கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 6,525 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

”குகுகூங்” – ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.

அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் திகைப்பே கொண்டான்.

தனது எண்ணம் உடனடியாக இவ்வாறு பலித்திட முடியுமா? அல்லது, கனவின் உருவெளித் தோற்றம்தானா அது? அவன் விழித்துக்கொண்டே கனவு காண்கிறானோ? அன்றி. சித்தம் சிருஷ்டித்து விளையாடுகிற பிரமைதானா?

கண்களை விரலால் கசக்கி விட்டு, அவன் வெறித்து நோக்கி னான். அவன் கண்டது வெறும் பிரமையோ, பகற்கனவோ அல்ல என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது.

அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள், உயிர் பெற்ற சிலைபோல. “நிலவு செய்யும் முகமும், காண்போர் நினை வழிக்கும் விழி”களும் பெற்ற இந்த அழகி இங்கே திடுமென எப்படித்தான் வந்தாளோ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.

எழில் கொலுவிருக்கும் அருமையான இடம். குளுமை நிறைந்த சூழல். இந்த அற்புதமான இடத்தில் கண்ணுக்கு விருந்து நிறைய உண்டு. ஆனாலும், ஒரு குறை. அழகுப் பாவை ஒருத்தி அருகே இல்லையே. அது பெரிய குறைதானே? களி துலங்க நகைத்து, குழறு மொழி பேசி, பொழுதைப் பொன்னாக்கத் துணை புரியும் அழகி ஒருத்தி உடன் இருந்துவிட்டால், இனிமை அதிகரிக்கும்மே என்று அவன் எண்ணினான்.

எண்ணம் பிறந்து இரண்டொரு நிமிஷங்கள் கூடப் பறந்திரா. அவன் எண்ணத்தின் விளைவே போலும் அவன் பின்னே சிரிப்பொலி சிந்தி நின்றாளே பெண் ஒருத்தி!

இந்தக் காலத்திலும் அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன! மகாதேவன்-மனம் தந்த குறிப்பு இது.

பிற்பகல் நேரம். மணி என்ன, ஒன்றரை அல்லது இரண்டு இருக்கும். வெயில் கடுமையாகக் காய்ந்தது. ஆனால், அதன் உக்கிரம் அந்த இடத்தில் எடுபடவில்லை. பார்வைக்கும் உள்ளத்துக்கும் இதம் தரும் குளுமையான பிரதேசம் அது. காவிரி ஆற்றின் நடுவில் அமைந்திருந்தது.

“ஆகா, இனிமை, அழகு அழகு!” என்று சொக்கிச் சுவைத்தது அவனது ரசிக உள்ளம்.

ஒடும் நீரின் விம்மல்களும் அசைவுகளும் வெயிலில் தனிப் பளபளப்பு காட்டி நடனமிடுவதாகத் தோன்றியது. தூரத்தில் மேலேறி நெளியும் புகைச் சுருள்கள்போலும், அருவங்களின் ஆனந்தக் குதிப்பே போலும், ஆடிக்கொண்டிருக்கும் கானல் தோற்றங்கள். அவன் இருந்த இடத்தில் ஊர்ந்த குளுமையான காற்றின் அசைவுக்கு ஏற்ப மரங்களின் இலைக் கூட்டங்கள் சித்திரித்த நிழற்கோலம்…

இவ்வாறு எத்தனையோ இனிமைகளைக் கண்டு வியந்து கொண்டிருநத மகாதேவன் உள்ளத்தில் இயல்பாக அந்த ஆசை அரும்பியது. “இனிமைக்கு இனிமை சேர்க்க, பக்கத்தில் ஒரு பெண் இருக்கலாம்!” என்று.

அந்த எண்ணம் உண்மையாகவே நிறைவேறி விட்டதே!

அந்திமந்தாரைபோல் பளிரெனத் திகழும் பர்ப்பிள் நிறப் புடவை. வான் நீல வர்ணரவிக்கை. அவள் உடல் வனப்பை எடுத்துக் காட்டும் பொருத்தமான உடைதான். அழகு முகம். அதில், உணர்வின் ஊற்றுக்களாய் குறு குறுத்தன எழில்நிறைந்த கண்கள். சிரிப்பில் நெளியும் சிங்கார உதடுகள்….

அந்தப் பெண்ணின் அழகு வடிவத்தை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவள் மெது மெதுவாக அசைந்து நகர்ந்து வந்தாள். அவனைப் பார்த்து, “ரொம்பவும் தெரிந்தவள்போல்” சிரித்ததாக அவனுக்குப் பட்டது.

“ரொம்ப நேரமாக இங்கேயே இருக்கிறீர்களா?” என்று திடீரெனக் கேட்டாள் அவள்.

அதிசயமான பெண்தான் இவள் என்றுதான் நினைக்க முடிந்தது அவனால். “ஊம். நான் வந்து ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாகுது” என்றான்.

“என்னாலே சீக்கிரமா வரமுடியலே. அம்மாடி! இப்பவாவது வர முடிந்ததே!” என்றவள், எதையோ எண்ணி பயப்படு கிறவள்போல் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, மிரள மிரள விழித்தாள். உடனேயே அர்த்தம் இல்லாமல், அவசியம் இல் லாமல் சிரித்தாள். அவள் சிரிப்பின் கலீரொலி இன்னிசையாய், கவிதைத் துள்ளலாய்ப் பரவசப்படுத்தியது அவனை.

அவள் விடுவிடென்று நடந்தாள். அங்கு ஒரு புறத்தில் படிக்கட்டு நீளமாக வரிசை வரிசையாக அமைந்திருந்தது. அதில் அவள் குதித்துக் குதித்து இறங்கினாள். தண்ணிரில் அடி எடுத்து வைத்ததும் “ஐயோடீ!” என்று கத்தினாள்.

அவன் பயந்து விட்டான். கால் சறுக்கி அவள் விழுந்திருப் பாளோ என்று பதறி ஓடினான்.

அவள் ஜம்மென நின்று கொண்டுதானிருந்தாள். சிரித்தாள். “தண்ணிர் ஜில்னு இருக்குது. ஐஸ் மாதிரி. அது தான்” என்று சொன்னாள்.

“இதுக்குத்தானா?. வெறும் விளையாட்டுப் பிள்ளை” என்று மகாதேவன் நினைத்துக்கொண்டான்.

அவள் கைகளால் தண்ணிரை வாரி வாரிச் சிதறினாள். சிரித்தாள்.

“இவளுக்கு இருபத்துநாலு இருபத்தைந்து வயசு இருக்கும். என்றாலும் இவள் சின்னப் பெண் போல்தான் நடந்து கொள்கிறாள்” என்று அவன் மனம் விமர்சனம் பேசியது.

அவள் நதியையும், சுற்றிலுமுள்ள இனிய காட்சிகளையும் வியப்பினால் விரிந்த கண்களால் பருகி நின்றாள். நீரில் படகு வருவதையும் கண்டாள்.

“ஐ சக்கா படகிலே போனால் ஜோராக இருக்குமே!” என்று உவகையோடு கத்தினாள். “படகிலே போவோமா? நானும் கூடவாறேன். நான் பயப்படம்ாட்டேன். ஆமா. பயப்பட மாட்டேன்” என்று அவனிடம் சொன்னாள்.

அவள் சொல்லையும் செயலையும் சிறு பிள்ளைத் தனம் என்பதா? புதுமைப் பெண்ணின் கள்ளமில்லாச் சுபாவம் எனக் கொள்வதா? அவன் மனசின் சிறு சலனம் இது. தெளிவு பிறக்க வழி தான் இல்லை. இருப்பினும், அனுபவத்தின் புதுமை அவனுக்கும் உற்சாகம் தந்து மகிழ்வித்தது.

இருவரும் படகுத் துறை நோக்கிச் சென்றார்கள். போகிறபோதே அவள் சொன்னாள்: “நம்மை யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. அறிமுகப்படுத்த யாரும் இல்லவு மில்லை. அதனால், நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்ளலாமே!”

“ஆல் ரைட்” என்பது தான் அவன் பதில்.

அவளே முந்திக்கொண்டாள். “என்னை ராஜம் என்று அழைப்பார்கள். என் பெயர் ராஜம்மா. அடியே ராஜி, ஏ ராஜாத்தி என்றும் வீட்டில் கூப்பிடுவார்கள்.” இதைச் சொல்லிவிட்டும் அவள் சிரித்தாள்.

இதற்குள் மகாதேவன் புரிந்துகொண்டான். அவள் சிரிப்பில் அர்த்தம் உண்டு என எதிர்பார்க்கக் கூடாது. சிரிப்பதற்கு அவசியம் அல்லது காரணம் எதுவும் இருக்க வேண்டும் என்று அவள் கருதுவது மில்லை. சிரிப்பு அவளுடைய சுபாவங்களில் ஒன்று. அது அவளோடு பிறந்து வளரும் ஒரு வியாதிமாதிரி. இருந்தாலும் என்ன? அவள் சிரிப்பது அழகாக இருந்தது. அவள் சிரிப்பில் உயிரும் உணர்வும் கலந்து இசையாய் பொங்கின. ஓசை நயம் பெற்ற கவிதை போல் ஒலித்த அதைக் கேட்கக் கேட்க இன்னும் கொஞ்சம் கேட்கமாட்டோமா என்ற ஆசையே எழும்.

அவன் தன்னை அறிமுகப் படுத்த வேண்டாமா? “என் பெயர் மகாதேவன். ஊர் சுற்றி அழகான இடங்களைத் தரிசித்து, மகிழ்ச்சி பெற முயலுகிறேன். இது ரொம்ப அழகான இடம் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன்.”

குமிழியிட்டுக் கொப்புளிக்கும் நீரூற்றுப் போல் சிரிப்பு அவள் வாயிலிருந்து பொங்கிப் புரண்டது. “மலை மகாதேவனைத் தேடி வராது; மகாதேவன் தான் மலையைத் தேடிப்போக வேண்டும் என்பார்கள். அழகான இந்த இடம் மகாதேவனைத் தேடி வராது என்பதனால், இந்த மகாதேவன் அழகான இந்த இடத்தைத் தேடி வந்து விட்டார்!”

இதைச் சொல்லிவிட்டு அவள் கைகொட்டி, கலகலவெனச் சிரித்தாள்.

இவள் என்ன இப்படி நடந்து கொள்கிறாள் என்று குறிப்பதுபோல் அவன் அவளை நோக்கினான். விஷ நோக்கு எதுவுமற்ற விஷமக்காரச் சிறுமிபோல்தான் அவள் காணப் பட்டாள். “இதுவும் ஒரு கேரக்டர்” என்று அவன் மதிப் பிட்டான்.

பொதுவாக, பெண்களால் சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஓயாது சளசளவென்று எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பேச வேண்டுமே என்பதற்காக சதா உளறிக் கொட்டுவார்கள். இந்த ராஜத்தின் போக்கும் அப்படிப்பட்டது தான் – இவ்விதமாகவும் எண்ணினான் அவன்.

இரண்டுபேரும் படகில் ஏறினார்கள். பெரிய வட்ட வடிவ மூங்கில் கூடை மாதிரி இருந்தது அந்தப் படகு வயதிலும் உழைப்பிலும் முதிர்ச்சிபெற்ற, வாழ்வினாலும் வறுமையினா லும் கசப்பு வளர்த்து, பேசாத இயந்திரம்போல் ஆகிவிட்ட ஒரு மனிதன்தான் படகோட்டி. அந்தப்படகில் அவ்வேளையில் மகாதேவனும் ராஜம்மாளும்தான் பிரயாணிகள். அவனே இருவருக்கும் உரிய கட்டணத்தைக் கொடுத்தான்.

நீலம் படிந்து, கண்ணாடி மாதிரித் தெளிவாகவுமிருந்த, குளிர்ந்த நீரோட்டத்தைக் கிழித்துக்கொண்டு, இக்கரையிலிருந்து அக்கரை நோக்கிச் சென்றது படகு. வெயிலின் “சூடு தெரியவில்லை. நீரின் குளுமைதான் பட்டது. அவள் தண்ணிரில் கையிட்டு அளைந்து விளையாடினாள். “என்னம்மா ஜில்னு இருக்குது!” என்று சொல்லி, தன் சொல்லின் உண்மையை உணர்த்த விரும்புகிறவள்போல, கையினால் தண்ணிரை அள்ளி அவன் முகத்தில் விசிறி அடித்தாள். தொடர்ந்து சிரிப்பைச் சிந்தினாள்.

அவனுக்குக் கோபம் வந்தது. ஆனாலும் அந்த அழகியிடம் எப்படி எரிந்து விழுவது? யாரோ ஆன ஒரு குறும்புக்காரியிடம் கோபித்து ஏசிப் பேச அவனுக்க மனம் எழவுமில்லை.

சுத்த பைத்தியமாக இருக்கிறியே! இது என்ன விளை யாட்டு?” என்று அவன் சொன்னான். வறண்ட குரலில் தான் சொன்னான்.

ஆயினும், அவள் முகம் கறுத்தது. அவள் முகத்தை “உம்மென்று” வைத்துக் கொண்டாள். “நான் ஒண்ணும் பைத்தியம் இல்லை. ஆமா. பைத்தியமாம்! இவரு கண்டாரு!. வவ்வவ்வே” என்று முனகி பழிப்புக் காட்டினாள்.

அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால், அவள் சிரிப்பு திடீரென்று போன இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டது. அவள் பேசவுமில்லை.

கரை வந்ததும், அவள் முதலில் குதித்து வேகமாக நடக்கலானாள். “சரியான சின்னப் பிள்ளைதான். செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட சிறுபிள்ளை” என்று அவன் எண்ணினான். போனால் போகிறாள்! அவளாக வந்தாள், அவளே போகிறாள். அந்நியளான அவளை அழைக்க அவனுக்கு உரிமை என்ன இருக்கிறது? அவன் அவள் பக்கம் பாராமலே, ஆற்றைப் பார்த்துக் கொண்டு வெறுமனே நின்றான்.

படகு திரும்பிக் கொண்டிருந்தது. பிரயாணிகள் அதிகம் சேரவேண்டும் என்று படகோட்டி காத்திருப்பதில்லை. ஒரு ஆள் ஏறினாலும், ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் போவதும், அங்கே இருந்து இங்கே வருவதுமான கடமையை அலுப்புச் சலிப்பு இல்லாமல் செய்யும் இயந்திரமாகி யிருந்தான் அவன்.
அவன் படகு வலித்துச் செல்வதை கவனித்தபடி நின்றான் மகாதேவன்.

திடுதிடுவென ஓடிவந்தாள் ராஜம்மா. “இட்டாசு கைகொட்டி ஓசைப்படுத்தி அவன் கவனத்தை இழுத்தாள். “ஏஹே. பயந்து போனிங்களா?. பயந்தே போனார், டோடோய்!” என்று கூவிக் கூத்தடித்தாள்.

அவள் குதிப்பையும் கும்மாளியையும் காணக்காண அவனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

அவன் சிரிப்போடு அவள் சிரிப்பும் கலந்து கலீரிட்டது.

“என்ன இங்கேயே நின்னுட்டீங்க? உங்களுக்குப் பசிக்கலே? எனக்குப் பசிக்குதே!” என்றாள் அவள். “நான் எல்லாரையும் விட்டுப் போட்டு ஓடி வந்துட்டேன். அவங்க எல்லாம் நல்லாச் சாப்பிட்டு விட்டு, தூங்கிக்கொண்டிருந்தாங்க. நானும் கண்ணை மூடிக்கிட்டு படுத்திருந்தேனா? ராஜாத்தி தூங்குறான்னு நம்பிவிட்டாங்க. நான் நைஸா எழுந்து வந்து விட்டேன். முழிச்சு, காப்பி சாப்பிடற நேரத்திலே எல்லோரும் என்னைத் தேடுவாங்க, காணோமே. ராஜி எங்கே போயிட்டா? ஏ ராஜம், ஏ ராஜாத்தி என்று கூப்பாடு போட்டுக் குழம்பித் திண்டாடுவாங்க” என்றும் ரசித்து அனுபவித்து, நடிப்பு நயத்தோடு, அவள் விவரித்தாள்.

“யாரு, எங்கே இருக்கிறாங்க?” என்று அவன் கேட்டான். அவள் போதிய அறிவு வளர்ச்சியும் பொறுப்பு உணர்வும் பெற்றிராத சிறுமியாகவே இன்னமும் காட்சி தந்தாள் அவனுக்கு.

“அங்கே இருக்கிறாங்க. அப்பா, அம்மா, மாமா எல்லாரும்” என்று அவள் கைவீசி மறுகரையின் பக்கம் காட்டினாள். அந்தக் கைவீச்சின் எல்லை எவ்வளவோ? அதில் எங்கே இருக் கிறார்களோ அவளைச் சேர்ந்தவர்கள்?

“எனக்குப் பசிக்குதே, அப்புறம் நான் அழுவேன்” என்று பாவத்தோடு பேசினாள் அவள்.

“நல்ல தமாஷ்தான்!” என்று எண்ணினான் அவன். ஒற்றையடித் தடத்தில் நடந்து, ரஸ்தாவை அடைந்து, சிறிது தூரம் சென்றார்கள்.

அங்கு ஒரு சிற்றுார் இருந்தது. காப்பி ஓட்டல் என்ற பெயரில் அங்கே “குடிசைத் தொழில்” நடைபெறுவதும் தெரிந்தது. காப்பி என்ற பெயர் பெற்றிருந்த திரவ பதார்த்தமும் கிடைத்தது. ரவா கேசரியும் வடையும் வாய்க்கு ருசியாக இல்லாவிடினும் வயிற்றுப் பசியைத் தணிக்க உதவின.

இனி என்ன செய்யலாம்? மகாதேவன் உள்ளத்தில் தலையெடுத்திருந்த சிறு உதைப்பு நேரம் ஆகஆக வலுப்பெற்று வளர்ந்தது.

“நாம ரயிலில் பிராயணம் போகலாமா?” என்று அவள் ஆவலோடு விசாரித்தாள்.

அவள் கண்ணுக்கு விருந்தாகும் அழகி தான். விளையாட்டுக் குணம் பெற்றவள். சிறிது நேரம் பேசிப் பொழுது போக்கும் சிநேகிதிபோல் வந்தவள் தொண தொணக்கும் தொல்லையாய் தொந்தரவாய் மாறிக்கொண்டிருந்தாள். இவள் யாரோ? இவளை உதறி எறிவதுதான் எப்படி? அவன் மனம் வலை பின்னிக்கொண்டேயிருந்தது.

“மறுபடியும் ஆற்றின் கரைக்கே போவோம். மாலை நேரம் அருமையாக இருக்கும்” என்று கூறி அவன் நடந்தான்.

மறுப்புரை கூறாது அவளும் பின் தொடர்ந்தாள். அவள் எதையாவது சொல்லிக்கொண்டு சிரித்து விளையாடியும் பொழுது போக்கினாள். அவன் மீது அவளுக்கு எவ்விதமான பற்றுதலோ, திடீர் பாசமோ ஏற்பட்டு விடவில்லை. அவனுக்கும் அவள்பேரில் அன்போ ஆசையோ பிறந்து விடவும் இல்லை. அவனுக்கு அவள் ஒரு புதிராகவும் புதுமையாகவும் தான் தோன்றினாள்.

“என்னால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. இவளுள் மறைந்திருக்கும் எதையோ பற்றியது தான். இவள் நல்ல பெண்தான். சுபாவமாகப் பழகுவது போல்தான் தெரிகிறது. இருந்தாலும், இவள் பார்வையில், பேச்சில், செயல்களில் கரந்துறையும் எதுவோ ஒன்று இவளிடம் என்னவோ கோளாறு அல்லது குறைபாடு இருப்பதாகச் சொல்லாமல் சொல்லுகிறது. அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே” என்று அவன் மனம் வேதனைப்பட்டது.

“அம்மாடி, கால் ரொம்ப வலிக்குதே!” என்று மணலில் தொப்பென விழுந்தாள் அவள். தானாகவே சிரிப்பு வெடித்தது அவளிடமிருந்து.

“அதென்ன சிரிப்போ! பேய்ச் சிரிப்பு!” என்று அலுத்துக் கொண்டது அவன் மனம்.
உடன் ஒரு எண்ணமும் அலை யிட்டது: இவள் பேயாக இருப்பாளோ? மோகினிப் பேயாக? அழகான பெண் வடிவத்தில் பேய் நீர் நிலைகள் பக்கத்தில் நடமாடும், ஆண்களைப் பிடித்துக்கொள்ளும், கூடவே இருந்து கொன்றுவிடும் என்று சொல்வார்களே. அதுமாதிரி ஏதாவது.

இந்த எண்ணமே முட்டாள் தனமாகவும் பைத்தியக்காரத் தனமாகவும் தோன்றியது அவன் அறிவுக்கு.

“பேசாமல் உட்கார்ந்திருக்கிறீர்களே? கதை ஏதாவது சொல்லுங்களேன்” என்று தூண்டினாள் அவள்.

“கதையா? எனக்குக் கதை சொல்லத் தெரியாதே” என்று கூறினான் அவன்.

“அப்போ நான் சொல்லட்டுமா?” என்று எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

“உம்” என்று தலையசைத்தான் மகாதேவன்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா மகள் இருந்தாள்” என்று கதை சொல்லலானாள் அவள். “அவள் அழகுன்னா அழகு சொல்ல முடியாத அழகு. பூரணச் சந்திரன்மாதிரி இருந்த அவளுக்கு சூரியன்மாதிரி மாப்பிள்ளை வரவேண்டும் என்று ராஜாவும் ராணியும் ஆசைப்பட்டாங்க. பல தேசத்து ராஜகுமாரர்களின் படங்களையும் வரவழைத்து மகளிடம் காட்டினார்கள். அந்த ராஜகுமாரிக்கு எந்த இளவரசனையுமே பிடிக்கவில்லை. இவன் மூஞ்சி பனங்காய் மாதிரி இருக்குது, அவன் மூக்கு கொழுக்கட்டை போலிருக்கு, இவன் புறா முட்டைக் கண்ணன் என்று ஒவ்வொருவனையும் பழித்துப் பேசினாள். அதனாலே எல்லா தேசத்து ராஜாக்களுக்கும் இந்த ராஜா பேரிலே கோபம் ஏற்பட்டது. பகை உண்டாச்சு. அவனை ஒழிக்கணுமின்னு திட்டம் போட்டாங்க. இந்த ராஜா என்ன செய்வாரு பாவம். அவருக்கும் மகள் மேலே வெறுப்பு உண்டாயிட்டுது. எவன் கிட்டேயாவது மகளை ஒப்புவித்துவிட வேண்டியதுதான்னு முடிவு செய்து, ஒரு மாப்பிள்ளையைத் தேடிப்பிடிச்சாரு. அவன் ஒரு குட்டி தேசத்து நெட்டை ராஜா. மகள் எவ்வளவு அழுதும் பிரயோசனப்படலே. அந்த ராஜாவுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து; அவனோடு மகளை அனுப்பினாரு. மாப்பிள்ளை ராஜா புது மனைவி பக்கத்திலே ஆசையாக வந்தான். என் நிலாவே, பெளர்ணமியே என்றான். அட அமாவாசையே ஆசையைப் பாரு ஆசையை என்று இளவரசி சிரித்தாள். அவன் அவளைப் பிடிக்க வந்தும் ராஜா மகள் என்ன செய்தாள்? ஏய், தூரப் போ என்று கத்தி, அவன் கழுத்தைப் புடிச்சு அமுக்க ஆரம்பித்தாள். இப்படித்தான் அமுக்கினாள்….”

ராஜம்மா, மகாதேவன் எதிர் பாராத சமயத்தில் அவன் கழுத்தைப் பிடித்து, “ஏய், என்னைத் தொடவா வாறே? ஒடிப்போ.உம்…, போ…. போய்விடு” என்று கோரமாகக் கத்திக் கொண்டு, அமுக்க முயன்றாள்.

ஒரு கணம் அவன் திணிறப் போனான்; எனினும், திமிறிக் கொண்டு, அவள் கைகளில் வேகமாக, பலமாக, அறைமேல் அறை கொடுத்தான். அவள் வேதனை தாங்காது கைகளைக் கீழே தொங்க விட்டாள்.

அவள் முகம் பயங்கரமாகக் காட்சி தந்தது. அவள் கண்கள் வெறி சுடரிட உறுத்து நோக்கின. அவள் அவ்வேளயிைல் பேய் பிடித்தவள்மாதிரி, காளி வேஷக்காரிபோல, தோற்றம் பெற்றிருந்தாள்.

அந்தக் கணத்தில் மகாதேவனுக்குப் புதிர் விடுபட்டு உண்மை புலனாயிற்று. இவள் பைத்தியக் கோளாறு உடைய வள். வெறித்தனம் தான் இவளுள் பதுங்கியிருந்து இவளை விசித்திரமாகவும், விநோதமாகவும், பேதையாகவும் நடந்து கொள்ளும்படிச் செய்திருக்கிறது. இப்போது அதனுடைய முழு வேகமும் வேலை செய்கிறது.

இதைப் புரிநது கொண்டதும், இந்தச் சனியனிடமிருந்து நழுவித் தப்புவிக்க வேண்டுமே, அதற்கு வழி ஏதேனும் தென்படுகிறதா என்று கவனிக்கலானான்.

அவள் மீண்டும் அவனை நெருங்கி, அவன் கையைப்பற்றி வெடுக்கென்று கடித்துவிட்டு, பலத்த குரலெடுத்துச் சிரித்தாள். “மாட்டிக்கொண்டாயா? என்னை ஏமாற்றவா பார்த்தே?” என்று கத்தினாள். அவன் வேதனையும் ஆத்திரமும் உந்த, ஓங்கி ஒரு அறை கொடுத்தான் அவன் கன்னத்தில்.

“ஐயோ அப்பா, என்னை கொல்றானே” என்று கதறி வாறே, தலையில் கை வைத்து கொண்டு அவள் கீழே உட்கார்ந்து விட்டாள்.

“டேய், யார்ரா அவன்?. பிடி, விடாதே!” என்று கூச்ச லிட்டபடி மூன்று பேர் ஓடி வந்தார்கள். படகிலிருந்து அப்பொழுதுதான் அவர்கள் இறங்கியிருந்தார்கள். ராஜம் கதறி ஓலமிடாவிட்டால்கூட, அவ்விருவரும் இருந்த இடத்துக்குத் தான் அவர்கள் வந்திருப்பார்கள். அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு வந்த நபர்கள்தான் அவர்கள்.

வந்தவர்கள் நிதானம் அடைந்தார்கள். “என்ன நடந்தது? அவள் ஏன் அப்படி அலறினாள்?” என்று ஒருவர் கேட்டார்.

“இயல்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று வெறி பிடித்தவள்போல் நடந்து கொண்டாள். என் கையைக் கடித்து, கழுத்தை நெரித்தாள். அவள் பிடியை விலக்குவதற்காக நான் ஓங்கி அறைந்தேன். அதனால்தான் அப்படிக் கத்தினாள்” என்று அவன் சொன்னான். “கடவுளே, என் பேச்சை இவர்கள் நம்பவேண்டுமே” என்று அவன் உள்ளம் பிரார்த்தனை பண்ணியது.

அவர்கள் நம்பினார்கள். அந்தப் பெண்ணின் கோளாறு அவர்களுக்குத் தெரியும். “அது சரி. நல்லா இருக்கிற பெண்ணுக்கு திடீர் திடீர்னு மூளைக் குழப்பம் ஏற்பட்டு விடுது. இப்படி விபரீதமாக நடந்து கொள்கிறாள்” என்று ஒருவர் சொன்னார்.

“இங்கே ஆற்றின் அக்கரையில், கிழக்கே சிறிது தூரத்தில், குணசேகரம் என்றொரு இடம் இருக்கிறது. அங்கே உள்ள கோயில் பிரசித்தமானது. சக்தியுள்ள தெய்வம். பைத்தியக் கோளாறு, பேய்க்குற்றம் முதலியவை அந்த இடத்தில் குணமாகி விடும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கேதான் நாங்கள் வந்து தங்கியிருக்கிறோம். நான் முக்கிய விஷயமாக திருச்சி போயிருந்தேன். இவரும் ஒரு இடத்துக்குப் போயிருந்தார். மற்றவங்க கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டாங்க. இவள் யாருக்கும் தெரியாமல் ஓடி வந்திருக்கிறாள். நாங்கள் திரும்பி வந்ததும், இவளைக் காணோம் என்று கேள்விப் பட்டதும், எங்கே போனாளோ என்ன ஆனாளோ என்று பதறியடித்து, தேடித் திரியத் தொடங்கினோம். இங்கே வந்து படகுக்காரனிடம் விசாரித்தோம். ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அக்கரைக்குப் போனாங்க; அந்தப் பொண்ணு சதா சிரிச்சுக் கிட்டே இருந்தது என்று சொன்னான். எங்களுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. கூட இருந்த ஆளு எப்படி என்று கேட்டபோது நல்ல மனிசனாகத்தான் தோணிச்சு, தப்புத் தவறா நடந்து கொள்கிற ஆசாமியாத் தோணலே என்றான். எங்களுக்கிருந்த பயம் நீங்கிவிட்டது” என்று இன்னொருவர் பேசினார்.

அவர் பெண்ணின் தந்தையாக இருக்கும் என்று மகாதேவன் கருதினான். இயந்திரம் மாதிரித் தனது தொழிலில் ஈடு பட்டிருக்கும் படகுக்காரனிடமும் மனிதரை எடை போடும் குணம் சேர்ந்திருக்கிறது என உணர்ந்து அவன் வியப்புற்றான். அவன் உள்ளம் அந்த மனிதனுக்கு நன்றி கூறியது. நடந்தது முழுவதையும் அவன் அவர்களுக்கு அறிவித்தான்.

ராஜம்மாளின் தந்தை அவனுக்கு வந்தனம் தெரிவித்தார். “நீங்கள் நல்ல பாதுகாப்பாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லை என்றால், அவள் எங்காவது போய், யாரிடமாவது சிக்கி, கஷ்டப்பட நேரிட்டிருக்கும். அல்லது, ஆற்றில் குதித்து சுழி, சுழல் எதிலாவது சிக்கி உயிரை விட்டிருப்பாள்” என்றார்.

“நீங்களும் எங்களோடு வாருங்களேன். குணசேகரம் கோயிலைத் தரிசிக்கலாம்” என்று ஒருவர் அழைத்தார். “குணசேகரம் வாழ்க. புதுமையான அனுபவம் சித்திக்க வகை செய்த அதை நான் பார்க்கத்தான் வேண்டும். ஆனால், தனியாகச் சென்று காணவேண்டும்” என்று மகாதேவன் நினைத்தான். “இல்லே, இல்லே. நான் திருச்சிக்கு அவசியம் போயாக வேண்டும். முக்கிய அலுவல்கள் இருக்கு” என்று சொன்னான்.

ராஜத்தின் அப்பா அவள் கையைப் பற்றி, ஆதரவாக அவளைத் தூக்கி நிறுத்தினார். “ஒண்ணுமில்லேம்மா. நாம் கோயிலுக்குப் போவோம். அங்கே உன்னைக் காணாமல் எல்லாரும் தவித்துக்கொண்டிருக்கிறாங்க” என்று சொல்லி, அவனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இப்போது, சாதுவான நல்ல பெண்ணாய் தலைகுனிந்துது மெதுநடை நடந்து சென்றாள் ராஜம். அந்திவேளைப் பொன்னொளியில் அவள் மின்னும் தங்கச்சிலை போல் தோன்றினாள்.

“அப்பனே, உன் கண்களே உன்னை ஏமாற்றிவிடும். வெளித்தோற்றத்தைக் கண்டு மயக்க முறச் செய்யும்!” என்று பெரிய வேதாந்திபோல் சிந்தித்து, தலையை ஆட்டிக் கொண்டு தன் வழியே போனான் மகாதேவன்.

– சுதேசமித்திரன் 17-4-66

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *