இன்றைய ராசிபலன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 1,403 
 
 

பணியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாய் பொழுதை அரட்டையும், தூக்கமுமாக கழித்து கொண்டிருக்கும் அம்மையப்பன் அன்று காலை கண் விழித்து எழுந்தவர் காலை நேர கடன்களை முடித்து ‘அப்பாடி’ என்று நாற்காலியில் உட்காரவும் அவர் மனைவி ஒரு தம்ளரில் காபி கொண்டு வந்து கொடுக்கவும் சரியாக இருந்தது. 

கையில் கொடுத்த காப்பியை ருசிக்க வாயில் வைக்கப்போனவர் மேல் சர்ரென்று வந்து மோதிய செய்தித்தாளால் கை ஒழுங்கு தவற சில துளி காப்பி கற்றைகள் அவர் வெறுமனே அணிந்திருந்த முண்டா பனியன் மேல் சிதிறி விழுந்தன. 

அவருக்கு வந்த கோபம் அப்படி இப்படி சொல்ல முடியவில்லை. அறிவு கெட்டவன், மனுசன் உட்கார்ந்திருக்கறது தெரியாம பேப்பரை விசிறிட்டு போறான் பாரு உதடு முணு முணுக்க திட்டியவரை சட்டை செய்யாமல் அந்த பேப்பர் போடும் பையன் சைக்கிளில் பறந்து கொண்டிருந்தான். (பாவம் உண்மையிலேயே அவனுக்கு இவர் மேல் விழுந்தது தெரியாமல் இருந்திருக்கலாம்)  

காப்பியை கொடுத்து விட்டு உள்ளெ சென்றிருந்த மனைவி இவரின் முணு முணுப்பு சப்தம் கேட்டு வெளியே வந்தவள் செய்தித்தாளை பார்த்துத்தான் இவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து “என்னாங்க நியூஸ் பேப்பரை பார்த்து பேசிகிட்டிருக்கறீங்க? என்று அவரின் கோபத்தில் எரியும் தீயில் கொஞ்சம் எண்ணை ஊற்றினாள். 

அறிவு கெட்டவன் ஆள் மேலயே வீசிட்டு போறான், இவர், காப்பியை குடித்து முடித்து போனவனின் திசையை பார்த்து சொன்னவரை கண்டு கொள்ளாமல் கீழேயே உட்கார்ந்து செய்தித்தாளை விரித்து படிக்க ஆரம்பித்து விட்டாள் அவர் மனைவி. 

இவருக்கு இன்னும் கோபம் அதிகரித்தது, காப்பி சிந்தியதும், அவன் கண்டு கொள்ளாமல் போனதுமில்லாமல் இப்பொழுது பேப்பர் படிக்கலாம் என்று நினைத்தவர் எண்ணத்தில் மண் விழ அவர் மனைவி செய்தித்தாளில் ஆழ்ந்து விட்டாள். இனி அவருக்கு படிக்க கிடைக்க அரைமணிக்கு மேல் ஆகிவிடும். அதுவரை என்ன செய்வது? சரி ‘வாக்கிங்’ கிளம்ப வேண்டியதுதான்,  

எழுந்தவர் ‘வாக்கிங்’ செல்வதற்கு உடை மாற்ற உள் அறைக்கு சென்றார். பத்து நிமிடத்தில் வெளியில் கிளம்ப ஆயத்தமானவர் மனைவியிடம் நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வாறேன், கிளம்பினார். அவர் மனைவி”ஏங்க உங்களைத்தான்” கூப்பிடவும் எரிச்சலுடன் திரும்பி என்ன? கோபத்தில் அவர் குரல் உறுமுவது போல கேட்ட்து. 

இன்னைக்கு உங்க ராசிக்கு பேப்பர்ல ‘வீண் சண்டை சச்சரவுன்னு’ போட்டிருக்குது, அதனால எங்கயும் ‘வாய் கொடுக்காம’ வந்து சேருங்க. மனைவியின் பேச்சால் அதிருப்தி தெரிய அதுதான் காலையில இருந்து தெரியுதே, முணங்கியவாறு வெளியே கிளம்பினார். 

காலை சூழல் நன்றாக வெளுத்து விட்டதால் இன்று நடை நம் நகரை சுற்றி மட்டும் செல்வோம் என்று நடக்க ஆரம்பித்தார். அம்மையப்பன், அம்மையப்பன். குரல் வர திரும்பி பார்த்தவர் லோகநாதன் அவரை நோக்கி வந்து கொண்டிருந் ததை பார்த்தார். என்ன இன்னைக்கு லேட்டா? கேட்டபடி அருகில வந்தவர் நான் ஒரு ‘ரவுண்ட்’ முடிச்சுட்டேன், சரி உங்க கூட இன்னும் ஒரு ‘ரவுண்ட்’ நடந்து வாறேன், கூட நடக்க இருவரும் மெல்ல பேசிவாறு நடக்க ஆரம்பித்தனர். 

நடை பயிற்சி முடிந்து நகரின் மத்தியில் இருந்த பிள்ளையார் கோயில் வாசலில் போடப்பட்டிருந்த ‘பெஞ்ச்’ ஒன்றில் இருவரும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அங்கு ஒருவன் இரு சக்கர வாகனத்தை வைத்து விழித்து கொண்டிருப்பதை கண்டனர். 

இருவரும் நகரில் வசிப்பவர்களாதலால் வண்டியுடன் நிற்கும் அவனை பார்த்து என்ன தம்பி யாரை எதிர்பார்த்து இங்க நிக்கறே? அக்கறையுடன் கேட்டனர்.  

இந்த நகரக்காரர் ஒருத்தர் இந்த ‘வண்டிய சர்வீசுக்கு’ எங்க வொர்க்ஷாபுல விட்டுட்டு வந்தாருங்க, ‘நேத்து நைட்டு’ இங்க கொடுக்க வந்தேன், ஆனா வீட்டை கண்டு பிடிக்க முடியலை, அதனால காலையில கொண்டு விட்டுட்டு வந்துடுன்னு ஓணர் அனுப்பிச்சாரு, 

இந்த நகர்ல இருந்தா? யாராய் இருக்கும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு சரி செல் நம்பர் கொடுத்திருப்பாருல்ல, அதுல கூப்பிட்டு பாக்கறது? 

அதுலதானுங்க நேத்துலயிருந்து டிரை பண்ணிகிட்டிருக்கேன், எடுக்க மாட்டேங்கறாரு, கோயில் பக்கத்துலதான் வீடுன்னாரு, எதுன்னுதான் கண்டு பிடிக்க முடியலை..பையன் புலம்பினான். 

அவனின் புலம்பலை சகிக்க முடியாத அம்மையப்பன் சரி அந்த நம்பரை கொடு, நான் டிரை பண்ணறேன், அவர் வீடு எங்கயின்னு? பையனிடம் நம்பரை வாங்கி இவர் கையில் வைத்திருந்த செல்போனில் போட்டு அந்த நம்பருக்கு அழுத்தினார். 

“ரிங்க்”போய்க்கொண்டே இருந்த்து. மீண்டும் மீண்டும் முயற்சித்தார். சட்டென போன் எடுக்கப்படும் சத்தம் கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் ஹலோ..! 

எதிரிலிருந்து ஹலோ..! 

அவசரமாய் சார் நீங்க எங்க இருக்கறீங்க? 

ஒரு நிமிடம் மெளனம்..இப்ப அமெரிக்காவுல இருக்கேன்.. 

இந்த பதிலால் அதிர்ந்த அம்மையப்பன் சார்.. நீங்க வண்டிய சர்வீசுக்கு கொடுத்திருந்தீங்கலாம், அதைய திருப்பி கொடுக்கறதுக்கு ஒருத்தர் வந்திருக்காரு, அவர் உங்க வீட்டை தேடிகிட்ட்டிருக்காரு. 

எதிர் குரல்: அதுக்கு நான் என்ன பண்ணனும்? 

சார் என்ன இப்படி பேசறீங்க? உங்க வீட்டை சொன்னீங்கன்னா நானே அவரை அங்க அனுப்பி வைப்பேன். 

ஏன் அவனுக்கு வழி தெரியாதா? இல்லை அவனுக்கு நீங்க என்ன வேலையாளா? 

அம்மையப்பனுக்கு சுருதி ஏற ஆரம்பித்திருந்தது, என்னய்யா பேசறே? உனக்கு ஒரு ‘ஹெல்ப்’ பண்ணலாமுன்னு நினைச்சேன் பாரு.. 

நான் கேட்டனா, எனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி, உங்க வேலை என்னவோ அதைய பாப்பியா அதை விட்டுட்டு.. 

முகம் எல்லாம் சிவக்க கோபத்தில் என்ன பேசுவது என்று இவர் தடுமாறி கொண்டிருக்க அதுவரை அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்த லோகநாதன், இங்க கொடுங்க போனை அவரிடமிருந்து வலுகட்டாயமாக வாங்கியவர் “யோவ்” நீ மனுசனா? அடுத்து வந்த அவரது வசவு வார்த்தைகளை நாம் எழுத்தில் எழுத கூடாது. 

இவர்களின் விசாரிப்பு போகிற போக்கை பார்த்த அந்த வண்டியை கொடுக்க வந்த பையன் சத்தமில்லாமல் வண்டியை திருப்பிக் கொண்டு கிளம்பி விட்டான். 

“ஒத்தைக்கொத்தை பாத்துக்கலாம” நீ எங்க இருக்கேன்னு சொல்லு என்ற நமது வழக்கமான பஞ்ச் வசனங்களை பேசிக்கொண்டிருந்த லோகநாதன் இறுதியாக அவன் கோயில் பின்னாடிதான் இருக்கானாம், தைரியம் இருந்தா வான்னு சவால் விடறான், வாங்க போய் அவனா நாமளான்னு பார்த்துடுவோம். 

அவன் மேல் அளவு கடந்த கோபம் இருந்தாலும் அம்மையப்பனுக்கு இந்த சூழல் நம்மை எங்கோ கொண்டு போகிறது என்பதை உணர்ந்தாலும் பலி ஆடு போல லோகநாதனின் பின்னால் வீராவேசத்தை காட்டிக்கொண்டு நடந்தார். 

இவர்கள் அவன் வீட்டில் போய் நிற்கவும் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் வேகமாக ஓடி வந்து சார்..சார்..கொஞ்சம் பொறுமையா இருங்க, அவர்தான் அப்படி பேசறாருன்னா நீங்க கூட. சரிக்கு சம்மா சண்டைக்கு வர்றீங்களே ! அவளின் சமாதானப் பேச்சு இவர்களை கடிவாளமிட்டு நிறுத்தி விட.. 

என்னம்மா நீங்க நாங்க என்ன சண்டைக்கா வந்தோம், வீடு எங்கன்னுதான கேட்டோம்? அதுக்கோ என்னமோ பேசறாரு அவரு..கோபமாய் பொழிந்தார் லோகநாதன்.. 

சார் அவருக்கு “ஹார்ட் ஆபரேசன்”பண்ணி ஆறு மாசந்தான் ஆச்சு. அடிக்கடி இப்படி பேசி சண்டை இழுத்துக்கறாரு..மனைவி சாந்தமாக சொல்ல, 

சரிம்மா நாங்க போறோம், அவரை கொஞ்சம் அமைதியா பேச சொல்லுங்க.. 

திரும்ப நினைக்க..சர்ரென்று ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து நான்கைந்து வெள்ளை வேட்டிகள் இறங்கி என்ன என்ன பிரச்சினை? மாப்பிள்ளை போன் பண்ணாரு, வீட்டுக்குள்ள புகுந்து அடிக்க வர்றாங்களாமா? யாரு இவங்களா? விரோதமாய் பார்த்து இவர்களை நோக்கி வர.. 

அம்மையப்பனுக்கும், லோக்நாதனுக்கும் உள்ளுக்குள் சுரம் வர..அதை காட்டிக்கொள்ளாமல் யாரு சண்டைக்கு வந்தா? இந்தம்மா கிட்டே முதல்ல கேளுங்க என்ன நடந்துச்சுன்னு? தைரியமாய் பேசினாலும் உள்ளுக்குள் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் இருவருக்கும் இருந்தது. 

அதற்குள் அந்த பெண்மணி நடந்த விஷயங்களை சொல்ல அவர்கள் தங்களது கோப பார்வையை மாற்றிக்கொண்டு, மாப்பிள்ளை பேசறதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க..சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றனர். 

இவர்களுக்கு அப்பாடி இந்த பிரச்சினை விட்டால் போதும் என்றிருந்தது. 

அலுத்து, களைத்து வீட்டுக்குள் நுழைந்த அம்மையப்பனை பார்த்த அவர் மனைவி பாவம் இன்னைக்கு ரொம்ப தூரம் நடந்துட்டு வந்திருப்பாரு என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவருக்கு டிபன் செய்ய சமையலறைக்கு விரைந்தாள். 

களைத்து உட்கார்ந்த அம்மையப்பன் அருகில் அவர் படிப்பதற்காக மடித்து வைத்திருந்த செய்தித்தாளில் முதலில் தேடியது அவருடைய ராசிபலனை படிக்க.  

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *