இரண்டாம் பதிப்பு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 2,321 
 

சாம்பு என்ற சாம்பசிவம் பூஜையறையில் தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றப் போகும்போதுதான் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது…

சாமி அறையென்றால் முருகன்.பிள்ளையார். வெங்கடாசலபதி. மீனாட்சி அம்மன்.போன்ற சாமிப்படங்களை மாட்டியிருப்பார் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்..

ஒரு சிறிய பலகையில் ராமகிருஷ்ண பரமஹம்சர். பக்கத்தில் சாரதா தேவியார்.. ஒரு சின்ன அகல் விளக்கு.வேறு எதுவும் கிடையாது.
முன்னால். தியானம் செய்ய ஒரு விரிப்பு.

அங்கு நுழையும்போதே ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன்..

சாம்புவிடம் சில பிடிவாத குணங்கள் உண்டு..

பிரின்ஸிபல்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..

ஒரு காரியத்தை எடுத்தால், தலையே போனாலும் முடித்துவிட்டுத்தான் மறுவேலை.

இப்போதும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். பெல் அடித்தாலும் விளக்கேற்றி.. அவர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லிவிட்டுத்தான் வாசலுக்குப் போகப் போகிறார்…

மறுபடியும் காலிங் பெல்.

சாம்பு கதையைப் பேசிக்கொண்டிருந்தோமென்றால் வாசலில் பெல்லடித்துக் கொண்டு .நின்று கொண்டிருக்கும் போஸ்ட்மேன் திரும்பிப் போய்விட்டால்..இந்த கதைக்கே அவசியம் இல்லாமல் போய்விடும்.

வாருங்கள்.. நாமும் சாம்புவுடன் வாசலுக்குப் போகலாம்.

“என்ன மணி. சவுக்கியமா ..???”

“இருக்கேன் ஸார்…!”

“ஸார் பேருக்கு தபால்..!”

“எனக்குக் கூட தபால் வருதா..??? அட்ரஸ் சரிதானே..???”

சாம்புவுக்கு மாதம் ஒரு முறை வரும் பாங்க் ஸ்ட்டேட்மென்டைத்தவிர. இன்ஷுயுரன்ஸ்.டெலிபோன் பில். இதுமாதிரி விவரங்கள் தவிர கடிதம் வந்து மணியும் பார்த்ததில்லை..

“நானே சந்தேகப்பட்டு இரண்டு.மூணு.. தடவை செக் பண்ணிட்டேன். எவ்வளவு க்ளீனா எழுதி இருக்கு பாருங்க…!”

மணிக்கு சாம்புவின் ஜாதகம் அத்துப்படி. எத்தனை வருடப் பழக்கம். கடந்த பத்து வருடங்களாய் மணிதான் இந்த ஏரியா போஸ்ட்மேன்..

“ஃப்ரம் அட்ரஸ் இருக்கா பாரு…!”

“பாத்துட்டேன் சார்.. ஒண்ணும் போடல.ஆனா கையெழுத்தப் பாருங்க .மணிமணியா. பொம்பளைங்க கையெழுத்தாட்டம்.”

மணி தான் ஓவராய்ப் பேசிவிட்டோமோ என்று நினைத்து நாக்கைத் கடித்துக் கொண்டான்.

சாம்பு தபாலை இரண்டு..மூன்று தடவை திருப்பி திருப்பி பார்த்தார்..

“ஸார்..கேக்குறேனேன்னு தப்பா நினைக்கக் கூடாது.. கஸ்தூரி அம்மாவா இருக்குமோ..???”

சாம்புவால் பேச முடியவில்லை..தொண்டை அடைத்தது.. கண்ணில் கண்ணீர் கட்டிக்கொண்டு நின்றது.

மணியின் முதுகைத் தட்டிக் குடுத்து விட்டு சடாரென்று உள்ளே சென்று விட்டார்..

கஸ்தூரி…!!!

நினைவுகள் எங்கெங்கோ இழுத்துக் சென்று விட்டது..தொண்டை வறண்டு போனது.. ஒரு வாய் காப்பி உள்ளே போனால் நன்றாயிருக்கும் போல் தோன்றியது..

அவருக்கு கலந்து குடுக்க யார் இருக்கிறார்கள்.???

கொஞ்சம் டிக்காஷனும். பாலும். இருந்தது. சர்க்கரை போட்டுக் கொள்வதில்லை..

கலந்து எடுத்துக் கொண்டு வாசலில் இருந்த சேரில் உட்கார்ந்தார்…

வந்த கடிதத்தைப் பற்றிக் கவலையே படவில்லை.அது அவருடைய கஸ்தூரியின் கையெழுத்தில்லை என்று நன்றாகத் தெரியும்.அதே சமயம் அது நிச்சயம் ஒரு பெண்ணின் கையெழுத்துதான் என்பதும் உறுதி.

ஒரு கண்ணியமுள்ள பத்திரிகை ஆசிரியராக முப்பது வருடம் இருந்தவருக்கு ஆணின் கையெழுத்துக்கும்.. பெண்ணின் கையெழுத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்குமா..???

“ஸார். உங்களைப் பாக்க ஒரு அம்மா வெளில காத்திருக்காங்க..”

“வரச் சொல்லு பூபதி.. எதுக்கு காக்க வைக்கிற..???”

‘சிவம்..தலைமை பத்திரிகை ஆசிரியர்… அலைகள்…’ என்றது பெயர் பலகை.

சிவம்.

முப்பதில் இருந்தான்.. சுருள் சுருளான . அடர்த்தியான கேசம். பெண்களுக்கு இருக்க வேண்டிய அழகிய.. பெரிய கண்கள்.இளநீல நிற சட்டையும்..ஜீன்ஸும் அணிந்த நவநாகரீக பத்திரிகை ஆசிரியர்..

புயல் போல் உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்ததும் தன்னையறியாமல் எழுந்து நின்றுவிட்டான்…

சில பெண்களைப் பார்த்தவுடன் ஒரு பயம் கலந்த மரியாதை வரும்.. இவள் அந்த ரகத்தைச் சேர்ந்தவள்.

“என் பேர் கஸ்தூரி.. ஸாரி.அப்பாயின்ட்மென்ட் வாங்காம வந்துட்டேன்..”

சாம்பசிவம் பலமாகச் சிரித்தான்.

இப்போது நான் அவனை ஒருமையில்தான் அழைக்கப் போகிறேன்.. அதுதான் அவனுடைய வயதுக்குப் பொருத்தமாய் இருக்கும்…

“அப்பாயின்ட்மென்ட் வாங்கற அளவுக்கு என் பத்திரிகை இன்னும் வளறல..”

உட்காருங்க கஸ்தூரி..!

கஸ்தூரி நல்ல உயரமாயிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள். தலைமுடியை அலட்சியமாய் வாரி உச்சியில் கொண்டை போல் போட்டிருந்தாள்..

எளிமையான . ஆனால் நல்ல மடிப்பு கலையாத.கஞ்சி போட்ட காட்டன் புடவை கட்டியிருந்தாள்…கொஞ்சம் படபடப்பாகத் தெரிந்தாள்.

இவையனைத்தையும் சாம்பசிவத்தின் கண்கள் உடனே மூளைக்குத் தகவலாய் அனுப்பி விட்டது..

“வணக்கம் சிவன் சார்…”

நாமும் இனி அவனை சிவன் என்றே குறிப்பிடலாம்..

“நான் ஒரு மாதம் முன்னால் உங்கள் பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பி இருந்தேன். பிரசுரம் ஆகாத கதைகளைத் திருப்பி அனுப்ப மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்..

ஆனால் நிராகரிக்கும் அளவுக்கு என் கதை அவ்வளவு மோசமில்லை என்பது என்னுடைய திண்ணமான அபிப்பிராயம்..என்னிடமுள்ள நகலையும் கொண்டு வந்திருக்கிறேன்.!!!

சிவம் அவள் நீட்டிய கதைக் கோப்பை உடனே வாங்கிக் கொண்டான்…

“பார்வை..”

தலைப்பு சொன்னது..!! பார்த்ததுமே புரிந்துவிட்டது.. அற்புதமான படைப்பு…! இன்னும் அவன் மனதை விட்டு அகலாது, இரவில் தூங்க விடாமல் செய்த படைப்பை அத்தனை எளிதில் மறக்க முடியுமா.??

“ரொம்பவே நல்லா எழுதி இருக்கீங்க.. பாராட்டுக்கள்..!!”

“ஆனா..???”

“எனக்கே சவாலான ஒரு சந்தர்ப்பத்த குடுத்திட்டீங்க . மிஸ்.. கஸ்தூரி.!!”

“புரியல…”

“இந்த அற்புதப் படைப்பை கதையோட சேக்கிறதா.இல்லை கட்டுரையிலா.???

இந்த பிரச்சினை எல்லாம் பத்திரிகை ஆசிரியருக்குத்தானே…!

நானே உங்களைக் கூப்பிட்டு கேட்கலாம்னுதான் .. பாருங்க.. என்னோடே டிராயர்ல….ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது படிச்சுடுவேன்..”

“இதவிட வேற பாராட்டு என்ன இருக்கு.???”

கஸ்தூரி உணர்ச்சி வசப்பட்டாள்…!!

கஸ்தூரி…!!

கிழக்கும்.மேற்கும்.அற்புதமாய் சங்கமிக்கும் வண்ணக் கலவை. இருவருக்கும் பேச வேண்டிய விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்க வேண்டும்….!!

கடைசி வாய் காப்பியின் கசப்பு வாயிலிருந்து போனவுடன்தான் கடிதத்தின் நினைப்பே எழுந்தது..

அவர் உள் மனதில் ஏதோ ஒரு வித பயம். குழப்பம். இந்த கடிதம் எப்படியும் தன் நிம்மதியைக் குலைக்கப் போகிறதென்பதை அவர் உள்ளுணர்வு உணர்த்தியது…

கடிதத்தை கையில் எடுத்தார். கையும்.. மனமும் கனத்தது.

மீண்டும் கடிதத்தை மேசையில் வைத்துவிட்டு பேனா கத்தியை எடுத்துக் கொண்டு வந்தார்..

பதட்டப்படாமல் உறையை பதமாய் கிழித்தார்..

மூன்று பக்கங்களில்… மணிமணியான கையெழுத்தில் … எளிய நடையில் .. இருந்தது கடிதம்…

‘நான் அன்றாடம் பூசிக்கும் என் மரியாதைக்குரிய சிவம் அவர்களுக்கு…முன்னும் பின்னும் பார்த்திராத …அறிமுகமேயில்லாத. தங்கம் எழுதும் கடிதம்..!! ‘

சாம்பசிவத்துக்கு எரிச்சல் வந்தது.

பொதுவாகவே அவருக்கு தனிமனித புகழ்ச்சி பிடிப்பதில்லை.. அவர் ‘ அலைகள் ‘ பத்திரிகை நடத்தும் போதும் அவரைக் காதலிப்பதாக வரும் கடிதங்களை அப்படியே கிழித்து குப்பைத் தொட்டியில் எறிந்து விடுவார்.

தனது எழுத்தைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் .அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி.இழ்ச்சியாக இருந்தாலும் சரி. முழுவதையும் நிதானமாகப்படித்துவிட்டு .. அவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்.

ஆனால் ஒருபோதும் கோபமோ.எரிச்சலோ வந்ததில்லை.சில சமயங்களில் கொஞ்சம் கர்வமாகக் கூட இருக்கும்.. வயதின் கோளாறு.!

ஆனால் இப்போது கொஞ்சம் கோபம் வந்தது..அடுத்த வரியைப் படிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் கடிதம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும்..!!!

‘உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறேன் என்று எண்ணி தயவுசெய்து கடிதத்தை படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.

ஒரு வருடமாய் மிகவும் யோசித்து எந்த விதத்திலும் உங்கள் மனத்தை புண் படுத்தக்கூடாது என்ற முடிவுடன்.. என் மனதில் இத்தனை வருடங்கள் அடக்கி வைத்திருந்த அனைத்தையும் இந்த கடிதத்தில் கொட்டியிருக்கிறேன்..

ஒருவாரமோ.மாதமோ.வருடமோ.எடுத்துக் கொண்டாலும், நீங்கள் இந்தக் கடிதத்தை படித்து முடிப்பீர்கள் என்ற என் நம்பிக்கையை ஏமாற்றிவிடாதீர்கள்..’

சாம்பசிவம் கடிதத்தை மறுபடியும் மேசை மேல் வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த சிறிய குடத்திலிருந்து ஒரு டம்ளர்
எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.

சிவம் ஒரு கண்டிப்பான பத்திரிகை ஆசிரியர்..வீட்டு விலாசத்துக்கு எந்த வாசகர் கடிதம் வருவதையும் அனுமதிக்க மாட்டார். அப்படி வந்தால் அதை படிக்காமலே கிழித்து போட்டு விடுவார்..

இப்போது சாம்பசிவத்துக்கு அறுபதுவயதாகிறது. பத்திரிகையை மூடி பத்து வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.

கஸ்தூரி என்றைக்கு அவரை விட்டு பிரிந்து போனாளோ , அன்றிலிருந்து அவர் ஒரு பற்றற்ற துறவி போலத்தான் வாழ்ந்து வந்தார்.

வால்மீகி நகரிலிருந்து நாலு கிரவுண்டையும் ராமகிருஷ்ண மடத்துக்கு எழுதி வைத்து விட்டார்…

ஒரே மகள் பாரதி வெளிநாட்டில் ஆராய்ச்சிக்காக சென்றவள் தன்னைவிட இருபது வயது மூத்த அமெரிக்க பேராசிரியரைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டு குடியுரிமை பெற்று, அங்கேயே தங்கி விட்டாள்..

மாதம் ஒரு முறை கண்டிப்பாய் அப்பாவுடன் போனில் பேசி விடுவாள்..சாம்புவும் அதற்கு மேல் எதையும் எதிர்பார்ப்பதில்லை..

கொஞ்சம் மனம் ஆசுவாசமானதும் மீண்டும் மேலே படிக்க ஆரம்பித்தார்..

‘நான் கேரளாவில் உள்ள மலப்புரம் கிராமத்திலிருக்கும் பொன்னணி என்ற ஊரைச் சேர்ந்தவள்.

மெத்தப் படித்த உங்களுக்கு என் கிராமத்தைப் பற்றி விவரிப்பது அவசியமில்லைதான்..

பூந்தானம்.நாராயண பட்டாத்திரி.ராமனுஜ எழுத்தச்சன் என்ற பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் அவதரித்த புண்ணிய பூமியில் பிறந்ததை எண்ணி ஒவ்வோரு நாளும் பெருமைப் படுகிறேன்..

நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள்.. என் பெற்றோர்கள் தீவிர கம்யூனிஸ்டுகளாய் இருந்தவர்கள்.

செய்யாத குற்றத்துக்காக தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு.. சிறையில் சித்திரவதை அனுபவித்து..இறந்து விட்டார்கள்.

பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்த. எங்கள் சமூகத்தின் முதல் பெண் நான்தான்..’

சாம்பசிவம் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார்.கடிதத்தை முழுவதும் படித்து முடிக்கும் ஆர்வம் இப்போது எழுந்தது..

பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்பதே இப்போதுதான் உறைத்தது…

கடிதத்தை மூடி வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார்..

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி.பிரிட்ஜிலிருந்த மாவை எடுத்தார்..

தோசை மாதிரி சமய சஞ்சீவி வேறு என்ன இருக்க முடியும் ???

எண்ணி மூன்று தோசை. தொட்டுக் கொள்ள எப்போதும் மிளகாய்ப்பொடி தான்..

முதல் வாயை விண்டு போட்டுக் கொண்ட போது ஏனோ மீண்டும் கஸ்தூரி நியாபகம்..!!

சிவம் ஒரு படைப்பாளி.கதை எழுதுபவர்களுக்கு முக்கியமாய் இரண்டு தகுதிகள் இருக்கும்.ஒன்று நிறையப் படிப்பது. மற்றொன்று நிறைய கேட்பது.

மனிதர்களுக்குள் எத்தனையோ முரண்பாடுகளைப்பார்த்தவனுக்கு முரண்பாடே ஒரு பெண்ணாய் உருவெடுத்தது போல தோன்றியது கஸ்தூரியுடன் வாழும்போது…

ஒரு நாள் இருந்தது போல மற்றொருநாள் இருக்க மாட்டாள். ஏன் நிமிடத்துக்கு நிமிடம் கூட மாறும் மனநிலை.

ஆனால் அவள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. அவள் கருத்துக்கு முரணான கருத்தைத் கேட்டால் உடனே சட்டென அவள் முகம் மாறும்..

சிவனுக்கு சிலசமயம் அவளது முக மாற்றம் பயமாய் கூட இருக்கும்..

சில சமயம் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென அறையை விட்டு வெளியேறி விடுவாள்.

ஆனால் சிவனுக்கு அவள் மேல் இருக்கும் ஈர்ப்பு அவளின் இந்த நடத்தையால் குறையவே இல்லை..

“சிவா.. நான் ஒண்ணு சொன்னால் சிரிக்க மாட்டியே…!”

“கஸ்தூரி.. ஏதாவது ஜோக்ஸ் சொல்லப்போறியா.???அப்போ நான் சிரிக்காம எப்படி..????!”

“சிவா..நீ முதல்ல ஜோக் அடிக்காத..!

எனக்கு உன்னை மாதிரியே ஒரு பெண் குழந்தை வேணும்..!!”

சிவாவால் உண்மையிலேயே சிரிப்பை அடக்க முடிவில்லை.

ஆனால் அவள் கேட்டது ஒரு வருடத்தில் அப்படியே கிடைத்தது…கிடைத்தாக வேண்டுமே…!!!

விரும்பி கேட்டது கையில் கிடைத்ததும் அவள் ஆசை பூர்த்தியாகிவிட்டதுபோல் குழந்தையைத் திரும்பி கூட பார்க்கவில்லை.

பால் தரவும் மறுத்துவிட்டாள். பழையபடிபடிப்பு. புத்தகங்கள்.

தாயின் அன்புக்கு ஏங்கிய பாரதிக்கு அவனே தாயுமானான்..

மணி பன்னிரண்டு.. இந்நேரம் சாப்பிட்டு முடித்து ஒரு குட்டி தூக்கம் போட்டிருப்பார்.. தினமும் பதினோரு மணிக்கு சாப்பிட்டு விடுவார்.

இன்றைக்கு எல்லாமே தலைகீழ்..பசியே இல்லை.. ஒரு டம்ளர் மோர் மட்டும் குடித்து விட்டு படுக்கப் போனவர், திடீரென்று நியாபகம் வந்தவராய் மேசையில் வைத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு, வாசல் கதவை சாத்திவிட்டு படுக்கப் போனார்..

நன்றாக சாய்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தார்…

‘நான் கல்லூரியில் சேரக்காரணமே நீங்கள்தான்.

பத்தாவது படித்து முடித்ததும் பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த பள்ளியில் மேலே தொடர வேண்டிய கட்டாயம்.

ஒரு நாள் பஸ்ஸில் திரும்பி வரும்போது பக்கத்து ஸீட்டில் என் வயதில் ஒரு பெண் ஒரு பத்திரிகையைச் சுருட்டி வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டே வந்தாள்..

நான் அவள் கையிலிருந்த பத்திரிகையை வாங்கிக் கொண்டேன்..

…. அலைகள்…..

ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.சதா அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் என் மனதில் ஒரு அமைதி.. நான் அந்த நிமிடத்தில் உங்கள் எழுத்துக்கு அடிமையானேன்.

எங்கள் ஊரில் அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை.. மறுபடியும் அந்த பெண்ணை சந்தித்தபோது அவள் சந்தா கட்டி வாங்குவதாய் கூறினாள்..’

சாம்புவை பளீரென ஒரு மின்னல் தாக்கியது.

“ஸார். மலப்புரம் கிராமமாம்..பொன்னணிங்கிற இடத்திலேர்ந்து ஒரு பொண்ணுக்கு நம்ப பத்திரிக்கய அனுப்ப முடியுமான்னு கேட்டு…”

“பூபதி. நான் எத்தன முற சொல்லியிருக்கேன்..உலகத்தில எந்த மூலைலை இருந்து கேட்டாலும் நாம அனுப்ப கடமப் பட்டிருக்கோம். நமக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்ல.உடனே அனுப்பற வேலையைப் பாரு..!”

சாம்புவுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடிதத்தை மடித்து அருகில் வைத்துவிட்டு கண்ணை மூடினார்…

மீண்டும் கஸ்தூரி…

ஏன் தங்கத்தின் கடிதத்தைப் படிக்கும்போது கஸ்தூரியின் நினைவு வரவேண்டும்..?

பாரதியின் வரவு சிவா வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கியது.. கஸ்தூரி அவள் அறையை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்தாள்.

நல்ல மூடில் இருக்கும்போது குழந்தையைத் தூக்கி மூச்சு முட்ட கொஞ்சுவாள்.ஆனால் சிவாவைக் கண்டாலே ஒரு ஆவேசம். எப்போதும் விதண்டாவாதம்..!!

சாம்பு தன்னையறியாமல் தூங்கி முழித்தபோது மணி நாலு. வழக்கம்போல ஒரு காப்பி கலந்து குடித்து விட்டு வாசலில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் விடப் போனார்.

கொஞ்சம் செம்பருத்தி. நந்தியாவட்டை..ரோஜா.மல்லி..மனதுக்கு கொஞ்சம் இதமாயிருந்தது.

மறுபடியும் பசி வயிற்றைக் கிள்ளியது..சமைக்கும் மனநிலையில் இல்லை!

சமையலறையில் நுழைந்து பத்து நிமிடத்தில் ஒரு ரவா உப்புமாவைக் கிளறி வைத்துவிட்டு குளிக்கப் போனார்..

விளக்கேற்றி வைத்து விட்டு மீண்டும் கடிதத்தை எடுத்தார்.

“‘அலைகள்‘ எனக்குள் பெரிய மனமாற்றத்தை கொண்டு வந்தது. தன்னம்பிக்கையை வளர்த்தது…

கல்லூரியில் சேர்ந்து படிக்க தயாராயிருந்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.

சிறைக்கு போவதற்கு முன் என் பெற்றோர்கள் அவசர அவசரமாய் திருமணம் நிச்சயித்து விட்டார்கள்..

கட்சியைச் சேர்ந்த நேசமணி ஒரு குடிகாரன்.பலகொலை..கொள்ளை வழக்குகளுக்கு பயந்து கட்சி வேஷம் கட்டி ஊரை ஏமாத்துபவன்..

அவனுடன் வாழ்ந்தது ஒரே மாதம்..அதற்கு சாட்சி முகுந்தன்.. மூளை வளர்ச்சியில்லாத என் கண்மணி. அதோடு நேசமணி என் வாழ்விலிருந்து மறைந்து போனான்..

நான் பட்டப்படிப்பு முடித்து. ஆசிரியர் பயிற்சி பெற்று ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிஏற்றேன்.

இப்போதுதான் என் கதையில் நீங்கள் அறிமுகமாகிறீர்கள்..இப்போது நான் யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்…!’

அறிமுகமில்லையென்று ஆரம்பித்தாள்.இப்போது..?

சாம்புவுக்கு குப்பென்று வியர்த்தது.. இரத்த அழுத்தம் அதிகமானதுபோல் தோன்றியது..

பிரிட்ஜிலிருந்து BP மாத்திரை ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டார்.

அலமாரியைக் குடைந்து பழைய பத்திரிகைகளை எடுத்து வெளியே போட்டார்.அரைமணி தேடலுக்குப் பின் அவர் வேண்டியது கிடைத்தது.

ஒரு இதழை எடுத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து அவசர அவசரமாக புரட்ட ஆரம்பித்தார்..சடாரென்று ஒரு பக்கத்தில் கண் நிலக்குத்தியது..

…..மணமாற்றம்……

சிவா எழுதிய ஒரே நாவல்.. இருபதாவது அத்தியாயம்…

சாம்பு வாழ்நாளில் மறக்கவே முடியாத நாள்..

அலைகள் இதழைத் தூக்கி சிவாமுன் விட்டேறிந்தாள் கஸ்தூரி.

“என்னாச்சு கஸ்தூரி..????”

“கடைசில நீங்களும் ஒரு ஆணாதிக்கவாதின்னு நிரூபிச்சிட்டீங்களே..! நீங்க ஒரு MCP!!”

“கஸ்தூரி.. ஸ்டாப் இட்…! என்ன நடந்தததுன்னு புரியும்படியா சொல்லு ..!”

“எல்லாம் உங்க ‘மணமாற்றம்’ நாவலப்பத்திதான்.!!”

சிவன் அலைகள் இதழில் பல கட்டுரைகள்.சிறுகதைகள்.எழுதுவானே தவிர அவன் எழுதிய முதலும் .கடைசியுமான நாவல் ‘ மணமாற்றம்’ மட்டுமே.

“அரவிந்தன் எதுக்காக பூவிழியத் திருமணம் செய்துக்கணும். .?? ஒரு ஆண் துணையில்லாம இந்த உலகத்தில வாழ்வே முடியாதா..?? ஏன் அவளால் சொந்தக்கால்ல நிக்க முடியாதா.?? நான் வாழ்ந்து காட்டறேன்..!

எனக்கு உங்களைப் பாக்கவே பிடிக்கல. நான் இனி இந்த வீட்ல இருக்க மாட்டேன்.உங்க பாரதிய உங்க விருப்பம் போல வளத்துக்குங்க..!!

கஸ்தூரி நினைத்துவிட்டால் யாரால் தடுக்க முடியும்.??

அன்றைக்கு கஸ்தூரியைப் பார்த்ததுதான்..

ஆங்… மறுபடியும் ஒரு முறை…ஐந்து வருடம் கழித்து இந்து ஆபிச்சுவரியில்…

ஒரு சொட்டு கண்ணீர் போட்டோவை நனைத்ததோடு சரி. கஸ்தூரி அவள் மனதிலிருந்து விலகிவிட்டாள்..பாரதிக்கும் அவருக்குமான உலகம் தெளிந்த நீரோடைபோல.. சுகமான நினைவுகள்..!

திடீரென்று பத்து வயது கூடியது போல உணர்ந்தார்.எல்லாமே ஒரே புள்ளியில் வந்து சங்கமிப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை..

அவருடைய நாவல் மறுபடியும் உயிர் பெற்று கடிதமாக..இது நடக்கக் கூடியதா????

எல்லா புத்தகங்களையும் வாரி மீண்டும் அலமாரியில் வைத்தார். மயக்கம் வரும்போல இருந்தது..

சாப்பிட நேரமானால் சர்க்கரை அளவு குறைந்துவிடும்..

வேண்டா வெறுப்பாக ஒரு தட்டில் உப்புமாவைப் போட்டு கொஞ்சம் ஊறுகாயை வைத்து மடமடவென விழுங்கினார்..

சாதாரணமாய் எல்லா பாத்திரங்களையும் தேய்த்து கழுவி.கிச்சனை பளபளவென்று வைத்துவிட்டுத்தான் படுக்கப் போவார்.

எல்லாவற்றையும் ஸிங்கில் போட்டு தண்ணீர் ஊற்றி விட்டு. வாசல் கதவை பூட்டி எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு , கடிதத்தை எடுத்துக் கொண்டு படுக்கையறையில் நுழைந்தார்..

படுத்துக் கொண்டு சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார்..

ஆம். சந்தேகமேயில்லை. அவருடைய பூவிழிதான் தங்கம்.. தனது குழந்தையை அடையாளம் தெரியாத தாயும் உண்டா..???

இப்படிக் கூட சம்பவிக்குமா..?? ஊர்.. பேர்.சில நிகழ்வுகள் தவிர அப்படியே மணமாற்றம்தான் தங்கத்தின் கடித வடிவில் மறுபிறவி எடுத்திருக்கிறது..

அரவிந்தன்..???

கடிதத்தை மேலே படித்தார்..

‘இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும்.. நான் உங்கள் கதாநாயகி பூவிழி என்று.. ஆனால் உங்கள் கதையில் வந்த அரவிந்தன் இதுவரை என் வாழ்வில் வரவில்லை..

பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொள்ளும் உருவம் படைத்த, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, மூளைவளர்ச்சியில்லாத குழந்தைக்குக் தாயான எனக்கு எந்த அரவிந்தனும் வரமாட்டான்.

கதை வேறு.. வாழ்க்கை வேறு..உங்களை விமரிசப்பதாக தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்…

என் காலிலேயே நிற்கத் துணிந்து விட்டேன். இந்த தன்னம்பிக்கையை தந்தததும் நீங்கள்தான்.

ஆனாலும் நீங்கள் அனுமதித்தால் ஒரு முறை உங்களை சந்திக்க ஆவலாயிருக்கிறேன்..

அன்புள்ள .
தங்கம்’

பளாரென்று கன்னத்தில் யாரோ அறைவது போலிருந்தது…

கஸ்தூரி..

நீ பூவிழியைப் புரிந்துகொண்ட அளவு நான் எப்படி புரிந்து கொள்ளாமல் போனேன்.. உன்னையும் தான்.!

கஸ்தூரி ..என்னை மன்னித்து விடு.!

சாம்பசிவம் இதுவரை அடக்கி வைத்திருந்த துக்கத்தையெல்லாம் கொட்டி அழுதார்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *