கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 7,035 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீமாவின் அன்றைய பொழுது ஒரு செல்லச் சிணுங்கலோடு அழகாகப் புலர்கிறது. போர்வையிலிருந்து நீண்டு வெளிப்பட்ட அவளது தந்த நிறக் கரங்கள், காப்பிக் கோப்பையை மெள்ள ஏந்தி உதட்டருகே கொண்டு செல்ல,

“என்ன மம்மி…இன்னிக்கு என்ன அவசரமாம்? ஏழு மணிக்கே என்னை எழுப்பறீங்க?” என்று தன் தாயை உரிமையாகக் கடிந்து கொள்கிறாள்,

“நீதானேம்மா ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னே?”

“ஓ! ஹெல் வித் த ஸ்பெஷல் கிளாஸ்” என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாளிடுகிறாள் நீமா.

***

விடிகாலை நாலு மணிக்கு வரும் சைக்கிள் பால்காரன் எழுப்பும் மணியோசை, சுவரோரமாய்ப் பாயில் சுருண்டு கிடந்த மாலாவின் நாடி நரம்புகளில் முறுக்கேற்ற, சோர்வை ஒரு நொடியில் உதறிக் கொண்டவளாய் ‘விருட்’டென எழுகிறாள். இரண்டே அறைகள் கொண்ட அந்த ‘போர்ஷ’லின் ‘டிராயிங்-கம்-பெட்’ரூமாய் இருந்த அந்த ஹாலில் தலைமாடு கால்காடாய்க் கிடக்கும் மனித உருவங்களை மிதித்து விடாமல் ஜாக்கிரதை உணர்வோடு தாண்டிச் சென்று சுவரோரம் அலம்பி கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரத்தை எடுத்துப் பாலை வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் வருகிறாள்.

பல் தேய்த்து, முகம் சுமுவிக் காப்பிக்கு வெந்நீர் வைத்து ‘டிகாஷன்’ இறக்கிப் பாலக் காய்ச்சி முடித்து விட்டுக் ‘குக்க’ரையும் அடுப்பில் வைத்த பின், தனக்கொரு தம்ளர் காப்பியைச் சூடாகக் கலந்து வைத்துக் கொண்டு ‘பாங்க்கிங்’ நோட்ஸைப் பிரிக்கிறாள். இடையே ஒரு முறை சமையலறை வெளிச்சம் ஹாலில் படுத்திருப்பவர்களுக்கு இடைஞ்சல் செய்யாமலிருக்க, நடுக் கதவை மூடிவிட்டு வருகிறாள். காலைக் குளிருக்கு இதமாக அடுப்புச் சூட்டில் காய்ந்தபடி கொஞ்ச நேரம் பாடத்துடன் ஒன்றிப் போகிறாள்.

***

“இன்னும் ஒரே ஒரு இட்லி போட்டுக்க நீமா!”

“போங்க மம்மி ‘லாஸ்ட் மன்த்’ வெய்ட் பார்த்ததிலே நான் ஒரு கிலோ கூடியிருக்கேன் அப்புறம் ‘பிகர்’ என்னத்துக்கு ஆகிறது? காலேஜ் ஸ்டூடண்டா லட்சணமா இருக்க வேண்டாம்?”

“என்ன லட்சணமோ போ!… மத்தியானம் கொடுத்தனுப் பறதையாவது மிச்சம் வைக்காமச் சாப்பிடு”

“பாப் தலையும், பெல்ஸ் காலும் ‘இண்டி மேட் மணமுமாய்த் தயாராகி வந்தவள் ‘போர்டிகோ நீளத்துக்கு ஓடி வரும் அந்த பென்ஸ் காரின் பின்புற இருக்கையில் இடது ஓரமாய்ச் சரிந்து அமர்ந்தபடி கையிலுள்ள ‘ராபின்ஸை’ப் பிரிக்கிறாள்.

***

“ஏம்மா! இப்ப இந்த ஆஸ்த்மா இழுப்போடே அவஸ்தைப்பட்டுண்டு நீ அவசியம் எழுந்து வரணுமா?”

“அது கெடக்கு போடி!, ஒரு நாளைப் போல வியாதி கொண்டாடிக் கொண்டாடி எனக்கு அலுத்துப் போச்சு! அதைச் சாக்கு வச்சுக் காலம்பற எழுந்துண்டு செய்யற வேலையெல்லாம் உன் தலையியே கட்டியாச்சு. மணி ஆறாகப் பொறது. இப்பக் கூட நான் எழுந்து மிச்ச லேலையைப் பார்க்கலேன்னா நீ காலேஜுக்குக் கிளம்பனுமா, வேண்டாமா?”

மனமில்லாமல் பாக்கி வேலைகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்திருக்கிறாள் மாலா. அதற்குள் காலை ஏழு மணியோடு தண்ணீர் நின்றுவிடப் போகிறது என்ற தகவல், பக்கத்துப் போர்ஷன்காரரிடமிருந்து அஞ்சலாக, இருக்கிற அண்டா, தவளை, டிரம், வாளி எல்லாவற்றிலும் அவசரமாய்த் தண்ணிரை நிரப்பி வைத்துவிட்டு, அவளும் குளித்து விட்டு வருகிறாள். உடை உடுத்தித் தயாராகிற இடைவெளியில் குழம்புக்குத் தேங்காயரைத்து, அப்பாவுக்கு வெந்நீர் விளாவி வைத்து, அண்ணன் சுந்தரின் சட்டைப் பட்டணை அவசரமாய்த் தைத்து, தங்கைக்குத் தலைவாரிப் பின்னி, அவரவர் டிபன் பாக்ஸ் களில் மதிய உணவை நிரப்பி…அஷ்டாவ தானியாய்ப் பம்பரமாய்ச் சுழல்கிறாள்.

***

‘நீமாவின் படகுக் கார் மெள்ள நீந்திப் பீச் ரோடில் சங்கமிக்கும் நேரத்தில் ஓர் உறுமலுடன் எதிர்ப்படுகிறது மனோஜின் ஜாவா.

“ஹாய்!”

“ஹாய்!”

அர்த்தபுஷ்டியோடு காரை நிறுத்தும் டிரைவருக்குப் பார்வையாலேயே நன்றி சொல்லியபடி காரை விட்டிறங்கி ஜாவாவில் சேர்ந்து கொள்கிறாள் நீமா.

‘சின்னம்மா ஏதோ ஸ்பெஷல் கிளாசுன்னு சொன்னாப்பலே! ஹூம்! பெரிய இடத்து விவகாரம். நமக்கேன் பாடு!’ டிரைவர் வண்டியைத் திருப்புகிறான்.

***

தானே துவைத்துக் கஞ்சி போட்டு மடித்து வைத்த வாயில் புடவையை பற்றிக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓட்டமும் நடையுமாய் விரைகிறாள் மாலா. வீட்டை ஒட்டியே ஒரு ஸ்டாப்பிங் இருந்தாலும் சற்று எட்டியுள்ள அடுத்த நிறுத்தம் வரை போய் விட்டால் இருபது பைசாதான் என்பதால், தேவை ஏற்பட்டாலொழியப் பக்கத்திலுள்ள ஸ்டாப்பை அவள் பயன்படுத்துவதில்லை. ‘மகளிர் மட்டும்’ என்ற சிவப்பெழுத்துக்காத் தாங்கிய வெள்ளை நிற பஸ் கண்ணில் பட்டதும், இன்றைய பொழுதுக்கு பஸ்ஸைக்
கோட்டை விட்டுவிடாத அற்பச் சந்தோஷம் அவளுள் பிறக்கிறது.

***

சரியாக மணிபத்தடிக்க ஐந்து நிமிடங்கள் இருக்கையில், மனோஜின் ஜாவா, அந்தப் பெண்கள் கல்லூரியினுள் நுழைகிறது. பட்டாம்பூச்சி போல் படபடக்கும் இமைகளுடன் சில ஸ்லீவ் லெஸ்களும், ‘கஃப்தான்’களும் அவளை எதிர்கொள்ளுகின்றன.

“ஹேய் நீமா! அதுதான் உன் பாய் ஃப்ரண்டாடா கண்ணு?”

“ஹீ இஸ் ஃபெண்டாஸ்டிக்பா!”

“ஹீ லுக்ஸ் லைக் அமிதாப்..”

***

“மாலா! தான் இன்னும் ‘அஸைன்மெண்ட் எழுதி முடிக்கலை! உன்னுடையதைக் கொடு, ஒரு ‘கிளான்ஸ்’ பார்த்துட்டுக் கொடுத்துடறேன்.”

“வீட்டிலேயும் வேயை செஞ்சிட்டு காலேஜிலே கொடுக்கிற ‘ஹோம் ஒர்க்’கையும் பர்ஃபெக்டா முடிக்க உன்னாலே எப்படிடீ முடியறது?”.

***

சாப்பாடு நேரத்தில் நீமாவின் குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

“லுக் கோல்ஸ்! இன்னிக்கு ஆப்டர் நூன் இரண்டு மணிநேரம் பொயட்ரிதான்! மிஸ் 252 வந்து சரியா அறுத்திடும்! அதிலேயிருந்து தப்பிச்சுக்க ஒரே வழி, நாம் பத்துப் பேரும் ஒண்ணா ‘ஆப்சென்ட்’ ஆகிறது தான்!”

“இருபது பேர் இருக்கிற கிளாஸியே பத்துப் பேர் ‘ஆப்சென்ட்’ ஆனா.. ‘ஆட்டோமாடிக்’கா கிளாஸ் கான்சல் ஆயிடும்”

“ஆப்சென்ட் ஆகிறோம் சரி! அப்டர் தட்! வாட் இஸ் அவர் பிளான்?”

“ஓ.. நீமாகிட்டே பிளானுக்கா பஞ்சம்? ஸ்ட்ரெய்ட் சஃபையர் அண்ட் தென் டு எ ஹோட்டல் அண்ட் தென்…?”

“அவுட்டிங் வித் மனோஜ்!….”

***

சம்படத்தில் உள்ள மோர் சாதத்தை நாரத்தங்காய்த் துண்டின் உதவியோடு விழுங்கி முடித்து விட்டு, ‘லைப்ரரிக்குப் போகிறாள் மாலா. ‘லஞ்ச் அவ’ரில் கிடைக்கும் அந்த ஒரு மணி நேர இடைவெளியில் நூலகப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதால் கிடைக்கும் சிறிய அளவு உதவித் தொகையையும் விட்டுவிட அவளுக்கு மனமில்லை. அம்மாவின் மருந்துக்காவது ஆகுமே என்ற எண்ணத்தோடு, ‘எர்ன் வொய்ல் பூ லோன்’ திட்டத்தைக் கொணர்ந்த பெரியவர்களை வாழ்த்தியபடி தன் வேலையைச் செய்து முடிக்கிறாள்.

***

‘அன்றைய நாளின் கடைசி என்கேஜ்மெண்ட்’டாக மனோஜைத் திரும்பவும் சந்தித்து முடித்துவிட்டு ஆறே முக்காலுக்கு வீடு திரும்புகிறாள் நீமா. ஏதோ ஒரு பார்ட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவள் தந்தை, “நீமா களைச்சுப் போய் வந்திருக்கா பாரு! குடிக்க ஏதாவது கொடு” என்று உட்புறம் தோக்கிக் குரல் கொடுக்கிறார்.

”தாங்க் யூ டாட்!” என்றபடி, நீமா தன் அறைக்குச் செல்ல, ‘பாமரேனியன்’ அவுளைத் தொடர்கிறது.

***

மூன்றரை மணிக்கு வகுப்புகள் முடிந்த பின், என்.எஸ்.எஸ், என்ற பெயரில் கல்லூரித் தோட்டத்தைக் கொத்திக் களை பிடுங்கிவிட்டு, ‘ஸ்பெஷல் பஸ்’ பிடித்து வீட்டுக்கு வந்து சேருகிறாள் மாலா.

***

‘டு இன் ஒன்’ மெல்லிதாக மேலை நாட்டு இசையை ஒலித்துக் கொண்டிருக்க..அன்று மானோஜுடன் பெற்ற அனுபவங்களை ஃபோம் மெத்தையில் சாய்ந்தபடி அசை போட்டுக் கொண்டிருக்கிறாள் நீமா. மெள்ள மெள்ள அவள் கண்ணிமைகள் செருகிச் சுகமான கனவு தரும் இன்பத்தில் லயிக்கத் தொடங்குகின்றன.

***

அந்த மாத நாவலில் ‘நீமாவின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை’யைப் படித்து முடித்து விட்டுத் தலை நிமிர்கிறான் சுந்தர். அவன் கண்களில்… அம்மாவுக்குத் துணையாய் எல்லோருக்கும் பரிமாறிப் பாத்திரங்களை ஒழித்துத் தேய்த்து வைத்துப் பத்து மணிக்கு மேல் ஊரே உறங்கிப் போய்விட்ட அந்த நேரத்தில் ‘செமினார்’ பேப்பர் எழுதுவதில் தீவிரமாய் மூனைந்திருக்கும் தங்கை மாலா தென்படுகிறாள்.

‘யதார்த்த உலகில் ‘நீமா’க்களை விடவும் ‘மாயா’க்களே மிகுந்திருக்க… இந்தக் கதாசிரியர்களுடைய கண்களில் மட்டும் ‘மாலா’க்கள் ஏன் படுவதே இல்லை?’ என்று ஒரு நிமிடம் அவன் உள்ளம் நினைத்துப் பார்க்கிறது. மறு கணமே அதற்கு அவன் இப்படிச் சமாதானமும் சொல்லிக் கொள்கிறான்: ‘நடப்புக்கும் கற்பனைக்கும் உள்ள இடைவெளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகக் காட்டிக் கனவு மயக்கத்தில் வாசகர்களை மிதக்க வைத்துப் போதை ஏற்றுவதற்கு ஒரு நீமா உதவுவது போல ஒரு மாலாவால் உதவமுடியுமா?’

– 07-12-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *