இப்படியும் கப்பங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 9,408 
 
 

மூர்த்தி அவசரமாக வேலைக்குப் புறப்படுகிறான். அவனுக்குத் தேவையான மதியச் சாப்பாட்டை அவன் மனைவி லலிதா கட்டிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குப் பிடித்த சாப்பாடுகளைச் செய்து கொடுப்பதில் அவள் முக்கிய கவனம் எடுக்கிறாள்.

அவர்களின் குழந்தை அகிலா, தனது தாய் தகப்பனின் ஆரவாரத்தால் குழம்பாமல் அயர்ந்த நித்திரையிலிருக்கிறாள். குழந்தை அகிலாவுக்கு ஐந்து வயதாகிறது. உலகத்தைச் சரியாகப் புரியாத வயது.

‘லலிதா ‘ கணவனின் குரலில் தெரிந்த பதட்டம் லலிதாவைச் சிலிர்க்கப் பண்ணுகிறது. அவன் சரியான நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால், அவன் பதட்டமடைவான். ஆனால் இன்று அவன் குரலில் ஒலிக்கும் பதட்டத்துக்கு அது மட்டும்தான் காரணமில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

நேரத்தையும் காலத்தையும் சரியாகப் பாவிக்கத் தெரியாத பல மனிதர்களில் அவள் கணவன் மூர்த்தி வித்தியாசமானவன். ‘நேற்று நடந்தது சரித்திரம்- எப்படியொ எழதப்படப்போகிறது.;,இன்று நடப்பது எங்களால் முடியுமானவரை கட்டுப்படுத்தக்கூடியது, நாளைக்கு நடப்பது இன்றைய நடப்புகளின் தெடர்புகள்’என்றெல்லாம் சொல்வான்.

‘சரியான விடயங்களைச் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்’ என்பதில் மிகவம் கண்டிப்பானவன்.

லலிதாவை அவனைத் திருமணம் செய்தபோது அவனைப் பற்றி மற்றவர்கள் சொன்ன கருத்து ‘மூர்த்தி ஒரு நல்ல பையன், உண்மைக்காகப் பாடுபடுபவன்’ என்பதாகும்.அவன் இன்று ஒரு நல்ல கணவனாக அவளை அன்புடன் பராமரிக்கிறான்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளால் கூடுபிரிந்த பறவைகளானவர்களில் அவர்களும் அடங்குவர். பலர் தங்கள் பிறந்த நாட்டை விட்டோடினாலும், அதவாவது.ஒரு சிலர். ‘ இறப்பு என்பது திவிர்க்க முடியாதது. நான் பிறந்த மண்ணில் இறப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்’ என்று சொல்லி விட்டு நாட்டை விட்டு நகராமலிருந்தார்கள் சிலர்;. ‘இந்தச் சிங்களவனுக்குப் பயந்த கோழை மாதிரி ஊரைவிட்டு ஓடுவதா என்று இறுமாப்புடன் இருந்தவர் சிலர்;, ஏஜென்சிக்காரனுக்குப் பணம் கொடுத்து ஓட முடியாதவர்கள் பலர், தங்களுக்குள்ள ஏகப் பட்ட சொத்துக்களை விட்டு ஓடமுடியாதவர்கள் சிலர், நோய் நொடியால் ஒடமுடியாதவர் சிலர். கணவனையிழந்தால் குடும்பத் தலைமையை ஏற்றுக் கொண்டு வறுமையிற் போராடி வாழ்க்கையை நகர்த்தபவர்கள் ஒரு சிலர். என்ன செய்வது என்று தெரியாது தவிக்கும் இளம் விதவைகள் சிலர், இப்படியெல்லாம் பரந்து பட்ட சமுதாயத்திலிருநது உயிர் தப்பி விமானம் ஏறி அந்நிய மண்ணை மிதித்தவர்களில் மூர்த்தி குடும்பம் ஒருசிலர்.

அந்த முயற்சியில் அவன் பட்ட பாடும் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களும் சொல்லிலடங்காதவை.

‘லலிதா’மூர்த்தி இன்னொருதரம் தனது மனைவியை அழைத்தான். அவசர வேலையாகவிருந்த லலிதா தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களின் குழப்பம் அவளைத் தர்ம சங்கடப் படுத்துகின்றன. அவளைத் துன்பப் படுத்தும் விடயங்களை முடியுமானவரை தவிர்த்துக்கொள்பவன் அவன்.

அவனை முற்றுமுழுதும் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை பறக்கிறதே என்று எத்தனையோ தடவைகள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறாள் லலிதா.

‘லலிதா’ மூர்த்தியின் குரல் இப்போது தாழ்ந்து தொனிக்கிறது.

அவன் மனைவியின் தலையை ஆதரவுடன்,காதலுடன்,கனிவுடன் தடவி விடுகிறான். அவன் ஏதோ ஒரு முக்கிய விடயத்தைச் சொல்லப்போகிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

என்ன சொல்லப் போகிறான் என்றும் அவளுக்குத் தெரியும்.

‘லலிதா குஞ்சு..’ அவன் அவளுடன் மிக மிக நெருக்கமாக இணையும் நேரங்களில் அவனின் குரலிற் தேனொழுக அவளை ஆசையுடன்,’குஞ்சு அல்லது ‘கண்ணே’ என்று கூப்பிடுவான்.

அவளுக்கு அழுகை வந்தது. அடக்கிக் கொண்டாள்.

அவனின் அன்பான-பண்பான-சுயநலமற்ற இதயத்துக்குள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு இந்தக் கொடிய உலகிலிருந்து தப்பிக்கவேண்டும்போல் அவள் நினைத்தாள்.

அவனுக்குத் தயாரித்த சாப்பாட்டுப் பார்ஸலை மேசையில் வைத்து விட்டு அவன் மார்பில் முகம் பதித்தாள்.அவன் வேலைக்குப்புறப்படும்போது அவள் அழ விரும்பவில்லை.

‘லலிதா..இரவு நடந்த விடயங்களைத் தயவு செய்து மன்னித்து விடு..தயவு செய்து மறந்து விடப்பார்..’ அவன் குரலில் இருந்த நெகிழ்ச்சி அவளை வாய்விட்டு விம்மப் பண்ணியது.

‘எங்களக்கு ஏன் இந்தச் சோதனை..?’ அவள் வார்த்தைகள் அவளின் விம்மலில் தோய்ந்தொலித்தது.

இலங்கைத் தமிழர்கள் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வியது.

அவனாற் பதில் சொல்ல முடியவில்லை.

‘மனிதர்கள் பலர் மிருகமாக நடக்கினம்..’அவளின் கண்ணீர் அவனின் சேர்ட்டை நனைத்து அவன் மார்புத் தோலைத் தொட்டது.அவள் விம்மல் அவன் இதயத்தைக் குடைந்தது.

‘மிருகங்கள்தான் மனித முக மூடிபோட்டுக்கொண்டு வலிமையற்றவர்களை வதைக்கிறார்கள’அவன் மெல்லமாகச் சொன்னான்.

அவன் வேலைக்குப் போகவேண்டும்.

வெளி வீதியில் கார்களின் ஒலிகள். மக்களின் நடமாட்டங்கள் பெரிதாகக் கேட்கத் தொடங்கின. இனி பின்னேரம் ஏழுமணி வரைக்கும் தெருவெல்லாம் திருக்கோலம் காணும்.

‘உங்களுக்கு வேலைக்கு நேரமாகுது.’ அவள் முணுமுணுத்தாள்.

‘ அந்த மனிதமற்றவன் சொன்ன அருவருப்பான வார்த்தைகளை மறந்து விடு லலிதா.’ மனைவியிடம் அன்புடன் சொன்னான் மூர்த்தி..

‘ நெருப்புச் சுட்டால் தோல்தான் கருகும்..அந்த நீசனின் வார்த்தைகளால் நெஞ்சு எரிகிறதே’ தன் துயரை மறைக்கத் தன் உதடுகளைக் கடித்துக்; கொண்டாள் லலிதா.

‘லலிதா நிலவைப் பார்த்து நாய் குலைத்தால் நிலவென்ன தேய்ந்து விடுமா?’அவளுக்கு ஆறுதலாக் அவன் ஏதோ வாயில் வந்ததைச் சொன்னான்.

அவன் வேலைக்குப் போய்விட்டான்.

அழும் குழந்தையைத் தேற்றுவதுபோல் அவன் அவளுக்குப் பல ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி விட்டுப் போய் விட்டான்.

அவன் சொல்லி விட்டுப் போன ஆறுதல் வார்த்தைகளைவிடத், தன்னைத் தன் வீட்டைத் தவிர எங்கும் போகாமல், சிறையில் வைக்கப் பண்ணியவனில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

‘வெளியில் எங்கேயும் போகாதே.. குழந்தையைப் பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் பாடசாலைக்கு அனுப்பிவிடு…நான் பக்கத்து வீட்டு மிஸஸ் யோசேப்புக்கு உனக்குச் சுகமில்லை என்று சொல்லியிருக்கிறேன்

மூர்த்தி லலிதாவுக்குச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். அவளுக்குத் தன் வீட்டில் இரவு நடந்த சம்பவங்கள் உண்மையானவையா என்று நம்ப முடியாததாகவிருக்கிறது.

கருணாகரன் என்பவன் ஒருகாலத்தில் மூர்த்தியின் நண்பர்கள் கூட்டத்தில்ஒருத்தன். சின்ன வயதில் படித்த காலத்தில் ஒரு கூட்டமாகத் திரிந்த தொடர்பு நீடித்தது.கருணாகரனுக்குப் படிப்பில் பெரிய அக்கறையில்லை. இலங்கைப் போர் பலரின் வாழக்கைகளைத் தலைகீழாக்கிய கால கட்டத்தில் கருணாகரன் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பிய ஆட்களைக் களவாக வெளியே அனுப்பும் ஏஜென்சி மூலம் கோடிஸ்வரனாகி விட்டான். பண்பும் படிப்பும் நிறைந்த குடும்பத்திலிருந்து வந்து மூர்த்தி தன் குடும்பத்தை இலங்கையிலிருந்து வெளியே எடுக்கக் கருணாகரனின் உதவியை நாடினான்.அத்துடன் அவனிடம் வேறு சில கடன்களும் வாங்கி விட்டான்.

இன்று கருணாகரன் பணத்தின் திமிரால் உலகையே விலைக்கு வாங்கப் பார்க்கிறான். அவன் இரவு கேட்ட கேள்வியை நினைத்தால் ஆத்திரத்தில் நெஞ்சே பிழந்து விடும் போலிருக்கிறது.

இலங்கையில் தொடர்ந்து நடக்கும் போரால் நடக்கும் பல்விதமான கொடுமைகளைக் கண்டு மரத்து விட்டதா அவனது மனச்சாட்சி?

பெருவெள்ளத்தில் அபடிட்டு வெளியில் ஓடி வந்த உயிரினங்களில்,அனாதவான மக்கள்,மிருகங்கள், கொடிய விஷப்பாம்புகள் எனப் பல்வகை உயிரினங்கள்; அடங்கும். சமூக மாற்றங்களின் கொடிய சூழ்நிலையைத் தங்களுக்கு இலாபமாக மாற்றிக் கொண்டவர்கள், எந்த நாட்டுச் சரித்திங்களிலும் ஏராளமாகவிருக்கிறார்கள்.இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையால் வாடியவர் பலர். வளம் சேர்த்துக் கொண்டவர்களும் பலர். அதில் ஒருத்தன் கருணாகரன் என்ற கொடிய மிருகம்.

போருக்குப் பயந்தோடும் மக்களை வைத்துக் கோடி இலாபம் சேர்த்தவர்களில் அவனும் ஒருத்தன். சிங்கள, இந்திய இராணுவக்கொடுமைகள், தமிழ்க் குழுக்களுக்குள் நடந்த பயங்கரக் கொலைகள் என்பன, தமிழினத்தின் மனச்சாட்சியை அழித்து விட்டதா, உயிர்தப்ப,தங்கள் பெண்மையைக் காத்துக்கொள்ள நாட்டைவிட்டோடும் பெண்களிடம் அவர்களின் பெண்மையைப் பணயமாகக்கேட்ட தமிழ் ஏஜென்சிக் காரர்களை லலிதா கேள்விப் பட்டிருக்கிறாள்.ஆனால் அவர்களில் ஒருத்தனாகக் கருணாகரனும் இருப்பான் என்ற அவள் எதிர்பார்க்கவில்லை.

இரவு கருணாகரன் ,மூர்த்தியின் வீட்டுக்கு வந்து கேட்ட கேள்வியை நினைத்துப் பார்க்கிறாள்.

இவன் போன்ற ஆண்கள் தங்கை, தமக்கையுடன் பிறக்கவில்லையா? அம்மாவின் பரிசுத்தமான அன்பையுணரவில்லையா? ஆச்சியின் அன்பான கதைகளில் ஒழுக்கத்தை, மனிதத்தை, நீதியைத் தெரிந்து கொள்ளவில்லையா? மருமகள் பெண்களிடம் மரியாதை கொடுத்துப் பழகவில்லையா?

தன் கடனைத் திருப்பித்தர முடியாவிட்டால் ஒரு கணவனிடம் அவனின் மனைவியின் கற்பைக் கப்பமாக்கேட்கும் கயமை எப்போது தமிழக்கலாச்சாரத்தில் காலடிவைத்தது?

‘என்ன துணிவாக அந்தக்கேடு கெட்ட கருணாகரன் பேசினான்? தன் குடும்ப கௌரவத்தைத் தன் உயிரையே கொடுக்கத் தயங்காத தமிழப் பெண்ணிடம் அவள் புனித பெண்மையைக் கப்பமாகக் கேட்கிறானே?

‘அம்மா’ குழந்தை அகிலாவின் குரல், எங்கேயொ சிந்தனையயில் ஆழ்ந்திருந்த லலிதாவை சுய உணர்வுக்கு இழுத்து வருகிறது.

கருணாகரன் வந்து போன நடந்த சில நாட்கள் லலிதா வெளியில் போகவில்லை.கருணாகரன் போன்ற கயவர்கள் தனியாக வெளியில் போகும் பெண்களுக்கு என்ன கொடுமைகள் செய்வார்களோ என்ற பயம் அவளை வாட்டி எடுக்கிறது.

தன் மனைவி ஒரு சிறைப் பறவையாகக் கருணாகரனுக்குப் பயந்த வீட்டோடு அடைந்து கிடப்பது மூர்த்திக்குக் கோபம் வந்தாலும், ‘ஏன் நான் அந்த நாய்க்குப் பயந்து வீட்டோடு கிடக்கவேண்டும் என்று லலிதா சண்டை பிடிக்காதது நிம்மதியாக இருந்தது.

லலிதாவின் கோபம், கருணாகரனில் மட்டுமல்ல அவன் போன்ற பல பெண்பொறுக்கிகளிலும்தான் என்பது மூர்த்திக்குத் தெரியும். ஆனாலும் அவன் லலிதாவின் பாதகாப்பைக்கருதி அவளை கொஞ்ச காலம் வீட்டோடு இருக்கச் சொன்னான்.

அன்று வெள்ளிக் கிழமை; லலிதா முடிந்தவரைக்கும் கோயிலுக்குச் செல்லும் நாள். குளித்து முழுகி விட்டுக் குழந்தையைப் பக்கத்து வீட்டு மிஸஸ் யோசப்பின் துணையுடன் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தன் வீட்டு வேலையைத் தொடங்குகிறாள்;.

வீட்டு வேலைகள் முடிந்ததும், மிஸஸ் யோசப் தான் படித்து முடித்ததும் லலிதாவுக்குக் கொடுக்கும் பத்திரிகைகளில் கண்களைப் படர விடுகிறாள்.

ஓரு பத்திரிகையின் முன் பக்கத்தில் போட்டிருந்த பெரிய படம் அவளின் கண்களைக் குத்துகிறது.

யூகோஸ்லாவேக்கியாவில்,தொடரும் சண்டை காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் சேர்பிய துருப்புக்களால் அநியாயமாகக் கொல்லப் படுகிறார்கள்.அந்த அக்கிரமத்தில் அழிபவர்கள் சாதாரணப் பொதுமக்களே,அதிலும் இளைஞர்களையும் யுவதிகளையும் சேர்பிய துருப்புக்கள் குறிவைத்தழிக்கிறார்கள்.

சேர்பியத் துரப்புக்களின் பாலியற் கொடுமையால் பாதிக்கப் பட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் படம் பத்திரிகையின் முன் பக்கத்தை நிரப்பியிருக்கிறது.

ஓரு கணம், லலிதா அந்தப் பெண்ணின் இடத்தில் தன்னை வைத்துக் கற்பனை செய்தாள் உடல் சிலிர்த்தது.

கருணாகரன் போன்ற போக்கிரிகளுக்கும் இந்த சேர்பிய துருப்புக்களுக்கும் என்ன வித்தியாசம்?

தங்கள் ஆண்மையின் ஆதிக்கத்தை.வலிமையற்ற பெண்களிடம் பாலியற் கொடுமை செய்து பெண்மையைக் கொடுர துன்பத்துக்கு ஆளாக்குகிறார்கள்.

இலங்கையிற் தொடரும் பிரச்சினையால் சிங்களப் படையினரால் கொடுமை செய்யப் பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை எத்தனைபேருக்குத் தெரியும்?

பாவம் மூர்த்தி, இன்னொருத்தனின் காம ஆசையிலிருந்து தன் மனைவியைக் காப்பாற்றப் பாடுபடுகிறான். போலிசுககுப் போனால் அவர்கள், கருணாகரன், மூர்த்தி வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால் அவனது மனைவியைப் பலாத்காரம் செய்வேன் என்று சொல்லியதற்கு சாட்சி கேட்பார்கள்.

நானும் எனது மனைவியும் சாட்சி என்றால் அதைக். கருணாகரன், எனது கடனைத் தராமற் தப்புவதற்கு இவர்கள் பொய் நாடகமாடுகிறார்கள் என்று போலிசுக்குக்; கட்டாயம் சொல்வான் என்ற மூர்த்திக்குத் தெரியும்.

அடுத்தவன் மனைவிக்க ஆசைப்பட்ட அக்காலத்து இராவணனைப் போன்ற காவாலிகள் கருணாகரன் போன்றவர்களாக எங்களிடையே வாழ்கிறார்கள் அவளுக்குத் தெரியும்.

ஆண்மையின் கொடுரமான பல ரகமான கொடுமைகளை எதிர்க்கும் பல ஆண்களில் தனது கணவனும் ஒருத்தன் என்பதில் லலிதர் பெருமைப் படுகிறாள்.

மூர்த்தி அவளைப் பார்க்க வந்த முதல்நாள் அவள் மனதில் பசுமையாக இருக்கிறது. அவன் லலிதாவில் விருப்பமாகவிருக்கிறான் என்பதை அறிந்துகொண்டபோது லலிதாவின் பெற்றோர் கொஞ்சம் யோசித்தனர். மூர்த்தியின் குடும்பம் பெரியது. அவனை நம்பி, அவன் வீட்டில் எத்தனையோபேர் தங்கியிருக்கிறார்கள்.

அவனுக்கு லலிதாலைத் திருமணம் செய்து வைத்தால் அவனின் பொறுப்புக்கள் அவள் தலையிலும் விழும் என்று அவர்கள் பயந்தார்கள்.

தன்னை விரும்பி வருபவன்,தனக்காகத் தாய் தகப்பன் சேர்த்து வைத்திருக்கும் நல்ல சீதனத்தைத் தெரிந்து கொண்டவனாக இருப்பானேர் என்று லலிதா சிந்தித்ததுமுண்டு.

அவளின் சினேகிதியின் தமயன் ஒருத்தன் அந்தக் காலத்தில் தமிழ்ப்பகுதிகளில் விதை விட்டு முளைத்த ஓரு விடுதலைப் போராட்டக் குழுவுடன் சம்பந்தப் பட்டிருந்தான். அவர்களுடன் மூர்த்தியும் தொடர்பாக இருந்தவன் என்று கேள்விப் பட்டதும், தனது சினேகிதியிடம் மூர்த்தியைப் பற்றி லலிதா விசாரித்தாள்.

மூர்த்தி ஒரு பண்பான குடும்பத்திலிருந்து வந்த ஒரு நல்ல பையன். முற்போக்குக் கொள்கைகளையுடையவன். அவனுக்குப் பொறுப்பாக மூன்று தங்கைகள் இல்லாவிட்டால் அவன் ஒரு சதமும் சீதனமாக எதிர்பார்க்க மாட்டான் என்று லலிதவின் சினேகிதி சொன்னாள்.சினேகிதியின் பேச்சைக் கேட்ட லலிதா, தான் மூர்த்தியைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள்.

அவள் மூர்த்தியைச் சந்திக்கவேண்டும் என்ற சினேகிதியிடம் சொன்ன அடுத்த சில் நாட்களில் இலங்கையில் தமிழர் பகுதியில், இந்திய அரசால், தமிழரின் பகுதிகளில்,அமைதி காக்க அனுப்பி வைத்த இந்தியப் படை படு பயங்கரமான கோரத்தைத் தாங்கள் பாதுகாக்கவென்று வந்த தமிழர்களுக்கெதிராக அவிழ்த்து விட்டது.

அக்டோபர் மாதம், இந்தியாவில் அஹிம்சை அண்ணல் மகாத்மா காந்தியின் நினைவுகளைக் கொண்டாடிக்கொண்டிருக்குமபோது. அதே மாதம்,1987ம் ஆண்டு, இந்திய அமைதிப் படையினர் தங்களுடன் மோதிய தமிழ்விடுதவைப் புலிகளைத் தேடும் சாட்டில் தமிழர் வீடுகளை, பெண்களை, தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பயங்கரமாகத் துவம்சம் செய்யத் தொடங்கின.

பாதுகாப்புப் படையென வந்திறங்கிய பாரத புத்திரர்கள் தமிழ்ப்பெண்களுக்குச் செய்த பாலியல் வன் முறைகளை விளக்க இன்னுப் பல இதிகாசங்கள் எழுதலாம.;

துரியோதன சாம்ராச்சியம் தமிழ் மண்ணில் தமிழ்ப் பெண்களைத் திரவுபதியாக்கிச் செய்த கொடுமைகளைக் காணமுடியாத ஐம்பெரும் பூதங்களும் அண்டத்தின் மூலைகளில் ஓடி ஒளித்தன. தமிழப்பெண்கள் கதறல்கள் அதல பாதாளங்களின் காதுகளைச் செவிடாக்கின. கண்களைக் கூசவைத்தன. பாரதத்துருப்புக்களின் காவெறிக்குத் தமிழ்ப்பெண்மை சூறையாடப்பட்டன.

லலிதாவின் தமயன் தமிழர் இயக்கத்துடன் தொடர்பென்ற சந்தேகத்தில் லலிதாவின வீட்டுக்குள் காட்டு மிராண்டிகளாகப் பகுந்தவர்களின் வெறிக்கு லலிதாவின் மைத்துனி கவிதாவின் பெண்மை, அவளைப் பெற்றெடுத்த பெற்றோர், அவளுக்குப் பிறந்த குழந்தைக்கு முன்னால் பல துருப்பக்களின் வெறிக்கு இரையானது.

கவிதா போன்ற பல பெண்கள் இந்திய இராணுவம்; யாழ்ப்பாண மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது மலர் மாலைசூட்டி வரவேற்றார்கள்.

பாரதாமாதாவின் புத்திரர்களுக்குப் பொங்கலும் இனிப்பும் கொடுத்து வரவேற்றார்கள்.அந்தப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் என்றும் கற்பனை செய்யமுடியாத கொடுமைகளை, பெண்களிடமிருந்து பூமாலையைம் புது விருந்தும் பெற்றவர்கள் செய்து முடித்தார்கள்.

அதன் பிரதி பலிப்பாகக் கவிதா தன்னைத்தானே அழித்துக் கொண்டது எதோ கனவில் நடந்த காட்சியாகிவிட்டது. கிட்டத்தட்ட 5000 தமிழ்ப் பெண்கள் இந்திய அமைதிகாக்கும் படையினரின்,மிகக்கேவலாமான பாலியல் வன்முறைக்காளாகினார்கள் என்று அகில உலக மனித உரிமை ஸ்தாபனங்கள் அறிக்கைகள் விட்டன. ஆயிரக் கணக்கான தமிழர்கள்,சந்தையில், சந்திகளில், தெருக்களில், வயற்கரைகளில், வைத்தியசாலை என்ற பேதமின்றிக் கண்ட கண்ட இடங்களில் கொல்லப் பட்டார்கள். ஏழைத் தமிழன், பணக்காரன்,பட்டம் பெற்றவன், சிறுவயதுக் குழந்தை, வளரும் வாலிபம், வாழ்க்கையின் இறுதியின் முதுமையான தமிழர் என்ற வித்தியாசமின்றித் தமிழர்கள் இந்தியப் படையின் கோரவெறியில் சரிந்து மடிந்தார்கள். இந்தியப் படையினராற் கொல்லப் பட்டு இறந்த தமிழர்களின்; பிணங்களைத் தெருநாய்கள் தின்று மகிழ்ந்தன.

தமிழ்ப்பகுதிகளில் நாயும் பூனையும் ஆடும் மாடுகளும் சுதந்திரமாகத் திரிய அப்பாவித்தமிரின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப் பட்டன. நிலவும்;, காற்றும் மாறவில்லை. தமிழர்களின் வாழ்க்கையில் மாற்ற முடியாத வடுக்கள் உண்டாகின.

நீரும் உணவும் கசக்கவில்லை. ஆனால் இந்தியப் படைகளின் நிழலையும் வெறுத்தார்கள் தமிழர்கள்.

அசோகன் அழித்த கலிங்கமாகத் தமிழ்ப் பகுதிகள் பிணக்குவியல், எரியும் வீடுகள், அலறும் மனித அவலம் என்று நிறைந்திருந்தது.. இதுவெல்லாவற்றையும் ஆயதம் தாங்கிய பலத்தால் மனிதர்கள் செய்யமுடியமா? கேள்வி கேட்கக்கூடத் திராணியற்றுத் தமிழ் மக்கள் தவித்தார்கள்.

மூர்த்திக்கு லலிதாவின் குடும்பத்தில் நிகழ்ந்த துயர் செய்தி கேட்டு அவன் அவள் வீpட்டுக்கு, வந்தபோது,அங்கு இரண்டு பிணங்களுக்கு மரணச் சடங்கு நடந்து முடிந்திருந்தது. மருமகளைத் துவம்சம் செய்தவர்களை எதிர்த்தபோது,அவளின் தகப்பனுக்கு விழுந்த அடியில் அவர் இறந்து விட்டார். பெண்மையழிக்கப்பட்ட கவிதா, இரண்டு வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு மணப் பெண்ணாகக் காலnயெடுத்து வைத்தவள், இந்தியப் படையின் காமவெறிக்கு இரையாகிப் பிணமானாள்.

அந்த அகோரங்கள் நடக்கமுதல் அவனை லலிதா கண்டிருந்தால்,’என்ன உங்களுடைய முற்போக்குக் கொள்கைகளுக்கு என்ன நடந்ததுஃ எல்லோரையும்போல் சீதனம் எதிர்பார்க்கிறிர்கள் போல கிடக்கு’ என்று குறும்புத்தனமாகப் பேசியிருப்பாள்.

அவன் தனது சைக்கிளை லலிதா வீட்டு வாசலில் வைத்துவிட்டு உள்ளே வந்தபோது ‘யார் இந்த அந்நியன் என்ற கேட்கக்கூட யாருக்கும் திராணியில்லை. சட்டென்று அவர்கள் குடும்பத்தில் வீசிய சூறாவழியால் அவர்கள் எல்லாவற்றையுமிழந்து பேயடித்துப் போயிருந்தார்கள்.

லலிதா இதுவரையும் மூர்த்தியுடன் நேரிற் பேசியில்லை. அவள் டியுட்டரிபோய்க் கொண்டிருக்கும்போது அவன் அவளைக் கண்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறாள்.அவளும் அவனைச் சாடையாகப் பார்த்திருக்கிறாள்.நேரிற் கண்டதுமில்லை. பேசியதுமில்லை.

யார் வந்திருக்கிறார்கள் என்ற பார்க்க வந்த லலிதாவிடம், ‘நான்தான் மூர்த்தி’ என்று தன்னை அவன் அவளிடம், அறிமுகம் செய்து வைத்தான்.

அவளுக்குத் தொண்டையடைத்துக் கொண்டன. கண்கள் சொரிந்தன.

‘ ‘எங்கட வீட்டில இரண்டு பேர் இந்திய ஆர்மியால செத்துப் போச்சினம்’ அவள் அவனை வாழ்நாள் முழுக்கத் தெரிந்தவள் மாதிரி நடத்தித் தன் உள்ளத் துயரைக் கொட்டினாள்.

‘நிறையத் தமிழர்கள் இந்தியப் படைகளால செத்துக்கொண்டிருக்கினம்..இலங்கைப் படைகள் இருபது வருடங்கள் செய்யாத கொடுமைகளை இந்தியப் படைகள் இரண்டு கிழமைகளிற் செய்து விட்டார்கள்’ அவன் பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்கப் பாடம் சொல்வதுபோல் அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘செத்த இரண்டுபேரும் என்னுடைய சொந்தங்கள்’ அவள் அழுத்திச் சொன்னாள்.அவளைத் திருமணம் செய்ய விருப்பம் என்று சொல்லியனுப்பியவன் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான்.அவள் அவனிடம் மரணத்தையும், பாலியல் வன்முறைகளையும் சொல்லியழுகிறாள்.

‘தெரியும்…உன்னுடைய மைத்துனி தன்னை அழித்துக் கொண்டது பெரிய முட்டாள்த்தனம்’ அவன் குரலில் கோபம். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ‘எதிர்காலத்தில் உன் துணையாக இருக்க ஆசைப்படுகிறேன்’;@ என்று அவளுக்குச் சொல்லியனுப்பியவனை முதற்தரம் ஏறிட்டுப் பார்க்கிறாள்.

‘மிருகங்கள் கடித்தால் மனிதர் அதனால் இறந்துபோக நினைப்பது யதார்த்தமா? இந்த அசிங்கமான விடயத்தை எங்கள் நினைவிலிருந்து அகற்றவது மிகவும் பெரிய விடயம், ஆனால் செத்துத் தொலைவதால் யாருக்குப் பிரயோசனம்?” அவன் சொல்வது சரிதான்.ஆனால் எத்தனை என்று மறப்பதாம்?

‘எந்த இராணுவக்காரனும் தன் எதிரியின் ஆண்மைக்கு முகம் கொடுத்துப் போராடத் திராணியற்ற தனது கோழைத்தனத்தை எதிரியின் பெண்களின் பெண்மையைப் பலியெடுப்பதிற் காட்டுகிறார்கள். உலகம் ஆரம்பித்த நாளிலிருந்து தொடரும் கொடுமை இது. இப்போது,இந்திய இராணுவத்தால் பாலியற் கொடுமைக்காளான ஆயிரக் கணக்கான தமிழ்ப் பெண்களும் தங்களை மாய்த்துக் கொண்டால் எங்கள் தமிழனத்தின் எதிர்காலம் என்ன?’

அவன் பேசிக் கொண்டிருந்தான்.

மைத்துனி இறந்ததற்குத் தன்னைத் தேற்றுவான் என்று பார்த்தால் அவன் தனது மைத்துனியைக் கோழை என்று குற்றம் சாட்டுகிறான். அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் லலிதா குழம்பினாள்.

‘லலிதா, பெண்களைக் கொடுமை செய்வதால்,அவர்கள் ஒரு பெண்ணை மட்டும் அவமானம் செய்யவில்லை;. அவள் குடும்பத்தை, அவள் வாழும் சமுதாயத்தை அவமானப் படுத்தத்தான்; பாலியற் கொடுமையை ஒரு ஆயுதமாகப் பாவிக்கிறார்கள்.; கவிதாவின் அழிவுக்கு இந்திய இராணுவம் மட்டும் காரணமில்லை. பெண்களை இரண்டாம் தரமாக நினைக்கும் சமுதாயமும் அவள் பாலியற் கொடுமைக்களுக்கு ஏதோ ஒரு வழியில் அவளும்;தான் காரணம் என்ற விதத்தில் அவளையும் அவளின் குடும்பத்தையும் வாழ்க்கை முழுதும் தூற்றும்;. அந்தக் கலாச்சாரத்தை நம்பி வாழ்ந்த கவிதா தன்னை அழித்துக் கொண்டாள். இந்திய இராணுவத்தைக் கோர்ட்டுக்கு எடுக்காமல் அழிந்த அவளின் அழிவுக்கு, சீரழிந்த எங்கள் கலாச்சாரக் கருத்துக்களையும் நாங்கள் எதிர்க்கப் பழக வேண்டும்’

அவள் மௌனமாகவிருந்தாள். இந்திய இராணுவம் வீட்டைத் துவம்சம் செய்த நேரத்தில் லலிதா உறவினர்களுடன் கொழும்புக்குச் சென்றிருந்தாள்.அதனால் அவள் பெண்மை தப்பியது.

இனி இந்தக் குடும்பத்தில் யார் பெண்ணெடுப்பார்கள் என்று வயதுபோன ஆச்சி அழுகிறாள். அதை நினைத்துத் துயர் பட்டவளுக்க மூர்த்தி சொல்வதெல்லாம் ஏதோ புரியாத கோயில் மந்திரமாகக் கேட்கிறது.

அவள் சிந்தனை பத்து வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணப் பனைவடலி சூழ்ந்த அவள் வீட்டில் ஆழ்ந்திருந்தபோது அவள் வாழும் மேற்கு நாட்டு வீட்டின் டெலிபோன் மணியடித்தது.

அவர்களின் குழந்தை அகிலா படிக்கும் பாசாலையிலிருந்து அவளின் ஆசிரியர் ஒருவர் பேசுவதாகவும்,அகிலாவுக்கு விளையாட்டு மைதானத்தில் நடந்த விபத்தில் காயப்பட்டதாகவும் லலிதாவை உடனடியாகப் பாடசாலைக்கு வரச் சொன்னபோது அவள் நிலை குலைந்து விட்டாள்.

‘கொஞ்ச நாளைக்கு வீட்டை விட்டு வெளியே போவது நல்லதல்ல’ என்று அவள் கணவன் மூர்த்தி சொன்னதை அவள் மகளுக்கு நடந்த நடந்தாகச் சொல்லப்பட்ட விபத்தைக் கேள்விப்பட்ட பதற்றத்தில் அடியோடு மறந்து விட்டாள்.

மிக மிக முக்கியமாக. ‘பாடசாலையில் அகிலாவுக்கு ஏதும் நடந்தால் உடனடியாக எனக்கு அறிவிக்கச் சொல்லியிருக்கிறேன்’ என்று மூர்த்தி அழுத்திச் சொன்னதையும் அவள் மறந்து விட்டாள்.

‘ தங்கச்சியின்ட கல்யாணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடு;க்க வழியில்லாவிட்டால் உன்ர பொஞ்சாதியோட ஒரு நாளைக்குப் படுக்கவிடன்’ காழுகன் கருணாகரன் நேற்றிரவு இரைந்து சொன்னதையும் அவள் மறந்து விட்டாள்.

அப்படியானவர்கள், தங்களிடம் கடன் பட்டவர்களிடம் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் அவள் ஞாபகத்திலில் இல்லை.

அவள் சிந்தனை முழுதும் அவர்களின் அருமைக் குழந்தை அகிலாவில் மட்டு; சுற்றிச் சுற்றி வந்தது.

பாடசாலைக்கு ஓடவேண்டும்.அவள் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பில் அவளின் பத்தாவது மாடி அப்பார்ட்மென்ட் லிப்டு;க்குக் காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு யுகமாவிருந்தது.

குழந்தையின் பாடசாலை பக்கத்திலியே இருக்கிறது.

கீழே வந்ததும் தெருவைக்கடக்க அவள் விரைந்தாள். மூர்த்திக்குப் போன் பண்ணி விடயத்தைச் சொல்லவில்லை என்பது அவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.

பாடசாலையிலிருந்து அவனுக்குத்தானே முதலில் அறிவித்திருப்பார்கள் என்ற நினைவு சட்டென்ற வந்ததும் அவள் உறைந்து போனாள்.

என்ன நடக்கிறது? வுந்திருந்த டெலிபோன் கால் போலியானது என்ற உண்மை மின்னலென அவள் இருதயத்தில் வெடித்தது.

என்ன சதிக்குள் அவள் அகப் பட்டிருக்கிறாள்?

யாரோ அவளைத் தள்ளி நிலைகுலையப் பண்ணி அவளின் வாயைப் பொத்தியதும்;, இன்னுமொரு முரட்டுக்கை அவளைக் காருக்குள் தள்ளியதும் ஒரு கணத்தில் நடந்த பயங்கர விடயங்கள்.

கறுப்புக் கண்ணாடியால் உலகிலிருந்து தன்னை அந்நியப் படுத்திக்கொண்டோடும் அந்தக் காரிலிருந்து அவள் அலறிய குரல் யாருக்கும் கேட்டிருக்காது. கேட்டிருந்தாலும் அவர்கள் என்னவென்ற திரும்பிப் பார்க்க முதல் கார் அசுரவேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அவள் தலையில் ஒரு அடி@ அவள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இருளாக்கும் அடி.

ஆண்மையின் வக்கிரத்தை எதிர்த்த பெண்குரலுக்குக் கிடைத்த மரண அடி.

அவளுக்குச் சுய நினைவு வந்தபோது அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற யாரும் சொல்லத் தேவையில்லை. குலைந்த அவள் கூந்தல், உரியபட்ட அவள் ஆடைகள். அந்தக் காமுகனால் பறிக்கப் பட்ட பெண்மை!

தனது குரூரமான பற்களைக் காட்டிக் கோரமான சிரிப்புடன் கருணாகரன் அவள் முன்னால் நின்றிருந்தான். பிணத்தைப் புணரும் மிருகமா இவன்? அவளுக்குச் சுய உணர்விருந்தால் அவளைத் தொட வந்த கைகளைத் தன் பற்கலால் கடித்துக் குதறியிருப்பாள். ஆனால் அவளை நினைவிழக்கப் பண்ணிப் புணர்ந்த மிருகம் வெற்றிச் சிரிப்புடன் எக்காளமிடுகிறது!

அசுரர்களின் அவதாரமா இந்த மனிதன் என்ற பெயரில் நிற்கும் இந்த மிருகம்.

லலிதா துவண்டுபோய்க் கிடந்தாள்.

திரவுபதிக்குத் தகிலுரியப் பட்டபோது அவள் மானம் காப்பாற்றக் கண்ணன் வந்தான். சீதை சிறை வைக்கப் பட்டபோது அவளைத் தேடி அனுமான் தூது வந்தான். அவை இதிகாசங்கள்.புனிதமான புராணங்கள். பெண்கள் தங்கள் கணவர்களுக்காக எதையும் செய்யவேண்டும் போதிக்கும் புனித வழிகாட்டிகள்.

அப்பாவியான லலிதாவின் மைத்துனி கவிதாவின் பெண்மை இந்திய இராணுவத்தால் கொள்ளையடிக்கப் பட்டபோது அவளைக் காப்பாற்ற,எந்தத் தேவர்களும் வானிலிருந்து குதிக்கவில்லை.’அய்யோ இது என்ன கொடுமை’ என்று அழுத அவள் மாமனார் அடித்துக்கொல்லப் பட்டார்.

மனித உரிமைகளுக்குச் சாம்பவான்கள் என்று சொல்லப்படும்,மிகவும் நாகரிகமான,ஆங்கிலேய நாடோன்றில் நான்கு சுவர்களுக்கு நடுவில் லலிதாவின் பெண்மை சூறையாடப்பட்டபோது எந்த அவதாரங்களும் எட்டிப் பார்க்கவில்லை.

அன்று,கருணாகரன் முறை கெட்ட விதத்தில் கணவனிடம் பேசியபோது அவனுக்குக் காறித் துப்பிய அவள் இதழ்களில் காமுகனின் வெறியின் பிரதிபலிப்பாகக் குருதி வழிந்து கொண்டிருந்தது.

‘இந்த வாயாற்தானே எனக்குக் காறித் துப்பினாய்?’ அந்த மிருகம் பெருமையுடன் பீற்றிக் கொண்டது.

லலிதாவுக்குத் தலை சுற்றியது.

தர்மத்தின் பிறப்பிடம் என்ற இந்திய மண்ணிலிருந்து வந்து கவிதா போன்றவர்களைக் கொடுமை செய்தவர்களும்; அதே காலாச்சாரத்தைத் தழுவி வாழும் இவனும் எந்த வித்தியாசமுமற்ற மனித உருவில் நடமாடும் மிருகங்கள்.அவலத்தின் பிடியிலிருக்கும்போது அவள் மனதில் குழம்பிய சிந்தனைகள் பல.

தமிழன் என்ற பெயரில் நடமாடும் இவர்கள் என்ன பரம்பரையிலிருந்து வந்திருக்கிறார்கள்? இவன் படித்த ‘அ’ என்ற முதலெழுத்தில் அம்மா என்று படித்தானா அல்லது அழிப்பு என்று படித்தானா, ஆ என்றால் ஆதிபராசக்தி என்ற பெண்மையின் பிரதிபலிப்பு என்பதை படித்திருக்கவே மாட்டானா?

‘உன்ர புருஷன் தன் தங்கச்சியின் கல்யாணத்திற்கு வாங்கிய கடனைத் திருப்பித்தரும் வரைக்கும் உன்னை நான் எந்த நேரத்திலம் எந்த இடத்திலும் வந்து கடத்திக்கொண்டுபோவன் என்டு உன்ர புருஷனுக்குச் சொல்’ கருணாகரன் சோர்ந்து கிடக்கும் வலிதாவை உதைத்தான்.ஆண்மையின் அசுரவெறியில் அந்த மெல்லிய பெண்ணுடல் குருதி கொட்டியது. அரைகுறை மயக்கத்திலிருந்த லலிதாவை அவனும் அவன் நண்பனும் இழுத்து வந்து காரிற் தள்ளினார்கள்.

‘புருஷன் வரமுதல் குளித்துக் கழுவிப் பொட்டு வைத்துக்கொள்’ அவர்கள் காறித் துப்பியபடி அவளை வெளியே தள்ளினார்கள்.

‘ இரண்டு நாளைக்கு அவனைத் தொடவிடாத..இல்லையெண்டா உன்ர காயத்துக்கு அவன் காரணம் கேட்பான்.’ அவர்கள் குரல் குலைக்கும் நாய்களை அவளுக்கு ஞாபகப் படுத்தின.

‘இனி நான் வந்து என்னை இழுத்துக் கொண்டு வரமாட்டன்.போன் பண்ணுவன் வந்திட்டுப்போ…போலிசுக்குப் போற நினைவை மறந்து விடு. உன்ர வீட்டில் எனக்கு எத்தனை தரம் விருந்து தந்தாய் என்பதை டையறியில எழுதி வச்சிருக்கன்… கதையை நான் அழகாகச் சொல்வன் எண்டு உனக்குத் தெரியாது’

காட்டு மிருகம் அவளை விட்டு விலகியது. அவள் லிப்டில் துவண்டு கிடந்தாள்.

‘இப்படியெல்லாம் மிரட்டித்தானே பெண்களை இந்தக் கொடியவர்கள் அனுபவித்து அழித்து முடிக்கிறார்கள்? அவள் மனக்கண்ணில் அவள் மைத்துனி கவிதாவின் கதறல் கேட்டது.கவிதாவின் இறந்த உடல் கிணற்றில் மிதந்தது.

சிங்கள, இந்திய,சேர்பிய இராணுவத்தால் அழிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான பெண்களின் அலறல் அவள் காதைத் துளைத்தது. அவள் பயத்துடன் காதைப் பொத்திக் கொண்டாள்.

இந்தக் கொடியவர்களின் வல்லுறவை வெற்றி கொள்ளவா பெண்களின் உடல்கள் பாவிக்கப்படுகின்றன. கருணாகரன் தன் ஆண்மையின் வெற்றிக் களிப்புடன் காரில் பவனி போய்க் கொண்டிருப்பானா?

வீட்டுக்கதவைத் திறந்ததும்; அவளுக்கு விடுதலை தரக் காத்திருப்பதுபோல் ஆவென்ற திறந்த அவளது பத்தாவது மாடியறை ஜன்னல் வரவேற்பு செய்தது.

மைத்துனி கவிதா மாசுபட்ட தனது உடலை இந்த உலகில் வைத்திருக்க விரும்பாமல் இறப்புடன் கலந்து விட்டாள். நானும் அப்படியே செய்து கொள்ளலாமா?

எப்படி மூர்த்தியின் முகத்தைப் பார்ப்பேன்? வெளியிற் போகாதே என்று அவன் சொன்னதை குழந்தையின் விபத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதும் மறந்து விட்டதை அவன் நம்புவானா?

அவளது உலகம் தலைகீழாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

அவளது அடிவயிறு நொந்தது.ஏதோவெல்லாம் கசிந்தது. அருவருப்பில் அவளுக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. பூமி பிழந்து தன்னை விழுங்கிக் கொள்ளாதா என்று ஏங்கினாள்.

மார்பகங்களிலிருந்து கசிந்த குருதித் துணிக்கைகள்; போட்டிருந்த சட்டையை நனைத்தது. உதடுகள் வீங்கி விண்விண் என்று வலித்தன.

இது யார் உடம்பு?

தன்னையே வெறுத்தாள் லலிதா.

ஜன்னல் திறந்திருக்கிறது. வானம் கறுப்பு மேகக்கூட்டங்களால்த் திரண்டு தெரிகிறது . கறைபடிந்த லலிதாலைப் பார்க்க விரும்பாத சூரியன் மேகங்களுக்குள் மறைந்த விட்டானா?

குழந்தையைப் பற்றி டெலிபோன் கால் வந்ததற்கும் இப்போதைக்கும் இடையில் ஆறுமணித்தியாலங்கள் கழிந்திருந்தன. அவள் வாழ்க்கையை ஒரு கழிவறையாகக் காட்டிய காலமதுவா?

என் குழந்தையெங்கே?

அவள் நினைவு அகிலாவில் தாவியது. மிஸஸ் யோசப் அகிலாவைக் கூட்டிக் கொண்டுவந்து கதவைத் தட்டியிருப்பாள். லலிதா வீட்டில் இல்லை என்று தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோயிருப்பாள்.

மூர்த்தி வேலையால் வீடுதிரும்ப இரவு பத்து மணியாகும்.

தனது தங்கைகளின் வாழ்க்கைக்கு விளக்Nகெற்றி வைக்க அவன் இயந்திரமாக் உழைக்கிறான்.அவனது வாழ்க்கையில் இருள் சூழ்ந்ததைத் தெரிந்தால் என்ன செய்வான்?

லலிதா,அகன்ற திறந்து கிடந்த ஜன்னல் வழியால் உலகத்தை வெறித்துப் பார்த்தாள்.

இந்த ஜன்னலால் பாய்ந்து விழ்ந்து விட்டால் உலகுக்கு ஒன்றும் தெரியப் போவதில்லை! தற்கொலை ஏன் என்று விசாரித்தால்,’லலிதா

கொஞ்ச நாளாக மிகவும் டிப்பிரஷனாக இருந்தாள்’ என்று பக்கத்து வீட்டு மிஸஸ் யோசப் சொல்லலாம்.

அதை உலகமும் நம்பலாம்.

இவள் இல்லாமல் மூர்த்தி எப்படி வாழ்வான்?

மைத்துனி தற்கொலை செய்தததைக் கோழைத் தனம் என்றுதானே சொன்னான்? அவளைக் கொடுமை செய்த இராணுவத்துக்குப் பயந்து இறந்ததை வெறுத்தானே,இன்று நான் காமுகன் கருணாகரன் செய்த கொடுமை தாங்காமல் என்னை அழித்துக் கொண்டால் என்ன செய்வான்?

‘ஆண்கள் செய்யும் கொடுமைக்குப் பெண்களைப் பழிவாங்கும் உலகத்தைத் திருத்தவேண்டும்’ என்று சொன்னவன் என் துயரைப்; புரிந்து கொள்வானா?

ஊருக்கு உபதேசம் உனக்கில்லை லலிதா என்று அவன் இவளைத் துரத்தி விட்டால் எங்கே போவாள்?

அவன் இதயத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு உலகை மறக்கத் துடிப்பாளே அந்த இதயம்; அவளுக்காகத் திறந்திருக்குமா?

வெளியே பாய அந்தப் பெரு ஜன்னல் திறந்திருக்கிறது.

என்னை அழித்துக்கொண்டால் என்மகள் அகிலாவின் கெதி என்ன?

இவளில்லாமல் அகிலா வளர்ந்து இன்னொரு கருணாகரனிடம் அகப்படமாட்டாள் என்று என்ன நிச்சயம்?

லலிதாவின் நீர் வழிந்த கண்கள் திரும்பியபோது காலையில் அவளின் கண்களில் சேர்பிய இராணுவத்தால் பாலியற் கொடுமைக்காளாகி இறந்த பொஸ்னிய நாட்டு பெண்ணின் படம் நிலைத்து நின்றது.

லலிதா இறந்து விட்டால் நாளைக்கு அதுவும் ஒரு சிறு பத்திரிகைச் செய்தியாக வந்த மறைந்து விடும்

லலிதா தவிப்புடன் பெருமூச்சு விடுகிறாள்;

சட்டென்று மூர்த்தி சொன்ன வார்த்தைகள் தெளிவாகக்கேட்கிறது.

‘ஆண்கள் செய்த கொடுமைகளுக்கு அவர்களுக்கத் தண்டனை வாங்கிக் கொடுக்காமல் தங்களையழித்துக் கொள்வத மிகவும் கோழைத்தனமான விடயம்’

அவள் தனது தைரியத்தையெல்லாம் ஒன்று சேர்த்துக்கொண்டு எழுந்து நிற்கிறாள்.

கருணாகரன் போன்ற காமுகர்களின் ஆணவத்துக்குச் சாவு மணியடிக்க லலிதா போன்று பெண்கள் முனையாவிட்டால் உலகத்தில் இன்னும் பல கருணாகரன்கள் கொடுமை செய்து கொண்டேயிருப்பார்கள்.

அவள் கைகள் மூர்த்தியின் டெலிபோன் இலக்கத்தை டையல் பண்ணுகின்றன. அவன் ஹலோ என்றதும் அவன் குரலைக்கேட்டதும் அவள் கதறியழுகிறாள். அவனுக்கு உடல் சிலிர்க்கப் பணணும் கதறல்.

அவளின் விம்மலில் அவனுக்கு உண்மைகள் தெரியவருமா?

அவள் கதறலில் அவளின் கறைபடிந்த உடல்பற்றிய துக்கம் வெளிப்படுத்தப் பட்டிருக்குமா,?

அவளின் ஆத்மாவுடன் கலந்தவன் அவன். இரு உடல்கள் ஓருயிராக வாழ்பவர்கள் அவர்கள்.

படிப்பதற்காகத் தெருவிற் சென்ற அவளின் பவுத்திரத்தை உணர்ந்து அவளைத் தன் பாதியாகத் துணை சேர்க்க அவளைத் தேடிவந்தவன் அவன்.

அவனுக்கு விளங்கியிருக்குமா அவளுக்கு இன்று என்ன நடந்ததென்று?

‘நான் போலிசுக்குப் போன் பண்ணப்போறன்..கெதியாக வீட்டுக்கு வாங்கோ’ அவள் விம்மலுக்கிடையில் சொல்லி முடிக்கிறாள்.

‘ என்ர கண்ணே நான் கெதியாய் வீட்ட வாறன்.. ஐ லவ் யு லலிதா’ அவன் குரலில் இருந்த அன்பு , நெருக்கம் ஆறுதற் தொனி, ,போலிசுக்குப் போன் பண்ணிக் கருணாகரனைச் சிறைக்கனுப்பும் தென்பை லலிதாவுக்குக்; கொடுக்கிறது.

(யாவும் கற்பனையே)

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *