டேய், ஓடாதீங்கடா, விழுந்திடுவீங்க, நடந்து போங்க! எனக் கெஞ்சினார், கேட்காமல் கருமமே கண்ணாக ஓடினார்கள் பெயரனும் அவன் நண்பர்களும்.
அடிக்கிற வெயிலுக்கே இங்க வந்து இருக்கானுக போல, புலம்பினார் தாத்தா ராமன்
ஆமா, உங்க பேச்சை உங்க பசங்களே கேட்க மாட்டாங்க.
பெயரப் பிள்ளைகிட்ட கெஞ்சுறீங்க, சின்னப் பசங்க அப்படிதான் ஓடுவாங்க, வருவாங்க, அவங்களுக்கு கால் எல்லாம் வலிக்காது, விளையாட்டு முடிஞ்சதும் தான் வலிக்கும் அழுதுகிட்டே வீடு வந்திடும்.
பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருக்கும் எட்டு வயது பெயரப் பிள்ளையிடம்தான் இப்படி கெஞ்சிக்கொண்டு இருந்தார்கள் அறுபதைத் தொட இருக்கும் இளம் தாத்தா, ராமனும், பாட்டி லலிதாவும்.
போனவன் அழுதுக்கொண்டே உள்ளே வந்தான்,
என்னடா? ஆச்சு இப்போ, என்றார்.
என்னை விளையாட்டிலே சேர்க்கலை என அழுதான்.
சேர்க்கலைனா விடு,நாம விளையாடுவோம், என்றார்
அப்ப ஓடு! நான் உன்னைப் பிடிக்கிறேன் என்றான்.
அடப்பாவி , நான் ஓடனுமா? நான் நடக்கிறதே பெரிசு, போடா என்றார்.அழுகைத் தொடரவே, நீங்க போய் விளையாட்டிலே சேர்த்து விட்டுட்டு வாங்க! இல்லைன்னா அப்படித்தான் அடம் பிடிப்பான்.என்றாள் லலிதா.
அது சரி என அலுத்துக் கொண்டே வாசலுக்கு வந்தார்.
ஒரே பசங்க கூட்டம்,எல்லாரும் இவனை விட வயதில் மூத்தவர்களாக இருக்க, சும்மாவாச்சும் உப்புக்கு வச்சு சேர்த்துக்கங்கடா எனப்பேசி சேர்த்துவிட்டார்.
சிறிது நேம்தான் ஆகி இருக்கும், மீண்டும் அழுகையோடு பெயரன் வந்தான்.
இப்போ என்ன? என்றார்.
யாரோ அடித்ததாகவும், ஆட்டத்தில் சேர்க்கலை எனவும் கூறி அழுதான்.
வெளியே வந்துப் பார்த்தார், அனைவரும் இவனை விட்டுவிட்டு வேறெங்கோ விளையாடச்சென்றிருக்கனும்.
விசாரித்ததில் ,இந்தத் தெரு கடைசியில் உள்ள பங்களா வீட்டில் எல்லோரும் கூடி பெரிய திரையில் கிரிக்கெட் மேட்சு பார்ப்பதாக செய்தி வந்தது.
அங்கே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.
அந்த வீடுதான் பூட்டியே இருக்குமே,எனக் கேட்க,
இப்போ விடுமுறையில் கோயில் வேண்டுதலுக்காக குடுபத்தோடு வந்து இருப்பதாகத் தகவல் வரவே அவனை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்கு சென்றார்.
இவன் தான்,இவன்தான் என்னை அடிச்சான் எனக் கூறவே,
ஆமாம் தாத்தா, அவன் கெட்ட வார்த்தையெல்லாம் பேசறான்,அதான் அடித்தேன் என அவன் சொல்ல,
சரிப்பா, இனிமே பேச மாட்டான் நீ இவனையும் சேர்த்துக்கோ என்றார்.
பின்னால் அவனின் தாத்தா நரசிம்மன் வந்து வா,வா உள்ளே வாடா என தாத்தா அழைக்க..
ராமனுக்கு பழைய நினைப்பெல்லாம் வரவே விலகி ஓட்டம் பிடித்தார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருக்கும், கோயிலில் விளையாடும் போது நரசிம்மன் ராமனின் மேல் வேப்பம்பழத்தை பிதுக்கி விட்டான் எனக் கோபித்துக் கொண்டு அவனிடம் அன்று முதல் என்னிடம் பேசாதே என்று கூறியதும், அது இதுநாள் வரை தொடர்வதும்
ஞாபகம் வந்தது.
அவ்வப்போது இந்த விஷயம் ஞாபகம் வரும். என்ன ஒரு சின்ன விஷயத்திற்காக ஒரு நட்பையே இன்று வரை இழந்து விட்டோமே என வருந்தியது உண்டு. அந்த காலக் கட்டத்தில் ஏற்பட்டதாலும் அதன் பிறகு நரசிம்மன் பள்ளி மற்றும் ஊர் மாறியது என வாய்ப்பே இல்லாமல் காலம் கடந்து போய்விட்டது.
இன்று அவனை திரும்ப சந்தித்தும் பேச மனம் ஏனோ துணியவில்லை, பழைய பகையே ஞாபகம் வருகிறது.
அவன் என்னை அடையாளம் கண்டு இருப்பானா?
கண்டுக் கொண்டு இருந்தால் அவனும் பேச முற்படவில்லையே!
அவனும் ஞாபகம் வைத்து இருப்பானோ?
அவனிடம் பேசு, போய் பேசு என்கிறது உளமனம்.ஏதோ ஒன்று தடுக்கிறது.
மாலை நேரம் ஆனது, மேட்சு முடிந்து பெயரன் வீட்டிற்கு வந்தான், தாத்தா,எனக்கு சாக்லெட் குடுத்தாங்க!
அந்த தாத்தா உன்கிட்டே இதை கொடுக்கச் சொன்னாங்க, என்று ஐந்து வேப்பம் பழத்தை கொடுத்தான். அதில் SORRY என எழுதி இருக்கவே உள்ளுக்குள் கிளு கிளுப்பு எகிறியது, அது காதலை விட ஒரு புது அனுபவத்தை ஏற்படுத்தி இருந்தது ராமனுக்கு.
சாப்பிட்டு விட்டு திரும்ப கிரிக்கெட் பார்க்க கூப்பிட்டாங்க,
நான் போவேன் என்றான் பெயரன்
நாம் போகலாம்! என்றார் ராமன்.
போனார்கள், பெயரன் உள்ளே சென்றதும் நரசிம்மன் வெளியே வந்து பார்த்தார், திரும்பி போக எத்தனித்த ராமனை,
டேய்,நில்லுடா! என்ன மதியமும் போயிட்டே ,இப்போ வந்தே, அப்படியே போறே? உள்ளே வா.என அதட்டிக் கூப்பிட்டார்.
அவரின் கையைப் பிடித்து இழுத்தான் நரசிம்மன்.
ஒன்றாய் விளையாடிய அந்த பத்து வருடம் நட்பின் வாசனையை நாற்பது ஆண்டுகள் கழித்து இருவரும் உணர்ந்தார்கள்.ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க ஒருவரை ஒருவர் அன்பாய் பார்ததுக் கொண்டார்கள்.
அன்று இருந்த அந்த ‘துரு துரு’ கண் மட்டும் நரசிம்மனுக்கு அப்படியே இருந்ததை ராமன் பார்த்தான்
வா உட்காரு! என அங்கே போடப் பட்டு இருந்த சேரைக் காட்டினார் நரசிம்மன்.
உட்கார்ந்தான் ராமன், மெத்தென்று இருக்கவே குனிந்துப் பார்த்தான் வேப்பம் பழத்தை சேரில் நிரப்பி வைத்து துணி போட்டு இருந்தான் நரசிம்மன்.
மதியம் நீ போனதில் இருந்து இவ்வளவுதான் பொறுக்க முடிந்தது, வயசாகிட்டு இல்லே! என்றார் நரசிம்மன்.
பழைய நட்பை புதுப்பித்ததில்தான் எத்தனை சுகம்.
கவலைகள் மறந்து சிரித்தனர், பழைய பகைவர்கள்.