இன்பமான பூகம்பம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 1,891 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

கடந்த ஒரு வாரமாக ரேவதியுடன் சாரதமோ சாம்பசிவமோ முன்போல அதிகம் பேசமுடியவில்லை. அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து அவசரப்படாமல் குளித்துவிட்டு வாசலில் காத்திருக்கும் டூரிஸ்ட் காரில் ரேவதி ஏறினாள். கூட வீரா, இப்படி ஏழு நாட்கள் சென்றன. சாரதத்துக்கு இப்போது அவளிடம் வெறுப்பு இல்லை. மாறாக அபிமானமும், ஒருவித பயமும் ஏற்பட்டிருந்தது. தான் வந்த அன்று இரவு சொன்னபடி திட்டத்தின் முதற்படியை அவள் தாண்டிவிட்டாள். பாபுவும், சாந்தாவும் நேற்று வெள்ளிக்கிழமை டாக்டர் கைலாசம் குடியிருக்கும் வீட்டின் மாடிப் போர்ஷனுக்குச் சென்று பால் காய்ச்சிக் குடித்து ஏப்பத்தையும் விட்டுவிட்டு மாலையே குடி பெயர்ந்தார்கள். பிள்ளை தனியாகச் சென்றுவிட்டானே என்ற வருத்தம் பொறியாக மனத்தில தட்டினாலும் ஒரு விதத்தில் திருப்தியும் சமாதானமும் உண்டாயின. குடும்பச் சுமையை தாங்களே முழுதும் ஏற்கும் போதுதான் அவனுக்கும் சாந்தாவுக்கும் பொறுப்புணர்ச்சி வரும் என்றும், சாந்தாவும்  இனிமேல் வாயாடமாட்டாள் என்றும் எண்ணங்கள் தோன்றின. 

சத்யா வழக்கம் போல் காலையில் தனியாகச் சென்று மாலையில் சுபாவை ஸ்கூட்டரில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தான். அவனும் இன்னும் ஓரிரு நாட்களில் போய்விடுவான். ஒரு நாள் மருமகனாகவும் வருவான். 

வைதேகிக்கு சார்நாத் என்று ரேவதி முடிவு செய்திருந்தாள். வைதேகி இது வரையில் எந்தவிதமான ஆட்சேபணையும் எழுப்பவில்லை. இருபத்தொன்பது வயதுக் கிழவியாகிவிட்ட அவள் முப்பது முடிவதற்குள்ளாவது ஒரு துணைவனுடன் வாழ்க்கையில் பிரவேசிக்கமாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறாள். எப்போது சார்நாத்தின் தாயாரும் தங்கையும் அவளைப் பெண் பார்க்க வருவார்கள்? இன்னும் ரேவதி தீர்மானமாக எதையும் சொல்லவில்லையே? வைதேகிக்குத் திருமணம் நிச்சயமானால் ஏன் அதே நாளில் அதே மண்டபத்தில் சுபாவின் கல்யாணத்தையும் நடத்திவிடக்கூடாது?

அன்று சாம்பசிவத்திற்கு வேலை இல்லை. அவர் விட்டிலேயே இருந்தார். 

“எனக்குப் பேசணும்..”என்று கூறிக்கொண்டே சாரதம் அவர் எதிரே வந்தாள். 

“எதைப் பத்தி..?”

“ரேவதி!” 

“என்ன?” 

“அவ உங்க தம்பி பெண்” 

“ஆமாம்.” 

“வீரா நம்ம பிள்ளை.” 

“ஆமாம்.”

“வீரா லீவ் எடுத்திருக்கான்.” 

“அதற்கென்ன சாரதம்..?”

”லீவ் எடுத்ததற்கு ஒன்றுமில்லை. ஆனா ஏன் தினசரி இவளோட காலங்கார்த்தாலே டூரிஸ்ட் வண்டியில் போகணும்.? ராத்திரி நேரம் கழித்து வரணும்..?” 

“இது பத்தி நான் அவன்கிட்ட கேட்டேன்.” 

“என்ன சொல்றான்?”

“ஒரு நாள் மகாபலிபுரம், இன்னொரு நாள் திருப்பதி…” 

“அப்படியா?”

“ஒரு நாள் காஞ்சிபுரம்,“

“தேவலையே..” 

“இன்னொரு நா ஷோலிங்கர்..” 

“ரேவதிக்கு பக்தியும் உண்டா?”

“அமெரிக்கால பிறந்து வளர்ந்துட்டா பக்தி இருக்கப்படாதா?”

”ஆனா ஏன் வீரா கூடப் போகணும்?” 

“என்னால என் வயசில அவளை அழைச்சிகிட்டுப் போக முடியுமா?” 

“சத்யாவுக்கு என்னாச்சு,? அவன் தானே மத்த எல்லா விஷயங்களில் பொறுப்பா இருக்கான்?”

”நீ விஷயம் புரியாமப் பேசறே?” 

“என்ன விஷயம்?”

“சத்யாவுக்கும் சுபாவுக்கும் கல்யாணம் நடக்க இருக்கு.” 

“அதனாலே..” 

“ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்பி…” 

“ஓ…இப்பப்புரியறது.. எங்கே அவகூடப் பழகிப்பழகி பெரிய பணக்காரியான ரேவதியை கொக்கி போட்டு இழுத்துடுவானோன்னு சுபாவுக்குத் தோணலாம் இல்லியா? அதானே?” 

“கரெக்ட்”

“இப்படிப்பட்ட பயம் யார் மனசிலேயும் உண்டாகப் படாதுன்னுதான் ஒண்ணுவிட்ட அண்ணணை ஒரு டூரிஸ்ட் கைடா ரேவதி அழைச்சுட்டுப் போறா..” 

“இப்பத்தான் மனசுக்கு சமாதானமாச்சு.” என்றாள் சாரதம். 

அன்று இரவு பத்தேமுக்காலுக்கு டெலிபோன் மணி அடித்தது.

இந்த வேலையில் யார் போன் செய்கிறார்கள்?

சாரதம் அலுப்புடன் எழுந்தாள்.

“பெரியம்மா.. அது எனக்காகத்தான் இருக்கும்.” 

ரேவதி பாய்ந்து ஓடி ரிசீவரை எடுத்தாள். 

“ரேவதி ஹியா… ஹாய் தாரிணி எப்படி இருக்கே… எப்ப இண்டியா வர்றே? அப்படியா, வர்ற மாசம் ஆறாம் தேதியா? நான் ஏர்போர்ட்ல மீட் பண்ணி ஒட்டலுக்கு அழைச்சிட்டுப் போறேன். என்ன ஏழெட்டு நாள்தான் இருப்பியா…ஓகே. ஓகே.. நான் அதுக்குள்ளே என் வேலையை முடிச்சிட்டு உன்னோட திரும்பறேன். என் ரிடர்ன் டிக்கட் ஓப்பனாத்தான் இருக்கு. என் வேலை. இங்கே சீக்கிரம் முடிஞ்சிடும். ஓகே.. ஸீயூ பை..பை..” 

ரிசீவரை வைத்துவிட்டு ரேவதி சிரித்தாள்.

“அமெரிக்காவிவேருந்து” என்றாள். 

“சிநேகிதியா?”

“என்னோட டியரஸ்ட் ஃப்ரண்டு. அப்பா போனப்புறம் ரெண்டு மாச காவத்துக்கு நான் தாரிணி வீட்லதான் இருந்தேன். அவளும் என்னை மாதிரி எம்.பி.ஏ ஹார்வர்ட்ல. இப்ப அவளும் நானும் ஒரே கம்பெனிலதான் வேலை பார்க்கறோம்.” 

“அவ எதுக்கு வர்றா?”

”பதினஞ்சு நா லீவு, லண்டன், பாரீஸ், ரோம்னு சுத்திப் பார்த்துட்டு இந்தியா வர்றா. அதுவும் எனக்காக. சின்ன வயசில மெட்ராஸ் வந்திருக்கா. ஆனா, ஒண்ணும் நினைவில இல்லை. இந்தியால அஞ்சாறு நாள் இருப்பா. அதுக்குள்ளே டாஜ்மகால் பார்த்தாகணும், கோவா பார்த்தாகணும், ஹரித்வார் போயாகணும்.” ரேவதி அடுக்கிக் கொண்டே போனாள். 

பிறகு திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தது போல “நானும் வீராவும் இன்னிக்கு சாயங்காலம் சுருட்டப்பள்ளியிலிருந்து திரும்பறப்ப அண்ணாநகர் போயிருந்தோம்.” 

”சுருட்டப்பள்ளியா..? அது எங்கே இருக்கு.?” 

“என்ன பெரியம்மா நீங்க.? மெட்ராஸ்ல இத்தனை வருஷமா இருக்கீங்க. சுருட்டப்பள்ளி எங்கேனு தெரியாதா? திருவள்ளூருக்குப் பக்கத்திலே. அங்கிருந்து ஊத்துக்கோட்டை போற வழியில, தட்சணாமூர்த்தி பார்வதியின் துடையில் தலை வச்சு படுக்கிற மாதிரிக் காட்சி, கர்ப்பக்கிரஹத்தைப் பாக்கிறப்போ பரவசப்பட்டுப் போனேன். நான் எங்கேயோ போறேனே..ஹாங் பரவசப்பட்டுப் போனேன். சார்நாத் மெட்ராஸ் வந்தாச்சு. நாங்க போனப்ப அவர் இல்லே. அம்மாவும் தங்கையும்தான் இருந்தா, நாளைக்கு போன் வரும்.” 

வீராவும் பேச்சில் சுலந்துகொண்டான்.

“ப்ரொபசர் சார்நாத் அடுத்த வாரம்தான் வர்றதா இருந்தது அம்மா. இவ அவசரப்படுத்திவிட்டிருக்கா போலிருக்கு. அவர் நேத்தே வந்தாச்சு.” என்றான். 

“எப்ப திரும்பப் போவானாம்? கேட்டியா?”

“கேட்கறதுக்கு முன்னால அவரோட அம்மாவே சொல்லிட்டா, மெட்ராஸ்ல பதினஞ்சே நாள்தானாம். போறப்ப மனைவியையும் அழைச்சிட்டுப் போறதா பிளானாம். ரெண்டு மூணு இடங்கள்லேர்ந்து அண்ணாநகர் வீட்டை தாக்கிட்டிருக்கா.” என்றான் வீரா. 

“அப்ப நம்ம வைதேகி?”

“ரேவதி நம்பிக்கையோட இருக்கா..”

“தெய்வம்தான் வழி காட்டனும்.” என்றாள் சாரதம். 

“அந்தத் தெய்வத்தைச் சுண்டி இழுக்கத்தான் ரேவதி கோவில் கோவிலா முற்றுகை இட்டுட்டு வர்றாளே..!” என்று சிரித்தான் வீரா. 

“நீயும்தான் கூட வந்தே…?” என்று ரேவதி கூறினாள். 

“நான் ஒரு கைட். அவ்வளவுதான்.”

மாடியில் லேசான குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்த வைதேகியின் காதில் கீழே பேசிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படிக் கேட்க முடியும்..? 

மறு நாள் காலை எட்டரை மணிக்கு போன் வந்தது. அன்று மாலை ஐந்து மணிக்கு வைதேகியைப் பெண் பார்க்க வருவதாகச் செய்தி வந்தது. 

மாலை ஐந்து மணி. 

சார்நாத்தும், அவனுடைய தாயார் மற்றும் தங்கையும் காரில் வந்து இறங்கினார்கள். 

“என் பெயர் சார்நாத், இவ என் தங்கை பானுமதி, அவ ஹஸ்பண்ட் பிஸினஸ் பண்றார். இவ என் அம்மா அலமேலு. ரேவதி உங்க பொண்ணைப்பத்தி ரொம்ப பாராட்டிப் பேசினா. ரேவதி யாரைப் பற்றியும் வாயாரப் புகழ்ந்து பேசிக் கேட்டது கிடையாது. அப்படிப்பட்டவ சொல்றதுன்னா நிச்சயமா…” 

“நாதா..மொதல்ல பொண்ணைப் பாருடா” என்ற அலமேலு, “ரேவதி தன்னோட கண்ணோட்டத்திலேருந்து சொல்லியிருப்பா. உனக்கு வைதேகியைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம்.” என்று கூறினாள். 

”நன்னாச் சொன்னீங்க அலமேலு மாமி.” என்ற சாரதம் “நான் மாமின்னு கூப்பிட்டது. தப்பு இல்லையே..?”

“ஒரு தப்பும் இல்லை..” 

ஹால் நிரம்பி வழிந்தது. 

பாபு, சாந்தா கூட வந்திருந்தார்கள். 

வீராவும், சத்யாவும் ஓர் ஓரமாக நின்றிருந்தார்கள்.

இரட்டை சோபாவில் அலமேலுவும் பானுமதியும் அமர்ந்திருக்க சார்நாத் சிறிய சோபாவில் உட்கார்ந்திருந்தான். பெரியப்பா உட்கார்ந்திருந்த சோபாவைப் பிடித்தவளாய் ரேவதி பின்னால் நின்றாள். அருகே நின்று கொண்டிருந்த சாரதம் “வைதேகி, எல்லார்க்கும் டிபன் கொண்டு வா, அவங்க  சாப்பிட்டுக்கிட்டிருக்கிறப்ப காப்பி கலந்தாப் போதும்.” என்றாள். 

“சரிம்மா..” 

வைதேகி நகர கூடவே தங்கை சுபாவும் போனாள். 

“ஒன் மினிட் ப்ளீஸ்..” 

வைதேகி திரும்பினாள்.

சார்நாத் புன்முறுவல் பூத்தான். 

“டிபன் கடைசில..நான் ஒண்ணு, ரெண்டு கேள்விகள் கேட்கலாமா…?”

வைதேகி அம்மாவைப் பார்த்தாள். சாரதம் கண்ணால் சமிக்ஞை செய்ய, ‘ஷ்யூர்’ என்றாள். 

“நீ இங்கே ஒரு ஆபீஸ்ல வேலையா இருக்கே இல்லே..?”

“ஆமாம்..” 

“எத்தனை வருஷமா.?” என்று சார்நாத் கேட்டான். 

“ஏழு”

“இப்ப நீ உன் வேலையை ராஜிநாமா செய்யவேண்டுமே?”

“அதாவது நம்ப கல்யாணம் நிச்சயமானா.”

“ஆறதுன்னே வச்சுப்போம்..” 

“அமெரிக்கால என் படிப்புக்கு ஏத்தபடி வேலை கிடைக்காதா?”

“ஷ்யூர், ஆனா நீ வேலைக்கு போறதை நான் விரும்பமாட்டேன்” 

“அப்படியா!”

“எனக்கு ஒரு வீடு சொந்தத்துலே இருக்கு. கார் இருக்கு, மாசம் ரெண்டாயிரத்து ஐநூறு டாலர்..” 

“இதெல்லாம் ஏன் சொல்லணும் நீங்க..?”

”அங்க போய் சிணுங்கக்கூடாது இல்லையா..?”

”வேறு ஏதானும் கேட்க இருக்கா…?” 

“‘இல்லை. இப்ப எல்லாரும் டிபன் சாப்பிடுவோம்..”

“எல்லாம் ரெடி.” என்றாள் சாரதம். அவளுக்கு அமெரிக்க மாப்பிள்ளையா? எல்லாம் ரேவதி வந்த வேளை. 

”ஆனா ஒரு கண்டிஷன்” என்றான் சார்நாத்.

எல்வோரும் திகைத்துப் போனார்கள். நிபந்தனையா? 

“இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ள ரிஜிஸ்டர் மேரெஜ்..” 

“ரிஜிஸ்டர் கல்யாணமா? எங்க பரம்பரையில் இதுவரை நடக்காதது அது, தாலி….” 

சாரதத்தை முடிக்கவிடவில்லை சார்நாத். 

“கொஞ்சம் என்னை பேசவிடுங்க. ஒரு மாசம் முன்னாடியே சத்யா நானும் வைதேகியும் சேர்ந்து எழுதிக்கொடுத்த லெட்டரை ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் போய்ப் பதிவு செஞ்சாச்சு. அங்க கல்யாணமாகி மாரேஜ் சர்ட்டிபிகேட் இருந்தாத்தான் அவ அமேரிக்கா போக விஸா கிடைக்கும். அதுக்கு அப்புறம் வைதீக முறையில் உங்க பாரம்பரியம் கெடாதபடி அவ கழுத்தில தாலியைக் கட்டறேன்.” 

”என் தங்கைகிட்ட பாஸ்போர்ட் கூட கிடையாது” என்றான் பாபு. 

“உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அக்கா உன் பாஸ்போர்ட்டை எடுத்துட்டு வரட்டுமா?” என்றாள் சுபா. 

“எங்களுக்குத் தெரியாம என்னவெல்லாமோ நடந்திருக்கு” என்றாள் சாரதம். 

“எல்லாத்துக்கும் நான்தான் காரணம், பெரியம்மா.. சத்யா உடந்தை.” என்று சொல்லிச் சிரித்தாள் ரேவதி. 

ஒருவாறாக டிபன் காப்பி முடித்தது. பிள்ளை வீட்டாரும் அண்ணா நகர் திரும்பினார்கள்.. 

அவர்கள் சென்றபிறகு சாரதம் “எனக்கு ஒரு எண்ணம்..” என்றாள் சாம்பசிவத்தைப் பார்த்து 

“என்ன.?” 

“சுபா கல்யாணத்தையும் அதே பந்தல்ல அதே நாள்ள நடத்திடலாமே..”

“நோ!” என்றான் சத்யா.

“ஏண்டா..?” 

”எனக்கு எத்தனை சிநேகிதர்கள் மெட்ராஸ், பாம்பே, டெல்லி  இங்கல்லாம் இருக்கா தெரியுமா?” என்றான் சத்யா. 

“இது என்ன ஆல் இண்டியா டோர்ணமெண்டா, ஆப்டர் ஆல் ஒரு கல்யாணம். அம்மா உன் இஷ்டப்படி செய் அம்மா. அனாவசியமா ரெண்டு செலவு எதுக்கு…? என்றாள்.

“நான் ரெடி இல்லை.’ ‘என்றான் சத்யா.

“அப்ப இப்படிச் செய்யலாம் அம்மா”

“எப்படிடீ சுபா…?” 

“சத்யாவுக்கு நான் எப்படி முறைப்பொண்மோ, அப்படியேதான் சிவக்குமாருக்கும். உன் அண்ணாவை உடனே நேரில் பார்த்து அவர் புள்ளையை நான் சுல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு..” என்றாள் சுபா. 

“என்ன சுபா இப்பாடி கோணாங்கித்தனமாப் பேசறே? சத்யாதான் உன் புருஷன்னு நாம் ஏற்கெனவே முடி செய்தாச்சே..?” என்றார் சாம்பசிவம். 

“முடிவை மாத்தறதிலே என்ன தப்பு? எந்த பொண்ணுக்கும் ஒரு நல்ல துணை அவசியமானது. மாமா பிள்ளை சிவக்குமார் ஒரு சார்டர்டு அக்கௌண்டண்ட். மாமாவே ஒரு தடவை அம்மாகிட்டே வாய்விட்டுக் கேட்டிருக்கார். சிவக்குமாருக்கு என்ன குறைச்சல்.? சொல்லப்போனா சத்யாவைவிட அதிகமாவே சம்பாதிக்கிறார். ரேவதி சொல்ற ஃப்ளாட்ல நாங்க எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். ‘அது முடியாது. சத்யாவுக்குத்தான் அந்த வீடுன்னு’ ரேவதி சொன்னாலும் எனக்கு ஓகேதான்..” 

“ஏய் என்ன பொரிஞ்சு தள்றே.?” என்றான் சத்யா. 

“ஏய் கீய்னெல்லாம் சிவக்குமார் என்னைக் கூப்பிடமாட்டான். அவனுக்கு மரியாதையும் பண்பும். உண்டு” 

“பிரிதிவிராஜன் சம்யுக்தையை தூக்கிகிட்டுப்போன மாதிரி உன்னைக் கல்யாண மண்டபத்லேர்ந்து தூக்கிட்டுப் போயிடுவேன்” 

“உனக்கு சைக்கிளே சரியா விடத் தெரியாது. குதிரையிலா ஏறி வரப்போறே?” 

“உன்னைத் தூக்கிட்டுப்போக எதுக்கு ஒரு குதிரை? ஒரு கழுதையே போதும்.” 

“ஓ.. அப்ப நீ நடந்தே வரப்போறியா? இது தெரியாம போச்சே?” 

“மொதல்ல ரெண்டு பேரும் வார்த்தையாடலை நிறுத்துங்கோ” என்ற சாரதம், “நீங்க போய் மொதல்ல சாஸ்திரிகளைப் பாருங்க.” என்றாள். 

“மாமி, நீங்க மொதல்ல உங்க அண்ணாவைப் பார்த்துட்டு வாங்கோ, கூடவே ஒரு டெய்லரையும் அழைச்சிட்டுப் போங்க. சிவக்குமாருக்கு பாண்ட் கோட் தைக்க அளவு எடுக்க சௌகரியமாக இருக்கும்” என்றான் சத்யா. 

“நல்ல ஐடியாம்மா? நான் இப்பவே போய் உசத்தி பாண்ட், கோட், ஷர்ட் துணியெல்லாம் வாங்கிட்டு வறேன்” என்றாள் சுபா. 

“பேசாம். இருங்க. என்ன நீங்க இன்னும் சாஸ்திரிகளைப் பார்க்க புறப்படலியா.?” என்றாள் சாரதம். 

“இப்படிப்பட்ட தமாஷ் அமெரிக்கால எனக்குக் கிடைக்கவே கிடைக்காது” என்றாள் ரேவதி. 

“அதுக்காகக் குறைபட்டுக்காதே ரேவதி. நீ சத்யாவை அழைச்சுக்கிட்டுப் போ. உன் வீட்டு விதூஷகனா அவன் இருப்பான். ரெண்டு வேளை சாப்பாடு போட்டு மாசாமாசம் கைச்செலவுக்கு அஞ்சாறு டாலர் கொடுத்தால் போதும்.” 

“எனக்கும் ஆசை தான் சுபா.. ஆனா அவன் என்னுடைய ஏஜண்ட்டாச்சே.. அவனும் வந்துட்டா என் சொத்துக்களைப் பராமரிக்க யார் இருக்கா?”

“ரேவதி” என்று கத்தினான் சத்யா. 

“என்ன சத்யா என்மேல் எரிஞ்சு விழற மாதிரிக் கத்தறே?” 

“அடையாறு வீட்டுச் சாவி எங்கிட்டதான் இருக்கு! நான் இப்பவே அங்கே போறேன்.” 

”குட்பை அண்ட் குட் லக்.. மறந்துடாம பொடி நடையா வந்து சிவகுமார் தாலி கட்டறதுக்கு முன்னால் என்னைத் தூக்கிட்டு போயிடு! டாடா.. பாய் பாய்..!” 

அவள் சொல்லி வாய்மூடவும் ஒரு தம்பதியர் வீட்டினுள் பிரவேசிக்கவும் சரியாக இருந்தது. 

“வாங்க மாமா, வாங்கோ மாமி!” என்ற சுபா, “அம்மா மாமா மாமி வந்திருக்கா, உட்காருங்கோ” என்று சொல்லிவிட்டு ரேவதியைப் பார்த்தாள்.. 

”வா.. அண்ணா, வா மன்னி!” என்று வரவேற்றுக் கொண்டே சாரதம் சாம்பசிவம் பின் தொடர வந்தாள். 

”வர்ற ஞாயிற்றுக்கிழமை சிவாவுக்கு நிச்சயதார்த்தம், நீங்க எல்லோரும் வந்துடனும்.” என்றார் நீலகண்டன். 

“ரொம்ப சந்தோஷம் நீலகண்டா. பொண்ணு எந்த ஊரு?”

“பூர்வீசும் திருக்கருகாவூர்.. ஆனா சம்பந்தி இந்த ஊர்ல ஸெட்டிலாகி நாற்பது வருஷமாறது!” 

”பொண்ணு எப்படி, என்ன படிச்சிருக்கா?” என்று சாரதம் கேட்டாள். 

“அவ பேரும். உன் ரெண்டாவது பெண்ணோட பேருதான். சுபா சார்ட்டர்ட் அகௌண்டண்ட்டா இருக்கா”. 

”நல்ல பொருத்தம்!” என்றாள் வைதேகி.

நீலகண்டனும் அவருடைய மனைவி பாக்கியமும் ரேவதியைப் பல தடவைகள் பார்த்தாகிவிட்டது. 

பாக்கியம் கேட்டாள், “உங்காத்துக்கு யாரோ வந்திருக்காங்க. பார்த்தமுகமாத் தெரியலியே?” என்று. 

”என் தம்பி பொண்ணு ஸ்டேட்ஸில் இருக்கா”

“அப்படியா, ரொம்ப சந்தோஷம், நீயும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தி. ஞாயிற்றுக்கிழமை நீயும் இவாகூட, வரணும், என்ன?” என்றாள் பாக்கியம். 

“வராம இருப்பேனா?”

அவர்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு சாம்பசிவம் சாஸ்திரிகள் வீட்டுக்குப் புறப்பட்டார். சாரதம் கோவிலுக்குச் சென்றாள். பாபு – சாந்தா தங்கள் வீட்டுக்குப் போனார்கள். திடீரென்று வந்த வீரா ரேவதியை அழைத்துக்கொண்டு வெளியேறினான். வைதேகி தன் சிநேகிதி வீடுவரைப் போய்விட்டு வருவதாகக் கூறிச் சென்றாள். 

ஹாலில் சத்யாவும் சுபாவும் மட்டுமே இருந்தார்கள்.

சத்யா ஏதோ பேச ஆரம்பிப்பதற்குள் சுபா அழ ஆரம்பித்தாள். 

“ஏய் எதுக்கு அழறே?” 

சுபா பதில் கூறாமல் அழுகையைத் தொடர்ந்தாள்.

”காரணம் சொல்லிவிட்டு அழு.” 

“இந்த சிவாவும் கைநழுவிப் போய்விட்டானேனு அழறேன்.” 

“சரி நீ அழுதுட்டிரு. நான் கிளம்பறேன்.” 

“எங்கே அடையாறு வீட்டுக்கா?” 

“இல்லே?” 

“பின்னே” 

“வாணி வீட்டுக்கு.” 

“உன் ஆபீஸ்ல வேலைப் பாக்கிற வாணியா?”

“அவளேதான்.” 

“எதுக்கு?”

“வாணி என்னை லவ் பண்றா. அவ அம்மா அப்பாகிட்டப் பேசி ஒரு நல்ல நாளைப் பார்க்கச் சொல்லணும்.”

“ஆல் தி பெஸ்ட்” 

சத்யா மெல்ல நகர்ந்தான்.. அவன் வாசலை அடைகையில் “ஏய்” என்ற அழைப்பு கேட்டது. திரும்பினான். 

“என்ன?” 

“ஒரு சமாச்சாரம்” 

“என்ன?” 

“டேபிள் மேல நிறைய குப்ப காகிதங்கள் இருக்கு. நடுவில் ஒரு மாரேஜ் இன்விடேஷன் இருக்கு. உன் பெயருக்குத்தான். அதைப் பார்த்துவிட்டு வாணி வீட்டுக்குப் போ.” 

“நான்தான் அதைப் பிரிண்ட் பண்ணக் கொடுத்ததே! ஞாயிற்றுக்கிழமை வாணி கல்யாணத்துக்கு போயாகணும்!” என்றான் சத்யா. 

“நான் உன்னை மடக்கப் பார்த்தேன், நீ என்னை மடக்கப் பார்த்தே!” 

“ஆனா ரெண்டு பேருக்கும் ஏற்கெனவே இந்த ரெண்டு பேர்களுடைய கலியாண விஷயம் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சத்யா. 

“சத்யா!”

“என்ன சுபா?”

”ஒரு சின்ன ரிக்வெஸ்ட்” 

“என்ன சுபா?” 

“இப்ப நீ சிரிச்சியே?”

“ஆமாம் அதுக்கு என்ன?”

“இனிமே அது மாதிரி சிரிக்காதே!”

“ஏன்?”

“முகமெல்லாம்..”

“முகமெல்லாம்..?”

“அசடு வழியறது!” 

– தொடரும்…

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *