ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 806 
 
 

பினாங்கிலிருந்து ஒரு தந்தி, மடத்திராமன் முடிவு நெருங்கிவிட்டது’ உடனே புறப்படுக.

இறந்த பிறகே இப்படித் தந்தியடிப்பது. “முடிவு நெருங்கிவிட்டது”.

அப்போது மடத்திராமன் இறந்தான். செத்தான். செத்து விழுந்தான்.

துஷ்டர்கள் இற‌ந்து போகிறார்கள். ந‌ல்லவர்கள் திரும்பிப் போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

மிகவும் சிலரே திரும்பிப் போகிறார்கள். ஏனென்றால் நல்லவர்கள் கொஞ்சம்தான்.

திரும்பிப்போவதை மோட்சம் என்றும் சொல்வர்கள்.

நரைத்த தலைமயிர் கருக்கும். வழுக்கையில் மயிர் முளைக்கும். வற்றிச் சுருங்கின தோல் வளப்பமுறும். உடம்பு கொழுத்து உருண்டு வரும். மணிக்கட்டிலும் அக்குளிலும் மார்பிலும் மயிர் உதிர்ந்துபோகும். பிறகு முகத்திலும். குரல் தெளிவுறும். பற்கள் விழுந்துவிடும். அப்படியாக முதல் வகுப்பு வரை தோற்பார்கள். பிறகு உடற்பயிற்சிக் கூடத்திற்கு. எழுத்தாணி பிடிப்பது முதல் பிள்ளையார் சுழி வரை பின்னே செல்லும் தினங்கள். மறதியின் நாட்கள். படிக்கப்போடுவது முதல் சோறுண்ணல், நடந்து நடந்து நடக்க முடியாமலாகிறது. தவழுகிறான். நீந்துகிறான். கைக்குழந்தையாகிறான். முலைப்பால் குடிக்கிறான். ஒரு நாள் வந்த வழியே திரும்பிப் போகிறான்.

அம்மாவின் வயிற்றுக்குள்.

பிற‌கு க‌ண‌க்குக் கீழ்நோக்கிப் போகிற‌து. ப‌த்துமாத‌ம், ஒன்ப‌து மாத‌ம், எட்டுமாத‌ம், ஏழு,ஆறு, சீம‌ந்த‌ம், கும‌ட்ட‌ல், வாந்தி.

இர‌த்த‌ம் இர‌த்த‌த்தினுள் தேடிப்போகும் முடிவ‌ற்ற‌ ப‌ய‌ண‌ம்.

ஆனால் அத‌ற்குத் தாயெங்கே?

தாயெங்கே? த‌ந்தையெங்கே? த‌லைமுறைக‌ளெங்கே?

————–*

*ஏழாம் வ‌குப்பில் ப‌டிப்ப‌வ‌ர் ஏழிலிருந்து ஆறுக்கும், ஆறிலிருந்து‌ ஐந்துக்கும்.

தலைமுறைகள் திரும்பிப் போவதற்கான வாயில்கள். தங்கம்போல மெருகேற்றிய பித்தளைத் தாழ்ப்பாளிட்ட வாயில்கள்.

யுகங்கள் வழியாகத் திரும்பிப் போக வேண்டும். வருடமாகும்போது சிங்ஙம் (மாதப்பெயர்) ஒன்று. ரோமை அடையும்போது சிலுவையில் அறைபட்ட கிறிஸ்து.

பிறகு வருடங்களற்ற பயணம்.

எடுத்து முடிந்த அவதாரங்களை உணர்ந்தெழுந்து ஏற்கிறான்.. வராகம் கூர்மத்திற்கும். கூர்மம் மச்சத்திற்கும், மச்சம் மோட்சத்திற்கும் பின் வாங்குகின்றன. அழிவிலிருந்து வாழ்தல் வழியாகப் படைப்புக்கு. படைப்பும் அழிவும் ஒன்றாகும் வாழ்வு.

துஷ்டர்கள் இறந்து போகிறார்கள். அவர்களது பிணங்களைக் குள்ள நரிகள் நஞ்சுக்கொடியைப் போலக் கடித்துக் குதறுகின்றன.

நஞ்சுக் கொடிதான் மனிதனின் ஒரேயொரு பந்தம். ஒரு முத்தம் கொடுக்க முடிவதற்கு முன் நாய்கள் கடித்துப் பறித்துக்கொண்டு போன சகோதரன். அவனைத் தோட்டம் வழியாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போயின.

பிரசவித்தால் உடனே காராம்பசு நஞ்சுக்கொடியைத் தின்கிறது. இயற்கை அவளுக்குக் கர்ப்பப் பாதுகாப்புக்குக் கொடுத்திருக்கும் வெந்தயக் குழம்பு அது.

பூனை பசி பொறுக்க முடியாமல் குட்டிகளைத் தின்கிறது. எட்டுக்கால் பூச்சிக்குஞ்சுகள் அம்மாவை.

மனிதன் புத்திசாலியானதினால் திருடித் தின்கிறான்.

திருடித்தின்னும் தீயவர்கள் மடத்திராமனைப்போலுள்ள தீயவர்கள்.

சிவராத்திரியன்று மணல்புரத்தில் கண்டபோது பிடித்து நிறுத்தி மடியில் இருந்த இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு போனான். ஒரு டம்ளர் டீ குடிக்க இரண்டணாவாவது திருப்பித்தரச் சொல்லக் கேட்ட போது கையைப் பிடித்து விரித்தான். விரலையொடித்துப் போடத்தான் தொடங்கினான்.

அவனைக் கொல்லணும். கெட்டவர்களையெல்லாம் கொல்லணும். நல்லவர்கள் வாழ்கிறார்கள். வாழ்ந்த வாழ்க்கை போதுமென்னும் போது திரும்பிப் போகிறார்கள்.

தேவர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருகிறார்கள். பிராணிகளுடன் இணை சேர்கிறார்கள். அதிலிருந்து நல்ல மனிதன் பிறக்கிறான்.

திருடாதவர்கள் – தட்டிப் பறிக்காதவர்கள்.

அப்படிப் பிறந்தவர்தான் ம்ருகாஸ்ப்தி மகரிஷி. அவர் தனது தபோவனத்தை அசுத்தப்படுத்திய மடத்திராமனென்ற அசுரனைச் சபித்து பஸ்மமாக்குகிறார். அந்தச் சாம்பல் விழுந்த மண்ணிலிருந்து கள்ளிச் செடியும், பூமுள்ளும், காரைச் செடியும், அரளியும், எட்டிமரமும் முளைக்கின்றன. முள்ளுள்ள செடிகள். கசப்பான இலைகள். விஷம் சொரியும் பழங்கள். பாம்பு சுவைத்த கொய்யாக்காய். பற்ற வைத்தால் எரியும் கள்ளிப்பால்.

கள்ளிப்பாலை எரியவிட, சுட்ட கோழியைப் பறக்கவைக்கும் மந்திர வாதம் வேணும். படுசூன்யம். மாந்திரீகம்.

கருப்புப் பூனையின் மண்டையோட்டை அவனது துளசி மாடத்தின் கீழே குழித்து மூடுகிறார்கள். பிறகு அவனை எட்டிப் பலகையில் அறைகிறார்கள்.

அப்போது அவன் அசைவதைக் கொஞ்சம் பார்க்கணும். கைதி.

பிறகு அவன் தெருவில் என் வேஷ்டியை அவிழ்த்து எறியமாட்டான்.

அப்புறம் எப்படி அவன் தன்னைக் கல்லால் அடிக்கிறான் என்பதைக் கொஞ்சம் பார்க்கணும். கைகள் எட்டிப் பலகையுடன் சேர்த்து அறையப்பட்டிருக்கின்றன.

அசைந்தால் வலி. நீல நிறமான இரத்தம் வழிகிறது.

துஷ்டர்களினுடைய இரத்தத்தின் நிறம் நீலம் அவர்களுடைய இதயத்தில், நரம்புகளில் ஓடுவது கெட்ட ரத்தம்.

கம்பின் நுனியில் இரண்டு நாய்களின் தலைகள்.

கம்பு பாம்பாகிறது. நாய்கள் வெறி நாய்களாகின்றன. வெறி நாயின் தலைகொண்ட பாம்பு. பேய் பிடித்த பாம்பு. அவனுடைய முகத்தில் கடித்தது.

மிளகாய் அரைத்த ஆட்டுக்கல்லைக் கழுவின நீரை என்னுடைய முகத்தில் விட்டதற்கான தண்டனை.

ஜஹாங்கீர் சக்ரவர்த்தி அவனைத் தண்டிக்கிறார்.

யாரானாலும் வேண்டாம். குற்றம் செய்தவர்கள் தண்டனைக் குரியவர்கள். மெஹருன்னிஸா பேகமானாலும் வேண்டாம். மடத்திராமனானாலும் வேண்டாம். தண்டனைக்குரியவன்.

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டிலிருந்து கேஸை செஷன்ஸுக்கு அனுப்புகிறார்கள். செஷன்ஸில் தூக்கிலிட்டுக் கொல்லத் தீர்ப்பு. ஹைக் கோர்ட் அப்பீலைத் தள்ளிவிட்டது. கொலைச் சோறு. தூக்கிலிடுபவர். கழுமரம். பன்னிரண்டாம் எண் கயிறு.

பினாங்கியிருந்து திரும்பவும் தந்தி, தகனமாயிற்று. புறப்பட வேண்டாம்.

வேண்டாமென்று முன்னாலேயே சொல்லியாச்சே.

பிற நாட்டில் கிடந்து சாகணும். முக்தி கிடைக்காத மரணம்.

பித்ருக்கள் பிண்டத்தைக் கொத்த மறுக்கின்றன. திருட்டுக் காக்கைதான் கடைசியில் காய்ந்த சோற்றைக் கொத்துகிறது. திருட்டுக் காக்கைகள் அசுரர்களின் பித்ருக்கள். மனிதர்களின் பித்ருக்கள் காகங்கள். தேவர்களின் பித்ருக்கள் குயில்கள்.

மடத்திராமனின் பித்ருக்கள் திருட்டுக் காக்கைகள். அவன் அசுரன். தேவாசுர யுத்தம். தேவலோகத்திலிருந்து தந்தி. மடத்திராமன் உடனே புறப்படணும். அசுரகணத்துடன் சேர்ந்து யுத்தமிட. சம்மதம். பயங்கரப்போரில் அசுரகணம் தோற்கிறது. மகாவிஷ்ணுவின் சக்கரம் தேவர்களைக் காப்பாற்றுகிறது. ஆகாயத்திலிருந்து உடலின் பாகங்களை பூமியில் பதிக்கிறது. முண்டங்கள். இந்தத் தலை யாருடையது? கருப்பு மருவும் பூரான் மீசையும். மடத்திராமன். இந்தக் கை, கத்திக் குத்தின் அடையாளமுள்ள இம் மார்பு, வேனல்கட்டி நிறைந்த இந்த இடுப்பு யாருடையது? மயிரடர்ந்த இந்தக் காது யாருடையது?

மாதாவே, நீ ஏன் அழுகிறாய்? அசுரனைப் பெற்ற உன் வயிறு சாபம் நிறைந்தது. அசுரன் சப்புக்கொட்டிய உனது முலைக்காம்புகளும், அசுரனை முத்தமிட்ட உனது உதடுகளும், அசுரனைப் பார்த்து ரோமாஞ்சனம் அடைந்த உனது உடம்பும் சாபம் பூண்டவை. சாப விமோசனத்திற்காகப் பிரார்த்தனை செய். திரும்பிப் போவதற்கான வரத்திற்காக.

ராமா, நீ என்னைத் தடியாலடித்தாய். நீ என்னைத் திரண்டி மீனின் வாலால் அடித்தாய். நாய்த் தூவியின் பொடியை வாரி என் முகத்தில் தேய்த்தாய்.

நீ என்னைப் பட்டினி போட்டாய். தாகமெடுத்தபோது நீ என் வாயில் உப்பை வாரிப் போட்டாய். இந்துப்பு.

பைத்தியத்திற்கு மருந்து தாகமெடுக்கையில் இந்துப்பு.

இந்துப்பு மருந்தாகும். நீ யென் வாயில் அள்ளிப்போட்டது இந்துப்பு அல்ல வெடியுப்பு.

பிறகு கந்தகத்தைப் போட்டாய்.

வெடியுப்பும் கந்தகமும், காலையில் உமிக்கரியால் பல் தேய்க்கும்போது பட்டாஸ் வெடிக்க வேண்டும்.

வெடியுப்பும் கந்தகமும் உமிக்கரியும் சேர்ந்து அரைக்கும்போது வெடிமருந்து உண்டாகுமென்பதை நீ அறிந்திருந்தாய். துரோகி. அன்றைக்கு நான் பல் விளக்குவதை நிறுத்தினேன்.

கந்தகம், வெடியுப்பு இவற்றின் சுவை, வாயிலிருந்து இன்னும் நீங்கவில்லை.

நீ அம்மைத் தடுப்பு ஊசிக்காரன் மாதிரி வேஷமிட்டு என்னைத் தேடியலைந்தாய், இல்லையா? உனது புட்டியில், ஊசியில் அம்மைத் தடுப்பு அணுக்க‌ள் இருக்க‌வில்லை. நிஜ‌மான‌ அம்மை நோயின், க‌ரிஞ்ச‌ப்ப‌ட்டையின், உயிருள்ள‌ அணுக்க‌ள்.

நார‌த‌ முனிவ‌ன் குருநாத‌ராக‌ப் பிர‌த்ய‌ட்ச‌ய‌மாகி அவ் விஷ‌ய‌த்தை என‌க்குத் தெரிவித்தார். அன்றுதான் நான் என் இருப்பிட‌த்தை ஸ்ரீகோவிலுக்கு மாற்றினேன். துஷ்ட‌ர்க‌ளான‌ பிராம‌ண‌ர்க‌ள் என்னை வெளியே விர‌ட்டினார்க‌ள். ஆல‌ம‌ர‌த்த‌டியில் க‌ட்டிப் போட்டார்க‌ள். அஹோர்ம‌னைக்க‌ல் ப‌த்ம‌னாப‌னுக்கு ம‌த‌ம் பிடித்த‌போது க‌ட்டிப் போட்ட‌ ஆல‌ம‌ர‌த்த‌டி.

ம‌ழையும் வெய்யிலும் ப‌ட்ட‌போது என‌து உட‌ம்பில் பாசி பிடித்த‌து. உள்ள‌ங்காலைக் கரையான் தின்ற‌து. விர‌ல்க‌ளின் நுனியில் குருத்துக்க‌ள் உண்டாயின‌.என் ம‌யிர்க‌ள் வேர்களாயின‌. கைக‌ள் ம‌ர‌ உச்சிக‌ளாயின‌. புதிய‌ விர‌ல்க‌ள், புதிய‌ கிளைக‌ள் கிளைத்த‌ன‌.ப‌ச்சை நிற‌மான‌ இலைக‌ள் உண்டாயின‌.அவை ப‌ழுத்த‌போது ம‌ஞ்ச‌ள் நிற‌ம் ஏற்ற‌ன‌.வ‌ஸ‌ந்த‌த்தில் நான் பூத்தேன். வ‌ண்ண‌த்துப் பூச்சிக‌ள் ம‌க‌ர‌ந்த‌த்துட‌ன் வ‌ந்த‌போது என‌க்குக் குறுகுறுப்புண்டாயிற்று. த‌னியாக‌ப் ப‌ற‌ந்தேபோகும் குருவிக‌ள் உச்சிக‌ளில் வ‌ந்து அம‌ர்ந்து இளைப்பாறிய‌போது நான் நிறை வெய்தின‌வ‌னானேன்.

அங்கே சாப்பாட்டுக் கூட‌த்து வேலைக்கா‌ர‌னாகிய‌ இப் பிராம‌ண‌ன் அந்த‌ ம‌ர‌த்தை வெட்டிப் போட்டான். நீதான் முத‌லில் கோடாலியை வைத்தாய்.

கோடாலிக்குக் குஷ்ட‌மில்லை. குஷ்ட‌ரோகியை வெட்டிச் சுட்டாலும் கோடாலிக்குக் குஷ்ட‌மில்லை.

உமைய‌ம்மை ராணியின் எட்டுக்குழ‌ந்தைக‌ளை விளையாட்டுக் குள‌த்தில் மூழ்க‌டித்துக் கொன்ற‌து யார்?

ம‌ட‌த்திராம‌ன்.

ஆயில்ய‌ம் திருநாளுக்கு ஸ்ரீ ப‌த்ம‌னாப‌னின் நெய்பாய‌ச‌த்தில் விஷ‌ம் கொடுத்த‌து யார்?

ம‌ட‌த்திராம‌ன்.

வாழைப்ப‌ள்ளிக் குஞ்ச‌க்காவின் அறுநூறு குத்த‌கைப் பொருளைத் தான‌ம் வாங்கிப் ப‌ண‌ய‌ம் வைத்த‌து யார்? யாரு என்று கேட்டேன்.

குஞ்ச‌க்காதான் தான‌ம் கொடுத்தாள்.ஆனால் பொருள்க‌ள் அவ‌ளுடைய‌வை ய‌ல்ல‌. வேறு ஆண்க‌ளுடைய‌வை.

அகோர்ம‌னைக்க‌ல் பிராம‌ண‌ சொத்து.

ஆல‌ங்காட்டு சாமி சொத்து.

க‌ல்லில் எழுதி வைத்த‌ உயில்.

குஞ்ச‌க்காவின் ச‌ம்ப‌ந்த‌ம். குஞ்ச‌க்காவைச் ச‌ம்ப‌ந்த‌ம் செய்யலா‌மென்று சொல்லி அவ‌ளுடைய‌ அறுநூறு குத்த‌கைப் பொருளை தான‌ம் வாங்கிக் கை க‌ழுவிவிட்டுப் போன‌து யார்?

மடத்திராமன்.

பிராமணரை ஏமாற்றுவது பிரும்மஹத்தி. தேவர்களை ஏமாற்றுவது தேவஹத்தி. இவ்வுலக‌த்திலும் மேலுலகத்திலும் புண்யம் கிடைக்காது.

பாலச்சோட்டு ஜோஸ்யனின் கையில் பதினேழு குட்டிச் சாத்தான்கள் இருக்கின்றன. சாத்தான்கள் பதினேழாகும். பாலச்சோட்டு ஜோஸ்யன் கிட்ட விளையாடினால் அவன் சும்மா விடமாட்டான். அப்படிப்பட்ட பாலச்சோட்டு ஜோஸ்யனைக் கைக்குள் போட்டுக்கொண்டு நீ எனக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கப் பார்த்தாய் இல்லையா? சபரிமலைப் பிரசாதம் என்று சொல்லி கைவிஷம் கொடுத்தனுப்பினாய். நான் அதைத் தின்னத் தொடங்கியபோது தென்கிழக்கு மூலையிலிருந்து ஒரு கௌளி மூன்று தடவை முரலி ஒலித்தது.

கூடாது… விஷம்…. கூடாது.

நான் தின்னவில்லை.

அப்போது குட்டிச்சாத்தான்கள் வந்தன. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞன் உடனே சோற்றானைக்கரைக்குப் போய்க் கும்பிட்டான். தேவி பரிசுத்தமாய் அணிந்திருந்த செம்பருத்திப் பூக்களும் கூவள இலைகளும் கொண்டு திரும்பி வந்தான். சாத்தான்கள் திரும்பிப் போயின. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனை ஒன்றும் செய்ய முடியாதெனத் தெரிவித்தன. பிறகு ஜோஸ்யன் மோகினிப் பிசாசுகளை ஏவிவிட்டான்.

சாத்தான்கள் உபத்திரவம் கொடுப்பது பக‌லென்றால், மோகினிப் பிசாசுகள் இரவில். பாலச்சோட்டு ஜோஸ்யன் மோகினிகளை வைப்பாட்டிகளாக வைத்திருக்கிறான். ஆணைக்குட்பட்டு. பனங்குலைபோலத் தலைமயிர் கொண்ட மோகினிகள் இரவில் பாதச் சலங்கையுடன் வருகின்றன. ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளம். கோயில் குளத்தில் திருவாதிரை நீராட்டல். கண்ணடிக்கின்றன. அழைத்துக்கொண்டு போகின்றன. ஒரு துண்டுப்புட‌வையுடன் ஆசாமி பின் தொடர்கிறான். எங்கே போய்ச் சேருகிறான்? அரண்மனை அந்தப்புரங்களுக்கு. யாருடைய அந்தப்புரங்களுக்கு? அக்பர் சக்ரவர்த்தியின் அந்தப்புரத்திலா? இல்லை பாலச்சோட்டு ஜோஸ்யனின் அந்தப்புரத்தில்.

அங்கே கீத கோவிந்தம். கட்டியணைக்கையில் தங்க அரைஞாணை அறுத்து எடுக்கும். முத்தமிடுகையில் நாக்கால் தங்கப்பல்லை நிமிண்டி எடுக்கும். பிறகு இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். சக்கையாக்கிய பின் கண்ணைக் கட்டி அறுவடையான வயலில் கொண்டுபோடும். அங்கே முற்றத்தில் அவிழ்த்து விட்டதுபோல் வட்டமடித்துச் செத்து விழுகிறான்.

நீ பாலச்சோட்டு ஜோஸ்யனைக் கைக்குள் போட்டுக் கொண்ட தினத்தில் நான் தூக்கத்தை விட்டேன். அத‌ற்குப் பிறகு உறங்கவேயில்லை. இரவில் தூங்கக் கூடாது. கண்ணை மூடினால் தலை இருக்காது. இர‌வில் ஏமாற்று; எல்லாம் ஏமாற்று; வஞ்சனை.

மாறு வேஷத்தில் திரியும் மோகினிகள். பேய்கள். யானை மருதுகள். பால ப்ரேதங்கள்.

திருடன் போலீஸ்காரன் வேஷத்திலும், போலீஸ்காரன் திருடன் வேஷத்திலும்.

யார் யாரைத் திருடுகிறார்கள்?

அக் கூட்டத்தில் வனவாசம் செய்கிற பாண்டவர்கள் இருக்கிறார்கள். பீமன், கீசகனின் அரண்மனையில். அரக்கு மாளிகையில் எப்போது தீப்பிடிக்குமென்று தெரியாது. கோவிலும் அரக்கில்லம்தான்.

ஆனால் அரக்கு இல்லம் தீப்பிடித்தாலும் கடவுளுக்கு ஒன்றுமில்லை. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுக்கொன்றுமில்லை.

பூசாரி வருகிறார். பூசாரி போகிறார். கோவில் பணியாட்கள் இறந்து போகிறார்கள். மாலைகட்டும் பண்டாரங்கள் யாருமறியாமல் கிழவர்களாகி விடுகிறார்கள். செண்டையடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். முதல் பரம்பரை மாறுகிறது. மாதப்படி மாறுகிறது. பட்டாத்ரியின் சொத்துக்குச் சண்டை. குற்றிக்காடு கோயில் சொத்து யார்பேரில்? மகன் பேரிலா? மருமகன் பேரிலா? கேஸ் ஹைக்கோர்ட்டில், மாசி மாதத்தில் சிவராத்திரியன்று தீர்ப்பு.

கோயில் சொத்து யார் பேரிலுமல்ல–தெய்வத்தின் பேரில். தெய்வம் மாறுவதில்லை.

பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனும் மாறுவதில்லை. குற்றிக்காடு கோயில் சொத்து பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுக்குத் தூய சொத்து.

ஆனால் குஞ்ஞன் தூங்கக்கூடாது. கண்ணைச் சிமிட்டக்கூடாது.

கோழிரத்தம் குடிக்கப் பிசாசுகள் தேயிலைச் செடிகளுக்கிடையில் பதுங்கியிருக்கின்றன.

பிசாசுகளுக்கும் பாம்புகளுக்கும் வேண்டியது கோழி ரத்தம்தான்.

நாக பூஜையை நிறுத்தாமல் செய்யவேண்டும். ஓய்வு நாட்களில் உத்யோகஸ்தர்கள் பாம்புகளைத் தவிர, தேள், பூரான் இவைகளையும் ஆராதனை செய்ய வேண்டும். மோகினிகளிலிருந்தும் பிசாசுகளிலிருந்தும் காத்துக்கொள்ள நாக பூஜை. பாம்புகளுக்குக் கோழிரத்தம் கொடுக்க வேண்டும். பூவன்கோழி, குளக்கோழி, காட்டுக்கோழி, காலங்கோழி, கடல்கோழி, பெட்டைக்கோழி, காடை என்ற இவ்வகைக் கோழிகளின் இரத்தம். எல்லா ஸர்ப்பங்களையும் ஆராதிக்க வேண்டும். அனந்தன், தக் ஷகன், வாசுகி, எட்டடிமூக்கன், வெம்பாலை, சேரை, நீர்கோலி, செவிப்பாம்பு, வெற்றிலைப்பாம்பு, பாக்குப்பாம்பு, புகையிலைப்பாம்பு–

பாம்புகளின் தெய்வம் பாம்பும் மெய்க்காட்டு மனைக்கல் திருமேனி. ‘பாம்பும் மெய்க்காட்டுமனைக்கல்’லிலிருந்து இரண்டு பாம்புகளை ஒரு சீசாவிலிட்டு வாரிக்காட்டு ஸர்ப்பக்கூட்டிலுள்ள ஒரு புற்றில் பிரதிஷ்டை செய்கிறான். பால் கொடுத்துப் பூஜை செய்கிறான்.பசுவின் பால், எருமைப்பால்,ஆட்டுப்பால், கோழிப்பால், புலிப்பால், கள்ளிப் பால், ரப்பர்ப்பால்,முலைப்பால், பால்பொடி என்ற இப்பால்களைப் போதும் என்கிற வரை கொடுக்கவேண்டும். “பாம்புக்குப் பால் வார்த்தால் பாய்ந்து வந்து கடித்திடும்”

மடத்திராமனை.

கோழி ரத்தம் குடித்து வெறிபிடித்த வெற்றிலைப்பாம்புகள் மோகினிகளைக் கொத்துகின்றன.

ஆலிலைக் கிருஷ்ணா, வெற்றிலைப் பாம்புகளிடமிருந்து நீயென்னைக் காப்பாற்று.

எல்லாவற்றிற்கும் காரணம் மடத்திராமனென்ற அசுரன் பாலச் சோட்டு ஜோஸ்யனைக் கைக்குள் போட்டுக்கொண்டதுதான்..

மாமிச உணவு இயற்கையின் நியதி. கரையானைக் கோழி தின்கிறது. கோழியைக் குள்ளநரி தின்கிறது. குள்ளநரியை மனிதன் தின்கிறான். மனிதன் மனிதனைத் தின்கிறான். அவனைச் சிங்கம் தின்கிறது. சிங்கத்தைக் கழுகு தின்கிறது. கழுகை எறும்பு தின்கிறது. எறும்பை ஆஸ்திரேலியாவில் ஒரு பிராணி தின்கிறது. அந்தப் பிராணியைக் கரையான் தின்கிறது. கரையானைக் கோழி தின்கிறது.

மனிதன் மீன் தின்கிறான். மீன் மனிதனைத் தின்கிறது.

அது சரியில்லை. சுயநிறைவு அடையணும். நாம் மற்றொரு ஜீவனின் இறைச்சியைத் தின்னக்கூடாது. சொந்த மாமிசம் மட்டுமே புசிக்கணும்.

பாம்புகள் பசியெடுக்கும்போது வாலை விழுங்கணும். யானை தும்பிக் கையைத் தின்னணும். நெல்லின் உரம் கதிர்.

சுய நினைவற்ற மடத்திராமன் தண்டனைக்குரியவனே.

இங்கிலாந்திலிருந்து தந்தி. சீமைத்தந்தி. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுடன் புறப்படணும் இங்கிலாந்துக்கு. ஆறாம் ஜார்ஜின் நீதி மன்றத்தை அடையணும். பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுக்கு அந்தப் புரத்தில் துவாரபாலகனின் வேலை. இன்று முதல் இங்கிலாந்தில்.

ஆனால் குஞ்ஞன் அரண்மனையில் சாப்பிடமாட்டான். ஜாரஜ் ஆறாமவன் கிறிஸ்தவன். அது மட்டும் வேண்டாம்.

ஒருநாள் குஞ்ஞன் ஜார்ஜாறாமவனிடம் சொல்கிறான்: “கொடை வள்ளலான பொன்னரசே, குன்னத்து நாடு தாலுக்கா, ராயமங்கலம் பகுதி, புல்வழிக் கரையில் மடத்தி வீட்டில் வேலுப்பிள்ளை ராமன் நாயரால் மிகவும் தொந்திரவாயிருந்தது. இந்த ராமன் மனிதரையும் மிருகங்களையும் கொன்று தின்னுகிறான். கப்பம் வாங்குகிறான்.

ஆறாம் ஜார்ஜுக்குக் கோபம் வருகிறது.

“ஹாய், என் ராஜ்யத்தில் வேறொரு ராஜாவா?” உடனே கட்டளை பிறந்தது.

”பேரய்க்காப்பள்ளி குஞ்ஞன் போய் மடத்திராமனைப் பிடித்துக்கட்டி ஆஜராக்கட்டும்.”

இரண்டு வாரண்டு சிப்பாய்களையும் ஓரு அமீனாவையும் அழைத்துக் கொண்டுவந்து நான் ராமனை விலங்கிட்டு நடத்திக்கொண்டு போகிறேன். ஆறாம் ஜார்ஜின் நீதி மன்றத்தில் ஆஜராக்குகிறேன்.

ஆறாம் ஜார்ஜின் நியாய‌மன்றம்.

இருப்பவர்கள் ஆறாம் ஜர்ஜ், விக்டோரியா மகாராணி, ஸ்ரீசித்திரைத் திருநாள் பாலராமவர்மா மகாராஜா, அகோர்மனைக்கல் மகன் விஷ்னு நம்பூதிரிப்பாட், அரண்மனை வைத்தியன் தன்வந்தரி மூஸ்ஸது. ராமன் பிரதிவாதிக்கூண்டில். குஞ்ஞன் குற்றப்பத்திரம் வாசிக்கிறான். விசாரணை தொடங்கிற்று.

ஆறாம் ஜார்ஜ் கேட்கிறார்.

“மடத்தில் ராமன் அல்லது மடத்தில் வீட்டு ராமன் நாயர்.”

“ஆஜர்……”

“…ஸ்டாண்டு, ஸிட்…ஸ்டாண்டு.. ஸிட்..”

“ஏற்ற இறக்கம். பொருளென்ன மடத்திராமன்?”

பேச்சில்லை.

“ஜியாக்ரஃபி. அர்த்தமென்ன?”

மீண்டும் மௌனம்.

“தெரியாது. முட்டாள் ஒன்றும் படிக்காமல் வந்திருக்கிறான்.”

“செள்ளுப் பூச்சிகள் எப்படி உண்டகின்றன? ராமன் சொல்லட்டும்.”

“பெரிய செள்ளுகள் சிறிய செள்ளுகளைப் பெறுகின்றன.”

“தப்பு. குஞ்ஞ‌ன் சொல்லிக்கொடு.”

“சாணகப் புழுவுக்குச் சிறகு முளைக்கும்போது செள்ளாகிறது.”

“கரெக்ட். ஈசல் எப்படி உண்டாகிறது?”

“வெளிச்சத்தைப் பார்க்கும்போது உண்டாகிறது.”

“தப்பு. குஞ்ஞ‌ன் சொல்?”

“கரையானுக்குச் சிறகு முளைக்கையில் ஈசலாகிறது.”

“மின்மினிப் பூச்சி எப்படி உண்டாகிறது? ராமனே சொல்லட்டும் இந்தத் தடவை.”

“செவிப் பாம்புக்குச் சிறகு முளைக்கும்போது மின்மினிப் பூச்சி யாகிறது.”

“ஒட்டுணிச் செடி தின்று வாழும் பிராணிகள் எவை?”

“ஒட்டுணிப் பன்றி.”

“இருபத்தேழு அரசாங்க ரூபாய்க்கு எத்தனை பிரிட்டிஷ் ரூபாய்?”

“இருபத்தெட்டு.”

“தப்பு. இருபத்தெட்டு அரசாங்க ரூபாய்க்கு இருபத்தேழு பிரிட்டீஷ் ரூபாய். சரி, நீ போகலாம்.”

தீர்ப்பு மறுநாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

மறுநாள் தீர்ப்பு அளி்கப்பட்டது. மடத்திராமனைத் தூக்கிலிட்டுக் கொல்ல. வேலுத்தம்பியைத் தூக்கிலிட்டதுபோல. சந்தை முனையில் பகிரங்கமாகத் தூக்கிலிட. அன்று மத்யானம் மடத்திராமன் கொலைச் சோறு உண்டான். அடைப்பிரதமன் சேர்த்து.

தூக்கிலிடும் கொலையாளிகள் குளித்துக் கும்பிட்டு வந்தார்கள். பாலச்சோட்டு ஜோஸ்யனை அழைத்து ப்ரச்னம் வைத்து நேரம் நிச்சயித்தனர். மந்திரவாதிக்கு நேரம் கிடைக்கணும். பிசாசாக மாறக் கூடாது. அகால மரணமில்லையா?

யார் அது? குஞ்ஞன் இங்கில்லையென்று சொல்லு போ. இங்கிலாந்துக்குப்போயிருக்கான்.

பிசாசை ஆணியால் அறையணும். எட்டிப்பலகையில் சலித்தமாவு இரண்டாழாக்கு, தலைமட்டம் தட்டிமூன்றுபடி…….

இன்னும் என்ன தயங்கித் தயங்கி நிற்கிறாய்? குஞ்ஞன் இங்கில்லையென்று சொல்லவில்லையா?

ஙே….யாரு?

ஆஹா…நீயா?.

ந்தா, என்னோடு விளையாடாதே. நான் சொல்றேன்.

ஐயோ விரலை வளைக்காதே.ஒடிஞ்சு போகும். வேஷ்டி தரேன். வளைக்காதே ராமா……. இதோ இந்த மடியிலிருக்கு ரெண்டுரூபாய் நாலணா. காசை எடுத்துக்கோ. வேஷ்டியைக் கொண்டு போகாதே. எனக்கு உடுத்த வேறெதுவுமில்லை. ராமா, என்னை இந்த நிலைமைக் காளாக்கிவிட்டியே. ராமா, அந்த வேஷ்டியை இங்கே போட்டுட்டுப் போ….

ஐயோ…. ராமா….

என்……

எங்கே ஆறாம் ஜார்ஜ்?

– எம்.பி.நாராயண பிள்ளை

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *