இதுவும் கடந்து போகும்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 4,093 
 
 

கிஷோர்….உன்னி….சிவா… மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது………

மூன்று பேரும் மேட்டுக் ‘ குடிமகன்கள்’ . மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தவர்கள்..

மூன்று பேரின் பெற்றோர்களும் அளவுக்கு அதிகமாகவே சொத்து வைத்துக் கொண்டு எப்படி மேலும் சம்பாதிப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவர்கள்..

மூவரும் பெற்றோருக்கு ஒரே வாரிசுகள்.விடுதி மாணவர்கள்….

சிறிய வித்தியாசங்கள்…..

கிஷோர் மும்பைக்காரன்.தமிழ் குச் குச் மாலும்….உன்னி கோட்டயம்.. தமிழில் மலையாளம் கலந்து சம்சாரிக்க முடியும்.சிவா பக்கா சென்னைப் பையன்..

இந்த க்ரூப்பின் லீடர் கிஷோர்.எதற்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சன். மூவரில் பயந்தவன் உன்னிதான்…

சிவாவின் பெற்றோர்கள் பிரிந்து விட்டார்கள்.. தற்போது தந்தையுடன்… அம்மா கல்கத்தாவில் பெரிய பிஸினஸ் மேக்னட்டை திருமணம் செய்து கொண்டு விட்டதாய் வதந்தி…அப்பா வேலை நேரம் போக மீதி நேரம் எதோ ஒரு கிளப்பில்…. மகனுடன் “ஹலோ….ஹலோ .”…டெர்ம்ஸில்….

கிஷோரின் பெற்றோர்கள் மும்பையில் பெரிய மருத்துவமனையின் பார்ட்னர்கள்..பிஸியான மருத்துவர்கள்…… பெற்றோரின் கட்டாயத்துக்காக மருத்துவம்….

கிஷோருக்கு தனியான வீடு.. ஆட்கள்.. ஆனால் கிஷோர் பிடிவாதமாய் ஹாஸ்டல் தான் என்று சொல்லி விட்டான்.

சனி ஞாயிறுகளில் மூன்று பேரும் நீலாங்கரை வீட்டில் கொட்டம்…

உன்னியின் அப்பா சினிமா தயாரிப்பாளர்… அம்மா பழைய நடிகை.பார்ட்டிகளுக்கும் …..திறப்பு விழாக்களுக்கும் போனபின் மீதி நேரம்தான் உன்னிக்கு….

இப்போது இவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை…

அவசரமாய் பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது…

பத்து லட்சமா….?? அதுவும் கல்லூரி மாணவர்களுக்கா..??
ஆம்… நீங்கள் யூகித்தது சரிதான்..

கிஷோர்..உன்னி..சிவா..மூன்று பேரையும் நண்பர்களாக்கிய பெருமை அந்த போதை மருந்துகள்தான்…

பிரவுன்சுகர்…மாரியுவானா….கோக்கேன்.. ஹெரோயின்…கஞ்சா..

கிஷோர் பள்ளியில் படிக்கும் போதே ரிடாலின் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவன்.

அவன் கல்லுாரியில் சேர்ந்தபோது தான் அவனுக்கு சிவாவின் நட்பு கிடைத்தது..

சிவா ரொம்பவும் புத்திசாலி மாணவன்.. ஆனால் யாருடனும் பேச மாட்டான்.

ஒரு நாள் அவன் தனிமையில் அழுது கொண்டிருப்பதை கிஷோர் பார்த்துவிட்டான்..

அவனுடைய கதையைக் கேட்டதும் கிஷோர் உடைந்தே போனான்.. அப்போதுதான் விடுதியில் சேர்ந்திருந்தான் கிஷோர்….

அடிக்கடி தன் அறைக்கு அழைத்துச் சென்றான்…மெல்ல மெல்ல சிவாவும் கவலையை மறக்க போதைப் பொருளுக்கு அடிமையானான். குடிபோதையும் சேர்ந்து கொண்டது..பாதி நாளும் கிஷோருடன் ஹாஸ்டலில் தங்கி விடுவான் சிவா….

சிவாவின் தந்தை தேவராஜனுக்கு சிவா வீட்டில் இருக்கிறானா …இல்லையா.
என்று கூடத் தெரியாது..

இருவரும் ஒரு மணிநேரம் சேர்ந்திருந்தால் போதும்…. ஒருவர் முகத்தில் ஒருவர் முழிக்கவே கூடாது என்று சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு போய்விடும் உறவு….

முதல் வருடக் கடைசியில் ஹாஸ்டலில் கிஷோர் ரூம் மேட்டாய் குடிபுகுந்தான் சிவா…

உன்னி கல்லுரியில் சேர்ந்தவுடனே சீக்கிரம் பிரபலமாகி விட்டான்……

அவனுடைய பெற்றோர்கள் சினிமா துறையில் இருந்ததால் அவனுடைய அறையில் பாட்டுக்கும்.. கூத்துக்கும் பஞ்சமே இருக்காது… ஆனால் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன்.

உன்னியைப் பார்த்ததுமே கிஷோருக்கு பிடித்து விட்டது.இருவரும் சேர்ந்து கல்லூரி கலைவிழாவில் கலக்குவார்கள்.

அவனும் மெள்ள மெள்ள கிஷோரின் அறைக்கு வர ஆரம்பித்தான்.

சின்னக் குழந்தையிலிருந்து சினிமாவை சுவாசித்து வந்ததால் அவனுக்கு பார்ட்டி… டிரிங்க்ஸ்.. டான்ஸ்..பாட்டு… இதெல்லாம் ஏற்கனவே பழகியிருந்தது..

தனியாக வளர்த்ததால் யாராவது அன்பு காட்டினால் உடனே அடிமையாகி விடுவான்.அவர்களுக்காக உயிரையும் விடுவான்…

கிஷோருக்கு முன்னரே பரிச்சியமான ஒரு பையன் மூலம் எல்லா போதைப் பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக கிடைத்தது.

இத்தனை பழக்கங்களுக்கு நடுவிலும் மூன்று பேரும் அரியர்ஸ் வைக்காமல் முதல் வருடத்தை தாண்டியது ஆச்சரியம்தான்.
பிரச்சனை இப்போதுதான் ஆரம்பம்.

ராகிங் அவர்கள் கல்லூரியைப் பொறுத்தவரை மிகப் பெரிய தண்டனைக்குரிய விஷயம்….

அதையும் மீறி ஒரு மாணவனை மூன்று பேரும் ராக் பண்ணியதில் அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அவன் உயிர் பிழைத்ததால் இவர்கள் உயிர் தப்பினார்கள்.ஆனால் மூன்று பேரும் கல்லூரியிலிருந்து ஆறு மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.ஆளுக்கு மூன்று லட்சம் அபராதம்…

மூன்று பேரின் பெற்றோர்களும் சொல்லி வைத்த மாதிரி கைகழுவி விட்ட நிலையில் பணம் புரட்ட வேண்டியது அவசியமானது…

கிஷோர் குடுத்த ஐடியாவைக் கேட்டு உன்னியும் … சிவாவும் ‘ஆ ‘என்று வாயைப் பிளந்தார்கள்… கடைசியில் மூன்று பேருமே இதை விட்டால் வேறு வழியே இல்லை என்று தீர்மானம் பண்ணி விட்டார்கள்…..

***

மித்ரன் போல ஒரு குழந்தையைப் பார்த்திருக்க முடியாது…எட்டு வயதில் அவனுக்கு இருக்கும் புத்திசாலித்தனம் ….. அவனுடன் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கலாம்..

அம்மா காஞ்சனா வீட்டிலிருந்தே வேலை செய்யும் கம்யூட்டர் ப்ரோகிராமர். அப்பா முகில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர கம்பெனி உரிமையாளர்..

மித்ரனின் தாத்தா குகன் கல்லூரி விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்றவர்..

பாட்டி மரகதம் விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்ட தைரியம் மிகுந்த பெண்மணி…

மித்ரன் உண்மையாகவே ஒரு அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும்…. புதிதாக பார்த்தாலும் ஐந்து நிமிடத்தில் உங்களைக் கவர்ந்து இழுக்கும் காந்த கண்கள்..சாதுரியமான பேச்சு…

அவனுக்கு கார்கள் என்றால் உயிர்..Cars படத்தை சுமார் இருபது முறையாவது பார்த்திருப்பான்.

அதுவும் லேட்டஸ்ட் மாடல் ஃபோர்ட் மஸ்டங் என்றால் உயிரையே விட்டுவிடுவான்…

மித்ரன் வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. அப்பாவின் ஆபீசுக்கு விடுமுறையில் போவான்.ஒருநாள்….

இது நடந்து ஒரு வருஷம் இருக்கும்…..

“அப்பா …இப்போ என்ன விளம்பரம் எடுத்திட்டிருக்கீங்க…??”

“ஒரு பழச்சாறு விளம்பரம் பேபி …”

எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு…சொல்லட்டா…??”

“ம்ம் ம்ம்.. சொல்லு..!!

“என்னை மாதிரி ஒரு பையன்..வீட்ல வெளயாடும்போது கீழ விழுந்து முட்டில லேசான அடி… நம்ப டூட்டி மாதிரி ஒரு நாய்… ஓடிப் போய் முதலுதவிப் பெட்டிய தூக்கிட்டு வருது…. அப்புறம் ஓடிப் போய் ஃபிரிட்ஜிலயிருந்து அந்த ஜுஸ் பாட்டிலத் தூக்கிட்டு வந்து குடுக்குது…”

“சூப்பர்… நீயும் டூட்டியும் நடிக்கிறீங்களா…??”

“தாராளமா….!!!”

‘ சில உறவுகள் பிரிக்க முடியாதது…’
இது தலைப்பு…

அந்த வருடத்தின் சிறந்த விளம்பரத்துக்காக விருது முகிலுக்குத்தான்….

மித்ரன் பாதி ப்ரோக்ராமர் ஆகி விட்டான்… காஞ்சனாவுக்கு சில சமயம் அவனுடைய புத்திசாலித்தனம் பயமாகவே இருக்கும்…

பாட்டி அவனுக்கு இந்தியாவின் சுதந்திர போராட்டம் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறாள்…

தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு சனிக்கிழமை பீச்சில் நடப்பது மித்ரனுக்கு ரொம்ப பிடிக்கும்..

“தாத்தா.. கடல் தண்ணி ஆவியாகி மேல போய் தானே மழையா வருது.. அப்போது அதுவும் உப்பாதானே இருக்கணும்..!!

ஏன் சில கடல் தண்ணி பச்சையா..வெள்ளையா….கருப்பா. இருக்கு தாத்தா…????”

அவனுக்கு பதில் சொல்ல தாத்தா சில சமயம் திணறுவதுண்டு…

அப்படி ஒரு நாள் பீச்சில்…..

“தாத்தா… இருங்க.. கோன் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்திடுறேன்..”

தாத்தா உட்கார்ந்து கொண்டிருப்பார்.பத்தடி தள்ளிதான் ஐஸ்க்ரீம் வண்டி..இது வழக்கமாய் நடக்கும் ஒன்று…

மித்ரன் ஐஸ்க்ரீம் கையுடன் வந்து கொண்டிருந்தான்…..

தாத்தா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்..

அப்போதுதான் மித்ரன் அந்த காரைப் பார்த்தான்.சிவப்பு நிற Ford Mustang..! !!!

பளபளவென்று மாலை வெயிலில் மின்னிக் கொண்டிருந்தது.அருகில் ஒரு இளைஞன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ…. உனக்கு இந்த கார் பிடிக்குமா???”

“அங்கிள்.!!! எனக்கு இந்த கார்னா பயித்தியம்..இவ்வளவு பக்கத்தில் இதை நான் பார்த்ததேயில்லை..!!!”

“உள்ள பாக்க ஆசையாயிருக்கா
…??”

“ஆமா அங்கிள்.. உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே.!!!”

“வா..வா.. உள்ள உக்காரு..”

காரின் கதவை திறந்து விட்டான்..

“அங்கிள்…இந்த ஐஸ்கிரீம் கோனப் பிடிங்க..!!!

சூப்பர் …இது என்ன… இந்த லைட் எதுக்கு…??”

“இரு.. வரேன்..இந்தா ஐஸ்கிரீம்..!!!”

அவனும் காரில் ஏறி உட்கார்ந்தான்…

“இது பார்… ஆட்டோமேட்டிக் கியர்..தொட்டா பறக்கும்….”

சொல்லிக் கொண்டே காரை வேகமாக கிளப்பினான்…

“அங்கிள்.. !!!!!இருங்க…தாத்தா எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு…”

ஷ்ஷ்ஷ்..என்று சைகை செய்தான் இளைஞன்…

வண்டி வேகமாய் ECR ரோட்டில் திரும்பியது…

மித்ரனுக்கு புரிந்துவிட்டது…

“அங்கிள்..!!!!என்ன கிட்நாப் பண்ணப் போறீங்கதானே…???”

ஒரு நிமிடம் சடன் பிரேக் போட்டான் இளைஞன்…

“உனக்கு…??”

“எப்பிடி தெரியும்னுதானே கேக்க போறீங்க… ஒரு கார்ட்டூன்ல பாத்தேன்.!!

இப்போது நீங்கள் ஓரளவு யூகித்திருப்பீர்கள்.. ஆமாம்.. அந்த இளைஞன் கிஷோரேதான்…

***

பத்து லட்சத்தை அவசரமாய் புரட்ட அவர்களுக்கு புலப்பட்ட ஒரேவழி ஒரு பணக்கார வீட்டு குழந்தையைக் கடத்துவதுதான்…

அவர்கள் கண்ணில் பட்டான் மித்ரன்…

எல்லா விவரங்களும் ஒரே நாளில் சிவாவின் விரல் நுனியில்.

“அங்கிள்..இவ்வளவு வேகமா போறீங்களே…. பறக்கிற மாதிரி இருக்கு… நீங்க அப்போ சடன்பிரேக் போட்டீங்களே… எவ்வளவு ஸ்மூத்தாக நின்னிச்சு.

Wow….What a super model…!!”

கிஷோருக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. இவனுக்கு பயமாக இல்லையா… அல்லது கொஞ்சம் புத்தி சரியில்லையா…

ஒன்றுமே நடக்காத மாதிரி ஒரு குழந்தையால் எப்படி…???

எதற்கும் இவனிடம் கொஞ்சம் ஜாக்கிரைதையாகவே இருக்க வேண்டும்….

விரலை வாயில் வைத்து மறுபடியும் ‘ ஷ்ஷ்ஷ்…என்றான்…

மித்ரன் ஒரு வித்தியாசமான குழந்தைதான்…. எதைக் கண்டும், யாரைக்கண்டும் , சாதாரணமாக பயப்பட மாட்டான். இது அவனுக்கு புது மாதிரியான அனுபவம்…

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது…

ஆனால் அதேசமயம் த்ரில்லிங்காயும்… வேடிக்கையாகவும் இருந்தது….

“அங்கிள் . என்ன கடத்தி அப்பா கிட்ட மிரட்டி பணம் கேக்கப் போறீங்களா..??”

இதற்குமேல் கிஷோரால் பொறுக்க முடியவில்லை..

“வாய் மூடிட்டு வரல்ல… வாயையும் கண்ணையும் கட்டிடுவேன்..

Be careful… Don’t act smart…!!!”

“Okay uncle…நா பேசல.. சும்மா வேடிக்க பாத்திட்டு வரேன்….ஆனா வீட்லதான் எல்லாரும் பயப்படுவாங்க… எல்லாரும் சேந்து தாத்தாவ திட்டுவாங்க….! !!!!

பாவம்..தாத்தா.. அவருக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு கவலையா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு போன் பண்ணி என்ன வேணும்னு கேட்டிடுங்க uncle!!.!!”

“எனக்கு தெரியும்….வாய மூடிட்டு வா…!!”

***

மகாபலிபுரம் போகும் சாலையில் எங்கெங்கோ வளைந்து நெளிந்து திரும்பி ஒரு பெரிய பண்ணை வீட்டு முன்னால் நிறுத்தி பட்டனை அமுக்கினான்.. கேட் திறந்து உள்ளே நுழைந்ததும் மூடிக் கொண்டது…!!!

“ம்…எறங்கு….!!”

மித்ரனுக்கு காரிலிருந்து இறங்கவே மனசில்லை…சிவா ஓடிவந்தான்..

“சக்ஸஸ் .”என்று கையைத் தூக்கி காண்பித்தான் கிஷோர்..

“Uncle… பணம் இன்னும் கைக்கு வரலியே… எப்பிடி ஸக்ஸஸ்..??”

“டேய்.. என்னடா கிஷோர்.. ??பையன தூக்கிட்டு வான்னா… ஒரு குட்டிச்சாத்தான தூக்கிட்டு வந்திருக்க…!!”

“ஆமாண்டா.. பையன் ஓவர் ஸ்மார்ட் போல… இரண்டு தட்டு தட்டி வைக்கணும்னு நினைக்கிறேன்…”

“Uncle… இங்கதான் என்ன அடச்சு வைக்கப் போறீங்களா…??? இது உங்க ஃப்ரண்டா..???”

‘ I don’t care…what they are going to say..Cold never bothered me anymore..’

என்று பாடிக் கொண்டே பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான் உன்னி…

ஈரம் சொட்டிக்கொண்டிருந்த அவனுடைய சுருட்டை முடியும்…. குழந்தை போன்ற அவனது முகமும்…அவனுடைய இனிய குரலும்… பார்த்ததுமே மித்ரனுக்கு அவனை ரொம்பவே பிடித்துவிட்டது…

“ஹை..அண்ணா… எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு…

Let it go… !!! என்னோட favourite….”

“என்னது அண்ணாவா… நாங்க மட்டும் அங்கிளா…??”

“உங்கள கூட அண்ணான்னு கூப்பிடணும்னுதான் ஆசை..கூப்பிடவா…???”

“Who is this sweet heart. …??ஓ… இவன்தான் நம்மளோட ஜாக்பாட் இல்ல…”

உன்னி மித்ரனைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் குடுத்தான்..

“உன்னி….Be serious…!! இன்னும் நம்ப முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசவேயில்லையே…!!”

“டேய்…உம்பேரு.. மித்ரன்…அப்பா பேரு முகில்… அம்மா காஞ்சனா….சரியா…”

“ரொம்ப சரி….!!!”

“உன்னப்பத்தின எல்லா விவரமும் எங்களுக்கு தெரியும் .இப்போ நான் சொன்னத மட்டும் செய்…
நான் இந்த போனை உங்கிட்ட கொடுத்ததும் வாங்கி….

‘அப்பா…அம்மா.. . என்னப் பத்தி கவலைப்படாதீங்க… நான் நல்லாயிருக்கேன்…’

இத மட்டும் சொல்லிட்டு போன என் கையில குடுக்கணும்..மேல ஏதாவது பேசின அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது….”

“சரி அண்ணா….”

மித்ரன் ஒரு வார்த்தை கூடப் பிசகாமல் கிஷோர் சொன்னதை அப்படியே சொன்னான்.. ஆனால் கூட ஒரு வார்த்தையும் சொல்லி விட்டான்..

‘ ப்ளீஸ்…..தாத்தாவ மட்டும் திட்டாதீங்க..’”

கிஷோர் அவனை ஆச்சரியமாக பார்த்துவிட்டு போனை பிடுங்கிக் கொண்டான்.

“உங்க மித்ரன் நல்லா தான் இருக்கான்.கொஞ்சம்கூட கவலைப்படாம போய்த் தூங்குங்க…

காலைல கூப்பிடுவேன்.

போலீஸ்..கீலீஸ்னு போனீங்க…வேற மாதிரி ஆயிடும்…”

டக்கேன்று போனை கட் செய்தான்..

“தாங்ஸ் அண்ணா…”

“எதுக்கு…???”

“தாத்தவ இனிமே யாரும் திட்டமாட்டாங்க…!!”

“அண்ணா…எனக்கு பசிக்குதே…. உங்களுக்கெல்லாம் பசிக்கலயா…??”

அப்போதுதான் அவர்களுக்கே ஞாபகம் வந்தது.

“ஏய்..சிவா.. நம்ப பீட்ஸா வாங்கி வச்சிருக்கோமே.. எடுத்துக் குடு…சாப்பிட்டு தூங்கட்டும்.. நமக்கு நிறைய பேச வேண்டியது இருக்கு…”

சிவா ஃபிரிட்ஜைத் திறந்து பீட்ஸாவை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு போனான் . மைக்ரோவேவில் சூடு பண்ணி டேபிளில் வைத்தான்..

“எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ…”

“இல்ல அண்ணா..நாம எல்லோருமே சேந்து சாப்பிடலாம்.. எங்க வீட்டில நாங்க எல்லோரும் சேந்துதான் டின்னர் சாப்பிடுவோம்..ஜாலியா இருக்கும்…”

மித்ரன் கிச்சனுக்குள் நுழைந்து நாலு தட்டுக்களை எடுத்து டேபிளில் வைத்தான்.நாலு கிளாஸ் தண்ணியும் வைத்தான்.

“வாங்க சாப்பிடலாம்….”

சிவாவும் உன்னியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்…..

“நீங்கள்லாம் என்ன பண்றீங்க அண்ணா…??”

பதில் சொல்லவே மூன்று பேருக்கும் தயக்கமாய் இருந்தது…

“ம்ம்ம்…. நாங்கெல்லாம் மருத்துவம் படிக்கிறோம்… இரண்டாம் வருடம்..”

“வாவ்…எனக்கும் டாக்டராகணும்னு ரொம்ப ஆசை..ஆனா அப்பா கண்டிப்பா சொல்லிட்டாரு…

மெடிக்கல் புரோபஷன் ரொம்ப புனிதமானது… நல்லா படிச்சு உன் சொந்த முயற்சியில சேர்ந்தாதான் அதுக்கு மதிப்புன்னு….சரிதானே அண்ணா…??

கிஷோருக்கு முதல் முறையாகத் தன்னைப் பார்க்கவே அவமானமாயிருந்தது..சாப்பிடாமலே எழுந்து விட்டான்..

சாப்பிட்டு முடித்ததும் தன் தட்டை எடுத்து கழுவி வைத்து விட்டு வந்தான்.. மித்ரன்….!!!

“இதேல்லாம் உங்க வீட்லேயும் செய்வியா..???”

“ஆமாண்ணா… அம்மா ரொம்ப கண்டிப்பு…காலைல எவ்வளவு அவசரமானாலும் என் படுக்கையை நான்தான் சரியா போடணும்..

சனி, ஞாயிறுல அம்மாக்கு … தாத்தா பாட்டிக்கு நிறைய உதவி பண்ணனும்… இல்லைனா கார்ட்டூன் டைம் கட்…! !!

‘ Nothing comes free ன்னு அம்மா சொல்லுவாங்க….”

பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது….

மூன்று பேரும் ஒரு சின்னப் பையன் முன்னால் குற்றவாளியைப்போல் நின்றார்கள்….

“சிவா…இவன முதல்ல பெட்ரூமுக்கு அனுப்பி தூங்கச் சொல்லு…நம்ப மனச மாத்திடுவான்போலிருக்கு…

“மித்ரன்… ரொம்ப லேட்டாச்சு.. போய்ப் படு..”

“ஆக்சுவலா…. எனக்கு கதை புத்தகம் படிச்சா தான் தூக்கம் வரும்..இல்லைனா கத கேட்டாலும் சரி..”

“சிவா.. நீதான் ஏதாவது சொல்லி தூங்க வை…. அவன் பேசறதே எனக்கு பாதி புரியல….”

சிவா அவனைக் கூட்டிக் கொண்டு படுக்கையறையில் நுழைந்தான்..

“என்ன மாதிரி கதை வேணும்..???”

“எல்லாம் பிடிக்கும் அண்ணா.. தாத்தா நிறைய கிளாசிக்ஸ் படிப்பாரு..

Tale of two cities… David Copperfield..
Oliver Twist..கதையெல்லாம் சொல்லிக் குடுப்பாரு…

பாட்டி சொல்லுவாங்க…”நம்ம நாட்லதான் சுதந்திரம் அஹிம்சை முறைல கிடச்சுது..மத்த நாட்ல எல்லாம் வீட்டுக்கு யாராவது ஒருத்தர் சுதந்திரத்துக்காக உயிர குடுத்திருப்பாங்க..

அதுனாலதான் அவுங்கள்ளேல்லாம் வீட்ட விட நாட்டுமேல நிறைய அக்கறை காட்றாங்க..நாமதான் நம்ப வீடு மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறோம்..”

அப்பா ரொம்ப ஜாலி… நிறைய காமிக்ஸ் கதைங்க படிச்சு காட்டுவாங்க.. அம்மா கதை சொன்னா ஒரு வாரம் போதாது..!!!!

ஆமா அண்ணா….. உங்க அப்பா… அம்மா.. எங்க.??”

சிவாவுக்கு அவனிடம் என்னவோ ஒரு பந்தம்.. புதிதாய் கிடைத்த சொந்தம் போல்…..

தன்னைப் பற்றிய எல்லா உண்மையையும் சொல்ல ஆரம்பித்தான்…

“அண்ணா…இந்த வீடு யாருது..??”
“கிஷோர்….”
“கார்…??”
“அதுவும் அவனோட அப்பா குடுத்தது…”
“பின்ன அவுங்க அப்பாகிட்ட பணம் கேட்டா குடுப்பாரே….!!”

சிவாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை….

“ஏன் அண்ணா… உங்க அப்பா..அம்மா.. கிட்ட கேட்டீங்களா….???

சிவா அவனை அப்படியே கட்டிபிடித்து கொண்டான்..

மடைதிறந்த வெள்ளமாய் அவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட காரணம் முதல் அத்தனை விவரங்களையும் சொல்லத் தொடங்கினான்…

கதை கேட்டுக் கொண்டே சிவாவைக் கட்டிக் கொண்டு தூங்கி விட்டான் மித்ரன்..

கள்ளம் கபடமில்லாமல் தூங்கும் அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா…

“என்ன.. இவ்வளவு நேரமா….??தூங்கினானா…??”

“ஆமாண்டா….He is a child wonder…!!”

“என்ன… உம் மனசயும் மாத்திட்டானா…??? நாம பேச வேண்டியது நிறைய இருக்கு… உன்னியையும் கூப்பிடு…..”

“கிஷோர்… நானும் உங்கிட்ட சொல்ல வேண்டியது நிறைய இருக்கு….

ஒரு ‘ Johnnie Walker’ பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தான் உன்னி…. மூன்று கிளாஸையும் கொண்டு வந்து வைத்தான்… பொன்னிற திரவம் மின்னியது..

கிஷோரும் உன்னியும் ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொண்டு சிவாவுக்காக காத்திருந்தார்கள்…

“டேய்..சிவா.. எந்த உலகத்தில் இருக்க..வா..வா..ச்சியரப்… டைம் இல்லடா…???”

“கிஷோர்… சாரிடா.. எனக்கு இன்னிக்கு வேண்டாம்…”

“இன்னிக்கு மட்டுமா…??என்னிக்குமேயா…??”

“அடப்பாவி..ஒரே ராத்திரில உன்னையும் புத்தனாக்கிட்டானா அந்த குட்டிப் பிசாசு…???”

“கிஷோர்..உன்னி.. எனக்கு பதிலாக நீங்க இருந்திருந்தாலும் இதையேதான் சொல்லியிருப்பீங்க….!!!

நமபளப் பத்தின எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன்..

நாம கொள்ளையடிக்க வேண்டியது பணமில்லடா… பாசம்…அது அவுங்க வீட்ல கொட்டிக் கிடக்கு… அதுதான் நம்மளுக்கு கிடைக்கல…!!!!”

“ஏய்..சிவா..தெளிவா சொல்லுடா….”

அன்று இரவு முழுவதும் நிறைய பேசினார்கள்…

காலையில் சிரித்த முகத்துடன் எல்லோருக்கும் குட்மார்னிங் சொன்னான் மித்ரன்.

“அண்ணா.. நான் ஒண்ணு சொல்லவா…??அப்பாவ மிரட்டி பணம் கேக்க வேண்டாம்…

நாம நாலு பேரும் எங்க வீட்டுக்கு போலாம்.. பணம் இருந்தால் அப்பா கண்டிப்பா தருவாரு..

இல்லாட்டியும் நிச்சயம் ஏதாவது ஒரு வழி சொல்லுவாரு…போலாமா அண்ணா..??”

மூன்று பேரும் அவனைக் கட்டிக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டார்கள்.

அண்ணா…இப்பவே கிளம்பலாம்…”

“இந்தா..மித்து.. போன்..உங்கப்பா கிட்ட பேசு…என்ன வேணாலும் பேசிக்கோ…”

“அப்பா.. நான் மித்து….. தாத்தா நல்லா இருக்காரா… இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்பேன்.. எனக்கு மூணு அண்ணா கிடச்சிருக்காங்க….

அம்மாவ அழாம இருக்கச் சொல்லுங்க.. அப்பா நான் இங்க மிகவும் மகிழ்ச்சியா இருக்கேன்”

அந்த சிவப்பு Ford Mustang மித்ரனின் வீட்டை நோக்கி பறந்தது…

‘ Let it go, let it go
Can’t hold it back anymore
Let it go, let it go
Turn away and slam the door
I don’t care what they’re going to say’….’

உன்னி அண்ணா.. நீங்களும் பாடுங்க…!

மூன்று பேரும் பணத்தை அள்ளிக்கொண்டு வரப் போவதில்லை…

அன்பை.. பாசத்தை அள்ளிக்கொண்டு வரப் போகிறார்கள்… இதுவும் ஒரு கடத்தல் தான்…….!!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *