கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2013
பார்வையிட்டோர்: 15,567 
 
 

கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை என்றால் அப்படி ஒரு உதை

அவளை அந்ததனியார் வங்கியில் வேலை செய்ய முடியாமல் வயிற்றில் இருந்த குழந்தை உதைத்தது. தலை சுற்றல் வேறு. பக்கத்து கௌண்டரில் இருந்தவரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு முறை வாந்தி எடுத்து, ஒரு புளிப்பு மிட்டாய் அடக்கியபின் கொஞ்சம் தெளிவானதஎன்ன இருந்தும் இந்தக் குழந்தை எனக்கு வேண்டும் என்று மீண்டும் நினைத்த போது அவளுக்குள் அந்த அவஸ்தைகளையும் மீறி ஒரு புன்னகை பூத்தது.

வீட்டில் பெற்றோர் பார்த்து எல்லா சம்ப்ரதாயங்களுடன் கோபியைக் கைப்பிடித்தவள் தான் சாந்தி. திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு ஒரே ரோஜாக்கள் தான். பெற்றோரில்லாத கோபி அவளை ராணி போலத் தாங்கினான். கார் வாங்கி, தாம்பரம் பக்கம் புது வீடும் கட்டி எல்லாமே சினிமா மாதிரி இருந்தது. சாந்தி அம்மா தன் பெண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததற்க்கு நன்றி சொல்லப் போகாத கோவில்களே இல்லை.

“இவ்வளவு வசதி இருந்தும் எனக்கெதற்க்கு வேலை, வீட்டிலுருந்து வீட்டையும் உங்களையுமே கவனித்துக் கொண்டால் போதாதா” என்ற அவளின் வாதம் எடுபடவில்லை. அவள் சுதந்திரமாக இருக்க வேண்டும், உலகத்திலுள்ள நல்லது, கெட்டதுகளுக்கு அடி பட்டால்தான், அவளுக்கு தைரியம் வரும் என்றான். அவள் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது, தன்னால் வாழ தைரியம் வேண்டும் என்று அவளைக் கட்டாயமாக வேலைக்குப் போகச்சொன்னானேயொழிய, அவள் சம்பளத்தை என்றைக்கும் கேட்டதில்லை. “உங்க பாங்க்லேயே போட்டு வை. தேவைப் பட்டால் எடுத்துக்கலாம்” என்றான்.

குடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுண்டு குடுக்கும்னுதான் கேள்விப் பட்டிருந்த சாந்தி அன்று கோபிக்கு லேசான ஜுரம் என்பதால் வீட்டில் தூங்கச் சொல்லி விட்டு ஆபிஸுக்குக் கிளம்பிய போதே வானம் கருமையாக உறுமிக் கொண்டிருந்தது. அவள் பாங்குக்குள் நுழையுமுன்னே மழை பெரிதாகி அரை மணியில் தெருவே வெள்ளக் காடாயிற்று. மதியம் சாப்பிட டைனிங் ஹால் கிளம்பும் போது காதே பிளப்பது போல் ஒரு இடி இடித்து சுருண்டு சுருண்டு போனது. கரண்ட்டும் போனவுடன் எங்கேயோ இடி விழுந்துருக்கு, சீக்கிரம் சாப்டுட்டு வேலையை முடிச்சுண்டு கிளம்பணும்னு நினைச்சுண்டாள். அவசரமாக வேலையை முடிக்கும் போதுதான் சாந்திக்கு அந்த போன் வந்தது. அவள் எதிர் வீட்டில் இருக்கும் ராமனாதன் போனில் “உடனே கிளம்பி வாம்மா. நம்ம தெருவுல இடி இறங்கிடுத்து” ன்னார்.

வயிற்றைப் பிசைய ஆட்டோவில் ஒடிய போது தான் தெரிந்தது, இரண்டாவது இடி விழுந்தது எங்கோ இல்லை, தன் வாழ்க்கையில் என்று. தெரு முனையிலேயே நல்லகூட்டம் இவளைக் கண்டதும் விலகியது. எட்டி பார்த்தால் விவரம் தெரிந்தது, அவள் வீட்டின் மேல் தான் இடி இறங்கி, உள்ளே இருந்த கோபி கரிக் கட்டையாகிப் போனான் என்று. அதற்க்கு மேல் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியாது, ஏனென்றால் அவள் பல இடித் தாக்குதல்களில் மயக்கமாகி ராமனாதன் மனைவி மேல் சாய்ந்தாள்.

பிறகு நடந்தவை கனவு போலிருந்தது.  உலகமே என்றிருந்த கோபியும் போய், சுத்தமாக பிளவு பட்ட வீட்டில் பழுது பார்த்தாலொழிய இருப்பது நல்லதல்ல என்றதால் தாம்பரத்தை விட்டு வேளியேற வேண்டிய சூழ்னிலை. ஆனால் அதற்க்கு வாங்கிய கடன், கார்க் கடன் என்று பணத்தின் தேவை அவளை எந்த வேலை வேண்டாமென்று நினைத்தாளோ அது தான் இப்பொழுது ஜீவனத்துக்கு வழி என்று நினைவு படுத்தியது..

“கடவுள் இப்படியெல்லாம் கூடச் செய்வாரா. எல்லாம் நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது. ஏன் இப்படி ஒவ்வொன்றாக மாத்தி மாத்தி அடி” என்று மறுகிப் போனாள். கொஞ்ச நாள் அழுகைக்கப்புறம், சிறிது தெளிந்து இந்தச் சிசு தான் தன் பிடிப்பு என்றாகி நாட்களை ஒரு வைராக்கியத்துடன் நகர்த்த ஆரம்பித்தாள்.

குழந்தை ஜீவனின் வளர்ச்சியில் மெய் மறந்து, வேலையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, பதவி உயர்வு வாங்கினால் வெளியூர் போக வேண்டியதால் அதையும் புறக்கணித்து, தன் அப்பா போனதையும் ஜீரணித்து, எல்லாமே ஜீவன் தான் என்று வாழ்ந்ததில் நாட்கள் போனதே தெரியவில்லை. இவ்வளவுக்கும் தன் அம்மா மட்டுமே துணையாக இருந்தது அவளுக்கு ஒரு பெரிய சௌகர்யம்.

ஜீவனின் இஞ்சினீயரிங் படிப்புக்கு தன் பாங்கிலேயே கடன் வாங்கி அந்த பெரிய ஐ.டி கம்பெனியில் சேர்ந்தவுடன் ஜீவன் சொன்னது கோபியை நினைவுப் படுத்தியது – “சம்பாதித்தது போதுமே. வீட்ல ரெஸ்ட் எடுத்துக்கோ”. என்னவோ தெரியல்ல, இந்த வேலைக்குப் போரது ஒரு பொழுது போக்கா இருக்கறதாலா, இல்லை தனக்கு இன்னும் பிடிப்பு வேண்டும் என்பதானாலோ இல்லை அன்று கோபி சொன்ன சொல்லை இன்றும் தட்டக் கூடாது என்பதாலோ “ஆகட்டும். எப்ப ஸ்ரமமாக இருக்கோ,அப்ப விட்டுடரேம்ப்பா” என்றாள்.

அதே மாதிரி ஒரு மழை நாள்ல தான் புள்ளைய இன்னும் காணுமேன்னு வாசலைப் பாத்துண்டு உட்கார்ந்திருத்தப்போ, ஒரு பெரிய காரில் வந்திறங்கினான் ஜீவன். கூட வந்த பெரியவரின் கோட் சூட்டிலும், காரைத் திறந்து விட்ட சீருடை போட்ட ட்ரைவரையும் பார்த்த உடனே அம்மா கேட்டாள் ” யாரோ பெரிய ஆபீஸ்காராளா?”  என்று. உள்ளே வந்தப்புரம் தான் ஜீவன் சொன்னான்- “அம்மா, இது என் கூட ஆபிஸ்ல வேலை செய்யற லதாவின் அப்பா. சென்னைக்கு வெளியே துணி எக்ஸ்போர்ட் பண்ற கோடீஸ்வரர் “.

இரண்டு நாள் கழித்து, ஒரு சனிக்கிழ்மை இரவு சொன்னான் “அம்மா. எனக்கு லதாவைப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் ஓ.கே. ஏன்ன சொல்றே?”

பொங்கி வந்த சந்தோஷத்துடன் “உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுருந்தா நான் என்னடா சொல்லப் போரேன். உனக்கும் கல்யாண வயசு வந்தாச்சு. முறைப்படி ஒரு நாள் அவாளை வந்து பேசச்சொல்லு. முடிச்சுடலாம்” என்றாள்.

“அப்படியே நம்ம வீட்ட கட்டின இஞ்சினீயர் நாராயணனையும் நாளைக்கு ஞாயிற்றுக் கிழமையா இருக்கு. வரச் சொல்லு. மாடியில இன்னொரு பெரிய போர்ஷன் கட்டச் சொல்லிடலாம். இந்த இடம் இப்ப கொஞ்சம் கீக்கிடம்தான். அதுவும் வசதியா வாழ்ந்த பொண்ணுக்கு இன்னும் பெரிசா வேணும்” என்றாள்.

படுக்கத் தயாராக பல் தேய்ச்சுண்டிருந்த ஜீவன் கொஞ்சம் தயங்கி வந்து கட்டில் பக்கத்தில் நின்றவனை “என்னடா” என்றாள்.

“அம்மா. சொல்ல மறந்துட்டேனே. லதாவுக்கு அம்மா கிடையாது. இவ குழந்தையாய் இருக்கும்போதே போய்ட்டாளாம். அவ அப்பாதான் இவளை அம்மா மாதிரி பாத்துப் பாத்து வளத்துருக்கார். அவளால அவர விட்டுட்டு வர முடியாதாம்மா. அவ அப்பாவுக்கும் யார் இருக்கா, பாவமில்லையா” என்றான்.

விருட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்த அம்மாவை நேராகப் பார்க்க முடியாமல் “என்ன அவாளோடையே இருந்து அந்த எக்ஸ்போர்ட் பிசினசையும் பார்த்துக்கச் சொல்றா. பக்கத்துல ஒரு கிலோமீட்டர் தூரத்துல தானே அவாளும் இருக்கா. ஒன்ன அப்பப்ப வந்து ஈசியா பாத்துக்கலாம்மா” என்றான்.

கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின் ஜீவன் ” நீ என்னம்மா சொல்ரே” என்றான்.

தலையை மறு பக்கம் திருப்பி தன் முகத்தை மகனுக்குக் காட்ட விரும்பாத அவள் ” நாளைக்கு இஞ்சீனீயர் வேண்டாம், வீட்டு ப்ரோக்கரை வரச் சொல்லு” என்றாள்.

ஏன் என்ற கேள்வியைக் கண்ணில் தாங்கிய ஜீவனைப் பார்த்து “இத்தனை நாளா ஒன்னைப் பாத்துக்க வேண்டி இருந்ததால ப்ரமோஷனே வேண்டாம்னு இருந்தேன். இப்ப உனக்கு ஒரு துணை கிடைச்சப்புறம் , நான் நிம்மதியா வெளியூர் மாத்தினாக் கூட போலாம், இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு” என்று லைட்டை அணைத்தாள்”.

கீழே படுத்துண்டு இருந்த அம்மா கேட்டாள் “என்னடி, ஜீவன் போறேங்ரானா”

அந்த ரூம் இருட்டின் மெல்லிய நைட் லைட் வெளிச்சத்தில் தெரிந்த கோபியின் படத்தைப் பார்த்த படி சொன்னாள் ” என் ஜீவந்தான் என்னிக்கோ போயிடுத்தேம்மா”

தூரத்தில் கேட்ட வானத்தின் உறுமலைக் கேட்டு நினைச்சுண்டாள் “என் வாழ்க்கைக்கும் இடிக்கும்தான் எவ்வளவு ஸ்னேகம் ” என்று.

 

Print Friendly, PDF & Email

8 thoughts on “இடி

  1. super…….
    congrats….
    tears came….while reading .. “en jeevanthan ennikko poiduththemma.”……………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *