இனிமேதான் காதலிக்கணும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 14,270 
 
 

‘ரீல் ஜோடி’ சரவணன் – மீனாட்சி, இப்போது ‘ரியல் ஜோடி’ ‘செந்தில் – ஸ்ரீஜா’!
திருப்பதியில் திருமணம், சென்னையில் மறுவீடு… என இருந்த கலகல பரவச ஜோடியைச் சந்தித்தேன்.

”இது ரகசிய கல்யாணம் இல்லை பாஸ். குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு, அவங்க ஆசீர்வாதத்தோட நடந்த கல்யாணம். அப்புறம் இது காதல் கல்யாணமும் இல்லை!” என்று செந்தில் இன்ட்ரோ கொடுக்க, ‘ப்ச்’ என அவரை இடிக்கிறார் ஸ்ரீஜா.

‘காதலிக்கலை… காதலிக்கலை…’னு சொல்லியே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே?” – இது சரவணனுக்கான கேள்வி.

”இப்பவும் சொல்றேன்… நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலை. ஆனா, ஊரே ‘நாங்க பொருத்தமான ஜோடி. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவாங்க’னு எதிர்பார்த்தாங்க. ரியல் லைஃப்ல, நான் சரவணன் இல்லை; அவங்க மீனாட்சியும் இல்லை. எங்களுக்குள் நிறைய வித்தியாசங்கள், முரண்பாடுகள் இருக்கும். சீரியலுக்கு நடிக்கலாம். ஆனா, நிஜமாவே கல்யாணம் பண்ணிக்கிட்டா சரிவருமானு நினைச்சோம்.

‘சரவணன்-மீனாட்சி’ சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் ரமணன், ‘நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்’னு சொல்லிட்டே இருப்பார். ‘அண்ணே… ஸ்ரீஜாகூட எனக்கு நிஜமா செட் ஆகாதுண்ணே. நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். மத்தவங்கதான் புரிஞ்சுக்கலைனா, நீங்களுமா..?’னு கேட்பேன். அப்புறம் சீரியலுக்காக மூணு ஊர்ல வைச்சு ஸ்ரீஜா கழுத்துல தாலி கட்டினேன். அப்பல்லாம்கூட தோணலை. ஆனா, சீரியல் முடிஞ்சு அடிக்கடி சந்திக்கிற சூழ்நிலைகள் இல்லாதப்பதான், ஸ்ரீஜாவை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.
அவங்களுக்கும் அப்படித்தான் இருந்தது. ‘சரி, நாம இப்ப வரைக்கும் காதலிக்கலை. ஆனா, கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் காதலிக்கலாம்’னு முடிவெடுத்தோம்; கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!”

”சரவணன் – செந்தில், மீனாட்சி – ஸ்ரீஜா என்ன வித்தியாசம்?”

”இப்படிச் சொல்லலாம். ஒரிஜினல் சரவணன்தான்… ஸ்ரீஜா. ஒரிஜினல் மீனாட்சிதான்… நான். சீரியல்ல மீனாட்சிதான் அதட்டி மிரட்டி அதிரடி பண்ணுவாங்க. சரவணன் தொங்கிட்டே இருப்பான். ஆனா, ரியல்ல நான்தான் டாமினேட். ஸ்ரீஜா எதுவா இருந்தாலும் விட்டுக் குடுப்பாங்க; இறங்கி வருவாங்க. அதே சமயம் ஸ்ரீஜாவுக்கு, ‘பாட்ஷா’ மாதிரி இன்னொரு முகம் இருக்கு. செம கோபக்காரி. கோபம் வந்தா, கொந்தளிச்சிருவாங்க!” என்று நிறுத்த, முறைத்துக்கொண்டே தொடர்கிறார் ஸ்ரீஜா.

”மதுரை’ சீரியல் பண்ணும்போது செந்திலை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. சரியாப் பேசக்கூட மாட்டேன். ஆனா, என் பெரியப்பா சசிதரன், செந்திலைப் பார்த்ததும் ‘உனக்கு இவன்தான் சரியான ஆளு’னு சொன்னார். நான் கண்டுக்கலை. ‘மதுரை’ சீரியல் நடிக்கும்போது, ‘எப்படா ஊருக்குப் போவோம்’னு தோணும். ஆனா, வாரக் கடைசியிலதான் செந்தில் ஷூட்டிங் வருவார். அவர் வந்தா, நான் ஊருக்குப் போக முடியாது. அதனால அவர் மேல கடுப்பாவே இருக்கும். செந்தில் மேல் இருக்கும் கோபத்தை ஷூட்டிங் ஸ்பாட்ல காட்டுவேன். ஆனா, பார்ட்டி அதுக்கெல்லாம் அசர மாட்டார். இன்னும் இன்னும் டென்ஷன் பண்ணுவார்!”

”அப்புறம் எப்படி செந்திலைப் பிடிச்சது?” என்ற கேள்விக்கு அழகாக வெட்கப்படுகிறார் ஸ்ரீஜா.

”மேடம் பேச மாட்டாங்க. நானே சொல்லிடுறேன்!” என்று ஆரம்பிக்கிறார் செந்தில்.

”அப்பல்லாம் சீரியல் ஷூட்டிங் முடிஞ்சதும் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரயில்ல டிக்கெட் போட்டுக் குடுப்பாங்க. அப்படி ஒரு தடவை கிளம்புறப்ப, டிரெய்ன்ல லக்கேஜ்லாம் வெச்சுட்டு நான் டிபன் வாங்க இறங்கிட்டேன். நான் வர்றதுக்குள்ள டிரெயின் கிளம்பிருச்சு. நான் துணைக்குப் போற தைரியத்துல இருந்த அவங்க பெரியப்பா பதறிட்டார். நான் இட்லி வாங்கிட்டு ஓடுற டிரெயின்ல ஏதோ ஒரு கோச்ல ஏறி, ரெண்டு ஸ்டேஷன் கழிச்சு ஸ்ரீஜா முன்னாடி நின்னு இட்லியை நீட்டினேன். கண் கலங்க ‘தேங்க்ஸ்’னு சொன்னாங்க. ஷூட்டிங் தாண்டி அவங்க என்கிட்ட பேசின முதல் வார்த்தை அதுதான்.
அப்புறம் ஒரு நாள் ஸ்ரீஜாவை அழைச்சிட்டு வந்த பெரியப்பா, ஷூட்டிங் ஸ்பாட்லயே திடீர்னு இறந்துட்டார். தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்கு அவர் சடலத்தைக் கொண்டுபோகணும். அப்போ 15 மணி நேரம் ஸ்ரீஜாகூடவே டிராவல் பண்ணேன். அந்த மாதிரி சமயங்கள்ல நான் பண்ணின சின்னச் சின்ன உதவிகள், என் மேல ஒரு பிரியத்தை உண்டாக்கிருச்சாம்!” என்று செந்தில் சொல்ல, தலையசைத்து ஆமோதிக்கிறார் ஸ்ரீஜா.

”சரி, செந்தில்கிட்ட பிடிக்காத விஷயம் என்ன ஸ்ரீஜா?”

(பாய்ந்து வருகிறது பதில்…) ”ரொம்ப அலட்சியமா இருப்பார். கல்யாணம் முடிஞ்சு கேரளா போகும்போது அவர் கையில என் செல்போனைக் கொடுத்தேன். கேரளாவில் இறங்கினதும், ‘போன் எங்கே?’னு கேட்டா முழிக்கிறார். எங்கே தொலைச்சார்னுகூட தெரியலை. இப்படி ஒருத்தரை வெச்சுக்கிட்டு எப்படித்தான் வாழப்போறேனோ!” என்று ஸ்ரீஜா சொல்ல, ”எனக்கும் அதே டவுட்தான்… இவங்களை எங்கேயும் தொலைக்கப் போறது இல்லை. கூடவே வெச்சிருந்து எப்படித்தான் வாழப்போறேனோ?” என்று சிரிக்கிறார் செந்தில்.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *