இதுகூடத் தெரியல

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,945 
 
 

எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி விரல் நுனியில் தொட்டுத் தொட்டு கப்பக் கிழங்கினைப் பகிர்ந்து தின்று கொண்டிருந்தான் ஜெயபால்.

“”ஏன்டா உங்கத்த மாமாவெல்லாம் எங்கடா இருக்காங்க. ஏன்டா இங்க ஒரு வருசத்துக்கு ஒருவாட்டிதான் வாறாங்க”

“”எங்கத்தை ரொம்ப தூரத்துல இருக்காங்க” என்று தன்னுடைய கழுத்தை வளைத்துத் தூரத்தின் அளவை அதிகப்படுத்திக் காட்டினான் ஜெயபால்.

“”இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவாங்களே. எனக்கு ரொட்டி, மிக்சரு, முந்திரிப்பழம் அப்புறம் என்னென்னமோ வாங்கிட்டு வருவாங்களே…” என்று எல்லாரின் கவனமும் திரும்பும்படி பேசிக் கொண்டிருந்தான்.

இதுகூடத் தெரியலஅந்தக் கிராமத்து சிறுவர்களும், தூரத்திலிருந்தால் அது மிகவும் உயர்ந்த பெரிய இடத்துக்காரர்கள் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஜெயபாலுக்கு அந்தச் சிறுவர் வட்டாரத்தில் ஒரு பெரிய மரியாதையான இடம் இருப்பதாய் நினைத்துக் கொண்டான்.

ரெங்கப்ப நாயக்கன்பட்டிக்கு ஒரு நாளைக்கு இருமுறை வரும் பஸ்ஸில், “இந்த பஸ் இல்லேன்னா அடுத்த பஸ்’ என்று ஒவ்வொரு நாளும் ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தான். நான்கு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. அத்தை வரவேயில்லை.

“”என்னடா ஒங்கத்த வரலியா?” என்று ஒரு சில பையன்கள் ஆர்வத்தோடு கேட்டாலும், சிலர், “”அவங்கத்தையா ம்… நம்ம கிட்ட பொய்யா சொல்லியிருக்கான்டா இவன்” என்றனர் அவன் சோட்டாளிகள். இப்படியாக யாரும் சேர்வதில்லை. விளையாடப் போவதில்லை. யாரும் வந்து விளையாடக் கூப்பிட்டால், “”என் காலில் முள்ளுத் தச்சுருச்சு” என்று எச்சில் தடவிப் பாதத்தை வெள்ளையாக்கிக் காட்டுவான். துருதுருவென்று இருக்கும் கையால் இரண்டு நாட்களுக்கும் மேலாக விளையாட வராமலிருந்தது சிறுவர் வட்டாரத்தில் கொஞ்சம் சந்தேகம் வந்தது.

நாலைந்து பேர் சேர்ந்து, “”டேய் ஜெயபாலு…” என்று மனதுக்குள் ஏதோ வைத்துக் கொண்டு கேட்பது அனைவரின் முகத்திலும் அசலாய்த் தெரிந்தது.

“”எனக்குத் தல வலிக்குது. அதுனால நானு வரல நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு யார் முகத்தையும் பார்க்காமல் போய்விட்டான்.

“”என்னடா முட்டக்கோழி மாதிரி உள்ளேயே இருக்கிற? எதுவும் மேலுக்கு முடியலியா?”

உடம்பைத் தொட்டுப் பார்த்து, “”என்னடா நல்லாத்தான இருக்கிறே அப்புறமென்ன உனக்கு நோக்காடு. போயி கன்னுக்குட்டிக்கு புல்லு கட்டிவிடு போ. போயி பார்த்துட்டு இந்தத் தண்ணிய வச்சிட்டு வா. எந்திரிச்சுப் போ”

பசங்க யாரும் இருக்கிறார்களா? என்று பார்த்துக் கொண்டே சீக்கிரமாய்த் தண்ணீரைக் கன்றுக்குட்டி முன்பு வைத்துவிட்டு வந்துவிட்டான்.

“”ஏம்மா…”

“”என்னா?” என்றாள் கடுகடுத்த குரலில் வேலை மும்முரமாக…

“”அப்பா வந்து … அத்தையக் கூப்புடத்தான போயிருக்காரு” என்று தயங்கித் தயங்கிச் சந்தேகமாய்க் கேட்டான்.

“”என்னடா பேசுற… ஒங்கப்பன் நேத்தே சந்தக்கிப் போயிருச்சு. ஆடு வேணுமின்னு கேட்டயில்ல. அதுதான் புடிக்கப் போயிருக்கு. புடிச்சிட்டு வந்ததுக்கப்புறம் மேய்க்கல அப்புறமிருக்கு மவனே…” தலையை ஆட்டிக் கொண்டு பேசினாள்.

அடுப்பை மெழுகிக் கொண்டு, “”ஒங்கத்தகாரி எப்ப வருதோ? யாருக்குத் தெரியும்? அவுக வர்றப்ப வரட்டும். நீ சீக்கு வந்த கோழி மாதிரி குறுகிக்கிட்ட கெடக்காத அங்கிட்டுப் போ”

எந்த வேலையாயிருந்தாலும் பஸ் வரும் நேரம் சப்தம் என்று அதில் தூண்டில்காரன் கண் மிதப்பில் இருப்பதுபோல் மிகவும் கவனமாய்த்தானிருப்பான். பஸ் வந்ததும் ஆவலோடு ஓடி ஒரு வேளை அத்தை வரவில்லை என்றால் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால் நன்றாக இருக்காது. அதனால் பஸ் நிற்கும் இடத்தைப் பார்க்க ரகசியமாய் ஓர் இடம் கண்டு வைத்துக் கொண்டு அதன் வழியே பார்த்துக் கொள்வான். ஆனால் இன்று எதையுமே கவனிக்கவில்லை.

தலை தெரிக்க ஒரே ஓட்டம்.

“”ஏலே ஜெயபாலு ஒங்கத்தடா. வந்துட்டாங்கடா” என்று வேகமாய் ஓடிவந்தான் சோட்டாளி குமரன்.

அது கேட்டு தரையில் பாதம் விழாமல் வேகமாய் ஓடினான்.

“”சங்கீதா… சதீசு… ஏய்… ஹி…ஹி..இங் கொண்டா நானு தூக்கிட்டு வர்றேன்” என்று கட்டைப் பையை வாங்கிக் கொண்டு நடந்து வந்தான். ஒரு ராஜாவின் கம்பீரத்தோடும் பரிவாரங்களோடும் வருவது போன்று பஸ் ஸ்டாண்டிற்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தொலைவு நெடுந்தொலைவாய் மண்டகப்படி ஊர் சுற்றி வருவது போல் நலம் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டே வந்தன.

அத்தையும் அத்தை பிள்ளைகளும் வீட்டுக்குள் வந்துவிட்டாலே வீடே கமகமக்கும். அந்த வாசத்திலே அவன் லயித்துப் போயிருந்தான்.

“”கையைக் கழுவுங்க. சாப்புடுவீங்க” என்று சிரித்த முகத்துடன் சொம்பு நிறையத் தண்ணீரை நீட்டினாள் முருகம்மா.

கோயம்புத்தூரிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பயணம் செய்தது அவர்கள் முகத்தில் கொஞ்சம் தெரிந்தது.

“”இருக்கட்டும் முருகம்மா. குளிச்சிட்டுச் சாப்புட்டுக்கிறேன்”

சங்கீதா, சதீஷ் இருவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபால் எல்லாரும் ஒன்று கூடும் மரத்தடிக்குப் போய்விட்டான். அங்கு போனால் யாரிடமும் “சங்கீதா, சதீஷ் வந்திருக்காங்க வாங்கடா’ என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. எப்படியும் ஒவ்வொருத்தருக்காகப் போய்விடும் செய்தி.

அவனைக் கண்டு கிண்டல் பண்ணின பசங்கள் எல்லாம் அப்போது வரக் கொஞ்சம் தயங்கினார். ஒவ்வொரு நாளும் சதீசும், சங்கீதாவும் மாறி மாறி நல்ல துணிகள் போடுவதும், சோப்புப் போட்டு அவர்களைக் குளிக்க வைத்துப் பவுடர் போடுவதும் பெரிய வேடிக்கையாகவே இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் செல்லச் செல்ல எல்லாருமே ஜெயபாலுடன் சேர்ந்து கொண்டனர்.

“ஜெயபாலு… ஜெயபாலு’ என்று சந்துகளிலும் வீட்டின் முன்பும் விளையாடும் இடங்களிலும் இந்தப் பேர் ஒலித்துக் கொண்டேயிருந்தது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டான். அவ்வப்போது மிக்சர், பிஸ்கட் என்று நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்கும்போது பல்வேறு நிபந்தனைகளைப் போடுவான் ஜெயபால்.

“எங்க தோட்டத்துல கடல புடுங்குராங்க. வாடா போவம். ஒங்க சங்கீதாவையும், சதீஷையும் கூப்பிட்டு வாடா… போலாம்” என்று மிடுக்கான தோரணையோடு அழைத்தான் குமரன்.

“”சரிடா எங்கத்தை கிட்டச் சொல்லிட்டுக் கூப்பிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவர்கள் வரும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்தான் குமரன்.

“”ஏன்டா செருப்பு எப்பவுமே போட்டுக்குருவாங்க போல”

“”ஆமா… செருப்பில்லாம நடக்கவே மாட்டாங்க டோய்… ஆங்..”

பேக் பெல்ட் போட்ட செருப்பினைப் பார்த்துக் கொண்டே வந்தான் குமரன். “செருப்புப் போடாமல் நடக்கவே தெரியாது போல’ என்று அதிசயித்துக் கொண்டான்.

“”ஒங்க ஊர்ல நீங்க தோட்டத்துக்கெல்லாம் போக மாட்டீங்க” என்றான். இதைக் கேட்டுவிட்டு சங்கீதா, சதீஷ், ஜெயபால் மூவரும் சேர்ந்தே சிரித்தனர். ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டது போலிருந்தது குமரனுக்கு.

“”அவங்களெல்லாம் வீட்டிலே தான்டா இருப்பாங்க. வீட்ட விட்டு வெளில போகவே மாட்டாங்க”

“”எஸ்.எஸ். எங்க வீட்டுல கார்டன் இருக்குது. அங்க போயி கீரைச் செடி, கருவேப்பிலை எல்லாம் வச்சிருக்கோம் ” என்று பேசிக் கொண்டே தோட்டம் வந்து சேர்ந்துவிட்டனர் நால்வரும்.

கடலையைப் பார்த்தவுடன் அதிசயம். கடலை மண்ணுக்கடியில்தான் இருக்குது என்று சங்கீதாவும், சதீஷும் ஒவ்வொன்றையும் கண் கொட்டாமல் பார்த்தனர். கடலை ஆய்வதையும், ஆய்ந்த கடலையை விடவும் தின்று, கொரித்த பொக்குகளே அதிகம். பெரும்பாலான தோட்டக்காரர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்.

சங்கீதாவுக்கும், சதீசுக்கும் எல்லாவற்றையும் பார்க்கும்போது ஆச்சரியம். ஆச்சரியம். நாமும் எடுத்துச் சாப்பிடலாமா? அவர்கள் பிய்த்துப் போடுவதுபோல் நாமும் போடலாமா? என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டயிருந்தது.

“”ஏய் என்னா? கடலைய புடுங்கிச் சாப்பிடு. பயப்படாத யாரும் ஒன்றும் சொல்ல மாட்டாங்க. எம்புட்டு வேணும்னாலும் சாப்புட்டுக்கோ” என்று கடலையை நன்கு நிதானமாகப் புடுங்கி மண்ணை உதறினான்.

“”வாய்க்கால் தண்ணியில் கழுவித் தர்றேன். அப்பதான் நல்லாயிருக்கும்” என்று ஆசையாய் அக்கறையாய் சந்தோசமாய்ச் செய்தான்.

“”நல்லாக் கழுவித்தாடா குமரா… அவங்களுக்குத் திங்கத் தெரியாது பாவம்” என்று மேலும் சிரத்தை எடுத்துக் கொண்டான் ஜெயபால்.

பச்சைக் கடலை என்பதால் அது சரியாக நேராக உடையவில்லை. தின்பதற்குத் தெரியவில்லை. “”என்னடா? கடலையைக் கூடத் தின்னத் தெரியல” என்று சிரித்துக் கொண்டே குமரனும், ஜெயபாலும் “”இதக் கூடத் திங்கத் தெரியல”ன்னு அவர்கள் கடலைப் பொக்கையும், பருப்பையும் சேர்த்து மென்று துப்புவதை ரசித்துக் கொண்டிருந்தனர். குமரனின் அம்மாவும் மதியத்துக்கு மேலாகிவிட்டதால் ஒரு படி அளந்து சங்கீதாவுக்கும், சதீஷுக்கும் கொடுத்தாள்.

“”வீட்டுக்குப் போங்க பத்திரமா என்ன? ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். மாலை வேளையில் குண்டு விளையாட்டு, திருடன் போலீஸ் , கப் ஐஸ் என்று விதவிதமாய்க் களைகட்டும். சங்கீதாவும், சதீசும் எல்லாருக்கும் ஒரு பேர் வைப்பார்கள்.

சச்சின், கங்கூலி, ப்ளமிங் என்று….

அந்த வாயில் நுழையாத பெயர்கள் கூட அவர்களுக்கு அதிசயமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. கடுமையான விதிகளைக் கூடத் தளர்த்தி அவர்கள் இருவரையும் வெற்றி பெறுமாறு அவ்வப்போது செய்வார்கள். அதனை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாய் ஒரு திருவிழாவைப் போல கடந்து சென்றது. லீவும் முடிந்து போனது.

ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு முடிந்த ஒரு ஞாபகப் பொருளைக் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். புளியமுத்து, களிமண், கட்டியானை, பூ, கம்மங்கதிரு. விதைக் கடலையைத் தெரியாமல் இரண்டு படி திருடிக் கொண்டு எல்லாரையும்விட அதிகமாகக் கொடுத்துவிட்டோம் என்று குமரனுக்குப் பெரிய பந்தாவும் நிம்மதியும், சந்தோசமும் கூட.

“”நாளைக்கின்னேரம் எங்கிருப்பீங்க?” என்று குமரன் கேட்க எல்லாருமே ஆவலாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். “”எங்களையெல்லாம் நெனப்பீங்களா?” என்று அங்கிருந்த அனைவரின் சார்பாகக் கேட்பது போல் கேட்டான்.

“”ஓ… நெனைப்போம். யாரையும் மறக்க மாட்டோம். நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க. அங்க ஐஸ்கிரீம், சாக்லேட், பப்ஸ், சிப்ஸ் எல்லாம் வாங்கித் தர்றோம்”

பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு எல்லாரும் சிரித்தனர்.

“”ஊரிலிருந்து கொண்டு வந்தப்ப எப்படியிருந்திச்சு. எப்படியாகிப் போச்சு?” துணிமணியெல்லாம் என்று ரொம்ப அழுக்காகிப் போனவற்றை எல்லாம் ஜெயபாலுக்குக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்று எல்லாவற்றையும் கழித்துக் கட்டிக் கொண்டு இருந்தாள் அத்தை.

இதை நமக்குக் கொடுப்பாளா? அந்தச் சட்டையை நமக்குக் கொடுப்பாளா? என்று எடுத்து வைப்பதனைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். எப்படியும் இரண்டு மூன்று சட்டையும், டிரவுசரும் மிச்சமாகும். அதைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

“”எல்லாத்தையும் எடுத்தாச்சு. காலைல ஏழரை பஸ்ஸýக்குக் கௌம்புனாத்தான், நாங்க ஒரு நாலு மணிக்காச்சும் வீட்டுக்குப் போக முடியும். நைட்லே போயிக்கிட்டு சிக்கல்பட்டுப் போயிரக் கூடாது” என்றாள் அத்தை.

“”ஏஞ் சதீஷ் ஒங்க வீட்டுக்கு எந்தப் பஸ் வரும். இந்த பஸ் ஒங்க ஊருக்குப் போயிட்டா அப்புறம் இந்த ஊருக்குப் பஸ் வராதில்ல”

“”அச்சச்சோ. அப்படியில்ல. இந்த பஸ் வத்தலக்குண்டு வரைக்கும் தான் போகும். அப்புறம் நாங்க வேற பஸ் புடுச்சி கோயம்புத்தூர் போயிடுவோம்”

“”இன்னும் ரெண்டு நாளு இருக்குல்ல மதினி. அதுக்குள்ள கௌம்பீட்டிங்க… ஏம் மதினி இருக்கலாம்ல. இங்க பாரு ஒம் மருமகன் பொசுக்குப் பொசுக்குன்னு முழிக்கிறான் பாவம்”என்றாள் முருகம்மா.

முருகம்மாவின் ஓரம் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நிற்க முடியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிரிவதற்கு மனமேயில்லை.

“”அம்மா ஜெயபாலையும் கூட்டிட்டுப் போலாம்மா. ஆமாம்மா” என்று சங்கீதாவும் சதீசும் சொல்லவே,

“”சரி முருகம்மா தம்பிய ரெடி பண்ணிவிடு. என்னடா ஜெயபாலு போலாமா?” என்று கேட்டதற்கு அடுத்த நொடியில் ஒரு பையில் அவனுக்கிருந்த அழுக்குப் போகாமல் கலர்போன துணிகளை எடுத்து வைத்துக் கொண்டான். எண்ணெய்யும் தண்ணீரும் சேர்த்து ஒரு சீவல். பவுடர் முகத்துக்கு ஒத்துப் போகவில்லை என்றாலும் ஒட்டியிருந்தது முகத்தில். சதீஷின் அழுக்கான சட்டையை அவன் போட்டுக் கொண்டு கிளம்பியாச்சு. ஓரே சந்தோசம். கோவை எப்படியிருக்கும்? என்று ஒரு பெரிய கற்பனையுடனே சென்றான் ஜெயபால்.

இதுதான் செம்பட்டி… இதுதான் ஒட்டன்சத்திரம்…. இதுதான் பழநி… உடுமலை, பொள்ளாச்சி என்று ஒவ்வொன்றாகச் சொல்லி சத்தமாகப் பேசிப் பேசி மூவரும் கொஞ்சம் களைப்பாய்த் தானிருந்தார்கள். கோவை நகரத்து கடைத்தெருக்களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வந்தான். பஸ்ஸில் வரும்போது சந்தோசமாக பேசிக் கொண்டு வந்தனர் மூவருமே. வீட்டுக்கு ஆட்டோ பிடித்து வந்திறங்கியதும் ஜெயபாலுவை ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லோரையும் வேடிக்கையாகப் பார்த்து விட்டு உள்ளே போனான். டி.வி., டேபிள், சாப்பாட்டு மேசை, மின்விசிறி, பாத்ரூம், டாய்லெட், ஷோகேஸ், வீடியோ கேம் என்று என்னென்னவோ இருந்தது. அதைப் பார்த்து அவன் பிரமித்துப் போனான்.

“”வா, மொட்டை மாடிக்குப் போகலாம்” என்று மூவருமே மேலே சென்றனர். மேலிருந்து கீழே நடப்பவற்றை எல்லாம் பார்ப்பது அதிசயமாய் இருந்தது. மரத்திலேறிப் பார்த்தால் கூட அவ்வளவு தெளிவாய்த் தெரியாது என்று மனதுக்குள்ளே பெரிய பெரிய சந்தோசம் வந்து போனது.

“”என்ன சதீஷ், சங்கீதா… யாரு இந்தப் பையன்”

“”ஆன்ட்டி இது என் கஸின் ஜெயபாலு. ஊரிலிருந்து கூப்பிட்டு வந்தோம்” என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அறிமுகம் செய்து பேசும்போது, அவன் எதுவும் பேசாமல் வேற்றுக் கிரக வாசிகளைப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டு வாயில் ஒரு விரலை பல்லில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தான்.

“”வாட்ஸ் யுவர் நேம்… ம்ம். ம்ம்…” என்றதும் சங்கீதாவையும், சதீஷையும் பார்த்து இளித்தான்.

“”சொல்லு உன்னோட பேரு சொல்லு”

“”ஆங்… எம் பேரு ஜெயபாலு” அதற்குமேல் அவனைப் பேசவிடாமல் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட்டனர்.

“”அம்மா ஆண்ட்டி கேட்டாங்கம்மா ஜெயபாலு யாருன்னு நானு சொல்லிட்டேன் கஸின்னு”

“”அந்த பொம்பளைக்கி வேற வேலையில்ல. யாரு வீட்டுக்கு யார் வந்திருக்கா, என்ன பண்றாங்கன்னு பார்க்கிறதுதான் அவளுக்கு வேலையாப் போச்சு. சரி, நீ அவனை அதிகமாக் கூட்டிட்டுப் போகாதே.

“”அம்மா இந்தப் பக்கத்துல இருக்கிற பார்க்குக்குக் கூட்டிப் போகட்டா?”

“”சரி போயிட்டு வாங்க” என்று சொன்னதும் உடனே ஓடிவிட்டனர்.

“”இங்க பாத்தியா? இதுல சறுக்கி விளையாடலாம். ஊஞ்சல், ரவுண்டு ராட்டினம் எல்லாமே இருக்கு பார்த்தியா?”

“”ஆமா” என்று ஆச்சரியத்தின் தொடர்ச்சியாக, “நம்மூருலயெல்லாம் சாமி கும்புடுக்குக் கூட ராட்டினம் வராது. ச்சே… எம்புட்டு நல்ல ஊரு’.

அதுனாலதான் சங்கீதாவும், சதீஷும் நல்லா இருக்காங்க. நம்மளும் அம்மாவையும், அப்பாவையும் கூட்டிட்டு இங்கேயே குடியிருந்திட்டோம்னா நெதம் நெதம் நல்லா எப்பவும் ஒண்ணாச் சேந்து வெளையாடலாம் என்று மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது ஜெயபாலுக்கு.

மாலை நேரங்களில் சுற்றிலுமுள்ள சிறுவர்கள் அங்கு வந்து விளையாட்டும், வேடிக்கையுமாக இருப்பார்கள். அது பெருமாள் கோயிலுக்கு உள்ளேயே நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் பொங்கல், வடை, சுண்டல் என்று விளையாடப் போகும் சிறுவர்களுக்குக் கிடைக்கும். அதனால் தூரத்திலிருக்கும் சிறுவர்கள் கூட, அந்தப் பார்க்கில் வந்து விளையாடுவார்கள். அங்கு விளையாடும் சிறுவர்களுக்கு மத்தியில் ஜெயபால் பெரிய வித்தியாசத்துடன் இருந்தான். அவன் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்ப்பது, எல்லாருக்கும் வேடிக்கையாக இருந்தது.

“என்னோட கஸின் கஸின்’ என்று எல்லாருக்கும் சொன்னார்கள். கிரிக்கெட் விளையாட்டிலும் ஃபுட்பால் விளையாட்டிலும் சேர்த்துக் கொள்வார்கள். “”டேய்.. ஃபிளமிங் பேட் கரெக்காட்டாப் புடி. சச்சின் வேகமா ஓடு” என்று அவர்களின் ஒவ்வொரு வாக்கியங்களும் புதிதாக இருந்தது. ஃபீல்டிங்கில் ஜெயபால் இருந்தான். அவனின் குறி தப்புவதே கிடையாது. சரியாக இருக்கும். கேச்சும் அப்படித்தான்.

“”ஏய் நான் கொம்புல எரிஞ்சுட்டேன்”

எல்லாரும் சிரித்துவிட்டனர்.

“”அய்யய்யோ, அது கொம்பில்லை, ஸ்டெம்பு” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்புத் தொடர்ந்தது.

சங்கீதாவுக்கும், சதீஷுக்கும் மற்றவர்கள் சிரித்தாலும் அதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. இருவரும் அமைதியானது கண்டு மீண்டும் ஆட்டத்தினைத் தொடர்ந்தனர். ஜெயபாலும் கொஞ்சம் மெüனமாகிப் போனான். அன்று மாலை எப்போதும்போல பொங்கலும் சுண்டலும் கொடுக்க, எல்லாரும் வாங்கிச் சாப்பிட்டு முடிந்ததும் பொங்கலை நக்கிச் சாப்பிட்டு முடித்ததும் சட்டையில் துடைத்துக் கொண்டான். அவன் சாப்பிடுவதை மிகவும் அசிங்கமான காரியத்தைச் செய்வதைப் போல பார்த்தனர். சங்கீதாவுக்கும் சதீஷுக்கும் ரொம்பவே அதிகம். மற்றவர்கள் செய்யும் கேலி கிண்டல்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கைகால்களைக் கழுவிவிட்டு துண்டில் துடைத்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்தனர். ஜெயபால் தண்ணீரைக் கை, காலில் திறந்துவிட்டு கால் நனைந்ததும் கழுவியாச்சு என்று வந்துவிட்டான். துண்டில் துடைக்க வேண்டும் என்பதைக் கவனிக்காமல், வீடெங்கும் தண்ணீரும் மணலுமான தடங்கள்.

“”என்னடா தம்பி இப்படிப் பண்ணிட்டே” என்று அதட்டினாள் அத்தை.

அவன் எதுவும் பேசவில்லை. சதீஷும் சங்கீதாவும் ஒருமாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“”இட்லி சாப்பிடுடா ஒக்காரு” என்றாள் அத்தை.

அவன் வாடிப் போன முகத்துடன் இட்லியைப் பிணைந்து சட்னியை நிறைய ஊற்றி உப்புமாவைப் போலாக்கிவிட்டான்.

“”என்னடா நீ சாப்புடற. ஒழுங்காச் சாப்பிடுடா. போட்டுப் பெணஞ்சு சாப்புடுறதப் பார்த்தா வாந்தியெடுத்தது மாதிரி இருக்குது. என்ன பிள்ளையோ இது கூடவா தெரியாது”

முதலில் போட்ட மூன்று இட்லியுடனே போதும் என்று எழுந்து விட்டான். இதுபோல சப்பாத்தி சாப்பிடும்போது அதைப் பிய்க்க முடியாமல் சாப்பிட முடியாமல் சாப்பிட்டது பெரிய கெüரவக் குறைச்சலாகப் போய்விட்டது குடும்பத்துக்கே.

பக்கத்து வீட்டுக்காரம்மா, “”பையனுக்குச் சப்பாத்தியே சாப்பிடத் தெரியாது போல. இப்பதான் மொதல் தடவையாய்ச் சாப்புடுறான் போல, பாவம்” என்று சொன்னதும், எல்லாருக்குமே தலைக்கேறிவிட்டது டென்சன். அதையெல்லாம் முகபாவனையால் அவன் மீது கோபமாய்ப் பாய்ந்தது. பாவம், எதார்த்தமாக விளையாடிக் கொண்டு சுதந்திரமாய் இருந்த அவனை அழைத்துக் கொண்டு வந்து அவனைப் பாடாய்ப்படுத்தினார்கள்.

விளையாடப் போகும்போது கிரிக்கெட் பிளேயர் பெயர் தெரியவில்லை. வீட்டிலென்றால் துணிபோடுவதையும், சாப்பிடுவதையும், தப்பு என்பதும், கத்திப் பேசக் கூடாது,யாருடனும் பேசக் கூடாது என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி அவன் மனது எதுவும் பேசாமல் மெüனமாகிப் போனது. மூன்று நாட்கள் கழிந்தன. ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணிநேரம் தானா? என்ற அளவுக்குப் போனது ஜெயபாலுக்கு.

“”அத்தை, மாமா எப்ப வருவாரு? சதீஷ், சங்கீதாவெல்லாம் பள்ளிக்கூடம் போயிட்டாங்க. எங்க வாத்தியாரு வையிவாரு. மாமா எப்ப வருவாரு?”

“”இன்னைக்கு நைட் வந்துருவாரு. போலாம். புதுத்துணி வாங்கித் தாரேன் அத்தை, சரியா? ”

“”எனக்குப் புதுத்துணியெல்லாம் வேணாத்தே. நானு ஊருல போயி சப்பாத்தி எப்படிச் சாப்பிடுறது, இட்லி எப்புடி சாப்புடறதுன்னு பழகிட்டு, விளையாட்டெல்லாம் பழகிட்டு வர்றேன் அத்தே. இல்லைன்னா சங்கீதாவும், சதீஷும் வெளையாட்டுக்குச் சேக்க மாட்டாங்க” என்று சொன்னதில் அவனை அணைத்துக் கொண்டாள் அத்தை. சிறிதுநேரம் அமைதியானார்கள் இருவருமே.

“”அங்க யாரும் இந்த வெளையாட்டு வெளையாடமாட்டானுங்க அத்தை. நம்மூருக்கு வாங்க அங்கதான் என்னைய வையமாட்டாங்க, சங்கீதாவும் சதீஷும். நீங்களும் நம்மூருக்கு வாங்கத்த” என்று சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் அத்தையின் காதுக்குள்ளேயிருந்தன.

****

ஊருக்குப் போனதும், கோயம்புத்தூர் அப்படியிருந்தது, இப்படியிருந்தது, எப்படியெல்லாமோ இருந்தது என்று நண்பர் வட்டாரங்களிடம் சொல்லிக் கொண்டு மீண்டும் காத்துக் கொண்டிருந்தான். வரும் விடுமுறையையும் பஸ்ஸையும் எதிர்பார்த்து.

– பெப்ரவரி 2012

காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் ஆய்வு மாணவி. “தார்க்குச்சி’ என்கிற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக் கிறது. சிறுகதைக்கு இப்போதுதான் அறிமுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *