இன்று மற்றுமொரு நேற்றே! 24×7

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,273 
 

”நமீதாவைப் பிடிக்குமா, பிடிக்காதா?” இதுதான் கிரியின் மனசாட்சியைக் குலுக்கும் கேள்வி. ‘என்னப்பா இந்தப் பொண்ணு இப்பிடிக் காட்டுது?’ என்பது சமூகக் கோபம். ‘ஆனா, முகத்துல இன்னும் இன்னொசன்ஸ் இருக்குல்ல…’ என்கிறதே ரசனைத் தாகம். நைட் ஷோ வந்த படத்தில் நமீதாவுக்கு இரண்டு குத்துப்பாட்டு. பயலுக்கு வெச்ச கண்ணு வாங்கலை. அது தைச்ச மனசு தாங்கலை. நமீ படத்தில் செகண்ட் ஹீரோயின்தான். ஏனென்று தெரியவில்லை… மெயின் நாயகியை அவனுக்குப் பிடிக்கவில்லை. இன்னொரு நாள் அந்த நாயகி மேலும் சாஃப்ட்கார்னர் வருமோ என்று ஃப்ராய்டு லெவலுக்கு அந்த ஃப்ராடு யோசித்தபோது படம் முடிந்திருந்தது!

தியேட்டருக்கு வெளியே வரும்போது மணி 1.20. இருட்டும் ஈரமுமாகக் கிடக்கிறது நகரம். சாந்தி தியேட்டர் எதிரே உள்ள சப்வேயின் படிக்கட்டுகளில் அவள் நிற்கிறாள். வனதேவதை ஒன்று வழி தவறி, பசி இடறி, நல்லொழுக்கம் இழந்த நகரத்தின் நாய் மடியில் விழுந்துவிட்டதைப் போல, விழிகளின் உறக்கத்தில் கிறக்கத்தின் நடிப்பை மடித்துவைத்த மாது. ”ந்தா… ஏய்… உன்னைத்தான்…” என்றபடி பின்னால் அவள் வந்தால் என்ன செய்வது?

மூட்டை மூட்டையாக மனிதர்கள் தூங்கும் சுரங்கப் பாதையில் கிறங்கி நடக்கலாமோ… ஓர் உருவத்தின் குஷ்டக் காலில் இவன் இடறிவிட, பதறி எழுந்தது உருவம். அழுக்கேறிய துணிகள் சுற்றி சீழ் நாற்றம் பரவிய கிழவி. கிரியை உற்று ஊடுருவியது அந்த முது தேவதை. ”தூத்தேறி…ங்க” என்று அவள் எச்சிலில் எரிச்சல் உமிழ, தடுமாறித் திரும்பினான். படிக் கட்டில் காத்திருந்தவளைக் காணவில்லை. மஞ்சள் வெளிச்ச சாலையில் மாருதியில் ஏறிக்கொண்டு இருந்தாள். மனசு குமுற, டீக்கடை தேடினான். எங்கிருந்தாலும் தாழ்க!

கிரியின் பிரம்மச்சர்ய வசிப்பிடம், ஒரு பழைய ஹவுஸிங் போர்டு குடியிருப்பு. ‘ஏ’விலிருந்து ‘ஈ’ வரை அடுக்குகளும் அழுக்குகளும் கொண்டது. வழக்கம் போல எழுந்தவுடன், தனது ‘டி 1/3’ குடியிருப்பின் பால்கனிக்கு வந்தான். பழக்கம் போல எதிர்ப்புற ‘ஈ 1/3’ பால்கனிக்கு வந்தாள் அவள். காலை எழுந்தவுடன் தலை சீவல், பின்பு கனிவு தரும் நல்ல ஃபிகர் டாவல். எஃப்.எம்மில் தினமும் ஒரு பாடல். த்ரீஃபோர்த் பேன்ட், டிஷர்ட்டில் தலையில் சீப்பைச் செருகியபடி சேனல்களின் பின்னணி இசையுடன் வந்தாள். கழுத்தைச் சாய்த்து செல்போனில் பேசிச் சிரித்தபடி, கிரியை அலட்சியத்தின் அழகு சரியப் பார்த்தாள். இடையிடையே ‘வர்றேன் மம்மி…’, ‘ஏய், பாப்பு, என் சோப்பை யூஸ் பண்ணாத!’ என்றெல்லாம் அவள் குரல் கொடுக்க, ‘என்ன சோப் யூஸ் பண்ணுவா?’ எனப் பரிதவிக்க ஆரம்பித்தான். எஃப்.எம்மில் ‘ஹோஹோ… இந்தக் காதல் என்னும் பூதம் வந்து’ என அரற்றுகிறான் யுவன். பட்டென்று அவள் தலையில் அடித்தபடி அவனைப் பார்த்து ஏதோ சைகை செய்துவிட்டு உள்ளே போய்விட்டாள். பாவி மகளே… என்ன சொன்னாய்? ‘லூஸாப்பா நீ?’, ‘பிச்சுருவேன் பிச்சு’, ‘மூஞ்சும் மொகரையும் பாரு’, ‘அடுத்த ஸ்டெப் போகவே மாட்டியா?’, ஐயையோ… என்னடா சொன்னா?

கிடுகிடுவென டீக்கடைக்கு இறங்கினான் கிரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பனுடன் பைக்கில் காலேஜ் போவாள். பதிலுக்கு ஒரு சிக்னல் போட்டே ஆகணும் என நெஞ்சு கொதித்தது. பைக் கேட்டிலிருந்து திரும்பியது. இவன் நிற்பது அவளுக்குத் தெரியும். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வெடுக்கென்று எதிர் திசையில் முகம் திருப்பிப் போயே போய் விட்டாள். ‘ஆளும் அவளும்… அவ அப்பன் மூஞ்சப் பாரு. டோங்கிப் பய!’ கிரிக்கு வெறி ஏறியது. நெஞ்சை நீவிவிட்டபடி நடந்தான். போடி போ!

தண்ணி லாரி வந்து நின்றது. கையில் இரு பிளாஸ்டிக் குடம் ஏந்தி, லட்டு வாங்க வந்த குணா கமல் மாதிரி நின்றான் கிரி. ‘டீன்’டி முதல் ஆன்ட்டி வரை ஆளுக்கொரு நைட்டி. கனமான ஆன்ட்டிகள் நைட்டி மேல் துண்டு போட்டுக்கொள்வது இனமான உடன்படிக்கை. ”த கிரி… கொடம் வைடா!” பின் மண்டையில் ‘டொட்’டென்று யாரோ தட்ட, திரும்பினான். கிரிஜா படாவார்… அபார்ட்மென்ட்ஸின் அசோஸியேஷன் லேடி தாதா. வந்த புதிதில் படாவாரின் செந்நிறம், சேட்டு மொழி பார்த்து மரியாதையும் மயக்கமும்கொண்டு இருந்தான். ஒரு நாள் கோடம்பாக்கம் பாலத்தின் முன் ஒரு பஸ்ஸைத் தன் கைனடிக்கால் குறுக்காட்டிவிட்டு, படாவார் பேசிய பேச்சைக் கேட்ட பின் மயக்கம் தெளிந்து மரியாதை மட்டும் கூடியது. ‘பேமானி நாயே…’ என ஆரம்பித்து, ஒருவனை படாவார் பட்டை உரித்தபோது, ‘சோடுதோ சோடுதோ’ என பக்கத்தில் படபடப்பாக பம்மி நின்றார் ஆன்ட்டியின் கணவர். ”டேய் கிரி! எப்படா கல்யாணம்? ‘சி’ பிளாக்ல வீடு காலியாகுது. பாக்குறியா?” என்றாள் ஆன்ட்டி. துயரத்தின் குடம் தூக்கி நடந்தான் கிரி!

”தம்பி, போற வழியில அனுவை ஸ்கூல்ல விட்டுர்றீங்களா..?” ஆபீஸ் கிளம்ப இறங்கியபோது கீழ் ஃப்ளாட் அக்கா அனுவோடு நின்றாள். இவள் சந்தோஷமாகப் பேசி கிரி பார்த்ததே இல்லை. தியானத்தின் விரல்களில் உருளும் ருத்திராட்சை மாலை போல, மயானத்தின் நிரல்களில் மிரளும் தலைச்சம்பிள்ளை போல வாழ்ந்து வந்தாள் அவள். ”உன்ட்ட சொல்ல என்ன தம்பி… அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. போன் சுவிட்ச் ஆஃப்லயே இருக்கு. போன வாரம் வளர்மதி ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டா. அதுக்குக்கூட வரலை மனுஷன்!”

பைக்கில் கிரியை இறுக்கிக் கட்டிக்கொண்டாள் அனுக்குட்டி. ”அனுக்குட்டி, அதான் வளரு வெளியிலயே வர்லியா?” என்றவனைப் புரியாமல் பார்த்தாள். அனுவின் மூன்றாம் ஆண்டு பிறந்த நாளை மொபைலில் போட்டோ எடுத்தான். அனுவும் வளர்மதியும் பலூன்களுடன் சிரிக்கிற செம க்ளோஸப் படம்தான் இப்போதும் இவன் அலுவலக சிஸ்டத்தில் ஸ்க்ரீன் சேவர்.

வழியெல்லாம் மாணவிகள். கிரிக்கு ஒரு பிரச்னை உண்டு. யூனிஃபார்ம் மாணவிகளைப் பார்த்தால், நெஞ்சில் நேசக் காத்தாடி சுழலும். ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதா முதல், ‘காதல்’ சந்தியா வரை அவனைப் பால்யத்தின் நதியில் குதித்துக் குளிக்கக் கூப்பிடுவார்கள்!

மதியம் 12 மணி. சேல்ஸ் ரெப்பான கிரி இரண்டு அப்பாயின்மென்ட் முடித்து, மீனாட்சி காலேஜ் நிறுத்தம் பக்கமுள்ள பெட்டிக்கடையில் நிற்கிறான். பள்ளியிலிருந்து கல்லூரிக்குத் தாவும் ஒரே வருஷத்தில் இந்தப் பெண்கள் எப்படி மாறிவிடுகிறார்கள். ஆளுக்கொரு மொபைல் வைத்திருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்தின் நிழற்வெயில் குடையின் கீழ் பேசிச் சிரித்து, சிரித்து முறைக்கும் அவர்களுக்கு நடுவே கசகசத்து நிற்கிறார்கள் சில ஆன்ட்டிகள். பார்வைகள் கிடைக்காமல் பொருமினான் 10 அரியர்ஸ் கிரி!

ஸ்கூட்டி என்ற சனியனையும் துப்பட்டா என்ற துணியனையும் ஒழித்தே ஆக வேண்டும். யாருமற்ற தெருக்களின் மரத்தடியில், சிக்னலில், டிராஃபிக்கில் நிற்கிற ஸ்கூட்டி பெண்களின் மேல் அன்பு ஊறுகிறது. ஜெமினி சிக்னலில் பக்கத்தில் ஸ்கூட்டியில் ஒருத்தி இயர் போனில் பேசியபடி நிற்கிறாள். பைக்கில் ஒருவன் பின்னால் ஒருத்தி துப்பட்டாவில் முகம் மூடி முதுகில் சாய்கிறாள். என்னடா நாடு இது? ஸ்கூட்டி வைத்திருக்கும் ஒருத்தியோ, பைக்கமர்ந்து துப்பட்டாவில் முகம் மூடுபவளோ கிடைக்காத ஆண்களை ஆழி சூழட்டும்.

கிரி தினசரி ரிப்போர்ட்டைச் சமர்ப்பிக்க மாலை அலுவலகம் மீண்டான். டீம் லீடர், மிஸஸ்.மேதா. மெல்லிய லிப்ஸ்டிக், கலரிங் கூந்தல், பெரும்பாலும் பிளேசர் சூட்டில் வருவாள். எப்போதும் லேப்டாப்பில் லயிப்பவள் கொஞ்சம் முகம் தூக்கி, ”யெஸ் கிரி, வாட்ஸ் யுவர் ஏனிங்..?” என்பாள் இன்று போலவே. ஒரு சனிக்கிழமை இரவில் டவர்ஸில் ஃப்ரெஞ்ச் தாடி தொப்பைக் கணவனுடன் அவள் டகீலா சுவைத்தபடி தள்’ஆடியதை’ப் பார்த்திருக்கிறான். ‘ம்ஹ¨ம்… டகீலாவுக்குத் தேறாது!’ என்று சொல்லி இருக்கலாமோ?

சாயங்காலத்தின் சாலையில் எத்தனைவிதமான பெண்கள். ஹேண்ட்பேக் ஊஞ்சலாடப் பேசியபடி, கூந்தல் பூ வதங்கி உதிர பேருந்தில் வாடிய மணம் பரப்பியபடி, ஒரே நிறத்தில் சேலை கட்டி கூட்டமாய் நடந்தபடி, துப்பட்டா சரிய காரோட்டியபடி, குழந்தை ஏந்திப் பிச்சையெடுத்தபடி, இறுக்கமான டிஷர்ட்டுகளில் சட்டம் ஒழுங்கைக் கெடுத்தபடி, அரைபாடி வண்டியைப் புருஷன் ஓட்ட, பின்னால் அமர்ந்து மாம்பழம் தின்றபடி… பைக்கில் இந்திப் படம் பார்க்க சத்யம் தியேட்டர் பறக்கிறான் கிரி. பில்லியனில் பால்டு ஹெட் கம்பெனி சகா. சகாக்கள்எல்லாம் சாவுங்கடா!

கிரிக்கு இந்தி தெரியாது. இந்தி ஃபிகர்கள் தெரியும். மலையாளம் மற்றும் இந்தி பெண்களை உடனடியாக அடையாளம் காணலாம். மிகு வனப்பும், மினுமினுப்பும், பெரு மணமுமாய் இன்டர்வெல்லில் அவர்கள் உலவுவது, ஓசியில் கிடைக்கும் உலக சினிமா. ஒருத்தி டிஷர்ட் திமிற, கிரியை அமுக்கிக்கொண்டு எட்டி கார்ன்மசால் வாங்கினாள். உலகம் ஒருகணம் உறையாதா என கிரி விரும்பித் திரும்பியபோதே, குட்கா வாயுடன் வந்த இந்தி நந்தி ஒருவன் அவளை அணைத்து அழைத்துச் சென்றான். படம் நல்லாவே இல்லை சார்!

சிறுகூவம் ஓடும் பாலம். பக்கத்தில் டாஸ்மாக். டாஸ்மாக்கில் கிரி. கிரிக்குள் ‘ஈ 1/3’ சைகைக்காரி. கூட வந்தவன் பேசியதெல்லாம் ஏறவே இல்லை. ‘என்ன சொன்னா அவ..?’ மொத்தம் இரண்டு குவார்ட்டர். ரெண்டு கொலை மிரட்டல். மூன்று பாவ மன்னிப்பு. 14 எஸ்.எம்.எஸ். அரை சிக்கன் மஞ்சூரி. ஒரு முட்டை பரோட்டா.

தன் அறையின் பால்கனியில் ஆவேசமாக நின்றான் கிரி. அரைஇருட்டில் நின்ற எதிர் பால்கனிக்கு அவள் வந்தாள். காதில் போன். மங்கலாய் அசைகிறாள் அழகி. கிரிவலத்துக்குத் தயாரானான். கையைக் காற்றில் வீசி ஏதேதோ சிக்னல்கள் போட்டான். அவளோ அசையாது நின்றாள். சட்டென்று திரும்பி விளக்கை உயிர்ப்பித்தாள். அடடா… அது அந்தப் பெண்ணின் அப்பா. குரங்கு சலாம் போல குறுகுறுப்பாக அவர் தன் நெற்றியில் கை வைத்து ‘யார் இந்த சைக்கோ கொலைகாரன்?’ என்ற ரீதியில் கிரியின் அங்க அடையாளங்கள் தேட, பொசுக்கென்று போதை வடிந்தது கிரிக்கு. உள்ளே ஓடிச் சாய்ந்தான். தேடி ஆள் வருமோ என இதயம் அடித்தபோதே, மொபைல் துடித்தது. ‘ஹோம்’ என டிஸ்ப்ளே ப்ளிங்குவது புரிபடாமல் எடுத்தான்.

”ழ்ழ்ழ்ழோ!”

”யப்பா, நான் அம்மா பேசுறேம்ப்பா!”

”ழ்ழாழூ?”

”கிரி… கிரி… என்னடா குரல் ஒரு மாதிரி இருக்கு?”

”ம்ம்ம்மா!”

”டேய்! என்னடா பேசவே மாட்டேங்கிற. அம்மான்னு ஒருத்தி இருக்கிறதே மறந்துபோச்சா?”

– 30th ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *