காலை பேருந்தின் நெரிசலில் சிக்கித் தவித்த கவிதா தனக்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தாள்.
இன்று எப்படியும் மேனேஜர் கிட்ட லீவு கேட்டே ஆகனும் நாளைக்கு சனிக்கிழமை சேர்ந்த மாதிரி இரண்டு நாட்கள் கிடைக்கும் இல்லை என்றால் அவ்வளவு தான். தன் மகளின் கோபத்தை நினைத்து பயந்தபடி தன் இருக்கையில் அமர்ந்தாள்.
காலை அலுவலகம் அதிகமான கூட்டமாக தோன்றியது. அதில் பெரும்பாலும் புதியவர்களாக தெரிந்தார்கள். கவிதாவின் அனுபவம் பேச்சில் தெரிந்தது. அது அவளின் பலம்.
அதனால் தான் அவளை கஸ்டமர் கேரில் ஆணி அடித்து உட்கார வைத்திருந்தது கம்பெனி.
உணவு இடைவேளை வந்தது. மேனேஜரிடம் தயக்கத்துடன் லீவு கேட்டாள்.
சிரித்தபடி அனுமதி கொடுத்தார்.
ஒரு நாள் தாம்மா ! என்றார் கண்டிப்பான குரலில், கவிதாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
அப்பாடா தப்பித்தோம் மகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆசையில் கவிதா. அடுத்த அரை நாள் வேகமாக நகர்ந்தது. மணி ஆறு வேகமாக ஆயத்தமானாள் கவிதா.
கவிதவைப் பற்றி சிறிய அறிமுகம் , கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ,நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.
அந்த நல்ல மாப்பிள்ளை கையில் பெண்குழந்தையை கொடுத்து விட்டு விபத்தில் இறந்து போனார்.
அப்போது கவிதாவின் வயது இருபத்திமூன்று. கவலையும் ,அன்பு கணவரின் இழப்பும் அடுத்த ஒரு வருடத்தை ஓட்டியது. பிறகு மெல்ல மெல்ல வாழ்க்கையின் நிஜகள் சிரித்தது.
அப்பா அழுதார்,அம்மா சொல்ல முடியால் நடை பிணமானார். பணத் தேவை கவிதாவின் மூளைக்கு எட்டியது. தன் மகளின் எதிர்காலம் கருதி அருகில் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.
இடையில் நிறைய வரன்கள் வந்தது மறுமணத்திற்கு…அண்ணன் விரட்டி அனுப்பினான் .எங்க வீட்டு பெண்கள் அந்த மாதிரி இல்லை,அவள் குழந்தைந்தையே போதும் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்று பெருமையாக….சொல்லிக்கொண்டான்…
தங்கையை கேட்காமலேயே…
அண்ணனை நினைத்துப் பெருமை பட்டாள் கவிதா, கணவன் இறந்து ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.
இப்போது அண்ணனின் பேச்சு எரிச்சலைக் கொடுத்தது.
அவசரமாக திருமணம் செய்து வைத்த தந்தையின் மீது தேவையில்லாமல் கோபம் வந்தது. அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்றவுடன் துடித்த அப்பா மீது வெறுப்பை கொட்டினாள். மகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாடுபட்டாலும் இடை இடையே தனிமை கொடுமை செய்தது.
கவிதா மகளைத் தோளில் சுமந்து சுமந்து சோர்ந்து போனாள். அப்போது கணவரின் நினைவு வாட்டியது. மாமியார் வீட்டில் இருந்து அடிக்கடி போன் செய்வார்கள். மாமியார் மகளின் வீட்டோடு தஞ்சம் அடைந்து விட்டார்.
சொந்தங்கள் கவிதாவை நினைத்து பெருமைப்பட்டது. மற்றவர்கள் பார்வையில் கவிதா ஒரு முன்னுதாரணமாக இருந்தாள்.
அலுவலகத்தில் நெருங்கிப் பழகிய நண்பர்கள் அறிவுரைகள் வழங்கினார்.’உனக்கு ஒரு துணை வேண்டாமா…’ மனம் சிந்திக்க துவங்கியது. என்ன பயன் ..அழுகை தினமும் ஆறுதலாக இருந்தது.
ரோட்டில் பார்க்கும் நடுத்தர வயது தம்பதியர் கவிதாவிற்கு வாழ்க்கையில் துணை வேண்டும் என்பதை உணர்த்தினார்கள்.
யாரிடம் சொல்ல… இன்றும் பெண்ணின் தேவைகள் ஆபாசமாகவே பார்க்கப்படுகிறது.
மகள் பெரியவள் ஆனாள். காலம் வேகமாக ஓடியது. அம்மா பேச்சுக்குப் பேச்சு வயசுப்புள்ளைக்கு அம்மா என்பதை சுட்டிக் காட்டினார். மகள் பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது தான் புரிந்தது கவிதாவிற்கு மகளுக்கு திருமணம் செய்து விட்டு நாம் எங்க போகப்போறோம்.. இத்தனை நாட்களாக உறவுகள் வெறுத்து, உணர்வுகள் மறைத்து வாழ்ந்து விட்டோம் ..
நரைமுடி எட்டிப் பார்த்தது…கண்ணாடி பார்ப்பதை குறைத்துக் கொண்டாள்.
கடந்த காலத்தை நினைத்தபடி கவிதா வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் மகள் காத்திருந்தாள் ‘அம்மா நாளைக்கு ஓகே தான’ என்று ஓடி வந்துக் கட்டி அணைத்தாள்.
பட்ட துன்பங்கள் அனைத்தையும் மகளின் காலடியில் கொட்டத் தோன்றியது கவிதாவிற்கு. ‘ஆமா செல்லம் நாளைக்கு அம்மா, உன் கூட தான் இருப்பேன்.’.மகள் முத்த மழை பொழிந்தாள்.
மகள் கல்லூரி செல்ல இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அதற்கு ஆடைகள் வாங்கத்தான் இந்த லீவு. கவிதாவிற்கு மலைப்பாக இருந்தது.
கணவரின் மறைவிற்கு பின் எத்தனை நாட்கள் ஓடி விட்டது. அவர் இல்லாமல் இந்த பதினைந்து வருடங்களாக எப்படி வாழ்ந்தோம்.
இன்னும் ஒரு வாரம் தான் மகள் ஆஸ்டலில் தங்கி படிக்கப்போகிறாள்..
மறுநாள் மகளுக்குத் தேவையான துணி மணிகளை வாங்கி ஆகி விட்டது. இருவரும் ஓட்டலில் இரவு உணவை முடித்து கொண்டு வந்தார்கள்.
மகள் தன் தோழிகளிடம் போனில் பெருமை பேசி கொண்டு இருந்தாள். கவிதாவிற்கு சிந்தனைகள் பின்னோக்கி சென்றது. அவள் கல்லூரியில் சேரும் போது இரண்டு தாவணி தான் இருந்தது அதுவும் பழையது. அம்மாவிடம் பிடிவாதம் செய்து தவணைக்கு புதிய தாவணி வாங்கியது நினைவுக்கு வந்தது…
அந்த மகிழ்ச்சி ஆறு மாதம் தான், பிறகு திருமணம் நடந்து விட்டது. சுருக்கென்று தைத்தது.மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். தன் தனிமை,ஏமாற்றம் மறந்து வேகமடைந்தாள்.
‘நந்தினி சீக்கிரம் வந்து படு ‘. நாளைக்கு மாமா வீட்டுக்கு போய் சொல்லிட்டு வரணும். தாத்தா சீக்கிரம் வரச்சொன்னார்.
கவிதாவின் கடமைகளுக்கு முன் அவள் தனிமை மெல்லச்சாகும்…