(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
போப்பரைத் திருப்பிச் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக ‘வரன் பார்ப்போம்’ என்று வெளியாகியிருந்த பகுதியில் மணமகன் தேவை பகுதியை வாசித்துக் கொண்டே வந்தான் குமார்.
“மூன்று வயது மகனோடு தத்தளிக்கும் விதவைப் பெண்ணிற்கு மணமகன் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:” பத்மினி சங்கச் செல்வி” என ஆரம்பித்த செய்தியை வாசித்ததும் அவனுக்குள் ரத்த ஓட்டம் வேகமாக மாறியது.
தன்னுடைய வியாபார நிமித்தம் ஈரோட்டுக்கு வந்த குமார், பேப்பரில் வந்த அந்தச் செய்தியை திரும்ப ஒரு முறை வாசிக்க ஆரம்பித்தான்.
“பத்மினி சங்கச் செல்வி” அவனை அறியாமல் அவன் உதடுகள் அந்தப் பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன.
“பத்மினி, நீ விதவையா… கணவனுக்கு என்னாயிற்று? நீ… நீ ஈரோட்டில்தான் இருக்கிறாயா? நீ செய்த ஆசிரியை வேலை என்னாயிற்று. என்னைச் சந்தித்தால் என்னோடு பேசுவாயா? என்னோடு சண்டை பிடிப்பாயா? உன்னைத் தேடியது உண்மை. ஏன் இப்படி செய்து கொண்டாய் என்று மனதிற்குள் வலிக்கிற மாதிரி கேட்க நினைத்தது உண்மை. ஆனால் உன்னை இந்த நிலையில் பார்க்க கனவு கூட கண்டதில்லை, மனதுக்குள் உளைச்சல் எழுந்தது.
‘போய் அவளைச் சந்திக்கலாமா’ என்று யோசித்தான். தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து காபி வர, எடுத்து அருந்திக் கொண்டு, பேப்பரை பார்த்து பத்மினியின் தொலைபேசி எண்ணை தேடிப் பிடித்து தொடர்பு கொண்டான்.
எதிர் முனையில் மணி ஒலிக்க, தனக்குள்ளே ‘கொஞ்சம் அசாதாரணமாக உணர்ந்தான். திடீரென்று குப்’ பென்று வியர்த்துக் கொட்டியது.
‘என்ன பேசப் போகிறோம்? இவளிடம் ஆறுதல் சொல்லப் போகிறேனா இல்லை சண்டை போடப் போகிறேனா? தொலைபேசியை வைத்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே எதிர் முனையில் யாரோ தொலைபேசியை எடுத்தார்கள்.
‘ஹலோ’ என்ற பெண்மணியின் குரல் கேட்க கொஞ்சம் தயங்கியவன் “பத்மினி இருக்கிறார்களா?” என்று கேட்டான்.
“பத்மினி கோயிலுக்குப் போயிருக்கா. நீங்க யார் பேசறது” என்ற அதிகாரத் தொனி கேட்டது.
“அது… வந்து… பேப்பரிலே வரன் பார்ப்போம்பகுதியை பார்த்தேன்” நிதானமாகப் பேசினான் குமார்.
“ஓ, அந்த விஷயமாகப் பேச வேண்டுமா? அதிலே கொடுத்திருக்கிற முகவரிக்கு நேரிலே வாங்களேன் பேசலாம்” என்று எதிர் முனை துண்டித்தது.
‘நான் ஈரோட்டிற்கு வந்தது வியாபார விஷயமாக இப்போது நான் பத்மினியைச் சந்திக்கப் போனால்… என் வியாபாரம் என்னாவது.. நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று எண்ணி தயார் செய்து கொண்டு கிளம்பினான்.
கீழே வந்து, ஆட்டோவில் ஏறி “பெரியார் தெரு மூன்றாம் குறுக்கு வழி போப்பா” என்றான்.
அந்த முகவரியைக் கண்டுப்பிடித்து, கதவைத் தட்டிய போது “வாங்க யார் வேண்டும்” என்ற அந்த குரல்., வயதான பெண்மணி கேட்டாள்.
“இன்று காலையில் வரன் பார்ப்போம் விஷயமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டவன் நான் தான்” என்றான் குமார்.
“அப்படியா? வாங்க தம்பி உட்காருங்க காபி கொண்டு வர்றேன்” என்றாள் கோமதி.
“அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் போதும்” என்றான்.
கோமதி, ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இருங்க தம்பி, பத்மினி விதவை என்று தெரிந்தும் இங்கு வந்ததற்கு மிக்க சந்தோஷம். இப்படிப் பட்ட இளைஞர்கள் கண்டிப்பாக நம் நாட்டிற்குத் தேவை.
என்ன பார்க்கிறீர்கள்? பத்மினி கோயிலுக்குப் போய் விட்டு இன்னும் வரவில்லை. பையனும் அவளோடுதான் கோயிலுக்குப் போயிருக்கிறான். உங்க பெயர் என்ன சொன்னீங்க தம்பி..” அவன் சொல்லி முடிப்பதற்குள் பத்மினி தன குழந்தையோடு உள்ளே வர, “இதோ கோயிலுக்குப் போய் விட்டு வந்தாச்சே” என்றாள் கோமதி.
குமாரைச் சந்தித்த பத்மினி, ஒரு கணம் அப்படியே நிலைகுத்தி நின்று விட்டு வேகமாக உள்ளே ஓடினாள்.
குமாருக்குள் திரும்பவும் ரத்த ஓட்டம் எகிறிக் கொள்ள, “நான் போய் காபி கொண்டு வரச் சொல்கிறேன் தம்பி”, என்றவாறு எழுந்து உள்ளே போனாள் கோமதி.
‘நான் சிங்கப்பூரிலிருந்து திரும்ப வரும் வரை காத்திருக்கப் பொறுத்திருக்காமல் இன்னொருவனைத் திருமணம் செய்து கொண்டு இந்தக் கோலத்தில் நிற்கிறாயே’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்ட குமார், ‘காபி’ என்றவாறு அவள் நீட்டிய டம்பளரை வாங்கிக் கொண்டு, அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தான்.
அவள் தலையைக் குனிந்து கொண்டு “இப்படி யொரு சந்திப்பு நடக்குமென்று கனவு கண்டிருப்பீர்களா? குமார்” மன வலியை வெளிப்படுத்தியவாறு. கேட்டாள்.
“ஒரு சின்னக் கேள்வி கேட்கலாமா பத்மினி?”
“என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். ஏன் இப்படிச் செய்தாய் என்றுதானே? குமார்., பெண்ணாகப் பிறந்தாலே பாவம்தான். நீங்கள் பாட்டுக்கு சிங்கப்பூருக்குப் போய் பணம் சம்பாதிக்கப் போய் விட்டீர்கள். என்னை என் தந்தை மிரட்டிய மிரட்டல். அம்மா தற்கொலை செய்து கொண்டு விடுவதாக என்னை திருமணத்திற்கு தயார் செய்தார். சரி, நடந்தவைகளை நான் சொன்னால் புரியாது. அதன் வலி அனுபவித்ததால்தான் தெரியும்.
மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். மருத்துவமனைக்குத் தூக்கிப் போய் சிகிச்சை பார்த்து இரண்டு நாளிலே இந்த மனிதனுக்கு என்னைக் கட் டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
குழந்தை பிறந்த பிறகு, இந்த வாழ்வில் சந்தோஷமாக இருக்கலாம் என்று மனசு மாறிய போது அந்த கடவுள் அந்த மகிழ்ச்சியைக் கூட எனக்குத் தரவில்லை.
ஒரு வேளை உங்களைத் திரும்பவும் சந்திக்க வேண்டும் என்றுதான் ஆண்டவன் என்னைத் திரும்ப திரும்ப சோகத்திற்குள் மூழ்கடிக்கிறானோ என்னவோ தெரியவில்லை” என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
“எத்தனையோ பேச நினைத்தேன். சண்டை போட நினைத்துதான் உன்னைத் தேடி வந்தேன். இப்போது உன்னிடம் ஒன்றுதான் கேட்க விரும்புகிறேன். இனியேனும் என் வாழ்வில் துணையாக வர விரும்புகிறாயா?” என்று கேட்டான் புன்முறுவலுடன்.
“சரி” என்று தலையசைத்து வெட்கத்துடன் சமையலறைக்கு ஓடினாள் பத்மினி சங்கச் செல்வி.
– தினபூமி – ஞாயிறுபூமி, 15.2.2004