இதுதான் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 220 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாண்… டாண்… என ஐந்து முறை மணியடித்து ஓய்ந்தது அங்கிருந்த ஒரு சுவர்க்கடிகாரம். மாலை மணி ஐந்து என்று அறிந்திருந்தும் ஏனோ அதை நிச்சயிக்கும் நோக்கில் சுவர்க்கடிகாரத்தை அண்ணார்ந்து பார்த்தேன். அது ஐந்து என்று காட்டியது. அதைப் பார்த்த மறுகணமே என் கண்கள் வாசலை எட்டிப் பார்க்கத் தவறவில்லை. ஆட்கள் வருவதும் போவதுமாக அந்த வாட்டை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் நான் எதிர்பார்த்த முகங்கள் அங்கில்லை.

வெண்புறாக்கள் போல் நர்ஸ்கள் தங்கள் பணிகளைச் செவ்வனேயாற்றினர். டாக்டர்கள் அங்கும் இங்கும் நடமாடித் தங்கள் கடமையில் கண்ணாய் இருந்தனர். இவற்றையெல்லாம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். நோயாளிகளைக் காண வந்தவர்களின் எண்ணிக்கை நேரமாக ஆக, அதிகரித்தது. வாயிலில் நிரம்பக் கூட்டம் பொங்கி வழிந்தது. எதிர்ப்படுக்கையிலுள்ள அலியைச் சுற்றி அவன் உறவினர் பலர் சூழ்ந்திருந்தனர். பக்கத்துப் படுக்கையிலிருந்த ஆரோக்கியசாமிக்கு ஆறுதல் கூற மனைவி, மக்கள், உடன்பிறப்புகள் எனப் பலரும் அவன் முன் நின்றனர். மொத்தத்தில் அந்த வார்டே தனிப்பொலிவுடன் காட்சி தந்தது.

மதியம் ஒன்றிலிருந்து இரண்டு வரையிலும், மாலை ஐந்து முதல் ஏழு வரையிலும் இப்படி அந்த வார்ட் கலகலப்புடன் காட்சி தருவது வாடிக்கையே. வார்ட் மட்டுமா நோயாளிகள் புதுத் தெம்புடன் உற்சாகமாகக் காணப்படுவர். தனிமையில் வாடும் அவர்கள் சிரித்து மகிழும் நேரம் அதுதானே! நொந்த உள்ளம் ஆறுதல் அடையும் நேரம் – தங்கள் உடல் வேதனையையும் உள்ள வேதனையையும் மறக்கும் நேரம் – இப்படி அந்த நேரத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு.

மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்குத்தான் அந்தப் பொன்னான நேரத்தின் இனிய தன்மை புரியும். இதை நான் நன்கு அறிந்திருந்தும் ஏனோ இன்று அந்த நேரத்தை வெறுத்தேன். இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாக எனக்கு இந்த நேரம் வேப்பங்காய் போல் கசந்தது. நோயாளிகளைக் காண வந்தோர் அவர்களுடன் சிரித்துச் சிரித்துப் பேசுவதைக் காணும்போது எனக்கு ஆத்திரம்

ஆத்திரமாக வந்தது. அவர்களையெல்லாம் வேண்டும் என்ற ஆவேசம் எழுந்தது.

என்னை நானே கட்டுப்படுத்தியவனாய் என் பார்வையை மறு பக்கம் செலுத்தினேன். அங்கே என் அன்பு மனைவி ஜானகி ஆரஞ்சுப் பழச்சாற்றைப் பிழிந்து கொண்டிருந்தாள். “உங்களைக் காண யார வராவிட்டாலும் நான் இருக்கிறேன்ங்க” என அவளுடைய வாடிய முகம் எனக்குச் சொல்லாமல் சொன்னது. அவளை ஏறெடுத்தும் பார்க்கச் சக்தியற்றவனாய்த் தலையைக் குனிந்தேன் என் அருகில் வந்தவள் பழச்சாற்றை என் உதட்டருகில் கொண்டு சென்று பார்வையால் பருகும்படி பணிந்தாள். ஏதும் கூறாமல் மெல்லப் பருகினேன்.

குடித்து முடித்த பின் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தேன். கூட்டம் குறைவதாகத் தெரியவில்லை. சுவர்க்கடிகாரத்தை நோக்கினேன். அது ஆறு என்று காட்டியது. எப்பொழுதும் குதிரை வேகத்தில் போகும் இந்த நேரம் இந்த ஒரு வாரமாக ஏனோ ஆமை வேகத்தில் செல்வது போன்றதோர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. கண்களின் விளிம்பில் கண்ணீர் மெல்லக் கசியத் தொடங்கியது. வாஞ்சையுடன் மனைவியைப் பார்த்தேன். என் எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் “மத்தவங்க என்னங்க நான் இல்லையா?” என ஆறுதல் மொழி கூறி என் தலைமுடியை வருடினாள்.

“ம் போன வாரம் என் படுக்கையைச் சுற்றி இருந்த கூட்டத்தை விரட்ட நர்ஸ்களுக்குப் போதும் போதும் என்றாகியது. ஆனால் இன்று யாருமற்ற அனாதையைப் போலப் படுக்கையில் துவண்டு கிடந்தேன். “அண்ணா உங்களுக்கு ஒன்றுமில்லை. நீங்கள் பழையபடி தேறிவிடுவீர்கள்” என்று என் கடைசித் தம்பி கூறியது இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது. “அண்ணா என் உயிரைக் கொடுத்தாவது உங்களைக் காப்பேன்” எனச் சூழுரைத்த மாதவன் எங்கே? “நாங்கள் இல்லையா? உங்களை அப்படியா விட்டுவிடுவோம்” எனத் தங்கை லீலாவும் அவள் கணவன் முரளியும் இருந்த இடம் உலகமடா இது? அன்பு. பாசம்,நேசம் எல்லாம் தெரியாமல் மறைந்துவிட்டனர். “சே! என்ன பொய்யான உறவு; எல்லாமே பணத்தக்குத்தான். இவர்கள் முகங்களில் எல்லாம் விழித்தால் நமக்கு மோட்சம் கிடைக்காது” என என் உள் மனம் கூறியது “சேச்சே! அப்படியெல்லாம் சொல்லாதே ராகவன். அன்பு, பாசம், நேசம் யாவும் பவித்ரமான உறவுகள் அவை சாகவில்லை. அவை இன்னும் உயிரோடு இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது” என அடித்துக் கூறிய அந்தக் குரல் அது..அது லிம்மின் குரல்.

லிம் என்றதும் என் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிவதுபோல் இருந்தது. “லிம்…லிம்…என் உயிர் நண்பா! நீ வாழ்க” என என் மனம் அவனை வாழ்த்தியது.மறுகணம் அந்த வாழ்த்து மொழி என் இதயத்தின் ஏதோ ஒரு மூலையைக் காயப்படுத்தியது. என் கண்கள் குளமாயின.கண்ணீர்த் துளிகள் தாரை தாரையாய்ப் பெருகி, அணை போட்டுத் தடுக்க முடியாத

வெள்ளமாகியது.அந்த வெள்ளத்தினூடே நான்கடந்து வந்த பாதையை என் மனத்திரையில் நோட்டமிட்டேன்.

என் பெற்றோரின் மறைவுக்குப் பின் என் இரு தம்பிமார்களான மாதவன். சந்துரு, தங்கை லீலா மூவரையும் காக்கும் பெரும் பொறுப்பு என்னுடையதாகியது.அவர்கள் வளர்ப்பதிலேயே என்னுடைய இளமை காலத்தை நான் செலவிட்டேன்.அவர்களுக்காக வாழ்வதே என்னுடைய இலட்சியமாக இருந்தது.அவர்கள் முன்னேற்றத்தில் நான் ஆர்வம் காட்டினேன்.வக்கீல், என்ஜீனியர் என வாழ்க்கையின் மேல்மட்டத்தில் அவர்களை உயர்த்த நான் முடிவு செய்தேன். ஆனால், அதற்கேற்ற சக்தியற்றவனாய் நான் பணபலம் இல்லாதவனாய் இருந்தேன். இருப்பினும் மனத்தைத் தளரவிடாமல் என் இலச்சியத்திற்காக பாடுபட்டேன். இவ்வேளையில்தான் அந்தச் சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது. அது ஒரு திருப்பத்தையே என் வாழ்க்கையில் ஏற்படுத்தியது.

சாதாரண தொழிற்சாலை ஊழியராக வேலை செய்த நான் அன்றும் என் பணியைத் தொடரத் தொழிற்சாலைக்குக் கிளம்பினேன். வழக்கமாகப் போகும் குறுக்குப் பாதையில் என் பயணத்தைத் தொடங்கினேன். அங்கே பாதை ஒரத்தில் ஒரு சீன இளைஞன் வலியால் முனகிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. ஏதோ விபத்துக்குள்ளாகிக் கைகால்கள் எல்லாம் இரத்தம் வழிய அடிபட்டு எழுந்து நடக்க முடியாமல் மல்லாந்து படுத்தபடி வலி பொறுக்க முடியாமல் முனகிப் கொண்டிருந்தான்.என்னைப் பார்த்ததும், “ப்ளீஸ் எல் மீ” எனப் பலவீனமான குரலில் கெஞ்சினான். அதற்கு மேல் அவனால் ஒரு வாரத்தைகூட பேச முடியவில்லை. அவனை அப்படியே விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை.

இறுதியில் ஒரு வழியாக அவளை மருத்துவமனையில் சேர்த்தேன். அந்த உதவியை அவன் கடைசி வரை மறக்கவில்லை. “மைடியர் பிரண்ட் நான் விபத்துக்குள்ளாகிக் கிடந்தபோது முதலில் ஒருவன் என்னைப் பார்த்தான். அவன் என்ன செய்தான் தெரியுமா? என் கையிலிருந்து கைக்கடிகாரத்தையும் கழுத்திலிருந்த தங்கக் சங்கிலியையும், சட்டைப் பையிலுள்ள பர்சையும் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான். ஆனால் நீ என் நிலைக்கு இரக்கப்பட்டு முன்பின் அறிமுகமில்லா எனக்கு உதவி செய்திருக்கிறாய். யூ ஆர் ரியலி கிரேட்” என என் கையை அழுத்திப் பிடித்து நன்றி சொன்ன லிம் இறுதிவரை அந்த அன்புப் பிடியை விட்டுவிடவில்லை.

தன் தந்தையிடம் கூறித் தனக்குக் காரியதரிசியாக என்னை அமர்த்திக் கொண்டான். கம்பெனியின் மானேஜிங் டைரக்டராக அவன் வெளிநாடு செல்லும் போதெல்லாம் என்னைக் கூட்டிக்கொண்டு செல்வான். அடிக்கடி என் வீட்டிற்கும், வருவான். என் ஏழ்மையை உணர்ந்து அதை மாற்ற முயன்றான் வீட்டு நிலைமையையும் தேவையையும் உணர்ந்து அவனாகவே அவ்வப்போது உதவி செய்தான். தம்பி, தங்கையின் படிப்புக்கும் வழிகாட்டினான். அவன் நட்பால் நான் மெல்ல மெல்ல உயர் மட்டத்தை அடைந்தேன். இவ்வாறு அவனுடைய அன்புப் பிடிக்குள் சிக்குண்டு தவித்தேன் நான்.

காலங்கள் ஓடின. என் இலட்சியங்கள் நிறைவேறின. நான் எதிர்பார்த்தபடியே சந்துரு வக்கீலானான். மாதவன் இஞ்சினியரானான். தங்கை லீலா பல்கலைக்கழகப் படிப்பை முடிந்தான். கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பு அதன்பின் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதைத் தாங்களாகவே தீர்மானித்தனர். ஆம்! லீலா தன்னோடு படித்த முரளியைக் காதலித்து மணம் புரிந்தாள். அவளைத் தொடர்ந்து சந்துரு வக்கீலுக்குப் பயிற்சி அளித்த தன் குருவின் மகளான ஸ்டெல்லாவை மணந்தான். மாதவனும் தனக்கேற்ற துணைவியைத் தேடிக் கொண்டான்..எல்லோரும் வாழ்க்கைத் தொழிலோடு தங்களுக்கேற்ற துணையோடு தங்கள் வாழ்க்கையை இனிதே அமைத்துக் கொண்டனர்.

நான் தனியானேன் இவ்வளவு நாளும் என் சம்பாத்தியத்தையும் இளமையையும் அவர்களுக்காகச் செலவழித்தேன். அவர்களைப் பற்றியே சிந்தித்க கொண்டிருந்த நான் இப்பொழுதான் என்னைப் பற்றியே யோசிக்கத் தொடங்கினேன். என் தனிமையிலுள்ள வெறுமையை உணர்ந்தேன். இருப்பினும் காலம் கடந்துவிட்டதால் என் இறுதிக் காலம் வரை இப்படியே தனிமையில் ஓட்டிவிடலாம் என்ற என் முடிவை லிம் மாற்றினான்.ஆம்! எனக்காக லிம் பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டான். அவனது இந்தச் செயல் எனக்கு வேடிக்கையாக இருந்த்து. ஏதோ விளையாட்டாக நான் நினைத்தது உண்மையில் வினையாக முடிந்தது. நாற்பது வயதைக் கடந்துவிட்ட எனக்குப் பெண் கொடுக்கவும் தயாராக இருந்த பெண் வீட்டாரின் தீவிரம் எனக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும் ஐந்து பெண்களைக் கரை சேர்க்க முடியாத நிலையிலிருந்த ஜானகி குடும்பத்தினருக்கு என்னுடைய தயவு சுமையைக் குறைக்கும் பெரும் துணையாக இருந்தது.

ஒவ்வொரு வீட்டிலும் மலிந்து கிடக்கும் பெண்களுக்கு என் போன்றவர்கள் வாழ்வு அளிப்பது பெரும் புண்ணியம் அல்லவா? அந்த வரிசையில் நான் இடம் பெற்றேன். இதுவரை திருமணத்தைப் பற்றிய நினைப்பே இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகச் சுற்றிய எனக்குக் கால்கட்டுப் போடப்பட்டது.ஜானகி

என் தர்மபத்தினியானாள். அவள் வருகைக்குப் பின் என் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதை நான் உணர்ந்தேன்.

வறுமையில் உழன்ற ஜானகி என் செல்வச் செழிப்பைக் கண்டு மயங்கிவிடவில்லை. எப்பொழுதும்போல் எளிய வாழ்க்கை வாழ்ந்தாள். இது எனக்குள் அவள்பால் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.. அவள் அன்பு அரவணைப்பில் நான் என்னை மறந்தேன்.எங்கள் வாழ்க்கை எவ்விதக் குறையும் இன்றி இனிதே நடைபெற்றது. காலம் யாருக்கும் காத்திராமல் மூன்று ஆண்டுகளாக விழுங்கியது.

தம்பிமார்கள் இருவரும் ஆளுக்கு மூன்று பிள்ளைகள் எனத் தங்கள் வம்ச விளக்கை விரிவுபடுத்தினர். லீலா மட்டும் ஒன்றே போதும் என நிறுத்திக் கொண்டாள். ஆனால் எங்களுக்கோ அந்தப் பாக்கியம் எட்டாத தூரத்தில் இருந்தது. வயதான என்னால் ஜானகியின் இளமை வீணாவதைக் கண்டு நான் வருந்தினேன். என் நொந்த உள்ளத்திற்கு ஆறுதலாக “நமக்கு ஆறு பிள்ளைகள் இருக்கும்போது உங்களுக்கு இந்தக் கவலை?” எனக் கூறிச் சிரிப்பாள். மாதவன், சந்துரு குழந்தைகளை மனத்தில் கொண்டே அவள் இதைக் கூறுவாள். அதற்கு ஏற்றாற்போல் அவர்களும் தங்களின் பிள்ளைகள் பற்றியே கவலை இல்லாமல் எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டுச் செல்வர். பிள்ளைகளும் பெரியப்பா, பெரியம்மா என வாய் நிறைய அழைத்து எங்களையே வலம் வந்தனர். எங்கள் குடும்பத்துள் ஒருவனாக லிம்மும் விளங்கினான்.

மகிழ்ச்சியான வாழ்க்கையில் திளைத்திருந்த எங்களுக்கு ஒரு பேரடி காத்திருந்ததை நான் உணரவில்லை. எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கும் நான் சில நாள்களாகக் சோர்வாகவே காணப்பட்டேன். அலைச்சலும் வேலையில் அதிக ஈடுபாடும் தான் இதற்குக் காரணம் என எண்ணி வாளா இருந்துவிட்டேன். இந்த அலட்சியம் என்னுள் விஸ்வரூபம் எடுக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டேன். சோர்வின் காரணமாகப் படுக்கையில் சாய்ந்தவன் சிறுநீரகக் கோளாறு என முத்திரை பதித்துப் படுத்த படுக்கையானேன்.

பல பரிசோதனைகளுக்குப் பிறகு என் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி கூறினர். இந்தச் செய்தி ஜானகியை மட்டுமல்ல எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். நவீன மருத்துவ வசதிகள் மூலம் என் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி மறுபடியும் செயல்படுத்த முயன்றனர். அது நிரந்திரமான சிகிச்சை அல்ல என்பதை உணராமல் எல்லோரும் என் உடல் நலம் தேறி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். அந்தச் சிகிச்சைக்குப் பிறகு நான் முன்போல் நடமாட தொடங்கினேன். பழைய தெம்பு என் உடலில் துளிர்விட்டது. என்னைக் காண வந்த என் உடன்பிறப்புக்கள் என் உற்சாகமான தோற்றத்தைக் கண்டு கவலையை மறந்து மறுபடியும் கலகலப்படைந்தார்.

“அண்ணா…” என்று அன்புடன் அழைத்துக் கொண்டு வந்து, படுக்கையில் அமர்ந்து என்னுடைய கை விரல்களைத் தன் கையோடு இணைத்து அழுத்திக் கொண்டு, நெற்றியைப் பரிவோடு வருடினான் மாதவன். அந்தப் பாசத்தின் சந்துரு என் காலடியில் அமர்ந்தாள்”அண்ணா உங்களை ஸ்பரிஸத்திலே சுகமாக விழி இமைகள் மூடித் திறந்தேன் நான். நல்ல உயிர்களைக் கடவுள் என்றைக்கும் கைவிட மாட்டார். ஆயிரம் பேரிலே ஒருவனை மட்டும்தான் காப்பாற்றினாலும் அந்த ஒருவராக உங்களைத்தான் தேர்ந்தெடுப்பார். எனக்குத் தெரியும்” என்ற குரல் தழுதழுக்கக் குமுறி அழுதான் சந்துரு.

லீலாவும் முரளியும் என் படுக்கைக்குப் பக்கவாட்டில் நின்று எனக்கு ஆறுதல் கூறினர். “அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. ஏதோ நம்முடைய போதாத காலம் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுவிட்டது. எப்படியும் ஆண்டவர் உங்களைக் லீலா கண்ணீர் விடாத குறையாகக் கூறினாள்.அருகில் காப்பாற்றிவிடுவார். கவலையை விட்டுத் தள்ளுங்கள்” என லீலா கண்ணீர் விடாத குறையாகக் கூறினாள். அருகில் நின்று கொண்டிருந்த ஜானகியைப் பார்த்தேன். அவளைச் சுற்றியும் என் தம்பிமார்களின் பிள்ளைகள் சூழ்ந்து கொண்டு பெரியப்பாவுக்கு என்ன?” என எனக்குச் சூழ்ந்திருக்கும் அறிந்து கொள்ளும் வயது அற்றவர்களாய் அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். பின் என்னைப் பார்த்து “பெரியப்பா நீங்க எப்போ வீட்டுக்கு வருவீங்க? நீங்க இல்லாம வீடே நல்லால” எனத் தன் மனத்தில் பட்டத்தை பட்டென்று சொன்னாள் மாதவனின் மகன் பார்த்திபன். என்னைச் சுற்றி இருந்த அனைவரும் எனக்கு ஆறுதலாக என் மனம் மகிழும்படியாக ஏதேதோ கூறினர். அது எதுவும் என் காதில் விழவில்லை.

ஆனால் அவர்களின் அன்பை, பாசத்தை என்னால் உணர முடிந்தது. “எனக்கு என்ன கவலை?” நிமிர்ந்து சுற்றிலும் பார்த்தேன். நாடு போற்றும் வக்கீல் சந்துரு, உயர்ந்தோங்கும் கட்டடங்களை எழுப்பும் என்ஜீனயர் மாதவன், பட்டப்படிப்பை முடித்த லீலா இவர்கள் யாவரும் என்னுடைய படைப்புக்கள் நான் உருவாக்கிய சாதனைகள்.

அவர்கள் எல்லோருமே தங்கள் வாழ்க்கையில் அடைந்துள்ள பட்டம், பதவி உயர்வு, முன்னேற்றம் ஒவ்வொன்றுக்கும் அண்ணன் தான் அஸ்திவாரம் என்பதை மறக்காமல் பாசத்தின் பிணைப்பிலே நெஞ்சுருகி நிற்கும் அன்புக் காட்சியைக் கண்டு என் மனம் உள்ளுக்குள் பெருமையால் பொங்கிப் பூரித்தது. “அண்ணா! நீங்கள் டிஸ்ஜார்ச் ஆகி வந்ததும் எங்கள் வீட்டில்தான் தங்க வேண்டும்” என்ற குரலுக்கு எதிராக, “இல்லை இல்லை அவர் என் வீட்டில் தான் இருக்க வேண்டும்” என உரிமை கொண்டாடியது இன்னொரு குரல். இப்படி அண்ணன் மீது அக்கறை கொண்டு அவர்கள்: ஒருவருக்கொருவர் மோதுவதைக் கண்டு என் உள்ளம் நிறைந்தது.

என் உடல்நிலையை உத்தேசித்து டாக்டர்கள் மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்த வேண்டும் என்று கூறியபோது என் மனைவி கலங்கியதைப் போல் நான் கலங்கவில்லை. என் உடன்பிறப்புக்களில் ஒருவர் நான் முந்தி நீ முந்தி எனச் சிறுநீரகங்களில் ஒன்றை எனக்காகத் தானம் கொடுக்க வருவர். என நான் நம்பினேன். உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் அவர்கள் இந்த உதவியைச் செய்யாமலா போகப் போகிறார்கள்? என நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.என் நம்பிக்கை சிறுகச் சிறுக தளர்வதுபோல் என் உடல்நிலையும் மெல்ல மெல்லச் சோர்வடைந்தது. நான் மீண்டும் படுத்த படுக்கையானேன். மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்தினால்தான் நான் பழைய நிலைமைய அடைய முடியும் என டாக்டர்கள் தீர்மானமாகக் கூறிவிட்டனர். பணத்தைத் தன்ணீர்போல் இறைத்துச் செலவு செய்ய என் உடன்பிறப்புக்கள் தயாராக இருந்தார்களே தவிர உடல், உறுப்பைத் தானம் கொடுக்க அவர்கள் மனம் துளிகூட இடந்தரவில்லை.

என்னைப் பார்க்க வந்தபோது அவர்கள் கூறிய ஆறுதல் மொழிகளும் தேறுதல் வார்த்தைகளும் கானல் நீர் போலக் கரைந்து உருத்தெரியாமல் மறைந்தன. என்னைப் பார்க்க வருவதை அவர்கள் படிப்படியாகக் குறைத்தனர். மருத்துவப் பரிசோதனையின் மூலம் தான் யாருடைய உடல் எனக்குப் பொருந்துகிறது. என்பதை நிச்சயமாக கூற முடியும் என மருத்துவர்கள் தீர்க்கமாகக் கூறிவிட்டனர். அந்தச் சோதனையை மேற்கொள்ளும் மனத்துணிவு என் உடன்பிறப்புக்களில் ஒருவரிடமும் இல்லை. சிறுநீரகத்தைப் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தவர்களே ஒழிய மனம் உவந்து தானமாகத் தர முன்வரவில்லை.

என்னைக் கட்டிக் கொண்ட பாவத்திற்காக ஜானகி அந்தச் சோதனையை மேற்கொள்ளச் சம்மதித்தாள். தன் மாங்கல்யத்தைக் கட்டிக் காப்பதில் அவளுக்கிருந்த ஆர்வமும் அக்கறையும் எனக்குப் புரிந்தது. எப்படியோ அவளுடைய மாங்கல்ய பலத்தால் போகவிருந்த உயிரைத் தடுத்து நிறுத்த முடியுமே என்று என்னுள் நம்பிக்கை விதை மீண்டும் அரும்பாக மலர்ந்தது. ஆனால் அந்த அரும்பு மலரும் முன்பே கிள்ளி எறியப்படும் என நான் துளி கூட நினைக்கவில்லை. அவளுடைய சிறுநீரகம் எனக்குப் பொருந்தக் கூடியதாக இல்லை என மருந்துவர்கள் என் தலையில் மேலும் ஒரு குண்டைப் போட்டனர்.

ஜானகி மருத்துவர்களிடம் மன்றாடினாள். தன் கணவனைக் காக்க சாவித்திரி எமனுடன் போராடிய கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அதை என் கண் எதிரே கண்டேன். பாவம்! டாக்டர்கள் என்ன செய்ய முடியும்? அவள் நிலைக்காக வருந்தினர். ஆறுதல் கூறினர்.இதைத் தவிர

வேறு எந்த உதவியும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் இருந்தனர் என் இன்பத்தில் பங்கு கொண்ட ஜானகி துன்பத்திலும் முழு மனத்துடன் பங்கு கொள்ளத் தயாராக இருந்தும், ஏனோ அதில் அவளை ஈடுபடுத்த அந்த ஆண்டவன் கூடத் தயாராக இல்லை.

தன்னால் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளான ஜானகி என் உடன்பிறப்புக்களிடம் எனக்காகக் கதறினாள். செய்வதறியாது தவித்தாள். என் உயிரைக் காக்க அவர்கள் காலில் விழவும் தயாரானாள். ஆனால் அவர்களோ தங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை இழந்து, பிற்காலத்தில் அது தங்கள் நல்வாழ்வுக்குப் பாதகமாக அமைந்துவிடுமோ என்று அஞ்சினர். டாக்டர்கள் பலவிதமான உறுதிமொழிகளைக் கூறியும் படித்த அந்தப் பட்டதாரிகள் நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி மறுத்துவிட்டனர்.

நன்றிகெட்ட இந்த நயவஞ்சகர்களிடம் இனியும் வாதாட வேண்டாம் என நான் ஜானகிக்குக் கட்டளை பிறப்பித்தேன். அயோக்கியர்களில் காலின் விழுவதைக் காட்டிலும் ஆண்டவனின் காலில் விழலாம் என்ற முடிவுக்கு ஜானகி வந்தாள். தெய்வத்தைத் தவிர வேறு யாரும் தன் கோரிக்கைக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் எனக் கருதித் தெய்வத்திடம் தஞ்சம் புகுந்தாள்.

அந்தத் தெய்வத்தின் கருணையாலோ முன் வினையில் நான் செய்த புண்ணியத்தாலோ அல்லது ஜானகியின் மாங்கல்ய பலத்தாலோ தெரியவில்லை. மின்னலென ஓர் அரும் பெருஞ்சோதி லிம்மின் உருவில் தோன்றியது. உயிர் காப்பான் தோழன் அல்லவா? எனக்காக லிம் தன் சிறுநீரகத்தில் ஒன்றைத் தானமாகத் தர முன் வந்தான். ஒருமுறை அவன் உயிரை காத்ததற்குப் பிரதிபலனாக எனக்காகத் தன் உறுப்பில் ஒன்றை இழக்க அவன் தயாரானான். அந்தத் துணிவு அந்த மனோபலம் அவனைத் தவிர வேறு யாருக்கு வரும்?” “ஒரு சிறுநீரகத்தைக் கொண்டு உயிர் வாழ முடியும் என டாக்டர்கள் உறுதியளித்திருக்கும்போது, எனக்கு என்னடா கவலை? இதனால் உன் உயிர் காக்கப்படுகிறதென்றால் இதைவிட எனக்கு வேறு என்னடா வேணும்?” என நெஞ்சுத் துணிவுடன் அவன் கூறிய வார்த்தைகள் என் கண்முன் தெய்வம் தோன்றுவது போல இருந்தது. ஆனால் மருத்துவப் பரிசோதனையின் மூலம் எனக்கு எதிராக ஏதும் சதி நடக்குமோ என என்னுள் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. நல்லவேளை! நான் பயந்ததுபோல் எதுவும் நடக்காமல் மருத்துவப் பரிசோதனை எனக்குச் சாதகமாகவே அமைந்தது. அதனால் லிம்மின் சிறுநீரகத்தில் ஒன்று எனக்குப் பொருந்தக்கூடிய அறுவை சிகிச்சைக்கு நாளும் குறிப்பிடப்பட்டது. ஜானகி முகத்தில் மீண்டும் களை உண்டாகியது. நானும் மன அமைதி அடைந்தேன்.

மூன்று நாள்கள் பொழுது இனிதே கழிந்தது. மறுநாள் எனக்கு வரவிருக்கும் சோதனையை எண்ணிப் பார்க்காதவனாய் அந்த மூன்றுநாட்களையும் மகிழ்ச்சியுடன் செலவிட்டேன். மூன்றாம் நாள் இரவு எனக்க ஓர் அதிர்ச்சியான செய்தி எட்டியது. வியாபார விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பிய லிம் பயணம் செய்த விமானம் மின்சாரக் கோளாறின் காரணமாக விபத்துக்குள்ளாகியது. விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை.

விபத்தில் கருகிய லிம்மின் சடலம் மருத்துவமனையை அடைய பல மணி நேரங்களாயின. அதனால் அவன் சிறுநீரகம் செயல் இழந்து பல மணி நேரமான பிறகு மருத்துவமனைக்கு வந்ததால் அதைப் பயன்படுத்த முடியாத இக்கட்டான நிலையை டாக்டர்கள் அடைந்தனர். இதை அவர்கள் வருத்தத்துடன் என்னிடம் கூறியபோது ,அன்பான நண்பனை இழந்த துக்கச் செய்தியைக் கேட்டு அழுவதா? அல்லது என் துரதிர்ஷ்டமான நிலையை எண்ணி வருந்துவதா என்ற எனக்கே தெரியவில்லை என் ஒரே ஆதாரமாய் – ஆதரவாய் இருந்த லிம்மும் என்னை ஏமாற்றிவிட்டான். தொடர்ந்தாற்போல் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவத்தால் நான் கண்ணீர்விட்டு அழக்கூடச் சக்தியற்றவனாகச் செயல் இழந்து நின்றேன்.

“அண்ணா? நீங்கள் மனம் தளர்ந்து நான் பார்த்ததில்லை. நான் இல்லையா? எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்ள மாட்டேன்?” என்ற குரல் கேட்டு என் சுயநினைவை அடைந்தேன். பக்கத்துப் படுக்கையில் இருந்த ஆரோக்கியசாமிக்கு ஆதரவாக அவன் தம்பி சொன்ன நம்பிக்கையான வார்த்தைகள்தான். அவை ஆரோக்கியசாமியும் என்னைப் போலச் சிறுநீரக நோயாளிதான். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அவனுடைய நிலைக்கு வருந்திக் கூறினான். இந்த மாதிரி எத்தனையோ பொய்யான ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு என் காதுகள் புளித்துவிட்டன. இனியும் அதைக் கேட்டு ஏமாற நான் தயாராக இல்லை.

ஆவேசம் வந்தவனைப்போல் காரசாரமாக ஏசி அவனை விரட்ட என்னுள் ஒருவிதமான வேகம் எழுந்தது. விர் என்று எழுந்தேன்.மறுவினாடி மேலும் எழச் சக்தியற்றவனாய் அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். என்னவோ ஏதோ என்று பதறி ஜானகி என் அருகில் வந்தாள். பக்கத்தில் படுக்கையைச் சைகை மூலம் சுட்டிக் காட்டினேன். அவளும் தன் பார்வையை அங்கே நோக்கினாள். அங்கிருந்து வந்த உணர்ச்சிகரமான உரையாடலைக் கேட்டு அவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.”இதுதான்டி உலகம்” என்று அவளிடம் சொல்ல வேண்டும்போல் இருந்தது எனக்கு!

அண்ணாவுக்காக வனவாசம் சென்ற பாண்டவர்களைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அண்ணனுக்காக அரசுரிமையைத் துறந்த இளங்கோவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணனுக்காக மனமுவந்து காட்டுக்குச் சென்ற இலட்சுமணனைப் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் எனக்காக இந்த அண்ணனுக்காக தன் உடல் உறுப்பில் ஒன்றைத் தானம் செய்யவும் என் உடன்பிறப்புக்களில் யாரும் முன் வரவில்லை. இதற்கு இணங்கிய நண்பனையும் நான் இழந்துவிட்டேன். இப்படி எதை எதையோ என் உள்ளம் எண்ணிக் கலங்கியது. கலங்கியபடியே மெல்லக் கண்ணயர்ந்தேன். அதுவே என் நிரந்தரமான தூக்கமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *