இதுதான் வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 661 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘எல்லாம் இங்கோர் சூதாட்டம் இரவும் பகலும் மாறாட்டம்….’

அன்று ஒரே புழுக்கமாக இருந்தது. பகல் முழுவதும் சகித்துக் கொண்டிருந்த ஆதவன் மேற்றிசையில் மறைய, எங்கேயாவது சிறிது நேரம் காற்றாடப் போக வேண்டும்போல் தோன்றியது. மனமும் அன்று நிகழ்ந்த சம்பவத்தால் எல்லையற்ற சோகக் கடலுள் ஆழ்ந்து தவித்தது. இப்படிப் பட்ட சமயங்களில் நான் தன்னந்தனியாக காத்தோங் கடற்கரைக்குச் சென்று, அங்குப் பல மணி நேரம் வரை எதிரே தெரியும் நீலக்கடலுள் மனத்தை லயிக்கவிட்டு, என் உள்ளப் புயலை ஆற்றிக் கொள்வது வழக்கம். நிர்மலமான நீல வானமும், எல்லையற்ற நீலக் கடலும் என் குழம்பிய மனதிற்கு சாந்தியை திரும்ப அளிக்கும்.

அன்றும் அவ்வாறே கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருந்தேன். மனம் திரும்பத் திரும்ப அந்தச் சம்பவத்தைப் பற்றியே சுற்றிச் சுற்றி ‘தட்டாமலை’ ஆடிக்கொண்டிருந்தது. கச்சான் விற்பவரிடம் கொஞ்சம் கடலை வாங்கி கொரிக்க ஆரம்பித்தேன்.

எனக்குச் சிறிது தொலைவில் அமர்ந்திருந்த அன்பர் ஒருவர், தமது நண்பருக்கு ஏதோவொரு புதிய பத்திரிக்கையிலுள்ள விஷயமொன்றை வாசித்துக் காண்பித்துக்கொண்டிருந்தார். சறுக்குப் பலகையிலிருந்து வழுக்கி விழுவதைப் போல் மனம் அதில் தாவிற்று. அவர் உரக்கப் படித்தார்.

“வாழ்க்கை ஒரு புதிர் என்று சொன்னவன் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும். அற்ப மானிட வாழ்க்கையில் எத்தனையோ அற்புதங்கள் நிகழுகின்றன. எத்தனையோ ஆசாபாசங்களும் நேருகின்றன. வல்லூழி காலம் வாழப் போகிறோமென்று என்னென்னவோ ஆகாயக் கோட்டைகள் கட்டுகிறோம். மறுநிமிடமே அவை மணல் வீடுகள் போல் இடிந்து, சரிந்து, விழுந்து, பின்னர் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போகின்றன. என்ன வருமோ, யாது நேருமோ என்று ஏங்கித் தவிக்கிறோம். எதிர்பாராத விதமாக ஏராளமான நன்மைகள் நம்மை நாடி வருகின்றன. இதை முன்னிட்டுத் தானோ என்னவோ, பாரசீகக் கவி உமர்கய்யாமும்,

‘எல்லாம் இங்கோர் சூதாட்டம்
இரவும் பகலும் மாறாட்டம்
வல்லான் விதியே ஆடுமகன்
வலியில் மனிதர் கருவிகளாம்.
சொல்லாதெங்கும் இழுத்திடுவான்
ஜோடி சேர்ப்பான் வெட்டிடுவான்
செல்லாதாக்கி ஒவ்வொன்றாய்த்
திரும்ப அறையில் இட்டிடுவான்’

என்று கூறினார் போலும்! நடுநிலையாக நன்கு சிந்தித்தால் இதுதான் இன்றைய நடைமுறை வாழ்க்கை என்பது புலனாகும். நம் மனோ விருப்பப்படி யாவும் நடைபெறுவதாக இருந்தால்?…. அதுவும் பயனில்லையென்று தான் சொல்ல வேண்டும். எளிதில் கிட்டும் பொருளை விடகஷ்டப்பட்டு அடையும் பொருள்களே உயர்ந்தனவாகத் தோன்றுகிற தல்லவா? திறந்த கையிலுள்ள பொருளை எடுப்பதை விட, மூடிய கையிலுள்ளதை முயற்சி செய்து எடுப்பதில்தான் உற்சாகமும், இன்பமும் இருக்கிறது. எனவே, தோல்வியைக் குறித்து நாம் சோர்ந்துவிடக்கூடாது. தோல்விகளே வெற்றியின் படிகள். நமது தவறுதல்களைத் திருத்திக் கொண்டு, முன்னேறுவதற்குத் தோல்விகளே சிறந்த சாதனம்.”

இவ்வாறு அவர் வாசித்தார். உண்மைதான். இவ்வாக்கியங்கள் ‘வாழ்க்கை’ என்னும் பெரும் போரில் அகப்பட்டுத் தெளிந்த அனுபவசாலி ஒருவரால் எழுதப்பட்டதே ஆகும்.

அந்நண்பர் திரும்பவும் தொடர்ந்து வாசிக்கலானார். இப்போது என் மனம் பூரணமாக அதில் லயிக்கத் தொடங்கிற்று. காதுகளைத் தீட்டிக் கொண்டு, கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

வாக்கியங்கள் வெண்கலக் குரலில் கணீரென்று காற்றுடன் கலந்து வந்தது.

இக்காலத்து நவீன நாகரிகக் காதல் போல்தான் மல்லிகா-மணவாளன் காதல் ஆரம்பமாயிற்று. அதாவது முதலில் எதிர்பாராத சந்திப்பு; பிறகு காதற் கடிதங்களின் பரிமாறல், பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரகசிய சந்திப்பு, இறுதியில் ஒருவரையொருவர் விட்டுப் பிரிவதில்லை யென்ற தீர்மானம்.

ஒரு நாள் மல்லிகா சொன்னாள்: “அன்பே! நம்முடைய காதல் என் தாய்க்கு எட்டிவிட்டது. அவள் அதை வரவேற்கவே செய்கிறாள். ஆனால், என் தந்தையோ?…. அவரைப் பற்றி நினைக்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது!”

“கண்மணி! இதற்காகவா இவ்வளவு கவலைப்படுகிறாய்? உன் தந்தை சில அர்த்தமற்ற மூடப் பழக்கவழக்கங்களில் ஊறிப் போனவரென்பது உண்மையே. அதற்காக தம் ஒரே மகளின் அருமந்த வாழ்க்கையைப் பாழ்படுத்த மாட்டார். நாளை, நானே என் தந்தையாரிடம் நமது ‘இரகசியத்தை’ வெளியிட்டு, உன்னை எனக்கு மணம் புரிவிக்க உன் தந்தையாரைக் கேட்கச் சொல்லுகிறேன்” என்றான் அவள் காதலன் மணவாளன்.

சமூகச் சீர்திருத்தத்தில் பற்றுதல் கொண்ட அவன் தந்தை சிற்றம்பலனாரும், மல்லிகாவின் தந்தை மணிவாசகரை அணுகி, ‘விஷயத்தை’ப் பக்குவமாக வெளியிட்டார்!

அதற்கு அந்தக் ‘கிழச் சிங்கம்’ அவரை விழுங்கிவிடுவது போல் உருட்டி விழித்து ‘கர்ஜித்து’, “ஓய்! உம்முடைய அந்தஸ்து என்ன? என்னுடைய அந்தஸ்து என்ன? வானத்தில் பறக்கும் புறாவுக்கும், குப்பையைக் கிளறும் சேவலுக்கும் எப்படி ஐயா பொருந்தும்? நமது முன்னோர் வகுத்த நெறி முறைகளை மாற்ற நீர் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்து வந்துவிட்டீர்? போமய்யா! போம். பெண் கொடுக்க முடியாது” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

“பெரியவரே! உம்முடைய மகள் இல்லாவிட்டால், என் மகனுக்குப் பார்க்க இப்பூவுலகத்தில் வேறு பெண் கிடைக்க மாட்டாள் என்று எண்ணிவிட்டீரோ? இன்னும் பத்து நாட்களுக்குள்ளே உம் கண்ணெதிரே அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறேனா இல்லையாவென்று பாரும். ஏதோ உம்மகளும், என் மகனும் ஒருவரையொருவர் உள்ளன்புடன் காதலிக்கிறார்களே, அவர்கள் வாழ்க்கை சுகப்பட்டு மேன்மையடை யட்டுமே என்று நினைத்து…” என்று அவர் தம் வார்த்தையை முடிப்பதற்குள், “ஓய்! ஓய்! அதிகப் பேச்சு வேண்டாம். பெண் கொடுக்க முடியாது என்றால், முடியாதுதான். இந்த மணிவாசகம் வார்த்தை மாறுபவனல்ல. போய், உம்முடைய காரியத்தைப் பாரும்” என்று தீர்மானமாகக் கூறிவிட்டார் மல்லிகாவின் தந்தை.

இந்த உரையாடலுக்குப் பிறகு, மல்லிகாவும், மணவாளனும் சந்திக்க முடியவில்லை. இருவர் இல்லங்களிலும் இந்த இளங் காதலர்களுக்குப் பலத்த காவல். மல்லிகா, நான் ரயிலில் அகப்பட்டோ, கடலில் விழுந்தோ உயிரை விட்டுவிடுவேன் என்று தன் தாயாரிடத்தில் ‘பூச்சாண்டி காட்டினாள். மணவாளன், ஊரை விட்டே போய்விடுவதாகப் பயமுறுத்தினான்.

இந்த மிரட்டல்கள் ஒன்றும் பலிக்கவில்லை. சிற்றம்பலனார் மல்லிகாவை விட அழகும், அந்தஸ்தும் கொண்ட சரோஜாவைத் தேர்ந்தெடுத்ததும், மணவாளன் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டான். கலியாணமும் அவர் குறிப்பிட்ட 10-வது நாளிலேயே நடந்து முடிந்தது!

அடுத்த மூன்றாவது மாதத்தில், மல்லிகாவின் அத்தை மகனும் தூர தேசத்திலிருந்து திரும்பி வந்தான். கலியாண சுந்தரம் என்ற அக்கட்டிளங் காளையைக் கண்டதும், மல்லிகாவும் மறுவார்த்தை பேசாது, மணம் புரிந்துகொண்டாள்!

இப்போது மணவாளன் ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், மல்லிகா நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருக்கிறார்கள். இதுதான் வாழ்க்கை!

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய நண்பர், “அடடே! இந்தக் கதையை எழுதியவர் என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்தல்லவா சிறிது மாற்றி எழுதியிருக்கிறார்? எனது 19-வது வயதில், நான் ஓர் பள்ளிக்கூட உபாத்தினியைக் காதலித்தேன். சாதி வித்தியாசம் காரணமாக அவளை நான் மணம்புரிய என் தந்தை மறுத்து விட்டார். அடியேன் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை. அவர் குறிப்பிட்ட பெண்ணையே மணந்து கொண்டேன்” என்றார்.

இப்போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அன்று நடந்த சம்பவத்தைத் தழுவியதாக இருந்தது அந்தக் கதை. உடனே அவர்கள் இருவரும் இருக்குமிடம் சென்று, “அன்பர்களே! உங்கள் உரையாடலில் அனுமதியின்றி பிரவேசிப்பதற்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன்’ என்றேன்.

அவர்கள் இருவரும் முதலில் என்னை வியப்புடன் நோக்கினார்களா யினும், அதை வாசித்தவர், “அதற்கென்ன? என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

“ஒன்று சற்று முன்பு வாசித்தீர்களே, அந்தக் கதை இன்று என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. நான் காதலித்த பெண்மணியையே மணமுடிப்பது; இன்றேல் பிரம்மசாரியாகவே இருப்பது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், அவளோ, வேறொருவரை மணக்கப் போவதாக இன்று இந்தத் திருமண அழைப்பிதழ் கிடைத்தது. இதைப் பாருங்கள்” என்று அன்று காலை எனக்குக் கிடைத்த எனது மாஜி காதலியின் திருமண அழைப்புத் தாளைக் காண்பித்தேன்.

கதை வாசித்தவர் அதை வாங்கி வாசித்துப் பார்த்துவிட்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

“நண்பர்களே! நான் சற்று முன்பு வாசித்த கதை நான் எழுதியதுதான். என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் அது. என் பெயர்தான் மணவாளன். அதைச் சுருக்கி எம். ஆனன் என்று இப்போது நான் வைத்துக்கொண்டதால், என் நண்பரும் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறி மேலும் சிரித்தார். ‘வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் நிறைந்ததுதான், ஆசாபாசம் நிறைந்ததுதான்’ என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *