கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 25,603 
 
 

பதினைந்து வயது நிதீஷின் மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது. தான் சாதாரணமாக இல்லை என்று அவனுக்குப்புரிந்தது.

“என்ன தவறு என்னிடம்? ஏன் என் மனம் பெண்களின் அருகாமையை நாடுகிறது? அவர்களின் நடுவே இருப்பது தான் பாதுகாப்பாக இருப்பது போலத் தோன்றுகிறது. அவ்வளவு ஏன்? அவர்களை எல்லா விதத்திலும் பின் பற்ற உத்வேகம் பிறக்கிறது. ஏன் அம்மா என்னை ஆணென்று சொல்கிறாள்? உடற் கூறுகளின் படி பார்த்தால் நான் கண்டிப்பாக ஆண் தான். ஆனால் என் மனம் அதை ஏனோ ஏற்க மறுக்கிறது. என்னை ஒரு பெண்ணாகவே நான் உணர்கிறேன்.”

சில நாட்கள் முன்னால் நடந்த சம்பவம் நினைவில் ஆடியது.

நிதீஷ் தன் நண்பர்களோடு தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தான். அப்போது ராம்ஜி “டேய் அதோ வரா பாரு அவ சரியான மொக்கை ஃபிகர்டா!” என்றான். அதை எல்லாரும் ஆமோதிக்க நிதீஷுக்கு ஏனோ சங்கடமாக இருந்தது. அதே போல அவர்கள் தெருவில் போகும் பெண்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க அடிக்க இவனுள் ஆத்திரம் பொங்கியது.

கைகளைத் தட்டி “என்னடா? பொம்பளைங்கன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா? ஏன் எப்பப் பாத்தாலும் கேலி பண்றீங்க? உங்களுக்கு வேற வேலை இல்லியா?” என்ற போது அனைவரும் சிரித்தனர்.

“நிதீஷ்! உன்னை என்னவோன்னு நெனச்சோம்! நீ சூப்பர்டா! அப்படியே லேடீசப் போலவே பேசறியே?” என்றான் ராம்ஜி.

“அது மட்டுமா? பாடி லாங்குவேஜைக் கூட மாத்திக்கிட்டாண்டா! ” என்று இவன் தோளில் அடிக்கத் துடித்துப் போனான் நிதீஷ். அவர்கள் ஸ்பரிசம் ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை.

“சும்மா இருங்கடா! எனக்கு ஆத்திர ஆத்திரமா வருது” என்று உடலை வளைத்து இவன் சொல்லவும் மீண்டும் உரத்த சிரிப்பு.

தன்னைப் புரிந்து கொள்ளாத நண்பர்களை விட்டு விலகி வந்து விட்டான்.வீட்டுக்கு வந்து தனிமையில் யோசித்த போது தான் தன் நடை , பாவனைகள் மாறியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான். முதன் முதலாக அவனுக்குள் ஒரு பயம் வந்தது.

நான் யார்? ஆணா? பெண்ணா? இல்லை இல்லை…அதுவா?

ஆராய்ச்சியில் இறங்கினான் அவன்.

நல்லவேளையாக அவனுக்கு கம்ப்யூட்டர் கை கொடுத்தது. நெட்டில் நிறைய விவரங்கள் தேடினான். நிறையக் கட்டுரைகள் படித்தான். அப்போது தான் ஒரு ஆண் மகனுக்கு வர வேண்டிய முக்கிய மாற்றம் தனக்கு இன்னும் நிகழவில்லை என்பதை உணர்ந்தது அவன் மனம். அதை இனிமேலும் எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமா? இல்லை என்னை இயற்கை ஒரு கோமாளியாக மாற்றிவிடத் தயாராக இருக்கிறதா? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. அழுகை அழுகையாக வந்தது. அம்மாவின் தோளில் சாய்ந்து அழ வேண்டும் போல இருந்தது.

அம்மாவின் நினைவு வந்ததும் வயிற்றில் ஊசி இறங்கினாற் போல இருந்தது. அம்மாவுக்கு என்னைப் பற்றித் தெரிந்தால் எப்படி எதிர்கொள்வாள்? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள் நிச்சயம். எல்லாக் கதைகளிலும் , சினிமாவிலும் கூட காண்பிக்கிறார்களே பெற்றோர்களே என் போன்ற குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டும் நிகழ்ச்சிகளை. அவன் கண்களிலிருந்து நீர் வடிந்தது.

“அம்மா! நீ மட்டும் என்னை ஏத்துக்கலைன்னா என் கதி என்னம்மா? இப்பவே என்னால படிக்க முடியாது! வேலை கிடைக்காது! நான் ஒரு செக்ஸ் மிஷினா மாறணும். கொடூரமானவர்களின் மன வக்கிரங்களுக்கு வடிகாலாய் நான் இருக்கணும். என்னால அதையெல்லாம் நெனச்சுப் பாக்கவே முடியல! ”

யோசித்து யோசித்துப் பார்த்தான். நல்லவேளை அப்பா இந்தியாவிலேயே இல்லை. நிதீஷுக்காக , இவனை டாக்டராக்க வேண்டும் என்ற அம்மாவின் கனவுக்காக பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் வருவார். அதனால் அவரிடம் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற அவமானத்துக்கு ஆளாகாமல் தப்பிவிடலாம்.

அம்மா அவனை சாப்பிடக் கூப்பிட்டாள்.

“நிதீஷ்! அப்பா ஃபோன் பண்ணியிருந்தாருடா! உனக்கு ரெண்டு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி அவரோட ஃபிரெண்டு சலீம் அடுத்த மாசம் வரர் இல்லியா அவர்கிட்டக் குடுத்து விடறாராம். வேற ஏதாவது வேணுமா உனக்குன்னு கேக்கச் சொன்னாருடா!”

“எனக்கு ஃபாரின் சேலை தான் வேனும். இல்லைன்னா மேக்சி அல்லது ஸ்கர்ட். இதை வாங்கி அனுப்புவாரா அப்பா?” என்று கேட்கத் துடித்த வாயை அடக்கிக் கொண்டு “ஒண்ணும் வேன்டாம்மா!” என்றும் மௌனமாக சாப்பிட்டான்.

என்ன தோன்றியதோ அம்மா வந்து மெதுவாக தலை கோதினாள். பரம சுகமாக இருந்தது அவனுக்கு . கண்களிலிருந்து ரெண்டு சொட்டுக் கண்ணீர் வெளியேறத் துடித்தது. அடக்கிக் கொண்டான். சாப்பிட்டு முடித்தவன் அம்மாவுக்குக் கூடமாட உதவினான். வேலை செய்யும் போது அம்மாவின் கை வளையல்கள் அழகாக ஒன்றோடு ஒன்று மோதி சத்தம் செய்தது சங்கீதமாக இருந்தது. தானும் வளையல் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை கட்டுப் படுத்திக் கொண்டான்.

மறு நாள் டெஸ்ட் இருந்தது. இனி என்ன படித்து என்ன? என் தலை விதி முடிவு செய்யப் பட்டு விட்டது. எதற்காகப் படிக்க வேண்டும்? என்று முடிவு செய்து கொண்டு மீண்டும் இண்டெர் நெட்டை நாடினான்.

அவன் தேடிய விவரங்கள் அவனுக்குக் கிடைத்தன. அவனைப் போன்ற இடை நிலைப் பிறவிகள் அனுபவிக்கும் துன்பங்கள் கண்ணீராக அவன் முன் விரிந்தன. அவர்கள் வாழ்க்கை அசிங்கத்தாலும் ரத்தத்தாலும் எழுதப் பட்டிருந்தது. அவனுக்கு திகில் பிடித்துக் கொண்டது.

“ஐயையோ! நான் என்ன செய்ய? கடவுளே! என்னைக் காப்பாற்று! ” என்று கண் மூடி வேண்டும் போது ஒரு எண்ணம் தோன்றியது. பேசாமல் செத்து விட்டால் என்ன? அப்படிச் செய்வதால் ஏற்படும் நன்மைகள் அவன் கண் முன் விரிந்தன.

முதலில் தான் இந்த மாதிரி என்று தன் அன்ண்பர்களுக்குத் தெரிவதற்கு முன்னால் நாம் போய்விடலாம். அம்மாவின் ஏமாற்றம் , அப்பாவின் கோபம் இவற்றுக்கு ஆளாகாமல் தப்பி விடலாம். ஊர்ரூராகச் சென்று பிச்சையெடுத்து வாழும் வாழ்க்கை இருக்காது. எல்லாரும் அருவருப்புடன் பார்க்கும் பார்வையைத் தவிர்த்து விடலாம். முக்கியமாக பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து தற்கொலை என்ற முடிவுக்கு வந்தான் நிதீஷ்.

“அம்மா! என்னை மன்னிச்சிடும்மா! உன் கனவை நிறைவேத்த வழி தெரியல எனக்கு. உனக்கும் அப்பாவுக்கும் நான் ஒரு நாளும் அவமானத்தைத் தேடித் தர மாட்டேன். என்னை இப்படியாக்கிய இயற்கை மீது தான் எனக்குக் கோபம். வேற யாரோடயும் இல்ல. நான் போறேன்” என்று சொல்லிக் கொண்டவன் மெதுவாக டிராயரைத் திறந்து பிளேடை எடுத்தான்.

கூர்மையான அதன் முனைகள் டியூப் லைட் வெளிச்சத்தில் பளபளத்தன.

கைகளை நீட்டி நரம்புகளை வெட்ட முயன்ற அந்த வினாடி அவன் கண் முன் வேறொரு கரம் நீண்டது.

“ஊம்! என்னோடதையும் சேர்த்து வெட்டு! ஏன் தயங்கற வெட்டு ! ” என்றாள் அம்மா. கோபத்திலும் சோகத்திலும் அவள் முகம் ஜொலித்தது. அவள் மிக மிக அழகாக இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. பிளேடைத் தூக்கி எறிந்தவன் “அம்மா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு உனக்குத் தெரியாதும்மா! அது தெரிஞ்சப்புறம் ஏன் என்னைத் தடுத்தேன்னு வருத்தப் படுவ”

அம்மா சேலைத் தலைப்பால் அவன் முகம் துடைத்தாள்.

“தெரியும் நிதீஷ்! எனக்கு நல்லாவே தெரியும்!” .அதிர்ந்து போய் எழுந்து நின்றான் அவன்.

” தன் குழந்தையோட ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவ தாய். அதுவும் நான் உன்னை கடந்த ஒரு வருஷமாவே கண்காணிச்சுக்கிட்டு தான் வரேன். எனக்கு உன் வளர்ச்சி மேல அப்பவே சந்தேகம் வந்திட்டுதுப்பா! ”

ஆத்திரம் வந்தது அவனுக்கு.”அப்ப ஏம்மா எங்கிட்ட சொல்லலை? நீயும் என்னை வேடிக்கை பாத்த இல்லியா?”அம்மாவின் முகம் சுருங்கியது.

“இல்லைப்பா! எதா இருந்தாலும் அதை நீ உணரணும். உனக்கா தெரிய வரும் போது அதிர்ச்சி கொஞ்சம் குறைவா இருக்கும். அதுவும் போக எனக்கும் என்னைத் தேத்திக்க கொஞ்சம் டயம் தேவைப் பட்டதுப்பா! இப்ப நீ யாருன்னு உணந்துட்டன்னு எனக்குத் தோணுச்சி! கடந்த ரெண்டு நாளாவே நீ சரியா இல்ல! நீ என் பொடவயக் கட்டிப் பார்த்ததை நான் பாத்துட்டேன். ஆனா அதே சமயம் நீ பயப்படாம நெட்ல இது சம்பந்தமா தகவல் சேகரிச்ச பாரு அதை நான் ரொம்ப பாராட்டினேன்.

வெடித்து அழுதான் நிதீஷ்.

“அம்மா! நான் என்ன தப்பும்மா பண்ணினேன்? என்னை ஏன் இப்படிப் பெத்த? இனிமே எனக்கு வாழ்க்கையில என்ன இருக்கு? இந்த வீட்டுல நான் இருக்க முடியாது. வெளியல போயி வாழற தைரியம் எனக்கு இல்ல. நான் என்ன பண்ணுவேன்மா? என்னை ஏன் சாக விட மாட்டேங்கற?”

“இதுக்கா நான் உன்னைப் பெத்தேன்? இந்த முடிவுக்கு வரவா நான் உன்னை ஆளாக்கினேன்? எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது! இது ஒரு ஹார்மோனல் குறைபாடு தான். அதை இந்த சமூகம் தான் ரொம்பப் பெருசு படுத்தி அவங்களை இந்த இழிநிலைக்கு தள்ளியிருக்கு. இதுல உன்னொட தப்பு எதுவும் இல்ல. இயற்கை உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினதுக்கு நீ என்னடா பண்ண முடியும்?”

“அப்டீன்னா அம்மா! நீ என்னை வெறுக்கலையா? இந்த வீட்டுலருந்து விரட்டலையா?” சிரித்தாள் அம்மா.

“நீ என் குழந்தைப்பா! திருடுறவனையும் , பொம்பிளைங்களை மதிக்காதவனையுமே வீட்டுல வெச்சுக்கறாங்க உன்னை எதுக்குப்பா வீட்டை விட்டு விரட்டணும்?”

“ஆனா அம்மா என் எதிர்காலம்?”

“ரெண்டு பேரும் சேர்ந்து போராடுவோம்! அப்பா வந்தா அவரையும் சேத்துப்போம்! ஸ்கூல்லயும் , மெடிக்கல் காலேஜுலயும் படிக்க போராடி இடம் வாங்குவோம். மாற்றுத் திறனாளிகள் படிக்கலாம்னா நீயும் ஒரு மாற்றுத் திறனாளி தானே? அதைக் கேப்போம். கேஸ் போட்டாவது ஜெயிப்போம். என்ன? ஆனா நீ ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது”

அவன் அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ பெரிய டாக்டரா ஆனதுக்கப்புறம் உன்னை மாதிரி இருக்கறவங்களுக்காகப் போராடு. வீட்டை விட்டு விரட்டப்பட்ட திருநங்கைகளுக்கு ஒரு வாழ்வு குடு. அவங்க மானமா பிழைக்க ஒரு வழி செஞ்சி குடு. செய்வியா நிதி? ” என்ற அம்மாவின் கரங்களை பற்றி ஒற்றிக் கொண்ட நிதீஷ் மறு நாள் டெஸ்டுக்குப் படிக்க புத்தகங்களை எடுத்தாள்(ன்).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *