ஆலகால விஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 8,019 
 
 

மனப்புழுக்கம் வாழும் எரி மலையாய் அவள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருக்கிறது . அவள் சிரிக்கிறாள் . மகிழ்ச்சியாக இருப்பதாக்க் காட்டிக் கொள்ளப் பகீரத்தனம் செய்கிறாள்.

அவளுக்கு அழகிய புத்திசாலியான மூன்று பிள்ளைச் செல்வங்கள் இருப்பதனால் தான் அவள் இன்னும் வெடித்துச் சிதராமல் இருக்கிறாள். அவர்களில் தன்னை நனைத்து தனது மன வெப்பியாரத்தைத் தணித்துக்கொள்வதனால் தான் அவள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அவள் முன்பு அவனது காதலுக்கு ஏங்கியவள் தான்.. அவனது ஒரு பார்வைக்காகத் தவம் கிடந்தவள்தான்…

உயர்தரப் பரீட்சை முடிந்தவுடன் தான் கற்ற பெண்களுக்கான தனியார் கல்லூரியிலேயே இளம் துணை ஆசிரியையாக இணைந்தபோதுதான் அவனை அவள் சந்தித்தாள்.

இவள் இணைந்த அதே ஆண்டுதான் கொம்பூட்டர் கற்பிப்பதற்காக பகுதிநேர ஆசிரியனாக இவனும் இணைந்து கொண்டான். கொம்பூட்டரின் பாவனை அப்பொழுதுதான் அதிகரித்துவந்ததால் கல்லூரி மாணவிகளுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் சிலவகுப்புக்களை அவன் எடுத்தான்.

அவன் அழகன்…

ஆறு அடியைத் தொட்ட்டுவிடும் உயரம்…

பாடசாலைக் காலத்தில் சம்பியன்…

இன்றும் விடாது தனது உடலை கட்டாக வைத்திருப்பதில் கவனம் கொண்டிருந்தான்.

அவன் அழகுக்கு முன்பு அவள் மிகச் சாதாரணமானவள்தான்…

அவன் மிகவும் கெட்டிக்காரன்… கற்பிப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான்… மாணவிகளுடன் தேவையில்லாது கதைக்கமாட்டான்… அவர்களிடம் அவன் வழிந்ததே இல்லை.. அவன் பார்வையில் மிடுக்கு எவரையும் கவர்ந்திழுக்கும்…

இவை போதாதா…’? பருவ வயதுப் பெண்கள் பலர் அவன்மேல் காதலில் விழுவதற்கு…

மாணவிகள் பலர் கடைக் கண்களால் அவனை இரசிப்பதும் அவனைக் காதலிப்பதாகத் தங்களுக்குள் போட்டிபோட்டுக் கொள்வதும் அவள் அறியாததல்ல. அனாலும் அவர்கள் எவராலும் அவனை நெருங்க முடிந்ததில்லை.

இப்படி இருக்க ஆசிரியை என்ற இமேஜை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ள அவளால்… தன்ணுணர்வுகளை மறைத்தே பழக்கப்பட்ட அவளால் அவனிடம் தன் காதலை வெளிப்படுத்துவதாவது… ஊமைகண்ட கனவாய் அவள் காதல்…அவள் உள்ளத்திலேயே புதைந்திருக்க வேண்டியது…

…2006 ஆம் ஆண்டு இடம் பெயர்வு …பல துன்பங்களை ஏற்படுத்திய கொடிய நிகழ்வுதான்… ஆனாலும் அந்த இடம்பெயர்வுதான் அவனையும் அவளையும் இணைத்தது. ..

அவர்கள் இடம்பெயர்ந்து நெல்லியடியில் ஒரேவீட்டில் வசிப்பார்கள் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.

அங்குதான் அவள் பார்வையில் தேங்கிநின்ற காதலை அவன் படித்துக் கொண்டான்.

அவன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிய பொழுது ….செல்களினதும் பொம்பர்களினதும் ஓலங்களுக்கிடையேயும்….

இளையராஜாவின் இன்னிசையைச் சுவாசிப்பதாய்….அஜந்தா ஓவியங்களின் அழகை ருசித்ததாய்…

சிட்டுக்குருவிகளின் சிறு சிறகுகள் காற்றை உதைத்து பறக்கும் ஓசையை சுகிர்ப்பதாய்…

பூக்களின் மணத்தை நுகர்ந்து சிலிர்ப்பதாய்….அவள் உணர்ந்தாள்.

அந்தக் கணங்களை இதயத்துக்குள் பத்திரப் படுத்தி ..அவ்வப்போது இரகசியமாய் திறந்து பார்த்து கிறங்கிய தருணங்கள் தான் எத்தனை…

அவன் நாட்டில் இருக்க முடியாத நிலையில் ஜேர்மனிக்குப் பயணித்தபோது பிரிவு தாங்காது அவள் துடித்துத் தான் போனாள் ….பிரிவில் சில ஆண்டுகள்…அனலாய்க் கொதித்த மனதுக்கு அவனது வாக்குறுதியும் ..பழைய நினைவுகளுமே ஆறுதல் தந்தன. .

..காதல்…பிரிவு… கலியாணம்

சங்கக் கவிதையாய் அவள் வாழ்வும் அப்பொழுது இனித்தது…

கலியாணத்துக்கு அவன் சீதனத்தை அதிகம் எதிர்பர்க்கவில்லை…மிக எளிமையாகவே கலியாணத்தை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.

கிழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவளது குடும்பத்துக்கு அவனது இந்தப் போக்கு .. பெருந்தன்மையாகப் பட்டது. . அவளைப் பெற்றவர்களும் மனம் குளிர்ந்து தான் போனார்கள்.

“இப்பிடி ஒரு மாப்பிளை கிடைக்க நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்…” அப்பா சோல்லிச் சொல்லி பெருமைப்பட்டார்,

இந்தப் பெருமிதமும் சந்தோசமும் பொய்யாய்ப் பெரும் கனவாய் மாறும் என்று அவள் அன்று கனவிலும் கருதியிருக்கவில்லை. ..

அவள் ஜேர்மனிக்கு வந்து அவனுடன் வாழத்தொடங்கியபோதுதான் அவனது இன்னுமொரு முகம் அவளுக்குத் தெரிய வந்தது…

அவன் குடிப்பதில்லை.

பெண் பித்தனில்லை. அவன் மனக் கோட்டையை எந்தப் பெணும் அணுகிட முடியாது…

நல்ல உழைப்பாளிதான்…

பிள்ளைகளிடம் அதிக பாசம் காட்டுபவன்தான்..

ஆனாலும் அவனிடம் ஒரு கொடூர மனிதன் ஒளிந்துகொண்டுதான் இருந்தான்….

சந்தேகம்…

சந்தேகம்…

சந்தேகம்…

அவள் உள்ளத்தை எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருக்கும் நெருப்புத்துண்டம்.

அந்தச் சந்தேகத்துக்கான சிறிய பொறியை கொழுத்திப்போட்டவன் கூட அவனது நண்பனென்று சொல்லி உறவாடிய கயவன் ரவிதான்.

ரவி….இவன் திருமணமாகாது இருந்த காலத்தில் அவனோடு ஒரே வீட்டில் வசித்தவன். சரியான பொம்பிளைப் பொறுக்கி,

அவன் இவளது முகநூல் நட்பைப் பெற்று அவள் போட்ட பதிவுகள் புகைப்படங்களுக்குக் கீழ் தவறான அவளையிட்டு ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டதற்கு இவள் எப்படிப் பொறுப்பாக முடியும்.

இவனது நண்பன் என்றதற்காக மட்டுமே இவள் அவனை நண்பனாக முகநூலில் அனுமதித்திருந்தாள்.

கலியாணமான புதிதில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு அவள் அப்போதே சரியான விளக்கம் கொடுத்திருந்தாள்.

ஆனால் அது அவனுக்கு போதவில்லைப் போலும்.

அவளுக்கு நட்பு வட்டம் அதிகம். கலியாணமான புதிதில் அவள் அவர்களோடு ரெலிபோன், முகநூல் தொடர்புகளை பேணினாள்.

அதுகூட அவனுக்குப் பிடிக்கவில்லை..

இவற்றைவிட குறிப்பிடும்படி எந்தச்சம்பவங்களும் அவரகள் வாழ்வில் நடந்துவிடவில்லை.

ஆனாலும்….அவன் மனதில் கோணல், அவன் கண்களில் பச்சைக் கண்ணாடி..

அவளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் அதிகம்…அவள் இளைமை அவளைத் தடுமாறச் செய்யும் என்று நம்புகிறானா….?

இல்லை…தன்னைவிட உலகில் பெண்கள் விசயத்தில் நல்ல ஆம்பிளை ஒருவனும் இல்லை என்று நம்புகிறானா…?

அவள் உள்ளத்தைத்தானே அவளது செயல்களும் உணர்வுகளும் வெளிப்படுத்தமுடியும். அப்படியிருக்க அவனை அன்றி வேறொருவர் நினைவும் அற்ற அவளை அவனால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை…?

அவளும் இந்தக் கேள்விகளைத் தனது மனதுக்குள் ஆயிரம் தடவைகள் கேட்டு விடை காணமுடியாது தவிக்கிறாள்…

திருமண உறவில் ஆயிரம் பொருத்தங்கள் இல்லாமல் போகலாம்…

அனாலும் பரஸ்பர நம்பிக்கை தான் அந்த உறவின் ஆதார சுருதியாக இருக்க வேண்டும் என்பது அவளது உறுதியான நம்பிக்கை…

அவனுக்கும் அவளுக்கும் கலியாணமாகி முழுசாகப் எட்டு வருடங்கள் முடிந்துவிட்டன…

அவளது மன நேர்மையை அவனால் படிக்க முடியவில்லையே… அந்த எண்ணம் அவளைக் கணந்தோறும் கொன்றுகொண்டிருக்கிறது…

அவள் தனது உள்ளத்து நேர்மையை வார்த்தைகளாகச் சொல்லி உணர்த்த முயன்றதில்லை… அவனிடம் சண்டையிட்டுத் தன்னை நிரூபிப்பதை அவள் அவமானமாகக் கூட நினைக்கிறாள்…

அவன் தனது சந்தேகங்களைப் பல்வேறுவடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்…

அவர்கள் வீட்டுக்கு அவள்சார்பாக நட்போ உறவோ பாராட்டி எவரும் வந்துவிடமுடியாது.

அவள் தனது பெற்றோர் முதலிய ஒருசிலரிடம் தான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும் …எப்பொழுதும் அவளது தொலைபேசி அவனால் கண்காணணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.அவளது முகநூலை எப்பொழுதோ முடக்கிவிட்டான்.

அவள் தனித்து வெளியில் செல்ல முடியாது.

அவர்கள் குடும்பமாகத்தான் வெளியில் செல்வார்கள்…அதுவும் பிள்ளைகளின் நச்சரிப்புக் காரணமாகத்தான்… .அப்போது அவனுக்குத் தெரிந்த ஆண்கள் ஆராவது எதிர்பட்டுப் பொதுவாகப் பேசும் போதே

அவனது குறு குறு பார்வை அவள் பிடரியைத் துளைப்பதாக அவள் உணர்வாள்…

வெளிநாடுகளில் ஒருவரின் சம்பாத்தியத்தில் வாழ்வது மிகவும் கடினந்தான்.. அவன் மிகவும் செலவாளி…

இதனால் பொருளாதார நெருக்கடியால் திணறும் சந்தர்பங்கள் பல அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது…

அவள் மிகவும் திறமைசாலி… அவன் அனுமதித்திருந்தால் அவனுக்குச் சரிவர அவளாலும் சம்பாதிக்க முடிந்திருக்கும்…

பொருளாதார தன்னிறைவுடன் வாழமுடியும்.

அவனது அனுமதி என்பது முயற்கொம்பு என்பது அவளுக்குத் தெரியும்…

அதனால் வேலைக்குச் செல்வதால் கிடைக்கும் சிறு ஆறுதல்கூட அவளுக்கு இல்லாமல் போயிற்று..

ஆண் அனுமதிப்பவனாகவும்…

பெண் அனுமதி நாடி யாசிப்பவளாக இன்னும் எமது சமூகத்தில் இருக்க வேண்டி உள்ளதே …

பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று நான்கு மணிக்குப் பின்பே திரும்புவார்கள்.

அந்த மணித்தியாளங்கள் நீண்ட யுகங்களாகவே அவளுக்குக்குக் கழிகின்றன.

அவளைப் பற்றிப் இந்தப் எட்டாண்டு காலத்தில் அவன் அறியாது இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவனை அவள் நன்கு புரிந்து வைத்திருக்கிறாள்.

அவனுள் ஊறி இருக்கும் சந்தேகம் என்ற ஆலகாலவிஷத்தை தனது தொண்டைக்குள் அடக்கிக் கொண்டு அதன் விஷம் பரவாது தடுக்கும் ஆற்றலுள்ள சிவனாக அவன் இல்லாத போது அவள் என்னசெய்தும் பயனில்லைத்தான்.

அவனால் அவள் அனுபவிக்கும் சித்திரவதையை எடுத்துச் சொல்லி ஆறுதலடைய அவளுக்கு எந்த நட்பும் இல்லை. தன்னை வருத்தும் தனது பிரச்சினக்காக வாதாடி அவனிடம் சண்டை செய்யாதவள் நண்பர்கள் இருந்தால் கூட பகிர்ந்துகொள்வாள் என்பதற்கில்லை.

அவளது பெற்றோருக்குச் சொன்னால் அவர்கள் நம்புவார்களா என்பது சந்தேகம்தான்.

“அவன் உன்னை அடிக்கிறானா .’ பொன்போலத்தானே பார்க்கிறான், எங்களிடம் அவன் காட்டும் அக்கறையில் பாதியளவு உன்னிடம் காட்டினாலே நீ இராசாத்தி போல இருக்கலாமே” என்று சொல்லக்கூடும் .

…அவன் அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் அப்படி…

அவர்களைப் பொறுத்தவரை உடலால் வருத்துவது தான் பெரிய விடயம்.

ஒருத்தியின் சுய மதிப்பைப் பற்றி அவர்களுக்குப் பொருட்டில்லை.

அவர்களை வயதுபோன காலத்தில் நிம்மதியில்லாமல் செய்ய அவளுக்கும்

சிறிதும் மனமில்லைத்தான்.

அவனுக்குத் தாய் இல்லை. தகப்பனிடம் அவள் மனம்விட்டுக் கதைக்க முடியாது, திருமணமாகிச் சில மாதங்களிலேயே அவள் ஜேர்மனிக்கு வந்துவிட்டதால் அவனுடைய உறவுகளிடம் எந்த நெருக்கமும் அவளுக்கு இல்லை.

அதனால் தனக்குள்ளேயே குமைந்து குமைந்து அவள் உள்ளக் கொதிப்பு அதிகரிக்கிறதே தவிரக் குறைந்த பாடில்லை..

அனாலும் அவள் அவனை விட்டு விலக முடியாதவளாய் இருக்கிறாள்… அவள் அவனை எந்த நியாயங்களுக்கும் நிபந்தனைக்கும் அப்பாற்பட்டு இன்னும் காதலிப்பதால் அல்ல..

காதலில் தன் மதிப்பு முக்கியம் எனக் கருதுகிறவள் அவள்.

அவன் பிள்ளைகளிடம் உயிராய் இருக்கிறான் …

பிள்ளைகளும் அவனிடம் உயிராக இருக்கின்றன.

இந்த உறவை உடைப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் நல்லதல்ல…

அழகிய கண்ணே உறவுகள் நீயே…

சங்கங் காணாதது தமிழும் அல்ல…

தன்னை அறியாதவள் தாயும் அல்ல…

அவளது கெட் போனில் கண்ணதாசன் வரிகளில் இளைய ராஜா இசையில் ஜானகியின் அற்புதக் குரல் அவள் மனதைச் சாந்தப்படுத்துகிறது…

பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வரும் வரையாவது அவள் நெருப்புக்குள் வாழத் தன்னைப் பழக்கப்படுத்தித்தான் ஆகவேண்டும்.

ஆலகால விஷம் தன்னை அழிக்காது காக்கும் சக்தியை அவள் பெற்றுத்தான் ஆகவேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *