இமயமலை பஸ் டிக்கெட்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 24,145 
 
 

சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது, அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. சங்கரன் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த நீரை அள்ளி முகம் கழுவியபோது ஊரில் இருந்து கும்பலாக பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். கூடைகளைத் தங்களது கக்கத்தில் இடுக்கியபடி நடந்துவருவதை சங்கரன் பார்த்தான். கோழிக்கொண்டைப் பூக்களும் செவ்வந்தியும் தோட்டத்தில் மலர்ந்து விட்டது. பூ எடுக்க கூலியாட்கள் போகிறார்கள். அவர்களுக்குப் பின்பாக இரண்டு எருமைகள் அசைந்து அசைந்து நடந்துவருவது தெரிந்தது. மாரியப்பன் எருமைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவந்தான். எருமைகள் வாய் வைத்து சோளத்தட்டையை ருசிபார்த்துவிட்டால் விடாது.

“ஏய் மாரியப்பா… எருமையை ரோட்டைவிட்டு கீழே இறக்கி ஓட்டிட்டுப் போடா. சோளத்திலே வாய் வைக்கப்போகுது” எனக் குரல்கொடுத்தான் சங்கரன்.

“கம்பெனி சோளத்தை எல்லாம் எருமை திங்கிறது இல்லப்பா. குளுதானியிலே பழைய சோத்தையும் இட்லியும் தோசையுமாத் தின்னு பழகியிருச்சு. உளுந்த வடை சாப்பிடப் பழகியிருச்சு” எனக் கேலியாகப் பேசினான் மாரியப்பன். எருமைகள் ரோட்டைக் கடந்து காட்டுப் பக்கமாக நடந்தன.

சங்கரனை மாற்றிவிடுவதற்கு அவனது அப்பா சுருளி வரவேண்டும். அதுவரை பொட்டல் களத்தில் இருக்க வேண்டும் என சங்கரன் நினைத்தான். அவனுக்கு கண்கள் எரிந்தன. சங்கரன் நேற்று ஊருக்குள் போகவில்லை. சோளக்காட்டில் இருந்து நேராக பொட்டல்களத்துக்கு வந்துவிட்டான். ஒருநாள் ராத்திரி முழுக்க காவலுக்கு இருந்துவிட்டான். காலையில் அவனது அப்பா சுருளி வந்து வீட்டுக்கு அனுப்புவதாகச் சொன்னார். பகலில் சுருளி காவலுக்கு இருப்பார். சங்கரன் ராத்திரி காவலுக்கு வர வேண்டும்.

“அண்ணே… மென்டல்சாமியைக் காணோம்னு அவரைத் தேடிக்கிட்டு ரவி அலையுறான்” என மாரியப்பன் தகவல் சொன்னான்.

இமயமலை பஸ் டிக்கெட்

சங்கரனுக்கு சங்கடமாக இருந்தது. ரவியின் அப்பா சாமியப்பன் மாதத்தில் ஒருநாள், இரண்டு நாட்கள் காணாமல்போய் திரும்பிவந்துவிடுவார். எங்கு போகிறார், எதற்காகப் போகிறார் என ஒன்றும் தெரியாது. சாமியப்பன் ஊரில் ஜாக்கெட் சட்டை தைக்கிற தையற்காரர். அவரது இரண்டாவது மகன் ரவியை டெய்லர் வேலைக்குப் பழக்கினார். மூத்த பிள்ளை வாத்தியார் வேலை பார்க்கிறான். ரவியின் அம்மா சௌடம்மா இறந்துபோனதற்குப் பிறகுதான், சாமியப்பன் இப்படி நடந்துகொள்கிறார் என்று ஊரில் பேசினார்கள். சௌடம்மாவுக்கு வயிற்றுவலி வந்து மூன்று நான்கு மாதங்கள் வைத்தியம் செய்தும் வலி தீரவில்லை. வயிற்றில் கட்டியிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். வைத்தியச் செலவுக்கு தென்னந்தோப்பை எழுதிக்கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். சௌடம்மாவின் வயிற்றில் இருந்த கட்டியை எடுத்து, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவளுக்குத் திரும்பவும் வலி உண்டாகி இறந்துபோனாள்.

சாமியப்பனுக்கு அதற்குப் பிறகு மனம் நிலைகொள்ளவில்லை. மனுஷன் சௌடம்மாவின் நிழலிலேயே வாழ்ந்தவர். அவள் நினைவாக இருந்தவர், திடீரென ஒருநாள் காணாமல்போனார். ரவியும் சங்கரனும் தேடினார்கள். தென்னந் தோப்பை விற்ற கவலையில் தோப்புக்குச் சென்றிருப்பார் என அங்கு போய்ப் பார்த்தனர். சாமியப்பன் வரவில்லை எனக் காவல்காரன் சொன்னான். கோம்பையில் இருக்கும் சாமியப்பனின் சகோதரி விஜயாவின் வீட்டுக்குப் போயிருப்பார் என்று அங்கு போய்ப் பார்த்தார்கள். அங்கும் அவர் இல்லை. டவுனுக்கு ஆள்விட்டுத் தேடினார்கள். மலைக்காட்டுப் பக்கமாகப் போயிருப்பார் என ஆள்விட்டார்கள். எங்கும் இல்லை. ரவியும் அசந்துபோய் `வரும்போது வரட்டும்’ என விட்டுவிட்டான். ஒரு நாள் இரண்டு நாட்கள் என ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ஊர்க்காரர்களும் சாமியப்பனை மறந்துபோனார்கள்.

சங்கரனும் ரவியும் போடிக்கு வந்து ஜீவன் தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு, பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள். பஸ் ஸ்டாண்டுக்குள் சாமியார் கூட்டம் ஒன்று ஹோட்டல் கடையின் முன்பாக நின்றிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். கூட்டத்தில் ஒருவர் சாமியப்பனைப் போலவே தெரிந்தார். அவர்கள் இருவரும் அங்கு சென்று பார்த்தார்கள். உண்மையில் அவர் சாமியப்பன்தான். அழுக்கு வேட்டியும் சட்டையுமாக ஆளே உருவம் தெரியாமல் இருந்தார். தாடி வளர்ந்திருந்தது. பங்கரையாக தலைமுடி இருந்தது. சாமியப்பன் காக்கி நிறத்திலான பை ஒன்றை வைத்திருந்தார். அவரைப்போல் அங்கு இருந்தவர்கள் ஒவ்வொருவரும் பை வைத்திருந்தனர். அந்தப் பையில் தண்ணீர்பாட்டிலும் துணிகளும் வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்களது நெற்றியில் விபூதி பூசியிருந்தனர். அதன் நடுவே வட்டமாக சந்தனமும் குங்குமமும் தெரிந்தன. ரவி, தன் அப்பா சாமியப்பனைப் பார்த்ததும் அழுதேவிட்டான். சங்கரன் கூட்டத்தில் இருந்து அவரை இழுத்துவந்தான்.

“நான் மென்டல்சாமி. இமயமலையில் இருந்து வர்றேன். நான் எழுபது வருஷத்துக்கு முன்னாடி அங்கே போனது. இப்போதான் ஊருக்குள்ளே நுழையுறேன்” எனச் சொன்னார். சங்கரன், “பேசாம வாங்க… வீட்டுக்குப் போவோம்” என்றான்.

சாமியப்பன் பஸ் ஸ்டாண்டு நடுவில் நின்று கொண்டு, “மழை இனிமேற்பட்டு கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது. மழை வராமல் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, காட்டைவிட்டுப் போன சாமிமார்கள் எல்லாம் திரும்பிவந்துக்கிட்டு இருக்காங்க. நாங்க எல்லாம் இமயமலையில் இருந்து இறங்கிவர்றோம் தம்பி. நம்ம ஊர்ல இருக்கிற ஆறு, குளம், கம்மாக்கரை எல்லாம் நிறைஞ்சிரும். தென்னந்தோப்பை வித்தவனுக்கு தென்னந்தோப்பு கிடைக்கப்போகுது. வீட்டை வித்தவனுக்கு வீடு கிடைக்கப்போகுது. காட்டை வித்தவனுக்கு காடு கிடைக்கப்போகுது” என்றவர் தன்னிடம் இருந்த பேருந்து டிக்கெட்களை ரவியிடம் கொடுத்து, “இமயமலைக்குப் போறதுக்கு இந்த டிக்கெட்டை வெச்சிக்கோ. பஸ்காரங்க உன்னையை ஏத்திக்குவாங்க. இந்தா இது போறதுக்கு டிக்கெட். வர்றதுக்கு பச்சை கலர் டிக்கெட்” என்று சொன்னார். ரவி டிக்கெட்டை வாங்கி தனது ஜோப்பில் வைத்துக்கொண்டான்.

“சரிப்பா நீங்க வாங்க. நம்ம வீட்டுக்குப் போவோம்” என்று அவரை அங்கு இருந்து அழைத்துவந்தான்.

“நீ என்னைக்கு இமயமலைக்குப் போகப் போறே?” என ரவியைப் பார்த்துக் கேட்டார் சாமியப்பன். அவரது கையைப் பிடித்து, “பேசாம வாங்கப்பா… பேசாம வாங்கப்பா…” என நடந்தான் ரவி. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வர்கள், ரவியையும் சாமியப்பனையும் வேடிக்கை பார்த்தார்கள்.

சங்கரனும் ரவியும் அவரை வீட்டுக்குள் அழைத்துவந்ததும் சாமியப்பன் கை நிறைய விபூதியை அள்ளி, “சௌடம்மாவைக் கூப்பிடுறா. அவளுக்கு வயித்துவலிக்கு விபூதி போடுறேன். இமயமலையில் இருந்து ஈஸ்வரன் எனக்குக் குடுத்தனுப்புன விபூதிடா மகனே. நீயும் பூசிக்க” எனச் சொல்லியவர் நேராகச் சமையற்கட்டுக்குள் போய், “சௌடம்மா… சௌடம்மா…” எனச் சத்தமாக அழைத்தார். வீட்டில் யாரும் இல்லை என்றதும், “எங்கடா உங்க அம்மா… மந்தைக்குப் போயிருக்காளா?” எனக் கேட்டார்.

“அம்மா செத்தது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று ரவி கேட்டான்.

“என்னது செத்துப்போயிட்டாளா… ஆஸ்பத்திரியில நல்லாத்தான இருந்தா?” என்று வீட்டு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டார். அதற்குப் பிறகு அவர் யாருடனும் பேசுவது இல்லை. அந்த இடத்தைவிட்டு எழுந்து வருவது இல்லை. வீட்டுக்குள்ளாக இருந்தால், யாருடன் பேசாமல் இருப்பார். தையல்கடைக்கு அழைத்து வந்து நான்கு பேருடன் பேசிப் பழகினால் சரியாகிவிடும் என்று ரவி நினைத்தான். தினமும் சாமியப்பனை தையல்கடைக்கு அழைத்து வந்தான். அவருடைய வயதுக்காரர்கள் என்ன பேசினாலும் பதில் பேச மாட்டார். எப்போதாவது யாரிடமாவது `சௌடம்மா இறந்துபோச்சு. உங்களுக்குத் தெரியுமா?’ என்று அழுத கண்களோடு கேட்பார். அதைப் பார்க்கும்போது ரவிக்கும் சங்கரனுக்கும் வேதனையாக இருக்கும்.

சின்னரேவூப்பட்டிக்காரர்கள் சாமியப்பனுக்கு காவல் இருந்தார்கள். சாமியப்பன் தெருவைவிட்டு அடுத்த தெருவுக்குப் போனாலும் கூட்டிக் கொண்டுவந்து தையல்கடையில் விடுவார்கள். அப்படியிருந்தும் திடீரென ஒருநாள் ராத்திரி இரண்டாவது தடவையாக ஆளைக் காணவில்லை. ரவி ஒருநாள் முழுக்கத் தேடிப் பார்த்துவிட்டு, தையல்கடையில் உட்கார்ந்திருந்தபோது பழனிச்சாமி வாத்தியார் சாமியப்பனை அழைத்துவந்தார்.

“எங்க சார் இருந்தார்?” என ரவி கேட்டான்.வாத்தியார், ஊர்க்காரர்கள் முன்பாக எதுவும் பேசவில்லை. கூட்டம் கலைந்து சென்றதும் வாத்தியார் ரவியிடம் தனியாக, “தேனி சந்தைக்குப் போயிட்டு வர்றப்போ பார்த்தேன். ஹோட்டல் வாசல்ல வர்றவங்க போறவங்ககிட்டே கையேந்திக்கிட்டு இருந்தார். எனக்குச் சங்கடமாப் போச்சு ரவி” என்றார். ரவியின் கண்கள் கசிந்தன. அதற்குப் பிறகுதான் அவரை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவைத்தான். வேளாவேளைக்கு சாப்பாடு கொடுத்தான். பாளையத்துக்கு வாரத்தில் ஒருநாள் டாக்டர் வருகிறார் என்றும், அவரிடம் சாமியப்பனைக் கூட்டிப்போய் வைத்தியம் செய்தால் சரியாகிவிடும் என்றும் வாத்தியார் சொன்னார். பாளையத்துக்கு சாமியப்பனை அழைத்துப்போனார்கள். தூக்கத்துக்கு மருந்து எழுதிக்கொடுத்தார் டாக்டர்.

தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் சரியாகிவிடும் என்று சொன்னார். மாத்திரைகள் சாப்பிடத் தொடங்கியதும் புலம்பல் அதிகமானது. நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து அவராகப் பேசிக்கொண்டிருப்பார். `தையல்கடையில உங்க அம்மா இருக்கா கூட்டிட்டுவாடா’ என ரவியிடம் சொல்வார். ஜன்னலைத் திறந்து `சௌடம்மா கடையிலே இருக்கா… கூட்டிட்டு வாங்க’ என்று தெருவில் போகிறவர்களிடம் சொல்வார். சாமியப்பனின் பேச்சு ரவிக்கும் ஊருக்கும் பழகிவிட்டது. ஊர்க்காரர்களுக்கு சாமியப்பன் `மென்டல்சாமி’ ஆனார்.

சாமியப்பனை குத்தாலத்தில் சேர்த்து விடுவதற்கு ரவியிடம் யோசனை சொன்னான் சங்கரன். குத்தாலத்துக்கு அனுப்பி வைத்துவிட்டால் ரவிக்குக் கல்யாணம் நடக்கும் என்று அவன் ஆசைப்பட்டான். அவர்கள் இருவரும் பாளையத்துக்கு வரும் டாக்டரிடம் யோசனை கேட்டார்கள். டாக்டரும் சீட்டு எழுதித் தருவதாகச் சொன்னார். ஆனால், கடைசி நேரத்தில் ரவிக்கு அப்பாவைக் குத்தாலத்துக்கு அனுப்புவதற்கு விருப்பம் இல்லை. சமைக்கவும் பாத்திரம் தேய்த்துப்போடவும் தண்ணீர் எடுக்கவும் துணி துவைக்கவும் வீட்டுவேலை செய்யவும் தையல்கடையில் சட்டை வெட்டித் தைப்பதுமாக இத்துப்போயிருந்தான். விரல் நகத்தில் அழுக்கு ஒட்டியிருந்தது. கன்னம் குழிவிழுந்து பாதி சீக்காளி மாதிரி ஆகியிருந்தான். இரண்டு வேளைகள் சாப்பாடு கவலையோடு வயிற்றுக்குள் விழுகிறது. பகல் எல்லாம் பசியோடும் கவலையோடும் உறக்கத்தோடும் இருக்கிறான் எனக் கவலைப்பட்டான் சங்கரன். ரவிக்கு 40 வயது முடிந்துவிட்டது.

“குத்தாலத்துக்கு அவரை அனுப்பிச்சுட்டா மட்டும் யாரு பொண்ணு தரப்போறா சங்கரு. விடுறா… சாகிற வரைக்கும் என்கூட அப்பா இருக்கட்டும்” எனச் சொன்னான். அதற்குப் பிறகு குத்தாலத்துக்கு அனுப்புவது சம்பந்தமாக சங்கரன் அவனிடம் எதுவும் பேசவில்லை. ரவிக்கு எப்படியாவது பெண் பார்த்து கல்யாணம் செய்துவைத்தால் அவனுக்கு நிம்மதியாக இருக்கும் என, சங்கரனும் அவனது மனைவியும் நினைத் தார்கள். ஊர்க்காரர்களிடமும் பெரியவர்களிடம் சொல்லி கோம்பைக்குப் போய் ரவியின் அத்தை விஜயாவிடம் பெண் கேட்கச் சொன்னார்கள். பெரியவர்களும் சங்கரனின் பேச்சைக் கேட்டு கோம்பைக்குப் போனார்கள்.

“மென்டலா ஒரு ஆளு இருக்கிற வீட்டிலே உங்க பொண்ணைக் கட்டிக்குடுப்பீங்களா?” என்று பெண் கேட்டுப்போன ஊர்க்காரர்களிடம் விஜயா கேட்டாள்.

“உங்க அண்ணன்தானே விஜயா. நீயே ஒதுக்கினா வேற யாரு பெண் தருவா? அவங் களுக்கு ஒரு வழியைச் சொல்லு” பஞ்சாயத்துக் காரர்கள் பேசினார்கள்.

“இதே மாதிரித்தானய்யா நானும் ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி, அவர் வீட்டு வாசல்ல நின்னு எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்கனு அழுதேன். நீங்க யாராவது என் பேச்சுக்கு மருவாதி தந்தீங்களா? என்னமோ பெருசா அன்னைக்குப் பேசினாரு எங்க அண்ணார். அவர் மூத்த பிள்ளை செல்வராசுக்கு, நான் பொண்ணு தர்றேன்னு சொன்னப்போ, வாத்தியார் வேலைக்குப் போறவனுக்கு வாத்தியார் வேலைக்குப் போற பொம்பளைதான் சரியா வரும்னு, என் மகளை வேண்டாம்னு சொன்னார். ஆமாய்யா என் மக படிக்காதவதான். காடுகரைக்கு வேலைக்குப் போறவதான். அவரு விட்டுக்குடுத்திருக்கக் கூடாதா? இன்னைக்கு யார் வந்து முன்னாடி நிக்கிறா? என் மக அந்த வீட்டில வாக்கப் பட்டிருந்தா நான் வந்திருப்பேன். வாத்தியாரு வேலைக்குப் போன அவர் புள்ளை, வேற சாதிக்காரியை இழுத்துட்டுப் போயிட்டான். எனக்கும் இல்லை. உனக்கும் இல்லை. யாருக்கு நட்டம்?” – விஜயா கோபமாகப் பேசினாள். அவள் பேசியது நியாயமாக இருந்தது. பஞ்சாயத்துக் காரர்கள் பதில் பேசவில்லை. ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். சங்கரன் அதன் பிறகு ரவிக்குப் பெண் பார்ப்பதை விட்டுவிட்டான்.

மாரியப்பன் எருமைகளை ஓட்டிக்கொண்டு ரோட்டைக் கடந்துசெல்வதை சங்கரன் பார்த்தான். முழுதாக விடிந்துவிட்டது. குருவிகள் படைபடையாக `குவுக்… கூவுக்… டிவிக்…’ என்ற சத்தத்தோடு சோளத்தை ஆய்ந்தன. பேருந்துகள் தொடர்ந்து ரோட்டில் சென்றன. தார் ரோட்டில் பேருந்து சத்தத்துடன் கடந்ததும் குருவிகள் கும்பலாக மேலெழுந்து பறந்தன. பேருந்து போனதும் திரும்பவும் ரோட்டில் மேய்வதற்கு வந்து உட்கார்ந்து சோளத்தைக் கொத்தின.

குளத்துக்கரையில் இருந்த குறவர் வீட்டுச் சிறுவர்கள் ஐந்து ஆறு பேர் கவட்டையும் சாக்குப்பையுமாக வந்தார்கள். சங்கரன் அவர்களிடம், “டேய்… தையக்கடைக்காரரைக் கரட்டுப் பக்கமா பார்த்தீங்களாடா?” எனக் கேட்டான். சிறுவன் ஒருவன் சாக்குப்பையை தோள்மாற்றிப் போட்டபடி, “இல்லண்ணே…” என்றான். மற்றொருவன், “அவரு செல்போன் நம்பர் இருந்தா போட்டுப்பாருங்கண்ணே… ஏன் தேடுறீங்க?” எனச் சொன்னான். என்ன கேட்கிறோம் என்ன பதில் சொல்கிறான் என சங்கரனுக்கு அவன் மேல் கோபமாக வந்தது. சிறுவர்கள் அவனைக் கடந்துசென்றார்கள்.

ராத்திரியில் உறக்கம் இல்லாததும் சோளத் தட்டைகளின் தூசி துரும்புகள் கண்களில் விழுந்ததும் சங்கரனுக்கு கண்களில் எரிச்சலை உண்டாக்கியது. தூரத்தில் சங்கரனின் அப்பா சுருளி நடந்துவருவது தெரிந்தது. சங்கரன் ரோட்டுக்கு இரண்டு பக்கங்களும் சிதறிக்கிடந்த சோளத்தட்டைகளைக் கூட்டிக் குமித்தான். காய்ந்த சோளத்தட்டைகளில் இருந்து உதிர்ந்த சோளம் நெடுகக் கிடந்தது. ரோட்டில் கிடந்த சோளத்தைக் கையில் எடுத்துக் கசக்கிப்பார்த்தார் சுருளி.

பொட்டல்களத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆட்கள் எழுந்துகொண்ட அரவம் கேட்டது. மூட்டைகளைத் தூக்கிப்போவதும் பிரிந்த மூட்டையில் இருந்து சோளத்தட்டைகளை எடுத்து பொட்டலில் காயப்போடுவதுமாக இருந்தனர். சங்கரன் வீட்டுக்கு நடந்து வரும்போது மேற்கு ரோட்டுப் பக்கம் வண்டிக்காரர் வீரு இரட்டை மாட்டுவண்டியை ஓட்டிவந்தார். அதிகாலையில் வண்டிகட்டி, டவுனுக்குப் போய் உர மூட்டைகளை வாங்கிக்கொண்டு ஊருக்கு வருகிறார். வண்டியில் மென்டல்சாமி உர மூடைகளின் மேல் படுத்திருந்ததை சங்கரன் பார்த்தான். மாட்டுவண்டி ஊருக்குள் போகாமல் தெற்குப் பக்கமாக தார் ரோட்டைப் பார்த்து வந்தது.

“வண்டியை நிறுத்துங்க மாமா. தையக்காரரை கீழ இறக்கிவிடுங்க. அவரை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?” எனச் சத்தம் கொடுத்தான். வீரு `ஹே…ஹே…’ எனக் குரல்கொடுத்து மாட்டுக் கயிற்றை இழுத்துப் பிடித்து, மாட்டை நிறுத்தினார். வண்டி அவனைக் கடந்து இரண்டு அடி முன்னால் போய் நின்றது. மென்டல்சாமி வானத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டபடி படுத்திருந்தார்.
“யோவ்… சாமியப்பா கீழே இறங்கு. வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுத் தூங்கு” என்று வீரு சத்தம் கொடுத்தார். சாமியப்பன் காதுகேளாதவர்போல வானத்தைப் பார்த்து யாரோடோ பேசுவது மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

“நீங்க ஏன் மாமா அவரைக் கூட்டிட்டுப் போனீங்க?”

“விடியக்காலையிலே உர மூட்டை தூக்குறதுக்கு வண்டி கட்டிட்டு இருந்தப்போ ஏறி உட்காந்துட்டு இறங்க மாட்டேன்னு சொல்லிட்டாருடா. விபூதியை அள்ளிக்குடுத்து, `வழியிலே எங்கேயும் வண்டியைவிட்டு கீழே இறங்கக் கூடாது’னு சௌடம்மா மேலே சத்தியம் வாங்கிக்கிட்டுல கூட்டிட்டுப் போய்வந்திருக்கேன். அவரை வெச்சுக்கிட்டு நான் பட்ட அவஸ்தை எனக்குத்தான் தெரியும்” எனச் சொன்னார்.

சாமியப்பன் விபூதியை நெற்றியிலும் கையிலும் காலிலும் தடவியிருந்தார். மாட்டுவண்டியில் இருந்து கீழே இறங்கி, “ஈஸ்வரா… ஈஸ்வரா…” என வானத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

“டேய் தம்பி… சௌடம்மா ஈஸ்வரங்கிட்ட போயிட்டா. மேல பாரு. இந்தப் பக்கமாப் பாரு” என்றார்.

சங்கரன் பார்த்த திசையில் நின்றிருந்த வேப்பமரத்தில் இருந்து குருவிகள் கும்பலாகப் பறப்பது தெரிந்தது.

“சரி சரி… வீட்டுக்கு வாங்க போவோம்” என சங்கரன் அவர் கையைப் பிடித்து நடந்தான். அவர்கள் இருவரும் ஊருக்குள் போகும் பாதையில் நடந்தார்கள். வழியில் சாமியப்பன் அவனிடம், “இட்லியும் வடையும் வேணும்” என்றார்.

“சரி… வாங்கித்தர்றேன் வாங்க” என்றான் சங்கரன்.

சாமியப்பனும் சங்கரனும் வடக்குத் தெருவுக்குப் போனார்கள். வடக்குத் தெருவில் இரண்டு மூன்று டீக்கடைகள் இருக்கின்றன. சின்ன ஹோட்டல் வைத்து பக்கத்து ஊர்க்காரர்கள் நடத்துகிறார்கள். விடிகாலையில் இருந்து சின்னரேவூப்பட்டியிலும் சூடாக இட்லி கிடைக்கிறது. டீக்கடைகளில் சூடாக வடையும் மிக்ஸரும் போட்டு தட்டில் வைத்துவிடுகிறார்கள்.

சங்கரன் ஹோட்டலில் உட்காரவைத்து இட்லியும் வடையும் வாங்கித்தந்தான். ரவி டீ குடிக்க கடைக்கு வருகிற நேரம்தான். டீக்கடைக்காரரிடம், “அண்ணே ரவி வந்தானா?” எனக் கேட்டான். கடைக்காரர் `இல்லை’ என்று சொன்னார். ரவி வந்ததும் வீட்டுக்குப் போய் தூங்கலாம் என நினைத்தான். அவனுக்குக் கண்கள் காந்தலாகயிருந்தது. தன்னை அறியாமல் அசந்து கண்களை மூடினான்.

இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த சாமியப்பன் “டி.வி பெட்டி இல்லையா… எம்.ஜி.ஆரு பாட்டா போடுங்கப்பா. அப்பதான் கடையில யேவாரம் கூடும். உம்முனு தின்னா எப்படிடா?” என்று கடைக்காரனைத் திட்டினார். வடக்குத் தெருக்காரர் ஒருவரும் “டி.வி போடுங்கப்பா’’ எனக் குரல்கொடுத்தார்.

சாமியப்பன் இட்லி சாப்பிட்டுவிட்டு இலையை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டார். கையைக் கழுவினார். பிறகு அவர்கள் இருவரும் டீ குடித்தார்கள். சங்கரன் கடைக்காரரிடம் பணத்தைத் தந்துவிட்டு, கடையில் இருந்து வெளியே வந்தான். ரவி இன்னமும் டீக்கடைக்கு வராமல் இருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாமியப்பனைத் தேடி அவன் வேறு எங்கேயாவது சென்றிருப்பான் என சங்கரன் நினைத்தான். சாமியப்பனை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றான்.

“ரவியை விட்டுட்டு நீ மட்டும் தனியா வந்திருக்கே?” என சாமியப்பன் கேட்டார். அவர் அப்படிக் கேட்டது சங்கரனுக்கு என்னவோபோல் இருந்தது. அவரது முகத்தைப் பார்த்தான்.

இமயமலை பஸ் டிக்கெட்2

“ரவி வீட்ல இருக்கானா?” எனத் திரும்பவும் கேட்டார் சாமியப்பன். அவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சங்கரன் மெயின்ரோட்டுக்குப் போகும் பாதையில் சாமியப்பனை அழைத்துச் சென்றான். தன்னிடம் சொல்லாமல் எங்கும் போகாதவன், இப்போது எங்கு சென்றிருக்கிறான் என்று சங்கரனுக்கு பயம் வந்தது. ரவியின் வீடு பூட்டியிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர், “இவரைத் தேடி ரவி காலையிலே எந்திரிச்சுப் போனான். இவரு எங்க இருந்தார்?” எனச் சொல்லி சாவியைத் தந்தார். சங்கரன் கதவைத் திறந்துவிட்டதும் சாமியப்பன் வீட்டுக்குள் சென்றார். வழக்கமாக அவர் உட்கார்ந்துகொள்ளும் இடத்தில் உட்கார்ந்தார். பிறகு, ஜன்னலை வேடிக்கை பார்த்தார்.

சங்கரனுக்கு அவரைப் பார்க்கும்போது கோபமாகவும் அதேநேரம் பாவமாகவும் இருந்தது. மனுஷனுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவரைவைத்து காலம் முழுவதும் ரவி என்னென்ன கஷ்டப்படப்போகிறானோ என்று நினைத்தான். சாமியப்பனைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு எங்கும் போக முடியாது. ரவி வரும் வரை காத்திருக்க வேண்டும். சங்கரன் கதவைப் பூட்டிவிட்டு தூங்கலாம் எனப் படுத்தான்.

குளத்தங்கரை குறவர் வீட்டுப்பிள்ளைகள் ஊருக்குள் அலைகிற சத்தம் தெரு நிறைந்து கேட்டது. அவர்கள் `ஹோ…’ எனக் குரல் எழுப்புவதும் கேட்டது. சங்கரன் கால்களை நீட்டிப் படுத்தான். அவன் செல்போன் மணியடித்தது. புதிய எண். யார் என்று தெரியவில்லை. எடுத்துப் பேசினான்.

“ஹலோ…”

“டேய் சங்கர்… நான்தான்டா செல்வராஜ் பேசுறேன்.”

“மாமா நல்லாயிருக்கீங்களா?”

“என்னாடா நினைச்சிட்டு இருக்கீங்க… நீங்க ரெண்டு பேரும். அந்த ஆளை என் தலையிலே கட்டிவிட்டு அவன் எங்கடா போகப்போறான். ஒழுக்கமா இருக்கச் சொல்லு அவனை. அந்த ஆளை குத்தலாத்துல கொண்டுபோய்ச் சேருங்க… இல்லைன்னா கொரட்டூர்ல போய்ச் சேருங்க. எனக்கென்ன வந்திருக்கு. என்கிட்டே எதுக்குடா அவன் போன் போட்டுப் பேசுறான்? இனிமே போன் போட்டான்னா நடக்கிறது வேற. சொல்லிவை” என விடாமல், ரவியின் அண்ணன் பேசியதைக் கேட்டுப் பயந்துபோனான்.

“ரவி என்ன சொன்னான் மாமா?” எனக் கேட்டான்.

“அவன் சொன்னது உனக்குத் தெரியாதா?

நீ சொல்லிக்குடுக்காம அவன் எப்படிடா என்கிட்ட கேட்பான். கொஞ்ச நாளைக்கு எங்க அப்பனை என் வீட்டுல வெச்சுக்கச் சொல்றான். எதுக்குடா நான் வெச்சுக்கணும்? இன்னொரு தடவை போன் பேசினீங்க… நடக்கிறதே வேற. ஆமா சொல்லிட்டேன்…” எனக் கோபமாகக் கத்தினான் செல்வராஜ்.

“மாமா… அவனை காலையில் இருந்து காணோம். வந்துருவான்… வந்ததும் சொல்றேன்” என்றான்.

“நேத்து ராத்திரி போன் போட்டுப் பேசினான். இன்னைக்குக் காலங்காத்தாலே போன் போட்டு அழுறான். அவனும் எங்க அப்பனைப்போல மென்டலாகிட்டானா? சொல்லிவை. போன் செய்யுற வேலையெல்லாம் இனிமேற்பட்டு இருக்கக் கூடாது” என்று செல்வராஜ் போனை கட் செய்தான். சங்கரனுக்கு உறக்கம் கலைந்தது. செல்வராஜுக்கு எதற்காக ரவி போன் செய்தான்? ரவியின் செல்லுக்குத் தொடர்புகொண்டான். `சுவிட்ச்டு ஆஃப்’ என்று வந்தது. எழுந்து கதவைத் திறந்து வாசலுக்கு வந்தான்.

வீரு மாமா… வயக்காட்டில் உர மூடையை இறக்கிப்போட்டுவிட்டுத் திரும்பிவருவது தெரிந்தது. ரவியின் வீட்டுக்கு முன்பாக வண்டியை நிறுத்தியவர், “அய்யா குடிக்க கொஞ்சம் தண்ணி தர்றியா?” என்றார். சங்கரன் வீட்டுக்குள் சென்று, தண்ணீர் மோந்து தந்தான். வீரு வாங்கிக் குடித்தார்.

“மாமா… ரவியை அந்தப் பக்கமா பார்த்தீங்களா?”

“வயக்காட்டுப் பக்கம் அவன் எதுக்குடா வர்றான்… தையக்கடைக்காரனுக்கு அங்க என்ன ஜோலி?” என சொம்பை அவனிடம் தந்துவிட்டு மாட்டைப் பத்தினார். ரவி எங்கு சென்றிருப்பான் என அவனால் யூகிக்க முடியவில்லை. இன்னொரு முறை அவனுக்கு போன் போட்டான். `சுவிட்ச்டு ஆஃப்’.

தோட்டத்தில் பூ எடுத்து முடித்துத் திரும்பிய பெண்கள், தலைச்சுமையாக கூடையைத் தூக்கி வந்தார்கள். சங்கரன் தனக்குத் தெரிந்த பெண்ணிடம், “ரவியைத் தோட்டத்துப் பக்கமாக பார்த்தியா?” எனக் கேட்டான். அவள் பார்க்கவில்லை எனச் சொன்னாள்.

பக்கத்து வீட்டுக்காரர் ரவியைத் தேடுவதைப் பார்த்து வந்தார். “தையக்கடைக்கு ஏதாவது வாங்கணும்னா, மதியச் சாப்பாட்டு நேரத்துக்குத் தானே போடிக்குப் போவான்? ஜோலியா வேற எங்கேயாச்சும் போயிருப்பான்” என்று சங்கரனிடம் சொன்னார். தெருவில் பேச்சுக்குரல் கேட்டு சாமியப்பன் வாசலுக்கு வந்தார். சங்கரனைப் பார்த்து, “ரவி வந்துட்டானா… ரவி வந்துட்டானா?” என்று ஆசையாகக் கேட்டார். அவர் கண்களில் இருந்து நீர் வடிந்திருப்பதை அப்போது சங்கரன் பார்த்தான். சங்கரனிடம், “போன் போட்டுக் குடுடா நான் பேசுறேன். நான் கூப்பிட்டா உடனே வந்துருவான்” என்றார். சங்கரன் பதற்றத்துடன் திரும்பவும் போன் செய்தான். அப்போதும் போன் சுவிட்ச்டு ஆஃப்பில்தான் இருந்தது.

பழனிச்சாமி வாத்தியார் தெருவுக்குள் வேக மாக வருவதை சங்கரன் பார்த்தான். வாத்தியார் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தவனுக்கு அச்சம் உண்டானது. அவர் நேராக அவன் முன் வந்து நின்றார்.

“பம்புசெட் கிணத்துக்குள்ள ரவி உட்கார்ந் துட்டு வெளியே வர மாட்டேங்கிறான். இழுத்துப் பார்த்துட்டேன். அடிச்சிப் பார்த்துட்டேன். வரவே மாட்டேங்கிறான்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு நடக்க எட்டு வைத்தான் சங்கரன். அந்நேரம் சங்கரனின் தலையில் சொத்தென்று விழுந்த குருவி தரையில் விழுந்து துள்ளத் துடித்தது. சங்கரன் தனது காலடியில் கிடந்த குருவியைப் பார்த்தான். குளத்தங்கரைக் குறவர் வீட்டுச்சிறுவர்கள் அந்தக் குருவியைத் தூக்கிச் செல்ல வருவதை சங்கரன் பார்த்தான்.

சாமியப்பன் ரோட்டில் இறங்கி நின்று யாரிடமோ சொல்வதுபோல, “இமயமலைக்குப் போற பஸ் டிக்கெட்டை அவனுக்குக் குடுத்தது தப்பாப்போச்சு. அவனும் இமயமலைக்குப் போனாலும் போயிருப்பான்” என்றார். பிறகு வீட்டுக்குள் சென்று வழக்கம்போல தான் அமர்ந்து கொள்ளும் இடத்துக்குச் சென்று அமர்ந்தார். சங்கரன் கிணற்றை நோக்கி வேகமாக ஓடினான். கல்லடிபட்ட குருவி ஒன்று கீச்சுக்குரலில் கதறுவது தெருவில் தொடர்ந்து கேட்டது!

– ஏப்ரல் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *