`ம்பா… ம்பா… ம்பா..’
செங்காரிப் பசு கத்தும் ஓசை கமலத்தின் காதைத் துளைக்கின்றது.
பசுவின் கதறலுக்குக் காதைக் கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு அடுப்பின் நிலைமை மறை பொருளாகி விட்டது. பரபரப்போடு அடுப்பைப் பார்க்கின்றாள். பனஞ் சொக்கறை புகட்டிற்கு வெளியே விளாசி எரிந்து கொண்டிருக்கின்றது. கைச் சுறுக்கோடு சொக்கறையை அடுப்பிற்குள் தள்ளுகிறாள்.
`ம்பா… ம்பா… ம்பா..’
செங்காரிப் பசுவின் கதறல் தணிந்துவிடவில்லை.
பசுவின் ஒலத்திற்கான காரணத்தைத் தேடி கமலத்தின் மனம் இயந்திரமாக இயங்குகின்றது.
நேற்றைய நிகழ்வுகளை மறு பரிசீலனைக்கு எடுக்கின்றாள்.
பழங் கஞ்சியும், பிண்ணாக்கும் நேற்றும் செங்காரிக்குக் கிடைத்தது. அத்தோடு விட்டு விடாமல் ஒரு கற்றை வைக்கோலையும் தொட்டிலுக்குள் உதறிப் போட்ட பின்னர் தான் கமலம் தனது இரவுப் படுக்கையை விரித்தாள்.
`ம்பா… ம்பா… ம்பா..’ செங்காரி தவிப்போடு கத்துகிறது. கமலத்தின் பிள்ளைகள் இருவரும் தம்பாட்டி ஊடாக யாழ் நகருக்கு ரியூசனுக்குச் சென்றுவிட்டனர். அவளது கணவர் பொன்ராசா ஜி. எஸ். அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
‘ஜி. எஸ். ராத்திரியும் சுணங்கித்தான் படுத்தவர். நித்திரையைக் குழப்பப் போகுது’ கணவர் மீதான கெட்டித்த அக்கறை கமலத்தை முள்ளாகக் காயப்படுத்துகிறது.
`ஈண்டு ஒன்றரை வரிசமாகுது. மாட்டைத் தேடுதாக்கும். ஜி. எஸ்சுக்குச் சொல்லவேணும்.’ செங்காரியின் மன உணர்வுகளைப் பிரதியிட்டவளாகக் கமலம் களி கொள்கிறாள். நீர் கொதித்து விட்டதை கேற்றில் மூடி உணர்த்துகிறது. மூடி துள்ளித் துள்ளி நாதம் பிறப்பிக்கின்றது.
தேநீருக்கேற்ற வகையில் அலுமினியச் சட்டிக்குள் அவள் தேயிலையைப் போட்டு வைத்திருந்தாள். வெந்நீரை அதற்குள் ஊற்றி தேநீர் தயாரிக்கும் முயற்சியில் கமலம் உசாரானாள்.
`ம்பா… ம்பா… ம்பா..’ தன் கைப்படத் தயாரித்த தேநீரைக் குடித்துக் கொண்டே செங்காரியின் நினைவில் குமைகிறாள்.
தமையனின் இளைய மகள் தலைப்பிள்ளை பெற்ற அன்றுதான் செங்காரியும் நாகு கன்றொன்றை ஈன்றது. தமையன் மகள் இன்னொன்றையும் பெற்று விட்டாள். எனவே பசுவின் கதறல் கமலத்திற்கு நியாயமாகப் படுகிறது. வாய் பேசாததுகளா இருந்தாலும்…..
கிறில கற்களினுTடாகச் சூரியக் கதிர்கள் குசினியை ஆக்கிரமிக்கின்றன.
செம்பும் தண்ணிரும் ஒரு கையில், மறு கையில் தேநீர் ஜொக்குடனும் எழுந்து நடக்கிறாள். படுக்கையில் கிடக்கும் ஜி. எஸ். குரலைக் காட்டி முகத்தைக் காட்டினால் தான் எழும்புவார் இது கமலத்திற்கு பதினேழு வருட அனுபவம்!
கரங்களால் தலையணையை அணைத்தபடி பொன்ராசா ஜி. எஸ் குறட்டை ஒலி எழுப்பித் தூங்கிக் கொண்டிருக்கிறார். கமலத்தின் கொடுப்புக்குள்ளிருந்து சிரிப்பு வெடிக்கின்றது.
`ம்… எழும்புங்க. நடுச் சாமத்தில வந்து படுத்தா எப்படி வெள்ளென எழும்புறது. எழும்புங்க.’
ஜி. எஸ்சின் கரத்தைத் தீண்டி எழுப்புகிறாள். அவர் இடப்பக்கம் சரிந்து மல்லாந்து படுக்கிறார்.
கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்ரூலை இழுத்து கையில் ஏந்திக் கொண்டிருந்தவைகளை வைக்கிறாள்.
`கண் எரியுதோ. துறவுங்களன். எண்ணெய் வைச்சு முழுகெண்டா நேரம் கிடையாது.’
கணவனின் நெஞ்சில் கூச்சமின்றித் தன்கையைப் படர்த்தி அவர் உடலை அசைக்கிறாள்.
`ம்…..’ ஜி. எஸ் கண்களைத் திறந்து கொண்டார். இரு கரங்களையும் மேலுக்கு உயர்த்தி உடலை உசார்ப்படுத்துகின்றார்.
`வாயைக் கொப்பளிச்சுப் போட்டு’ தண்ணீர்ச் செம்பை கமலம் நீட்டுகிறாள். வாங்கி விறாந்தைக்குள் சென்று முகத்தில் நீள் பனுக்கி ஜி. எஸ் வாயை நீரால் அலசுகிறார். பெரு விரலை வாய்க்குள் திணித்துப் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்கிறார்.
`சேட் பொக்கேற்றுக்க சிகரெட் கிடக்கு எடு கமலம்.’
கட்டிலில் இருந்து கொண்டே ஜி. எஸ் தேநீரைப் பருகுகிறார்.
‘ஒண்டுக்கும் இருமல் கேக்குதில்ல. இதை விடுங்களன்.’
நஞ்சைக் கொடுப்பது போல் சிகரெட் பக்கெற்றை நீட்டுகிறாள். கட்டில் காலில் தலையணையை வைத்து அதன் மேல் பொன்ராசா ஜி. எஸ் படுத்துக் கொள்கிறார். அவரின் கால்மாட்டில் கமலம் இருக்கிறாள்.
`ராத்திரியும் கைப்பிடியாத் தானே கொண்டந்தவங்க.’
கமலத்தின் இதயக் குமுறல்!
நெடுகவா கமலம்….!
ஜி.எஸ்சின் வாயிலிருந்து சிகரெட் புகை கக்குகிறது.
`இப்படி நெடுகவா? நெடுகவா? வெண்டுதான் அதட்டுவியள். உந்தக் கூடாத கூட்ட மெல்லாத்தையும் விட்டுப் போட்டு வெளியில போனாலென்ன. சனம் படுத்துகிற பாடு தெரியாதா ஜி. எஸ்.’
`சும்மா போம்… நிலவுக்கொழிச்சுப் பரதேசமே போகச் சொல்லுற. அந்நியனுக்கு முன்னால் என்னத்துக்குக் கைகட்டி நிப்பான். இந்த மண்ணில் கிடப்பம்’ கால்களை மடித்துக் குத்துக் காலா வைத்தபடி பொன்ராசா ஜி. எஸ். மனைவியைச் சாடுகிறார்.
“அம்மா.” இன்னாசி வருகிறான்.
“என்ன கமலம்? இன்னாசி இந்த நேரத்தில.”
“உங்களை நித்திரைப் பாயில் புடிச்சாத்தான் தனக்குக் காட் கிடைக்குமாம்.”
“ஒ. உவன் உப்புடியே சொன்னவன்.”
அங்குமிங்குமாக சிலிர்த்துக் கிடந்த தனது மயிரை ஜி. எஸ். கோதிக் கொள்கிறார். விறாந்தைக்கு வந்து கதிரையில் அமர்கிறார்.
தன் கணவனின் படுக்கையைச் சரி செய்த பின்னர் கமலம் விறாந்தைக்கு வருகிறாள்.
‘ஐயா என்னை மறந்து போட்டார்.’ இடக்கு முடக்காகக் கதைக்காமல் இன்னாசி தன் பேச்சைக் கட்டுப்படுத்துகிறான். ஓரக் கண்களால் ஜி. எஸ்சைப் பார்க்கிறான்.
“அதில இருக்காத இஞ்சாலை வந்து கதிரையில இரு.”
வாசல் படியில் அமர எத்தனித்த இன்னாசிக்கு ஜி. எஸ் ஆணையிடுகிறார்.
“வீடு வாசல் இல்லாத நான் எங்க இருந்தாத் தான் என்ன ஐயா. இண்டைக்கு எப்படியும் எனக்குக் காட்டைத் தந்து போடுங்க.”
ஜி. எஸ்சின் முகத்தில் மகிழ்ச்சிக்களை மரிக்கின்றது. இப்படியான அதிகாலை நிகழ்வுகள் கிராமசேவகர் பொன்ராசாவுக்கு அந்நியமானதல்ல! இருந்தாலும் ஒரு இலவச உலர் உணவு நிவாரண அட்டைக்காக இரக்கும் இன்னாசியைப் பார்க்கப் பார்க்க அவரது நெஞ்சு சுண்டிச் சுண்டி வலிக்கிறது.
‘கமலம் இவனுக்குச் சொல்ல இல்லையா?’ இன்னாசிக்குத் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்த மனைவியிடம் கேட்கிறார். வறுமைக் கோட்டிற்குள் ஆகுதியாக உருக்கிக் கொண்டிருக்கிறவன் இன்னாசி, அவனது வதிவிடம் சந்தியோகுமையர் கோவில் வளவிற்குள் நிற்கும் ஆலமரத்தின் கீழ்தான் அமைந்துள்ளது. கிராமசேவகரின் சகல பதிவேடுகளிலும் இதே இடந்தான். இன்னாசியின் நிரந்தர முகவரியாக பதியப்பட்டுள்ளது. எறிகணைகள் இன்னமும் இன்னாசியின் ஆலமரத்தைத் தீண்ட வில்லை. இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியும் கைகூடவில்லை! எனவே இன்னாசி இடம் பெயராதவன். இந்தக் காரணத்திற்காக இன்னாசிக்கு உலர் உணவு அட்டை கிடைக்கவில்லை. கமலம் இன்னாசியின் துர்ப்பாக்கிய நிலையை ஜி. எஸ்சிடம் எத்தனையோ தடவை கூறி அவனுக்கு நியாயம் வழங்கும்படி கேட்டுள்ளாள்.
“தேத்தண்ணியைக் குடிச்சுப்போட்டு கடற்கரைக்குப் போட்டுவா இன்னாசி” ஐம்பது ரூபாய்த் தாளொன்று இன்னாசியின் கரத்திற்கு மாறுகிறது.
“ஓ. நான் போட்டுவாறன் என்ர காட்டைத்தான் தந்து போடுங்க.”
“உந்த எண்பத்து நாலு ரூபா காட் சுங்கானைத்தான் அவனுக்குக் குடுத்தாலென்ன.” பெண்மையின் நெகிழ்ச்சி இன்னாசியின் காதுகளில்
தேனாக இனிக்கின்றது. இழுத்துக் கேற்றைத் திறந்தபடி ஜி. எஸ்சைப் பார்க்கிறான். அவர் முகம் நிலத்தைத் தரிசித்துக் கொண்டிருக்கிறது.
“கொழும்புக் கடைக்காரருக்குக் கூட காட் இருக்கேக்க தனக்கேன் தரக் கூடாதாம்.”
“நீ பேய்க் கதை கதைக்கிறாய். குடுத்துப்போட்டு நான் வீட்டுக்கயா இருக்க.” பொன்ராசா ஜி. எஸ்சின் விழிகளில் செவ்வரிகள் சிலந்தி வலையாகப் படர்கின்றன. இலட்சக்கணக்கில் வெளிநாட்டுக் காசை அனுபவிப்பவர்கள் வட்டிக்காரர்கள், பரம்பரைப் பணக்காரர்கள் இப்படிப்பட்ட சுகபோகிகளுக்குக்கெல்லாம் யார் யாரோ ஜி எஸ்மார் உலர் உணவு அட்டைகள் கொடுத்திருக்கிறார்களெனக் கமலத்திற்கு எத்தனையோ பெண்கள் கூறி இருப்பது மட்டுமின்றி அடையாளங்களும் காட்டி இருக்கின்றனர். இருந்தும் தனது கணவனின் இலக்கைக் கொச்சைப் படுத்தக் கூடாதென்ற வாய்க்கட்டில் அவள் அடங்கிக் கொள்வாள். கணவன் சரியெனவே வாதுரைப்பாள்.
கிளுவை மரத்தில் சின்னப்பு சைக்கிளைச் சாத்துவதை ஜி எஸ் கண்டு கொள்கிறார்.
“இனி மற்ற வாத்தியம் வந்திட்டுது.”
“இப்ப பதினொரு வரிசமா உந்த வாத்தியத்தைத்தானே கேக்கிறம். இதுதான் உத்தியோகம் புருஷ இலட்சணம்.”
தன் உத்தியோகத்தைக் கனம் பண்ணாமல் கமலம் கதைப்பது பொன்ராசா ஜி. எஸ்சுக்கு கொதிப்பைக் கொடுக்கிறது.
வாயில் புகைந்து கொண்டிருந்த சுருட்டைப் பின்னால் மறைத்தபடி சின்னப்பு அடி வளவிற்குச் செல்கிறான்.
“சின்னப்பன்ர விஷயம் எப்படி?” கமலம் விசாரிக்கின்றாள்.
தனது மகளின் இலவச உலர் உணவு அட்டை விஷயமாகச் சின்னப்பு, ஜி எஸ்சுக்கு மரியாதைகள் செய்து வலை விரிக்கிறான். தனது இரண்டாவது மகனோடு கொழும்பிற்குச் சென்ற சின்னப்புவின் மூத்த மகள் இன்னமும் தனது சொந்த மண்ணிற்குத் திரும்பவில்லை. இவளின் கணவனும் மகனும் இத்தாலியில் இருக்கின்றனர். அவர்களோடு சேரத் தாயும் மகனும் லொட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாகக் கதையொன்று உலாவுகின்றது. இது ஜி. எஸ்சிற்கும் தெரியும்.
“காட் தருவன் உன்ர மகள் இஞ்சை வரட்டும்” காணிக்கை கேட்டாலும் தருவேனென்ற பாவத்தோடு சின்னப்பு கேட்கும் போதெல்லாம் ஜி எஸ்சின் ஒரே பதில் இதுதான்! இது எப்பொழுதும் மங்கலமாகவே ஒலிக்கும். ஆனால் சின்னப்பு ஒட்டுண்ணியாக ஜி. எஸ்சைத் துரத்துகிறான்.
“சின்னப்புவிடம் சொல்லிப் போடு கமலம் நான் பேச்சு மாறமாட்டனெண்டு.” ஜி. எஸ் பொன்ராசா எழுந்து நிற்கின்றார். அரையிலிருந்து நழுவிய சாரத்தை அவரது கரங்கள் அனைத்துக் கொள்கின்றன.
பற்பசையைத் தேடி ஜி. எஸ் நடக்கிறார்.
‘ம்பா…. ம்பா….’ செங்காரிப் பசுவின் ரேப் ஓடிக் கொண்டிருக்கின்றது.
`ராவெண்டுமில்லாம போலெண்டுமில்லாமக் கத்துது. மாட்டைத் தேடுதாக்கும் ஜி. எஸ்.’
“உவன் இன்னாச்சிட்டச் சொல்லன்.” சட்டெனச் சொல்கிறார்.
‘எங்கட தொட்டாட்டு வேலைக்குத்தான் அவன் ஆள் ஒரு காட்டுக்கு
அவன் எத்தினை தரம் இரக்கிறான்.’
இன்னாசிக்காகக் கமலம் ஜி. எஸ்சை வேண்டுகிறாள்.
வாய் முட்ட ஊறி இருந்த உமிழ் நீரைப் பொன்ராசா ஜி. எஸ் வெளியே கொப்பளிக்கின்றார்.
“அவனுக்குக் காட் குடுக்க ஏலுமெண்டா நான் குடுப்பன். இடம் பெயராத இன்னாசிக்கு எப்படிக் காட் கிடைக்கும் கமலம்?”
முறுகல் நிலையில் ஜிஎஸ் இருப்பது அவரது பேச்சில் உணரக் கூடியதாக இருக்கின்றது. கமலம் மெளனித்து விட்டாள்.
சாரத்தை மடித்து முழங்காலுக்கு மேல் கட்டியபடி கிணற்றடியை நோக்கி ஜி. எஸ் போகிறார்.
“இவளுக்கு என்னத்தில தான் கவனம் இருக்கு” வக்கிற்குள் அங்குமிங்குமாகக் கிடந்த உடுப்புக்களைத் தொட்டிக்குள் எடுத்துப் போட்டபடி மனைவியைக் கடிந்து கொள்கிறார்.
“இதுகளுக்கு இப் ஒரு பார் சோப் வேணும் கமலம்”
தற்பரை நேரங்கூடத் தாமதிக்காது கமலம் கிணற்றடிக்குச் செல்கிறாள். அவள் கண்களில் தெருக்கரையில் நிற்கும் சின்னத்தம்பி மாஸ்ரரின் பளபளக்கும் வழுக்கைத் தலை தெரிகின்றது. அவரது வருகையைக் கணவனுக்குத் தெரியப்படுத்துகிறாள்.
“ம்…. இனி எங்க தோய்ச்சலும் குளிச்சலும்.” ஜி எஸ்சின் மனம் புளுங்கியது. கிணற்றடியை விட்டு அவர் வெளியேறினார்.
“குளிக்க ஆயத்தமே…..” தாடையில் பதித்திருந்த பவுன் பற்கள் பளபளக்கச் சின்னத்தம்பி மாஸ்ரர் குழைகிறார்.
விறாந்தைக்குள் நுழைந்த ஜி. எஸ்சை நிழல் போலத் தொடர்ந்த மாஸ்டர் கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.
“நானும் எத்தினை நாளா அலையுறன்…..” ஜி எஸ்சின் முகத்தைப் பார்க்காமல் மாஸ்ரர் கூறுகிறார்.
தனது ஆசிரியத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொத்தணி அதிபராக வால் பிடித்தும் கால் பிடித்தும் கிடைக்காமல் ஓய்வு கொண்டவர் சின்னத்தம்பி. தம்மைத் தாமே கிராமத்தின் பெரியவர்களாக்கிக் கொண்டவர்களின் தலைமகன் இவர் கிராம அலுவலரால் அமைக்கப்படும் எந்தக் குழுவிலும் இவரது பங்களிப்பு இருக்கும். அப்படிக் கிடைக்காது விட்டாலும் கிடைக்கச் செய்யும் உத்திகள் இவருக்குக் கைவந்தவை.
மாஸ்ரரின் மகளொருத்தி தற்பொழுது சகல வசதிகளையுடைய வீடொன்றில் குடித்தனத்தோடு யாழ்ப்பாணத்தில் வசிக்கிறாள். மருமகன் பெரியதொரு முதலாளி, பலசரக்குக் கடையொன்றின் உரிமையாளன். மகளுக்குச் சீதனமாகக் கொடுத்த வீடு தற்பொழுது நெற் களஞ்சியமாக விளங்குகிறது. அவளுக்குச் சொந்தமான காணியில் அறுவடை செய்யப்படும் நெல் இதில் களஞ்சியப் படுத்தப்படுகிறது!
“பிள்ளையளின்ர லீவுக்கு வந்துதானே போறவ…”
நெற்களஞ்சியமாகப் பாவிக்கப்படும் வீட்டைக் காட்டி யாழ்ப்பாணத்தில் இருக்கும் குடும்பத்திற்கு மாஸ்ரர் இலவச உலர் உணவு அட்டை தரும்படி ஜிஎஸ்சை நெருக்கிக் கொண்டிருக்கிறார். அந்தக் கிராமப் பிரிவில் நிகழ்ந்த இறப்புக்களை – பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் இவைகளனைத்தையும் ஜிஎஸ்சிடம் ஒப்புவித்து எத்தனையோ தரம் இரந்து விட்டார்.
“உங்களிட மகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் மட்டும் அவவுக்கு நீங்கள் காட் வாங்க மாட்டியள். நீங்களொரு விஷயமறிந்த ஆளெண்டுதான் நான் இம்மட்டும் கதைக்கிறன்…..” ஜிஎஸ் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கிறார்.
“அவ தன்ர வீட்டுக்கு வரத்தான் போறா. அவர் கனடாவுக்குப் போகப் போகிறார்…..” மாஸ்ரர் எழுந்து கொள்கிறார். முகத்தில் குழப்ப முத்திரை.
“அப்டி வாற நேரம் பாப்பம்….” ஜி எஸ்சின் குரலில் ஆத்திரம் ஆட்சி புரிகின்றது.
மாஸ்ரரின் மஞ்சள் நிற முகம் கருகிவிட்டது. இறங்குகிறார். அவரது வாய் எதையோவெல்லாம் முணுமுணுக்கிறது.
“இவள்தான் ஒரு ஜென்ரில் மென் ஜி. எஸ். வீட்டில் நிண்ட நாய் பூனைக்கெல்லாம் கூப்பன் குடுத்தவங்கள், அவங்களெல்லோ ஜி எஸ் மார்”
வேலியில் சாத்தி வைத்திருந்த சைக்கிளை இழுத்து எடுத்துச் சைக்கிள் சீற்றில் குந்தி வேட்டித் தலைப்பை இழுத்து ஒதுக்கிக் கொண்டு ஜிஎஸ் வீட்டைத் திரும்பிப் பார்த்து பெருத்த செருமலோடு காறித் துப்புகிறார்.
“ஜி எஸ் வேலையா செய்யப் போறீர்…. பாக்கிறன்”
‘மாஸ்ரர் இஞ்சை நில்லுங்க’ காலை இடறிய சாரத்தைத் துக்கிக் கட்டிக் கொண்டு ஜிஎஸ் ஓடுகிறார். சவாலைச் சந்திக்கும் கம்பீரம் அவர் உடலில்.
கமலம் துடிதுடித்துப் போய் விட்டாள். என்ன செய்வதென்ற ஏக்கம்!
கத்திக் கூட்டுச் சத்தம் கடகடவென ஒலிக்கச் சின்னப்பன் ஓடிவந்து கமலத்தைக் கடந்து சென்றான்.
“மாஸ்ரருக்கு அறளை பேந்திட்டுது நீங்க வீட்ட போங்க” கேற்றடியில் வைத்து சின்னப்பன் ஜிஎஸ்சின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனது பிடி வலியை ஏற்படுத்தியது.
“பாக்கப் போறேராம். பார்க்கட்டுமென்.”
“சும்மா போங்க ஜிஎஸ்… அவர் இப்படித்தான்…”
அவன் பேச்சு ஜி.எஸ்சைச் சமாதானப் படுத்தியது. திரும்பி விட்டார்.
கண்ணுக்குத் தெரியாத தூரம் மாஸ்ரர் சென்று விட்டார்.
நடந்து முடிந்த சம்பவம் கமலத்தின் உள்ளத்தைச் சிராய்த்து விட்டது. கணவன் முன் சிலையாக நின்றாள். கண்கள் சொரிந்தன. அவளால் என்னதான் செய்ய முடியும்!
ஜிஎஸ்சின் இரண்டு தம்பிமார் அவுஸ்திரேலியாவில். தம்மோடு தமையனையும் சேரும்படி எழுதிய கடிதங்கள் ஜிஎஸ்சின் லாச்சிக்குள் பள்ளி கொள்கின்றன.
“அகதி எண்டாலும் சொந்த மண்ணில் இருப்பம் கமலம்…”
“திண்டாக் கரும்புதான் ஐயா. சோக்கான கயமீன்…”
மீன் பையைக் கமலம் பெற்றுக் கொண்டாள். படியைத் தோள் சால்வையால் துப்பரவு செய்து அதில் இன்னாசி உட்கார்ந்தான்.
‘ம்பா… ம்பா…’ செங்காரிப் பசு கத்தியது.
‘செங்காரி, மாட்டைத் தேடுது இன்னாசி’
‘காட்டுக்க வரத்து நாம்பனொண்டு திரியது. வெய்யில் சரிய அவுட்டுக் கொண்டு போறன் ஜி.எஸ்….’
‘மறந்து போடாத….’
‘இந்த வீட்டு அலுவலை நான் எப்பவாகிலும் மறந்தனானா?’
‘ஐயா சொல்லிப் போட்டே ரெண்டு நான் குசினிக்க இருக்கேக்க தெல் ஒட்டாத’ கமலம் ஒலிபெருக்கியாக அலறினாள்.
ஏனோ அவள் மனம் எக்காளம் கொண்டு குதூகலித்தது. இன்னாசியின் விஷயம் கைகூடப் போகும் கட்டத்தை நெருங்குகின்றதென்ற பிரக்ஞையாக்கும் !
‘எல்லாம் உங்கட கையில தானாம் இருக்கு, டி. ஆர். ஒ. கந்தோரில வேலை பாக்கிற பொடியன் ஒருத்தனைக் கேட்டனான்.’
வழியில் ஒருத்தன் சந்தோஷமாகக் கொடுத்த தாம்பூலத்தைக் குதப்பியபடி இன்னாசி தனது தணியாத தாகத்தை வெளிப்படுத்தினான்.
“உவங்கள் உப்புடித்தான் கொழுவி விடுவாங்கள்.”
“சட்டம் இடங்கொடுத்தா நான் உனக்குக் காட் தருவன் தானே” ஜிஎஸ்சின் பேச்சுக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு விமானக் குண்டு வெடிப்பின் தாக்கம்! இதயம் மரத்ததோவென்ற உணர்வு!
சலனங்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யாமல் பொன்ராசா ஜிஎஸ் தனக்கிடப்பட்ட வரம்புகளுக்குள் நிற்கிறார். அவர் மனத்திடம் இரும்பென வலுத்திருந்தது.
“அதுசரி ஐயா உந்தச் சட்டங்களுக்கு எம்புடுறது இந்த ஏழைச் சனங்கள்தானா.” இன்னாசியின் சொற்கள் அழுத்தமாகவே இருந்தன.
ஜிஎஸ் திடுக்கிட்டுச் சமாளித்துக் கொண்டார்.
‘எனக்குத் தருமப் பணம் தந்த சீமான் நீங்கள்தான். நான் உங்களைக் குற்றம் சொல்ல இல்லை.’ அவன் இப்படிச் சொன்னது ஜிஎஸ்சுக்குச் சற்று ஆறுதலாகவே இருந்தது. தன்னை இனங்கண்டு கொண்ட ஒருவன் முன், தான் இருப்பதையிட்டு மகிழ்ந்தார்.
எய்தவர்களையும் அம்புகளையும் இனங்கண்டு கொள்ளும் ஆற்றல் இன்னாசி போன்றவர்களுக்குத் தான் உண்டோவென ஜிஎஸ் சிந்தித்தார்.
“கமலம் ……. உந்த வயிறு காஞ்சதுகளுக்கிருக்கிற புத்தி என்னத்துக்குத்தான்… உந்தச் சொத்துப்பத்து உள்ளதுகளுக்கு இல்லாமல் போச்சு…” ஜிஎஸ் இப்படிச் சொன்னது இன்னாசியை மட்டுமின்றிக் கமலத்தையும் திருப்திப்படுத்தியது.
– மல்லிகை, மார்ச் – 1994