(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த அழகான வீட்டுக்கு அவர்கள் இன்றுதான் புதிதாய்க் குடிவந்தார்கள். அவர்கள் புதுவீடு வாங்கி அதில் புதுக்குடித்தனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒருமனதான லட்சியம் இன்று நிறைவேறியுள்ளது. தாங்கள் வாங்கிய அந்த வீட்டுக்கு நண்பர்களை உறவினர்களை அழைத்துப் “புதுமனை புகுவிழா” என்ற பெயரில் ஒரு மகிழ்ச்சிகரமான விருந்து நிகழ்ச்சியையும் நடத்த அவர்கள் திட்டமிட்டார்கள்.
அந்த வைபவத்திற்கு முன்பாக வீட்டை அலங்கரிக்கும் பொருட்டு இரண்டுபேரும் இரண்டு தினங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அந்த வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். பழைமை விரும்பியான அரவிந்தனுக்கு அவன் மனம் போலவே காயத்ரி வந்து மனைவியாக வாய்த்ததில் அளவு கடந்த ஆனந்தம். அவன் எள் என்று சொல்வதற்கு முன் அவள் எண்ணெயாய் நின்றாள்.
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படி ஒரு பெண்ணா என்று அரவிந்தனின் பெற்றோர்கள் நண்பர்கள் மூக்கின் மீது விரலை வைத்தார்கள். இத்தனைக்கும் வெளி நாடு சென்று படித்துவந்த பொருளாதாரப் பட்டதாரி. பன்மொழிகளில் புலமை பெற்றவள். உடம்பையும் உள்ளத் தையும் எப்போதும் நிதானமாய் வைத்திருக்கும் திறமைசாலி.
அரவிந்தன் ஒரு நாற்காலியை எடுத்து ஒழுங்கு பண்ணுவதற்குள் அவள் படுக்கையறை, பூஜையறை என்று இரண்டு மூன்று அறைகளை ஒழுங்குபடுத்தி வந்து அவன் முன் நின்றாள். அவன் வேலை செய்து களைத்துப் போய் நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். அவளைப் பார்த்து வியந்து எதையோ கேட்க வாய் திறந்தான். அதற்குள் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் காயத்ரி. மேலே சுழன்று கொண்டிருந்த காற்றாடியை மிஞ்சி அவன் உடம்பு வியர்வையால் தெப்பமாகிக் கொண்டிருந்தது. காயத்ரி தன் சேலை முன்தானையால் அவன் நெற்றியைத் துடைத்தாள்.
“சொன்னா கேட்டாதானே! கொஞ்ச நேரம் ஓடிட்டு வாங்க… உடம்பு குறையும். மூச்சு வாங்காதுன்னு சொன்னா இந்தக் காதில் வாங்கி அந்தக் காதுல விட்டுடுறீங்க… இந்த முப்பத்தஞ்சு வயசிலேயே இப்படி இப்படி உப்பிக் உப்பிக் கிடந்தா பிற்காலத்தில எப்படியோ..?
தரிசனமாய் அவள் சொல்லிக் கொண்டிருக்கக் “கிடைத்தது அதிர்ஷ்டம்” என்று திடீரென்று அவள் மடியில் படுத்துக் கொண்டான். அவள் சுதாரித்துக் கொண்டாள்.
“என்ன இது… பிள்ளை மாதிரி… எழுந்துருங்க… எழுந்துருங்க…” சொல்லிக் கொண்டே அவனைத் தூக்கி நிமிர்த்தி சோபாவில் அமர்த்திவிட்டு அவள் பரபரப்பாய் எழுந்தாள். அரவிந்தன் அவளது கையைத் தாவிப் பிடித்து இழுத்து அருகில் அமர்த்தினான்.
“எதுக்காக இவ்வளவு சிரமப்படறே! மெதுவா மெதுவா செய்தால் போதாதா… எல்லா வேலையும் நீயே செய்தா உடம்பு என்னத்துக்காகும். உன்மேல நான் எவ்வளவு பிரியம் வெச்சிருக்கேன் தெரியுமா?… உனக்கு ஏதாச்சும் ஒண் ணுண்ணா என்னால தாங்க முடியாதும்மா… சொன்னா கேளு… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ..”
அவன் வார்த்தையில் இதயத்தின் ஈரம் தெரிந்தது. அவள் அவனை முழுமையாய்க் கண்களை விரித்துப் பார்த்தாள். அப்புறம் உதட்டைக் குவித்துச் சிறிதாகச் சிரித்தாள்.
“நெஜமாவே நீங்க என்ன லவ் பண்றீங்களா… இன்னுமா லவ் பண்றீங்க… நம்பவே முடியலியே.” சொல்லிக் கொண்டே சிரித்தாள்.
அவன் முகம் சுண்டிப் போனது. ஏக்கமாய்ப் பார்த்தாள். அவளது அந்தப் பெரிய கண்கள்! பாரதி சொன்ன அந்தச் சுடர்வீசும் கண்கள்! அந்தக் கண்களின் தீட்சண்யம் கண்டு தானே அவன் அவளை அப்படி ஆழமாய்க் காதலித்தான். அந்தக் காதலின் ஆழம் புரியாமல் இப்படிக் கேட்கிறாளே இவள்!
“காயத்ரி…நெஜமாவே நான் உன்னை லவ் பண்றேன்… இந்த உலக அளவுக்கு நான் உன்னை லவ் பண்றேன் காயத்ரி.. இது எப்பவும் மாறாது. என்றைக்கும் மாறாது… யாராலும் மாற்ற முடியாது.. இந்த உடம்புல உயிர் உள்ள வரைக்கும் அது வளர்ந்துகிட்டே இருக்கும்… இம்மியும் குறையாது..
உணர்ச்சிப் பிரவாகமாய் ஆகிப்போனான் அரவிந்தன். அவன் அன்பில் மூழ்கிப்போன காயத்ரி அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அவளது விம்மி எழுகின்ற நெஞ்சில் குழந்தையாய் அவன் முகம் புதைத்திருந்தான். நேரம் ஓடியது. இருவரும் எழுந்தார்கள். கடையில் வாங்கி வந்திருந்த சிற்றுண்டியை உண்டார்கள். மறுபடியும் வேலை ஆரம்பமானது. முன்வாசல், வரவேற்பறை என்று ஒவ்வொன் றாய் முடித்துக் கொண்டு உட்புற அறைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். முன்பே காயத்ரி சில இடங்களை ஒழுங்கு படுத்தியிருந்தாள். அரவிந்தன் அவற்றை மிகுந்த உற்சாகமாய் ரசித்துக் கொண்டு வந்தான். சட்டென்று அவன் கண்ணில் மேசைமேல் இருந்த ஒரு படம் பட்டு அவன் பார்வையையும் நினைவையும் அங்கேயே நிறுத்தியது. லேசாய் அவனுக்குள் ஒரு தவிப்பு!
இதுவரையில் அவன் கண்ணில் படாத அந்தப் படத்தை இன்றுதான் அவன் முதன் முதலாகப் பார்த்தான். அதுவும் முக்கியமான இடத்தில் அது முதலிடம் வகித்துக் கொண்டிருந்ததுதான் அவனுக்கு வியப்பாகவும் புதுமை யாகவும் இருந்தது.
பார்த்ததுமே மனத்தில் பட்டென்று பதிவாகும் முகம் அது. அறிவொளி வீசும் அகன்ற நெற்றியும், அதில் விழுந்து புரளும் சுருண்ட கேசமும், எழுதி வைத்தது போன்ற புருவமும் எடுப்பான மூக்கும், கொஞ்சம் கர்வமும், அதே நேரத்தில் கருணையும் சேர்ந்த பார்வையும்… நிறம்கூட எடுப்பாகத்தான் இருந்தது.
ஆணுக்கு ஆணே ஆசை கொள்ளும் முகம்! யாரவன்? யோசித்தான். காயத்ரி அடுத்த அறையில் எதையோ அடுக்கிக் கொண்டிருந்தாள். அரவிந்தன் மனைவியின் படிக்கும் மேசையில்…அதுவும் அவளது புத்தக அலமாரிக்கு அருகில் அவளது பார்வை முழுமையாய்ப் படும் இடத்தில் கம்பீர மாய் உட்கார்ந்திருக்கும் அந்தப் படத்தையே பார்த்தான். இதுவரை அவன் அவனை நேரில் பார்த்ததே இல்லை. காயத்ரியும் அவனிடம் சொல்லவோ அறிமுகப்படுத்தவோ இல்லை. திருமணமாகி முழுசாய் ஒரு மாதம் அவனது பெற் றோர் வீட்டில் இருந்துவிட்டு இப்போதுதான் அவர்களின் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இப்போதுதான் அந்தப் படமும் வெளியே வந்திருக்கிறது. அவனது உயிரினும் மேலான காயத்ரி இதை ஏன் மறைத்தாள்… இவன் அவளுக்கு யார்? இப்போது எங்கிருக்கிறான்?
குழம்பிய மனத்துடன் நடந்து கொண்டிருந்தவன் கண்ணில், அலமாரியில் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த போட்டோ ஆல்பங்கள் படுகின்றன. ஓடிப்போய் அத்தனை ஆல்பங் களையும் அள்ளிக் கொண்டு வந்து மேசையில் பரப்பிக் கொண்டு, அரக்கப்பரக்க எதையோ தேடுகிறான். ஊகூம்…
காணவில்லை, எங்கும் அவன் முகத்தைக் காணவில்லை. அவனின் உறவினர்கள், நண்பர்கள் இன்னும் யார் யாரோ இருந்தார்கள். ஆனால் இந்தப் படத்தில் இருப்பவன் மட்டும் அங்கே எங்கேயும் காணப்படவில்லை. ஆல்பத்தை மூடி எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்து படுக்கையில் படுத்தான். மனக்குரங்கு கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் தாவி ஓடியது.
அறிவும் அழகும் அடக்கமும் அதே வேளையில் அச்சம் அடக்கம் பயிர்ப்பு என்று சொல்லக்கூடிய நாலுவகைக் குணங்களையும் கொண்ட அந்த அற்புதமான பெண் காயத்ரி மேல் முதன் முதலாக அவனுக்குச் சந்தேகம் எழுந்தது.
அவன் அவளுடைய முன்னாள் காதலனாக இருப் பானோ… மனம் நினைத்து நினைத்துக் குழம்பி மண்டை வலியும் உண்டாகிவிட்டது. வலது கைப்பெருவிரல் நெற்றிப் பொட்டில் கை வைத்து மெல்ல அழுத்தினான். வலி கூடியதே அன்றி குறையவே இல்லை.
சிறு குழந்தைபோல் இப்போது அவன் அழ ஆரம்பித்து விட்டான். வாய்விட்டு அழாமல் மனத்துக்குள் அவன் குமைந்து கொண்டிருப்பதை விழிக் கடையில் கசியும் நீர்த்துளிகள் எடுத்துக் கூறின.
அவன் எவ்வளவு தூரம் காயத்ரியை நேசித்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். அந்த நேசத்தை இன்னொருவன் பொய்யாக்குவதா..? மல்லாந்து படுத்துக் கொண்டு சுழலும் காற்றாடியைப் பார்க்கிறான். பளபளக்கும் காற்றாடியின் வட்டமான பாகத்தில் மின்னும் ஒளிக் கீற்றில் காயத்திரியின் பிம்பம் தெரிகின்றது. திரும்பிப் பார்க்கிறான் அவள் அவன் தலைமாட்டில் நிற்கிறாள்.
“ஏன்! என்ன ஆச்சு உங்களுக்கு..! அடடே கண்ணில தூசு விழுந்திடுச்சா… என்ன இது கண்ணில் சிவப்பா…!”
ஒரு தாயின் பரிவும் பாசமும் பரபரப்புமாய் அவள் அவன் முகத்தருகே குனிந்து புடைவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துவிட்டு அவன் அருகில் அமர்கிறாள். அவன் மௌனமாய் அவளைப் பார்க்கிறான். பேசாமல் அவளையே பார்த்தவன் சட்டென்று எழுந்து அந்த அறையிலிருந்து வெளியேறுகிறான். வேலை செய்த களைப்பில் ஓய்வெடுக்கலாம் என்று வந்தவளுக்கு அவனது போக்கு அதிர்ச்சியைத் தருகிறது. காரண காரியமில்லாமல் இப்படி அடம் பிடிப்பதும் அடாவடித்தனம் செய்வதும் அவர்கள் காதலிக்க ஆரம்பித்த காலத்தில் அவனிடம் அவள் கண்ட விஷயங்கள்தாம். ஆனால் அது இப்போதும் தொட ருவதுதான் அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. எழுந்தாள். விடுவிடுவென அவனிடம் போனாள். அவன் அருகில் போய்த் தோளில் கை வைக்கப் போனவள் அவள் பார்வை விழுந்து கிடந்த இடத்தில் தன் பார்வையைப் பதித்தாள். பளிச்சென்று உண்மை புலனாகியது.
அவனை விட்டு விலகிப் போய்த் தன் வேலைகளை மளமளவென்று முடித்துவிட்டுக் குளித்து உடைமாற்றிக் கொண்டு படுக்கையறையில் படுக்கையை ஒழுங்காய்த் தட்டிப் போட்டுவிட்டு அவனிடம் வருகிறாள். அவன் அடித்து வைத்த ஆணிபோல் அங்கேயே நின்றிருந்தான். மேசை மீது இருந்த அந்தப் படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவனிடம் வந்து
“உங்க பிரச்சினை இதுதானே..!” அழுத்தமாய் அவள் கேட்க அவன் அதிர்ந்து போனான்.
“என்ன பெண் இவள்…!’ என் மன ஓட்டம் அவளுக்கு எப்படித் தெரிந்தது….?” மனத்துக்குள் வியந்து கொண்டு மௌனமாய் அவளைப் பார்த்தான். இவர் என்னோட அப்பா…!” மறுபடியும் ஓர் அதிர்வெடி… அரவிந்தன் ஆடிப் போனான். அவளுடைய அப்பாவை அம்மாவை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் செத்துப் போய்” பத்து வருடங்கள் ஆகிவிட்டன என்பதும் தெரியும். அவனிடம் போய் அவள் இப்படிச் சொன்னதும் அவன் முதலில் அதிர்ந்தான். அப்புறம் கிண்டலாய்ச் சிரித்தான்.
“என்னடி பேசறே…யாருக்கு யாரு அப்பா… என்ன இது புதுசா கதை..! இந்தச் சுத்தி வளைக்கிற விஷயமெல்லாம் இங்கே வாணாம். இவன் யாரு… இவனுக்கும் உனக்கும் என்ன உறவு! இவன் படத்தை ஏன் இங்கே கொண்டு வந்து வெச்சிருக்கே..எனக்கு உண்மை தெரிஞ்சுக்கணும்..”
சராசரி கணவன் நிலையில் நின்று அவன் பேசினான். அவள் அவனைப் பார்த்தாள்.
“நீங்க நம்பினாலும் நம்பாமப் போனாலும் இவர்தான் என்னோட அப்பா..” அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள். அரவிந்தனின் ஆண்மைக்குச் சவாலாய் இருந்தது அந்த வார்த்தை.
“காயத்ரி…நீ எவ்வளவு உயர்வான குடும்பத்துப் பெண்… உன்னோட குடும்ப கௌரவத்தைத் தெரிஞ்சுதான் உன்னை நான் காதலிச்சுக் கைப்பிடிச்சேன்… உன்னைச் சின்ன வயசில அனாதையாக்கிட்டு கார் விபத்தில உங்கப்பா அம்மா செத்துப் போன விஷயம் ஊரறிஞ்ச விஷயம்… அப்படி இருக்க எவனையோ போய்.. அப்பான்னு நாகூசாம சொல் றியே… இதுதான் உன் படிப்போட லட்சணமா?” அவன் கத்தினான். அவள் அமைதியாய் இருந்தாள். மௌனம் நிலவ ஆரம்பித்தது. கோபம் தலைக்கேறி மண்டையே வெடித்து விடுமோ என்ற பயம்கூட வந்துவிட்டது அரவிந்தனுக்கு. அருகில் போய் அவள் முடியைப் பிடித்து உலுக்கினான்.
சொல்லுடி…இவன் யாரு… குரல் கரகரத்தது. அவன் கையை மெல்ல விலக்கிவிட்டாள்.
“நான் சின்ன வயசில அனாதையானது உங்களுக்குத் தெரியும்….ஆனா அதுக்கப்புறம் நான் எங்கே இருந்தேன், எப்படி வளர்ந்தேன் எப்படிப் படிச்சு வளர்ந்தேன்னு உங்களுக்குத் தெரியுமா?”
முகத்தில் அறைந்தாற்போல் வந்த கேள்வியால் அதிர்ந் தான் அரவிந்தன்.
எதிர்பாராத விதமான கார் விபத்தில் அவுங்க ரெண்டு பேரும் செத்துப் போகத் தரித்திரம் பிடித்த நான்தான் தாய் தந்தை ரெண்டு பேரையும் விழுங்கிட்டேன்னு என் சொந்தங்களெல்லாம் என்னை வீதியிலே விட்டுவிட்டு எங்கேயோ போய்ட்டாங்க… அந்த நேரத்தில் இந்தப் புண்ணியவான் என்னைத் தத்தெடுத்துக்கிட்ட மாதிரி அவர் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் எனக்குத் துணி கொடுத்து, சாப்பாடு கொடுத்து, படிப்புக் கொடுத்து, இந்த அளவுக்கு இன்றைக்குச் சமுதாயத்தில தலை நிமிர்ந்து வாழ வெச்சவரு… இப்ப சொல்லுங்க… ஒரு பிள்ளைக்குத் துணி கொடுத்து, சோறு கொடுத்து, கல்வி கொடுத்தா அவன் யாரு…! அப்பனா…இல்லே..!” வார்த்தைகளின் உஷ்ணம் அவனைப் பொசுக்கியது. தடுமாறிப் போனான்.
“ஆயிரந்தடவை, காயத்ரி, ஐ லவ்யூ ஐலவ்யூ -ன்னு சொல்லுவீங்களே.. அந்த லவ் இதுதானா..? இவ்வளவு தானா உங்க காதலோட மரியாதை! உங்களை நினைச்சி நான் எவ்வளவு பெருமைப்பட்டேன்…. ஆனா நீங்கள் இவ்வளவு தூரம் மோசமா… ச்சே.”
அவள் கையில் படத்துடன் மேசைக்குச் சென்றாள். அதை மறுபடியும் அங்கே வைத்தாள்.
இவர் செத்துப் போயிட்டாருங்க.. ஆனா என் கூடவே இன்னும் உயிரா வாழ்ந்துகிட்டு இருக்காரு. நீங்க என்கிட்டே விரும்பற அன்பு, அடக்கம், அறிவு, பண்பாடு, ஒழுக்கம் எல்லாம் அவர் கத்துக் கொடுத்தவை. இந்தத் துணிச்சலும் அவர் தந்ததுதாங்க… அவரை நான் பூஜிக்கிறேன். நான் கணவரோட புதுக்குடித்தனம் போனா அந்த இடத்தில அன்றாடம் இவர் இருக்கணும்கிறது என்னோட ஆசைங்க. அவர் முகத்தை நான் பார்க்கிறப்ப எனக்கு என்னோட அப்பா அம்மா ஞாபகம்தான் வரும்.
அந்தத் துணிச்சல் மிகுந்த பெண் திடீரென்று குழந்தையாய்த் தேம்ப ஆரம்பித்துவிட்டாள். அரவிந்தன் துடித்துப் போனான். அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.
“காயத்ரி… காயத்ரி… உன்மேல நான் வெச்சிருக்கிற அளவுகடந்த அன்புதான் இந்தச் சந்தேகத்திற்குக் காரணம். என்னை நீ மன்னிச்சிடு. நான் உன்மேல வெச்சிருக்கிற அன்பைப் பத்தி சந்தேகப்படாதே.. ஐ லவ் யூ காயத்ரி… ஆல்வேஸ் ஐ லவ் யூ..”
அவள் எதையோ சொல்ல வாய் திறந்தாள். அரவிந்தன் அந்தக் குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களைத் தன் உதடுகளால் மூடினான்.
– சிங்கை வானொலி 17-2-96
– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.