இதுவும்தான் குடும்பம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 3,210 
 

பரிமளம் இத்துடன் ஏழெட்டுத் தடவை சமயலுள்ளுக்கும் கூடத்துக்குமாக நடந்து விட்டாள். ஒவ்வொரு தடவையும் கண்கள், கூடத்துச் சுவரில் விழுந்த வெய்யிலின் அளவைப் பார்த்து மணியைக் கணக்கிட, அவளுக்கு அவளையும் அறியாமல் மனதுக்குள் ஒரு பதை பதைப்பு.

அவள் தவித்துப் பறந்து என்ன செய்ய முடியும்? மணியோ எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. இனி அவர் வந்து குளிக்காமலே சாப்பிட்டுவிட்டுப் போனாலுங் கூட வண்டி கிடைப்பது சந்தேகம்தான். லீவு போட்டுவிட்டாரோ ஒரு வேளை?’… சிந்தனையில் வந்த ஒரு பெருமூச்சுடன் அடுப்பைக் கவனிக்கப் போனாள்.

“அந்தப் பிள்ளையிடமும் முடிந்தவரை சொல்லிப் பார்த்தாச்சு, சொன்னால் கேட்டால்தானே? அப்பாவுக் கேத்த பிள்ளைதான்!…”

“ராமசாமியைக் கண்டுட்டால், சோறு தண்ணி கூட வேண்டாம். அப்படி என்னதான் பேச்சு வச்சிருக்குமோ? சதா பேச்சு… பேச்சு… பேச்சு…” அவள் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

சாரங்கனின் காதுகளில் அம்மாவின் புலம்பல் விழாமலில்லை. தானாகச் சிரித்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும் அப்பாவின் குணம். போய்க் கூப்பிட்டால் கூட, ‘சரி வரேன் போ…!’ என்பாரே தவிர லேசில் வந்து விட மாட்டார்.

ராமசாமியோ தவித்துக் கொண்டிருந்தான். சாரங்கனோ அவனை விடும் வழியாக இல்லை.

வீட்டுக்குக் கிளம்ப நினைத்த ராமுவையும் அடக்கி உட்கார்த்தி விட்டான் சாரங்கன். அதை மீறும் துணிவு அவனுக்குக் கிடையாது. மனசு மட்டும் பதறிக் கொண்டுதான் இருந்தது.

“டேய்! உங்கப்பா வந்தா வைவாடா!” என்றான்.

“எங்க அப்பா அப்படித்தாண்டா சொல்வாரு. நீ சும்மாயிரு.” சாரங்கன் விடும் வழியாய் இல்லை. ‘ ஏன்தான் இந்த அம்மா இப்படியோ? அவருக்குத் தெரியாதா ஆபீஸ் உண்டு என்று…’ மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

நாமாவது போய் அவரைக் கூப்பிட்டு வரலாமா என்று நினைத்தான் ராமசாமி. நினைப்போடு சரி. அவர் பேசிக் கொண்டிருக்குமிடம் அவன் போகக் கூடியதாக இல்லை. ஆம்! அது அவனது சித்தப்பாவின் வீடு. அவர்களுக்குள் அவ்வளவாக ‘ராப்தா’ கிடையாது.

தெருவில் ஆபீஸ் டிரெயினுக்குச் செல்பவர் நடமாட்டம் தென்பட ஆரம்பித்துவிட்டது. ராமு வந்தும் முக்கால் மணி ஆகிவிட்டது. அவனும் கிளம்ப வேண்டும்.

அறையில் நிழலாடிற்று. இருவரும் ஜன்னல் வழியே பார்த்தார்கள்.

பரிமளம்தான் திண்ணையோரமாக வந்து நின்று தெருவின் இரு புறமும் பார்த்தாள். பாவமாக இருந்தது ராமுவுக்கு. சாரங்கனுக்கோ அம்மாவின் கோபம் ஒரு வேடிக்கை! உள்ளே ஏதோ அடுப்பில் தீய்ந்து போயிருக்க வேண்டும்… காற்றில் மிதந்து வந்தது வாடை. அவசரமாக உள்ளே ஓடினாள் அவள். போகிற போக்கில் இவர்களையும் ஒரு பார்வை. ராமு நடுங்கிப் போய்விட்டான். ஏண்டா வந்தோம் என்றிருந்தது.

திடீரென்று ஏதோ ஒரு எண்ணம் உதித்தவனைப் போல் கைளை உதறினான். “அடாடா!… மறந்தே போயிட்டேண்டா..!” பாய்ந்து போய்க் கதவைத் திறக்கவும்… சாரங்கனின் அப்பா விசுவம் உள்ளே நுழையவும், கணம் நடுங்கியே விட்டான்.

முதல் வண்டியிலேயே அவர் போக வேண்டிய வேலை இருந்தது. பேச்சு சுவாரசியத்தில் முதல் வண்டியை விட்டாயிற்று.

ஆத்திரம் பூராவும் சாரங்கன் மேல் பாய, கூட ராமுவுக்கும் சேர்த்துத் தயவு தாட்சணியமில்லாமல் கிடைத்தது.

பரிமளம் பதறினாள். ஆனால், பேசவில்லை. வெந்நீரைப் பதமாக விளாவி வைத்து விட்டு, அவருக்காக நின்றாள். பத்து மணி வண்டிக்காவது அனுப்பியாக வேண்டுமே!

மேலே ராமசாமி… வாசலில் அவனது சித்தப்பா…கூடத்தில் சாரங்கனின் அப்பா… !

அவன் தவிப்பு அதிகமானது.

“நாம் நம்ம இடத்துல இருக்கணும். நம்ப நிலைமையும் இவங்க அந்தஸ்தும் எப்படி ஒத்து வரும்? இனி இங்கே வரவே கூடாது…” இளம் உள்ளத்திற்கு அவசியமில்லாத சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு வேதனையில் வெந்து கொண்டிருந்தான் அவன்.

சாரங்கனுக்குச் சரியான சூடு. அப்பா சமநிலைக்கு வந்தார். “போ… ! போய்த் தொலை… கண் முன்னாலேயே நிக்காதே…”

ராமுவின் சித்தப்பாவை வேகமாகப் போகும் விசுவம் பார்த்தாரோ என்னமோ?

“நாசமாப் போனவன்!” அவர் வாய் முனகிற்று. அன்றைய அவருடைய பதைப்புக்கெல்லாம் அவர்தானே ஆதி? அந்த வெறுப்போ என்னவோ! நாலு சொம்பு அவசரமாக மொண்டு ஊற்றிக்கொண்டு வந்தார். ராமசாமியைத் திட்டியதெல்லாம் கூட துரையின் காதில் விழுந்திருக்க, சாரங்கன் மெதுவாக மாடிக்குப் போனான். கீழே வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது.

‘ஏன் இன்னிக்கு அவன்களுக்கு என்ன? துரைவாள் காலேஜுக்குப் போகலியா?” குளித்துவிட்டு வந்த விசுவத்தின் குரல் சாரங்கனுக்குக் கேட்டது.

“இன்னிக்கு ஏதோ ஃபவுண்டர்ஸ் டே யாம்… காலேஜ் கிடையாதாம். சாயந்தரமா ஏதோ விழா’ ன்னு சொன்னான்…” என்றாள் பரிமளம்.

“காலேஜ் இல்லைன்னா காலை வேளையிலே இப்படித்தான் அரட்டை யடிக்கணுமோ? சுத்த தத்தாரிக் கழுதை!” அவர் கண்கள் ஜன்னல் வழியே வாசலை நோக்கின. ‘துரை போய்விட்டான் போலும்!’ காலித் திண்ணைதான் தெரிந்தது.

சாப்பிடும்போது இரண்டு மூன்று தடவை அவரைப் பரிமளம் பார்த்தாள். சமீபத்தில் கண்டிராத விசுவரூபம் அவளை நோக வைத்திருக்க வேண்டும்.

‘எக்கச்சக்கமாக செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டு ஒருநாளுமில்லாமல் இப்படி ராட்சச அவதாரம் எடுப்பதென்றால்…?’

அவசர அவசரமாகச் சப்பிட்டு முடித்த விசுவத்துக்கு வீடே மறந்துவிட்டது. உள்ளம் பூராவும் ஆபீஸ் நினைவுதான். “போயிட்டு வரேன்!” என்று பறந்துவிட்டார்.

பரிமளத்துக்கும் வேலை நெக்கு வாங்கியது. அம்பாரம் துணிகளை ஒரு வழியாகச் சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்தி முடிப்பதற்குள் போதும்போதுமென்று ஆகி விட்டது.

“டேய் சாரங்கா… சாரங்கா…!” அவனைத் மேடியபடியே வர, அங்கே மேஜையில் குப்புறப் படுத்துத் தலை வைத்தபடி உட்கார்ந்திருந்தான் அவன்.

“எவ்வளவு நேரமாச்சு தெரியுமா? வா… வந்து குளி… ஊம்… சீக்கிரம்…”

“சாப்பாடும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்.!”

“உக்கும்… ஒரு நாள் அதட்டினா இவ்வளவு ரோசமாக்கும்! சரிதான் வா! பெரிய ரோசக்காரன்தான்.”

“எனக்குப் பசி இல்லை. நீ போய் சாப்பிடு!”

“எக்கேடு கெட்டும் போ!”

“அதுக்கு என்னை வையட்டுமே! அவனை ஏன் திட்டணும்? ராமு மாதிரி ஒருத்தன் இந்த ஊரிலே கிடைப்பானா? எப்பேர்ப் பட்டவன் தெரியுமா? ஏழைனுட்டா எதுவானாலும் பேசிடலாமா..?”

“கிடக்கட்டும் போடா! சாயந்தரமா அப்பா வந்ததும் உன் கிட்டே ‘அபாலஜி’ வாங்கச் சொல்றேன். இப்ப குளிச்சிட்டு வந்து சாப்பிடு. வீணா படுத்தாதே.

“எனக்குச் சாதமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.”

சொல்லச் சொல்ல வீம்புதான் அதிகமாகும். ஆகவே அவன் அருகில் சாதத்தோடு வந்துவிட்டாள் அவள்.

மணி நாலு…!

காபியுடன் மேலே போனாள். அடக் கடவுளே. இன்னுமா அதைக் குடிக்கவில்லை? அதிர்ந்து போனாள் அவள்.

மகனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஏதேதோ பழசெல்லாம் ஞாபகம் வந்தது. கலியாணமான புதிதில் விசுவம் ஒரு நாள் இப்படித்தான்…… யார் மேலேயோ கோபித்துக் கொண்டு……. !

அப்பாவுக்கு ஏத்த பிள்ளைதான்! முகத்தில் ஒரு புன்முறுவல். அதில் அவளுக்குப் பெருமைதான்…

அவள் தோற்றுவிட்டாள். அவனை அப்படியே பரிவாய் அணைத்துக் கண்களைத் துடைத்து நல்லத் தனமாகச் சொல்லிக் காபியைச் சாப்பிடச் செய்துவிட்டாள். அவர் வந்ததும், இரவு அவரிடம் கட்டாயம் சொல்வதாக வாக்களித்தாள்.

இரவு – மணி பத்து.

பரிமளம் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சமையல் உள் விளக்கை அணைத்துவிட்டுக் கூடத்துப் பக்கம் வந்தாள். அவள் கையில் பால் டம்ளர்!

அறையில் ‘அவர்’ ஏதோ ஆபீஸ் காகிதங்களுடன் மன்றாடுவதைக் கண்டு சத்தம் சத்தம் செய்யாமல், டம்ளரை மட்டும் ஒரு பக்கமாய் வைத்து விட்டு “பாலைக் குடிச்சுட்டுப் பாருங்களேன்… சூடு ஆறிப்போகும்…” அவரருகில் வந்து நின்று லேசாகக் குரல் கொடுத்தாள். “ஊ…ம்ம்…” சற்றே திரும்பிப் பார்த்த அவர் மறுபடியும் காகிதங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். அண்ணாந்து கண்களை மூடித் திறந்து தீவரமாய் யோசித்தவராய்ச் சில வினாடிகள் இருந்துவிட்டு, அவசர அவசரமாய் ஏதோ குறிப்புகளை எழுதி ஃபைல் கட்டை மட்டென்று மூடிக் கட்டினார்.

இனி அவ்வளவுதான்! வேலை ஓடவில்லை. பாலை எடுத்துக் குடித்தார். ஒரு வாய்தான். மீதியை அவளிடம் தர, “நீங்க குடிங்க!” என்றாள் அவள். வழக்கமான சொல்தான் அது.

“ச்சூ! ரொம்ப பிகு பண்றியே…” பால் டம்ளருடன் அவரே எழுந்திருந்து…

அவள் படுக்கையைத் தட்டி ஒழுங்காய் விரித்தபடியே, “ஒண்ணு சொல்லுவேன். கோபிக்க மாட்டீங்களே!” தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“என்னது? பீடிகை பலமாயிருக்கு…”

“காலம்பற போறப்ப நீங்க அந்தப் பிள்ளையை அப்படிச் பேசினேளாம்… இவன் என்னடான்னா பகல் பூரா சாப்பிடாம…… கண்ணைக் கசக்கிண்டே இருக்கான்… !”

“எதைச் சொல்றே நீ?”

“ஆமா… ரொம்பத் தெரியாத மாதிரி!”

உதட்டைப் பிதுக்கினார் அவர்.

“ஜாலக்கைப் பாரு…”

“ஓஹோஹோ… !”

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?

“க்கும்! சிரிக்க மாட்டேளோ? குழந்தைகள் மனசு தெரிஞ்சு வளர்க்கணும். சும்மா திட்டினாப் போதுமா?”

“ஏன், நீயும் அதை நம்பிட்டியா? என்ன நடந்ததுன்னு தெரியாம இப்படி அவசரப்படறயே! ஊம்…”அவள் அவரது மார்பின்மீது சாய்ந்திருக்க கைகள் அவள் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

“அப்படியானால் அது நிஜமில்லையா?”

“நான் மனசாரக் குழந்தைகளை வைவேனா? அதுவும் அந்த ராமசாமி மாதிரி குணமுள்ள குழந்தை ஏது? இத்த மட்டும் அவனும் இவனும் இணை பிரியாம இருக்காங்களேன்னு எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா…?”

“அதான் அப்படித் திட்டித் தீர்த்து – அவனோட சேராதேன்னு கண்டிச்சேளாக்கும்…?”

“அடப் பைத்தியமே…” கன்னத்தில் லேசாய்த் தட்டிவிட்டு – தொடர்ந்து சொன்னார் அவர்.

“காலம்பற நான் போனேனா? இவன் சித்தப்பன் – அதான் – தொரசாமி – பிடிச்சிண்டுட்டான். ராமுவைப் பத்தி இல்லாது பொல்லாதெல்லாம் சொல்லிப் போதும் போதும்னு பண்ணிட்டான். அவன் அண்ணன் தம்பிகளுக்குள்ளே ஆயிரம் விவகாரம்……. விட்டாப் போதும்னு வந்தேன். வந்தா வண்டியும் போயிட்டுது. இங்கே இவனும் அவனும் ஒக்காந்திருந்தானா? பின்னாடியே தொரசாமியும் வந்து திண்ணையிலே நின்னான். பார்த்தேன்… புடிச்சேன் ஒரு புடி… தொரை போயே போயிட்டான். அவன் சொன்னதையெல்லாம் நான் நம்பிட்டேன்னு அவனுக்குத் திருப்தி. இப்படிச் சில ஜன்மங்கள். ரெண்டு பேர் சேர்ந்து கலகலப்பா இருக்கறதைச் சகிக்க முடியாத பிறவிகள்…”

கேட்கக் கேட்க வியந்து போனாள் அவள். பகல் பூராவும் சாரங்கன் கேவிக் கேவி அழுது புலம்பியது அவள் கண்முன் கணம் வந்து போயிற்று…

“காலமே நீ அவன்கிட்டே சொல்லிடு… தொரசாமி எதிரிலே ரெண்டு பேரும் கூடிப் பேசாம கொஞ்சம் விலகினாப்பலயே இருக்கச் சொல்லு.” சாய்ந்த தலையணையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிப் படுக்கையில் படுத்தபடியே விசுவம் சொன்னார்.

பரிமளத்தின் மனம் கணவனின் போக்கையும், பெருந் தன்மையையும் நினைத்து மகிழ்ந்து நெகிழ்ந்து கொண்டிருந்தது. ‘சாரங்கனுக்கு நாளைக்குச் சொல்லுவோம்…’ என்று அவளும் படுத்தாள். ‘ராமசாமியையும் பிள்ளை சாரங்கன் ஆறுதல் படுத்த வேண்டும்’ என்று எண்ணித் தூங்கியும் போனாள்.

– தினமணி கதிர் 31-03-1967

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *