கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 5,121 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சாயம் தொலைத்த வானம். இருள் பூசத் தொடங்கி இருந்த, பின் அந்தி நேரம் படபடப்பாய்ச் சிறகாட்டிக் கொண்டு கோடி கதைகளைத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு, கூட்டுப் பறவைகள் எல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தன.

அப்துல்லாவுக்கு மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திய சந்தோஷம். இன்றிலிருந்து நோன்பு தொடங்குகிறது. ருசி ருசியான சாப்பாடு கிடைக்கும். கேட்கும் போது காசு கிடைக்கும்…! தொழ வருபவர்களிடமிருந்து நிறைய ஜகாத் கிடைக்கும்.

போன வருஷம் போல் யாராவது சொக்காய், கால்சராய் எடுத்துத் தந்தாலும் தருவார்கள். உம்மாவுக்கு வாய்க்கு ருசியாய்ச் சாப்பாடு கிடைக்கும் என்ற நினைப்பே அவனுள் தேனாய் இனித்தது. பல சமயம் அவனுக்குத் தோன்றும், மிகுந்த கருணையாளனான அல்லா ஏன் வருசம் முழுவதும் நோன்பாக வைக்கவில்லை என்று?

அப்துல்லாவிற்குப் பத்து வயசிருக்கலாம் இல்லை அதுக்குக் கூடவோ, குறையவோ இருக்கலாம். அதைப் பற்றி அவனுக்கோ, அவன் அம்மா நூருல் பஷ்ரியாவுக்கோ அக்கறையில்லை.

அவர்களுக்கு வேலை பெரிய பள்ளிவாசல் தெருவில் ஹைராத் வாங்குவது. அப்துல்லா தொழுகை முடிந்து வருபவர்களுக்குச் சலாம் சொல்லிக் கையேந்துவான். இப்படியாக அவர்களின் வாழ்க்கையே போராட்டமாய்த்தான் ஓடிக் கொண்டு இருந்தது.

தங்குவதற்கு ஓலை குடிசையைத் தவிர இவர்களுக்கென்று எதுவும் இல்லை .

மற்ற நாட்கள் என்றால், அப்துல்லாவுக்கு ஐந்து ரூபாய் கூடக் கிடைக்காது. வெள்ளிக்கிழமை என்றால் பத்து ரூபாய் வரை கிடைக்கும்.

படிக்கவேண்டுமென்று அப்துல்லாவுக்குக் கொள்ளை ஆசை அதை அம்மாவிடம் சொன்னால் கம்பெடுத்து விளாசி விடுகிறார். பின்னே, இவன் பள்ளிக்கூடம் போய்விட்டால் தங்கச்சி நிஸ்மத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்?

எல்லோரையும்போல அவனுக்கு ஏன் அத்தா இல்லை என்ற ஏக்கம் அடிக்கடி வரும், எப்போதாவது அதை அம்மாவிடம் கேட்டால் ’ஓ’வென்று அழுது விட்டு, அத்தாவைக் கண்டபடித் திட்டுவாள்.

அதை எல்லாம் புரிந்து கொள்ளும் வயசு இவனுக்கு இல்லை .

இதோ இஷாவுக்கு பாங்கு சொல்கிறார்கள். மனராவில் லைட் போட்டிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருக்கிறது.

நோன்பு துவங்கி விட்டது.

“ஏய், அப்துல்லா இங்க வா…’’தோல்கடை சேக் பாய் இவனை அழைத்தார். தன்னுடைய அழுக்கு ஜிப்பாவை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு அவர் பக்கத்தில் போய் நின்றான்.

சென்ட் வாசம் மூக்கைத் துளைத்தது. புது மஞ்சள் ஜிப்பா… எத்தனை அழகாய் இருக்கிறது?

இவன் தோளில் கை போட்டுக் கொண்டார். பெருமிதம் பிடிபடவில்லை அப்துல்லாவிற்கு தன்னுடைய சேத்தாளிமார்கள் யாராவது பார்க்கிறார்களா என்று அவசரமாய்ச் சுற்றிப்பார்த்தான். யாருமில்லை என்றதும் ஏமாற்றமாய்ப் போனது.

“இந்தா அப்துல்லா, இந்த டோக்கனை வைச்சுக்க. ரஹ்மத் பாய் ஸஹர் ஹோட்டல்ல இதை தந்தியானா ரெண்டு செட் சாப்பாடு தருவாங்க. உனக்கும் உன்னோட அம்மாவுக்கும். நல்லா வயிறார சாப்பிட்டு நோன்பு பிடிங்க..”

அன்பொழுக அவர் சொன்னபோது இறக்கை கட்டிப் பறப்பது போல் உணர்ந்தான் அப்துல்லா.

எப்போது இரவாகும் என்று காத்திருந்தான். ஸஹர் நேர நஹார் சப்தம் கேட்டதும் ரஹ்மத் பாய் ஹோட்டலுக்கு ஓடோடிப் போனான்.

வழக்கத்தை விட அழகாய் ஜோடிக்கப்பட்டிருந்தது ரஹ்மத்பாய் ஹோட்டல். அந்த இரவு நேரத்திலும் கூட்டம் நிறைய நின்றது. மைக் கட்டி நாகூர் ஹனிபா பாட்டு போட்டிருந்தார்கள்.

“எல்லாப் புகழும் இறைவனுக்கே.”கூடவே ஆட்டம் போட்டுப் பாடினான் அப்துல்லா.

டோக்கனைத் தந்ததும் சாப்பாட்டைக் கட்டித் தந்தார் ரஹ்மத்பாய். ஒரே பாய்ச்சலில் இருட்டைக் கிழித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து விட்டான்.

சாப்பாட்டைப் பிரித்துப் பார்த்தவனுக்குக் கண்கள் நிலை குத்திப் போய்விட்டன. பிரியாணி, கறி வறுவல், சாப்ஸ்.

அடேயப்பா! இதெல்லாம் அவனுக்கு யாராவது பெரிய மனிதர் வீட்டு நிக்காவில் தான் கிடைக்கும். இத்தனை சாப்பாட்டை ரஹ்மத்பாய் சும்மாவா தந்தார். அம்மாவிடம் கேட்டான்.

“இல்ல அப்துல்லா, இதுக்கான காசை கட்டித்தான் டோக்கன் வாங்கி தந்தாரு சேக்பாய் ஆனாலும், இந்த சாப்பாட்டுக்கு ரொம்ப குறைஞ்ச காசைத்தான் வாங்கி இருப்பாரு ரஹ்மத் பாய்”அம்மா விளக்கம் சொன்ன பிறகுதான் எல்லாம் புரிந்தது. மனதார வயிறாரச் சாப்பிட்டான். அம்மாவும் இவனும் சாப்பிட்டது போக, நிஸ்மத்துக்கும் காலையில் கொடுக்க எடுத்து வைத்தார்கள். இருவரும் நிய்யத்து சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டார்கள்.

நோன்பு பிடித்தது போலவே தோன்றவில்லை அப்துல்லாவிற்கு. பசி அவனுக்கு நிறைய பழக்கம்தான், அதனால் சந்தோஷமாய் இருந்தான்.

அவுல் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தவனை மோதினார் – கூப்பிட்டார். வழக்கமாய் இதுபோல் அவன் விளையாடினால் புடணியில் சாத்துவார். அதுக்காகத்தானிருக்கும் என்று பயந்து கொண்டே போனான்.

மாறாக அன்பாய்ப் பேசினார்.

“அப்துல்லா இதுலே பேரிச்சை பழமெல்லாம் இருக்கு..! நோன்பு முடிக்க வச்சுக்க. இத வச்சுட்டு கஞ்சி வாங்க பாத்திரம் எடுத்துட்டு வா…”

ஆச்சரியமாய் இருந்தது…! இவனையும் இவனுடைய சேத்தாளிகளையும் கண்டாலே புளியங்கொம்பால் விரட்டுவார். எத்தனை அன்பாகப் பேசுகிறார்..?

கஞ்சிக்குச் சட்னி தந்தார்கள். ருசியான தேங்காய் துவையல். இவன் பள்ளியிலேயே நோன்பு முடித்தான். ஆஹா, எத்தனை வகையான தின்பண்டங்கள்…! ருசி ருசியான பலகாரங்கள்…! இதெல்லாம் இன்னைவரைக்கும் அவன் நாக்கில் கூட பட்டதில்லை.

நிறையச் சாப்பிட்டான், அம்மாவுக்கும் எடுத்துப் போனான்.

லேசான ஏக்கம் அவனுக்குள் பரவியது. இதுபோல நிதம் நிதம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…! எல்லோரிடமும் ஹைராத் கேட்டுக் கெஞ்ச வேண்டாமே…! ஒழுங்காய் யூனிபார்ம் சட்டை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போகலாமில்லையா..

அம்மாவும் மிஸ்கீனாய் அலைய வேண்டாமே… என்று நினைத்துக் கொண்டான்.

நாட்கள் வேகமாய் நகரத் தொடங்கின. அதற்குள் பாய்கடை பஷர் பாய் இவனுக்குச் சட்டை, சொக்கா, பனியன், கால் சராவும் எடுத்துத்தந்தார்.

நெய்கார பெரியம்மா இவன் அம்மாவுக்கு அழகான வாயில் சேலையும், பாப்பாவுக்குச் சொக்காயும் எடுத்துத்தந்தார்.

நிறைய நோன்பு பலகாரம் தந்தார்கள். பள்ளியே விளக்குகளால் ஜோடிக்கப்பட்டு அத்தனை அற்புதமாய் இருந்தது. அப்துல்லாவும் அவன் நண்பர்களும் பள்ளி முழுசும் சுத்தி விளையாடினார்கள். அத்தனை சந்தோஷம்

பெருநாளும் வந்தது. புது சொக்காய் போட்டுக் கொண்டு சந்தோஷமாய்ப் பள்ளிக்குப் போனான். எல்லோரும் நோன்பு காசு தந்தார்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று எண்ணிப் பார்த்தான். இருநூறு ரூபாய் தேறியது.

அப்பாடி..! இத்தனை காசை அவன் பார்த்ததே இல்லை. பள்ளியில் பாயாசம் ஊற்றினார்கள். சந்தோஷமாய் வாங்கிக் குடித்தான். அன்றைய நாளெல்லாம் ஆனந்தமாய்க் கழிந்தது.

இரவு வழக்கம் போல் தன்னாலே விழிப்பு வந்து எழுந்து கொண்டான் அப்துல்லா. தூக்கக் கலக்கத்தோடு ரஹ்மத் பாய் கடைக்குப் போனான். வழக்கத்திற்கு மாறாய் ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கடை தூங்கி வழிந்தது. கதவில் குண்டு பூட்டு…!

ஓ! நோன்பு முடிந்து விட்டதா..! இனி சாப்பாடு தர மாட்டார்களா..?

ஏக்கத்தோடு அம்மா பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான்.

அடுத்து வந்த வாரமெல்லாம் இருவரும் ஹைராத் வாங்கப் போகவில்லை. கையில் கொஞ்சம் காசிருந்ததும், நிஸ்மத் பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாததும்தான் காரணம். |

ஒருவாரம்போல் ஆகியிருக்கும். ஜூம்மாவிற்குப் பள்ளிக்குப் போகும்படி அம்மா அனுப்பி வைத்தாள். முன்னமே வந்துவிட்டதால், நண்பன் பாரூக்குடன் அவுலைச் சுற்றி நொண்டி விளையாட ஆரம்பித்தான்..

பொளேர் என்ற அறை முதுகில் விழ, தடுமாறி பொத் என விழுந்தவனைக் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளினார், மோதினார்.

“ஷைத்தானுங்க…. இங்க வராதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல..? போங்கடா…’’விரட்டினார். அவருக்குப் பக்கத்துணையாய் பஷர்பாய் சேர்ந்து கொண்டார்.

“இவனுகளை நீங்க உள்ளே விடறதாலதான், பள்ளில செருப்பு காணாம் ஆயிடுது. அடிச்சு விரட்டுங்க.” என்று அவரும் சேர்ந்து கொள்ளவும், மோதினார் இவர்கள் இருவரையும் விரட்டி வந்து கேட்டிற்கு வெளியே விட்டார்.

அப்துல்லாவின் முகம் சுண்டிப்போனது. எத்தனை அன்பாய் இருந்தார் மோதினார்…! பஷர்பாய் கூடத் துணியெல்லாம் வாங்கித் தந்தார். இப்போது ஏன் இவர்கள் மாறிப்போனார்கள்..?

அதற்கு பாரூக் விளக்கம் சொன்னான்.

“டேய் அப்துல்லா நோன்பு வந்தாத்தான்டா இவங்க அன்பா இருப்பாங்க. நோன்பு போனா அன்பும் போயிடும்..” வாஸ்தவமான பேச்சாய்த்தான் பட்டது அப்துல்லாவிற்கு.

அதற்குள் தொழுகை முடிந்து எல்லோரும் வெளியே வரத் தொடங்கி இருக்க, கேட்டிற்கு வெளியே இருந்தே கைகளை

நீட்டினான். ம்ஹூம், யாரும் கண்டுகொள்ளவில்லை. முண்டித் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். மோதினார் பார்க்காதபடிக்கு அதோ சேக் பாய் வருகிறார். சந்தோஷமாய்ச் சிரித்துக்கொண்டு பக்கத்தில் போனவனை, ’போடா’என்று விரட்டி அடித்தார்.

பக்கத்தில் நின்ற ஹோட்டல் கடை ரஹ்மத் பாய் மோதினாரைக் கூப்பிட்டார்.

“என்ன பாய் இது. பள்ளியில இவனுக தொந்தரவு பெரும் தொந்தரவா இருக்கே…!”என்று சொல்லவும், மோதினார் கோபமாய்க் குச்சியோடு வர, ஓட எத்தனித்தவன், கல் இடறி . கீழே விழ, புதுச்சட்டை கம்பியில் பட்டுக் கிழிந்தது.

கை காலெல்லாம் சிராய்ப்பு. சிதிலமாய் ரத்தம்..! ஒரு நொடி எல்லோரும் பயந்து விட்டார்கள். கூட்டமாய் இவனைச் சுற்றி நின்று கொள்ள, எச்சிலும் இரத்தமும் சேர்ந்து ஒழுக, அழுகையோடு எழுந்தான்.

“போங்கய்யா, நீங்க எல்லாரும் மோசம். பொய்க்கார மனுஷங்க. நாங்க மிஸ்கீனெல்லாம் திருடங்க இல்ல..! நோன்புன்னா மட்டும் எங்க மேல அன்பு காட்டறது, அது முடிஞ்சதும் எங்களை விரட்டுறதுன்னு நீங்க எல்லாம் வேஷம் போடறீங்க. எங்கள் விரும்பவும் வேணா, வெறுக்கவும் வேணா நாங்க இப்படியே இருந்துட்டு போறோம். எங்களையும் ஏமாத்திட்டு அல்லாவையும் ஏமாத்த வேணாம்..”அழுதபடிச் சொல்லிக் கொண்டுபோன அவனைப் பார்த்து விக்கித்து நின்றார்கள்.

வீட்டுக்கு வந்த அப்துல்லா அம்மா மடியில் படுத்துக்கொண்டு அழுதான்.

“அம்மா, அடுத்த நோன்பு எப்ப வரும்மா..?” என்றபடி அழும் மகனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் நூருல் பஷிரியா. வேறென்ன செய்ய முடியும் அவளால்

விடிந்ததும் முதல் வேலையாய்த் தட்டை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள், வழக்கமான வார்த்தைகளோடு,

“அம்மா மிஸ்கீன் வந்திருக்கோம், ஹைராத் குடுங்கம்மா.”

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *