ஆரோக்கியசாமியின் அறிவுரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 2,040 
 

இந்தா கியவி நீ கம்முனு கிட ! சும்மா ராங் காட்டிக்குனே இருக்கறயே ? உம் பொயப்ப பாத்துக்கினு போவியா ? என்ர ரூட்டுல வார வேலையெல்லாம் எங்கிட்டே வேணாம் !

என்னாடா உங்கிட்ட ராங்க காட்டினு இருக்காங்க, போடா போக்கத்தவனே,வூட்டுல என்னாத்துக்கு உனக்கு பொண்டாட்டி கீது ? அவ சொல்ரதை கேட்டுப்போடா

இந்தா சும்மா சும்மா எங்கிட்ட தொணக்காதே, இப்படி தொணச்சிகிட்டே இருந்தே கீச்சுப்போடுவேன் கீச்சி

என்னா ஆயா, என்ன உம் பேரனுங்கிட்ட டாவடிச்சுகிட்டிருக்கே ?

 வாடி என் மருமவளே , அந்த ஆட்டோவ வித்துட்டு ‘ புச்சு “ வாங்குடான்னா அவன் அப்பன் ஓட்டன வண்டியாம், வாங்கன காசுக்கு மேல செலவாண்டை இழுத்துடுச்சு,. கேனப்பையன் சொன்னா கேட்டானா ? இவ அப்பனும் இதே மாதிரிதான் சும்மா நம்மகிட்ட ராங்க் காட்டினு இருப்பான்,

எங்கப்பனை பத்தி பேசாத ஆயா ? நிசமாவே கீச்சிடுவேன், பார்த்துயா ஐயா கிட்டே பிளேடு வச்சிக்கினு இருக்கேன், கியவி குயவின்னு பாக்கமாட்டேன்,

என்னாடா பண்ணுவ நீயி ! பண்ணறா பாப்போம் ? இந்த பஜார் பாக்கியத்துட்டயெல்லாம் உன்ற மொறைச்சலை காட்டுன அப்பூறம் அப்புட்டுதான்

ஏய்யா ஆயா சொல்றதை கேட்டுட்டு போவியா சும்மா வள வள்ளன்னு இழுத்துகினு,ஆயாவை மிரட்டிகிணு இருக்கே ?

அப்புடி கேளுடி எங்கண்னே,

என்னா பேச்சு பேசரே “ பூவாயி “, இப்பம் வண்டி மாத்தரதுன்னா என்னா செலவு இழுக்கும் தெரியுமா?

அப்படியே இந்த வண்டிய கொடுத்து புச்சு வாங்குனாலும், ஒரு நோட்டாவது முழுசா கொடுக்கணும், யாருகிட்ட இருக்கு துட்டு ? ஏதோ நீயிங்காட்டி சமாளிச்சுக்கினு, இந்தா இந்த கியவியையும், இரண்டு குமருகளையும் இழுத்துட்டு போறே ?

என்னய ஏண்டா இழுக்கறே ? உன்னையும்தாண்டா என் மருமக இழுத்துகினு போயிட்டிருக்கா?

இந்தா சும்மா கூவிக்குனு இருக்காதே, முஸ்தபா சீட்டு முடிஞ்ச பணம் இருக்கும் அதை தாறேன், வண்டியை மாத்து, ஆயாகிட்டே ராங்க் காட்டிகினே இருக்காதே .

வண்டி சுகமாய் ஓடிக்கொண்டிருக்க, வாய் விட்டு சிரித்தான் ஐசக். பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கு “புரை”  எறியது சிரித்து சிரித்து. நல்லா “ஆக்ட்” கொடுக்குது உன் ஆயா  ஆமா இதை எல்லாம் எப்படி பிளான் பண்ணுவீங்க?

பிளான் எல்லாம் ஒண்ணுமில்ல சார் குடும்பமுன்னா என்னா சார், ஆரோ ஒருத்தர் பொறுப்புல ஓடோனும், என்னைய விட என் ஆயாவுக்கு நல்லா தெரியும் சார், அந்த வண்டி ரொம்ப பழசாயிடுச்சு, அதை நானும் ஆயாவும் புதுசு பேசி வாங்க முடியும் சார், ஆனா அதை மருமக சொல்லி வாங்கினாத்தான் எங்க ஆயாவுக்கு திருப்தி, அதுதான் அப்படி ஆக்ட் பண்ணோம் சார், மத்தபடி பணம் எல்லாம் எங்க கிட்டயும் இருக்கு சார், ஆனா எதுன்னாலும் அவ சொல்லனும் சார்.

ஐசக்கு இதை நீ எனக்கு சொல்லற மாதிரி இருக்கு ! குரலில் கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னேன். இலேசாக சிரித்தவன் நீ அப்படி நினைச்சிகினா நான் என்னா பண்ணுவேன் சார் ? சரி அப்படித்தான் வச்சுக்கயேன், நீ நிறையா படிச்சிருக்க, பத்திருபது பேத்துக்கு வேலை கொடுக்கரே !அதுவும் இல்லைங்களே, அதே நினைப்போட வூட்டுக்கு போனா என்னா சார் நடக்கும் ? உன் பேச்சை சரி சரி ன்னு கேக்கறவன் உன் கிட்டே சம்பளம் வாங்கறவன் சார், அவனுக்கு தலை ஆட்டுனாத்தான் சம்பளம், உன் வூட்டுக்காரிக்கு என்னா சார் தலையெழுத்து, அவ கிட்டே நீ முட்டாளா இல்லையின்னாலும் உன்னால நடிக்க முடியாதா ?

எனக்கு கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்துச்சு, இல்லை ஐசக், எங்கப்பா அந்த காலத்துல சமையல் வேலை செஞ்சுதான் என்னை படிக்க வச்சாரு, நான் நல்லா படிச்சு வந்தேன், சம்பாரிச்சு கொடுத்து அவரை காப்பாத்தறது என்னோட கடமை, ஆனா அவர் என்ன பண்றாரு, அவர் மாதிரி சமையல் செஞ்சிகிட்ட “ வேணு அய்யர் “ பொண்ணை என் தலையில பிடிவாதமா கட்டி வச்சாரு இது நியாயமா ? உங்கப்பா ஆரோக்கியசாமியும் இதுக்கு உடந்தை. என்னோட ஆபிசுல எத்தனை அழகான பொண்ணுங்க எனக்கு கீழே வேலை செய்யுது, நான் இந்த சமையல் வேணு அய்யரை பொண்னை வீட்டுல வச்சுட்டு, அதுவும் எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கு !

இன்னா சார் அந்த பொண்ணுக்கு இன்னா குறைச்சல், ஏன் சார் இத்தினி வருசம் குடும்பம் நடத்தி, இரண்டு பசங்க ஸ்குல்லுக்கு போயிக்கினி இருக்காங்க, அப்புறம் என்னாத்துக்கு உனக்கு இந்த விசனம் ? எத்தினி குடும்பத்துல வெளியில “புலி” யா இருக்கர ஆம்பளைங்க, வீட்டுல “எலி” யா இருக்கானுங்க ? அது ஏன்னு தெரியுமா சார் ? அப்பத்தான் சார் வண்டி ஓடும், சார் நம்மளை விடு சார், ஆனா குழந்தைங்க அவங்க ஆயா கூடதான் ஒட்டும், அவங்களுக்கு ஒரு பிடிப்பு வேணும் சார், அதுக்கு அவங்க ஆயாவை பிஸ்தாவா காட்டிட்டா நமக்கு என்னா சார் பிரச்சினை.

நீ ஒரே மாதிரி சூழல்ல இருக்கறதுனால உனக்கு என் பிரச்சினை புரியலை, என் ஆபிசில நாகரிகமா இருந்துட்டு வீட்டுக்கு போனா அந்த அக்ரஹாரத்து வேணு அய்யர பாத்தா…. அதுதான் இழுத்தேன்.

இங்க பாரு சார், இந்த உலகத்துல எதுதான் சார் நிரந்தரம் ? உன் ஆபிசா? இல்ல உன் கிட்டே வேலை செய்யற பொண்ணுகளா? இல்லே என் வூட்டுக்காரி படிக்காதவ அப்படிங்க்கறதா?

நாம வாழனோமுன்னு வந்துருக்கோம் சார், அதை நிம்மதியா வாழ்ந்துட்டு போகணும் சார்? நான் ஒரே மாதிரி வாழறேனு சொன்னியே சார், உண்மைய சொல்லு சார் எனக்கு சொந்தமா நாலு ஆட்டோ வச்சிருக்கேன் இரண்டு வீடு கட்டியிருக்கேன், அப்படியிருந்தும், என் பொண்டாட்டி காய் கடை சந்தையில போட்டு வியாபாரம் பண்ணிட்டுதான் இருக்கா? என் புள்ளைங்களும் ஸ்கூலு முடிஞ்சு அவ அம்மா கூட காய் கடைக்கு போய்ட்டுதான் வருது. இதுல என்னா சார் “ப்ரஸ்டீஜு”

திடீரென்று சிரித்துக்கொண்டான் ஐசக், என்ன ஐசக் நீயா சிரிச்சுக்கறே? இல்லே நீ சொன்னியே சமையல் வேலை செய்யறவர் பொண்ணு அப்படீன்னு ? எனக்கு என் பொண்டாட்டிய கட்டரதுக்கே ஆக்ட் கொடுத்துருக்கேன் அது தெரியுமா சார் ?

நிசமாவா ? அதையும் தான் சொல்லேன், உன் காதல் கதையா இருக்கட்டுமே?

என்ர அம்மாகூட பொறந்தவனோட பொண்டாட்டிக்கு இவ தூரத்து உறவாம், அப்பனும் ஆத்தாளும் போன பின்னால ஆயாவுக்கு இந்த பொண்ணை எனக்கு கட்டி வைக்க ஆசை, ஆனா அவ அப்பன் ஒரே வார்த்தை சொல்லிப்பிட்டான், அவ சம்மதிக்கணும், ஆனா அவ சம்மதிக்கரது அவ்வளவு சுலபமில்லை அப்படீன்னூ? ஏன்னு அவ அப்பங்கிட்டே கேட்டேன், அவளுக்கு எப்பவுமே “தான்” அப்படீங்கர எண்ணம், ஏன்னா அவ அம்மாகிட்டே இருந்துதான் அது வந்திருக்கு, என்னைய எப்படி அவ அம்மா பார்த்துக்கறாளோ அது மாதிரிதான் அவளும் நினைப்பா

சரி பாத்துடலாமுன்னு நானும் அவ காய்கடையில போய் நின்னு பாத்தேன், உண்மைதான், அங்க அவ ஒருத்தனை உண்டு இல்லையின்னு புரட்டிகிட்டிருந்தா ? இந்தா உனக்கு இன்னாத்துக்கு அஞ்சு ரூபாய் கொடுக்கணும் ? உன் அப்பன் சம்பாரிச்ச காசா?

பாப்பா கொஞ்சம் யோசி இந்த மூட்டைய கடையில இருந்து இங்க கொண்டு வந்து போட்டிருக்கேன்.

கடை எம்மாந்தூரம் இருக்கு? இங்க பாரு உன் முகரை எதிர்ல வச்சு பாரு, அங்கிருந்து இங்க வர்றதுக்கு அஞ்சு ரூபாயா?

 பாப்பா உன்னைய மாதிரி ஆளுங்க கொடுத்தாதான என் பொழப்பு ஓடும், நீ பார்த்து கொடு, வீட்டுல அரிசி இல்லை, அதான் கொஞ்சம் அதிகமா கேட்டேன், அதுக்கு இம்மாம் பேச்சு பேசிட்டே ! ம்… சோகத்துடன் திரும்பியவனை பார்த்தவள் இந்தா அஞ்சு ரூபாய் வச்சுக்க ? இங்க பாரு உழைச்சு காசு கேளு உண்மைய சொல்லி கேளு, இந்த பூவாயி தாராளமா தருவா..இந்தா முதல்ல வூட்டுக்கு போயி சாப்பாட்டுக்கு பணம் கொடுத்துட்டு வா.

பாத்துகிட்டிருந்த நான் அந்த பொண்ணு கிட்டே போய் சோகமா நின்னேன், என்னய்யா? எனக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுங்க, ரொம்ப கஷ்டம், சொன்னவனை மேல கீழயும் பாத்துட்டு என்ன வேலை சொன்னாலும் செய்வியா? ம்..இந்த மூட்டைய கொண்டு போய் அந்த கடையில வச்சூட்டு வா எனக்கு மூட்டை தூக்கி பழக்கமில்லை, தடுமாறியவனை பார்த்து, யோவ்..உனக்கு மூட்டை எல்லாம் துக்கி பழக்கமில்லையா?

பரவாயில்லம்மா, கொஞ்சம் தூக்கி விடுங்க, சமாளிச்சுக்குவேன், எப்படியோ அவ மனசுல இடம் பிடிக்க தட்டு தடுமாறி கொண்டு போய் சேர்த்தேன். சரி இந்தான்னு இரண்டு ரூபாய் கொடுத்தா ரொம்ப நன்றி சொல்லிட்டு வந்தேன், தினம் காலையில மூட்டை இறக்கரதுக்கு வாரேன், எனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுங்க, சொல்லிவிட்டு வந்தவன் தினம் காலையில அவ கடையில போய் இருக்கும் மூட்டைய ஏத்தி இறக்கிட்டு இரண்டு ரூபாய் வாங்கிட்டு போய் என் ஆட்டோவ ஓட்ட போயிடுவேன்.

இப்படியே இரண்டு மாசம் ஓடிடுச்சு, அவ மனசுல ஒரு நம்பிக்கையான ஆளுன்னு காண்பிச்சேன். ஒரு நாள் அவ அப்பன் ஏதேச்சையா அங்க வர்ற மாதிரி வந்தவன், என்னைய பாத்துட்டு ஏம்மா இந்த பையனை விசாரிச்சு பாக்கலாமா? நமக்கு ஒத்து வருவானான்னு? அவள் கூலி வாங்கனவன்னு பாக்காம உனக்கு புடிச்சிருந்தா விசாரிச்சு பாரு அதோட சரி, இப்பவும் நான் அவ கிட்டே கூலிக்காரன் மாதிரிதான், என்னா குறைஞ்சு போச்சு என் ஆயா கூட  என் கூட சேர்ந்து ஏதாவது முக்கியமான சோலின்னா அவள் கையிலதான் ஆரம்பிக்கறோம். இப்ப என் புள்ளைங்களுக்கும், சரி, எனக்கும் சரி, முதல்ல எங்க ஆயாவுக்கு சாப்பாடு போட்டுட்டுத்தான் எங்களுக்கே போடுவா..எங்க அப்பனை பெத்து, அவனையும், என் அம்மாவையும் பறிகொடுத்துட்ட ஆயா இப்ப நிம்மதியா இருக்கு. எனக்கு அது போதும் சார்..

எனக்கு மனசு கொஞ்சம் இலேசானது, சரி ஐசக் என் கிட்டே பேசிட்டே வண்டியை தாண்டி ஓட்டிட்டே, திருப்பு, அங்க என் காரு நிக்குது.

போ..சார் நிம்மதியா போ..போய் வூட்டுல சந்தோசமா இரு ! ஆபிச நினைச்சுக்கினு வீட்டுக்கு போகாதே, வீட்டை நினைச்சுக்கினு ஆபிசுக்கு போகாதே. வூட்டுக்குள்ள நீ நீயாவே இருக்கலாம், ஆபிசுல அப்படி முடியாது. நல்லா ரோசனை பண்ணிப்பாரு ! வரட்டா .அப்புறம் பார்க்கலாம். இறக்கி விட்டு சென்றவனை பார்த்தவாறு இருந்தேன். என் அப்பா, சொன்னது ஞாபகம் வந்தது. டேய் நானு, வேணு, ஆரோக்கியசாமி எல்லாம் ஒரே சமையல் அய்யருகிட்டே வேலை செஞ்சோம், அப்ப ஆரோக்கியசாமி எங்களுக்கு ஒரு பழைய ஆட்டோ ஓட்டிகிட்டிருந்தான் எனக்கும் வேணுவுக்கும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், இவன் கிட்டே போனா மனசு தெளிவாகும்,

இப்பொழுதும் எனக்கு மனசு சரியில்லாதபோது இவனிடம்தான் வந்து போகிறேன். அப்படியானால் என் மனைவிக்கும் என்  மீது குறை இருந்திருக்கும், கண்டிப்பாய் இவனிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம், நல்ல யோசனை சொல்லியிருப்பான். ஆனால் மற்றவர்களை பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டான். நன்றியுடன் அவன் ஆட்டோவை பார்த்துக் கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *