இன்று இவர்கள்தான் இராவணர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 1,964 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான்கு சுவர்களும் கதவு ஜன்னல்களும் இல்லாமலும் இரண்டரைப்பக்கம் செத்தையும், அரைப்பாகம் பிந்தான் சாக்கும், முன்பக்கம் பன்னாங்குமாக உள்ள அந்த அடைப்பு ஆனந்தனின் நடையுடை பாவனைகளுக்குக் களமாக அமையும் தகுதியற்றது. என்றாலும் அந்த அடைப்பையே களமாக ஏற்று வாழ வேண்டிய அபாக்கியப் பிறவி எடுத்து விட்டானே.!

குடிசைச் செத்தையின் நிலைக்கம்புகளில் பாடஞ் செதுக்கப்பட்ட அந்தக் கம்பு மாத்திரம் இல்லையென்றால் ஆனந்தனின் நிலைமை கஷ்டமாகத்தான் இருக்கும். உயரமான அந்தக் கண்ணாடிக்குக் கொழுகொம்பாகிச் சேவிக்குந் தகுதி அதற்கு மாத்திரந்தான் உண்டு.

கண்ணாடி அவன் உருவத்தின் முக்கால் பாகத்தை எடுத்துக் காட்டியது சும்மா சொல்லக் கூடாது. அவன் கண்ணாடியின் முன் நிற்கத் தொடங்கிக் கால்மணித்தியாலந்தான் ஆகியிருக்கும். குறைந்தது அரை மணித்தியலத்தையாவது அதன் முன் கழிப்பது மாமூலாகிப் போன விஷயம். அவனுக்கு வாக்கு வடிவான முகவாகு, எடுப்பான தேகக்கட்டு, இருந்தும் சருமம் மாத்திரம் மயிருக்குத் தம்பியாகி மானபங்கப்படுத்துகிறதே என்ற கரிப்புக் கொஞ்சம் உண்டு. ஆனாலும் அதை ஈடுசெய்வதற்கென்றே அமைந்துவிட்டது கருகருவென்று சுருண்ட விறைப்பான கேசம். கேசத்தின் சுந்தரமயத்தில் அவனுக்கு இறுமாப்பதிகம். இந்தச் சமன்பாட்டில் கிடைக்கும் அமைதி காரணமாகத்தான் நண்பர் மத்தியில் தலைகவிழாது நடமாடுகிறான். அதற்காக…….ஒப்பனைக்கலையை அவன் அனாதரவாக விட வேண்டுமா?

வாழ்க்கையின் திருப்புமுனையாய் அமையப் போகும் நற்செய்தியை அறிந்துவரக் கந்தோருக்குக் கிளம்பும் அவசரம் அவனுக்கு. எனவேதான் அவசர அவசரமாக ஒப்பனையைக் கவனித்தான். காதுகளையும், நெற்றியையும், பிடரியையும், புருவங்களையும் மறைக்கக்கூடிய வகிடெடுத்து வார்ந்த கேசத்தில் ஏதுகுறை இருக்கிறது என்று கருதிய இடங்களில் சீப்பை மெல்ல மேயவிட்டெடுத்தான்.

சீப்பைத் துடைத்தெடுத்துப் புத்தகங்கள் திணிக்கப்பட்டிருக்கும் பக்கீஸ் பெட்டியின்மேல் வைத்துவிட்டுப் பக்கவாட்டில் கண்ணாடிப் பக்கமாகத் திரும்பிய ஆனந்தனின் நெஞ்சுக்குள் பக்கென்றது சீப்பை விரைந்தெடுத்து இடப்பக்கத்துக் கன்னக்கிறுதாவில் மேயவிட்டான். அப்பாடா! இப்போது நெஞ்சுக்குள் நீர் வீழ்ந்து விட்டது.

இறுக்கமான காற்சட்டையின் இடுப்புப்பட்டையில் அகலமான ஆட்டுத்தோல் வாரை அணிந்ததோடு ஒப்பனை பூரணத்துவம் பெற்றது. சற்றுப் பின்நகர்ந்து உருவம் முழுவதையும் கண்ணாடியில் பார்த்தான். கண்ணாடிக்கு மேலே அவனது அபிமான நட்சத்திரம் ஆனந்தகீர்த்தியின் மூவர்ணப்படம் கட்டம்போட்டு மாட்டபட்டிருக்கின்றது. ஆனந்தகீர்த்தியின் அசலாகவே இருக்கிறேன் என்பதை வழமைபோல் நிச்சயம் செய்து கொண்டான். படத்துக்குப்படம் காட்சிக்குக்காட்சி விதம்விதமான ‘போஸ்’ கொடுக்கும் ஆனந்தகீர்த்தி நேற்றிரவுதான் பார்த்த புதிய படத்தில் கதாநாயகியுடன் நிகழ்ந்த முதலாவது சந்திப்பில் கொடுத்த அற்புதமான போஸை நினைவுகூர்ந்தான்.

ஆனந்தகீர்த்தி மாறன்துணை கொண்டு காதலின் அரிச்சுவடியை ஆரம்பித்த ஸ்ரைல் என்ன அற்புதமானது! அவர் எந்தப் படத்திலுமே செய்யாத புதுமை! எந்த நடிகனுக்கும் கைவர முடியாத நீங்காத பெருமை!

ஆனந்தனின் நெஞ்சுக்குள் அலைபுரண்ட வார்த்தைகள் தேனின் சுவையைத் திரேகமெங்கும் எடுத்துச் சென்றன. அந்த அற்புதத்தைத் தன்னால் நிகழ்த்த முடிகிறதா என்பதைக் கண்ணாடிக்குள் பரீட்சை பண்ணினான். “ஆகா என்ன அருமையாகச் செய்கிறேன். நான் மாத்திரம் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால்….. ஆனந்தகீர்த்தியின் வாரிசாகத் தென்னாட்டுத் திரைவானில் ஜொலிப்பேனே…ம் இந்தச் சிறீலங்காவிலே பிறந்து வாத்திவேலைக்கும், கால்கடுக்க நிற்கும் கண்டக்டர் கண்றாவிக்கும் காக்காய் பிடித்தலைய வேண்டிக்கிடக்கு….. என்று அலுத்துக் கொண்டே கட்டிலில் சாய்ந்தான். அது கிறீச்சிட்டுக் கால்மாடு, தலைமாடு என்ற ஏறு குறைக்கிடமில்லாது சாய்ந்தாடி ஓய்ந்தது. அது அவனது பெற்றோருக்குச் சீதனமாகக் கிடைத்த மணவறைக் கட்டில். மூட்டுக்களில் விரிசல் விழுந்து ஓய்வுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த “ஓல்ட் மொடலைத்” தூக்கியெறிந்துவிட்டு நவீன மோஸ்தர் கட்டிலை அந்த இடத்தில் போட வேண்டுமென்ற அவனது எண்ணம் எப்போது நிறைவேறுமோ, சென்ற வாரந்தான் அதன் மேக்கட்டிச் சட்டங்களைத் தூக்கி எறிந்தான்.

செத்தையிலிருந்தெழுந்த சரசரப்புக்கேட்டுச் சுதாகரித்தெழுந்தான். செத்தையின் பல இடங்களில் கிடுகுகள் கட்டறுந்து தொங்குகின்றன. கொல்லைப்பக்கத்திலிருந்து கடுவனும் மறியுமான இரண்டு பூனைகள் செத்தையினூடாகக் கட்டிலின் தலைமாட்டில் கிடக்கும் மேசையில் தாவின. மேசையிலிருந்த அழகுசாதனப் பொருட்களில் சிலதைத் தட்டிவிட்டு வாசல் பக்கமாகத் துள்ளி ஓடின.

“அம்மா! இதென்ன வீடா? ஸீவா? பூனை செய்து விட்டுப் போயிருக்கிற அநியாயத்தைப் பார்!” ஆனந்தன் ஆவேசத்தோடு கத்தினான். படங்கை நீக்கி உள்ளேயிருந்து வந்த தங்கை பூரணி பதறிப்போனாள்.

ஜயையோ போத்தலும் மாவாகி சென்ற் எல்லாமே ஊத்தி உண்டுட்டே.” கதறிக் கொண்டே உள்ளே ஓடினவள் கரண்டியும் வெறும் கீசாவும் கொணர்ந்தாள். களிமண் தரையிலே கொட்டிய சென்றைக் கரண்டியால் அள்ள முனைந்ததன் பேதமைக்காகச் சிரிக்க வேண்டும்போல இருந்தது. அதை மீறி வந்த சலிப்பை அடக்கிக்கொண்டு அழுக்குப்படிந்த தனது கிழிசல் தாவணியில் சென்றின் ஈரத்தை ஒத்தி எடுத்தாள். இடுப்பு வலிக்க, சந்து கடுக்க, கழுத்துச் சுழுக்க இருந்து நூலிழைத்து உழைத்த காசை சென்ற் வாங்க அண்ணனுக்குக் கொடுத்தவள் அவள்தானே. அவளுக்குத்தான் தெரியும் அருமை. சட்டி, பானை செய்ய முற்றத்திலே களிமண் குழைத்துக் கொண்டிருந்த தாய் செல்லம்மாளும் வந்து சேர்ந்தாள். “நேற்றுத் தானடா சுளையாகப் பதினாறு உறுவாவக் கொடுத்து வாங்கி வந்தாய். கொமர் குட்டிகளெல்லாருமா அருந்தி வருந்தித் தேடித்தாறத்தையும் பாகுபத்திரமா வைச்சுச் சோக்குப் பண்ணத் தெரியுதில்லையா?” “வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்தான். ஒண்ட வீடு இருக்கிற அழகப்பாரு, அறுந்த கிடுகக் கட்டி விடுவதற்கும் இங்க ஆளில்லியே.” அவன் மனுசனை எத்தனை தரம் சொன்னன் பொத்தி உடச்சொல்லி. படிச்சவன் நாகரியந்த் தெரிஞ்சபுள்ள இதெல்லாம் செய்வானா எண்ட எண்ணமில்லாம, ஒண்ட மகனுக்கு கைகால் இல்லையாடி என்கிற தகப்பனோட எதக் கதச்சி வெல்லலாம்.” செல்லம்மாள் அலுத்துக் கொண்டு வெளியேறினாள். பூரணம் குப்பியோடுகளைப் பொறுக்கிக் கொண்டு வெளியே போனாள். தாலியறுந்த மூத்தவள் தங்கம்மா முற்றத்திலே தார் சுற்றிக் கொண்டிருந்தாள். வாழைநாரும் கத்தியுமாக வந்த பூரணி, “அக்கா வாவன் கிடுகுகளக் கட்டிவிடுவம்” என்று அக்காவை அழைத்தாள். கவலை தோய்ந்தவனாக ஆனந்தன் கட்டிலிலே சாய்ந்தான். கச்சான் காற்றுக்குப் பிசிறிப்போன கூரையினூடாக நீலவானம் பொட்டுப்பொட்டாகத் தெரிகிறது. அந்த அழகைச் சுவைத்துக் கிடந்தான் அவன். “அண்ணா! கணபதிப்பிள்ளை மாஸ்டர் காரியமா எங்கேயோ போகவேணுமாம். சைக்கிள் தர ஏலாதாம் எண்டிற்றார்.” தம்பி பரமானந்தனின் குரல் கேட்டு ஆனந்தன் கவலையோடெழுந்தான். “ஓட்டையோ, உடைசலோ சங்கீதம் பாடிக்கிட்டுக் கிடந்த சைக்கிள் கட்டையை விக்காம இருந்தா இப்படி ஆருக்கிட்டயும் பல்லிளிக்கத் தேவையில்லையே தம்பி.”

செத்தைக் கிடுகுகளைக் கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தங்கம் இப்படிக் கூறியதும் ஆனந்தனின் மூக்குச் சிவந்து விட்டது. “சைக்கிள் வித்துச் சோக்கா பண்ணினான். ஜொப் விஷயமா கொழும்புக்குப் போகக் கைச்செலவில்ல எண்டுதானே வித்தன்” என்று விறைப்புடன் கூறிவிட்டுத் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக, “அட பரம்! வேலுப்பிள்ள அம்மாச்சிட ஊட்ட போய் பொன்னம்மா மச்சாளுட்டச் சொல்லு செக்கன் லிஸ்ட் இன்றைக்கு வருதாம் அதப்பாக்க அண்ணா டவுனுக்குப் போகப் போகுதாம். போய் எக்ஸ்பிரஸ் பஸ் ஹோட்டலுக்குப் போக அம்மாச்சிட சைக்கிள எப்படியும் எடுத்துத் தரட்டாம் எண்டு சொல்லு, ஓடு”.

ஓடிய பரமானந்தனுக்கு முன்னால் வெறுந்தட்டோடு வந்த சின்னவள் லட்சுமி நேரே அம்மாவிடஞ் சென்றாள். பழைய கடனத் தராம அப்பத்தூளும் தர முடியாதென்ற அப்பக்காரியின் கைவிரிப்பை அழாக்குறையோடு அம்மாவிடம் முறைவைத்தாள். செல்லத்தின் முகம் கறுத்துச் சிவந்தது. “வாங்கின கடனைக் கொடுக்காத ஈனச் சாதி என நெனச்சிற்றாள். “இருடி…. எம்புள்ளக்கி வேல மாத்திரம் கிடைக்கட்டும் முதல்மாத சம்பளத்திலேயே வட்டியுஞ் சேர்த்து முகத்தில எறியுறன்” எனக்கறுவிக் கொண்டு கையை அலம்பிவிட்டு எழுந்தாள். புள்ளக்கிக் கைச்செலவுக்குக் கொடுத்தனுப்பக் காசி பாத்திற்று வாறன் எண்டு போன தகப்பன இன்னமும் காணல்லய? என்றவாறே மாறிக்கட்டியிருந்த முந்தானையை அவிழ்த்து சட்டையில்லாத உடம்பை மூடிக் கொண்டு படலையைத் தாண்டி வெளியே போனாள்.

சற்றைக்கெல்லாம் செல்லம்மாள் கசங்கிய பத்து ரூபாவோடு மீண்டாள். முதலை வாய்ப்பட்ட ஆனைக்கு அருள் சுரந்த ஆண்டவரின் கதை அவளுக்குத் தெரியும். அந்த ஆண்டவரின் அவதாரமே அடுத்ததெரு அன்னம்மா என்பது செல்லம்மாவின் முடிவு. கைம் பெண்ணான அன்னம்மா கழுதாவளைக்குப் போய் வெற்றிலை வாங்கி வந்து அயல் கிராமங்களில் விற்றுப் பிழைப்பவள். காய்க்காத மரமானபடியால் தட்டுப்பாடின்றி அவளால் காலங்கடத்த முடிகிறது. செல்லம்மாளுக்கு கைமாற்றாகக் கொடுத்து உதவுபவள் அவள். காலைப் பூமியை விற்றெடுத்த ஆயிரத்து எண்ணூறை இரண்டாயிரமாக நிரப்ப, தன் வாயை வயிற்றைக்கட்டிச் சீட்டுப் போட்டெடுத்த காசைக் கொடுத்துதவியவளும் அவள்தான்.

இரண்டு முறை ஆனந்தன் கொழும்புக்குப்போக ஐம்பதைம்பதாகக் கொடுத்துதவியவளும் அவள் தான். செல்லம்மாள் இப்போது போய்த் தெருவிலே நின்றவாறே, அழிந்த நிலையிலுள்ள தட்டி வேலிக்கு மேலால் தலையைப் போட்டுக் கொண்டே, “மச்சாள்! இஞ்ச வாகா” என்று அவளை அழைத்து விபரத்தைச் சொல்லி ஐந்துரூபா கேட்டாள். அன்னம்மாவும், “வெத்திலைக்குக் கொண்டுபோற காசிதாங்கா இருக்குது” என்றாளாயினும் விரல்கள் சேலையின் முடிச்சை அவிழ்த்தன. கசங்கிய பத்துரூபா நோட்டை எடுத்து நீட்டிய போது “அஞ்சு தானகா கேட்டன்” என்றாள் செல்லம்மாள். அதற்கவள், சந்தோசத் தேத்தண்ணி வாங்கித்தாடா எண்டு கூட்டாளிமார் கேட்டுட்டா பொடியன் வேக்குச்சிப் போவான்கா சரிதான் கொண்டு போகா” என்ற தங்கமான மனதை எண்ணி நெஞ்சுருகி வந்த செல்லம்மா, வழியில் அவளது சின்னம்மாவின் மகன் காசிப்பிள்ளை மெனேஜரைக் கண்டபோது, அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. காணி விற்ற காசோடு சேர்த்து இரண்டாயிரமாக நிரப்புவதற்காக இருநூறு ரூபா கடனாகக் கேட்டு அவனது வாசல் மணலை குட்டுப் புளுதியாக்கி இருக்கிறாள் செல்லம்மாள். இருநூறு ரூபாவுக்கு முதல் இருநூறு சதமே இல்லாமலிருக்கிறேன் என்றவன், நெல் வியாபாரி ஆதம்பாவாவுக்கு ஐயாயிரம் ரூபாக் கடனாகக் கொடுத்தான், என்பதையும் அவள் அறிவாள்.

காசிப்பிள்ளையைக் கடந்ததும் மனதுக்குள்ளே காசிப்புள்ளே! “பணக்காறனுக்குப் பணக்காறன் தான் இனசனம் எண்டத்த நீ காட்டிப்போட்டாய். ஏழைக்கு ஏழை சொந்தம் எண்டத்த அன்னம்மா காட்டிப்போட்டாள்” என்றெண்ணயவாறே வீடு வந்து சேர்ந்தாள். சைக்கிளுக்குப் போன பரமானந்தனும் வெறுமாளாக வந்து சேர்ந்தான். செல்லம்மாள் மகனிடம் காசைக் கொடுத்து…. “சந்திக்கடையில் போய் காலைப்பசி ஆறிற்று, நம்மட ஊரில இருந்தே பஸ்ஸேறிப் போமனே” என மகனிடம் கூறிவிட்டு வெளியே போனாள். “யாருக்கிட்டயாவது காசி பாத்துக்கிட்டு வாறன் எண்டுபோன அப்பா எவடத்த இருந்து சீட்டு விளையாடுறாரோ?” எனக் கூறிக்கொண்டே செல்லம்மா களிமண்ணடியில் வந்து குந்தினாள்.

ஆனந்தன் சீப்பை எடுத்து கண்ணாடிக்கு முன்னாலே நின்று கேசத்தையும் கன்னங்களையும் சாடையாக நீவிவிட்டான். பின் தான் தெருவிலே போகும்போது நடக்கின்ற அலாதியான நடையை கண்ணாடியின் முன்னின்று ஒத்திகை பார்த்தான். படத்திலே புன்னகை தவழ நிற்கும் அபிமான நடிகர் ஆனந்த கீரத்தியிடம் விடைபெறும் பாவனையில் சைகை காட்டிவிட்டு, அருவருத்துக் கொண்டே பன்னாங்கைக் கிளப்பிக் கொண்டு வெளியேறினான். செல்லம்மாள் மகனின் பின்னழகைக் கண்டு புளகமுற்றாள். ஆனந்தனின் பின்னழகு எருக்கட்டிய காலைப் பூமியிலே காய்த்துக் குலுங்கும் மிளகாய்ச் செடியினைப் போல செல்லம்மாவின் மனதை நிறைவு செய்தது. “முருகா! வடிவேலா! என் புள்ளக்கி வேல கிடக்க அருள் செய் அப்பனே. கதிர்காமச் சன்னதிக்கு அவனைக் கூட்டி வந்து காவடி எடுக்க வைப்பேன்…. இது சத்தியம் அப்பா!”

“கதிர்காமத்திலையும் இப்ப பைலா ஆடறாங்களாம். அண்ணனும் காவடியோட நல்லா பைலா ஆடும் அம்மா” செத்தையைக் கட்டிவிட்டு வந்த பூரணியின் கிண்டல் செல்லத்துக்கு எரிச்சலைத்தான் ஊட்டியது. “போடி வாய்க்கொழுப்புக்காறி என்றவாறு தலைநிமிர்ந்து பூரணியைப் பார்த்தாள். கலைந்த முடி, கிழிந்து போன தாவணி, மேலெல்லாம் ஒட்டறைப்படிவு, கையிலே வாழைநாரும் கத்தியும், செல்லம்மாவின் கண்கள் முறித்தெடுத்த வாழைப்பொத்தியின் நெட்டிபோல பொலபொலத்தது. பூரணியின் கோலம் அம்மாவின் மனச்சாட்சியை குத்திக்குடைந்தது. “மகன ராசாவாட்டம் ஆக்கி வச்சிற்று, வாழவேண்டிய வயதில என்ன இந்தக் கோலத்திலே வச்சிருக்கிறியே எண்டு நீ கேக்காட்டியும் என் மனசு என்னக் கேக்குதடி. அவன் ஆண்பிள்ளை, நாலுபேருக்கு முன்னால் நடக்கிறவன். நம்முடைய ஆசைய ஒறுத்து அவன ஆளாக்கி இருக்கிறம். முருகன் மனசு வச்சு அண்ணனுக்கு உத்தியோகம் கெடச்சதுக்குப் பொறகு பாருடி… ஒன்ன ராசாத்தியாக்கி, கல்வீடுங்கட்டி கண்ணிறைஞ்ச மாப்புள்ளயும் எடுத்துத் தருவாண்டி.

“உனக்கிட்ட இதெல்லாம் ஆரம்மா கேட்டது” பூரணி நாணத்தால் முகஞ்சிவந்து உடலெல்லாம் பசலையின் புல்லரிப்போடு கிணற்றடியை நோக்கி ஓடினாள். மதியம் சாய்ந்து மாலை தலைவைக்க அசுப்புப் பார்க்கும் நேரம் பச்சை மட்பாண்டங்கள் ஒரு புறம் காய்ந்து கொண்டிருந்தன. செல்லம்மாள் நேற்றும் முதல் நாளும் வனைந்த பாண்டங்களுக்குச் சூளை தயார் பண்ணினாள். காய்ந்த பனையோலையின் “சாரார்” என்ற சப்தம் படலைப்பக்கமாக இருந்து வந்தது. செல்லம்மா படலையைப் பார்த்தாள். படலையிலே சாத்தியிருந்த பனையோலை கீழே கிடந்தது. அவள் கணவன் மயிலிப்போடி பனையோலையின் மேலே புரண்டதைக் கண்டு அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவளுக்கு நிலமை விளங்கி விட்டது. “எவனோ அறுவான் சாராயத்தை ஊற்றிக் கொடுத்துவிட்டான் கடவுளே! இந்தத் தவறணைய இந்த ஊரில கொண்டு வந்து வச்சவனுகள்ள குடிகுடி வம்சமெல்லாம் நாசமாப் போகட்டும். போடித்தனத்தோட வாழ்ந்ததாம் இந்தக் கிராமம். குடியாலதானே இப்படிக் குட்டிச் சுவராக் கெடக்குது”. செல்லம்மா நெஞ்சுக்குள் இப்படிப் புலம்பினாள். மயிலிப்போடி ஒருவாறாக எழுந்து ஓலையை எடுத்து ஒருபுறமாக வீசினார். மயிலிப்போடி கௌரவக் குடிகாரன். குடியென்று அலையவும் மாட்டார், வலிய வருவதை விடவும் மாட்டார். எவ்வளவு குடித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளும் விதமாக நிதானந்தவறி அலட்டிக் கொள்ளவும் மாட்டார். அப்படிப்பட்ட மயிலிப்போடி இன்று பனையோலையில் விழுந்தது அதிசயந்தான். வியாபாரியிடம் கொச்சிக்காய்க்கு அச்சாரம் வாங்கிய மகிழ்ச்சி. புதுக்காலைக்காரன் கணபதி, காலைப் பூமியைத் தனக்கு விற்றவரான மயிலிப்போடிக்கு நன்றியுணர்வு காரணமாகவோ என்னவோ கொஞ்சம் ஓவராகத்தான் ஊட்டிவிட்டான். மயிலிப்போடி, செல்லம்மா சூளை தயாரித்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி நடையைக் கட்டினார்.

மகன வழியனுப்பக் காசு பாத்திற்று வரப்போன அப்பா வாற ஒசில் நல்லாரிக்கு. காசையும் கொடுத்துப் போட்டு நாயலைச்சல் அலையிறான் அவன். அதப்பற்றி இந்தாளுக்குக் கொஞ்சங் கூடக் கவனம், கக்கிசம் இருக்குதா”. எனக்குத் தெரியாத பெரியவனில்லை, என்னால முடியாத காரியமும் இல்லை என்று அலையிற பொழப்புக் கெட்டவனுகளை நம்பி, இந்தக் காரியத்தில் இறங்க வேணாம் என்று படிக்குப்படியாகச் சொன்னனடி…. படிக்குப்படியாகச் சொன்னன்.” செல்லம்மா போட்ட குண்டுக்குச் சரியான எதிர்க்குண்டைப் போட்ட மயிலிப்போடி சற்றுத் தள்ளம்பாறி நின்றார். செல்லம்மாள் சூளைக்கு வைத்த நெருப்பு பகீர் என்று பற்றி ஏழுந்தது.

அடியேய்! எண்ட நெஞ்சு பத்தி எரியுதடி. நாளைக்கு கொச்சிக்காய் முதல்பறி பறிக்கிறான். நீ காலப்பூமியை வித்தாயே, கணபதி அவன் யாவாரி காசின் காக்காகிட்ட அச்சாரம் வாங்கினத்த இந்தக் கண்மாணிக்கம் ரெண்டாலையும் பார்த்தண்டி ரெண்டாலையும் பார்த்தன். கண்களில் ஓங்கி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தார் மயிலிபோடி. “காசநோயால் மல்லாடுறயள் நீங்களா கால செய்யப் போறயள்” ஒண்ட மகன் இருக்கான் தானடி பனங்குத்தி மாதிரி” செல்லம்மாளுக்கு சினம் பொத்துக் கொண்டு வந்தது. “படாதபாடும் பதினெட்டும்பட்டு, அனுப்பாத இடத்துக்கெல்லாம் அனுப்பி எம்புள்ளயப் படிப்பிச்சது காலைக்கு அனுப்பி கொச்சிக்கண்டு நாட்டுறதுக்கில்லை. மற்றவனுகளப்போல எம்புள்ளையும் எணல்ல இருந்து உத்தியோகம் பார்க்கிறதக் கண்ட அண்டக்கித்தான் எண்ட ஆத்துமம் அடங்கும். இந்தாங்க, நீங்க திரும்பத் திரும்ப என்ன சொல்லுறீங்க எண்டது எனக்கு நல்லா விளங்குது. புதிசு புதிசா உத்தியோகம் எடுக்கிற பெரிய இடத்துப் புள்ளயளுக்கெல்லாம் கையில்லையா காலில்லையா காணி பூமிதான் இல்லையா? சரசக்காட மகன் நாக்கிழுபட சைக்கிள் ஓடித் தபால் குடுத்துத் திரியிறானே? அவனுக்குக் கிடைக்கிற சம்பளம் என்ன எண்டதையும் தபால் கந்தோரிலேயே இருந்து வேல பாக்கிறாங்களே தொரமார் அவங்க எடுக்கிற சம்பளம் எவ்வளவு எண்டதையும் விசாரிச்சிப்பாருங்க. காத்தமுத்தார்ர மகன் கிளாக்கனுக்கு பத்தேக்கர் காணியும் பத்தாயிரம் உறுவாவும் சீதனங் கொடுத்தத்த வாயால வீணி வடியவடியச் சொன்னயளே! இதயெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் எப்பாடு பட்டாகிலும் எம்புள்ளக்கி உத்தியோகம் எடுக்கிற எண்ட முடிவுக்கு வந்தன்” என்று கோடை மழைபோல கொட்டி நிறுத்தினாள் செல்லம்மாள்.

“நான் என்னமோ பத்தாங் கண்ணத்தான் போட்டன். நீ ஆசி, மணல் வீறு எல்லாத்தையும் தூக்கிப் போட்டிட்டாய். ம்… சரி என்மகன் உத்தியோகம் பார்த்தா எனக்கு மாத்திரம் பெருமை இல்லையாடி? சீட்டாடுவதிலும் சூரனான மயிலிப்போடி, மனைவியிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு குடிசைப் பக்ககமாக நடையைக் கட்டினார். அவருக்கு குடலைக் குமட்டிக் கொண்டு வந்தது. வாந்தி எடுக்க மனமின்றி உள்ளே அதக்கி அதக்கி நடந்தார். செல்லம்மாள் ஆதங்கத்தோடு வேப்பை நிழலில் அமர்ந்தாள். அவள் முன்றானையை அவிழ்த்து முகத்தைத் துடைத்தது அரும்பி வழிந்த வியர்வைக்காக மாத்திரமல்ல. எரியும் சூளையிலிருந்து புகை சழன்று சுழன்று மேலே எழுந்ததது. தானே சூளையாகவும் தனது உணர்வுகளே ஆகுதியாகவும் எரிந்து கரிந்து சாம்பலாகுவது போன்ற பிரமை அவளது சித்தத்தை வதைத்தது. உணர்வுகளின் சாம்பல் புகையாகிச் சுழல்வதாக எண்ணினாள். கணவனை வாதத்தால் மடக்கினாலும், அவரது கட்சியிலுள்ள நடைமுறை உண்மைகளை மறுக்க அவளிதயம் மறுத்தது. அவளது சிந்தனை காலைப்பூமியைச் சுற்றிச் சுழன்றது.

கடற்கரையை அண்டிய கேணிப்பள்ளத்தில் உள்ள பசையில்லாத மணல்பூமி பேர்மிட்டுக்கு எடுத்த இரண்டேக்கர் பூமியில் அவர் வாணாள் முழுவதும் காலை செய்து வந்தார். தன்கையால் கொத்திப்புரட்டிப் புல்லரித்தார். வாடகைக்கு மாடு சாச்சிற்று வந்து எருக்கட்டுவார். எருக்கட்டினாத்தானே அந்தப் பூமியில் கொஞ்சம் பசப்புடிக்கும், கம்பிவேலி போட வழியில்லாம கொத்துவேலி போடுவார். கடற்கரைக் காடெல்லாம் சனங்குடியேறினதால இப்ப அதுக்கும் வழியில்ல. குடங்குடமாகச் சேத்தை அள்ளிச் சுமந்து வருவார். அவர் தட்டத் தனிய நிண்டு துலா இறைப்பார். வாய்க்காலிலே ஓடற தண்ணியிலே சேத்தைக் கரைத்துக் கொண்டே இருக்கவேணும். சேறு கரைக்காட்டி பாத்திகளிலே ஈரப்பசண்டையே இருக்காது. இப்படியெல்லாம் மங்கமாய்ந்து அவர் கண்டது காசநோய். என்னத்தான் தள்ளு, குமர்கள் காதிலே போட தங்கப் பொட்டுக்கும் வழியில்லாமக் கிடக்குதுகள். யாவாரிக்கிட்ட முன்காசி வாங்காட்டி பிஞ்சு பிடிக்குமட்டும் தின்ன வழியில்ல. கொள்ளையிலே போவானுகள் காய்பறிக்கத் தொடங்கிற்றாப் போதும் நாளைக்கொரு விலையாகக் குறைப்பானுகள். அவனுகள்ள கல்வீடுகள் என்ன? சொத்து சுகமென்ன? எண்ட குடிச அப்பன் தந்த அந்தக் கதியில தான் இப்பவும் இருக்கிறது.

தன்னைச் சாறாகப் பிழிஞ்ச எருப்போட்ட பூமிக்குள்ள அந்தாள் காலவச்சு மூணு வருஷம். புரனாத்தான் கிடந்துச்சு. இனி இல்லையெண்டா, குத்தகையா நூறு உறுவாத்தருவானுகள். புள்ளயும் சொன்னான் ரெண்டாயிரம் செலவு செஞ்சா உத்தியோகம் எடுக்கலாம் எண்டு…. இதயெல்லாம் யோசிச்சுப் போட்டுத்தானே அத விக்கத் துணிஞ்சன்…. முருகா… எனக்கும் கொமர்களுக்கும் நீதான் துணையப்பா…”

எதிரே பூவரசங்கிளையில் காகம் ஒன்று வந்தமர்ந்து கரையத் தொடங்கியது. காகத்தின் குரலில் சுதிகூடத் தொடங்கவே செல்லம்மாவின் சிந்தனை கலைந்தது. நம்பிக்கையின் நட்சத்திரப் பிரகாசம் செல்லம்மாவின் முகத்தை ஜோதிமயமாக்கியது.

“எச்சுமுள்ளும் சோறுந்தாறன் எம்புள்ளக்கி உத்தியோகம் கிடச்சிற்றென்று தெத்திக்காட்டு காகம்” என்ற ஆவல் பொங்கக் காகத்தைப் பார்த்துக் கேட்டாள். காகம் அவள் பக்கம் கழுத்தைச் சாய்த்துப் பார்த்தவாறே அடுத்த கிளைக்குத் தாவிக் கரையத் தொடங்கியது. காகம் செல்லம்மாவின் நெஞ்சிலே குடம்பாலைக் கவிழ்த்து விட்டது. “தில்லி திருக்கிணாமலையெல்லாம் போய் வாற காக்காச்சி! எம்புள்ளயக் கந்தோரிலே கண்டிட்டுத்தானே பறந்து வந்தாய்” காகம் அடுத்த கிளைக்குத் தாவியது செல்லம்மாள் பூவரசம் கொப்புகளைப் பார்த்தாள். மலர்ந்த மஞ்சட் பூக்கள் அவள் மனதுக்கு இதவைக் கொடுத்தன. “எம்புள்ளக்கி வேல கிடச்சிற்றெண்டு இன்னொரு தரம் தெத்திக்காட்டு காகம்” காகம் அடுத்த கொப்பிற்தாவிப் பின் எழுந்து எங்கோ பறந்தது. “அடியேய் பொட்டைகளா ஆனந்தனுக்கு வேல கொடச்சிற்றாண்டி” என்று கத்த வேண்டும் போல் இருந்தது செல்லத்துக்கு.

“அம்மா! அப்பா ரத்தங் கக்குறார் அம்மா!” என்ற பூரணியின் ஓலம் செல்லம்மாவை உலுக்கியது. “முருகா எம்பண்ணயக் காப்பாத்தப்பனே” என்று இரந்தவாறே கணவனிடம் ஓடினாள். முற்றத்திலே மூத்தவள் தங்கம்மா தகப்பனின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தாள். பூரணியும் சின்னவளும் செய்வதறியாது நின்றனர். மகளை எழுப்பி விட்டு செல்லம்மாள் கணவனின் தலையைத் தாங்கினாள். “இந்த வருத்தத்தோடு குடியாதங்க எண்டா கேக்கமாட்டீங்களே! பாத்திற்று நிக்காம செம்பிலே தண்ணி கொண்டாடி” என்று பூரணியைப் பார்த்துச் செல்லம்மா கூறினாள். “அம்மா அண்ணன் வருகுது”! சின்னவள் சொன்னதைத் தொடர்ந்து எல்லோரும் ஆர்வமும் ஆவலும் பொங்கப் படலையைப் பார்த்தனர். ஆனந்தன், பெயருக்கு விரோத விரோத உணர்வை உடலெல்லாம் தேக்கி, தலைகவிழ்ந்து, அற்புத நடையிழந்து, தன்னடையில் குடிசையை நோக்கி நடந்தான். மயிலிப்போடி, கடைவாய்களிலே ரத்தமும் வாந்தியும் வழிந்தோடும் வாயைச் சிரமத்தோடு திறந்தார்.

“எண்ட….ரா….வணன்…. வெறுங்…. கையோட…இல்லம் வாறான். எனக்குத்… தெரி… யுண்டா… மனே!… நீ போ… ட்ட… துரும்பு… ஆசியெண்டு, மணலும்… வீறும்… கடைக்…. கையில….” வார்த்தைகளைக் கூறி முடிப்பதற்குள் வாந்தி அடிவயிற்றைக் குமட்டியது. செல்லம்மாவோ தலையிலே கையை வைத்தாள்.

(யாவும் கற்பனை)

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஒக்டோபர் 2007, எம்.ஐ.எஸ்.ஹபீனா கலீல், மருதமுனை.

சமர்ப்பணம் அரிவரி வகுப்பில் ஏடு தொடக்கி வைத்து, சி. பா. த. பரீட்சையில் தேறியபின்னர் தன் கைப்பட விடு கைப் பத்திரமும் எழுதித்தந்த ஷரிபுத்தீன் வாத்தியார் (புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள்) முதலாக எனக்குக் கல்வி புகட்டிய, என் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்கு வித்த ஆசிரியப் பெருமக்களுக்கு இந் நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன். - மருதூர்க்கொத்தன். அவனது கதை வங்காப் ஊரில் அவனும் அவனது கூட்டாளிப் பையன்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *