என் கன்னத்தில் காற்றுப் பட்டது. அது உன் மூச்சுக் காற்று என்று நினைத்தேன். கனவில்; உன்னைக் கண்டதும் நீயே இங்கே இருப்பதுபோல் இருக்கின்றது.
பிரான்சின் துலுஸ் பகுதியில் குழந்தையோடு சிறு குடும்பமாகி வாழ்கிறாள் வனஜா. பாரிசில் தன் பெற்றோருடன் வாழ்ந்து கல்வியை முடித்துப் பாச முடிச்சுகளோடு சற்றுப் பிரிந்து தன் குடும்ப வாழ்வைப் பின்னுவதும் சகஜம்தானே! தினமும் தொலைபேசி மூலம் வனஜாவுடன் தொடர்பு கொண்டு பாசக் கடலில் மகிழுவார் வனஜாவின்; தந்தை. சுகம் விசாரித்து பேரக்குழந்தையுடன் செல்ல மொழி பேசி மகிழ்வதும் சுகமான அனுபவம் தானே! வனஜாவின் அம்மா சகோதரிகளும் பேசி மகிழ்வதும் அழகானது. அழகு என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்ததவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது மிகவும் அழகாகத்தான் இருக்க வேண்டும். மூன்று வருடங்கள்தான் வனஜா துலுசில் வாழ்ந்தாலும் தன் பெற்றோர் சகோதரர்களுடன் வாழ்ந்த பள்ளிக்காலங்களும், இனிமையான சுற்றுலாக்களும் குடும்பக்கொண்டாட்டங்களும் நினைப்பதற்கே அழகான அனுபவங்களாகி மனத்திரையில் அவளுக்கு காட்சிகளாகிவிடும்.
உலகத்தை தீயைவிட வேகமாகப்பற்றி உயிர்களை அழித்துக் கொண்டிருக்கும் கொரொனாவைரசின் செய்திகள் சகல வழிகளிலும் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன கொடுமை!
சைனாவில் வூஹான் என்ற இடத்தில் ஆரம்பித்த இந்த வைரசு உலகை உலுப்பிக் கொண்டிருக்கிறதே! வனஜா மட்டுமன்றி மனிதநேயமுள்ள அத்தனை உயிர்களையும்; தூக்கத்திலும் இச்செய்தி இதயத்தை அழ வைக்கிறதே!
தொழில்நுட்பம் பெருகிய காலம் இன்றையது. படக்காட்சிகளுடன் அருகில் இருப்பது போன்ற உணர்வுடன் வட்ஸ்அப், வைபர், ஸ்கைப் என்று கைத்தொiபேசியை உருமாற்றிமாற்றி உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இதுபோல் இருக்கிறது. வனஜாவின் குடும்பமும் தினமும் இப்படித்தான் கதைத்துக் கலகலப்பாக இருப்பார்கள். வனஜாவின் தந்தை எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள்; அவர் வாயிலிருந்து அடிக்கடி உதிரும்;. மகிழ்வில் அழகுகாட்டி சுகம் கொடுக்கும்; அற்புதக் குடும்பம் அது.
உயிர்களை அழித்துவிட ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கும் திமிர்பிடித்த மனிதனுக்கு இயற்கையின் ஒரு சின்னச் செய்தியா இது? ஐயோ விசித்திரமான உலகத்தில், நிஜமற்ற இந்த உலகத்தின் பிரமையா என எண்ணத் தோன்றுகின்றது வனஜாவுக்கு. சுறு சுறப்பாக இயங்கும் பாரிசில் இப்போ மரண பயம் உறைந்து உப்பிக் கிடக்கிறதே!. மனிதனை உலுப்பி வேட்டையாடும் கொரோனா உலக வரலாகிறதா? நெஞ்சு குமுறுகிறது வனஜாவுக்கு.
கொரோனாவைரஸ் சமத்துவக் கொள்கையை அல்லவா மீண்டும் தீவிரமாக நினைவுபடுத்துகிறது. ஏழை பணக்காறன் என்ற வித்தியாசமின்றி எல்லோரையும் குறிவைத்துத் தாக்குகிறதே! ஐயோ இது என்ன கொடுமை! மதவாதிகளால் கொரோனா வராமல் வரமளிக்க வெண்டுமென ஜெபித்தவர்களையும் கொரோனா குறிவைத்துவிட்டுதாம். முற்போக்கு வாதியான அப்பாவின் வாயிலிருந்து வந்தபோது வனஜா சிரித்துக்கொண்டே சொன்னாள் : ‘அப்பா இப்போ எங்களுக்குக் கடவுள்மாதிரி இருப்பது உலகமெல்லாம் சேவை செய்யும் வைத்தியர்களும் தாதிமார்களும் அங்கு மனிதநேசத்தோடு பணிபுரிவர்களும்தான். அவர்களுக்கு கைதட்டி நன்றிக்கடனை மக்கள் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் தெய்வங்கள் என்றாள் வனஜா.
உலக மகா யுத்தங்களின் அனுபவங்களைக் கடந்து வந்த பிரெஞ்சுப் பெரியவர் தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருக்கிறார் : ‘எல்லா யுத்தங்களையும் மடக்கி மனிதரை வீட்டுக்குள் முடக்கிவிட்டதே இந்தக் கொரோனா வைரஸ். தான் அறிந்தவரை உலகத்து மக்களை மனமுடைந்து துடிக்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத இக்கிருமியை இன்றுதான் நான் அறிகிறேன். இறந்தவர் உடலை உறவினருக்கே காட்டாமல் அடக்கம் செய்கின்ற பெரும் கொடுமையை இன்றுதான் பார்க்கிறேன்’ என்று. பாவங்கள் நிறைந்த பூமியைப் படம் போட்ட அந்தப் பெரியவரின் ஆன்மா திரவமாகி கண்ணிர் ரேகைகளால் வழிந்தோடியது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த வனஜாவின் நெஞ்சு குமுறிக்கொண்டிருந்தது. இந்தக் கொடுமை எந்த எதிரிக்கும் நிகழக்கூடாது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல சுகம் பெற்று வாழ்க்கையைத் தொடரவேண்டுமென நெஞ்சுக்குள் அவள் வாழ்த்தும்போதே உலகம் பூராகவும் உயிரிழந்தவர்களின் தொகையால் வனஜா அதிர்ந்து உடைந்துபோனாள்.
மீண்டும் வனஜாவின் அப்பாவின் தொலைபேசி.
பிள்ளை வீட்டில் கவனமாக துணைவரோட இரு. பேரனை வீட்டுக்குள் விளையாடவிடு. சத்துள்ள சாப்பாடுகளை வேண்டிக் கொஞ்சம் வைத்துவிடு. நல்ல நூல்களை எடுத்து வாசி பிள்ளை. வனஜாவுக்கு அப்பாவின் அறிவுரைகள் அவளை உற்சாகப்படுத்தின. அப்பா நல்ல கலை ரசிகன் மட்டுமல்ல ஒரு புத்தகப் புழு. உலகம் தெரியாது அவருக்கு. ஆனால் உலகத்தைப் பற்றிப் புரிந்தவர். அவருக்கு வாழ்க்கை இன்பங்கள் புத்தகமும் பிரசங்கமும்தான்;;. பிரெஞ்சு நாட்டின் எமில் ஷோலா, மாப்பசான், விக்டர் ஹியூகோ மற்றும்; ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களை தனது சிறுவயதில் அப்பா அறிமுகப்படுத்தியிருந்ததும் அவரின் வீட்டு நூலகத்தில் இத்தகைய நூல்களையே பார்த்த அனைத்தும் அவள் நினைவில் சுழன்றன. அறிவுரைகளை இடை மறித்து
‘அப்பா நீங்களும்தான் கவனமாக இருங்கோ. நல்ல சுக தேகிகளாக இருந்தவர்களே இந்த கொரோனாவால் தீடிரென மறைவது சொல்லமுடியாத வேதனையாகவிருக்குது. நீங்கள் நல்ல சுகதேகி என்று நினைத்துக் கொண்டு வெளியில் போய்த்; திரியாதையுங்கோ அம்மா தங்கைகளுடன் கவனமாக வீட்டுக்குள்ளே இருங்கோ அப்பா.
அவள் வீட்டின் மூத்த பெண். அவளுக்கு அப்பாவில் தான் கூடுதலான கருசனை என்று வனஜாவின் அம்மா பாசங்கலந்த மகிழ்வோடு குறும்பாகப் பேசுவார். அப்பாக்கேற்ற மகள். கலைகளை ரசிப்பதிலும், இயற்கையை நேசிப்பதிலும், சினிமாப்படங்களைப் பார்ப்பதிலும், எல்லா இடங்களுக்குச் சுற்றித்திரிவதிலும், குடும்பங்களோடு; கொண்டாடி மகிழ்வதிலும், நண்பர்களோடு உறவாடுவதிலும் இருவரும் ஓரே அச்சுத்தான் என்று சொல்லிச் சிரிப்பாள் அம்மா.
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுகங்களை பாதுகாக்கவேண்டிய நேரமிது அம்மா. இந்தக் கொரோனா அசுர வேகத்தில் பரவி ஆட்களைக் கொல்லுது என்று தொடர்ந்து கொண்டேயிருந்தாள் வனஜா.
பேரன் இப்போ ரசனையில் ஆழ்ந்து மகிழ்கிறான் அப்பா. அவனுக்கு பறவைகளில் அதிக நாட்டம் என்று உங்களுக்குத் தெரியும்தானே. விமானங்களின் இடைவிடாத ரீங்காரம் தடைப்பட்டதால் பறவைகள் கூட்டம் பயமின்றி வட்டமிடுகின்றன. பறவைகளும் இப்போ உச்சஸ்தாயியில் பாடித்திரிகின்றன. உங்கள் பேரனைச் சொல்லவும் வேண்டுமா? வீட்டுக்குள் இருந்து ஜன்னலூடாக பார்த்து ரசித்து பரவசத்தில் இருக்கிறான் அப்பா. துலூஸில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வாத்துக்கள் எல்லாம் வீதிகளில் நடை பயில்கின்றன. ஆச்சரியமாகத் தானிருக்கிறது. மனிதர்கள் வீட்டுக்குள் இருக்க இப்போ பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் கொண்டாட்டமாயிருக்குது. மாயாஜால வித்தைகளினால் உலகம் புரண்டுகொண்டிருக்கிறதுபோல மனம் ஏங்குகிறது அப்பா என்று மனக்கிடக்கைகளை அசட்டுத்தனமாகக் கொட்டிக்கொண்டேயிருந்தாள் வனஜா.
வனஜாவுக்கு வீட்டுக்குள்ளே அடங்கியிருப்பது விலங்குகளைப் பூட்டி வைப்பதுபோலிருந்தது. வீட்டில் சினிமாப்படத்தைப் போட்டால் அநுபவிக்க ரசித்துப் பார்க்க முடியுமா? மனிதர்களின் மரணக் குவியல்களின் தகவல்கள் அவளையும்; மரணதண்டனையை அனுபவிப்பது போன்ற உணர்வுக்குள்ளாக்கியது. தொலைக்காட்சி, வட்சப் பிரசங்கங்களைக் கேட்க உடல் என்னவோ ஒரு மாதிரியாக சொல்லமுடியாதபடி சோகம் நெஞ்சை அடைத்தது. அவளுக்கு. வாழ்க்கை என்பது ஒரு நாள் சங்கிலியா? என எண்ணத் தோன்றுகின்றது.
பணம் பணமாக சேமித்து பாங்கில ரொக்கமாகக் காசும், வீடு வீடாக வேண்டி வாடகைக் காசுகளும்; எக்கச்சக்கமாக இருப்பவர்களுக்கும் இப்ப என்ன வாழ்க்கை அந்தகாரந்தானே! என்னென்ன அட்டகாசம்; செய்தினம் இந்த மனிதர்கள்? இரக்கமற்ற சடலங்கள். மனிதரை மனிதர் நேசித்தார்களா? சிங்கம் நரிபோன்ற மிருகங்களின் குணம் தானே மிஞ்சிக் கிடந்தது இந்த மனிதருக்கு. இப்போ அதுகள் சுதந்திரமாகத் திரியுதுகள். இப்ப மிருகங்கள் கூட்டுக்குள்ள இருக்குமாப்போல வீட்டுக்குள்ள கிடக்கினம் மனிதர்கள். யாருக்குத் தெரியும் இனிமேலாவது மனிசர் மாதிரி யோசிக்கினமோ என்று முற்போக்குவாதியான அப்பா கூறிக்கொண்டிருந்தார். சரியம்மா வனஜா காலத்திடம் நாம் பயப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. பொழுதுகளை நல்லதாக நினைத்துக்கொண்டு வாழப்பழகுவோம். எல்லாம் விரைவில் நல்ல நிலைமைக்கு வரும்.
வானத்தைக் கவ்விக் கொண்டது இருட்டு. வனஜாவின் நினைவுகள் இன்பத்தின் முன்னொளிபோல வருஷங்களை முன்னோக்கி ஓடியது. பாரிசில் சுற்றித்திரிந்த இடங்கள், வெயிலைக் கண்டால் அப்பாவோடு சேர்ந்து சயிக்கிளோட்டமும், ஆற்றில் வாடகைக்கு வள்ளம் எடுத்து வலித்து ஓடுவதும், இசை நிகழ்ச்சிகள், தேசிய விழாக்கள் என்று குடும்பமாக அப்பாவின் வழிகாட்டலில் ஓடித்திரிந்தது. வாழ்க்கை இன்பத்தில் துரிதமாகித் துலங்கிய நாட்கள்; மகிழ்வானவை. ஏன் இத்தகைய நினைவுகள் எல்லாம் வருகின்றன என்று அவளுக்கே புரியவில்லை. தனிமை நல்ல தெறிப்புக்களை வெளிப்படுத்துகின்றன போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். அவளைச் சுற்றியிருக்கும் எல்லாப்பொருட்களுமே கண்சிமிட்டிச் சிரிப்பன போலிருக்கிறது. இந்த இருட்டைப்போல உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்?
விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே அப்பாவின் அழைப்பு வந்துவிடுமே! இன்னும் என்ன என்ர அப்பாவின் தொலைபேசி அழைப்பைக் காணவில்லை என்று எண்ணும்போதே தொலைNசி அலறிக்கொண்டது. பிள்ளை வனஜா அம்மா கதைக்கிறேன். குரல் தழுதழுத்தபடி அப்பாவுக்கு இரவு திடீரென மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சலும் உடனடியாக அதி வேகமாகி உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக பிரான்ஸ் அவசரசேவைக்கு (ளுயுஆரு) அறிவித்தோம். உடனடியாகவே வைத்தியசாலைக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இப்போ அவர் பரீஸ் பத்திலுள்ள லறிபொவாசியர் (டுயசiடிழளைநைசந) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். அங்குள்ள வைத்தியர்கள் தாதிமார்கள் மிக மிகக் கவனமாகவே அப்பாவைக் கவனிக்கிறார்கள். ஒன்றுக்கும் யோசிக்காதே வனஜா விiவில் அப்பா குணமாகி வீட்டிற்கு வந்திடுவார்.
அம்மா என்று அலறிய வனசா. பாரிசுக்கு உடனேயே புறப்பட வேண்டும் என்று மனதை உறுதிப்படுத்திக்கொண்டாள். அவசர அவசரமாக விமான ஒழுங்குகளைச் செய்தாள். இன்னும் போக்குவரத்துச் சேவைகள் முற்றாகத் தடுக்கப்படவில்லை என்ற ஆறுதல் கொஞ்சம் அவள் பதட்டத்தைத் தேற்றியது.
பாரீசில் அவளின் பெற்றோரின் இல்லத்திற்;கு அன்று மாலையே வனஜா குடும்பமாக வந்துவிட்டனர்.
வனஜாவின் அம்மா கதவைத் திறந்து கொண்டே கூறினாள் பிள்ளை வனஜா எனக்கும் உடல்நிலை சற்று வலித்து வித்தியாசமாக இருக்கிறது. பேரனை என்னிடம் நெருங்க விடாதேயம்மா, நீயும் சற்று விலகியிரு. அப்பாவை நாங்கள் சென்று பார்க்க முடியாது செல்வமே! அவர் விரைவில் தேறி வீட்டிற்கு வருவார். முழு நம்பிக்கையோடு இருப்போம். அவர் இந்த கொரோனாவை வென்று நிட்சயம் வருவார். அவரின் நல்ல இதயத்திற்கு எதுவுமே தீயவையாக நடக்காதம்மா.
வனஜாவுக்கு அப்பாவின் ஆசைமுகத்தைப் பார்க்கவேண்டுமென்றுதான் படுகின்றது. மார்பு வெடித்துவிடுவதுபோலத் துடிக்கிறது. இதுதானா இருளில் இருந்து சுகம் கண்டேன்? காதைப் பொத்திக்கொண்டு படுக்கையில் பொத்தென்று விழுந்து அழுது புரண்டாள். அம்மாவுக்கும் இப்படியான நிலைமையா?. கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்கும் எங்கள் கலாச்சாரம்கூட அறுந்துபோய்விட்டதா? எங்களுக்கு, என்ன கொடுமை இது? இயற்கை ஈட்டி முனையில் எம்மை நெருப்பில் போட்டுப் பொசுக்குவது போலல்லவா இருக்கிறது.
இருபத்தியொராம் நூற்றாண்டில், நவீன யுகத்தில் வயது வந்தவர்கள் சுகதேகிகளாக மகிழ்ந்து வாழ்வை வாழுவதற்கு இத்தனை தடையா? இது என்ன உலகம் இப்படி நாசம் செய்கிறது? உலகமாவது மண்ணாங்கட்டியாவது. வனஜாவின் உடல் படபடத்தது. எண்ணங்கள் பேய்க்கூத்தாடி ஒன்றோடொன்று மோதின. ஓவ்வொரு நிமிடமும் அவள் அப்பாவின்; நினைவால் நெஞ்சு நெருப்பால் தகித்துக்கொண்டிருந்தது.
தொலைபேசி இடைவிடாமல் கேட்கிறது. வைத்தியசாலையிலிருந்து வந்த செய்தியால் அம்மாவின் முகம் இளஞ்சிவப்புத்தோய்ந்து கண்ணீர்த்துளிகள் தொங்குவதை அவதானிpத்துக் கொண்டிருந்தாள் வனஜா. அடந்த காற்று மெல்லியதாக இழைக்கிறது.
அம்மா பிள்ளைகளுக்குச் செய்திகளைச் சொன்னார். அப்பாவின் நிலை மோசமாகிக் கொண்டு வருவதால் அவசர சிகிச்சைக்குக் கொண்டு செல்கிறார்களாம். வைத்தியர்களும் தாதிமார்கள் பணியாளர்கள் எல்லோரும் கண்ணயராது கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களாம். எங்களை எதற்குமே அனுமதிக்க முடியாதாம் என்றுசொல்லி அந்தத் தாதி என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாள். எங்கள் வேதனையைப் பார்த்தவள்போல் அந்தத் தாதி அழுகிறாள். கண்ணுக்குத் தெரியாத தொற்றினால் எங்களுக்கும் ஆபத்து வரலாம் என்று பதறுகிறாள். அவள் என்ன பிறவியோ!…
பூரண அமைதியும் ஓய்வும் அடைந்த மனங்களைப் புரட்டி அலச விரும்பாது இப்போ களைப்போடு இருக்கின்றனர். எங்கள் அப்பாவை நாங்கள் இனிப் பார்க்கவே முடியாதா? மேகங்கள் பாதத்தில் இடிப்பதுபோல் உணர்கின்றாள் வனஜா. விழிகளுக்குள் நிறக்;கீற்றுகள் மோதுகின்றன.
மீண்டும் தொலைபேசி அழைப்பு மெல்லிதாக அழுத்தமாக இடைவிடாமல் கேட்கிறது.
வனஜாவின் உடல் பாரமின்றி காற்று பறந்து வந்து முட்டித் துழைத்து ஊடுருவி உழைகின்றன. இதுதான் என் அப்பாவின் இறுதிச் செய்தியாகக் கலகலக்கும் ஒலியா..?
பறவையின் சிறகு நிழல் படுக்கைமீது அசைவற்று விழுந்திருந்தது
இயற்கை அற்புதமானது. இயற்கை புதிரானது. ஆனால் இயற்கை இரக்கமற்றது என எண்ணத் தோன்றுகின்றது. காலங்கள் அழகானவை. காற்றே இதமான குளிரோடு வருவாயா! வாழ்வை வெல்வோம்!.