இந்தப் புருஷாளே இப்படித்தான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 7,688 
 

“அக்கா! ஜானவாசம், ஊஞ்சல் எதுவுமே வேண்டாம்னுட்டாராமே மாப்பிள்ளை!” அத்தையிடம் முறையிட்டாள் அம்மா.

சற்றுத் தூரத்தில் பாயில் அமர்ந்து பட்டுப்புடவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த மணப்பெண் ராதா காதைத் தீட்டிக்கொண்டாள். அனுபவம் முதிர்ந்த அத்தை அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள்?

“அத்தனைக்கத்தனை செலவு மிச்சம்னு நெனச்சுக்கோடி விசாலம்!” என்று ஆறுதல் அளித்துவிட்டு, “நம்பாத்திலதான் இது மொதல் கல்யாணம்! மாப்பிள்ளை எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சவரோன்னோ!” என்று ஒரு கசப்பான செய்தியை நினைவுபடுத்தினாள் .

முப்பது வயதை எட்டிவிட்ட தனக்கும் ஒருவர் வாய்க்கப்போகிறார் என்று ஆனந்த வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்த ராதாவுக்குத் திடீரென்று மூச்சு முட்டியது.

`எளையாளா வா(ழ்)க்கப்பட்டா என்ன? எனக்கும் அப்பாவுக்கும் முழுசா பதினோரு வயசு வித்தியாசம்! இந்த மாப்பிள்ளைப்பையன் ஒன்னைவிட நாலே வயசுதான் பெரியவர்! குழந்தை குட்டியும் கிடையாது!” ஏதேதோ சொல்லி, அம்மா அவளைக் கரைத்திருந்தாள். “மூத்தாளோட ரெண்டே வருஷம்தானாம் குடித்தனம். ஒன்னைப் பாத்ததும்தான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கவே தோணித்தாம்! பொண் பாக்க வரச்சே அவாக்கா சொன்னா!” குரல் கெஞ்சலாக ஒலித்தது.

தன்னைத் தேடி வரவும் ஆளில்லாமல் போகவில்லை என்று அவள் அடைந்த பூரிப்பு விரைவிலேயே அமுங்கிப்போயிற்று, எண்ணையிலிருந்து எடுக்கப்பட்ட பூரிபோல்.

“அந்தப் பழிகாரி, அதாண்டி, அல்பாயுசில போனாளே ஒன் மூத்தா, அவ பேரு சுதாவாம். அப்படியே ஒன்னை உரிச்சு வெச்சமாதிரி இருப்பாளாம் — சாட்டைமாதிரி தொங்கற பின்னலும், எள்ளுப்பூபோல மூக்குமா! ஏதோடி, நீ பொறுமையா காத்திண்டு இருந்தது வீணாப்போகலேடிம்மா!” அத்தை மங்களம் இவ்வளவு விவரமாகச் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

ராதாவுக்கு முதல் இடி அதுதான். வயது வித்தியாசம் சரிதான், ஆனால் அனுபவம்?

கல்யாண பரபரப்பில் அந்த அதிர்ச்சி மங்கிவிட்டிருந்தது. இப்போது அம்மா அதை உசுப்பி விட்டுவிட்டாள்.

`எனக்கு இது முதல் கல்யாணம்தானே? என் மனநிலையை, உற்சாகத்தை அவர் எப்படிப் புரிந்துகொள்ளாமல் போகலாம்?’ என்ற சிறு கோபம் வந்தது. `சாந்தி முகூர்த்தம்கூட வேண்டாம்னுடுவாரா, பாக்கறேன்!’ என்று விளையாட்டாய் கறுவிக்கொள்கையில் இதழ்களில் புன்முறுவல் நெளிந்தது.

சிறுவர்களுக்குக்கூடப் புரிகிறமாதிரி முதலிரவு காட்சிகளை விளக்கும் புண்ணியத்தைக் கட்டிக்கொண்ட தமிழ்ப்படங்களை நினைத்துக்கொண்டபோது ராதாவுக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. அப்படித்தானே இன்றிரவுக்காக அந்த அறையை அலங்கரித்திருப்பார்கள்? என்ன மலர்களெல்லாம் உபயோகித்திருப்பார்கள்? மல்லிகை, ரோஜா, சாமந்தி? வாசனை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அழகாகத்தானே இருக்கிறது என்று வண்ண வண்ணமாக ஆர்கிட் பூக்களைப் பரப்பியிருப்பார்களோ, படுக்கையில்?

நினைவு எங்கோ போக, நாணம் மிகுந்தது ராதாவுக்கு. சீ! இது என்ன வெட்கங்கெட்டத்தனம்!

நாத்தனார் உடன்வர, சகல அலங்காரங்களுடன் நடந்தாள். ஆர்வத்தில் சற்று வேகமாகவே நடக்கிறோமோ? எண்ணப்போக்கு நாணத்தை உண்டாக்க, கால்கள் பின்னிக்கொண்டன. புன்முறுவலுடன் அவளை மெல்ல இடித்தாள் நாத்தனார். “கதவை உள்ளே தாப்பா போட்டுக்கோ!” என்று கிசுகிசுத்தாள்.

வெளியில் ஆரவாரம் எதுவும் இல்லை. அருவருப்பு ஊட்டும் வகையில் தோழிகள் உச்சஸ்தாயியில் சிரிப்பதெல்லாம் படங்களில் மட்டும்தானோ!

மெல்ல தலைநிமிர்ந்தாள். தவறான அறைக்குள் நுழைந்துவிட்டோமா? சுத்தமாக ஒரு அலங்காரமும் இல்லை.

“வா, ராதா!” சிறிதும் தயக்கமில்லாது அவளை அழைத்தான் அவளது கணவன்.

மீண்டும் அவள் பார்வை அந்த அறையை அளவெடுத்தது.

அதைப் புரிந்துகொண்டவனாய், “என்னடா, பால், பழம், பூ எதுவுமே இல்லையேன்னு பாக்கறியா? நாந்தான் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு அடிச்சுச் சொல்லிட்டேன். எதுக்கு வீணா, பழைய ஞாபகத்தையெல்லாம் கிளறணும்!”

`பழைய ஞாபகம்!’

இரண்டு வருடங்களில் மொத்தம் எவ்வளவு இரவுகள்? வேண்டாத கணக்கு எழுந்தது. எதிர்பாராத அதிர்ச்சியால் மயங்கி விழப்போனாள்.

விரைவாக எழுந்தவன் அவளைப் பற்றிக்கொண்டான். “என்னம்மா?” அந்தக் குரலில் சத்தியமாக காதல் இல்லை. புதிய வேகம்? ஊகும்! வெறும் அனுதாபம் மட்டும்தான்.

“தலை சுத்திப்போச்சா? நாளெல்லாம் ஹோமப்புகையில ஒக்காந்திருந்தது! அப்படித்தான் இருக்கும்!”

`ஐயோ! இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிண்டிருக்காப்போல பேசாதீங்கோளேன்!’ என்று அலற வேண்டும்போல இருந்தது ராதாவுக்கு.

“தலைவலி மாத்திரை வேணுமா?”

`அந்தக் கசப்பைவேற முழுங்கணுமா?’ மறுத்துத் தலையாட்டினாள்.

“அப்போ சரி. நன்னா தூங்கு!” அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போனவனையே வெறித்தாள் ராதா. கற்பனைக்கும், உண்மை நடப்புக்கும் இவ்வளவு வேறுபாடா இருக்கும்!

மறுநாள் காலை ராதா கண்விழித்தபோது, நல்ல வெயில் வந்திருந்தது. அவசரமாக எழுந்து, சற்றே கசங்கியிருந்த மெத்தை உறையைச் சீர்படுத்தியபோது, அழுகை வரும்போல இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். நாத்தனார் தயாராகக் காத்திருந்தாள்.

“`அவளை எழுப்பாதேக்கா. ரொம்ப ஓய்ஞ்சு போயிட்டா’ன்னு கிருஷ்ணன் சொன்னான்!” கண்ணைச் சிமிட்டினாள் விஷமமாக. “அப்பாடி! ஒரே நாளிலே என்ன கரிசனம்!”

அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள் ராதா.

தனிமையில் அம்மாவின் பேச்சோ கண்டனமாக ஒலித்தது. “ஏண்டி? இவ்வளவு நேரமா தூங்குவே, ஒரு பொண்ணு? ஒங்க புக்காத்துக்காரா என்ன நினைச்சுப்பா? பொண்ணை சரியா வளக்கலேன்னு என்னைத்தானே குத்தம் சொல்வா?”

“நீ என்ன விசாலம்! கொழந்தைக்கு கால் கடுத்துப்போயிருக்கும்!” என்று அவளுக்கு வக்காலத்து வாங்கினாள் மங்களத்தை. அதே மூச்சில், “ஏண்டா கண்ணா? மாப்பிள்ளை கோபதாபம் இல்லாம இருக்காரா?” என்று அவளை விசாரித்தபோது, ராதாவுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. கோபமாவது, தாபமாவது!

“மங்களத்தை! வாங்கோ, வாங்கோ!”

அதற்கு விடையாக, உள்ளே நுழைந்தவுடனேயே, “மூக்கும் முழியுமா இருப்பியேடிம்மா! என்னடி இப்டி பல்லும் பவிஷுமா போயிட்டே!” என்று அங்கலாய்த்தாள் அத்தை.

அந்தப் பரிவில் உருகிப்போன ராதா தன் மனதிலிருந்ததை — தன் ஆசைக்கனவுகள், அவை நொறுங்கிய விதம், அருவமாக இருக்கும் சுதாவுடன் தான் போட்டிபோட்டு ஜெயிக்க முடியுமா என்ற அவநம்பிக்கை, அச்சம் — எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.

சற்று யோசித்துவிட்டு, முதியவள் பேசினாள்: “ரெண்டாந்தாரம்னு தெரிஞ்சே கழுத்தை நீட்டிட்டு, இப்போ அழுது என்ன பண்றது! நாளைக்கே நீ செத்துவெச்சா..!”

“அத்தை!” என்று அலறினாள் ராதா.

“அட, ஒரு பேச்சுக்குச் சொல்றேண்டி. அதுக்குள்ள, தொங்கற நூலை எம்பி எம்பிப் பிடிக்கிற பூனைக்குட்டிமாதிரி குதிக்கறியே!” என்று செல்லமாகக் கடிந்துவிட்டு, “நான் என்ன சொல்ல வந்தேன்னா.., அதான்,” கனைத்துக்கொண்டாள். “ஒனக்கே ஒண்ணு ஆச்சுன்னு வை. ஒங்காத்துக்காரன் நாலே நாள்ல ஜம்ஜம்னு இன்னூரு கல்யாணம் பண்ணிண்டு..,” என்று சொல்லப்போனதை முடிப்பதற்குள் ராதா புரிந்துகொண்டாள்.

தான் இறந்தாலும், தன்னைப் பிறர் மறந்துவிடக்கூடாதே என்ற பதைப்பு எல்லாரிடமும் இருக்கிறது. தான் செய்தது சரிதானோ என்ற குற்ற உணர்வும், மறைந்தவளுக்குத் துரோகம் செய்கிறோமோ என்ற பதைப்பும் அவருக்கு மட்டும் இருக்காதா!

இந்த உண்மை புரியாமல், என்னமோ, தான் ஓயாது படிக்கும் காதல் நவீனங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதாநாயகியைப்போல் கனவுகளை வளர்த்துக்கொண்டு, இவரும் ஒரு கமலஹாசன், ஒரு சூர்யாவைப்போல கண்களிலேயே காதலைக் காட்டுவதில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டது தன் முட்டாள்தனம்! கோடிக்கணக்கிலே சம்பளம் வாங்கினால்தான் அதெல்லாம் முடியும் போலிருக்கிறது!

“ஏண்டிம்மா! என்னதான் ஆத்திலே இருந்தாலும், பகல்லேயும் நைட்டிதானா! புதுசா கல்யாணமானவளா லட்சணமா, புடவை கட்டிக்கோ. ஆம்படையான் கண்ணுக்கு எப்பவும் அழகா, லட்சணமா இருக்கணும். இதெல்லாம் மத்தவா சொல்லியா தெரியணும் நோக்கு!”

`புடவை’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும், ராதாவின் நினைவு எங்கோ தாவியது.

`இந்த ரெண்டு புடவையில எதைக் கட்டிக்கட்டும்?’ எப்படியாவது கணவனுடன் நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டுமென்ற துடிப்பு அவளுக்கு.

`ஏதோ, ஒனக்குப் பிடிச்சதை கட்டிக்கோயேன்!’ அசிரத்தையாக வந்தது கிருஷ்ணனின் பதில்.

`பாத்து ரசிக்கப்போறது நீங்கதானே!’ கண்களிலேயே கிறக்கத்தைக் காட்டினாள்.

அசந்தர்ப்பமாக, `சுதாவும் இப்படித்தான்!’ என்று சொல்லிவைப்பான். `சுயம்மா யோசிக்கத் தெரியாதா பொண்களுக்கு?’

அத்தையின் குரல் அவளைப் பழைய கசப்பிலிருந்து மீட்டு வந்தது. ”ஏண்டி கண்ணா? மாப்பிள்ளை ஆசை ஆசையா ஒன்னை மூக்குத்திக்கச் சொன்னாராம். நீ மாட்டவே மாட்டேன்னுட்டியாமே!”

வேறு யார், நாத்தனார்தான் கனகாரியமாக வத்தி வைத்திருப்பாள்! ராதா உதட்டைச் சுழித்தாள்.

“ஆத்திலேயே வைரபேஸரி இருக்காமே! ஒனக்கென்னடி, கசக்கறதோ?”

எரிச்சலுடன், “அது அவளோடது, அத்தை. என்னை சுதாவா மாத்தப் பாக்கறார்,” என்றவள், அதற்குமேலும் தாளமுடியாது, “அது என்னால முடியாது. நான் ராதாதான். சுதா இல்லே!” என்றுவிட்டுக் கதறி அழுதாள்.

“குளிக்காம இருக்கியாம். இப்ப என்ன மூணு மாசமா? இந்தச் சமயத்திலே இப்படித்தான் எல்லாத்துக்கும் கோபமும் அழுகையும் வரும்! விடு. புள்ள பெத்தா எல்லாம் சரியாப் போயிடும்!” அவளுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் ஒரு வியாக்கியானம் வைத்திருந்தாள் அத்தை. “ஒனக்குப் பிடிக்குமேன்னு, வெண்ணையைக் காய்ச்சி, மைசூர்பாகு கெளறிண்டு வந்தேன். இந்த சமயத்திலே பிடிச்சதை எல்லாம் சாப்பிட்டுடணும். அப்போதான் கொழந்த கொறையில்லாம பொறக்கும்!”

அத்தையின் வாக்கு பலித்தது.

கடைசியில், சுதா செய்ய முடியாத ஒன்றைத் தான் செய்துவிட்டோம்! அவருக்கு வாரிசைக் கொடுத்துவிட்டோம்! ராதாவுக்குப் பெருமையாக இருந்தது.

பாபு பிறந்தபின், கிருஷ்ணன் சுதாவைப்பற்றிப் பேசுவது நின்றுபோனது. குழந்தையே உலகம் என்றிருந்தான்.

அந்த ஆனந்தமும் நிலைக்கவில்லை.

ரம்புத்தான் பழத்தை ஏன் முழுசா வாயில போட்டுண்டான்?

அது அவன் தப்பில்லையே! கொட்டை தொண்டையில் சிக்கிக்கும்னு புரியற வயசா அது!

குழந்தை சத்தம் போடாம இருக்கானேன்னு வந்து பாத்திருக்க வேண்டாம்? அப்படி என்ன கதை படிக்கிற கெட்ட வழக்கம்!

குற்ற உணர்ச்சியில் உழன்ற ராதாவின் துயரம் ஓயவேயில்லை.

“என் தங்கமே! இதெல்லாம் நம்ப கையில இல்லேடி. குழிப்பிள்ளை மடியிலேன்னு சொல்வா. அடுத்த வருஷம் பாபுவே வந்து பிறப்பான், பாரு!” என்ற மங்களத்தையின் ஆறுதல் பேச்சு அப்போது அவளுக்குச் சமாதானத்தை அளிக்கவில்லை. ஆனால், கோபு பிறந்ததும், அந்த வீட்டில் மறைந்த மகிழ்ச்சி மீண்டும் தலைதூக்கியது.

“ஆறு மாசம்தான் ஆறது! அதுக்குள்ளே இதுக்கு எத்தனை விஷமம்கிறேள்! பாலைக் கலக்கிண்டு வந்து பாக்கறேன், இது சோஃபா அடியில ஒளிஞ்சிண்டு சிரிக்கிறது!” என்று சிரித்துவிட்டு, “பாபுவும் இப்படித்தானே பண்ணுவான்!” என்று முடித்தவள் சட்டென நிறுத்தினாள்.

எங்கோ அடிக்கடி கேட்டாற்போல இருந்தது. கோபுவின் ஒவ்வொரு செயலிலும், அசைவிலும் மறைந்த பாபுவைக் கண்டு, அவனை இழந்த சோகத்தை மறக்க நினைக்கிறதா தன் நொந்த மனம்?

இதையே கணவர் செய்தபோது, தன்னால் ஏன் அதைப் புரிந்து, ஏற்க முடியவில்லை?

“என்ன யோசனை, ராதா?”

நனவுலகிற்கு வந்தாள். “என்னமோ நெனச்சுண்டேன். நான் மூக்கு குத்திக்கணும்னு ஆசையா கேட்டேளே! இன்னிக்கு பத்தர் கடைக்குப் போலாமா?”

அவளை அதிசயமாகப் பார்த்தான் கிருஷ்ணன். “எதுக்கு? ஒண்ணும் வேண்டாம். ஒன்னை இப்பிடியே பாத்துப் பழகிப்போயிடுத்து!”

ராதாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

நான் செத்தாலும், ஒண்ணு, ரெண்டு வருஷத்திலேயே என்னை மறந்துடுவாரோ?

சே! இந்த புருஷாளே இப்படித்தான்! ரொம்ப மோசம்!

(கணையாழி)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *