(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு ஊர்ல, புருசனும் – பொண்டாட்டியும் இருந்தாங்க. புள்ளயே இல்ல. புள்ள இல்லாதனால, நல்ல புருச இருக்கயில, கள்ளப் புருசன வச்சுக்கிட்டா. புருச இல்லாதபோது, கள்ளப் புருசன வரவச்சு, அவனோட கொஞ்சிக் குலாவுறது, இவளுக்கு வாடிக்கயாப் போச்சு.
ஒருநா வெள்ளணா, புருச வயக்காட்டுக்கு உழுகப் போயிட்டா. பொண்டாட்டிய கஞ்சி கொண்டுட்டு வாடிண்ட்டு, ஏரப்பூட்டிக்கிட்டுப் போயிட்டர்.
புருசனுக்கு கஞ்சி கொண்டு போகாம, கள்ளப் புருசன வரவச்சு பகலெல்லாம் அவங்கூடப் படுத்துக் கெடந்திருக்கா. புருச பகலெல்லாம் உழுதிட்டு, பொறுமயா, பொழுது சாய வீட்டுக்கு வர்றா.
இவ ஒடம்புக்கு முடியலண்ட்டு பாசாங்கு போட்டுப் படுத்துக் கெடக்கா. ஏண்டி! வயக்காட்டுக்கு கஞ்சி கொண்டுட்டு வரலண்டு, புருச கேக்றா. ஒடம்பு சரியில்ல. காச்ச மண்டையிடிண்டு புளுகுறா சிறுக்கி.
ஒடம்பப் போயித் தொட்டுப் பாத்திட்டு, ஒண்ணுமில்ல. இவ ஏக்கிறாண்டு, பொண்டாட்டி மேல சந்தேகம் வந்திருச்சு. இத, பொண்டாட்டிகிட்டக் காட்டிக்கிராம, இதக் கண்டு புடிக்கணும்ண்டு நெனக்கிறா.
மறுநா காலைல உழுகப் போகயில, வயல்ல நெறயா புல்லு கெடக்குது. நா உழுக – உழுக, நிய்யி பெறக்கணும் எங்கூட வயலுக்கு வாண்டு கூப்புட்டா.
சரிண்டு சொல்லி, புருச பின்னால போனா. பாதி வழில போகயில, கள்ளப் புருசனோட நெனப்பு வந்திருச்சு. அவந்தர நாளக்கி வரேண்டு சொல்லியிருக்கான்ல. இவ போக முடியல. எங்க? வப்பாட்டங்கிட்ட. ஒடனே! ஒரு தந்திரம் பண்ணுனா. புருசங்கிட்ட இருந்து தப்பிக்கணுமில்ல.
ஐயோ! வகுறு வலி – வகுறு வலிண்டு கத்றா. என்னா செய்றதுண்ட்டு, பொண்டாட்டிய வீட்டுக்குப் போகச் சொல்லி ட்டு, உழுகப் போறது மாதிரி போயி, வயல்ல மாட்டக் கட்டிவச்சிட்டு, இவளுக்குப் பின்னாலேயே வீட்டுக்கு வந்திட்டார்.
கதவா அடச்சுக் கெடக்குது. கதவாலத் தட்டுறா. இதுக்குள்ள இவ, என்னா செஞ்சாண்டா, கள்ளப் புருசன குலுமைக்குள்ள ஒக்கார வச்சிட்டு, வெளிய வந்து கதவாலத் தொறக்குறா. பொண்டாட்டி மேல சந்தேகம் இருந்ததுனால, வீட்டப் பையா நோட்டம்விட்டா.
அப்ப, குலுமைக்குள்ள இருக்கிற கள்ளப் புருச, காத்துப் போகமாட்டாம அங்கிட்டும் இங்கிட்டும் நெளியுறா. அங்கிட்டும் இங்கிட்டும் நெளியயில குலும் ஆடுது. அதயும் பாத்துக்கிட்டா.
இப்டியா சங்கதி, இரு! இரு! ஒன்னயப் பேசிக்கிறேண்ட்டு எனக்கு குதுகுதண்டு வருதுடி. கொஞ்சந் தண்ணி காய வையிண்டு சொல்றர.
சொல்லவும், விழுந்தடிச்சுக் காய வக்கிறா. இங்கதா கள்ளப் புருசனக் குலுமைக்குள்ள வச்சிருக்காளே. அந்தப் பயம் நெஞ்சுக்குள்ள பதக் – பதக்ண்டு அடிக்குதில்ல.
தண்ணி நல்லாக் காயவும், அந்தத் தண்ணியத் தூக்கி குலுமைக்குள்ள ஊத்திட்டு, அவளயுந் தூக்கிச் சுடு தண்ணிக்குள்ள போட்டுக் கொண்டுபிட்டு, தன்னத் தானே குத்திக்கிட்டு செத்துப் போனானாம். பொண்டாட்டி, இப்டி நடந்தா, புருச என்னா செய்வா பாவம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.