கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 9,391 
 
 

இப்டியெல்லாம் நினைச்சு சங்கடப்பட்டுட்டிருந்தோம்னா அப்புறம் மனுஷன் நிம்மதியாவே இருக்க முடியாது…. – சட்டென்று மறுத்தான் சரவணன். பார்வை ஜன்னல் வழியாக வெளியிலிருந்த மரத்தில் பதிந்திருந்தது. ஒரு அணில் காம்பவுன்ட் சுவற்றில் வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளை எடுத்து வந்து, எடுத்து வந்து மரத்தின் அந்த பொந்து போன்ற பள்ளமான பகுதியில் வைக்க, அதை இன்னொரு அணில் சாவகாசமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

என்னா ஒரு ஸ்பீடு பார் இதுக்கு?….விருட்…விருட்டுன்னு போறதும் வர்றதும்…….அதுவும் ஓடிப் போய் எடுத்துக்க வேண்டிதானே…இது கொண்டு வந்து கொடுக்க, ஜோரா உள்ள தள்றதப்பாரு….! அன்பு, ஆதரவுங்கிறதெல்லாம் எல்லா இடத்திலயும் ஒரே மாதிரியாவா இருக்கும்? கொஞ்சம் வித்தியாசப்படத்தான் செய்யும்…!

நான் ஒண்ணு சொன்னா நீங்க எதையோ பேசுறீங்க…. ?- நிர்மலா அலுத்துக் கொண்டாள்..

அதான் சொல்லிட்டனே….காதுல விழலியா உனக்கு?

என்னத்த சொன்னீங்க…? “இப்டியெல்லாம்னா“ என்ன அர்த்தம்?….எல்லாத்தையுமா நான் மேலே போட்டுக்கிறேன்…உங்க அண்ணா வீட்ல வாயடக்கமில்லாமச் சொன்னதுனாலதானே மனசுக்குக் கஷ்டமாயிருக்கு…..?

இந்த பார்…அன்றாட வாழ்க்கைல, போற போக்குல பலரும் பலதப் பேசுவாங்க…அதையெல்லாம் பொருட்படுத்த முடியாது..இதப் பேசணும், இதப் பேசக் கூடாதுன்னு யாரையும் கன்ட்ரோல் பண்ண முடியாது. எல்லாத்தையும் .பொருட்படுத்தினா நிம்மதியாவே இருக்க முடியாது. அதப் புரிஞ்சிக்கோ….

ஆம்மா…இந்த வயசுல இனிமே நீங்க சொல்லித்தான் புரிஞ்சிக்கணும்….

அப்ப பேசாம இரு…ஏன் புலம்பறே…? வீட்டுக்கு வெளில இருக்கிறவங்கதான் நம்ப மனசைப் புண்படுத்துவாங்கங்கிறது மட்டும் இல்ல…வீட்டுக்கு உள்ளே, நம்ப சொந்தங்களும் கூடக் குத்தியெடுப்பாங்க….அது அவங்கவுங்க குணம்ங்கிறதை விட …மனுஷாள் எல்லா சந்தர்ப்பத்திலயும் ஒரே மாதிரி.. .இருக்கிறதில்லைங்கிற தாத்பர்யத்தைப் புரிஞ்சிக்கணும்…….

சொந்த சகோதரராச்சே…? அதான் பூசி மெழுகறீங்க…

இப்ப என்ன பண்ணனும்கிற? போய் ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வாங்கிறியா? முடியாது…. சரின்னு விடுவியா? ஒண்ணுமில்லாததைப் பெரிசாக்கிக்கிட்டு…..

ஒண்ணுமில்லாததா இது….? இல்ல கேட்கிறேன்…உங்களுக்கு இது ஓண்ணுமில்லாததாத் தெரியுதா? ..சொல்லுங்க… – கேட்டுக்கொண்டே அருகில் வந்து தோளைத் திருப்பினாள். அவள் ஆவேசம் எனக்குப் புதிராய் இருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. அதுதான் என்னவோ செய்தது.

ரைட்டு…எதுக்கு இத்தனை டென்ஷனாகிறே…உன் மனசு புரியுது எனக்கு…இல்லேங்கலே…ஒரு விஷயத்தைப் போய்க் கேட்கிறதைவிட கேட்காம விடுறது இருக்கு பாரு….அதுக்கு பாதிப்பு அதிகம்…கேட்டுட்டா அவன் சராசரி…கேட்காம விட்டாத்தான் அது உறுத்திட்டேயிருக்கும்…அடுத்த வார்த்தை வராது…இதெல்லாம் போய் கேட்டு, ஒருத்தருக்கொருத்தர் வாய்ச் சண்டை போட்டுக்கிட்டு நிற்கிறதா பெரிசு….சுத்தியிருக்கிறவங்க சிரிப்பாங்க….விட்டுத் தள்ளு….உனக்கே இந்த நிமிஷம் இருக்கிற வீர்யம், சாயங்காலம் ஆனா குறைஞ்சு போயிடும்…எதையும் ஆறப்போடு…அதுதான் நல்லது….இந்த உலகத்துல பல விஷயங்களைப் பேசுறதவிட, பேசாம இருக்கிறதுதான் பெட்டர்…

இவனையா பெயர்க்க முடியும்….?கல்லுளி மங்கனாயிற்றே! – நிர்மலா போய் விட்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் டொக்…டொக்கென்று சாப்பாட்டு மேஜையில் எனக்கான டிபன் கேரியர் வைக்கப்பட்டது.. இவள் சொல்கிறாளே என்று அண்ணாவிடம் போய் மல்லுக்கு நிற்க முடியுமா நான்…? ஒரு வார்த்தை சொல்ல அவனுக்கு உரிமையில்லையா? அல்லது மன்னிதான் எதுவும் பேசக் கூடாதா? யார் சொல்லியிருந்தால் என்ன? அப்புறம் அவரவருக்குக் கல்யாணம் ஆகும்வரை ஒன்றாக இருந்ததற்கு, வளர்ந்ததற்கு ஒரே குடும்பத்தில் இருந்து கழித்ததற்கு சகோதரராய்ப் பிறந்ததற்கு என்னதான் அர்த்தம்? கல்யாணம் ஆகி, தனித்தனிக் குடும்பமாகிவிட்டால் எல்லாப் பிரிவினைகளும் வந்து ஒட்டிக் கொள்ளுமா? இன்று கூட்டுக் குடும்பம் இல்லையென்பதற்காக கருத்துக்களும் மாறுபட்டுத் தனித்து நிற்குமா என்ன? கூட்டுக் குடும்பமாய் இருந்த காலத்தில் வீடுகளில் சண்டை வந்ததேயில்லையா? இவள் குடும்பத்தில் யாருமே காலத்துக்கும் சண்டை போட்டுக் கொள்ளாமல் கூடிக் குலவிக்கொண்டேவா இருந்தார்கள்? அபிப்பிராயங்கள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறத்தானே செய்யும்?

என்ன சுத்த சின்னப்பிள்ளத் தனமா இருக்கு?-வடிவேலுவின் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வந்தது. சரி…நான் கிளம்பறேன்…- சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

ஆச்சு..புறப்டாச்சு….தப்பிச்சாச்சு….ஏதேனும் ஒரு வார்த்தை பேசினா, நாள், கிழமை கணக்கில்லாம ஆபீஸ்ல போய் அடைஞ்சிக்க வேண்டிது…பிரச்னைகளைக் கண்டு ஓடத்தான் தெரியும், ஒதுங்கத்தான் தெரியும்…இருந்து சால்வ் பண்ணத் துப்பில்லே…!

உனக்கென்னடி தெரியும்…ஆபீஸ்தான் சொர்க்கம்னு…இதெல்லாம் ஒரு பிரச்னையே. கிடையாது….ஜூஜூபி….- எனக்குள் முனகிக் கொண்டே இறங்கினேன். பெண்களே இப்படித்தானோ…தனக்கு சார்பாய் இல்லையென்றால் எது எப்படிப் போனால் என்ன என்று ஒத்தைக்கு நிற்கிறார்களே…! கொதித்துப் பொங்குகிறார்களே…!

ஸ்டார்ட் பண்ணி கியர் போட்ட வேகத்தில் ஒரு குதி குதித்து முன்னே பாய்ந்தது வண்டி. ச்சே…! நம்ப நிதானத்தையே பறக்கடிச்சிடுறாங்களே…இந்த எழவுக்காகத்தான் ஞாயித்துக் கெழமையானாலும் பரவால்லன்னு கிளம்பிடுறது…அங்க போனால் கரீம் பாய்க்கு உதவியா அந்த பில்லையாச்சும் போட்டுக் கொடுக்கலாம். பாவம் திங்கட்கிழமை காசு வேணும்னாரு… நினைத்தவாறே வண்டியைக் கிளப்பினேன். தப்பிச்சு ஓடுறியா என்பதுபோல வண்டி வேகமெடுக்க மறுத்தது. கார்ப்பரேட்டர் அடைக்குதோ…? சர்வீசுக்குக் கொடுத்து மாசக் கணக்காச்சு…இருக்கிற டென்ஷன்ல எதுதான் ஞாபகமிருக்கு…?

ஞாயிற்றுக் கிழமைதான் டிராஃபிக் அதிகமிருக்கிறது. எதற்கு அன்றும் வீட்டில் அடைந்து கிடப்பானேன் என்று எல்லோரும் வெளியே கிளம்பி விடுகிறார்கள். வீட்டில் இருந்தால் சண்டை வருமோ என்னவோ? காசைக் கரியாக்கத் துடியாய்த் துடிக்கிறார்கள். போதாக்குறைக்கு பெரிய பெரிய மால்கள் பக்கத்துக்குப் பக்கம் பிரம்மாண்டமாய் நிற்கின்றன. உள்ளே புகுந்தால் வெளியே வரவே தோன்றாது. தேவையிருக்கிறதோ இல்லையோ கண்டதையும் வாங்குகிறார்கள். காசு போனாப் போகுது…பிரச்னையில்லாம இருந்தாச் சரி….! வெறுங் கையோடு வீடு திரும்பினால் கேவலம் என்று யாரோ சொன்னாற்போல் இயங்குகிறார்கள். ஒரே இடத்தில் பத்து சினிமா தியேட்டர்கள். ஏதோ ஒன்றில் போய் உட்கார்ந்தால் சரி என்று அதற்கும் அழுதுவிட்டு, ஓட்டலுக்கும் ரெண்டாயிரம் மூவாயிரம் என்று கொடுத்து விட்டு வீடு அடைவதில்தான் திருப்தி.. போக வர டாக்ஸி செலவு எழுநூறு எண்ணூறு….யார் அதைப்பற்றிக் கவலைப் படுகிறார்கள்? செலவெல்லாம் போக மிஞ்சுவதுதான் சேமிப்பு. சேமிப்புக்கு என்று எடுத்து வைத்துவிட்டுச் செலவு செய்யும் பழக்கம் என்றோ காலாவதியான விஷயம். செலவு செய்தாலும் பரவாயில்லையே…விரயமல்லவா பண்ணுகிறார்கள்? அப்பாதான் சொல்லுவார்…நாலணா தரை டிக்கெட்டுக்குப் போனா அது செலவு. ஒரு ரூபா மாடி டிக்கெட்டுன்னா அது விரயம்… காசின் அருமை என்று இவர்களுக்குத் தெரியப் போகிறது? வயசான காலத்தில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? நோய் நொடி என்று வந்தால் எப்படித் தாங்குவார்கள்? இப்படியெல்லாம் யோசித்து யோசித்து நாமும்தான் என்னத்தைக் கண்டோம்? எப்படியோ தொலையட்டும்…! கடவுளே இவர்களைக் காப்பாற்று…!

சாலை விதிகளுக்கு என்று கடினமான சட்டங்கள் கொண்டு வந்த பின்பும் பலர் இன்னும் உறல்மெட் போடாமல் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. ஞாயிற்றுக் கிழமைதான் நிறையப் பிடிப்பார்கள். ஃபைனைத் தீட்டுவார்கள். தெரிந்தும் இப்படிப் போய்க் கொண்டிருக்கிறார்களே…! தினமும் ஒரு விபத்தாவது நடக்காமலா இருக்கிறது? என்று இந்த ஜனங்களை முற்றிலுமாக மாற்றுவது? வீட்டில் உறவுகளுக்கு மத்தியில் நெகிழ்வாய் இருப்பதுபோல்தான் வெளியிலும் இருப்பார்களோ? எல்லாவற்றிலும் விட்டேற்றியாய் இருந்து கழிப்பதில் ஒரு மகிழ்ச்சியா? எதையும் சீரியஸாய் எடுத்துக் கொள்ள இவர்கள் தயாராயில்லையா? எந்நேரமும் மகிழ்ச்சியிலேயே திளைக்க வேண்டும்…அதானே…! இது உயிர் விஷயமாயிற்றே…! அப்போ வீட்டுக்குள் என்றால் எல்லாருக்கும் டென்ஷன்தானா? அதில் தலைமுறை வித்தியாசமில்லை போலிருக்கிறது?

எல்லா நினைப்பும் இப்போதுதான் வருகிறது. அலுவலகத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்த எனக்கு வேலை ஓடவில்லை. நிர்மலாவின் பேச்சே மனதில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. தவறு என்பேரில்தானோ? வெளியே சொல்லியிருக்கக் கூடாதோ? அவரவர் தனியாய்த்தான் இருக்கிறோம்..ஒருவர் காரியம் மற்றவர் அறிய மாட்டார்கள். வரவு செலவு தனி. பண்டம் மாற்று கூடக் கிடையாது. காலம் மாறிப் போச்சு… எல்லாம், எல்லாரும் தனித்தனி. .அன்றாடம் என்னென்ன செய்கிறோம் என்று மற்றவருக்குத் தெரிந்து கொண்டா இருக்கிறது? அப்படியிருக்கையில் இது மட்டும் ஏன் தெரிய வேண்டும்?

அலுவலகத்தில் இதுவரை யாருக்கும் சொல்லவில்லை. டாக்டரிடம் போக வேண்டிய அன்று லீவு போட்டதோடு சரி. எவனும் கேட்டுக் கொண்டதுமில்லை. அவரவர்க்கு அவரவர் பாடு தலைக்கு மேல். அதேதானே உறவுகளிடமும்…என்ன பெரிய நெருக்கம் விளையாடுகிறது? என்று தனித் தனிக் குடும்பம் என ஆனதோ அப்போதே தனித் தனி ரகசியங்களும் வந்து புகுந்து கொண்டனவே…! தீவுகளாய்த்தானே வாழ்கிறோம்? உறவுகளுக்கு மத்தியில்தான் எத்தனை திரைகள்? நல்லாயிருக்கியா, சௌக்கியமா? அத்தோடு சரி…அதுவும் ஃபோனில்…அதைக் கூட பலரும் கேட்பதில்லையே? ஏதாவது விசேடங்களில் சந்தித்துக் கொண்டால்தான்…..அவ்வளவுதானே…! அவரவர் குடும்பத்தின் உட்காரியங்கள் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? அப்படியிருக்கையில் இந்த உள் காரியத்தையும் யாருக்குச் சொல்ல வேண்டும்? ஏன் சொல்ல வேண்டும்? நான்தான் அவசரப்பட்டு விட்டேனோ…? புத்தி கெட்ட செயலோ?

உங்களை யாரு அதுக்குள்ளயும் இதை உங்கண்ணாட்டச் சொல்லச் சொன்னது? முந்திரிக்கொட்டையாட்டம்? ஒரு வார்த்தை எங்கிட்டக் கேட்க மாட்டீங்களா? பொண்டாட்டிய மதிச்சாத்தானே?

இதிலென்னடி இருக்கு…? தெரிஞ்சா என்ன? வேண்டாம்னு சொல்லியிருக்கப் போறானா? இல்ல அப்டிச் சொன்னாத்தான் நாம நிறுத்திடப் போறமா? டாக்டர் என்ன சொல்றாரோ அதானே? இது நம்ம ரெண்டு பேருக்குள்ள மனமுவந்து எடுத்த முடிவு. யாரும் இதைத் தடுத்திருக்க முடியாது. நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்டது….அதனால செஞ்சோம்….

அதத்தான் நானும் கேட்கிறேன்…அப்படியிருக்கறச்சே ஏன் சொன்னீங்கன்னு?

அதுல ஒண்ணும் தப்பு இருக்கிறதா எனக்குத் தெரில நிர்மலா…..நம்ப குடும்பத்துக்குப் பெரியவன்…அத மதிச்சி சொன்னேன்….அதான் எல்லாம் முடிஞ்சாச்சே…! இனிமே என்ன…?

நம்ப குடும்பம் என்ன…நம்ப குடும்பம்? எல்லாரும் ஒண்ணாவா இருந்து கழிச்சிக் கூட்டுறோம்? நீங்க நினைக்கிறமாதிரி அவங்க நினைக்கிறாங்களா? உங்களுக்கு ஒண்ணுமே புரியாது. உங்கண்ணா கூடுவாஞ்சேரிப் பக்கம் ஒரு ஃப்ளாட் வாங்கியிருக்காரே…அதை உங்ககிட்டே சொன்னாரா? அது கூட வேண்டாம்….கார் வாங்கினாரே…அதப் பத்தி ஒரு வார்த்தை பகிர்ந்துண்டாரா? தெரிஞ்சா நாம என்ன போய் உட்கார்ந்திண்டு ஊர் சுத்தக் கிளம்பப் போறமா? இல்ல கல்யாணம் காட்சின்னு கிளம்பறச்சே, எங்களையும் கூட்டிட்டுப் போங்கன்னு தொத்திக்கப் போறமா? இருக்கவே இருக்கு..டாக்ஸி. இருக்கிறவனுக்கு ஒரு வண்டி. இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வண்டி….பெரியவாளான அவாளே இத்தனை கேவலமா இருக்கிறச்சே…நீங்க போய் இப்டி டமாரம் போட்டிருக்கேளே…? விவஸ்தை வேண்டாமா உங்களுக்கு? ஒரு ஒளிவு மறைவே கிடையாது…

மட்டையடி அடித்தாள் என்னை. காதைப் பொத்திக் கொண்டேன் நான். பதில் பேச வாயே வரவில்லை. இன்று எல்லாம் முடிந்து போய்விட்டதுதான். ஆனாலும் அவளுக்கு அடங்கவில்லை. அது ஏன் அப்படிக் கொதித்துக் கொண்டேயிருக்கிறாள்? இதுவரை அப்படியிருந்ததில்லையே…! யதார்த்தமாய் நடந்து கொண்டது தப்பா? வாழ்க்கை என்று இருந்தால், ரகசியங்களும், கல்மிஷமும் இருந்துதான் ஆக வேண்டுமா? அப்படியானால்தான் ஜாக்கிரதையாய் வாழ்வதாய் அர்த்தமா? அதுதான் புத்திசாலித்தனமா? அடுத்தவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் என்ன சூட்சுமம் என்று தேடிக் கொண்டேயிருக்க வேண்டுமா? எவன் நம்மை எப்போது கவிழ்ப்பான் என்று எந்நேரமும் விழிப்புணர்வோடேயே இருந்து கழிக்க வேண்டுமா? சாமர்த்தியமான வாழ்க்கையை வாழ்ந்து கழிப்பது என்பது இந்த வகையிலானதுதானா? இவள் சொல்வது அப்படித்தானே இருக்கிறது?

என்னென்னவோ எண்ணங்கள் என்னைப் போட்டுக் குழப்பின. நான்தான் தெளிவாய் இருக்கிறேன் என்று நினைக்கப் போக இப்போது நிர்மலாதான் தெளிவோ? அவளுக்கு இருக்கும் விவரம் எனக்கில்லையோ? மனிதன் நல்லவனாய் இருக்கலாம். ஆனால் கோழையாய் இருத்தல் தகுமோ? என்னையறியாத ஒரு கோழைத்தனம் என்னிடம் மறைவாய்ப் படிந்து போய், தொட்டதற்கெல்லாம் உறவுகளின் ஆதரவைத் தேடி நின்று கொண்டேயிருக்கிறதோ? தேவையில்லாமல் எல்லாவற்றிற்கும் போய் கை கோர்த்துக் கொண்டிருக்கிறேனோ? தன் காலில் ஊன்றி நிற்பதை, நின்று நிலைப்பதைத்தானே ஒரு பெண் விரும்புவாள்? நிர்மலா சொன்னதை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? முடிந்து போன ஒரு விஷயத்தை ஏன் இப்படித் திரும்பத் திரும்ப திருகிக் கொண்டேயிருக்கிறாள்? அப்படியென்ன அண்ணா மேல் கோபம் இவளுக்கு?

பல கேள்விகள் என்னைப் போட்டுத் துளைத்தாலும் அன்று ஆபீஸ் வந்த காரியம் கரீம் பாய்க்கு என்று, சேமநலநிதிப் பட்டியலைத் தயார் செய்து அலுவலரின் ஒப்பத்திற்குக் கொண்டு வைத்த பிறகுதான் மனம் சற்று ஆறுதலாயிற்று..எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒருவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிம்மதியே தனி… சொல்லப்போனால் அது கடமைதானே…! அவருக்காக விடுமுறை நாளில் வந்து செய்கிறோம் என்பது மட்டுமே ஸ்பெஷல்.

ஐயா, போய் ஒரு டீ வாங்கிட்டு வர்றேன்யா…சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க….என்று ஃப்ளாஸ்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் கரீம். அலுவலருக்கு ஃபோன் செய்து காலையில் எப்போது வருகிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன். பில் போட்டால் போதுமா? அது கையெழுத்தாக வேண்டுமே? அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆனால்தான் எடுத்துக்கொண்டு போய் கருவூலத்தில் சமர்ப்பித்து டோக்கன் பெற முடியும். பிறகு பாயின் சாமர்த்தியம். பணமாக்குவது. அதைச் சுலபமாய் முடித்து விடுவார். அந்தத் திறமை அவருக்கு உண்டு.

பையனின் ஆண்டு நிறைவு காது குத்து ஃபங்ஷனின் போது இதேபோல் எனது சேமநலநிதிப் பட்டியலை அன்றே காசாக்குவதற்கு எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டார்? அவரில்லாவிட்டால் மறுநாள் அந்த விசேடமே நடந்திருக்காதே…? வேறு எந்த சேமிப்பும் கைவசம் இல்லாத நிலையில் அவரின் முயற்சியில்தானே ஒரே நாளில் பட்டியல் கொடுத்து, டோக்கன் பெற்று, பாஸ் பண்ணி, தானே முன்னின்று எடுத்துக் கொண்டு போய் கருவூல அலுவலரிடம் சொல்லி கையொப்பம் பெற்று, பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்து விட்டாரே…! கில்லாடிய்யா நீர்….! நான் இருக்கிறவரைக்கும் இந்த ஆபீஸ்தான் உமக்கு…நோ டிரான்ஸ்ஃபர்….

உங்களுக்குச் செய்யாம வேறே யாருக்குங்கய்யா செய்யப்போறேன்? சந்தோசமா நடக்கட்டும்யா விசேடம்……நாங்கள்லாம் காலைல கரெக்டா டயத்துக்கு இருப்போம்….நாளைக்கு டிபன் சாப்பாடு மண்டபத்துலதான்…. – எவ்வளவு சந்தோஷமாய்ச் சொன்னார்.

கரீம் பாய் அக்கறையாய் ஊற்றிக் கொடுத்த டீயைக் குடித்து விட்டுக் கிளம்பினேன்.

பாய்…உங்க வேலைக்காகத்தான் வந்தேன். முடிச்சிட்டேன். சீஃப்போட டேபிள்ல வச்சிருக்கேன். காலைல மொத வேலையா பாஸ் உள்ளே நுழைஞ்சவுடனே அட்டன்டென்சுக்கு அடுத்ததா இந்த பில்லை கையெழுத்து வாங்கி எடுத்திட்டுப் போயிடுங்க…ஓ.கே.யா…?

ரொம்ப நன்றிங்கய்யா…!

வீடு வந்து சேர்ந்த போது அதே சோகத்தில்தான் இருந்தாள் நிர்மலா.

இன்னும் நீ அதை மறக்கலியா? ஒரு விஷயத்தை இப்டியா மனசுல போட்டுக் குழப்பிக்கிட்டேயிருப்ப? அப்புறம் அதுக்கு ஒரு முடிவே இல்லாமப் போயிரும்…மூடித் தலை முழுகு….

உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க….வேலைக்காரி வந்து கேட்குறா என்கிட்டே…என்ன உங்க அண்ணி இப்டிச் சொல்றாகளே உண்மையான்னு? யாராச்சும் அவகிட்டேபோய் இதைக் கேட்பாங்களா? ஏதாச்சும் தெரியுதா உங்க மன்னிக்கு? என் மானம் போகுது…..உங்களால…..! அன்னைக்கே சொன்னேன்…அந்த வீட்டு வேலைக்காரி வேண்டாம்னு…கேட்கலை…

என்ன சொன்னாளாம் மன்னி? வேலைக்காரம்மா அப்டி என்னதான் கேட்டுது உன்கிட்டே? – பதற்றம் புகுந்து கொண்டது எனக்குள்.

இன்னும் அதை என் வாயால வேறே சொல்லணுமா? சொல்றேன்…எல்லாம் என் தலையெழுத்து….!

இந்த பார் நிர்மலா…எதுக்கு அனாவசியமா மனசைப் போட்டு அலட்டிக்கிறே…? சொன்னா சொல்லிட்டுப் போறாங்க…அந்தப் பாவம் அவங்களையே சேரட்டும்…. போதுமா….?

கல்யாணம் ஆகி ஒத்தப் பிள்ளைதான பெத்துருக்கீங்க…அதுக்குள்ளயுமா இப்படி ஆகணும்? கர்ப்பப் பை எடுத்துட்டாங்களாமே? என்னா கொடுமடா சாமிங்கிறா…?

சொல்லிவிட்டு என் முகத்தை ஆழமாய்ப் பார்த்தாள். என்ன தேடுகிறாள்? கொதிக்கிறேனா என்றா?

.. .இனிமே ரெண்டு பேரும் சேர்ந்தாலும் எந்தப் பிரயோசனமும் இல்லயே…!. வேஸ்ட்தானே…..அடக் கடவுளே….! ஆண்டவன் அதுக்குள்ளயுமா இப்டி சோதிக்கணும்…அப்டீங்கிறா…! யார் யார் எதைப் பேசுறதுன்னு ஒரு விவஸ்தையில்லயா? இவள்ட்டல்லாமா பேச்சுக் கேட்கணும் எனக்கு?

நீ சொல்றது சரிதான்…எதுக்கு அந்தம்மா போய் இதை உன்கிட்டே கேட்குது? தெரிஞ்சாலும், தெரியாதமாதிரி இருந்திட்டுப் போக வேண்டிதானே? அந்த நாசூக்கு வேணாமா? குசும்புதான்….மன்னி இதை நேரடியா நம்மகிட்டே கேட்டிருக்கணும். அந்தம்மாட்டப் பேசினது தப்புதான்……அந்தச் சமத்து அவங்களுக்கே இல்லையே….! அப்புறம் இவங்களைச் சொல்லி என்ன செய்ய?

வருத்தப்படுறாளோ இல்லை மனசுக்குள்ள சிரிச்சாளோ… . யாருக்குத் தெரியும்? எவ்வளவு கேவலத்துக்குத்தான் ஆளாகுறது நான்? – சொல்லிவிட்டு துக்கம் தாளாமல் குலுங்கி அழ ஆரம்பித்தாள். பெண் உடம்பின் முக்கிய ஆதாரமான அந்த உறுப்பு போய்விட்டதை நினைந்து நினைந்து குமைந்த குமுறல் அது என்று தோன்றியது எனக்கு.

வேதனையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்லி சமாதானப் படுத்துவது? அவளை அணைத்து, கடைசியாய்ச் சொன்னேன்.

இந்த பார் நிர்மலா…..உடலுறவுங்கிறதே குழந்தை பெறுவதற்கு மட்டும்தானா? பலரும் நினைக்கிறாப்ல வெறும் உடலுறவுங்கிறது மட்டும்தான் வாழ்க்கையா? அதுக்கும் மேலே எதுவுமில்லையா? எவ்வளவு மலினமான நெனப்பு? நான் உன் பேர்லே வச்சிருக்கிற பேரன்பு என்றைக்கும் மாறாது. நீ என்னை நம்பினாப் போதும்..நமக்குதான் ஒரு குழந்தையைக் கடவுள் கொடுத்திருக்கானே? அது பெரும் பேறு இல்லையா? குழந்தையே இல்லேன்னாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். அந்த முதிர்ச்சியும் பக்குவமும் எனக்கு உண்டு. .ஒரு குழந்தையாவது இல்லாத எவருக்கும் இதெல்லாம் ஒரு ஆறுதல்டி….விட்டுத் தள்ளு…..!!!

தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *