(இதற்கு முந்தைய ‘மூத்தவளின் நகைகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
மகளுடனான இந்த நீண்ட உரையாடலை சபரிநாதன் படபடப்பாகவோ கத்தியோ பேசவில்லை.
சாமவேதம் சொல்கிற மாதிரி இழுத்து இழுத்து மெதுவாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இருந்தாலும் பேசிவிட்டு நாற்காலியில் இருந்து எழுந்தபோது தலை சுற்றியதால் சட்டென்று சுவரைப் பிடித்துக்கொண்டார். கொஞ்சநேரம் பயத்துடன் அப்படியே நின்று கொண்டிருந்தார். லேசாக உடம்பு வியர்த்தது.
சபரிநாதன் அவசர அவசரமாக அவரது இஷ்ட தெய்வமான பெருமாளுடன் பேச ஆரம்பித்தார். “கல்யாண தேதியெல்லாம் நிச்சயமாகி விட்டபின் என் உடம்புக்கு எதுவும் வந்து விடக்கூடாது பெருமாளே. நோய் நொடியில்லாமல் ராஜலக்ஷ்மியுடன் வாழ்க்கையை நான் அனுபவிக்க வேண்டும். மறந்து விடாதே!” ஆனால் அவரது வேண்டுதலை பெருமாள் காதில் போட்டுக் கொள்ளவில்லை…
மறுநாள் காலையில் சபரிநாதன் டாக்டரிடம் ஓடினார். அவருடைய ரத்தக் கொதிப்பு இருநூறைத் தொட்டிருந்தது. மிரண்டு போனார். டாக்டர் நிறைய மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். உப்பு இல்லாமல் சாப்பிடச் சொன்னார். மிகவும் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். ஒருநாள் விட்டு ஒருநாள் கண்டிப்பாக வரச்சொன்னார்.
கல்யாண தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரம் பார்த்தா இப்படி ஒரு ரத்தக்கொதிப்பு வரவேண்டும்! வாழ்ந்தால் ராஜலக்ஷ்மியுடன் நல்லபடியாக வாழ வேண்டும். ஒரு நோயாளியாக அவளுடன் வாழ்வதற்கு வாழாமலேயே இருந்துவிட்டுப் போகலாம். ஏற்கனவே அவளைவிட முப்பது வயசுகள் ஜாஸ்தியானவர். இப்படி நோயாளியாக வேறு ஆகிவிட்டால் ராஜலக்ஷ்மி அவரை மதிப்பாளா! மதிக்காவிட்டால் எல்லாம் போச்சே! குடி முழுகிப் போய்விடுமே சபரிநாதனுக்கு!
சபரிநாதன் மிகக் கவனமாக இருந்ததால் அவரின் ரத்தக் கொதிப்பு பத்து நாட்களில் நூற்றி நாற்பதுக்கு வந்துவிட்டது. அப்பாடா… கண்ணீர் மல்க பெருமாளைச் சேவித்துவிட்டு கல்யாண வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார். இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் வீட்டில் அவரின் சமையல்! அதன்பிறகு ராஜலக்ஷ்மியின் விதவிதமான சமையல் வாசனை முத்தையாவின் வீடு வரைக்கும் சுழன்று சுழன்று அடிக்கப்போகிறது! அந்த வாசனையை நினைத்து நாக்கைச் சப்புக் கொட்டினார்.
ஒரு வழியாக சபரிநாதனின் கல்யாண நாளும் வந்தது; அன்றே தேர்தல் நாளும் வந்தது. அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்கு லாரிகளில் தொண்டர்களை அழைத்துப் போவதைப் போலத்தான் சுற்றுவட்டார ஜனங்கள் எல்லோரையும் பேருந்துகளில் கல்லிடைக்குறிச்சிக்கு அழைத்துப்போக முதலில் திட்டமிட்டிருந்தார்.
பிறகுதான் முழித்துக்கொண்டு விட்டார். கூட்டத்தினரின் மொத்தப் பார்வையும் ராஜலக்ஷ்மியின் அழகின் மேல் இருக்கும். ஒரு கண் போல இன்னொரு கண் இருக்காது. திருஷ்டி பட்டாலும் பட்டுவிடும்… எதற்கு வீண் வம்பு? மிகவும் நெருங்கிய உறவினர்கள் ஏழெட்டுப் பேர்; மூன்று நான்கு சேக்காளிகள்; மகள்கள், மருமகன்கள், பேரன் பேத்திகள் இந்தனை பேர்தான் கல்யாணத்திற்கு.
போனால் போகட்டும் என்று மரகதத்தின் அம்மா பெயருக்கு, யாரும் வரப்போவதில்லை என்று தெரிந்தும், ஒரே ஒரு அழைப்பிதழை அனுப்பி வைத்தார். எதிர்பார்த்த மாதிரி யாரும் வரவில்லை. தேர்தலில் ஓட்டுப்போட அவர்கள் எல்லாரும் கர்ம சிரத்தையாகப் போய் விட்டார்களாம்!
எவ்வளவோ உணர்வு பேதங்களும் விரிசல்களும் இருந்தாலும், சபரிநாதன் மகள்கள் இருவரும் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே திம்மராஜபுரம் வந்து சேர்ந்துவிட்டார்கள். வரவே முடியாது என்று ஆரம்பத்தில் ஆட்டம் காட்டிய சுப்பையா முதல் ஆளாகக் கிளம்பி வந்துவிட்டான். ஒருவேளை அவன் வராமல் இருந்து அது ரொம்பவும் பெரிய விஷயமாகி விட்டால் அவனுக்குத்தான் ஆபத்து. ஏனெனில் சபரிநாதன் ஒரு மாதிரியான ஆசாமி. சுகுணாவுக்கு கொடுக்க இருக்கின்ற சின்னப் பங்கையும் கொடுக்காமல் இருந்து விட்டால், ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ என்ற கதையாகி விடும். தவிர, அவனுக்கு இளம் வயது ராஜலக்ஷ்மியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வேறு!
சபரிநாதன் மகள்கள் திம்மராஜபுரம் வந்து சேர்ந்து விட்டார்களே தவிர, அவர்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டில் இயல்பாக இருக்க முடியவில்லை அவர்களால்… இயல்பாக இருப்பதுபோல் நடித்தார்கள். சபரிநாதனும் அவர்களிடம் இயல்பாக இருப்பதுபோல நடித்தார். ஆனால் அவர்கள் யாருக்குமே சரியாக நடிக்கத் தெரியவில்லை!
பெரியவர்களின் இந்த நடிப்பின் மத்தியில் புவனாவின் மகன், சபரிநாதன் தாத்தாவிடம் ஒன்றை ஞாபகமாகக் கேட்டான். அன்று ஒருநாள் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்ததும் முதலில் புவனாவிடம்தான் பேசினார். அப்போது பேரனிடம் அவனுக்கு சீக்கிரமே ஒரு சின்னப்பாட்டி வரப்போவதாக ஆசையாய் சொல்லி வைத்திருந்தார். இப்போது பேரன் ஞாபகமாக “எங்கே தாத்தா சின்னப்பாட்டி?” என்று கேட்டுவிட்டான்.
பேரன் கேட்டதில் ரொம்பத்தான் மனசு கரைந்து போனார் சபரிநாதன். ராஜலக்ஷ்மியின் கழுத்தில் தாலியைக் கட்டிய அடுத்த நிமிடமே பேரனை பக்கத்தில் கூப்பிட்டு அன்புடன் அவனை அணைத்து, “பாரு, இதான் ஒன் சின்னப்பாட்டி” என்று சொல்லி புது மனைவியைக் காட்டினார். பேரன் ராஜலக்ஷ்மியை சிறிதுநேரம் உற்றுப் பார்த்தான். பிறகு சபரிநாதனிடம், “போங்க தாத்தா, நீங்க பொய் சொல்றீங்க; இது சின்னப்பாட்டி இல்லை; சின்ன அக்கா!” என்று பெரிய குரலில் சொல்லிவிட்டு அம்மாவிடம் ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டான். கூடியிருந்தவர்களின் முகத்தில் அடக்க மாட்டாமல் சிரிப்பு… ராஜலக்ஷ்மியின் உதடுகளில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.
சபரிநாதனுக்கு அவளின் இந்த முதல் புன்னகை ரசிக்கவில்லை! பேரன் அவருடைய மானத்தை வாங்கிவிட்டானே! சபரிநாதன் தன்னுடைய மேட்டு விழியால் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டார். எல்லோரும் ராஜலக்ஷ்மியை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருசிலர் அவளை அனுதாபத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுப்பையா மட்டும்தான் ராஜலக்ஷ்மியை ஒருவிதமான திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். கிழ மாமனாருக்கு இப்படியொரு அழகான பெண்டாட்டியா என்ற மலைப்பு கொஞ்ச நஞ்சமில்லை அவனுக்கு! மாமனாரால் இவளிடம் ‘அதில்’ என்ன ‘வேகம்’ காட்ட முடியும்? என்று தோன்றியது. சபரிநாதனின் மேல் அவனுக்கு ஏராளமாக பொறாமை உணர்வு மேலிட்டது.
அதனால் சுப்பையாவுக்கு ஊருக்கு எப்போதடா ரயில் ஏறுவோம் என்றிருந்தது. மாமனார் வீட்டில் இருப்பதுபோல் அல்லாமல், யாருடைய வீட்டிலோ இருப்பதுபோல இருந்தது. அதேபோல மகள்கள் எப்போது வந்தாலும் அவர்கள் ஊர் திரும்ப வேண்டிய நாள் வரும்போது அவர்கள் இன்னும் சில நாட்கள் கழித்துப் போக மாட்டார்களா என்று சபரிநாதனுக்கு மிகுந்த ஆதங்கமாக இருக்கும்… இப்போது அவருக்கு தலைகீழ் மனநிலை! மகள்கள் உடனே ரயில் ஏறினால் தேவலை என்றிருந்தது…
மகள்கள், மருமகன்கள், பேரன் பேத்திகள் என்கிற சூழ்நிலையில் அவரால் ராஜலக்ஷ்மியுடன் புது மாப்பிள்ளை தோரணையில் குடித்தனத்தை ஆரம்பிக்க வெட்கமாக இருந்தது! புதுப் பெண்டாட்டியையே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக ராஜலக்ஷ்மி இருந்த பக்கம் கூட அதிகம் பார்க்காமல் இருந்தார்! அதற்கேற்ற மாதிரி இயற்கையும் ராஜலக்ஷ்மிக்கு சாதகமாக இருந்தது. அவளுக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்துத்தான் ‘தூர’க் கல்யாணம் நடந்தாக வேண்டும். அதென்னவோ கல்யாணத்தன்று சாயந்தரமே ஆகிவிட்டது!
‘போச்சிலே’ என்றெல்லாம் தோன்றவில்லை சபரிநாதனுக்கு. அவருக்கு ‘பரவாயில்லை கொஞ்சம் தள்ளியே நிதானமாக ஆரம்பிக்கலாம்’ என்றிருந்தது. மனசிற்குள் இதற்கு ஒரு காரணம் இருந்தது. பாலுறவு விஷயத்தில் அவருக்கு ராஜலக்ஷ்மியிடம் கொஞ்சம் தயக்கமும் பயமும் இருந்தன. அவரின் இந்தத் தனிப்பட்ட உணர்வுகளை யாருமே உணர்ந்து கொண்டு விடாதபடி சபரிநாதன் ரொம்ப உஷாராக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு, முதல் மனைவி மரகதத்திடம் முயற்சித்தபோது – அவருக்கு சில உண்மைகள் புலப்படலாயின.
‘மனசில் உள்ள ஆசைகளை, கற்பனைகளை காரியம் என்று வரும்போது தன்னால் செயல் படுத்த முடியவில்லை’ என்பதுதான் அது. மூச்சு வாங்கியது தவிர, அதுவும் நிமிரவே இல்லை. அதனால் டவுன்பஸ் பிடித்து நெல்லை ஜங்க்ஷன் போய் மெடிகல் ஷாப்பில் ரகசியமாக ‘forezest’ இரண்டு மாத்திரைகள் வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால் அதை உபயோகிக்க இன்னமும் அவருக்கு நேரம் வரவில்லை.
ஆனால் சபரிநாதனைப் பற்றி முத்தையா ரொம்ப நக்கலாக, “”இப்படி ஒரு சின்ன வயசுப் புள்ளையப் போயி கட்டிக்கப் போறானே, அவளை அந்த விஷயத்ல அவன் சமாளிச்சிருவானாமா?” என்று வம்பு பேசியது மட்டும் சபரிநாதனின் காதுகளில் வந்து விழுந்தது. அவரைக் கூப்பிட்டு நேரில் கேட்டு விடலாமா என்றுகூட சபரிநாதன் நினைத்தார். பிறகு தன்னையே கட்டுப் படுத்திக்கொண்டார். எதற்கு அவரிடம் போய் வீண் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு என்று காதில் விழாத மாதிரியே இருந்துவிட்டார். ஆனால் அவருடைய மனசிற்குள் முத்தையாவின் நக்கல் கேட்டுக்கொண்டே இருந்தது.
சபரிநாதன் ஒரு ஆம்பளை சிங்கம்! ஆனால் என்ன கொஞ்சம் வயதாகிவிட்ட சிங்கம்! இளம் புலியின் பாய்ச்சலில் இருக்கும் அசாத்திய வேகம், கொஞ்சம் வயதாகிவிட்ட சிங்கத்திடம் இருக்க முடியுமா? அதனால்தான் அவரிடம் கொஞ்சம் தயக்கமும், பயமும். மற்றபடி எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது.
ராஜலக்ஷ்மியின் தூரக் கல்யாணத்தின் கடைசி நாளில் மகள்கள் அவரவர் ஊர்களுக்கு கிளம்பி விட்டார்கள். அவர்களை ரயிலேற்றி விட ரொம்ப உற்சாகமாகக் கிளம்பிவிட்டார் சபரிநாதன். “நீயும் வாயேன் ராஜலக்ஷ்மி. ஜங்க்ஷன் போய் பிள்ளைங்களை ரயில் ஏத்தி அனுப்பிட்டு வந்திரலாம்…” என்று ஆசையுடன் புது மனைவியைக் கூப்பிட்டார். ஊரே பார்க்கும்படி அழகான பெண்டாட்டியுடன் பெருமையுடன் நடந்து போகத்தானே காத்துக் கொண்டிருக்கிறார்..? விட்டு விடுவாரா கிடைத்த முதல் சந்தர்ப்பத்தை!
ராஜலக்ஷ்மிக்கும் கிளம்புவதற்கு சந்தோஷமாக இருந்தது. அவளின் வறண்ட உணர்வுகளில் குளிர்ந்த வாய்க்கால் நீர் பாய்ந்த மாதிரி இருந்தது. அவளுடைய மனநிலையில் புதிய சிறகுகள் சிறகடித்தன. துள்ளிக் குதிக்க ஒரு புள்ளிமான் அந்த நிமிடமே காதுகளை விடைத்துக்கொண்டு அழகுடன் எழுந்து நின்றது. அதேபோல் ஆறு வருடங்கள் ஒற்றையாகத் திரிந்த சபரிநாதனுக்குள்ளும் மீண்டும் மனைவியுடன் வெளியுலகைச் சந்திக்கப் புறப்படும் காளை திம்மென்று தலையை சிலிர்ப்பிக் கொண்டது…
சுகுணா பரிசாகக் கொடுத்திருந்த விலை உயர்ந்த அரை டஜன் கார்டன் சேலைகளில் குருத்து ஓலைக் கலரில் இருந்ததை எடுத்துக் கட்டிக்கொண்டு கிளம்பியபோது ராஜலக்ஷ்மிக்கு ரொம்ப இதமாக இருந்தது. ஆமாம், இந்த மாதிரியான மிருதுவான சேலைகளுக்காக எத்தனை காலம் அவளின் மனசு ஏங்கியது…!
ஜங்ஷனில் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு சபரிநாதன் பெருமையுடன் நின்று கொண்டிருக்க, ராஜலக்ஷ்மி அவரருகில் அடக்கமாக நின்று கொண்டிருந்தாள். இதற்கு முன் யாரையும் வழியனுப்ப வந்திராத அவளுக்குள் பரவசம் பொங்கிப் போயிருந்தது. ஸ்டேஷனில் போவோரும் வருவோரும் ராஜலக்ஷ்மியை சற்று கவனித்துப் பார்த்துவிட்டுப் போனது சபரிநாதனுக்கு கொம்பை சீவி விட்டாற்போல இருந்தது! இவளின் புருஷன் நான்தான் என்று எல்லோரிடமும் வாய் திறந்து பீற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
எனினும் திருநெல்வேலி ஸ்டேஷனில் சபரிநாதனை எரிச்சல் படுத்துகிற மாதிரியான சம்பவமும் நடந்து தொலைத்தது…