சுட்டெரிக்கும் வெயில், வெறிச்சோடிய மணல் சாலைகள்.
அந்த கிராமத்தில், வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லை அவர்களுக்கு, ஆகையால் தினம் அந்த இளம்பெண்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
ஆம், பராமரிக்கபடாத பழைய பிள்ளையார் கோவில் தான் அது. தினமும் ஒரே வேண்டுதல் தான். மாற்றம் இல்லை அதிலில். தன் வேண்டுதலை மனப்பாடம் ஆக்கிய அவர்கள், கையெடுத்து கண் மூடியதும், அந்த மனப்பாடத்தை ஒப்பித்து, மூன்று முறை கோவில் சுட்டி வந்து, வெளி நடையில் உட்கார்ந்து கதை பேசுவது வழக்கம்.
அதாவது கதை பேசுவதற்காக மட்டும் கோவிலுக்கு செல்கிறார்கள் என்றும் சொல்லலாம். அவர்கள் அக்கா தங்கை இல்லை, இருந்தும் அவ்வளவு நெருக்கம். ஊரார் கண்ணுப்படுவது போல் நெருக்கம்.
வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் செல்லும் அந்த கோவிலுக்கு இவர்கள் எடுத்துகொள்ளும் நேரம் குறைந்தது அரை மணி நேரம். போகாத சந்து, பொந்து இல்லை.
பொழுதெங்கும் வீட்டில் அடைந்திருக்கிறார்கள் என்பதால், சிறியவள் அம்மா இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளமாட்டாள். பெரியவள் தாய், தந்தையை ஓர் விபத்தில் இழந்தவள் என்பதாலும், அவள் பாட்டியின் கண்காணிப்பில் இருப்பதாலும், பாட்டியும் அவள் விருப்பம் போல் விட்டு விடுவாள்.
திண்ணையில் தினமும் இரவு, இருவருக்கும், அந்த அம்மா கையால் தான் சோறு. அந்த பாட்டி மிகவும் முதிர்ந்தவர். அதனால் சோறு அவ்வளவாக இறங்காது. மதியம் மீந்த சோறு, பக்கத்துக்கு வீட்டு கொழம்பு என்று நாட்களை தள்ள, வந்தது, பிள்ளையார் கோவில் திருவிழா பத்து நாளில்.
ஒரு வாரத்திற்கு முன்பே வெளியூரில் இருந்து கடை போட்ட வியாபாரிகள், இப்பொழுதெல்லாம் கோவில் சுற்றி வர குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும், ஒன்றும் வாங்கவில்லை என்றாலும் கடைகளை சுற்றி பார்க்கவே செல்வார்கள்.
நாளை, கோவிலின் குடமுழக்கு. இன்று தான் உச்ச கட்ட கோலாகலம். ஆட்டம், பாட்டம் என்று இருக்க நேரம் போவதே தெரியாது.
முன்பெல்லாம் ஒன்பது மணிக்குள் வீட்டிற்கு வந்துடுவாள், அன்று அவள் திருவிழா முடிந்து வர மணி பதினொன்றை ஆகி விட்டது, ‘வீட்டிற்கு போனால் பாட்டி திட்டும்,
அதனால் இங்கேயே படுத்துகிறேன்’ என்று தோழியின் அம்மாவிடம் சொன்னாள்.
‘அதுகென்ன படுத்துக்கோ’ என்றாள்.
அவர்கள் காலையில் கிளம்பி அப்படியே கோவிலுக்கு சென்றனர். பகல் பன்னிரெண்டு மணிக்கு கோவில் அன்னதானம் சாப்பிட்டு, தன் பாட்டிக்கும் எடுத்து சென்றாள்.
பாட்டி என்று தெருவாசப்படியில் இருந்து கத்திகொண்டே போன அவளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
பாட்டி வாய் பிளந்தபடி. ஆம்,பாட்டி இறந்திருக்கிறாள்.
அந்த அம்மாவிடம் சொல்லி ‘ஓ’ என்று கத்தினால், படுத்துப் புரண்டாள். அவள் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் அந்த அம்மாவும் அவளை கட்டி பிடித்து அழுதாள்.
எல்லா காரியமும் முடிந்தது.
பின், தனிமையில் அமர்ந்த அவளிடம் அந்த அம்மா, ‘எனக்கு இனி ஒரு மகள் இல்லை, இரண்டு மகள்’ என்றாள்.
‘எங்களுடனே நீயும் இருந்துக்கோ’ என்றாள்.
அவளின் கண்கள் கலங்கியது. பின் சமாதனம் படுத்தினால் சிறியவள்.
மீண்டும் வழக்கம் போல் மாலையில் கோவிலுக்கு, இப்பொழுதெல்லாம் வேண்டுதல்கள் மனப்பாடமாக இல்லை, மனதிலிருந்து பாடமாக..!
– ஜூலை 2013