இனிமேல் என்பது இதில் இருந்து…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 24,449 
 
 

மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை. கரன்ட் போயிருந்தது. நனைந்த செருப்பில் இருந்து தோல் வாடை அடிப்பதாக, எப்போதோ நுகர்ந்த வாசனை அவள் முகத்துக்குள் வந்தது. புளியங்கொட்டை அளவுகூட இராது… ஒன்றை அடுத்து இன்னொன்றாக குட்டிக்குட்டித் தவளைகள் தெருவில் இருந்து வாசல் பக்கம் குதித்து நகர்ந்து வந்தன.

இனிமேல் என்பது இதில் இருந்து2

கோமு இதுவரை அசையாமல், தந்தி போஸ்ட் பக்கம் கெட்டுக்கிடையாகத் தேங்கியிருக்கும் தண்ணீரில் மழைப்புள்ளி விழுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், வாசல் பக்கமாக வரும் குட்டித் தவளைகளைச் சாணி ஒதுக்குவதுபோல் பாதத்தை வைத்து விரட்டித் தெருவுக்குத் தள்ளினான். கால்கள் வெற்றுக்கால்களாக இருந்தன.

`‘செருப்பு போடலையா?’’ – ஆவு கேட்கும்போது, உடனே பதில் சொல்லவில்லை. தலையை இருட்டுக்குள் குனிந்து நின்றான்.

`‘எங்கே கழத்திப் போட்டேன் என்று ஞாவுகம் இல்லை’’ என்றான். அவனுக்கு லேசாக நினைவுக்கு வந்துவிட்டது. ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டான்.

நேற்று ஆவுடையம்மையும் அவனும்தான் கஞ்சியும் ரசம் சாதமும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள்.

“குடைகூட எடுத்துக்கிடாம எதுக்கு இப்படி ரெண்டு பேரும் மழையில நனைஞ்சுக்கிட்டு வாரீங்க?” என்று திருப்பதி அத்தை கேட்டதற்கு, கோமு பதில் சொல்லவில்லை.

‘`அண்ணன் வீட்டுல யாரும் வரலையா துணைக்கு… நீ மாத்திரம்தான் இருக்கியா?’’ என்று கோமு கேட்டுக்கொண்டே, அம்மா பக்கம் கட்டிலுக்குப் போனான். அம்மாவை, தலகாணி உறை மாதிரி ஒரு நைட்டியில் போட்டிருந்தார்கள். புதிது இல்லை. சாயம்போன ஒன்று. மதினி உடுத்தியதாக இருக்கும். ஆவு பக்கம் திரும்பி, “நம்மகிட்டே சொல்லியிருந்தால்கூட சேலை புதுசா ஒண்ணு கோ-ஆப்டெக்ஸுல எடுத்துட்டு வந்திருப்போம்’’ என்றான்.

‘`இப்போதைக்கு இது வசதியாத்தான் இருக்கு கோமு. பழசு – புதுசு பார்க்கிற கட்டத்தை எல்லாம் எப்பவோ உங்க அம்மை தாண்டியாச்சு. இனிமேயா அவ நல்லது பொல்லது உடுத்தப்போறா?’’ என்று திருப்பதி அத்தை சொல்லும்போதே அவளுக்குக் கண்கள் நிறைந்துவிட்டன.
ஆவு வொயர் பையில் இருந்து, தூக்குச் சட்டியையும் சம்புடத்தையும் சுடுதண்ணீர் கொண்டுவந்த தெர்மாஸ்பிளாஸ்க்கையும் எடுத்துவைத்துவிட்டு திருப்பதி அத்தை தோளைத் தொட்டு, `‘டாக்டர் என்ன சொல்லுச்சு?’’ என்றாள்.

“என்ன சொல்வான்னு நமக்குத் தெரியாதா, நல்லா இருக்கானுதான் சொல்வா’’ என்று லேசாகச் சிரித்தாள்.

கோமு அம்மா பக்கத்திலேயே நின்றான். இந்த உடையில் கட்டிலில் கிடப்பவளைப் பார்க்கப் பிடிக்கவே இல்லை. நேற்றைவிட மூத்திர வாடை காட்டமாக இருந்தது. ‘`வீச்சம் ஜாஸ்தியா இருக்கே…’’ என்று ஆவு முகத்தைப் பார்த்தான்.

“சன்ன மருந்து மாத்திரையா உள்ளே போகுது’’ – ஆவு பக்கத்தில் வந்ததும், `‘லேசா ஒரு கை பிடி’’ என்று சொல்லி, அவனும் சேர்ந்து உடலைப் புரட்டினான். திருப்பதி அத்தை தலைமாட்டில் வந்து தாங்கிப் பிடித்தாள். ஆவுக்குக்கூடத் தயக்கமாக இருந்தது. கோமு இடுப்பு வரை அவனாகவே துணியை உயர்த்தினான். இடுப்புக்குக் கீழ் புண் வைத்திருந்தது. போரிக்காஸ் பவுடர் போட்டு இருந்தார்கள். திட்டுத்திட்டாக கருத்த தேகத்தில் அது படர்ந்து, அந்த இடம் சதையே இல்லாமல் வேறு இடம்போல ஆகியிருந்தது.

ஆவு மீண்டும் கால் வரை துணியை இறக்கி இழுத்துவிட்டாள். கரண்டை வரைதான் அது மூடியது. மொத்தமாகப் பார்ப்பதைவிட்டுத் தனித்தனி அங்கமாகப் பார்த்தால் யாரையுமே இரண்டு நிமிடங்கள் சேர்ந்தால்போல பார்க்க முடியாதோ என்று ஆவுடையம்மைக்குத் தோன்றியது. தன்னுடைய கரண்டைக் கால் தோலும் இப்படித்தான் காய்த்துப்போயிருக்குமோ என்று நினைக்கையில், ஆவு இடது கால் பாதத்தால் வலது கரண்டையை நீவிக் கொண்டாள்.

“பொன்னையா அண்ணனும் மதினியும் எப்போ வந்தாங்க?’’ என்று கோமு திருப்பதி அத்தையிடம் கேட்டான்.

திருப்பதி அத்தை கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்தாள். `‘நான்தான் துணைக்கு இருக்கேனே… எல்லாரும் எதுக்கு அலையணும்?’’ என்றாள். கோமுவின் முகத்தைப் பார்க்காமல் ஆவு நிற்கிற திசையைப் பார்த்து, `‘நாளைக்கு பணகுடியில ஒரு கல்யாணத்துக்குப் போகணுமாம். ஆபீஸ்ல ஒண்ணா வேலை பார்க்கிற இடத்து விசேஷம். `போய்த் தீரணும். தட்ட முடியாது. அதனால இன்னைக்கு ரெண்டு பேரும் வேலைக்குப் போயிட்டு, நாளைக்கு லீவு போடணும்’னு பேசிக்கிட்டாங்க… நேத்துப் பார்க்க வந்தப்பவே’’ என்றாள்.

இனிமேல் என்பது இதில் இருந்து

கட்டிலில் கிடந்த உடல் அசைகிற மாதிரி இருந்தது. ‘யெய்யா’ என்று லேசாக ஒரு சத்தம். அந்தச் சத்தத்துக்கே, காற்றில் அரசிலைச் சருகு நகர்கிறவாகில், உடல் கட்டிலுக்குள் நூல் அளவு தன்னை உயர்த்தித் தணித்தது.

`‘என்னம்மா வேணும்?’’ – கோமு ஒரு மரச்சட்டம்போல இருந்த கையைக் கையில் எடுத்துக்கொண்டான். ஆவு பக்கத்தில் வந்து நின்று, `‘அத்தை… அத்தை’’ என்று சத்தம் கொடுத்தாள். அத்தையின் நெற்றியில், தலை முடியில் எல்லாம் கை வைத்துத் தடவிக்கொடுத்தாள்.
“நெத்திச் சூடு எல்லாம் நல்லா இருக்கு. பயப்படுததுக்கு ஒண்ணும் இல்லை’’ என்று திருப்பதி அத்தை சொன்னாள்.

`‘குமாரு வந்திருக்கேன்’’ என்று கோமு அம்மாவின் முகத்தைப் பார்த்துச் சொன்னான். அவனை அப்படித்தான் அவள் கூப்பிடுவாள். `‘யம்மா… யம்மா… தெரியுதாம்மா?’’ என்று கோமு அழ ஆரம்பித்தான்.

‘`நல்லா இருக்கு கோமு. நீ என்ன சின்னப் பிள்ளையா? இல்லை உங்க அம்மை உன்னைக் கைப்பிள்ளையா விட்டுட்டுப் போகப்போறாளா? உனக்கு அம்பது ஆச்சு. அவளுக்கு எழுவது தாண்டியாச்சு.

ஜேஜேனு ஆண்டு அனுபவிச்ச மனுஷி. உங்க அப்பா போன வழி எங்கேனு, அவ வழியைப் பார்த்துக்கிட்டு அவ போவாளா, உன்கூடயே இருந்துக்கிட்டு இருப்பாளா? சொர்க்கவாசல் கதவு யார் யாருக்கு என்னைக்குத் திறக்கோ, அன்னன்னைக்கு அவங்கவங்க புறப்படவேண்டியதுதான். முந்தி பிந்தி எல்லாம் சித்ரகுப்தன் கணக்குல்லா?’’ என்று தேற்றினாள்.

`‘மாமா செத்ததுக்குக்கூட இப்படி அழலை’’ – ஆவு சுருக்கமாகச் சொன்னாள். திருப்பதி பெரியம்மைபோல, நிறுத்தாமல் எதையாவது சொல்லி கோமுவை அமைதிப் படுத்த வேண்டும் என்று நினைத்தாள். இந்த மூத்திர வாடைகூட அவளுக்குப் பிடித் திருந்தது. கோமுவை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவதற்குக்கூட அதுதான் காரணமாக இருக்குமோ? திருப்பதி பெரியம்மை கொஞ்சம் வெளியே போக மாட்டாளா என்று ஒரு தவிப்பு வந்தது.

ராஜமும் மீனாளும் வளர்ந்த பிறகு கோமு தனியாகப் படுக்க ஆரம்பித்துவிட்டான். கோமு படுத்திருக்கிற முன் ரூமுக்கு ஆவு போய் வந்து எல்லாம் ரொம்ப காலம் ஆயிற்று. இடையில் ஒருநாள், ரொம்ப நேரம் டி.வி-யில் இளையராஜா பாட்டுக் கச்சேரி நடந்தது. பதினோரு மணிக்கு மேல்கூட இருக்கும். ஆவு எப்போதும் படுக்கிற கட்டிலில் உட்கார்ந்துதான் பார்த்தான். அப்படியே தூங்கிவிட்டான். மறுநாள் தலையில் இருந்த பிச்சிப் பூ வாடலை உருவி எடுத்துக்கொண்டே ஆவு, முன்னும் சொல்லாமல் பின்னும் சொல்லாமல், “அப்புறம்தான் நல்ல நல்ல பாட்டா பாடினாங்க’’ என்று சொன்னாள். அதற்கு கோமு `‘தூக்கம் வந்துட்டுது’’ என்று சிரித்ததோடு சரி.

ஆவுடை, கோமுவின் புறங்கை முடியை லேசாகப் பிடித்து இழுக்கவேண்டும் என நினைத்தபோது நர்ஸம்மா வந்து, `‘டாக்டர் வர்றதுக்கு இன்றைக்கு நேரம் ஆகும். ஒரு ஆபரேஷன் இருக்கு’’ என்று இவர்கள் யாரும் கேட்காமலேயே சொல்லிவிட்டு, போனில் சிரித்துச் சிரித்துப் பேசியவாக்கில் போனாள்.

ஆவு பக்கம் திரும்பி, “நீயும் திருப்பதி அத்தையும் வீட்டுக்குப் போங்க. நான் பாத்துக்கிடுதேன்’’ என்றான் கோமு.

“ஆத்திர அவசரத்துக்கு துணிமணி மாத்தணும்னா, நான் இருந்தாத்தான் ஒத்தாசையா இருக்கும்.

நீ ஆம்பிளை. என்ன பண்ணுவே… என்ன ஆவு?’’ என்று அவள் திருப்பிக் கேட்டாள் அத்தை.

`‘ஆஸ்பத்திரியில ஆம்பளை – பொம்பிளை, அம்மை – மகன் எல்லாம் பார்த்தா நடக்குமா?’’ என்று பொதுவாகச் சொல்லி விட்டு, ‘`நீ சங்கரன்கோவில் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்திரு. ஒருத்தராவது போகாட்டா நல்லா இருக்காது’’ என்று ஆவுடையிடம் சொன்னான். ஆவுவுக்கு உடனே குமிழிபோல ஒரு சந்தோஷம் உண்டாயிற்று.

`‘எங்க… சந்திராக்கா போன உடனே, `எங்கே அத்தான் வரலையா?’னு உங்களைத்தான் கேப்பா’’ என்றாள்.

ஆவுடைக்கு நிறையத் தடவை சந்திரா அக்காவை கோமு கட்டிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றும். அது எதனால் என்று தெரியாது. ஆனால் அப்படித்தான் அது.

கோமு அவள் சொன்னதை அப்படியே வாங்கிக்கொள்ளவில்லை. ஏதோ திடசித்தத் துடன், ஒரு கோட்டைக்குள் அம்மாவும் அவனும் மட்டும் இருக்கத் தீர்மானித்துவிட்ட முகத்துடன் இருந்தான். வீட்டுச் சாவியை எடுத்துக்கொள்ள ஞாபகப்படுத்தினான். `தனியாகப் படுக்க வேண்டாம். திருப்பதி அத்தையைத் தங்கச் சொல்லிவிட்டு, காலையில் அவர்கள் வீட்டுக்குப் போகச் சொல்’ என்றான். சனி, ஞாயிறில் பிள்ளைகள் இரண்டையும் ஹாஸ்டலில் இருந்து கூட்டிக்கொண்டு வந்து காட்ட வேண்டும்.

“அம்மாவுக்கு அடையாளம் தெரிகிறதோ இல்லையோ, நம்ம பொம்பிளைப் பிள்ளைகளுக்கு, உசிரோட இருக்கும்போது எங்க அம்மை முகத் தரிசனம் கிடைக்கணும்’’ என்று சொல்லிவிட்டுத் தொண்டை கம்மினான்… அவனே `‘செல்லுக்கு சார்ஜ் போட்டுக் கையிலேயே வெச்சுக்கிடு’’ என்று ஞாபகப்படுத்தினான்.

“அப்போ நான் வரட்டுமா பாப்பு’’ என்று திருப்பதி அத்தை, கோமுவின் அம்மா தலையை வருடிக்கொடுத்தபடி கேட்டாள். தன் ஞாபகம் இல்லாமல் கிடக்கிற ஒருவரிடம் இருந்து ஒரு பதில் வந்துவிடப்போவது போல அப்படிக் கேட்டது ஆவுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. இவள் என்ன நினைக்கிறாள் என்று யூகம்செய்து விட்டவளாக, திருப்பதிப் பெரியம்மை, `‘என்ன அவகிட்டே போயிட்டு வாரேன்னு சொல்லுதனே, கேக்கவா போகுதுனு நினைக்கியா ஆவு? இந்தக் கட்டத்துலே இருக்கவுங்களுக்கு எல்லாம் கேட்கும். ஈரேழு லோகத்துல உள்ள எல்லா சத்தமும் காதிலே விழும். பூச்சி பொட்டு, பட்சி பறவை பேசுதது எல்லாம் விளங்கும். மேலே இருக்கிற அவன்தான் எல்லாக் கதவையும் ஒண்ணு பாக்கி இல்லாமல் திறந்துவிட்டுட்டானே. நமக்குத்தான் ராத்திரி பகல் எல்லாம். பாப்பம்மாவுக்கு எப்பவும் லைட்டு போட்ட மாதிரி ஒரே வெளிச்சம்தான் இப்போ’’ என்று சொல்லி, கோமுவின் அம்மா முகத்தைத் தொட்டு முத்திக்கொண்டாள். ஆவுவுக்கு, தானும் அப்படிப் பேச வேண்டும் போல இருந்தது. கோமு முகத்தைத் தன் விரல்களைக் குவித்துத் தொட்டு முத்திக் கொள்ள வேண்டும் என்று அடி வயிற்றுக்குள் ஒரு மாதிரி சுருட்டி இழுத்தது. கொசுவம் வைத்து, சேலையைச் செருகியிருந்த முன்பக்கத்தைச் சரிசெய்துகொண்டாள்.

`‘வீட்டுக்குப் போனதும் போன் போடுதேன் மீனாப்பா’’ என்றாள்.

அவளுக்கு இங்கே இருந்து போக மனசே இல்லை. திருப்பதிப் பெரியம்மையை பஸ் ஏத்திவிட்டுவிட்டு இங்கே வந்து கோமுவுடனேயே இங்கே இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே கோமுவைப் பார்த்தாள். கோமு இந்தப் பக்கம் திரும்பவே இல்லை. அவன் மறுபடியும் கட்டிலில் கிடந்தவளுடைய துணியை முன்னைவிடவும் அதிகமாக விலக்கி, அசையாமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவன் அப்படி நிற்பது ஆவுவுக்குப் பிடிக்கவில்லை. ‘கொஞ்ச நேரம் ஸ்டூலை இழுத்துப்போட்டு உக்காருங்க’ என்று சொல்லிவிட்டுக் கதவை மூடினாள். திறந்தே இருப்பது நல்லது என மறுபடியும் திறந்து வைத்தாள். வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடித்திருந்த கதவில் விரல்கள் பதிந்து, ஒரு சிறு பெயின்ட் புடைப்பு மேல் ஏறி – இறங்கியதும் அவளுக்கு அவளுடைய பாரதி அத்தான் ஞாபகம் வந்துவிட்டது.

இனிமேல் என்பது இதில் இருந்து3

பாரதி அத்தான் வலது கை முழங்கையில் இப்படி ஒரு சிறு மேடு கழச்சிக் கல் போல உருண்டுகொண்டிருக்கும். ‘ஹாஸ்டலில் இருந்து பிள்ளைகளை அவனைத்தான் கூட்டிக்கொண்டு வரச் சொல்ல வேண்டும்’ என்று ஆவு நினைத்துக்கொண்டாள்.

அவள் சொன்னால் பாரதி அத்தான் எதை வேண்டுமானாலும் செய்வான். கோமுவுக்கு இருப்பதுபோலவே பாரதி அத்தானுக்கும் தென்னந்தோப்பு, விவசாயம் எல்லாம் இருக்கின்றன. குடித்துவிட்டு புல்லட் ஓட்டிக்கொண்டு போனதில் ஆலங்குளம் பக்கம் லாரியில் மோதி கால் ஒடிந்துவிட்டது, சரியாக வரவில்லை. கொஞ்சம் தாங்கித் தாங்கித்தான் இப்போதும் நடப்பான். கோமுவுக்கும் அவனைப் பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில்கூட, தனக்கு வேலை இருந்தால், ‘ஏ… பாரதி, இவளை பஸ் ஸ்டாண்டிலே கொண்டுபோய் விட்டுரு’ என்று சொல்லி, இவள் பைக்கில் ஏறி உட்கார்ந்ததும், ‘சைடிலே நல்லா பிடிச்சுக் கிட்டியா?’ என்று இவளைப் பத்திரப்படுத்தி அனுப்பி வைக்கிற அளவுக்கு நெருக்கம் உண்டு.

“என்ன ரெண்டு பேரும் நனைஞ்சுக்கிட்டுப் போறீங்க?” என்று இருட் டுக்குள் குரல் கொடுத்ததுகூட பாரதி அத்தான்தான். இளங்கோ பரோட்டா ஸ்டால் பக்கம் இருந்து, குடையைத் தோள் பக்கம் சரித்து, வேட்டியை மடித்துக் கட்டியபடி அவன் தெருவின் குறுக்காக வரும் வரை இரண்டு பேரும் நின்றார்கள்.

‘`நீ எப்பம் வீட்டை விட்டு வெளியில வருவே… விவரம் கேட்டுக்கிடலாம்னு தான், ஆம்புலன்ஸ் வர்றதைப் பார்த்த நேரத்திலே இருந்து பஜாரிலே இவ்வளவு நேரம் நின்னுக்கிட்டு இருந்தேன். மழை வேற அடிச்சு ஊத்திக் கிட்டு இருக்கு. இப்போதைக் குள்ளே நிக்கித பாட்டைக் காணோம்’’ என்று கோமுவிடம் குடையைக் கொடுத்து `‘ஆவு, நனையாம சேர்ந்து வா’’ என்று பாரதி அத்தான் சொன்னான். கோமு ஒன்றும் பேசவில்லை. குடையை வாங்கி ஆவுவிடம் கொடுத்துவிட்டு கீழே தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் மழைத் தண்ணீரை வகிர்ந்தபடியே நடந்தான்.

“ஏன், ரெண்டு பேரும் நனைஞ்சுக்கிட்டு வரணும்… யாராவது ஒருத்தர் குடைக்குள்ளே வரலாம் இல்ல?’’ என்று ஆவு சொன்னாள். பாரதி அத்தான் அவளோடு வரவேண்டும் என்று ஒரு நிமிஷம் விரும்பியது உண்மை.

`‘நீ ஒருத்தியாவது முழுசா வந்தா சரிதான்’’ – பாரதி அத்தானிடம் இருந்து சிகரெட் வாடை மட்டும் வந்தது. வேறு ஒன்றும் இல்லை.

‘`பண்ணையாரும் வாத்தியாரம்மாவும் எப்போ கல்யாண வீட்டில் இருந்து வந்தாங்க, எப்போ ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க? பட்டுச் சேலையும் மல்லியப் பூவுமா வந்துதாக்கும் அது?’’ – பாரதிக்கு பொன்னையா அண்ணனையும் அவர் சம்சாரத்தையும் அறவே பிடிக்காது. போனதடவை வார்டு எலெக்‌ஷனில் பாரதியை ஜெயிக்கவிடாமல் செய்ய கோமுவின் அண்ணன் எவ்வளவோ கஜகர்ணம் வைத்தும், அவன் கவுன்சிலர் ஆகிவிட்டதில் இருந்து ஒட்டாமல் ஆகிவிட்டது. இந்தத் தடவை பாரதி நிற்கவே இல்லை. அவன் வீட்டுச் சுவரில் இன்னும் அழியாமல் இருக்கிற உதயசூரியன் சின்னம் போன தேர்தல் சமயம் வரைந்தது.

“கரன்ட் போய் ரொம்ப நேரம் ஆச்சு. ஐஸ் பெட்டியில் வெச்சிருக்காங்க. ஏற்கெனவே கிடையில கிடந்த உடம்பு. கெட்டுப்போகாம இருக்கணும். கூட நாலு பத்தியைக் கொளுத்தி வைப்பான்னு பார்த்தா, அதைக்கூடச் செய்யலை பொன்னையாண்ணன்’’ – கோமு இவ்வளவு தூரத்துக்கு அப்புறம் இப்படித்தான் பேச ஆரம்பித்தான்.

`‘மணி என்ன இருக்கும் பாரதி?’’ என்று கேட்டுவிட்டு தலையில் இருந்து முகத்தில் இறங்கின தண்ணீரை, இரண்டு கைகளாலும் வழித்துவிட்டுவிட்டு, `‘ரொம்ப ஓரமாப் போகாத, சாக்கடை ரெம்பிக்கிடக்கு’’ என்று ஆவுவிடம் சொன்னான்.

“லைன்மேன் தர்மர்கிட்டே ரெண்டு மூணு வாட்டி திலுப்பித் திலுப்பிச் சொல்லிட்டேன். அவனைச் சொல்லியும் குத்தம் இல்லை. மழை வெறிச்சாத்தானே போஸ்ட்லே ஏறுவான்’’ – மணி என்ன என்று சொல்லாமல், பாரதி வேறு ஒரு தகவலைச் சொன்னான். மூன்று பேருக்குமே இருட்டில் நடக்கும்போது ஏதாவது ஒரு பேச்சுத் துணை வேண்டியிருந்ததே தவிர, இந்தக் கேள்விக்கு இந்தப் பதில் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மறுபடியும் கோமுவேதான் பேச ஆரம்பித்தான்.

‘`என் கண்ணு முன்னால எங்க அம்மை உயிர்போகணும்னு அவளுக்கு எழுதியிருந் திருக்கு. அதுக்கு நான் என்ன பண்ண? என்னமோ எங்க அண்ணனுக்குத் தெரியாம சொத்தை எனக்கு உயில் எழுதிவெச்சுட்டு எங்க அம்மை ப்ளான் பண்ணிட்டுப்போன மாதிரி அவங்க ரெண்டு பேரும் நினைக்காங்க’’ – கோமு சொல்லும்போது மேலத்தெரு முக்கில் வழுக்கு ஓடை நிரம்பி, தண்ணீர் அதன் தண்ணீர் சத்தத்துடன் சுழன்று திரும்பிப் பாய்ந்தது. அந்த இடத்துத் தண்ணீருக்கு மட்டும் உயிர் இருப்பதுபோல, இந்த இருட்டுக்குள்ளும் அது கொப்பளித்தபடி ஓடியது.
‘`ரெண்டு பேரும் கார்லதான் வந்து இறங்கினாங்க. `சீரியஸா இருக்கு’னு எனக்குத் தகவல் சொல்லியிருந்தா, இப்படி அநாதி மாதிரிப் போயிருக்க மாட்டா. நாளைக்கு ஊர்ல நாலு பேர் கேட்டா எனக்குத்தான் அசிங்கம்’’ என்று ஒரே கூப்பாடு. “அவ என்ன அநாதியாவா போனா? அழகுபோல, ரெண்டு வாய்க் கஞ்சி என் கையால வாங்குனா. மூணாவது மடக்கு தொண்டைக் குழியிலே இறங்குகிறதுக்குள்ளே தலை கொளக்குனு என் நெஞ்சுலேயே சாஞ்சுட்டுது’’ – கோமு மேற்கொண்டு நடக்காமல், அந்த இடத்திலேயே நின்ற வாக்கில் முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

‘`இதே மாதிரித்தான் என்கிட்டேயும் ஒரே அழுகை. சங்கரன்கோவில் போகிற பஸ்ல இருக்கேன். ராமயன்பட்டி தாண்டியிருக்காது. இவ்வோகிட்டே இருந்து போன் வருது. பஸ் சத்தத்துல ஒண்ணும் காதுல விழ மாட்டேங்கு. நான் இந்தக் காது மாத்தி, அந்தக் காதில வெச்சுக்கிட்டு `என்ன, என்ன?’னு சத்தம் போடுதேன். அப்பவும் இதே அழுகைதான். `எங்க அம்மை போயிட்டா… எங்க அம்மை போயிட்டா’னு. ஆவு, விரித்த குடையை பாரதி கையில் கொடுத்துவிட்டு, ‘அதான் அத்தைக்கு பூலோகமே அழுதுக்கிட்டு இருக்கே’ என்று கோமு கையைப் பிடித்து நடக்கச் சொன்னாள்.

பால் பண்ணையைத் தாண்டிக்கொண்டி ருந்தார்கள். எருத்துப் பறை வாசம் அடித்தது. எம். ஜி.ஆர் சிலைக்குப் பக்கத்தில் மழையில் நனைந்துகொண்டே படுத்திருந்த எருமை மாடுகளின் விலா எல்லாம் வயிறு அமுங்கிப் பளபளத்தது.

`‘நம்ம வீட்டுப் பசு ஈணிட்டுதா ஆவு?’’ என்று பாரதி கேட்டதற்கு, தலையை அசைத்துக்கொண்டே கோமு ‘`கிடேரி’’ என்றான்.

‘`எப்படியும் நாளை மதியத்துக்கு மேல ஆயிரும்லா?’’ – பாரதி கேட்டதற்கு, `‘பெரியத்தான் மகன் மெட்ராஸிலே இருந்து வரணும்லா. புறப்பட்டுட்டேன்னு தாக்கல் சொல்லிட்டான். நாங்க இருக்கும்போதுதான் போன் வந்துது’’ என்று பதில் சொன்ன ஆவு, “அந்தப் பொம்பிளைப் பிள்ளைதான் பாவம். ஆச்சி, ஆச்சினு அழுதுக்கிட்டே இருக்கு. பக்கத்திலே அண்டவிடவே இல்லை. இன்னைக்கே இப்படின்னா, நாளைக்கு யார் கண்ணுலேயும் காட்டக் கூடாதுனு ரூம்லே அடைச்சுப்போட்டாலும் போட்டுருவா எங்க அக்கா’’ என்று வருத்தப்பட்டாள்.

‘`மகன் இன்ஜினீயருக்குப் படிக்கான்னு சொன்னா மணத்துக்கிடக்கும். இப்படி புத்திக்குச் சரியில்லாம ஒரு மக இருக்கானு தெரிஞ்சா ரெண்டு பேருக்கும் கிரீடம் இறங்கீரும்லா ஆவு’’ – பாரதி இப்படிச் சொன்னானே தவிர, அடுத்த நிமிஷமே, `‘அருமையான பிள்ளை. என்ன லட்சணம் தெரியுமா முகத்துல” என்று `‘யாரு செஞ்ச பாவமோ அது தலையில விடிஞ்சிருக்கு’’ என்று பரிதாபப்பட்டான்.

‘`எங்க அம்மை இருந்த வரைக்கும் அந்தப் பிள்ளையை அருமை குலையாம வெச்சிருந்தா’’ – மறுபடியும் கோமுவுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. கோமுவின் தோளைத் தட்டிக்கொடுத்தவன், வெடுக்கென்று ஆவுவைத் தன் பக்கம் இழுத்து, கோமுவையும் மேற்கொண்டு போகவிடாமல் மறிப்பதுபோல குறுக்கே கையை நீட்டினான்.

நீட்டமாக தரையில் நெளிந்து நெளிந்து தலையை மட்டும் தூக்கின நிலையில், பாம்பு ஒன்று இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசிக்குப் போனது. `‘பொந்து புடை எல்லாம் தண்ணி ரொம்புனா, அது என்ன பண்ணும்?’’ என்றவன், `‘ஆவு, வீட்டுச் சாவி யாருகிட்டே இருக்கு? வீடு வந்துட்டுதுனு நம்மகிட்டே சொல்லிட்டுத்தான் அது போகுதுபோல’’ என்று ஆவு பக்கமாக நீட்டின கையில், ஆவு சாவிக்கொத்தை வைத்தாள்.

ஈரத்தில் குளிர்ந்துகிடந்த சாவிகளை வெதுவெதுப்பாக இருக்கிற பாரதியின் கைகளில் ஒப்படைக்கும்போது, ஆவு பாரதி அத்தானைப் பார்த்தாள். அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. நாடி நெஞ்சோடு அழுந்தக் குனிந்து கைலி மடிப்புக்குள் சுருட்டிவைத்திருந்த செல்போனை எடுத்து கோமு கையில் கொடுத்து, ‘`டார்ச்சை அடி’’ என்றான். கோமு ஒரு தண்ணீர்ச் சிற்பம்போலாகி யிருந்தான். எல்லா அசைவுகளும் அடங்கின. முகத்தில் இறங்கும் மழைத்தாரைகள் மட்டும் மண்புழுக்கள் மாதிரி நகர்வதைப் பார்த்தபடி, ஆவு அதை வாங்கி டார்ச் வெளிச்சத்தைக் காட்டினாள். `‘பெரிய சாவிக்கு அடுத்த மூணாவது சாவி’’ என்று ஆவு சொல்வதற்குள் பாரதி திறந்துவிட்டான்.

கதவை ஒரு சாண் கூடத் திறப்பதற்குள், கோமு ஒரு சாமி கொண்டாடிபோல பாய்ந்து வீட்டுக்குள் ஓடி, “யம்மா… என்னை விட்டுட்டுப் போயிட்டியே’’ என்று பிளிறி அழுதான். திறந்தவாக்கில் பூட்டோடு தொங்கிக்கொண்டிருந்த சாவிக்கொத்துக் கூட அந்தச் சத்தத்தில் நலுங்கியது.
‘`யத்தான்…’’ என்று ஆவு, பாரதியின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

`‘ஒண்ணுமில்லை ஆவு. அழட்டும். நல்லதுதான். விட்டிரு’’ என்றான்.

`‘வீட்டுக்குள் வந்துட்டுப் போங்க’’ என்றாள்.

`‘இருக்கட்டும் ஆவு. இப்போ என்னைவிட நீதான் அவன் பக்கத்துல இருக்கணும்’’ என்றான்… `‘கோமுவை உன்னைவிட எனக்குத் தெரியும். அவன் என்னை மாதிரி கிடையாது. இந்த உலகத்துல அவனுக்குத் தெரிஞ்சது ரெண்டே ரெண்டு பொம்பிளைக தான். ஒண்ணு அவ்வொ அம்மை; இன்னொண்ணு நீ. இப்போ அம்மை போயிட்டா. இருக்கிறது நீ ஒருத்திதான். இனிமே நீதான் அவனைப் பார்த்துக்கிடணும். இனிமேங்கிறது இப்போ நீ வீட்டுக்குள்ளே போறியே, இதுலே இருந்துனு வெச்சுக்கோ… சரியா?’’ என்று அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

“அவ்வொ அம்மைக்கு அவன் மடியிலே சாகிற கொடுப்பினை இருந்துருக்கு. அதை மாதிரி உனக்கு இவனைப் பார்த்துக்கிடுத கொடுப்பினை இருக்குனு நினைச்சுக்க ஆவு… சரியா?’’ என்று பாரதி அத்தான் சொல்லும் போது அவளுக்கு அழுகை வந்தது. அவன் ஒவ்வொரு தடவையும் `சரியா… சரியா…’ என்று கேட்கக் கேட்க அந்த அழுகை கூடியது. ஆவு அவனைக் கை எடுத்துக் கும்பிட்டாள். கும்பிட வேண்டும்போல இருந்தது.

குடையைக் குனிந்து எடுத்தவன், ‘`உதயத்துல முதல் பஸ்ஸில போயி, ரெண்டு பிள்ளைகளையும் ஹாஸ்டல்லே இருந்து கூட்டியாரது எம் பொறுப்பு. என் வீட்டுக்காரியும் அங்கே அவ அம்மை வீட்டிலதானே இருக்கா’’ என்று சிரித்தான். ஆவு அவனையே பார்த்தாள்.

`‘போ… உள்ளே அவன் அழுதுக்கிட்டுக் கிடக்கான். அவனைப் பார்த்துக்கோ’’ என்று அவள் உச்சியில் தலையை கைவைத்து உலுக்கிவிட்டுப் போனான். சிலும்பின முடி மேல் கையை வைத்துக்கொண்டே அவள் உள்ளே போனாள். ஈர வாடையும் அடைத்துக் கிடந்த வீட்டு வாடையுமாக இருந்தது. கோமு கட்டிலில் குப்புறப்படுத்துக் கிடந்தான். மூசுமூசு என்று அழுகிற சத்தம் இன்னும் கேட்டது.

விளக்கு எதுவும் ஏற்ற வேண்டாம். இந்த இருட்டே போதும் என்று தோன்றியது. அவரவர் வீட்டு இருட்டுக்கு ஒரு வெளிச்சம் இருக்குமே, அந்த வெளிச்சத்தில் நடந்து ஆவு, கோமுவின் பக்கம் போனாள். அவளுடைய சேலைச் சத்தம் கோமுவை நெருங்க நெருங்க, கோமு சத்தமாக அழ ஆரம்பித்தான்.

ஆவுவுக்குத்தான் அந்த இருட்டில் வீடு முழுவதும் நிரம்பிவிட்டதுபோல இருந்தது. தன்னுடைய வெளிச்சத்தில் கோமுவைப் பார்க்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். பத்தி கொளுத்தினால் வரும் வாசனைபோல தன்னிடம் இருந்துகூட இப்போது ஒரு வாசனை உண்டாவதாக, அவள் மூச்சை அடர்த்தியாக இழுத்துக்கொண்டாள். பாரதி அத்தான் உச்சியைத் தொட்டு உலுக்கின இடத்தில் இருந்து, ஏதோ அவள் உடல் முழுவதும் பெருகி வழிவதுபோல் இருந்தது. ஆவு ஒன்றும் சொல்லவில்லை. கோமு பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். முதுகைத் தொட வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால் அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள்.

கோமு வெடித்து அழுவான் என்று எதிர்பார்த்தாள். யானையின் துதிக்கை ஒரு சுழற்றுச் சுழற்றி அவளைச் சுருட்டி எடுப்பது போல கோமு அவளை அப்படியே முன்னால் இழுத்துப்போட்டுக்கொண்டான்!

– ஜனவரி 2016

Print Friendly, PDF & Email

1 thought on “இனிமேல் என்பது இதில் இருந்து…

  1. வண்ணத் தூரிகைகளால் மனம் வருடும் வண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *