கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 10,671 
 
 

Until my ghastly tale is told
My heart within burns
-Samuel Taylor Coleridge

சோகக் கதை யெந்தன் சொல்லி முடிக்கு முன்
ஓயாதென் இதயத்துள் கனிந்திடும் தீ
-சேமுவெல் டெய்லர் காலெரிட்ஜ்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழு ஆகஸ்ட் பதினைந்து இந்தியர்கள் மறக்க முடியாத தினம். இந்தியா சுதந்திரம் பெற்ற தினம். நானும் ஒரு இந்தியக் குடி மகளாயிற்றே? என்னால் மட்டும் எப்படி மறக்க முடியும் அந்த நாளை? மேலும் அன்று தானே என் சுதந்திரம் பறி போன நாள்?

அந்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு நாள் மாலை அப்பா கோவிலுக்குப் போய் விட்டு வீடு திரும்பியதும் அம்மாவிடம் சொன்னார், “கோமளம் நம்ம சௌந்தர்யாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. கோவில்லெ தரகர் தர்மராஜனெப் பாத்தேன். அவர்தான் சொன்னார். ‘பையன் ரயில்வேலெ வேலேலெ இருக்கான். கை நெரெய சம்பாதிக்கறான். சொந்தமா வீடு இருக்கு. மனுஷா ரொம்ப நல்லவா. விஷயம் வெளிலெ பரவறதுக்குள்ளெ காதும் காதும் வெச்சாப்புளெ முடிச்சுடலாம் ஓய்’ ன்னார் அவர். நீ என்ன சொல்றே?”

“நான் என்னன்னா சொல்றதுக்கு இருக்கு? ஒங்களுக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு?” இது அம்மா.

சௌந்தர்யா வேறெ யாரும் இல்லெ. சாக்ஷாத் நாந்தான். பேருக்கேத்தாப்புளெ எங்காத்துலெயே நான் தான் ரொம்ப அழகுன்னு எல்லாரும் சொல்லுவா என்னெ.

எனக்கு மூணு அக்கா. அவா மூணு பேருக்கும் கல்யாணம் ஆயிடுத்து. மூத்தவளுக்கு வந்தவர் சாஸ்திரிகள். ரெண்டாவது மாப்பிள்ளெ சமையல் காரர். மூணாவது, அப்பா வேலெ செய்யற எலிமென்டரி ஸ்கூல்லெ வாத்தியார். எனக்கு ஒரு தங்கெ. அவொ இப்பொதான் ஒம்பதாவது படிக்கறா. அண்ணா தம்பின்னு யாரும் கெடெயாது.

“அப்பா எனக்கு இப்பொ கல்யாணம் வாணாம்பா. என் டீச்சர் சொல்றாப்பா, ‘கிளாசுலேயே நீதான் நன்னா படிக்கறே. காலேஜுலெ சேந்து மேலெ படிச்சு முன்னுக்கு வரணும்’ னு.”

“ஆமாண்டீ நீ படிச்சு என்ன கிழிக்கப் போறே? யாரு கிட்டெ இருக்கு பணம் காலேஜு ஃபீஸுக்கு கொட்டி அழறதுக்கு? காலா காலத்துலெ ஒங்களெத் தள்ளி உட்டூட்டு நான் போற வழியெப்பாக்க வாணாம்?”

அன்னிக்கி ராத்திரி பூரா அழுததுலெ என் கண்ணு ரெண்டும் செவந்து போச்சு. மூஞ்சியும் உப்பிப் போச்சு. ஆனா என் பேச்சு யாரு காதுலெ விழப்போறது? அவசர கதிலெ புள்ளெயாத்துக் காராளோட பேச்சு வார்த்தெ, பெண் பாக்கற படலம், நிச்சயதார்த்தம்னு எல்லாம் நடந்து முடிஞ்சுது. கல்யாணம் ஆகஸ்ட் பதினஞ்சு, 1947.

தரகர் சொன்னாப்புளெ காதும் காதும் வெச்சாப்புளெதான் நடந்துது என் கல்யாணம். பத்திரிகையெல்லாம் ஒண்ணும் அடிக்கலே. முக்கியமான சொந்தக் காராளுக்கு போஸ்ட் கார்டுலெ மஞ்சள் தடவி விஷயத்தெத் தெரிவிச்சா. ஆத்து வாசலெலேயே பந்தல் போட்டு அதுலெதான் கல்யாணம் நடந்துது. கல்யாணத்தெ நடத்தி வெச்சது வேறெ யாரும் இல்லெ. மொதல் அத்திம்பேர்தான்..

வீட்டுக் கொல்லப் புரத்துலெ கோட்டெ அடுப்பு கட்டி சமையல். சமையல் காரர் என்னோட ரெண்டாவது அத்திம்பேர். மூணாவது அத்திம்பேர் எடுபுடி வேலை.

கல்யாணத்துக்கு மாப்பிள்ளையோட அம்மா வரலெ. ஒடம்பு சரியில்லாத்துனாலெ வரலேன்னு சொல்லிண்டா.

கல்யாணம் ஆன மறு நாள் கட்டு சாதக் கூடையோட என்னையும் கூட்டிண்டு போனா பொன்மலைக்கு, அதான் புள்ளையாத்துக்கு,

புள்ளையாத்துலெ மொத்தமா ஆறு பேரு இருந்தா. இவர், இவரோட அப்பா, அம்மா, அக்கா, அக்காவோட ஒரு புள்ளெ, அப்புறம் ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணு யாருன்னு அப்பொ எனக்குத் தெரிலெ யாரும் சொல்லவும் இல்லெ. அக்கா நெத்திலெ குங்குமமும் தலெலெ பூவும் இருந்தது. ஆனா அவொ ஆத்துக் காரரெக் காணும். அவர் ஊருலெ இருக்கார். ஒடம்பு சரியில்லாத்துனாலெ வரலேன்னா.

இவரோட அம்மா ஒரு நாலு சக்கரம் வெச்செ பலகேலெ ஒக்காந்துண்டு இருந்தா. கையாலெ உந்தித் தள்ளிண்டே தான் வீடு பூரா சுத்தி வந்திண்டு இருந்தா.

எங்களெப் பாத்ததும் இவரோட அம்மா, “வாடிம்மா மகாலக்ஷ்மி வலது காலெ எடுத்து உள்ளெ வெச்சு வந்து சாமி கிட்டெ விளக்கேத்து” ன்னா. ஆத்துலெ அம்மா சொல்லு வா, “சந்த்யாகாலம் ஆச்சுடீ. வந்து சாமி கிட்டெ வெளெக்கேத்து” ன்னு. அப்பொ ஒரு நாளும் பண்ணலெ அதெ. வெளெக்கேத்தறச்சே என் கையெல்லாம் நடுங்கீத்து. நெருப்புக் குச்சி அடி வரெய்க்கும் எரிஞ்சு என் கை சுட்டுடுத்து. நல்ல வேளெ. ஏத்தி முடிச்சேன் ஒரு வழியா. ஒரே குச்சிலெ ஏத்தணுமாமே அதெ? அதுலெதானே தெரியுமாம் பொண்ணு சிக்கனமாக் குடித்தனம் நடத்துவாளா மாட்டாளான்னு?

அப்பா சொன்னபடி என்னைத் தள்ளிதான் விட்டு விட்டார். ஆனால் எங்கே? பாழுங் கிணத்தில். இது மறு நாளில் இருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது எனக்கு.

மறு நாள் காலை வீடு பெருக்கிப் பத்துப் பாத்திரம் தேய்த்திட வேலைக் காரி மாரியாத்தா வந்தாள். நான் பத்திரங்களைக் கொண்டு கிணற்றடியில் போடப் போனேன். அப்போது அவள் என்னைக் கேட்டாள், “ஏம்மா நீதான் இந்த ஊட்டுக்கு மூணாவதா வந்திருக்குற மாட்டுப் பொண்ணா? வேறெ எடமே கெடெய்க்கலியா ஒங்க அப்பாவுக்கு?”

“என்ன சொல்ல வரீங்க நீங்க?”

“மொதலுலெ ஒருத்தி வந்தா. ஒரு பொம்பிளெப் பிள்ளெயெப் பெத்துப் போட்டூட்டு கண்ணெ மூடீட்டா மவராசி. நீ பாக்குறையே ஒரு பொண்ணு. அதான் அந்தப் பொண்ணு. ரெண்டாவதா ஒருத்தி வந்தா. அவளெ ரெண்டே வருசத்துலெ வவுத்துலெ புள்ளையோட அடிச்சு வெறெட்டீட்டாங்க அவொ பொறந்த ஊட்டுக்கே.”

இதைக் கேட்ட எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. என் தலை விதியை நொந்து கொண்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்? கல்யாணப் பேச்சு அரம்பித்த போதே அதை என்னால் நிறுத்த முடிய வில்லை. நடந்த கல்யாணத்தையா அழித்து கேலண்டரைத் திருப்பிட முடியும்?

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் தரகர் சொன்னாரோ “விஷயம் வெளிலெ பரவறதுக்கு முன்னெ காதும் காதும் வெச்சாப்புளெ நாம கல்யாணத்தெ முடிச்சுடணும்” னு?

ஒரு நாள் என் மாமியார் சொன்னாள், “நாளைக்கு ஏகாதசி வரது. எனக்கும் ஒங்க மாமனாருக்கும் ஒரு வேளெ தான். அதுவும் பலகாரம் பலகாரத்துக்கு இட்டிலியோ தோசையோ வாக்கணும். ஒரு டம்ப்ளர் உளுந்தும், நாலு டம்ப்ளர் அரிசியும் எடுத்து தனித் தனியா ஊரப் போடு.

ஒரு மணி நேரம் ஆனதும் உளுந்தெ எடுத்துக் களெய்ஞ்சு, கருப்புத் தோலெ எல்லாம் எடுத்தூட்டு, கல்லொரலெ அலம்பீட்டு அதுலெ போட்டு அறெச்சு எடுத்து வை. தெரியுமோல்லியோ உளுந்து களைய, கல்லொரலுலெ அறைக்க எல்லாம்?”

“ஊம். தெரியும்” என்று தலையை ஆட்டினேன்.

இதெல்லாம் அம்மா சொல்லும் போது வேண்டா வெறுப்பாக செய்த காரியங்கள். இப்போது என் உதவிக்கு வந்தன. அன்று செய்து முடித்தேன் அதை.

மறு நாள் சாதம், ரசம், ஒரு கறி செய்து முடித்து விட்டு தோசைக் கல்லை அடுப்பில் போட்டேன். சற்று நேரம் ஆனதும் ஒரு கரண்டி மாவை எடுத்து கல்லில் விட்டு கரண்டியால் அதைப் பரப்ப முயன்றால், கல்லில் ஒட்டிக் கொண்ட மாவு அசைவதாகக் காணோம். இதை பக்கத்தில் சக்கரப் பலகையில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருந்த என் மாமியார் கேட்டார், “எண்ணை உட்டையா?”

“இல்லெ” மெல்லெச் சொன்னேன் நான்.

“நன்னா இருக்கு. எண்ணெ உடாமெ தோசெ வாப்பாளோ?.

ஒரு கரண்டி முட்டை எண்ணையை எடுத்து விட்டு மீண்டும் முயற்சி செய்தேன். அப்போது பாதி வெந்திருந்த மாவு கல்லில் ஒட்டிக் கொண்டு அசைய மறுத்து.

“தோசெக் கரண்டியெ எடுத்துத் திருப்பிப் போடு.”

அவர் சொன்னதைச் செய்ய முயன்றேன். கல்லில் ஒட்டிக் கொண்டிருந்த மாவு துண்டு துண்டாக வந்தது. அடுத்த முறை முதலில் சிறிது எண்ணை ஊற்றிப் பின் கரண்டி மாவை எடுத்து விட்டு, தோசைக் கரண்டியின் அடிப் பாகத்தால் மாவை வட்டமாக பரப்ப முயன்றால் அது வந்தது பூகோள அட்லாஸில் காணும் கண்டங்களின் படம் போல. மனதுள் நினைத்தேன், ‘தோசைக் கென்ன அழகா முக்கியம்? அது என்ன அழகுப் போட்டிக்கா போகப் போகுது? வயிற்றுக்குள் தானே போகப் போகிறது?

திருப்பி போட நினைத்து, தோசைக் கரண்டியால் முயன்றால், கல்லில் இங்கும் அங்கும் ஒட்டிக் கொண்டிருந்த தோசை துண்டு துண்டாக வந்தது. சாதம் வடிக்க, ரசம், குழம்பு, கறி என செய்யச் சொல்லி கொடுத்த அம்மா தோசை வார்க்கவும் பழக்கி இருக்கக் கூடாது?’

அவ்வளவுதான் மாமியார் உரக்கக் கத்தினார், “நன்னா இருக்குடீ நீ தோசெ வாக்கற லட்சணம். எங்களெப் பட்டினி போட்டே கொன்னூடறதுன்னு முடிவு பண்ணீட்டையா? கண்ணா ஓடிப்போய் மாடியாத்து மாமியெக் கூட்டிண்டு வாடா.” என்று’

கண்ணன், அதான் என் கணவரின் சகோதரி மகன், ஓடிப்போய் அழைத்து வந்தான் மூன்றாவது வீட்டு மடிசார் மாமியை.

மாமியைப் பார்த்ததும் கத்தினாள் என் மாமியார், “கல்யாணம் ஆகி புக்காம் வந்த பொண்ணுக்கு ஒரு தோசெ வாக்கத் தெரிய வாணாம்? லக்ஷ்மீ நீயே பாரு அவொ தோசெ வாத்திருக்கற லட்சணத்தெ.”

பதில் பேசாமல் நின்றிருந்தார் லக்ஷ்மி மாமி. திடீரெனப் பலகை வண்டியை அடுப்பருகே கையால் தள்ளி கொண்டு வந்த என் மாமியார் என் வலது கையைப் பிடித்து இழுத்து தோசைக் கல்லின் மீது வைத்துத் தேய்த்தாள்.

“அய்யோ… அம்மா” என்று அலறினேன் வலி பொறுக்க முடியாமல்.

வாயடைத்து நின்ற மாடியாத்து மாமி வந்த வழியே திரும்பிச் சென்றாள். வேறென்ன செய்ய முடியும் லக்ஷ்மி மாமியால்? ஹிட்லர் அவதாரத்திடம் சண்டையா போட முடியும்?

திரும்பிடப் பழய நிலைக்கு என் கை பிடித்துக் கொண்டது ஒரு மாதம். இன்றும் என் வலது கையில் பெரிய பெரிய தழும்புகளுக் கிடையே தான் ரேகைகள் ஓடும், மலைகள் இடையே ஓடும் நதிகள் போல.

அக்டோபர் மாதம் வந்தது. கூடவே தீபாளியுந்தான். நீபாவளிக்கு ஒரு வாரம் முன் அப்பா வந்திருந்தார், கடிதம் ஒன்று போட்டு விட்டு.

“இந்த வருஷம் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் தலை தீபாவளி. நீங்க எல்லாரும் தீபாவளிக்கு எங்காத்துக்கு வரணும்” னு என் மாமனார் கிட்டெ சொன்னார். அதுக்குள்ள அங்க வேகமா வந்த என் மாமியார் சொன்னா, “தாராளமா தீபாவளி கொண்டாடுங்கோ. நாங்க எல்லாரும் வரதுங்கெறது முடியாது. எங்க புள்ளெயயும் ஒங்க பொண்ணையும் அனுப்பி வெக்கறோம். ஒண்ணு சொல்ல மறந்தூட்டேன். கல்யாணத்தும் போதே புள்ளைக்கு கம்பிக் கரெ போட்டு வேஷ்டி எடுத்தூட்டேள். தீபாவளிக்காவது நல்ல அகலமா ஜரிகெக் கரெ போட்டு வேஷ்டி துண்டு எடுங்கோ.”

“சரி மாமி செஞ்சூடறேன்.” சன்னக் குரலில் என் அப்பா.

“இருங்கோ இருங்கோ. நான் சொல்ல வந்ததெ இன்னும் முடிக்கலெ. தீபாவளி முடிஞ்சதும் எங்க புள்ளெ மறு நாளே திரும்ப வந்தூடுவான். ஆபீசு போகணு மோல்லியோ. ஒங்க பொண்ணு ஒங்க கூட கொஞ்ச நாள் இருந்தூட்டு வரட்டும். நாங்க லெட்டர் போடறோம். அப்புறமா அழெச்சிண்டு வந்தா போறும்,” என்றாள் என் மாமியார்.

என் மனதுள் ஒரு சந்தோஷம். அப்பா, அம்மா, தங்கை இவர்களோடு கொஞ்சம் நாட்கள் இருக்கமுடியுமே!

வெகு நாட்களுக்கு நீடிக்க வில்லை இந்த சந்தோஷமும். காரணம் தீபாவளி கழிந்து ஒரு மாதம் தாண்டி விட்டது. ஆனால் அவர்கள் விட்டில் இருந்து ஒரு தகவலும் இல்லை. அப்பா போட்ட இரண்டு கடிதங்களுக்கும் பதில் இல்லை.

“ஒருக்கால் நாம் போட்ட கடுதாசு போய்ச் சேரலையோ என்னமோ? நான் நேரிலே போய் பாத்தூட்டு வரேன்” னு கிளெம்பிப்போன அப்பா அன்னிக்கி சாயங்காலமே மூஞ்சியெத் தொங்கப் போட்டுண்டு திரும்பி வந்தா.

அம்மா கேட்டா, “ஏன்னா என்னாச்சு? ஏன் இப்பிடி மூஞ்சியெத் தொங்கப் போட்டுண்டு வரேள்?” னு.

“ஒங்க பொண்ணெ நீங்களே வெச்சுக் கோங்கோ. ஒரு தோசெ கூட வாக்கத் தெரியாத பொண்ணு எங்களுக்கு வாணாம்னூட்டா”, அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னார் அப்பா.

நான் அழவில்லை. மாறாக என் உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டேன் ஒரு முறை. உள் மனம் சொன்னது. ‘இதுவும் நன்மைக்கே’ என்று.

கல்யாணம் ஆகி மூன்றாவது மாதமே இரண்டு மாத கர்பிணியாய் வீடு திரும்பிய எனக்கு, அதற்கடுத்த ஆண்டு மே மாதம் ஒரு பிள்ளை பிறந்தது. அப்பா அவர்களுக்கு கடிதம் போட்டார். பதில் எதுவும் வரவில்லை.

அடுத்த வருஷமே தங்கைக்கு ஒரு தாலூக்கா ஆபீஸ் குமாஸ்தாவைத் தேடிப்பிடித்து கல்யாணம் செய்து வைத்தார்.

தங்கை கல்யாணம் முடிந்த ஆறாம் மாதம் அப்பா சொன்னபடித் தன் கடமை முடித்து போக வேண்டிய வழி தேடிப் போய் விட்டார். போனவர் சும்மாவா போனார்? அம்மாவையும் இரண்டே மாதத்திற்குள் தன்னிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டார். காசு இருந்தோ இல்லையோ பரஸ்பர நேசமும் விசுவாசமும் இருந்தது அவர்களிடையே.

அத்திம்பேர் மூவரும் கிராமத்தில் இருந்தால் முன்னேற முடியாது என்று தத்தம் குடும்பத்தோடு பட்டணம் போய் விட்டார்கள்.

அப்பா, அம்மா, அக்காக்கள், தங்கை என சந்தோஷமாய் வாழ்ந்து வந்த அந்த சின்ன விட்டில் நான் தனியாக விடப் பட்டேன். இரண்டு வீடுகளில் சமையல் செய்து எங்கள் வயிற்றைக் கழுவினோம். பையன் இலவசப் பள்ளியில் படித்தான் பதினொன்று வரை. பின் ஒரு தரும நிதியில் இருந்து உதவிச் சம்பளம் பெற்று, பொறி இயல் பட்டம் படித்து வெளி நாடு சென்றான், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நிற்காது ஓடுகிறது அது. ஓடி விட்டன இருபத்தைந்து வருடங்கள்.

ஒரு நாள் காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, கையில் கோலூன்றி, தட்டுத் தடுமாறி என் முன் வந்து நின்றார் ஒரு மொட்டைத் தலைக் கிழவர். “என்ன வேணும்? யாரைப் பாக்கணும்?”

“ஒன்னெத் தான் பாக்கணும். நீ தான் வேணும்.”

“என்ன ஒளரறேள்? பயித்தியம் புடிச்சிடுத்தா?”

“ஒளரவும் இல்லெ. பயித்தியமும் புடிக்கலே. பயித்தியம் தெளிஞ்சிருக்கு.”

“யாரு நீங்க?”

“என்னெத் தெரிலே? நான் ஒன்னோட ஆத்துக்கார் ராமன்மா.”

கட்டுக் குடுமி எங்கே? வரிசையாய் இருந்த முப்பத்திரெண்டு பற்கள் எங்கே? இரண்டையும் காலம் கொண்டு போய் விட்டதோ?

நெருப்பைக் கக்கிட நினைத்த என் உள்ளத்து எரிமலையை அடக்கி, “உள்ளே வாங்கோ” என்றேன்.

உள்ளே வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார். “அக்கா, அம்மா பேச்செக் கேட்டு ஒன்னெ ரொம்ப கொடுமைக்கு ஆளாக்கிட்டேம்மா. என் தப்பு எனக்குப் புரிஞ்சிடுத்து. அவா எல்லாரும் போய்ச் சேந்தூட்டா. நீ என்னெ மன்னிச்சு எங்கூட வந்து இருக்கணும்மா. ஒன்னெ நன்னா வெச்சுக்குவேன். ஆயுசு பூராக் காப்பாத்துவேம்மா.”

யார் யாரை ஆயுசு பூரா வெச்சு நன்னா பாத்துக்கப் போறது? கிழவருக்கு தனியா இருக்க முடியலே. அதான் இப்பொ வந்திருக்கார் என்னெத் தேடி. யாரு போவா இவர் கூட? அடுத்த கணம் நினைத்தேன் இந்த உலகில் எது சாசுவதம்? உடல் நலிந்த ஒருவனுக்கு ஒத்தாசை செய்ததாகத் தான் இருக்கட்டுமே என்று.

“எனக்கு ஒரு இருபது நாள் டைம் குடுங்கோ. என் முடிவெ சொல்றேன்” என்று சொல்லி ஒரு காப்பி போட்டுக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தேன். அன்றே பையனுக்கும் தபாலில் செய்தி சொன்னேன்.

பையனிடம் இருந்து கடிதம் வந்தது. “அம்மா அவர் என்ன இருந்தாலும் என் அப்பாம்மா. பாவம் வயசான காலத்துலெ தனியாக் கடந்து தவிக்கறார் போல இருக்கும்மா. என்னாலெ ஒன்னையும் இந்த ஊருக்கு நிரந்தரமா அழெச்சிண்டு வரதுக்கு முடியாது. நீ அவரோட போனா ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருக்கும்மா” என்று வந்தது பதில்.

சொல்லி வைத்தாற் போல் இருபத்தோராவது நாள் வந்து சேர்ந்தார் என் கணவர். சாப்பாடு முடிந்ததும், எனது துணி மணிகளை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன் அவருடன்.

பொன்மலை வந்து சேர்ந்ததும் பழய விட்டிற்குச் செல்ல வில்லை “நான். அதை வித்தூட்டு வேறெ வீடு வாங்கி இருக்கேன், பழய ஞாபகங்களே வாணாம்னு” என்றார். புதிய வீட்டில் என்னை விட சுமார் ஐந்தாறு வயது அதிகமுள்ள ஒரு மாமி இருந்தாள்.

“யார் அது? சமையல்கார மாமியா?” என்று கேட்டேன்.

“இல்லை யில்லை. அது அது ஒனக்கு அக்கா. அதான் என்னோட ரெண்டாவது சம்சாரம்” என்றார் அவர்!

ராஜ வம்சமோ இவர் இடது பக்கம் ஒன்று வலது பக்கம் ஒன்று என வைத்துக் கொள்ள?

கனவு காணும் நாட்களெல்லாம் கழிந்த பின்னே கணவனுடன் இருந்தென்னா? இல்லாதிருந்தென்ன? இருந்தும் முடங்கிட வில்லை என் மாமியார் போல நான்.

நடந்து கொண்டு தான் இருக்கிறேன் வீட்டுள், ஆனால் நடைப் பிணமாய்.

கண்ணீரில் கரைந்த
கதை யொன்று கண்டேன்
தண்ணீரில் எழுதினாளோ அவளதை
மண்ணிலே உளரே இப்படிப்
பண்பற்ற மாந்தர் இன்றும்.

என்னைப் பற்றி சில (பல?) வரிகள்: எழுதும்படியாக ஒன்றுமே இல்லை. இருப்பினும் எழுதுகிறேன். பிறந்தது சிதம்பரத்தில், 1929 ஜூன் 15 அன்று. தந்தை தென் இந்திய ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். நான்கு அண்ணன்கள். நால்வரும் இன்று இல்லை. மூன்று தங்கைகளில் இருவர் இன்று இல்லை. பெற்றோர்கள் நரசிம்மன், ராஜலக்ஷ்மி - படம் கீழே சாந்த ஸ்வ்ரூபிகள். சுற்றத்தாரையும் அரவணைத்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர தனக்கென ஒரு சுகமும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *