ஆற்றங் கரையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 189 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1

நான்கு வருஷங்களுக்குப் பிறகு அன்றுதான் மறுபடியும் கந்தப்பன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தான்.

அன்று சுக்கிலபக்ஷத்துச் சதுர்த்தசி. நிர்மலமான வானவெளியில், சௌந்தர்ய தேவதை மோகனப் புன்னகை புரிவதுபோல் சந்திரிகை பிரகாசித்துக் கொண்டிருந்தது. L பாலாற்றில் புது வெள்ளம் போகிற காலம். காலம். நிலவொளியில் பால், ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் புது நீர் நுரைத்துக் கொண்டு இரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு சென்றது.

அந்தச் சந்திரிகையிரவில் மணலூர்க் கரையி லிருந்து சிறு படகு ஒன்று எதிர்க்கரையை நோக்கிப் புறப்பட்டது. கிராமத்து இளைஞர்கள் கந்தப்பனை எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வருவதற்காகத் தான் இப்படிப் படகில் புறப்பட்டார்கள். படகு, தோகை விரித்தாடும் மயிலைப்போல் பூக்களினால் அழகாக நிர்மாணித்து அலங்கரித்திருந்தது. படகு கிளம்பியதும், இரவின் நிச்சப்தத்தில், படகில் இருந்த நாகஸ்வரக்காரன் மோகன ராகத்தை ஆலாபனம் செய்து வாசிக்கத் தொடங்கினான். நதியைச் சுற்றிலும் நெடுந் தூரத்துக்கு அந்த இன்னி சையும், மல்லிகை மலரின் நறுமணமும் காற்றிலே தவழ்ந்து சென்றன.

கந்தப்பன் தன் வீட்டை விட்டுச் சென்று நான்கு வருஷங்கள் ஆயின.வரதப்ப நாயக்கர் எந்த வேளையில் தம் கிராமத்தில் அம்மன் கோவில் கட்டத் தொடங்கினாரோ தெரியவில்லை. கோவில் இன்று வரையில் முற்றுப்பெறாமல் நிற்பதுடன், அதே வருஷம் அவர் பிள்ளைகள் இருவரும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போனார்கள். இளையவனான கந்தப்பன், தகப்பனார் எவ்வளவு தடுத்தும் கேளாமல் பல்லவ சைனியத்தில் போய்ச் சேர்ந்துவிட்டான். அவன் போன சிறிது காலத் திற்குள் மூத்தவனும் சென்ற இடம் தெரியாமல் மாயமாய் மறைந்தான்.

காஞ்சிக்குச் சென்ற கந்தப்பன் நான்கு வரு ஷத்தில் சக்கரவர்த்தியிடம் பல பரிசுகள் பெற்றுத் தலைநகரில் பெரிய மனிதனாகிவிட்டான் என்று அறிந்தபோது மணலூர்வாசிகள் அடைந்த பெரு மைக்கும் சந்தோஷத்துக்கும் அளவில்லை. கந்தப்பன் ஊருக்குத் திரும்பி வருகிறான் என்றால் அவர்கள் குதூகலத்தைச் சொல்லவேண்டுமோ?

நதியின் எதிர்க்கரையில், கரையை ஒட்டியபடி நெடுந் தூரத்துக்கு ஒரே முந்திரிக்காடு. அதற்குப் பின்னால் அடுக்கடுக்கான மலைத்தொடர், முந்திரித் தோப்பின் மேல் எட்டிப் பார்க்கும் மேகக்கூட்டம் போல் லேசாகத் தெரிந்தது. ஆற்றிலே படகு பாதி தூரம் வந்துகொண் டிருந்தபோது எதிர்க்கரையில் முந்திரிக்காட்டுக்குள் வளைந்து வளைந்து சென்ற ஓர் ஒற்றையடிப் பாதையின்மேல் கந்தப்பன் குதிரை மேல் அமர்ந்தவனாய் ஆற்றங் கரையை நோக்கிப் போய்க்கொண் டிருந்தான். அவன் சென்ற வழியில் நிலா வெளிச்சம் அதிகமாய் இராமல் அடர்த்தியான மரங்களின் நிழல் விழுந்து இருட்டாய் இருந்ததால், குதிரை ஒவ்வொரு சமயம் பாதையை விட்டு விலகி, வழி தெரியாமல் தடுமாறிப் பிறகு சமாளித்துக் கொண்டு சென்றது. இப்படி ஒரு சமயம் முன்னே போக வழி இல்லாமல் ஓர் அடர்ந்த புதரின் எதிரில் குதிரை போய் நின்றபோது, கந்தப்பன், “சீச்சீ !” என்று முணுமுணுத்துக்கொண்டு குதிரையைத் திருப்ப முயன்றான்.

அப்போது யாரோ இடியிடி என்று பயங்கரமாய் இரைந்து சிரித்தார்கள். தன் தலைக்கு மேல் மரத்தில் இலைகள் சலசல என்று சப்திப்பதைக் கேட்டுக் கந்தப்பன் திடுக்கிட்டு மேலே பார்த்தான்.

மரத்தின் உச்சியில் பெரிய கிளையொன்று நாமம் போட்டதுபோல் இரண்டாய்ப் பிரிந்திருந்தது. அதன் நடுவில் திடகாத்திரமான தேகத்தில் ஓர் ஓட்டுச் சல் லடம் மட்டும் அணிந்துகொண்டு, சடை போட்ட பரட்டைத் தலையுடன் ரோமம் அடர்ந்த முகத்தோடு நின்றிருந்தது ஓர் உருவம். மங்கின நிலா வெளிச் சத்திலும், அந்த மனிதன் கையில் குறி பார்த்து அம்பு பூட்டிய வில்லொன்றை வைத்துக்கொண் டிருந்ததைப் பார்த்தான் கந்தப்பன்.

கந்தப்பன் வாயைத் திறந்து பேசுவதற்குள் அந்த உருவம் கர்ணகடோரமான குரலில், “அப்பனே ! அந்தக் குதிரை எனக்கு வேண்டியதாய் இருக்கிறது. நீ பேசாமல் கீழே இறங்கி நடந்து போய்விடு” என்றது.

கந்தப்பன் இடையில் உடைவாள் இருந்தது. ஆனால், பிரம்மாண்டமான அந்த வில்லைப் பார்த்த போது அவனுக்குப் பதில் பேசத் தைரியம் உண்டாக வில்லை. ஆகையால் பேசாமல் கீழே இறங்கினான். அடுத்த விநாடி, மரத்தின் மேலிருந்த உருவம் அப் படியே குபீலென்று குதிரையின் முதுகில் குதித்து உட்கார்ந்து ஒரு தட்டுத் தட்டிவிட்டதும் குதிரை பறந்தது.

படகில் காத்திருந்த இளைஞர்கள், கந்தப்பன், தான் காஞ்சியிலிருந்து கால் நடையாகவே வந்ததாகத் தெரிவித்ததைக் கேட்டு ஆச்சரியமடைந்தார்கள்.

படகு மறுபடியும் மணலூர்க்கரையை நோக்கிப் புறப்பட்டபோது, நாகஸ்வர ஓசையைப் பிளந்து கொண்டு முந்திரிக் காட்டிலிருந்து, “மழையை நம்பி நதி இருக்க ஏலேலோ, ஏலோ !” என்று யாரோ பாடும் சப்தம் கேட்டுக் கந்தப்பன், “அது என்ன ?” என்று விசாரித்தான்.

‘ஓகோ, காட்டையா பாடுகிறான்” என்றார்கள்.

“அது யார் காட்டையா?”

“அவன் யாரோ காட்டுமிராண்டி; காட்டிலே திரிகிறவன். பைத்தியக்காரன் போல் இருக்கிறது. எங்கிருந்தோ புதிதாய் இந்தப் பக்கம் வந்திருக்கிறான். அரண்மனையைச் சேர்ந்த ஒற்றன் என்றும், என்னவோ வேவு பார்க்க இப்படி வந்திருக்கிறான் என்றும் சிலர் சந்தேகப் படுகிறார்கள். ‘இல்லை, பல்லவ சைனியத்திற்கு ஆள் பிடிப்பதற்காகத்தான் பைத்தியக்கார வேஷத்தோடு வந்திருக்கிறான்’ என் றார்கள் சிலர். அவனுக்குக் ‘காட்டையா’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதோ மறுபடியும் பாடுகிறானே!” என்றார்கள்.

கந்தப்பன் மனத்துக்குள் சிரித்துக்கொண்டான்.

2

பாலாற்று வெள்ளம் நீண்ட நாட்கள் நீடித் திருக்கவில்லை. இப்போது நதிக்கரைக்குச் சென்று பார்த்தால் முன்பு பார்த்த ஆறுதானா இது என்று தோன்றும்படி இருந்தது. கரை புரண்டு ஓடிய அந்தப் பால்வெள்ளம் இப்போது எங்கே ? அதற்குப் பதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் சர்க்கரை போன்ற வெண்மணல் எங்கே பார்த்தாலும் மண்டிக் கிடந்தது. குடி நீருக்காக நடு ஆற்றில் நீண்ட வாய்க்கால் ஒன்று வெட்டியிருந்தார்கள். அதில் மட்டும் இளநீர் போன்ற தெளிந்த நீர் ஊற்றுக் கசிந்து ஓடிக்கொண் டிருந்தது.

அன்று மாலையில், அந்த வாய்க்காலின் கரையி லிருந்து மனத்தை மயக்கும் இனிமையான குழலோசை கேட்டது. நீர் ஊற்றின் மேலிருந்த மணற்றிட்டில் சாய்ந்துகொண்டு கந்தப்பன் குழல் ஊதிக்கொண் டிருந்தான். அவன் வாய் குழல் ஊதுவதில் ஈடுபட் டிருந்தபோதிலும் அவன் மனத்தில் வேறு எண் ணங்கள் ஓடிக்கொண் டிருந்தன.

எதிர்க்கரையில், அந்த மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமனமாகும் சூரியனின் உருவம் செக்கச் செவேலென்று வண்டிச் சக்கரத்தவ்வளவு பெரிதாய்த் தெரிந்தது. வேணுகானத்தை நிறுத்தி விட்டுக் கந்தப்பன் ஒரு நிமிஷம் மெய்ம்மறந்து இந்த அற்புதக் காட்சியைக் கவனித்தான்.

இப்படி அவன் உட்கார்ந்திருக்கையில், அவன் ஊதிய குழலினும் இனிய குரலில் பாடிக்கொண்டு, வாய்க்காலின் எதிர்க்கரையிலிருந்த மணல்மேட்டுக்கு மேல் ஒரு பெண்ணுருவம் இடுப்பில் குடத்துடன் தோன்றியது.

“கண்ணம்மா!” என்று கூப்பிட்டான் கந்தப்பன்.

அந்த நடு ஆற்றில் தான் தனியாக இல்லை என்பதை அப்பொழுதுதான் அந்தப் பெண் உணர்ந் தாள்போல் இருக்கிறது. அவன் குரலைக் கேட்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இடுப்பிலிருந்த குடம் பிடியிலிருந்து நழுவிக் கீழே விழுந்து மணற் சரிவில் உருண்டுகொண்டே போய்த் தண்ணீரில் விழுந்தது.

கந்தப்பன் சிரித்தான். அப்பொழுது கண்ணம் மாவின் முகத்திலும் நாணத்துடன் கூடிய புன் முறுவல் தோன்றியது. “நீங்கள் இங்கே இருப்பதைப் பார்க்கவில்லை. சத்தம் கேட்டதும் பயந்து போனேன்” என்று சொல்லிக்கொண்டே மணற் சரிவில் இறங்கிக் குடத்தில் தண்ணீர் மொண்டு கொண்டாள்.

இரண்டு கைகளினாலும் அவள் தண்ணீரை லேசாக ஒதுக்கிவிட்டுக் குடத்தில் தண்ணீர் மொள்ளும் அழகைப் பார்த்துக்கொண் டிருந்த கந்தப்பன் திடீரென்று, “ஆமாம், நீ இந்தப் பக்கம் எங்கே போய்விட்டு வருகிறாய், கண்ணம்மா?” என்று வினவினான்.

கண்ணம்மா தலையை நிமிராமல் கடைக்கண் ணாலேயே அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, “வெறு மனே கொஞ்ச தூரம் மணலிலே நடந்து போனேன்” என்று சொல்லிவிட்டு வாய்க்காலைக் கடந்து வந் து இடிப்பில் குடத்துடன் ஊரை நோக்கி நடந்தாள். அப்பொழுது கந்தப்பன் சொன்னான்: “இனிமேல் அந்தப் பக்கம் போகாதே, கண்ணம்மா. அந்த முந்திரிக் காட்டிலே ஒரு பைத்தியக்காரன் இருக் கிறான். அவன் உன்னைப் பிடித்துக்கொண்டு போயே போய்விடுவான்!”

3

இப்படிச் சொல்லிவிட்டு மறுபடியும் கந்தப்பன் குழல் ஊதத் தொடங்கினான். இன்னும் அவன் மனத்தில் பல விதமான எண்ணங்கள் ஒவ்வொன்றாய் எழுந்தன. கண்ணம்மாவின் அழகிய உருவம் அவனைப் பிரமிக்கச் செய்துவிட்டது. கந்தப்பனும் கண்ணம் மாவும் கர்ப்பவாஸத்தில் இருக்கையிலேயே அவர்கள் இருவருக்கும் சேர்த்துப் பெரியவர்கள் முடிபோட்டிருந்தார்கள்; “எனக்குப் பிள்ளை பிறந்து, உனக்குப் பிறப்பது பெண்ணாய் இருந்தால் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவிடுவது” என்று அவர்கள் பெற் றோர்கள் அப்போதே தீர்மானித்து விட்டதால் கண்ணம்மா கந்தப்பனுக்கு முறைப் பெண்ணாய்ப் போய்விட்டாள். கந்தப்பன் தமையன் நாகப்பன் காணாமற் போனதற்கும் இதுவே காரணம் என்று சிலர் பேசிக்கொண் டிருந்தது கந்தப்பன் காதிலும் விழுந்திருந்தது. நாகப்பன் கண்ணம்மாவை மணந்து கொள்ள விரும்பியதாகவும், பெரியவர்கள் இணங்க மாட்டார்கள் என்று கண்டு, தான் போய்விடுவது நல்லது என்றே போய்விட்டதாயும் சொல்லிக் கொண்டார்கள்.

கந்தப்பன் மனம் வேதனை அடைந்தது. ‘ஹும்; கண்ணம்மா எவ்வளவு அழகாய் இருக்கிறாள்! பாவம் ! அண்ணா கொடுத்து வைக்கவில்லை. எங்கே ! போயிருப்பான் அவன்? செத்துத்தான் போய் விட்டானோ? எங்கேயாவது போய்ப் பிராணனை விட்டுவிட்டானோ?’ என்று அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

4

விரைவிலேயே கந்தப்பனின் கல்யாணத்திற்கு முகூர்த்தம் வைத்துவிட்டார்கள்.

நாளைப் பொழுது விடிந்தால் கல்யாணம். இன்று மாப்பிள்ளை கோவிலில் ஸ்வாமிதரிசனம் செய்துகொண்டு பட்டணப் பிரவேசம் செய்யப் போகிறான்.

அப்பொழுதுதான் உதயமான பிறைச் சந்திரனை மேகங்கள் மறைத்திருந்தன. சிலுசிலு என்ற காற் றுடன் மழையும் சேர்ந்து பன்னீர் தெளிப்பதுபோல் சிறு தூறலாய்த் தூறிக்கொண்டிருந்தது.

கல்யாண வீட்டுவாசலில் போட்டிருந்த பந்தலில் காஞ்சி நகரிலிருந்து வந்திருந்த நாகஸ்வரக்காரன் ஒரு மணி நேரமாய்த் தோடி ராகத்தை ஆலாபனம் செய்துகொண் டிருந்தான். ஊர்வலத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் தயாராகிவிட்டன. மழைத் தூறல் நிற்கவேண்டியதுதான் தாமதம்.

வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்த கந்தப்பன் ஏதோ காரியமாய்ப் போவதுடே போல் கொல்லைப்புறம் சென்று குதிரைத் தொழுவத்தை அடைந்தான். அங்கே இருட்டில் சேணம் பூட்டிய வெள்ளைக் குதிரை ஒன்று ஊர்வலத்துக்குத் தயா ராய்க் காத்துக்கொண் டிருந்தது. கந்தப்பன் சந்தடி செய்யாமல் குதிரையை அவிழ்த்து, அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு கொல்லைப் பக்கமாகவே மரங் களின் இடையிலிருந்த ஒற்றையடிப்பாதையின்மேல் மெதுவாகச் சென்றான். இருநூறு கஜதூரம் சென்ற பின், குளத்தங்கரையில் இருந்த மாமரத்தடியில் இருட்டுடன் இருட்டாய் ஓர் உருவம் நின்றிருந்தது தெரிந்தது. கந்தப்பன் குதிரையை நிறுத்தி, அந்த உரு வத்தையும் கை கொடுத்துத் தூக்கி ஏற்றிக்கொண்டு குதிரையை வேகமாய்த் தட்டிவிட்டான். குதிரை ஆற்றங்கரையை அடைந்து, பாலாற்றின் மணற் பரப்பைக் கடந்து முந்திரிக்காட்டுக்குள் புகுந்தது.

சிலுசிலு என்று அடித்த மழைக் காற்றுடன் கம்மென்று முந்திரிப் பழத்தின் வாசனை வீசிக்கொண் டிருந்த அந்த இருட்டில் ஆயிரக்கணக்கான மின் மினிப் பூச்சிகள் மரங்களைச் சுற்றிக் கண்ணாமூச்சி ஆடுவதுபோல் வட்டமிட்டுக்கொண் டிருந்த காட்சி யைக் கண்டு கந்தப்பன் மெய்ம்மறந்து குதிரையை நிறுத்தினான். அப்பொழுது திடீரென்று, “மழையை நம்பி நதியிருக்க ஏலேலோ ஏலோ-” என்ற பாட்டு ராகத்தோடு கண்ணம்மாவின் இனிமையான குரலில் பாடப்படுவது கேட்டது.

அந்தக் குரலின் எதிரொலி ஆற்றின் மறுகரையி லிருந்து கிளம்பி ஓய்வதற்குள் சலசல என்று இலைச் சருகுகளின்மேல் சப்தம் செய்துகொண்டு, காட்டையா குதிரையின்மேல் அமர்ந்தவனாய் அவர் கள் எதிரில் பிரசன்னமானான்.

கந்தப்பன் உடனே, “அண்ணா !” என்று கூப்பிட்டான்.

ஒரு நிமிஷம் பதில் ஒன்றும் வரவில்லை. யாரோ பெருமூச்செறியும் சப்தம் மட்டும் கேட்டது.

“கந்தப்பா! நாளைக்கு உனக்குக் கல்யாணமல்லவா? நீ ஏன் இங்கே வந்தாய்? உன்னோடு குதிரைமேல் இருப்பது யார்?”

“கண்ணம்மாவை அழைத்து வந்திருக்கிறேன், அண்ணா. இந்தா, ஏற்றுக் கொள்” என்றான் கந்தப்பன்.

நாகப்பன் இடியிடி யென்று சிரித்தான். “பைத்தியக்காரா! நீ எப்பொழுது வரப்போகிறாய் என்று அவள் உனக்காகத் தவங்கிடந்தாள். அவளை நீ இங்கே எதற்காக அழைத்து வந்தாய்?” என்றான்.

“அதிருக்கட்டும் அண்ணா. நீ ஏன் ஏன் வீட்டை விட்டு வந்து இப்படிக் காட்டு மிராண்டியாய்க் காலம் கழித்துக்கொண் டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே அழைத்து வந்தேன். நான் மறுபடியும் காஞ்சி நகர் போகிறேன், அண்ணா” என்றான் கந்தப்பன்.

நாகப்பனின் வில்லிலிருந்து ஒரு பயங்கரச் சப்தம் எழுந்தது; “கந்தப்பா! திரும்பி ஊருக்குப் போய் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா அல்லது உங்கள் கண்ணெதிரில் இந்த அம்புக்கு நானே இரையாகட்டுமா?” என்று அவன் கர்ஜித்தான்.

கந்தப்பன் பதில் பேசாமல் குதிரையை மறுபடியும் வந்த வழியே திருப்பினான்.

குதிரை ஆற்றைக் கடக்கையில் முந்திரிக்காட்டி லிருந்து காட்டையா தன் வழக்கமான பாட்டைப் பாடும் சப்தம் கேட்டது. அதற்குப் பிறகு அவன் குரலை ஒருவரும் கேட்கவில்லை. காட்டையா, தான் வந்த விதமே மறுபடியும் அந்தப் பிரதேசத்திலிருந்து மாயமாய் மறைந்து போனான்.

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *