கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,089 
 

கம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொப்பெட் வண்டி. இயலாது போக, பின்பு மொபட்டை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு வந்து, கேட்டைத் திறந்தான்.

உள்ளே, இரண்டாம் நம்பர் பிளாட் அம்மா வாசலில் நிற்பது தெரிந்தது. ‘கஷ்ட காலம். மொபெட்டை உள்ளே நிறுத்தி விட்டு வந்து இந்த கேட்டு சனியனை திரும்ப மூடிவிட்டு போகவேண்டும்’. இல்லாவிட்டால், ”ஆளாளுக்கு கேட்டை திறந்து போட்டுட்டு போனா, எவ மூடிக்கிட்டு இருக்கிறதாம்? உனக்கென்ன! மாடு ஆடு மாடு உள்ள நுழைஞ்சா மாடியா ஏறப் போகுது?” என்று பேச்சுக்கேட்க வேண்டியிருக்கும்.

கருப்பாய்.. குண்டாய் அப்பப்பா.. உருவத்தை விட பேச்சு கூடுதல் உக்கிரம் . வாயைத் திறந்தால் வன்மம்தான். ராகவனுக்கு ரெண்டாம் நம்பர் வீட்டு அம்மாவை பார்த்தாலே கொஞ்சம் அச்சம்தான். மொபேட்டை சுவரோரமாக நிறுத்த வேண்டும். பாதையையும் மறைக்கக்கூடாது. முக்கியமாய் இரண்டாம் நம்பர் வீட்டு ஸ்கூட்டர் மீது பட்டுவிடக் கூடாது. பொரிந்துவிடுவாள் பொரிந்து.

தலையை கவிழ்த்தபடி மாடி ஏறினான். ’எல்லோரும் தான் காசு கொடுத்து பிளாட் வாங்கியிருக்கோம். கீழ் பிளாட்டில் இருந்துகொண்டு, என்னமோ இவமட்டும்தான் வீட்டு சொந்தக்காரி மாதிரியும் மத்தவங்க எல்லாம் குடித்தனக்காரர் மாதிரியும் என்ன ராஜ்ஜியம் நடத்துறா இவ!’

மாடிக்கு வந்ததும் சுதந்திரமாய் உணர்ந்தான். ஜில்லென்று காற்று வீசியது. அவன் ப்ளாட் கதவு திறந்தே இருந்தது. சோபா மேல் கிடந்த யூனிஃபார்ம் சட்டை. யாருமில்லாத ஹாலில் ஓடியபடி ஃபேன். மூலைக்கொன்றாய் ரம்யாவின் சாக்ஸ்கள். கதவு மேலெல்லாம் காயப்போடப்பட்டிருந்த துவைத்த துணிகள்.

மைதிலி அடுக்களையில் இருந்தாள். தலையில் இடித்த ஈர பனியனை கோபமாய் தள்ளியபடி கத்தினான். ”என்ன கண்றாவி இது! வெளியில் காயப்படாமல் வீடெல்லாம் ஈரத்துணி..?”

”என்னைய கேளுங்க! சொந்த வீட்டில் குடியிருக்கிற மாதிரியா இருக்கு? சனியன் ஸ்கூட்டர் ராணி ஆர்டர் இனி யாரும் வெளி கம்பியில துணி காயப்போட கூடாதாம். அவ வீட்ல தண்ணி சொட்டுதாம். இந்த பிரச்சனை வந்து ஒரு வாரம் ஆகுது. உங்களுக்கு இந்த வீட்ல நடக்கிறது என்ன தெரியுது?”

”போட்டா என்ன பண்ணிருவாளாம்? வேஷ்டிக்கு மாறியபடி கேட்டான்.

“அஞ்சாம் நம்பர் மாமி நேத்து காய போட்டிருக்காங்க. ஸ்கூட்டர் ராணி என்ன பண்ணி இருக்கா தெரியுமா? அவ வீட்டு ஒட்டட கம்பதுல இன்னொரு கம்பு ஓசி வாங்கி கட்டி, மாமி வீட்டு துணியையெல்லாம் மத்தியானமா எடுத்து தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டிட்டா”

அடுக்களையில் ஸ்டூலில் அமர்ந்து காப்பி சாப்பிட்டபடி யோசித்தான். கணவன், மனைவி இரண்டு பேருமே பொல்லாதவர்கள். மைத்லி கதை கதையாய் சொல்லி இருக்கிறா பிளாட்டில் இருக்கும் ஐந்து குடும்பங்கள் ஒரு கட்சி. அவர்கள் மட்டும் ஒரு கட்சி. கந்து வட்டிக்கு பணம் கொடுக்கிறரகள். வாங்கிச் செல்வதெல்லாம் இல்லாதவர்கள்தான். வட்டி தராதவர்களை அந்த அம்மாள் போடும் சத்தம் இருக்கிறதே! காது கொடுத்து கேட்க முடியாது.

”நம்மள மாதிரி அவங்களுக்கு வீட்ல வேலையே இருக்காதா? எப்படி சதா 24 மணி நேரமும் வாசலிலேயே நின்னுகிட்டு.. பிளாட்டில் நடக்கிறது மொத்தத்தையும் கடுவன் பூனை கணக்கா நோட்டம் விட்டுகிட்டு..!”

”பார்த்தா பாத்துட்டு போறா. உனக்கு என்ன?”

“பார்த்துட்டு சும்மாவா இருப்பா? சாயங்காலம் புருஷன் பொண்டாட்டியா வெளிய கிளம்பிட்டாப் போதும். “கிளம்பிட்டா.. பாருன்னு” வைவாள். அப்பப்பா இந்தத் தெருவுக்கே இவதான் மாமியார் மாதிரி”

மைதிலி, மாமி, பேங்க்கார வீடு, பெங்காலி மேடம் என்று வருக்குமே ஸ்கூட்டர் ராணியைக் கண்டால் பிடிக்காது என்பதை விட பயம் என்பதுதான் சரி.

”இந்த கன்றாவியை எல்லாம் விட்டிட்டு, அக்கடான்னு ஒரு வாரம் எங்கேயாவது போய் இருக்க முடியாதா? உங்களால் ஆபீசுக்கு லீவு போட முடியுமா? தினம் தினம் இதுகுள்ள கிடந்து மாய வேண்டி இருக்கு”

மைதிலியின் நெடுநாள் ஆதங்கம் இன்றும் ஒரு முறை வாசிக்கப்பட்டது.

“அதுசரி. புள்ளைங்க எங்க.?”

”ராஜனும் ரம்யாவும் பள்ளிக்கூட கிரவுண்டுக்கு விளையாட போயிருக்காங்க. அவ ஸ்கூட்டர் நிக்குதுன்னு பிள்ளைகள் விளையாடக் கூடாதின்னுட்டா. இப்படியுமா ஒரு பொம்பள இருப்பா! அன்னைக்கு எதிர்ப் பிளாட்டுக்கார ராஜேஷ், “பந்து விழுந்திடுச்சு. எடுத்துகட்டுமான்னு ஆண்டி” ன்னு கேட்டிருக்கான். கூட நம்ம ராஜனும் நின்னிருக்கான். ‘செருப்பால அடி நாயே. போங்கடா’ ன்னிருக்கா. எனக்கு வயிற்றைப் பத்திக்கிட்டு எரியுது. பிள்ளைகளை இப்படியா வைவது! அதான் ஆண்டவன் அவளுக்கு ஒரு குழந்தை தராமல் வச்சிருக்கான்”.

குழந்தைகள் கிரவுண்டில் இருந்து விளையாடி விட்டு வர, படிப்பு முடிந்து சாப்பிட்டு படுத்தார்கள். ராகவனுக்கு மைதிலியை பார்க்க பாவமாக இருந்தது. சரி, ’இந்த டெண்டர் வேலையெல்லாம் முடிந்து விட்டால், நாலு நாள் லீவு கேட்கலாம். இவளையும் குழந்தைகளையும் எங்காவது கூட்டி செல்லலாம்’ என திட்டமிட்டான்.

லீவுக்கு பர்மிஷன் கிடைத்தது. உடன் மேனேஜர் அவர் உபயோகப்படுத்தாத ஹாலிடே ரிசார்ட் டைம்ஸ் ஷேரையும் நாலு நாளைக்கு கொடுக்க, ராகவனுக்கு ஏக சந்தோஷம். விஷயத்தை மைதிலிக்கு திடீர் என்று சொல்லி சந்தோஷப் பட வைக்க வேண்டும் என்று யோசித்து வேலைகள் செய்தான்.

ஆயிற்று. இரண்டு நாளில் கிளம்பவேண்டும். கொடைக்கானலுக்கு. அனைத்தும் தயார் செய்துவிட்டு கட்சி நேரத்தில் சொல்லி அவள் படும் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என ஆவலாய் இருந்தான்.

மொப்பெட்டை நிறுத்துகையில் இரண்டாம் நம்பர் வீட்டு வாசலில் கூட்டர் இல்லாததும் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. லேசாய் விசில் அடித்தபடி மாடி ஏறினான். டிக்கெட்டுகள், கொடைக்கானல் ரிசார்ட்டில் தங்கும் காகிதங்கள் ஆகிவற்றை மேஜைமேல் பரப்பினான். மைதிலி அவற்றைத் தற்செயலாகப் பார்த்து மெல்ல அவள் மிகம் ஆச்சரியத்தில் மலர்வதைப் பார்த்து பெருமைப் பட்டான்.

“எஸ். நாம இன்னும் ஜஸ்ட் இரண்டே நாளில், அதாவது நாளை மறுநாள் கிள்ம்புறோம்” என்றான். வீடு குதூகலித்தது.

“அது சரி. என்ன! ஸ்கூட்டர் ராணி வீட்டில் வீட்டில் யாரையும் காணோம்?”

“தெரியலைங்க. ரெண்டு நாளாச்சு. வீடு பூட்டியே கிடக்கு. அவுங்க இல்லாத நேரத்தில இங்கிருந்து அனுபவிக்க முடியாம போயிடும் போலிருக்கே! இப்பப் பார்த்து டூர் போறோம் பாருங்க! மைதிலி இப்படிச் சொல்ல, சந்தோஷமும் கேலியுமாக குழந்தைகள்கூட சிரித்தன.

ஊருக்கு கிளம்ப வேண்டிய அன்றைக்கு முதல் நாள் மதியம், சில பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்த ராகவன் இரும்பு கேட்டை திறக்கையில் கவனித்தான், இரண்டாம் நம்பர் வீட்டில் பிளாட் பெண்கள் சிலர் நின்றிருந்தனர். மைதிலியும் நின்றிருந்தாள். ராகவனைப் பார்த்து மாடிக்கு வந்தாள்.

படிக்கட்டிலேயே விஷயத்தைப் போட்டு உடைத்தாள். ”ஸ்கூட்டர் ராணி புருஷன் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். அவளைத் தள்ளிவைச்சிடப் போறாராம். கல்யாணம் ஆகி பத்து பன்னிரண்டு வருஷம் ஆகுது. இன்னும் பிள்ளை பிறக்கலை. அதான்”

‘அது சரிதான்’ என்பதுபோல அவள் குரல் இருந்ததோ என்று ராகவன் நினைத்தான். அந்த விஷயம் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியமாக இருக்க, ஸ்கூட்டர் ராணியோ அதனால் ஒன்றுமில்லை என்பது போல இருந்தார்கள். பிளாட் பெண்கள் கூடி கூடிப் பேசினார்கள். ராகவன் ஒருவனாகவே ஊருக்குப் போகும் மூட்டைகளை கட்ட வேண்டியிருந்தது. மைதிலி அதிகம் கலந்துகொள்ளவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள். காலை சீக்கிரம் எழ வேண்டும்.

மைதிலி சரியாகவே பேசவில்லை. முகமும் உம் என்று இருந்தது. என்ன கோபமோ! ராகவன் நெருங்கி அமர்ந்தான். ”என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா ? ஹலோ மேடம்.. உங்களைத்தான். ஏன் இப்படி இருக்கீங்க?”

”என்ன ஆம்பளைங்களா! பிள்ளை பிறக்கலைங்கறதுக்காக, கட்டின பொண்டாட்டியை வேணாமின்னுட்டு…” கண்கள் கலங்கி, முகம் சிவந்து, குரல் உடைந்து அரற்றினாள். “பாவம் இனி அவ தனையா இருக்க வேண்டியதுத்தானா? எவ்வளவு வடிச்சுக் கொட்டியிருப்பா! எவ்வளவு நல்லது கெட்டது பார்த்திருப்பா!!

இவ்வளவு நாள் வாழ்ந்தவளை விட்டுவிட்டு இன்னொரு கல்யாணமாம்! கொடுமைக்கார ஆம்பளைங்க. இன்னொரு பொம்பளையை கட்டிகிட்டு அவன் நல்லா இருந்திடுவானா?”

”சரி சரி. விடு.இதுக்கெல்லாம் போயி அப்செட் ஆகிகிட்டு. நாளைக்கு ஆரம்பிக்குது நம்ம ஜாலி டூர்” என்று சொல்லியபடி தொட்டு திருப்பியவனை வெடுக்கென திரும்பிப் பார்த்து, “நான் வரலை” என்று சொல்லிவிட்டு நகர்ந்து படுத்துக் கொண்டாள்.

‘எத்தனை வருடம் எதிர்பார்த்த டூர்! வசதி வாய்ப்புகளுடன் அமைந்திருக்கும் டூர். மைதிலிக்கு இப்படி திடீரென்று சாதாரணமாகி விட்டது!’ ராகவனுக்கு எரிச்சலாக இருந்தது. குழந்தைகள் தூங்கிவிட்டார்கள். கடிகாரத்தின் டிக் டிக் மட்டும் சத்தமாக கேட்டது. நாலு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, பத்து நிமிட யோசனைக்குப்பின் ராகவன் படுத்துவிட்டான்,

6:30 மணிக்கு முழிப்பு வந்து மைதிலி திடுக்கிட்டு எழுந்தவள், “ என்ன அலாரம் அடிக்கலையா? தூங்கிடோமா? ட்ரெயின் போயிருக்குமே!” என்று பதறினாள்.

”போகட்டுமே! என்ன இப்ப! நான்தான் அமர்த்தினேன். டூர் இன்னொரு முறை போய்க்கலாம். இரண்டாம் நம்பர் வீட்டு அம்மாளுக்கு ஏதும் தேவையான்னு என்று பாரு. அய்யாவுக்கு நாலு நாள் லீவு இருக்கு”

மைதிலி அவன் கையை அழுந்தப்பற்றிக்கொண்டாள். சந்தோஷமாக.

– கல்கி 17.9.1995 (ஸ்கூட்டர் ராணி என்ற தலைப்பில்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *