அன்று அந்தப் பேச்சாளர் ‘மனிதனின் ஆயுள் ஒரு நொடிதான், அதனால் நொடிநொடியாக வாழுங்கள்’ என்று சொன்னது என் நெஞ்சுக்குள் நின்று நிலைத்துவிட்டது. வாட்சப்புல இதுமாதிரி அவருடைய பேச்சையெல்லாம் பார்த்ததுண்டுதான், அப்பல்லாம் இந்தமாதிரி இருந்ததில்லை. நேரிலேயே அவரது பேச்சைக் கேட்க வாய்ப்பு கிடைக்க, இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் போயிடிச்சின்னுதான் சொல்லணும்.
‘நொடிநொடியா வாழணுமாம்! ம்…. கேக்கிறதுக்கு நல்லாதானிருக்கு, ஆனா எங்க முடியுது?’
‘காலையில கடுப்புல அலாராத்தை நிறுத்திட்டு எழுந்துறதிலேருந்து ஆரம்பிச்சி ராத்திரி தூங்கப் போறதுவரை பிரச்சினை… பிரச்சினை…. பிரச்சினையாயில்ல இருக்கு!’
வேலை இடத்துலதான் விதவிதமா தொல்லை கொடுத்து கடுப்பேத்துறாங்கன்னு வீட்டுக்கு வந்தா…. வீடும் வகைவகையால்ல கொடுமை பண்ணுது. இதுல நொடிநொடியா எங்க வாழுறது? மனுசன் நொடிச்சிப் போறதுதான மிச்சமாயிருக்கு!
“நீ எடுத்த போனை கீழே வைக்கவே மாட்டியா?” வீட்டுக்கு வந்தவுடன் சோபாவிலிருந்த மகனைப் பார்த்துக் கேட்க, அவனோ ஏதோ விரோதியைப்போல என்னைப் பார்த்தவாறு அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டான்.
“இங்க ஒருத்தன் கேட்டுகிட்டே இருக்கேன், வாய திறக்காம போறான் பாரு! அந்தமாதிரி வளத்து வச்சிருக்கே!”
காபியைக் கொண்டுவந்த சகதர்மிணி மேசையில் வைத்துவிட்டு வாய் திறவாமல் சென்றாள்.
“கேக்கிறது காதுல விழல…?”
“விழாம எங்க போகும்? இப்பதான் வீட்டுக்கு வந்தான். உடனே அவங்கிட்டே பாய்ஞ்சீங்க…. அதான் கிளம்பிட்டான்.”
“எந்நேரமும் போனும் கையுமாயிருந்தா என்னாவறது? இதைக்கேட்டா துரைக்கு கோவம் வந்துடுமோ?”
“இப்பல்லாம் பிள்ளைங்க பள்ளிக்கூடத்துலேயே எவ்வளவோ பாடுபடுதுங்க. அவங்களை நாமதான் கொஞ்சம் விட்டுப்பிடிக்கணும். அவனைப் பாத்தாலே வறுத்தெடுத்தா…?”
கதவுமணி சங்கீதத்துக்கு திறந்தபோது, என் அடுத்த வாரிசு. கர்ணன் கவசகுண்டலத்தோடு பிறந்தமாதிரி, காதில் இயர்பீஸ் இல்லாம பாக்க முடியாத பெண்.
“ஏன் இவ்ளோ லேட்?”
நான் கேட்டது காதில் விழுந்தாலும், விழாதுபோல அறைக்குள் அடைக்கலமாகும் ராங்கிக்காரி.
“புள்ளையா பெத்து வச்சிருக்கே? எல்லாம் உன்னைமாதிரியே!”
என்னை எரித்து விடுவதைப்போல நோக்கியவள், பதிலைப் பாத்திரத்திடம் காட்ட அடுக்களை அமளிதுமளியானது.
‘அப்பப்பா…. இதுங்ககிட்ட நொடிநொடியா எங்க வாழறது? நொடிப்பொழுதுகூட இம்சையாயிருக்கே….. சே…..!’
என் வீடுதான் இப்படியா? இல்லை எல்லா வீடுகளுமே அப்படித்தானோ? இருக்காது. வெளில எவ்ளோ பேர் சிரிச்சி பேசியபடி போறதைப் பாக்கிறேன். என் குடும்பத்தோட வீட்டைவிட்டு கிளம்பினாலே சண்டையில்லாம திரும்ப வந்ததா சரித்திரமே கிடையாது. இதுல வாழ்வை எப்படி ரசிச்சு வாழறது?
‘வாழ்க்கையைப்பத்தி அணுஅணுவா ரசிச்சுப் பேசிய அந்தப் பேச்சாளரைப் போய்ப்பாத்து வாழ்க்கையின் சூட்சுமத்தை தெரிஞ்சுக்கலாமா?’
மண்டைக்குள் அவரது பேச்சு திரும்பத்திரும்ப வந்துபோக, அவரை நேரில் சந்திக்கணுமென்ற தீர்மானத்துக்கும் வந்தேன்.
‘போன் பண்ணிட்டுப் போலாமா?’
‘யாருன்னு அறிமுகப்படுத்திக்கிறது…? நேர்லயே போய் பேசுவோம்!’
எம்ஆர்டி பக்கத்துலயே இருந்த வீட்டை எளிதில் கண்டுபிடித்து கதவுமணியை அழுத்தப்போக, கதவு திறந்ததுகண்டு சட்டெனப் பின்வாங்க, என் மகன் வயதையொத்த இளைஞன் திறந்த வேகத்தில் மூடி ஏவுகணையைப்போல விர்ரென வெளியானான்.
“தம்பி….!” நான் அழைத்தபோது அவன் லிப்டில் இருந்தான்.
“அப்படி என்ன பிரமாதமா கிழிக்கிறான்னு புள்ளைக்கு வக்காலத்து வாங்குறே….?” பேச்சாளரின் குரல் காரிடார்வரை அதிர, என் கால்கள் ரயில்நிலையத்தை நோக்கி விரைகின்றன.
– சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களத்தில் (ஜூன் 2017) மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை.