான். ஒரு விளக்காவது அதற்கிருக்கிறது’ என்றும் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். மாரிகாலத் தவளைகளின் ஒலி, மழையொலி, காற்றொலியுடன் சேர்ந்து கொண்டது. பிள்ளைகளின் முனகல், இந்தப் புது ஒலிச்சேர்க்கையை அவர்கள் ரசிப்பதில் அடங்கியிருந்தது.

இருட்டில் மழையுடன் கூடிய காற்றில், வெளியே போக முடியாமல் நடுங்கிச் சுருண்டு கிடப்பது சொகுசானாலும், கண்கள் திறந்திருக்கிறபோதெல்லாம் பசி எடுக்கிறது.

வரப்போரமாக நடந்து தார்ப்பாதையை எட்டி விட் டால்….. மெல்ல மூலைக் கடைக்கு நடந்து போய்விடலாம். எதாவது கிடைக்கும். போகலாம்…

‘சோ’ என்று காற்று. குடிசையின் கதவைத் தள்ள முயற்சித்து, கதவைத் திறக்க முயற்சித்தவனின் முகத்தில் மழை ஒரு வாளி யளவு நீரைத் தெளித்தது. இதைப் பார்த்த மனைவி திரும்பவும்

அவனைப் பேசாது வந்திருக்கும்படி மெல்லிய குரலில், ஆனால், வலியுறுத்துகிற முறையில் சொன்னாள். ஆனால், திரும்பவும் கதவைத் திறந்து அதன் சூழலை எடைபோட்டபடி சிறிது நேரம் நின்றான்.

மனைவி, திரும்பவும் கதவை மூடிக்கொண்டு உள்ளே வரும்படி சொன்னாள். அவளை அலட்சியப்படுத்திவிட்டு, “நில், இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்த இருட்டில் சாக்கொன்றதை தலையில் போர்த்தியபடி, அவனுக்குப் பரிச்சயமாக இருந்த வரப்பின் மீது வெகு விரைவாக நடக்க ஆரம்பித்தான். மின்னல் ஒளி, பாதையை அவ்வப்போது காட்டிக் கொடுத்தது.

மனைவி அவனை அப்போதும் தடுக்க முயன்றாள். “நில்லுங்கள்…. நில்லுங்கள்.”

அதை அவன் கேட்பதாக இல்லை. சிலவேளைகளில் காற்றின் விசையில் சாக்கு அவனை அரவணைத்தது. மற்றும் வேளைகளில் அதுவும் காற்றோடு காற்றாகப் பறக்க முயற்சித்தது. இடைப்பட்ட வேளைகளில் அவனைக் காற்றோடு சேர்ந்து சாடியது. மனைவி செய்வதறியாது நின்றாள். பின்னர், பெரியதாகத் திரும்பவும் அவனைத் திரும்பும்படி அழைத்தாள். அவனுடன் போராடி அவள் வென்றதில்லை. மின்னல் ஒளியிலும் கூட அவன் போவது சரியாக அவளுக்குத் தெரியவில்லை. அவள் சலித்தபடி ஏதேதோ முணுமுணுத்தாள்.

பெரிய குழந்தை எழும்பித் தாயின் காலைப் பிடித்தபடி வெளியே பார்க்க முயற்சித்தது. காற்று திரும்பவும் மழைநீரைக் குடிசையின் உள்ளே வாரியிறைத்தது. அவள் திரும்பி வந்து முணுமுணுத்துக்கொண்டாள்.

காற்றின் உக்கிரமான வலு, மரங்கள் சரிவதில் தெரிந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள்…குழந்தைகளும் தாயைச் சுற்றிக் கொண்டு எழுந்தன. வெளியே கதவைத் திறந்து, போகும் கணவன் தெரிகிறானோ என்று பார்த்தாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை . பெரிதாகக் குரலெடுத்து, அவனைத் திரும்பி வரும்படி கத்தியழைத்தாள். மழைக்காற்றின் ஒலியின் வலுவுடன் அவள் ஒலி போராட முடியவில்லை. திரும்பத்திரும்ப அழைத்தாள். குழந்தைகளும் சேர்ந்து விளித்தன. காற்று உக்கிரமாக இப்போது குடிசைக் கதவைப் பிடுங்கியெறிந்து சாடியது. மழைத் தூறல்கள் குடிசையின் உள்ளே வேகமாக வந்து விழுந்தன.

ஓ…வென்று காற்று, மரங்களைச் சரிக்க முயற்சிப்பது அதிகரித்தது. குடிசை காற்றில் ஆடத் தொடங்கியது. அதைச் சொல்லியும் அவள் கத்தினாள். பக்கத்துக் குடிசைக்காரன் ஏதோ சொல்வது கேட்டது. அவன் மனவிையும் ஏதோ சொல்ல முயன்றாள். அவளுடன் இவளுக்குச் சில முரண்பாடுகள் உண்டு. அவள் குரல் கேட்டவுடன் தன் விளிப்பை நிற்பாட்டி, காதை உன்னிப்பாக வைத்துக்கொண்டு அவள் சொல்வதைக் கேட்க முயன்றாள். காற்றின் ஒலியே ஒலி ! இந்த நேரத்தில் அவள் என்ன சொல்கிறாள்? இவள் கத்துவது நின்றவுடன் அவள் பதிலும் நின்றுவிட்டது. திரும்பவும் தன் கணவனைக் கத்தியழைத்தாள். ஒருதரம் அழைத்து நிறுத்தினாள். பக்கத்து வீட்டவர்கள் கத்துவதைக் கேட்க ஆயத்தமானாள்…அவள் கணவன் ஆபத்தில்லாமல் திரும்பிவிடுவானாம்.

காற்றும் மழையும் பேயாட்டத்தின் உக்கிரத்தை அதிகரித்துக்கொண்டன. மின்னல் ஒளியில் பல உருவங்கள். இவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

இவள் மலைத்தபடி நின்று பார்க்க முயற்சித்துக்கொண் டிருந்தபோது காற்று, குடிசையைச் சரித்துப் பெயர்க்க ஆரம்பித்திருந்தது. அதையும் சொல்லி, குழந்தைகளையும் அணைத்தபடி மழையைப் பொருட்படுத்தாது வெளியே போனாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. “இது என்ன இருட்டு?” பக்கத்துக் குடிசையிலிருந்தும் மனித ஒலி வருவது கேட்டது. எங்கே தன் கணவன் இந்த நேரத்தில் போய்ச் சேர்ந்தான் என்று அவனை உரக்கவே திட்டிக்கொண்டாள். ஒரு கணம் மழையில் தொப்பலாக எல்லோரும் நனைந்தபடி நின்றார்கள். பக்கத்துக் குடிசையும் காற்றுடனான போராட்டத்தில் தோற்றுப்போக, பக்கத்துக் குடிசைக்காரர்களும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பக்கத்துக் குடிசைக்காரன் இவர்களை அங்கே வரும்படி கத்தியழைத்தான்.

இவள், தன் கணவன் வருகிறானோ என்று ஒரு கணம் பார்த்துவிட்டு, சலித்தபடி குழந்தைகளையும் மெல்ல அழைத்துக் கொண்டு இருட்டில் பக்கத்துக் குடிசையை நோக்கி நடந்தாள்.

போனவன் காற்றுடனும், தார்ப்பாதைக்கும் வயல் வெளிக்குமிடையே ஓடுகிற வெள்ளத்துடனும் போராடிக் கொண்டிருந்தான். வயல் வெளியிலிருந்து தார்ப்பாதைக்குப் போகும் பாதை முற்றாக வெள்ளத்தில் அமிழ்ந்தது தெரியாமல், அவன் அதற்குள் இறங்கிவிட, நீர்ச்சுழல் அவனை இழுக்க, அருகிலிருந்த மரமொன்றைப் பற்றியபடி வெளியேற முயற்சித்தான். காற்றும் மரத்தைச் சாய்க்க முயற்சித்துக் கொண்டிருந்தது. தலையைப் போர்த்தியிருந்த சாக்கு, வெள்ளத்தில் இழுபட்டுப் போயிற்று.

இறுக்கமாக மரத்தைப் பற்றி வெளியில் வந்து நின்று ஒரு கணம் தாமதிக்கையில் தார்ப்பாதையில் மனித அரவம் கேட்டது. ‘வெள்ளம்…’ என்று பேசிக்கொள்வது கேட்டது. குரல் பெரிதாகக் கொடுத்து விபரம் கேட்டான். சோவென்று காற்று பலவற்றையும் சாய்க்கும் ஒலி தொடர்ந்தது. அதையும் மீறும் வண்ணம் பெரிதாகக் குரல் கொடுத்தான். வெள்ளம் பெருக்கிறதாம்…ஊர்ப் பாடசாலையில் எல்லோரும் ஒதுங்கலாமாம்.

திரும்பித் தன் குடிசையின் திசையை நோக்கி ஓடினான், ‘என்ன நடந்ததோ’ என்ற யோசனையுடன். இருட்டினால் விரைவாக நடக்க முடியவில்லை. பாதி வழியில் பக்கத்துக் குடிசைக்காரர் தலைமையில் இரு குடும்பங்களும் நடந்து வருவதை உணர்ந்தான். குடிசைகள் அழிந்ததைப் பற்றி அறிந்து கொண்டான். வெள்ளம் பெருகுவதையும் ஊர்ப் பாடசாலையில் ஒதுங்க முடிவதைப் பற்றியும் சொன்னான். தார்ப்பாதைக்கு வழக்கமாகப் போகும் வழியில் போக முடியாது. சுற்றுப் பாதையில் போக வேண்டும். இவனும் பக்கத்துக் குடிசைக்காரனும் எப்படிப் போவது என்று தீர்மானித்துக்கொண்டார்கள். இரு குடும்பங்களும் தட்டுத்தடுமாறிக் கும்மிருட்டில் நடக்க ஆரம்பித்த போதே தங்கள் மாடுகளை எப்படிக் காப்பாற்றுவது என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள். மழையும் காற்றும் ஓரளவு அதிக மாகவே சாட ஆரம்பித்திருந்தன. தொப்பலாக எல்லோரும் நனைந்தபடி ஒரு கணம் இதை விவாதித்து பின்னர், முதலில் எல்லோரையும் கொண்டுபோய் விட்ட பின்னர் மாடுகளைக் காப்பாற்றுவோம் என்று தீர்மானமெடுத்துக் குழந்தைகளைத் தகப்பன்மார் தோள்களில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார்கள்.

பள்ளிக்கூடம் நெருங்க, அருகே ஒரு விளக்கு எரிவதும் ஒரு பெரிய கூட்டம் இருப்பதும் தெரிந்தது.

பள்ளிக்கூடத்தைச் சுற்றி வெள்ளம். பள்ளிக்கூட வகுப் பறைகள் அதைவிட உயரத்தில் இருந்தன. போய் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினார்கள். அங்கே ஒரு பெரிய கூட்டம் நனைந்து போய், நொந்து போய் ஒதுங்கியிருந்தது. இவர்கள் ஒதுங்க, விபரங்கள் கேட்டார்கள். இன்னமும் இயற்கையின் உக்கிரம் தணியவில்லை.

வந்தவர்களில் ஆண்கள் இருவரும் தங்கள் மாடுகளைக் காப்பாற்றுவதற்காகத் திரும்பப் புறப்பட்டார்கள்…கூட்டம் இவர்களைத் தடுத்தது. ‘இல்லை…இல்லை’ என்று மறுத்தபடி நடக்க ஆரம்பித்தால், முழங்கால் வெள்ளம் இடுப்பளவு ஆகி யிருந்தது. இதை வெல்ல முடியாது என்று உணர்ந்தபோது திரும்பினார்கள். திரும்பித் தங்கள் உடைகளைப் பிழிந்து, கூட்டத்தில் தங்கள் குடும்பத்தாரை தேடிச் சோர்ந்துகொண்டே, சுவர்க் கரையில் சாய்ந்து கொள்வதற்காக பல பேர் சுவரோரம் இருக்கையில்…நடுவில் களைத்துச் சாய்ந்து அழுது கொண்டிருந்த குடும்பங்களுடன் பெண்களையும் கண்டு, இவர்களும் போய் களைப்பில் நனைந்த உடைகளுடன் சரிந்து கொண்டார்கள்.

கசமுச வென்று பலரும் பேசிக்கொள்கிற சத்தம் மழைக் காற்றின் சப்தத்தை மீற முயன்றது. இவர்கள் மாடுகளைத் தேடிப்போன விபரத்தைப் பக்கத்தில் சரிந்திருந்தவனொருவன் விசாரித்தான். வெள்ளம் அடித்துக்கொண்டு போயிருக்குமென்று சொன்னான். அவன் சொல்வது உண்மையாயிருக்கக்கூடுமென்று இவர்களுக்கு எரிச்சல் வந்தது. என்ன செய்ய முடியுமென்று விவாதித்துக்கொண்டார்கள். காற்று, குளிரை வீசியது. இனி யொன்றும் போராட முடியாதென்கிற நிலைமை ஏற்கக்கூடியதாக இல்லை.

வெளியிலோ இருள்!

மறுகியவண்ணமே சேறுபடிந்த தரையில் படுத்தார்கள். இதுபோன்ற சூழலில் நேரம் மெதுவாகவே செல்கிறது. குழந்தைகள் அழுகின்றன. மனிதர்கள் இயற்கையைப் பற்றிய கசப்பில் உழல்கிறார்கள்.

எப்போது விடியும்?

வெளியில் பலத்த சப்தத்துடன் காற்றும் மழையும் தொடர்ந்து தங்கள் வன்முறையை அதிகரித்துக்கொண்டிருந் தன. மரங்கள் முறிகிற தொடர்பான சப்தமும், இடைக்கிடை பாடசாலையை நோக்கி வருகிற அகதிகளின் சப்தமும் ஒருவரை யும் நித்திரை கொள்ள விடவில்லை.

மழை முகில்களின் முற்றுகையினால் விடிவதற்கும் நேர மெடுத்தது. யாரோ ஒருத்தன் வந்து அப்போது மங்கிப்போய் விட்டிருந்த விளக்கை அணைத்தான். மழை ஓய்வதாக இல்லை. வெள்ள நீர்மட்டம், உயரத்திலிருந்த பாடசாலை மேடையைக்கூட எட்ட ஆரம்பித்திருந்தது. சிலர் எழுந்து வெள்ளத்தைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக காற்றின் வலு குறைந்துவர, நீரின் மட்டம் அதன் உயர்ந்த நிலையிலிருப்பதாகவே தோற்றியது. மாடுகள் வெள்ளத்தில் அடிபட்டுப் போவதைப் பார்த்தார்கள். இப்போது எவரும் நடந்து பாடசாலைக்கு வர முடியாது என்று பேசிக் கொண்டார்கள். தாங்கள் உயிரோடிருப்பதே மேல் என்று தோன்றுவதாக இல்லை. தங்கள் உடைமைகளின் இழப்பைப் பற்றியே மறுகிக்கொண்டிருந்தார்கள்.

நேரக் கணக்கெடுப்பு எது?

நின்றதாகவே தோன்றியது.

ஒருவகை இயந்திர சப்தம் அப்போது கேட்டது.

‘ரார்…’ என்கிற சப்தமில்லை.

‘ங்ங்ங்… சில்வண்டு எழுப்புவதைப் போன்ற தோர் ஒலி.

முதலில் ஒரு பெரிய இயந்திரப் படகு. அதற்குப் பின்னால் அதைப் போலவே இன்னும் நாலைந்து இயந்திரப் படகுகள் மெல்லப் பாடசாலைக்கு அருகில் வந்து நிறுத்தப்பட்டபோது தான் அகதிகளுக்கு என்னவென்று தெரிந்தது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வந்திருக்கிறது. எல்லோரும் சுறுசுறுப்படைந்து படகுகளை நோக்கிப் போக ஆரம்பித்தார்கள். படகில் வந்தவனொருவன் – யாரோ ஒரு அதிகாரி – ஒழுங்கு நிலைபெறவேண்டும் என்று கத்தினான். ஒருவகை அமதி நிலை பெற இவர்களும் உணவு பெற முயன்றார்கள். இவனும் தன் மனைவி, குழந்தைகளையும் நிறுத்தி ஒரு வரிசையில் நின்றான். பலரும் உரத்த குரலில் வார்த்தைகளைப் பரிமாறி இடித்துக்கொண்டும் உரசிக்கொண்டும் நின்றார்கள்.

உணவைப் பெற முயன்றவர்களின் பரபரப்பும் குழப்பமும் அடங்க வெகு நேரம் சென்றது. அப்போதே எல்லோரும் அந்த வெள்ளைக்காரனைப் பார்த்தார்கள்.

மழை குறைந்து தூறலுடன் கூடிய மப்பான சூழல். உணவு கொண்டுவந்திருந்தவர்கள் படகில் திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யக் கூட்டத்திலிருந்தவர்களில் சிலரும் போனார்கள்.

இவனும் போனான். பாத்திரங்களைப் படகில் ஏற்றினார் கள். திரும்பவும் உணவு எப்போ வருமென்று கேட்டார்கள். அதிகாரி வெள்ளைக்காரனுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனிடம் இந்தக் கேள்வி எட்டியபோது, அவன் வெள்ளைக்காரனுடன் திரும்பவும் ஏதோ பேசினான். ‘அன்று பின்னேரம்’ என்ற அவன் மறுமொழி கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டத்தில் பரவிக்கொள்ள ஆரம்பித்தது. இவன் ஒரு படகோட்டியுடன் பேசினான். படகுமோர் புதிதாம். படகுக்கு எரிநெய் தேவையில்லையாம். வேகமாகவும் செல்லுமாம்.

குழந்தைகள் புத்துணர்வு பெற்று ஓடியாட ஆரம்பித்திருந்தார்கள். படகுகளில் வந்தவர்கள் திரும்பவும் அவற்றில் ஏறிப் போக ஆரம்பித்தார்கள். மண்நிற வெள்ளத்தில் அலைகள் வரைந்து கொண்டு மெல்லிய ஒலியுடன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒருவகைக் கவலை வர ஆரம்பித்திருந்தது. படகுகள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். இவன் தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் படகுகளுக்கு எரிநெய் தேவையில்லை என்று சொன்னான். மற்றவன் நம்பவில்லை. விவாதம் ஆரம்பித்தது. குழந்தைகள் புத்துணர்வு பெற்று ஓடியாட ஆரம்பித்திருந்தார்கள்.

பெண்கள் தங்களுக்குள் சிறுசிறு கூட்டமாகப் பிரிந்து பேசிக் கொண்டார்கள். முகில்கள் சற்றே வெளிற ஆரம்பித்தன.

ஒருவகைப் பகல். இனி மழை ஓய்ந்துவிடும் என்கிற உணர்வு இவனுக்குள் எழுந்தது. கொஞ்சம் பொறுக்கத்தான் வேண்டுமென்று முணு முணுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரனையும் சேர்த்துக் கொண்டு பீடியும் நெருப்பும் தேடிப் போக ஆயத்தமானான்.

வெளியே இன்னும் மழை வெள்ளம். ஆனால், வற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. வானத்தில் தெரிந்த ஓரிரு வெள்ளிக் கோடுகளை எல்லோரும் பார்த்தார்கள். இனி, வெள்ளம் வற்றி விடும்.

– நாழிகை, மார்ச் 1994

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *