(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இதயத்து உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத கணவன் அல்லது மனைவியோடு வாழ்கின்ற வாழ்க்கை இருக்கிறதே. அது, தாகத்தின்போது பாலைவனத்துக்குச் சென்று தண்ணீர் தேடுவதற்கு ஒப்பாகும்…!”
உலகைச் சுட்டெரித்து விடுவதுபோல, கொதிப் பான சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சூரியன் நட்டநடுவானிலிருந்து மேற்றிசையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான். ஆம்… ! ஏறத்தாழ பிற்பகல் மூன்று மணி ஆகியிருக்கும். ஆதவன் வெம்மைக் கதிர் களால் உலகைக் கொதிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தான்.
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் சிங்கப்பூரைப் பொறுத்தவரை காலையிலும் மாலை யிலும்தான் பேரூந்தில் நெரிசலும் இருக்கும்; ஒவ்வொரு பேரூந்து நிறுத்தத்திலும் நின்று நின்று சென்று கொண் டிருக்கும் நிலைமை…! அலுவலகங்களுக்கு தொழிற் சாலைகளுக்கு-பள்ளிகளுக்குச் செல்வோரின் அமளி துமளிகள் காலையிலும் மாலையிலும்தானே…! காலை பத்து மணிக்குப் பிறகு மாலை நான்கு மணிவரை பேருந் துகள், “ஃபிரி மூவ்மென்ட்” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே!
பேருந்து விரைந்து செல்லும்போது சாளரங்களின் வழி பாய்ந்து வரும் வெப்பக் காற்று வியர்வையை உலர்த்திக் கொண்டிருந்தது. சாலைப் பாதுகாப்பு விளக்குக் கட்டுப்பாடு அல்லது ஓரோர் நிறுத்தங்களில் பேருந்து நிற்கும் அந்த ஒரு சில நிமிடங்களில் வியர்த்துக் கொட்டும். பேருந்தில் இருப்போர் எல்லோருமே “உஸ்… ஒ மை குட்னஸ்…!” என்று சொல்லிக் கொண்டு கையில் வைத்திருக்கும் தினத்தாளையோ அல்லது கைத் துண்டையோ கைவிசிறியாக்கிக் கொண்டு கருகிக் கொண்டிருந்தார்கள். வெப்பத்தின் கொடுமையில் வெந்து கொண்டிருப்போருக்கு இடையே. உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்து கொண்டிருத்த எண்ணங்களின் காய்ப்புகளுக்கு இலக்கானோரும் இருந்திருக்கத்தான் வேண்டும். ஏன்…?
இது என்ன இப்படி ஒரு கேள்வி…? வாழ்க்கையில் எல்லோருமா வசந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள்…? வறட்சிக்கு இலக்காகும் “கோடையின்” கொடுமையில் கொந்தளிப்போரும் . இருக்கத்தானே செய்கிறார்கள். அந்தப் பட்டியலில் நானும் ஒருவன்….!
என்னென்னவோ சிந்தித்துக் கொண்டு, கதிரவனின் வெம்மைக் காந்தலைப் பொருட்படுத்தாமல் உள்ளக் காந்துதலின் உறுத்தலோடு விழிப்பு நிலையில் பயணம் செய்துகொண்டு வந்த நான் இடங்கண்டு இறங்கி விட்டேன். இது என்ன பிரமாதம்? இல்லை; சிற்சில சமயங்களில் ஒரு “துறவு” நிலைக்காளாகிச் சிந்தனை களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, நிர்மலமான இதயத்தோடு நீடிய துயில் கொண்டு, நிறுத்தங்கள் மாறிப் போய் இறங்கி, தூக்கக் கலக்கத்தோடு நடந்து வந்து வீடு சேர்வதுமுண்டு. அதனால் இதனை ஒரு கெட்டிக்காரத்தனமாகச் சொல்லிக் கொண்டேன்…!
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம்!.. ! உள்ளத்திலும் தான் அத்தகையதொரு உணர்ச்சிக்காந்தல்…! விரைந்து நடந்து வந்து வீட்டையடைந்தேன் ! வீடு திறந்தே கிடந்தது. திறந்த வீட்டில் “நுழைவது போல்” தெளிந்து கிடந்ததோர் மயான அமைதி “வரவேற்புடன் வீட்டிற் குள் சென்று, எனக்கென்று நானே எளிமைப்படுத்திக் கொண்ட அறைக்குள் சென்று, அப்போதைக்குப் பெரும் பாரமாகத் தோன்றிய ஆடைகளைக் கழற்றி உலரப் போட்டுவிட்டு, வேட்டி கட்டிய வெறும் மேனியுடன் வெளி வராந்தாவில் வந்து அமர்ந்து கொண்டேன். உட லிலும் உள்ளத்திலும் பரவிப் பாய்ந்திருந்த வெப்பம் சற்றும் குறைந்தபாடில்லை. குளிர்சாதனப் பெட்டி யிலிருந்து ஒரு பெரிய “பாட்டில்” நிறைந்த குளிர்ந்த நீரும் கண்ணாடி டம்ளரும் கொண்டு வந்து “மடமட” வென இரண்டு டம்ளர் தண்ணீர் அருத்தினேன் . !
குளிர்ந்த நீரின் “ஜில்லிப்பு” தாகத்தை-குரல் வளை யின் வெப்பக் காந்தலைத் தணித்தது. உள்ளத்தின் காந்துதலைத் தடுக்க எந்தக் குளிர்ந்த நீரால் முடியும்…? பாலைவனப் பசுஞ்சோலையாம் “ஓயசிஸ்” என்று சொல் வார்களே; அந்தக் குளிரோடையின் ஊற்று நீர் ஒரு வேளை “தாபம்” தீர்க்குமா? என் சிந்தனை விரிந்தது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கல்யாணப் பேச்சு என் பெற்றோர்களால் தொடங்கப் பட்ட காலக் கட்டத்திற்கு வந்து விட்டேன்.
என்னைப் போலே படித்து, பணியாற்றிக் கொண் டிருக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன். இருவரும் வேலை செய்தால் வருவாய் “இரு வாயாகும்” என்பது என் தொலை நோக்கு…!
அப்போது என் தந்தையார் எனக்கருளிய அமுத வாக்கியங்கள் அனைத்தும் தொடராகத் தொடர்ந்து வந்தது; நினைவுகளின் ஆர்ப்பரிப்பில் சிக்கித் திளைத்தேன்…!
இரண்டு பேருமே வேலைக்குப் போய்த் திரும்பும் போது யாரை யார் வரவேற்பது…? உபசரிப்பது ? மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் களைப்பு என்பது இரு சாரார்க்கும் உரியதாகும் ! ஒரு வேளை மனைவிக்குப் பணிவிடை செய்ய நேர்ந்தாலும் நேர லாம். அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை…!
அது மட்டுமல்ல; அவள் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, உன் மனைவியைப் பார்த்து ஏதேனும் செய்தி சொல்ல சொல்ல வேண்டியிருந்தால், அந்த அலுவல கத்தின் மேலதிகாரியைச் சந்தித்து அனுமதி கேட்டுத் தான் உன்னுடைய மனைவியை நீ சந்திக்க முடியும்…! உன் மனைவியை நீ உரிமையோடு பார்க்க முடியாத ஓர் அவல நிலையைச் சந்திக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்…!
பணிமனையில் வேலை செய்து விட்டுக் களைத்து வரும்போது, வரவேற்று உபசரிக்கத்தான் மனைவி…; அந்நிலையை, உனக்குச் சமமாகச் சம்பாதித்துக் கொண்டுவரும் மனைவியிடம் நீஎதிர் பார்க்க முடியுமா?
இத்தனை ஏன்..? உண்ண உணவும் உடுத்த உடையும் தந்து காக்க முடியாத ஒருவனுக்கு ஒரு பெண்டாட்டி தேவைதானா…? அவளை நீ “இராஜாத்தி யாக வைத்திரு: உனக்கு “இராஜ மரியாதை” கிடைக்கும். அதுதான் இன்ப வாழ்க்கை…! இனிய வாழ்க்கை..!”
என்றுமே நீ அவளை வேலைக்கு அனுப்பக்கூடாது. அதற்காகவே அதிகம் படிக்காத ஒரு பெண்ணைத் தேர்ந் தெடுத்துவிட்டேன் என்று தந்தை சொன்னபோது) அறிவு பூர்வமான – சிந்தனை ரீதியான தர்க்க நியாயங் கள் அடங்கியதொரு தத்துவமாக அவர் தம் எண்ணங் களை அமுத வாக்காக ஏற்றுக்கொண்டு, அவர் பார்த்த அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன்.
அவர் தம் ஆணைப்படி அவளை நான் “இராஜாத்தி” யாசத்தான் இன்று வரை வைத்திருக்கின்றேன்; ஆனால் அவர் சொன்னாரே “இராஜ மரியாதை” அது இன்று வரை எனக்குக் கிடைக்கப் பெற்றதுமில்லை…அந்தச் சுகத்தை அனுபவித்ததுமில்லை…! ஏக்கமும் ஏமாற்ற மும்தான் மிச்சம்.. !
இதோ இன்றைக்குப் பாருங்களேன் எனக்குக் கிடைத்துவிட்டிருக்கும் இராஜமரியாதையை… ! வேலி யோடியைந்த இரும்பு “கேட்’ முதல் வீட்டின் தலை வாசல் வரை -அறைகளின் கதவுகளும் பரக்கத் திறந்தே கிடந்தன. எந்தவொரு எதிர்கொள்ளுதலும் இல்லாத ஏகாந்தத்தில் வெளித் திண்ணையில் வெறிச்சோடிக் கிடக்கும் வெளிறிய வான்வெளியைப் பார்த்துக் கொண் டிருக்கின்றேன்.
”காலையில் வேலைக்குச் சென்று களைத்துப்போய் வீடு திரும்பும்போது வரவேற்று உபசரிக்கத்தானே மனைவி…!” என்று தொடங்கி அடுக்கடுக்காய் அள்ளித் தெளித்தாரே என் தந்தையார்; அந்த அமுத நிகர் தத்து வங்கள் இப்போது எங்கிருந்தோ ஓர் “அசரீரி” போல, ஒலித்து,என் செவிகளில் ரீங்காரித்தன…!
வாய்விட்டுக் “கல கல”வெனச் சிரித்துக் கொள்ள வேண்டும்போல் எனக்குத் தோன்றியது. அக்கம் பக்கத்தாரை நினைந்து அடக்கிக்கொண்டேன்! வேறு வழி யில்லை…! வறட்டுச் சிரிப்பொன்று வாயோரத்தில் நெளிந்து வளைந்து வதங்கியது.
உத்தியோக உயர்வு பெற்று மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த புதிதில், ஒருசில ஆண்டுகள் வாடகை வீட்டில் குடியிருக்க நேர்ந்தது. குடக்கூலிக்குக் குடிய மர்ந்த வீட்டில் எங்களைப் போலவே ஒர் இளந்தம்பதி கள். ஒரு வித்தியாசம்; அவர்களுக்கு இரண்டு பிள் ளைகள். எங்களுக்கு அப்போது ஒன்றும் இல்லை..!
அவர் பெயர் கருணாகரன்…! அவருக்குக் கருணை உண்டோ இல்லையோ அது யாருக்கும் தெரியாது; ஏனென்றால் அவருக்குத்தான் பிறர் கருணை காட்ட வேண்டிய நிலைமை….! வேலையிழந்து இரண்டு ஆண்டு கள் கடந்துவிட்டன; இப்போது வேலை தேடுவதுதான் அவருக்கு வேலை…!
அதிகாலையிலேயே எழுந்து ஏதோ அலுவலகத் துக்குப் பணியாற்றச் செல்வதுபோல் “வெள்ளையும் சள்ளையுமாகப்” புறப்படுவார். நீட்டாகவும் ‘நீட்’? ஆகவும்தான் மடிப்பு கலையாமல் உடுத்துவார்.
அவர் மனைவியின் பெயர் தங்கம்…! பெயரால் மட்டும் அல்லாமல் குணத்தாலும் கொள்கையாலும் தங்கம் தங்கமேதான்…! அதிகாலையிலேயே “அயர்ன்’ போட்டு, காப்பியும் கொடுத்து காலணியின் கயிறுகளைக் கட்டிவிடுவது வரை கடமைகளைச் செய்து, வாசல்வரை வந்து புன்னகையோடு வழியனுப்பி வைப்பாள்…! உற்றார் உறவினர்களின் – அக்கம் பக்கத்தாரின்- அண்டை அயலாரின் கையையும் கரிசனையையும் எதிர் பார்த்து, காப்பி கலக்கிக் கொடுக்கவேண்டிய நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தில் உழன்று கொண்டு இருக்கும் தங்கம் வறுமையின் சாயல் படியாமல் மனங் கோணாமல் வழியனுப்பி வைத்துவிட்டு “உலை வைக்க’ என்ன செய்வது…? என்ற உறுத்தலோடு நின்றுகொண் டிருப்பாள். உண்மையிலேயே உழைப்பிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நான், காலைக் கடன் களின் நடமாட்டத்திற்கிடையே இதனைக் கவனித்துக் கொண்டு உள்ளம் கொதிப்படைந்து கொண்டிருப்பேன்!
எப்படியோ ஒரு வழியாகக் “காப்பியைக் கலக்கி மேசைமேல் வைத்துவிட்டு, குளியலறையில் துணி துவைத்துக் கொண்டிருப்பாள் தர்ம பத்தினி! “போய் வருகிறேன்” என்று அறையின் கதவுக்குச் சொல்லிக் கொள்வது போல, அமைதியாக இழுத்துச் சாத்தி விட்டுத் தெருவுக்கு வந்து விட்ட பின்னரும்கூட ஓர் ‘அபிலாசையோடு” திரும்பிப் பார்ப்பேன், அந்த எதிர் அறை தங்கம் நின்றுகொண்டிருப்பாள். அவள் என்னைப் பார்த்துக் கேலியாகப் புன்னகை செய்வது போல எனக்குள் ஒரு ”மனப்பிரமை” ஏற்படும். அந்த நலிவோடு நடந்து செல்வேன்…”
“இப்படித்தான் வாழ்க்கை அமைய வேண்டும்” என்பது ஓர் எண்ணம்-குறிக்கோள்…! “இப்படியும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்பது ஓர் இயந்திர இயக்கம்…; வாழ்க்கை நியதி…!
இந்தக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட வேண்டும். அப்போதுதான் பிறர் போற்றும் வாழ்க்கை அமையா விட்டாலும், “நூற்றா வாழ்க்கை” அமையும்…! நான் இரண்டாந்தர வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாமா…?
இளமையின் எதிர்பார்ப்புகள் எத்தனையெத் தனையோ இருக்கின்றன…! வாடகை வீட்டில் வசதிக் குறைவுகள் இயல்புதானே…! அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இப்படியும் ஓர் எண்ணம் என் மனத்தில் என் மனைவிக்காக ஓர் அனுதாபத்தோடு எழுந்தது…!
பொருளாதாரம் உட்படப் பல்வேறு போராட்டங் களுக்கிடையே ஒரு பேழைய குடிசையை விலைக்கிரய மாக வாங்கி அதனை அடித்து உடைத்துவிட்டு, விஸ்தார மான அமைப்பில் சகல வசதிகளும் அமைத்து ஒரு பெரிய வீட்டைக்கட்டினேன். விரலுக்குத் தக்க வீக்கமா…? இல்லை; விரலுக்கு மிக்கதொரு வீக்கத்தையே ஏற்படுத் திக் கொண்டு விட்டு, இறைவனருளால் அந்தத் தர்ம சங்கடத் தவிப்பில் இருந்தும் மீண்டு “ராஜபோகம்” என்பார்களே…அந்த அமைப்பில் வீட்டை…வாழ்க்கை வசதிகளை அமைத்துக் கொடுத்தேன். அப்போதாவது இராஜமரியாதை கிடைக்காதா என்ற அபிலாசை தான் .. !ஆசை யாரைத்தான் விட்டது…?
ஆறு அறைகளும் ஒரு “ஹாலும்’ சமையற்கூடமும் கொண்ட பெரிய வீடு ! ஒரே ஒரு குடும்பத்தினர்க்கு இரண்டு அறைகளை மட்டும் வாடகைக்கு விட்டிருந் தேன். எஞ்சிய நான்கு அறைகளில் ஓர் அறை பூசை யறை படிப்பறை – ! சமையற் கூடத்துக்கு எதிர்த்த அறை-பொதுவில் சாப்பாட்டு அறை-!” “டைனிங் ஹால்!” ஓர் அறை பிள்ளைகளுக்கு.. ! மற்றும் ஓர் அறை” எங்களுக்கு”.. !
“பிள்ளைங்க” தனியாப் படுத்திருப்பாங்க…! கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடுங்க வர்ரேன்…! – என் பதிலுக்குக் காத்திருக்காமல் சாத்திக் கதவடைப்பாள். இராஜ மரியாதையை” எண்ணிச் சிரித்துக் கொள்வேன்…!
பிள்ளைகளா…? ஆம்; ருசிக்காகச் சாப்பிடாவிட்டா லும் பசிக்காகச் சாப்பிட்டுத்தானே தொலைய வேண்டி யிருக்கிறது. “இரசித்துச்” சாப்பிடாவிட்டாலும் ‘பசித்துச்” சாப்பிட்டதன் பயன்இரண்டு பிள்ளைகள்…!
சேவல் குப்பையைக் கிளறிக் கொண்டு கெக்கெக்… குர்குர்…” எனக் குரல் கொடுக்கும்; தீனி தேடி, பெட்டை அங்கு வரும். ஒரு சிலிர்ப்பு’… ! சேவலும் பேடையும் செல்லும் திசைகள் வேறு வேறு .. ! இந்தக் “கோழிக் கூத்து’ நடைபெறும் போது அதைக் கண்டு விரக்தி யோடு சிரித்துக் கொள்வேன்…!
எங்கள் வீட்டுக்கு இடது கைப்பக்கம் ஒரு தமிழர் வீடு . ! எதிர்ப்புறம் ஒரு மலையாளத்தார்வீடு . ! வலது கைப்புறம் ஒரு சீனருடைய வீடு! அந்தச் சீனர் வீட்டுக்கு எதிர்ப்புறம் ஒரு தமிழர்-சீனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கலப்புத் தம்பதியர் வீடு ! அண்டை அயலார் எதிரார் ஆகிய எல்லோரும் முதிய பருவத் தினர். எங்கள் வீட்டில் குடியிருப்பவர்கள் எங்களைக் காட்டிலும் சற்றே இளைய தம்பதியினர்..!
இடது கைப்புறம் வீடு ! “ஜெயா அம்மா”_சாமி னாதன் “ரிட்டையர்ட் ஏஜ்” வாழ்விணையர். அதிகாலை யில் எழுந்து ஆகாராதிகள் தயார் செய்து அடுக்குகளை மிதிவண்டியில் வைத்து வாசலுக்கு வெளியே தெருவில் கொண்டுபோய் வண்டியை ஓரமாய் ஒதுக்கி நிறுத்தி வைத்து விட்டு, “நற்சகுனம்’ ஆக எதிர்கொண்டு மஞ்சள் குங்கும மங்களத்தோடு வந்து வழியனுப்பு வார்கள்…!
எத்திராஜ்…! சீன அம்மையாரைத் திருமணம் செய்தவர்; அவர் காப்பி அருந்தி முடிக்கும் வரை காத்திருந்து, தெருக்கோடிவரை வந்து “மோட்டார் சைக் கிளின்” சாவியையும், தலைக் கவசத்தையும் பக்தி சிரத்தையுடன் கையில் கொடுத்து வழியனுப்பி மீண்டு வரும் அம்மையார்…!
எதிர்வீட்டு-மலையாளத்தார் வீட்டு அம்மையார் உணவுப் பொட்டலம் சுமந்துள்ள துணிப் பையையும், தாழங்குடையும் ஏந்தி வந்து கொடுத்து தெருவில் நின்று அவர் பீடு நடையிட்டுச் செல்லும் காட்சியை கண்டு களித்து புன்னகைப் பொலிவோடு மனையேகும் மாட்சி !
எங்கள் வீட்டின் வலது கைப்புறம் அமைந்திருக்கும் வீடு…! சீனக் கிழவி “சிமிண்ட் போடும்” தொழில் புரியும் தன் கணவர்க்கு உரிய கருவிகளை வண்டியில் ஏற்றி வைத்து விட்டு, “கோப்பி நிறைந்த பெரிய சுடுநீர் ‘பாட்டிலை”ச் சுமந்து வண்டிக்குள் வைத்து விட்டு, “பிக் அப் வேன்”-சாவி யைக் கையில் கொடுத்து புன்னகைத்து அனுப்பும் பொலிவு…!
இத்தனை இராஜ மரியாதைகளைரும் இடையிடையே கண்டும் காணாதவன் போல் இரசித்துக் கொண்டே இறைவழிபாட்டினைச் செய்து கொண் டிருக்கும் நான் கடப்பாடுக்களை முடித்துக் கொண்டு ஏதோ ஓர் “செப்படி வித்தைபோல்” மேசை மேல் இருக்கும் காப்பியை நின்ற நிலையிலேயே பருகி விட்டு அறைகளின் கதவுகளையும்- தலைவாசல் கதவினையும் சாத்திக் கொண்டு விட்டு தெருவில் நின்று வெறிச்சோடிய வீட்டையும் வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு விரைந்து நடந்து செல்வேன்.
அதிகாலையில் எழுந்திருப்பதில் என்னவோ அப்ப ழுக்கே இல்லை. அன்று வாடகை வீட்டில் குடியிருப் போரின் நெரிசல் காரணமாக முந்திக் கொள்ள வேண் டும் என்பதற்காகத் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். இன்று பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டிருப்பாள் ! நான் எப்போதும் போல் ஏக்கப் பிரதிபலிப்புடன் எனக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டு ஏதிலியாய் ஏமாற்றத்தின் எதிரொலியோடு எழுகதிர் எழுமுன்னர் வேலைக்குச் செல்வேன்… ! விரும்பு வது போலவா விளைவுகள் அமைகின்றன…? விழைவது ஒன்று; விளைவது வேறொன்று என்ற அமைப்பில்தானே ‘விடிவுகள்” இருக்கின்றன…!
வீட்டுக்காரர் வெளியில் செல்லும்போது, அபச குனங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக, வீட்டுக் காரர் வெளியில் புறப்படும் தறுவாயில் மஞ்சள், குங்கும மங்களத்தோடு தலைவாசலுக்கு வந்து கொண்டிருக்கும் தன் மனைவியை எதிர்கொண்டு சென்றிட வேண்டும் என்னும் பண்புக்காக “நற்சகுனமாய்” எதிர்ந்து வரும் இனிய துணைவியர் முகத்தைப் பார்த்து எழில்நகை புரிந்த வண்ணம் வெளியேறும் கலாச்சாரம் பற்றிக் கதை களில் – காவியங்களில் படித்திருக்கிறேன். அத்தகைய இன்ப எதிர்வுகள் என்றாவது, ஒருநாள் என் வாழ்வில் ஏற்படக்கூடாதா என்று ஏங்கிய நாட்கள்தாம் எத்தனை எத்தனையோ…? அந்த ஏக்கம் இன்றுவரை தீர்ந்த பாடில்லை.
கல்லாக் குற்றமா…? கனியாத் தன்மையா…? என்று பிரித்துணர முடியாத நிலையில் இன்று வரை இலவு காத்த கிளியாகிக் கொண்டிருக்கின்றேன். இராஜ மரியாதையை எதிர்கொள்வதுதான் எப்போது ; எனக்குச் சிரிப்புதான் சிரிப்புதான் வரும். நான் அவ்வப்போது நமட்டுச் சிரிப்பாகச் சிரித்துக் கொள்வேன். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பது விரக்தி விளிம்பின் ஆத்ம திருப்தியாகும்…!
அதிகாலை ஆறரை மணிக்கெல்லாம் அதிருப்தி யோடு சாலையில் விரைந்து நடந்து கொண்டிருக்கும் போது, “மனைவி அமைவதெல்லாம் இறைவன்கொடுத்த வரம்…” என்ற பாடல் வானொலியில் தேனொலியாய் மிதந்து வரும். இந்தப் பாடலை எழுதிய கவிஞனும் இராஜ மரியாதையை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற தனால் எழுதியிருப்பானோ என்று கூட எண்ணிக் கொள்வேள்.
எல்லாவற்றையும் அனுபவித்துத்தான் எழுதியிருக்க வேண்டுமென்றால் எண்ணத் தொலையா இலக்கியங்கள் அனைத்தும் அனுபவ உண்மைகளா? அல்ல; அது அலை நோக்கு…! தொலை நோக்கு ! இப்படிச் சிந்தித்துத் தெளியும் போது என் அறியாமைக்காகச் சிரித்துக் கொள்வேன்; அதுவுமோர் நமட்டுச் சிரிப்பு!
எப்போது குடித்தேன் ? எனக்கே நினைவில்லை…! குளிர்ந்த நீர் நிறைந்திருந்த அந்தப் பெரிய பாட்டில் காலியாகியிருந்தது. கடிவாளம் இல்லாத குதிரை போல – மூக்கணாங்கயிறு இல்லாத காளை போலக் கட்டறுந்து சென்று கொண்டிருந்த சிந்தனையை, வீட்டின் சுவர்க் கெடிகாரம் ஐந்து முறை ஒலித்து, இப்போது “டீ டைம்” என்பதை உணர்த்திவிட்டு ஓய்ந்தது.
ஓர் அரை நிமிடம் முன் பின்னாக இருக்கலாம் ! செம்பவாங் கப்பற் பட்டறையின் “சங்கு’ முழங்கியது. …!” ஆலையின் சங்கே நீ ஊதாயோ?’-இது யார் பாடிய பாடல்…? இப்போது நினைவுக்கு வரவில்லை…!
வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது என்று விக்கிரமாதித்தன் கதையில் கூறுவது போல, மீண்டும் ஒரு சிந்தனைத் தேரேற்றம்! மாலை ஐந்து மணிக்குக் கபபற்படையிலிருந்து வேலை முடிந்து களைப்போடு வீடு திரும்பி வருவோரை எதிர்கொண்டு இராஜ மரியாதையோடு வரவேற்று உபசரிக்கும் “வாழ் விணையர்கள்” சிலரின் வரவேற்புப் படலங்கள் அகக் கண்களில் திரைக் காட்சிகள் போல் விரிந்தன…!
வாங்க…! இன்றைக்கு வேலை ரொம்பக் கடுமை யா…? களைச்சிப் போயிருக்கீங்களே…! இதோ… ! சூடா ”டீ”…; உப்புமா…! உப்புமா…! முதல்ல சாப்பிடுங்க; அப்புறம் பேப்பர் படிங்க…!
இதோ பாருங்க…! அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்…! வேலை மெனக்கெட்டு உங்களுக் குன்னே பூரி சுட்டு வச்சிருக்கிறேன்; தேத்தண்ணி போட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்…! சாப்பிடு வீங்களா… அதை விட்டுவிட்டு இப்ப என்ன டி. வி. வேண்டிக் கெடக்கு…?ம்… சரி; சாப்பிட்டுக் கொண்டே டி.வி. பார்த்தா ஆகாதோ…? சாப்புடுங்க…!
மத்தியானம் சாப்பிட்டீங்களா இல்லையா…? அது கெடக்குது போன்னு ‘ஆப்ட்ரால்’ ஒரு ‘பன்’கூடச் சாப் பிடாம, வெறும் ஒரு காப்பியைக் குடிச்சிட்டு வேலை செய்திருப்பீங்க.. ! எனக்குத் தெரியாதா உங்களைப் பத்தி. அப்படித்தான் நடந்திருக்கும்… அதான் உங்க வயிறு சொல்லுதே…! அது கெடக்கட்டும்… உங்களுக்கு ரொம்பப் பிடித்தமான கோதுமை தோசை சுட்டு, கொடுவாக் கருவாட்டுக்குழம்பு வச்சிருக்கிறேன்…! இப்ப நாம ரெண்டு பேரும் சாப்பிடறமாம்…; அப்புறமா நீங்க குளிக்கிறீங்களாம்…!
பக்கத்து வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் சீனத் தம்பதியினரின் பச்சிளங் குழந்தை .. “விச்சினு… விச்சினு சாப்போச்சி லாய் லாய்லாய்…!என்று அழைக்கின்றாள். அந்த மழலையின் மணிக்குரல் என்னை நடப்புலகுக்குக் கொண்டுவர உதவியது.
எங்கள் வீட்டில் குடியிருக்கும் இளந் தம்பதியினரின் ஒரே மகன் விக்கினேஸ்வரன் ! அவனுடைய பெயரை சொல்லத் தெரியாமல் “விச்சினு…!” என்று கூவுகின் றாள். அவன் தன் “கேர்ல் ஃபிரண்ட்” அழைப்புக் கிணங்கி, சிற்சில விளையாட்டுப் பொம்மைகளுடன் வெளி வராந்தாவுக்கு ஓடிவந்தான். விக்னேஸ்வரன்…! குழந்தைகள் இருவரும் குலவிக் கொண்டிருந்தனர்.
உதயத்தின் அஸ்தமனம்போல் உழைப்பினை முடித் துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த “வீட்டரசர் களை அண்டை-அயல்- எதிர் வீட்டார் இராஜ மரி யாதையோடு தெரு வாசலில் எதிர்கொண்டு அழைத்துக் சென்று கொண்டிருக்கும் வரவேற்புகளை நினைவுலகில் இருந்தல்ல; நிலவுலகில் இருந்து கொண்டுதான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
மாலை மணி ஆறு ஆகியிருக்கக் கூடும்…! இப்போ தும்கூட, ஊமையின் கனவு போல ஊர்ந்துகொண்டிருந்த வெப்பத் தன்மை புழுங்கிக் கொண்டிருந்தது. ‘இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க…” என்ற பாடலுக்கு இலக்கணமாக அமைதியாக நடந்து வந்து, தலைவாச லையும் கடந்து என் மனைவி வீட்டுக்குள் சென்று மறைந் தாள் …!
மாலைப் பள்ளி முடிந்துவரும் மக்களை வரவேற்ப தற்கு, “டைம்” பார்த்து வந்திருக்கின்றாளா…?சொல்லி வைத்தாற் போலப் பிள்ளைகளும் வந்து விட்டார்கள்…! கரும்புக்குத் தொட்டுக் கொள்ளச் சர்க்கரை” என்பது போல, வெல்லப் பாகு, தேனீர் வெளித் திண்ணைக்கு வந்தது. வேண்டா வெறுப்பாகத்தான் அதைக் குடித்துத் தொலைத்தேன்…!
எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்கள், மாலை நேரப் பள்ளி முடிந்து வந்தபோது, மக்கள் குங்கும மங்களத்தோடு மஹாலெட்சுமி போல் எதிர்கொண்டு சென்று, அவர் சுமந்துவந்த பள்ளிப் பிள்ளைகளின் பயிற்சிப் புத்த கங்கள் நிறைந்திருந்த பையை வாங்கிக் கொண்டு, தெரு வாசலிலிருந்து தலைவாசல் வரை இருவரும் “ஜோடி யாகச் சேர்ந்து, சீருடை இயக்கம்போல் ஒரே மாதிரி யாக அடியெடுத்து வைத்து ஓர் உயிர்ப்போடு நடந்து சென்ற காட்சியைக் கண்டு, “வரப்பிரசாதம் போல் அமைந்திருக்கின்ற வாழ்க்கையை அனுபவியுங்கள்…’ என்று, ஆத்மார்த்தத்தோடு நெஞ்சத்துக்குள் இதயமார வாழ்த்திக் கொண்டேன்… !
பிள்ளைகளை “டியூஷன்” வகுப்பிற்கு அழைத்துக் கொண்டு போனாள்! விக்கினேஸ் -சீனக் குழந்தை விளையாட்டைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். “செலுலாயிட்ஸ்” பொம்மைகளோடு அவர்கள் விளை யாடிக் கொண்டிருந்தார்கள்!
தங்களின் உணர்வுகளுக்சேற்ப, பொம்மைகள் செயல்பட வேண்டும் என்பதைத் தங்கள் மெய்ப்பாடு களால் மிரட்டிக் கொண்டிருந்த உணர்ச்சிக் கொந்தளிப் பைக் கண்டபோது, என்னுடைய இல்லற வாழ்க்கையும் உயிரற்ற “பொம்மையோடு” உறவாடிய நிலைதானா…? என்ற விரக்தியானதொரு வித்தியாசமான கற்பனையில் மூழ்கினேன்…!
தெரு விளக்குகள் ஒளியுமிழத் தொடங்கின…! அது இரவு ஏழு மணி என்பதற்கோர் அடையாளம் இப்போதுதான் மரங்களும் செடிகொடிகளும் இலேசாக அசையத் தொடங்கியிருந்தன. மென்மையான இளம் தென்றல் காற்று, இதமாக உடலை உரசிச் சென்றது…!
காலைக் கடன்கள் என்பது போல் மாலைக் கடன் களும் இருக்கின்றன அல்லவா.. ? இளகக் கட்டியிருந்த வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு எழுந்தேன். எப்போதும் போல் குளித்து இறைவழி பாட்டை அமைதியாக முடித்துக் கொண்டு, ஒரு “கிளாஸ்” வறக் காப்பி கலந்து எடுத்துக் கொண்டு மீண்டும் வெளிவராந் தாவுக்கு வந்து, பருகிக் கொண்டே நடைபயிலத் தொடங்கினேன்.
என்னுடன் தொழிற்சாலை அலுவலகத்தில் பணி புரியும் நண்பர் சியோங் தன் மனைவியுடன் “ஜாலியாக எங்கோ சென்று கொண்டிருந்தார். இருவருமே “ஹலோ…” என்று புன்முறுவலுடன் “விஷ்” பண்ணி விட்டு, உடலங்கள் உராய்ந்து கொள்ளும் அமைப்பில் உல்லாசமாகப் பேசிக்கொண்டு நடந்தார்கள்.
முகில் கிழித்து வெளிவரும் முழுமதி போல், நெஞ்சத் திரையினைக் கிழித்துக் கொண்டு நினைவலைகளாய்ச் சிந்தனைகள் பவனி வரத் தொடங்கின.
தனிமையில் இனிமை காணச் சிற்சில சமயங்களில் கடற்கரைக்கு உல்லாசப் பூங்காங்களுக்குச் சென்று மணிக் கணக்கில் அமைதியாக அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டோ, புதுக்கற்பனை என்று மனத் திற்குப் பட்டால் எழுதிக் கொண்டோ இருந்து பொழுது போக்குவதுண்டு. அத்தகைய வாய்ப்புகளில் என்னைக் கடந்து எழிற்காட்சியாய் இளைய-முதிய தம்பதியினர் இருகரங்கோத்து-இறுகத் தழுவிய நிலையில் சென்று கொண்டிருப்பதைக் காணும்போது விக்கித்துப் போகும் நிலை விளைவதுண்டு ..!
வசதி படைத்த செல்வந்தக் குடும்பத்தாரின் செல் வங்கள் “சாக்லேட்” தின்னும் போது, வசதிக் குறை வான வறுமைக் குடும்பத்தாரின் வாரிசுகள் அதனைக் கண்ணுற்று, ஏக்கத்தோடு உமிழ்நீர் சுரந்திருக்கும் நாவினை உலர்ந்திருக்கும் உதடுகளின் மேல்புறத்துக்குக் கொண்டு வந்து நனைத்து ஈரப்படுத்தி உறிஞ்சி விழுங்கி கொள்ளும் ஏக்கப் பிரதிபலிப்பின் எதிரொலிக் காட்சிகள் என் இதயத்தில் வந்து மோதும்……!
உணவில் ஒரு சுவையும் காணாதவன் ஊறுகாயைத் தேடுவான். ஒருங்கமைந்த வாழ்க்கையில் “ஒன்றும்’ காணாதவன் எதனைத் தேடுவான்…? உணவுக்கு ஊறுகாய்; உயிர்ப்புக்கு “ஊறுங்காயா”…?
நீண்டுவளர் சிந்தனையின் நெகிழ்ச்சியாலோ என்னவோ நெஞ்சத்தில் நெருஞ்சி முள் தைத்து விட்டது போன்று “சுருக்” என்றொரு வலி! இதய வேதனையா…! இருதய வேதனையா…? எனக்கு மூச்சு தடுமாறியது
தோப்பாயோ மருத்துவமனையில் நீட்டிப் படுத் திருந்த நெடுஞ் சாங்கடை நிலையில் கால்மாட்டில் என் மனைவி அமர்ந்திருக்கும் காட்சி என் கண்களுக்கு ஏதோ ஒரு நிழல் வடிவம் போல மங்கலாகத் தோற்றமளித்தது.
கண் விழிப்பு நேர்ந்து நான் கை கால்கள் அசைத்த போது, தனக்கு ஏதோ ஓர் உயிர்த்துடிப்பு வந்துவிட்டது போல எழுந்தோடி வந்து தலைமாட்டில் அழுகைக் கோலத்தில் நின்று கொண்டிருந்த என்மனைவியைப் பார்த்த போது கண்ணின் கடைமணியில் உருண்டு திரண்ட கண்ணீர் முத்துகள் கன்னங்களில் சரம்சரமாக வழிந்தோடின…! என் மனைவி அழுது கொண்டே தன்னுடைய சேலையின் முந்தாணித் தலைப்பால் கண்ணீரை ஒற்றி ஒற்றித் துடைத்தாள்.
அவசரம் அவசரமாக “ஹார்லிக்ஸ்” “டீஸ்பூனில்”, அள்ளி அள்ளி இதழ்க் கடையோரத்தின் வழி இனிது வார்த்தாள்…!
அளவுக்கு மீறிய சிந்தனையினாலும், கவலையி னாலும் ஏற்பட்ட மனஅதிர்ச்சியே இந்த நெஞ்சு வலிக்கு காரணம்…! அவருக்கு ஏதோ மனக்குறை; அந்தக் குறை என்னவென்று தெரிந்து, அதற்குரிய ஆசுவாசம் அளித் தால் அவருக்கு நோயுமில்லை… நொடியுமில்லை…! இது என்னுடைய உடற் கூற்றினைச் சோதித்த மருத்துவரின் மனோதத்துவ விளக்கம்..!
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்…?”-என்று பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி…! இன்று தணிந்ததென் இதய தாகம்”-என்று எழுதத் துடிக்கின்றேன்; என்னால் எழுந்திருக்க முடியவில்லை…! ஆனால் என் எண்ணங்கள் மின்னல் வேகத்தில் உள்ளன.
– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.