கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 2,475 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாதையில் ஏதோ சத்தம் கேட்கிறது. எழுதிக் கொண்டிருந்த நான் வந்து திரையை விலக்கி ஜன்னலூடாகப் பார்க்கின்றேன்.

சரியாக எங்கள் வீட்டுக்கு முன்னால்தான் ஏதோ கூட்டம்.

தெருச்சுற்றிகள் ஏழெட்டுப்பேர் கும்பலாகக் கூடி நிற்கின்றனர். மத்தியில் யாரோ மாட்டிக் கொண்டனர் என்பது உச்சஸ்தாயில் கேட்கும் சில சிங்களக் குரல்களில் இருந்து தெரிகிறது. –

“யாரைத் தேடுகிறீர?” ஒரு குரல்.

“எங்கிருந்து வருகின்றீர்?” இன்னொரு குரல்.

“யாழ்ப்பாணமா?” மற்றொரு குரல்.

“கொட்டித?” மற்றுமொரு குரல்.

“ஐடெண்டி கார்ட் இருக்கா … எடு..?”

வீட்டில் இருந்து வெளியே வந்து கேட்டடியில் நின்றேன்.

இப்போது சூழ்நிலை துல்லியமாகத் தெரிகிறது.

கையில் ஏதோ ஒரு விலாசத்தை வைத்துக் கொண்டு இரண்டு தமிழ் வாலிபர்கள் வீடு தேடி வந்துள்ளனர்.

“சந்தேகத்துகிடமான விதத்தில் புதியவர்கள் யாராவது நடமாடி னால் உடனே எங்களுக்கு அறிவியுங்கள்” என்னும் பொலிஸ் அறிவித்தல் இவர்களுடைய அழுக்கடைந்த மனதை உசுப்பிவிட, விலாசம் தேடி வந்தவர்கள் வசமாக மாட்டிக் கொண்டனர்.

எதிர் வீடுகள், பக்கத்து வீடுகள் ஆகியவற்றின் சாளரங்களில் சில புதிய, பழைய தாமரைகள் பூத்தன….. பின் மறைந்தன.

வாசற் கதவடியில் சில ஆண்முகங்கள் எட்டிப் பார்த்தன. சற்று நின்றன… பின் உள்ளே சென்றன.

இவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு அக்கறை எங்கிருந்தோ, யாரோ புதியவர்கள் வந்து கொழும்பைத் தூக்கிக் கொண்டு போய் விடாமல் தடுத்து நிறுத்திவிடும் முன் ஜாக்கிறதை… இந்தத் தெருப் பொறுக்கிகளுக்கு வந்து விடுகிறது!

நம்மவர்களின் தேசப்பற்று வினோதமே இதுதான். காக்கைக்கு மூக்கில் வியர்ப்பதுபோல் புதியவர்கள் யாராவது வந்தால் உடனே இவர் களுக்குத்தான் வியர்த்து விடுகின்றது.

ஏதாவது கையில் மடியில் இருப்பதை அப்பிக் கொண்டு அனுப்பி விடும் வித்தைகள்தான்!

விலாசம் தேடி வந்தவர்களை நடுவில் விட்டு இவர்கள் வியூகம் அமைத்துக் கொண்டனர். கேட்டைத் திறந்தேன். றோட்டுக்கும் வீட்டுக்கும் நடுவில் நிற்கும் அரைச்சுவற்றில் இருக் கும் இந்த இடுப்பளவு இரும்பு கேட் திறக்கும்போது இசையு டன்கூடிய ஒரு நீண்ட ஒலி எழுப்பும். கேட் மாட்டப்பட்டிருக்கும் கொக்கிக்கு எண்ணெய் போட்டால் இந்த சப்தம் எழாது என்பதை மழை நாட்களில் கேட் திறக்கப்படும்போது நாங்கள் அறிந்து கொண் டோம் என்றாலும் எண்ணெய் போடுவதில்லை.

வீட்டுக்குள் இருக்கும் எங்களுக்கு இந்த கேட்டொலிதான் கூப்பிடு மணி.

உள்ளே இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இப்போது வெளியே இருக்கின்றவர்களுக்கும் இது ஒரு கூப்பிடு மணியாகிவிட்டது!

நான் கேட்டைத் திறந்ததும் சுற்றி நின்ற கும்பல் முகங்களில் அதி ருப்தி தென்பட என் பக்கம் திரும்பியது.

நான் கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை .

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வீட்டில் இருந்து எட்டிப்பார்ப்ப வர்கள் எட்டிப்பார்ப்பதுடன் உள்ளே போய்விட வேண்டும். அதா வது இவர்களுடைய தெருத் தர்பாருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது.

நான் அவர்களை நோக்கி நடந்தது அவர்களுக்குப் பிடித்திருக்க முடியாதுதான்

“என்னைசே இந்தப் பக்கம்! என்ன இப்படிக் கூட்டமாக!” என்றேன்.

உண்மையிலேயே இவர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர் எனக்குத் தெரிந்தவராகத்தான் இருந்தார். கொஞ்சம் இலக்கிய ஈடு பாடு கொண்டவர். சிங்களச் சிறுகதைகள் சிலவற்றை…. கவிதைகள் சிலவற்றை… தமிழில் அவ்வப்போது மொழிப்பெயர்த்து வருபவர். சுயமாகவும் ஒரு சில கவிதைகள்… கதைகள் எழுதுவார். கொழும்பின் வேறொரு பகுதியில் வசிப்பவர்.

“வணக்கம் சார்! இவரோட சொந்தக்காரர்கள் இந்தப்பக்கம் இருக்கின்றார்களாம். அதுதான் வீட்டைத் தேடிக் கொண்டு வந்தோம். இவர்கள் என்னடாவென்றால்….!

பயந்துபோய் மான் போல் மருட்சியுடன் பேசினார் அவர். நண்ப ருடன் இருந்த மற்றவரைப் பார்த்தேன். பழகிய முகம் என்பது தெரி கிறது. ஆனாலும் ஆளை மட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

“உங்களுக்குத் தெரிந்தவர்களா?” கூட்டத்தில் உள்ள ஒருவன் சிங்க ளத்தில் கேட்டான்.

“ஆமாம்… ஆமாம்” என்றபடி அவரைப் பெயர் சொல்லி அழைத்து “வாருங்கள் உள்ளே போய் பேசுவோம்” என்று திரும்பினேன்.

“மாத்தயாத் கொட்டித தன்னெ நே” என்ற குரல் கேட்டு நின்று திரும்பிப் பார்ப்பேன் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆகவே என் பக்கம் திரும்பி முகத்தை அடையாளம் பண்ணிக் கொள்ளாமல் கலைந்து விட்டனர்.

கோவில் திருவிழா என்றால் “தெருவைச் சோடனை செய்கின் றோம்” என்று லிஸ்ட்டுடன் வருவார்கள்.

வெசாக் என்றால் “தண்ணீர்ப் பந்தல் போடுகின்றோம்” என்று லிஸ்ட்டைத் தூக்கிக் கொண்டு வருவார்கள்.

இப்படி எதையாவது கூறிக் கொண்டு லிஸ்ட்டையும் தூக்கிக் கொண்டு பணம் வசூலிக்க வரவேண்டும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆகவே வாயில் வந்த பயிற்றப்பட்டுவிட்ட வார்த்தை காற்றுடன் கலைந்துவிட அவர்களும் கலைகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் இன்னொரு தடவை எங்களை வீடு புகுந்து அடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை என்பதுவும், ஏற்கனவே அடித்ததில் அடிப்பட்டவர்களைவிடக் கூடுதலான இழப்பு அடிகத் தூண்டியவர்களுக்கும் அடித்தவர்களுக்கும்தான் என் பது சகல மட்டத்திலும் உணரப்பட்டதால், இனிமேலும் மந்திரக் கோலைத் தூக்கிக் காட்ட மந்திரவாதிகள் இல்லை என்பதும் இவர்க ளுக்கு மட்டும் புரியாதா என்ன?

ஆகவே திரும்பிப் பார்த்து முகத்தைக் காட்டி அடையாளம் பண் ணிக் கொள்ளாமல் கலைகின்றனர்.

“பார்த்தீர்களா… பறங்கிக்காய் கொட ஐநூறு பன்னெண்டு ரூபா யாம்! உருளைக்கிழங்கு ஐநூறு, இருபத்தெட்டு ரூபாயாம்! வெங் காயம் இருபத்தைந்து ரூபாயாம்! இந்தர இவ்வளவுதான் தேங்காய் எட்டு ரூபாய் சொல்றான்! என்னத்தை வாங்குகிறது என்னத்தை ஆக்குகிறது!” குமுறிக் கொண்டே வெளியே வந்த என் மனைவி, என்னுடன் யாரோ புதியவர்கள் இரண்டு பேர் நிற்பதைக் கண்டதும் நாக்கைக் கடித்தபடி உள்ளே போய்விட்டாள்.

“குடிக்க ஏதாவது குடுத்தனுப்புங்க” என்று மனைவிக்குக் குரல் கொடுத்துவிட்டு “இருங்க…. இருங்க… பயலுகள் என்ன சொல்றாணுகள்” என்றேன்.

“அதை ஏன் கேக்குறீங்க? நீங்க வெளியே வந்தது நல்லதாப் போச்சு. இல்லாட்டி அவனுகளே எங்க சட்டைப் பைக்குள்ள கையை விட்டு அடையாள அட்டையைத் தேடி இருப்பானுக!” என்று கூறிய படி முகம்… கழுத்து… நெஞ்சு… இத்தியாதிகளைக் கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துக் கொண்டார்.

“பயல்கள் நன்றாகவே பயமுறுத்தி இருக்கிறார்கள்” என்று எண்ணி யபடி மற்றவரைப் பார்த்தேன்.

எங்கேயோ பார்த்த மாதிரி என்று நான் தடுமாறிக் கொண்டிருக்கும் போதே நண்பர் கூறத் தொடங்கினார்.

“இவர் எனது நண்பர். சென்ட்றல் பஸ் ஸ்டாண்ட் அருகில் மில்க் பாருக்குப் பக்கத்தில் இருக்கும் பெரிய கடை! தெரியுமா உங்களுக்கு. அதில் சேல்ஸ்மனாக நிற்கின்றார்”

எனக்கு இப்போது பளீரென்று மின்னலடித்தாற்போல் விளங்கியது.

அங்கேதான் இவரைப் பார்த்திருக்கின்றேன். அது ஒரு பெரிய சில்லறைக் கடை. எல்லாச் சாமான்களும் இருக்கும். கூட்டமும் அப்படித்தான் இருக்கும். சாமான்களை வாங்கிய கையுடன் பஸ்ஸில் ஏறிக் கொள்ளலாம் என்பது மட்டுமல்ல… இடம்பிடித்தும் அமர்ந்து கொள்ளலாம் என்னும் வசதிக்காகத்தான் இத்தனை கூட்டமும்.

கூட்டத்துடன் நெருங்கி நின்று உள்ளே இருக்கும் யாராவது ஒருவ ரின் கருணைக்காகக் காத்து நின்று காசைக் கொடுத்து சாமான் வாங்கி இருக்கின்றேன்.

உள்ளே நிற்கும் சிலரில் இவரும் ஒருவராக நிற்பதைக் கண்ட நினைவுதான். எங்கேயோ பார்த்திருக்கின்றேனே என்று சற்றுமுன் அலைக்கழித்தது.

ஒரு தடவை யாரோ இன்னொருவருக்கு இவர் லிஸ்டின்படி சாமான் போட்டுக் கொண்டிருந்திருக்கின்றார். அவசரத்தில் நானும் என்னுடைய சாமான் துண்டை அவரிடம் நீட்ட அதை லாவகமாக ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிய இவர் “வேலை செய்து கொண்டல் லவா இருக்கிறேன் ….. தெரியவில்லை … பொறுங்கோ !” என்று கூறிய துடன் சாமான் சுற்றிக் கொண்டே “பார்த்தா பெரிய மனிதர்போல் கிடக்கு. மூளையைப் பாவிக்கிறதில்லை… கடைக்கு வந்தவுடன் சாமான் கெடைச்சிடணும்…” என்று எனக்கும் கேட்கும்படி முனகிக் கொண்டார்.

அந்த நேரத்தில் அது எனக்குச் சுருக்கென்றுதான் இருந்தது. என்றா லும் அவர்மேல் எனக்கு எதுவிதமான கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை.

அவர் கூறியது நியாயமானதுதான்…! கடையில் நிற்பவர்களின் சிரமங்களை சாமான் வாங்க வருபவர்களும் உணர வேண்டும்தானே!

அப்போதே நான் மறந்து விட்டாலும் இப்போது நினைவிலோடுகிறது.

அவரையே நான் பார்த்துக் கொண்டிருந்ததால் நண்பர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தொடர்ந்து கூறினார்.

“கடையில் நிற்கும் இவருடன் எப்படி நான் வர நேர்ந்தது என்று நினைக்கின்றீர்களா?” என்று “இல்லை இல்லை” என்று அவர் பேச்சை கவ்வாத்திட்டு மறுத்த எனக்கு நண்பர் என்ன கூறுகின்றார் என்று புரியவில்லை .

ஒரு சில்லறைக் கடையில் வேலைக்கு நிற்பதால் இவர் எப்படி நண்பரைவிட ஒருபடி தாழ்ந்து போனார் என்பதும்…. கதைகள் சில எழுதுவதால் பேப்பர்களில் பெயர் வருவதால் நண்பர் எப்படி இவரை விட உயர்ந்தவராகிவிட்டார் என்பதும் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

“ஒரு சக மனிதனை தன்னுடன் சமதையாக வைத்து எண்ணத் திரா ணியற்ற இவரெல்லாம் எழுதி..” என்று நான் எண்ணிக் கொண்டி ருக்கும்போது,

“தன்னுடைய ஓய்வு நேரங்களில் இவர் வானொலி நாடகங்களில் பங்குபற்றுகிறார்… நான் தயாரிக்கும் வானொலி நிகழ்ச்சிகளில் வரும் குட்டி நாடகங்களில் எல்லாம் இவருக்கு இடம் தருகின்றேன்… நல்ல நடிகர். எதிர்காலத்தில் பிரகாசிப்பார்…! என்று நண்பர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். மற்றவர் லேசாகச் சிவக்கும் முகத்துடன் குனிந்தபடி மௌனமாக சிரித்துக் கொண்டார்.

“அந்த எதிர்காலப் பிரகாசத்தை நம்பித்தானோ..?” என்று எண் ணியபடி, “இவர் ஒரு வானொலிக் கலைஞராக, கலை இலக்கியத் துடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவராக இல்லாதிருந்தால் இவரைக் கூட்டிக் கொண்டு இந்த விலாசம் தேடி வந்திருக்க மாட் டீர்கள்! இப்படி மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப்பட்டிருக்கவும் மாட்டீர்கள் இல்லையா..?” என்றேன் .

“இல்லை … இல்லை …” என்று என் கூற்றை மறுத்துச் சமாளித்தவர் மற்றவரைப் பார்த்து “ஐயாவைத் தெரியுமா உங்களுக்கு” என்று அவரிடம் பேச ஆரம்பித்த அதேவேளை உள்ளே இருந்து மனைவி யின் குரல் கேட்டது.

இருக்கையை விட்டு நான் எழுந்தபோதே மற்றவரும் திடீரென்று எழுந்து நின்றார்.

இருகரம் கூப்பி “வணக்கம் ஐயா” என்றவாறு எனது கைகளை . இறுகப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“என்ன இதெல்லாம்..! உட்காருங்கள்..!” என்று கூறிவிட்டு உள்ளே சென்று தேநீருடன் திரும்பினேன்.

அவர் இன்னும் நின்று கொண்டே இருந்தார். பலவந்தப்படுத்தி அவரை நான் உட்காரச் செய்ய வேண்டி இருந்தது.

“ஐயாவை உங்களுக்கு நன்றாகப் பழக்கமா? இங்கேதான் ஐயாவின் வீடு இருக்கிறது என்பது முன்பே தெரியுமா?” என்று நண்பரிடம் ஏதேதோ கேட்கின்றார்.

“சாரைத் தெரியும். ஆனால் இங்கேதான் வீடுன்னு தெரியாது. தெரிஞ் சிருந்தாத்தான் நேரா இங்கே வந்திருப்பேனே! றோட்டுல அவனுக் கிட்ட மாட்டிருக்காம!” என்றவர் என்னைப் பார்த்துக் கூறுகின்றார்,

“பாருங்க எவ்வளவோ பழகி இருக்கோம். ஆனா வீடு தெரியலே. விலாசம் தெரியலே, றோட்டுல பாக்றோம் கூட்டங்கள்ல பாக்கு றோம் அவ்வளவோட சரி. இப்பக்கூட றோட்டுல ஒரு தகறாறு நடந் தில்லாட்டி… நல்ல மனசு பண்ணி நீங்களும் வெளியே வந்தில் லாட்டி நாங்கப்பாட்டுக்குப் போயிருப்போம்…” என்று மூச்சுவிடாமல் பொரிந்தவர்… “இப்படியாவது சந்திச்சிக்கிட்டமே அதே ஒரு பாக்கியம்தான்! அந்த றவுடிப் பயலுக்கிட்ட மாட்டிக்கிட்டதே மறந்து போச்சு” என்று முடித்தார்.

அவரிடமிருந்து அந்த விலாசத்தை வாங்கிப் பார்த்தேன். பாதையில் இருந்து பிரியும் ஒரு சந்துக்குள் நுழைந்து போக வேண் டும். சந்துக்குள் நுழைந்த பின்பும் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமம் தான்.

அந்த சந்துக்குள் இவர்களை தனியே அனுப்பக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு உள்ளே சென்றேன் மனைவியிடம் கூறிவிட்டு வர, “இந்த தேங்காயைப் பாருங்க. தேங்காத்திருகிகொட நொழைய மாட்டேங்குது. இதுக்குப் போய் எட்டு ரூபாயா எடுத்திருக்கான்”

ஆத்திரத்தைக் கொட்டித்தீர்க்க குரலை உயர்த்தி சத்தமிட முடியாத பரிதாபம் கழுத்தில் உப்பித் தணிந்தது. வேற்றாள் இருவர் வெளியே அமர்ந்திருக்கின்றார்களே!

“சரி… சரி.. என்ன செய்யலாம்…!” என்று மனைவியை சமாதானம் செய்துவிட்டு அவர்கள் இருவருடனும் வெளியே நடந்தேன்.

***

கையில் சாமான் துண்டுடன் கூட்டத்தில் நெருங்கி நின்று கொண்டிருக்கின்றேன்.

அதே கடைதான்!

கடைக்குள் நின்று கொண்டிருந்த அந்த நண்பர் விலாசம் தேடிக் கொண்டு வந்தவர்… என்னைக் கண்டுவிட்டார்.

“ஐயா வாருங்கள்…” என்றபடி என்னுடைய நீட்டிய கையிலிருந்து சாமான் துண்டை எட்டி எடுத்துக் கொண்டார்.

“சற்றுப் பொறுங்களேன்… வேலை செய்து கொண்டல்லவா இருக்கின்றேன்” என்று துண்டுடன் நீண்ட என் கையை ஒதுக்கிவிட்ட அந்த சுயத்தைக் காணாத எனக்குச் சற்று சங்கடமாக இருந்தது.

தான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடரும்படி இன் னொரு சிப்பந்தியிடம் கூறி அவர் முகம் சுழித்து .ஏதோ முனகிய தையும் என் பொருட்டு மகிழ்வுடன் ஏற்று, என்னுடைய பொருட் களை விரைவாகக் கட்டத் தொடங்கிய அவருடைய செயல் என்னை மிகவும் சங்கடப்படுத்துகிறது.

“என்னைப் பார்த்து அவர் பயப்படுகின்றாரோ? இல்லையென்றால் ஏன் இப்படிப் பதறுகின்றார்…!”

“இது பயமில்லை ஒரு மரியாதை! என் மேல் அவர் கொண்டுள்ள மதிப்பு …!

என் மனதுக்குள் ஒரு கேள்வி… பதில்! சாமான் கட்டியாகிவிட்டது. கட்டிய பொருட்களை ஒரு பெரிய பேக்குக்குள் போட்டு வாயைக் கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு என்னிடம் தொகையைக் கூறுகின்றார்.

துண்டைப் போட்டவுடனேயே நானும் மனைவியும் குத்துமதிப் பாக விலையையும் போட்டுப் பார்த்துக் கொள்வோம். எங்கள் தொகை யைவிடக் கூடுதலாகத்தான் வரும் என்பது எங்களுக்கே தெரியும் என்பதால் ஒரு இருபது முப்பது ரூபாய் கூடுதலாகவே வைத்தி ருப்பேன்.

அவர் கூறிய தொகையைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நானும் மனைவியுமாகக் கூட்டிப் போட்டிருந்த தொகையிலிருந்து முப்பது முப்பத்தைந்து ரூபாய்க்கு மேல் குறைவாக இருந்தது.

இது எனக்கு இரண்டாவது சங்கடம். எனக்கு எதற்காகவோ ஒரு சலுகை கிடைப்பதாக உள்மனம் உறுத்துகிறது.

காசைக் கொடுத்துவிட்டு சாமானை ஏற்க ஒரு சில தோள்களுக்கு மேலாகக் கைகளை உயர்த்தி நீட்டினேன்.

நீண்ட எனது கைகளில் பில்லையும் மீதிப்பணத்தையும் வைத்தவர் “ஐயா பஸ்ஸுக்குப் போங்கோ சாமான் வருது” என்றார்.

சுற்றி நின்றவர்கள் ஒரு அரசியல்வாதியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்ப்பதான ஒரு கூச்சத்தை உணர்கின்றேன்.

“பொடியேன், ஐயா கூடவே போய் இந்த சாமான்களை பஸ்ஸில் வச்சிட்டு ஓடியா! சாமானை வச்சிட்டு கையை ஏதும் நீட்டிறாதே…! ஐயா எனக்கு நல்லா தெரிஞ்சவரு..! கேப்பேன்..!”

திரும்பி நடந்த என் செவி வழி நுழைந்து மனதை குடைகிறது, அவருடைய ஓங்கிய குரல்.

“எனக்கு இத்தனை உபசரணை சலுகை செய்யும் இவர் என்னு டைய சாமான்களைத் தூக்கிவரும் அந்தச் சிறுவனிடம் “ஏதும் எதிர் பார்க்காதே என்று எச்சரித்து அனுப்புவது என்ன நியாயம்” என்று எண்ணியவாறு பஸ்ஸில் அமர்ந்து லிஸ்ட்டை எடுத்துப் பார்க்கின்றேன்.

லக்ஸ்பிறே, சீனி, கிழங்கு, வெங்காயம் போன்ற அன்றாடத் தேவைப் பொருட்களின் விலைகள் நாங்கள் போட்டுக் கொண்டிருந்ததைவிட மிகையாகக் குறைந்திருக்கிறது.

எனக்குத் தெரியும் பால்மா பக்கெட் ஆறோ பன்னிரெண்டோ வாங்கினால், ஒரு பக்கெட்டின் விலை நாலைந்து ரூபாயால் குறையும் என்பதும் மூடை கணக்கில் … அதாவது ஐம்பது கிலோவுக்குமேல் சீனி வாங்கினால், ஒருகிலோவின் விலை இரண்டு இரண்டரை ரூபாயால் குறையும் என்பதும், மற்றப் பொருட்களும் அப்படியே தான். மொத்தமாக வாங்கினால், விலை ஏகமாகக் குறையும்.

மூடை கணக்கில் சீனியும்…. டசின் கணக்கில் லக்ஸ்பிறேயும் யாரால் வாங்க முடியும்?

பணக்காரர்களால் தான் முடியும்.

மொத்தமாக வாங்கவும் வைத்துக் கொள்ளவும் வசதி படைத்த வர்களுக்கு ஒரு லக்ஸ்பிறேயின் விலை 54 ரூபாயும் சீனி கிலோவின் விலை 23 ரூபாயாகவும் இருக்கும்போது, எண்ணி எண்ணிக் காசெடுத்து ஒரு பக்கெட் லக்ஸ்பிறேயும் அரை கிலோ சீனியும் மாத்திரமே வாங்க சக்தியுள்ள ஏழைக்கு லக்ஸ்பிறே 59 ரூபாய், சீனி 26 ரூபாய்!

வசதி படைத்த பணக்காரர்களுக்கு குறைந்த விலை. வசதியற்ற ஏழைகளுக்குக் கூடிய விலை.

நமது பொருளாதார அமைப்பு அப்படி!

சீனிக்கும் லக்ஸ்பிறேக்கும் இன்னும் சில பொருட்களுக்கும் அந்தப் பணக்கார விலைதான் எனக்கும் போடப்பட்டிருக்கிறது. இத்தனைக் கும் என்னுடைய ஏழ்மை லிஸ்டில் இருப்பதோ ஒரு பால் பக்கெட் டும் ஒரு கிலோ சீனியும்தான் !

“லாபாய்…லாபாய்” என்று பொருட்களை விற்பதுபோல் ஊர்களை விற்றுக் கொண்டிருக்கின்றான் பஸ் கண்டக்டர்.

“இந்தியா” என்னும் தன்னுடைய பத்திரிகைக்கு “பாரதி” விலை நிர்ணயித்திருந்த விதம் என் நினைவிலோடுகிறது.

அரசாங்க அலுவலகங்களுக்கு ஆண்டு சந்தா ஐம்பது ரூபா. ஜமீன் தார்களுக்கும் ராஜாக்களுக்கும் முப்பது ரூபா. இருநூறு ரூபாய்க்குக் கூடிய மாத வருமானம் உள்ளவர்களுக்கு பதினைந்து ரூபாய். மற்றை யோருக்கு வெறும் மூன்று ரூபாய்.

ஒரே தலைகீழாக இருக்கிறது. எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. பாரதி பைத்தியக்காரன்….!

அந்தக் கடைக்காரச் சிப்பந்தி என்னை இன்னார் என்று அறிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்திருக்கும் லாபம் ஐம்பது ரூபாய்க்கு மேல்…!

இது லாபமா..? லஞ்சமா..? சலுகையா..? தர்மமா..? லாபம் பெற நான் என்ன வியாபாரியா? சலுகை என்றால் …. நேற்றுவரை இல்லாத சலுகை இன்று ஏன்? எழுத்தாளன் என்பதாலா..? எழுதுகிறவன் என்பதாலா..? என்னில் இவர்களுக்கு ஏதாவது ஒரு பயம் … ஒரு அந்நியம்… வந்து விடுகிறதா? சலுகை எந்தவிதத்திலும் மனிதாபிமான உணர்வால் வருவதல்ல! லஞ்சம் என்றால் பிரதியுபகாரமாக என்ன எதிர்பார்க்கின்றார்? தன்னுடைய ஒரு மோசமான நடிப்பை அல்லது படைப்பை நல்ல தென்று கூறச் சொல்வாரா?

தர்மம் என்றால்? தர்மம் வறுமையை இல்லாதொழிக்கும் வல்லமை கொண்டதல்ல.

காந்தியிடம் ஒருவன் கேட்டானாம், “நான் உங்களுக்கு ஒரு சட்டை வாங்கித் தருகின்றேன், போட்டுக் கொள்ளுகின்றீர்காளா” என்று.

காந்தி சொன்னாராம், “இந்தியாவில் உள்ள சட்டை இல்லாத அத்தனை கோடி ஏழைகளுக்கும் ஆளுக்கொரு சட்டை தர உன்னால் முடியுமா தம்பி” என்று.

காந்தி ஒரு பைத்தியக்காரன்…!

“பயிண்ட… பயிண்ட…” என்று இறங்குபவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக தள்ளிக் கொண்டிருந்தான் பஸ் கண்டக்டர்.

அவனுடைய கீரைக்கடைக்கு எதிர்க்கடை பின்னால் வந்து கொண்டிருக்கிறது.

மன ஓட்டத்தைவிட வேகமாகவா பஸ்காரன் ஓடி வந்திருக்கின்றான்?

மூட்டையுடன் என்னையும் இழுத்து வெளியிலே உதறிவிட்டு ஓடி விட்டது பஸ். பஸ்காரனுக்கு இன்னும் என்னை யார் என்று தெரியவில்லை!

சாமான் மூடை கணக்கிறது! கடையிலிருந்து பஸ்ஸுக்குக் கிடைத்த சலுகை இப்போது என்னவாகிறது? யார் ஒரு பையனை அனுப்புவார்களாம்!

லிஸ்ட் இன்னும் கையில்தான் இருக்கிறது. தொடர்ந்தும் இதே கடையில் சாமான்களை வாங்கினால்…! மூடையின் கனம் கழுத்தின் நுகமாய் நெஞ்சை அழுத்துகிறது. மனைவியைக் கெடுத்துவிட வேண்டாம் என்னும் முன் ஜாக்கிரதையுடன் கையிலிருந்த கடை லிஸ்டை கசக்கிப் பாதையோரத்தில் வீசி விட்டு கனக்கும் மூட்டையுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.

– வீரகேசரி – 05.09.1993 – தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *