வெண்டிமுத்து கையில் வீச்சரிவாள் பளபளத்துக்கொண்டிருந்தது. “அம்மா நீங்க கவலைப்படாதீங்க. நம்ம சாமிக்கு ஒன்னுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம் தலைய வெட்டிருவோம். மாறுகால் மாறு கை வாங்கிருவோம்’
சாராய நாற்றத்தோடு கத்திக்கொண்டிருந்தான் . நீண்டு வளர்ந்த காதில் பாம்படம் ஆட ஆட கிழவியும் துணைக்கு கத்திக்கொண்டிருந்தாள். கிழவன் ஆழம்.வாய் திறக்கவில்லை. சுற்றி நின்ற அவனது மகன்கள் மூவரும் போதையில் உளறிக்கொண்டிருந்தனர். அம்மா கண்களை தாழ்த்தி உடலைக் குறுக்கி அவமானத்துடன் காட்சிகளை சகித்துக்கொண்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். பாட்டி கீழே வரவில்லை. அம்மாவின் முந்தானையை பிடித்து உடலை மறைத்து முகத்தை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கனியை ஒருவன் அத்தனை கூட்டத்திலும் யாரும் பார்க்காத ஒரு சிறு நொடியில் நாக்கைத் துருத்தி கண்களை உருட்டி மிரட்டும் பாவனை காட்டினான். அவள் பயம் புரிந்தவனாக கள்ளச் சிரிப்பொன்றும் சிரித்தான். நடுங்கிய கனிக்கு தொடையில் வாங்கிய அழுத்தமான கிள்ளலின் வலி கண்களில் நீரை வரவழைத்தது. கூடவே பயம் உடலை குலுக்கிக்கொண்டே இருந்தது. நான்கைந்து முறை நடந்த சம்பவங்கள் நினைவு வந்து இருட்டு நோக்கி நகர்ந்தாள். கட்டில் இருந்த பக்கம் சென்று மூலையில் காலை மடித்து அமர்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு முகத்தை புதைத்து கிடுகிடுவென்று நடுங்கிய உள்ளத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள். உள்ளத்தின் நடுக்கம் சப்தமற்ற கண்ணீராய் வெளிவந்து கொண்டிருந்தது . மயக்கமா தூக்கமா தெரியவில்லை.
சேவல்கள் கூவும் சத்தத்தால் விழித்து அதிகாலை பார வண்டி மாடுகளின் கழுத்து மணியோசையில் புரண்டு படுத்து காகங்களின் கரைதலுக்கும் வாசல் தெளிக்கும் சர்சர் சங்கீதத்துக்குமாக காத்திருந்த கனி ஒவ்வொன்றாய் காதில் விழத் தொடங்கி சிட்டுக்குருவிகளின் தொடர் சப்தத்தில் படுக்கையை விட்டு எழுந்தாள் .
“கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவென்றெண்ணித் தன் பொல்லாச்சிறகு விரித்தாடும்….” பாட்டி சொல்லிக்கொண்டே தீபமேற்றினாள். பாட்டி என்பதால் நீட்டி முழக்கி இருப்பாள் என்று அர்த்தமல்ல. கச்சிதமான உச்சரிப்போடு வெற்றிலை சிவந்த வாயோடு ஒரு ரிடையர்டு பேராசிரியை போன்ற சொல்லாடல். தும்பை பூ வெண்மையில் சேலையை மடிப்புகள் கலையாமல் கட்டி நேர் வகிடெடுத்து படிய சீவி கோடாலி முடிச்சு கொண்டையும் மூன்று பட்டையாக பூசிய விபூதியுமாக பேரழகி. எலுமிச்சை நிறத் தோல் சுருங்கியும் வனப்பு குறையாத உடல். கண்களில் அறிவும் தீட்சண்யமும்.
கானமயிலாடலில் தீபத்தை ஏற்றி முடித்தவள் கந்தா கடம்பா கதிர்வேலவனே என்று கைகளைக் கூப்பி சொல்லத் தொடங்கியிருந்தாள். இனி சரியாக இருபது நிமிடங்கள் ஆகும். தெய்வங்களின் பெயர் சொல்லி குணநலன் சொல்லி முடித்து கற்பூரம் காட்ட.
கீழே சமையலறையில் ஒரு தேவதை போன்று அம்மா கண் மை களைந்து அழகேற்றியிருந்த விழிகளில் நீர் கோர்த்திருக்க ஊதுகுழலால் அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள். புகையால் கண்ணீரா விதியால் கண்ணீரா என்று பிரித்தறிய முடியாதவாறு இருந்தது சூழல். சமையல்காரம்மா இன்று வரவில்லை. தந்தையும் குழந்தைகள் அற்ற மாமாவும் போட்டி போட்டுக்கொண்டு வெளி நாட்டுப் பொருள்களாகப் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்து உண்டு , உடுத்தி அலங்காரம் கண்ட உடல். விறகைத் தள்ளவும் ஊதவுமாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. உடல்மொழியில் மொத்த சோகமும் வழிந்து கொண்டிருந்தது.
மெதுவாக கேட் என்றழைக்கப்பட்ட நெடிய அகலமான சந்து போன்ற அமைப்பின் இரு புறமும் இருந்த அறைகளில் அப்பாவின் அறையை எட்டிப்பார்த்தாள். கதவு லேசாக திறந்திருந்தது. ஆள் இல்லை. மெல்லியதாக லைபாய் சோப்பு வாசமும் பாண்ட்ஸ் பவுடர் மணமும் சேர்ந்து கமழ்ந்தது. இப்போது தான் கிளம்பியிருப்பார் போல. வடக்கே திரும்பிப் பார்த்தாள். வரப்பில் வேட்டியின் ஒரு நுனியை தூக்கிப் பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். வெறுமையாய் திரும்பி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்த போது பெரியவன் மழலை மாறாமல் “வடக்க போய்ட்டாரு” என்றான். சமையலறை வாசலுக்கு வந்த அம்மா ஆழமாய் குழந்தைகளைப் பார்த்து விட்டு விருட்டென மறைந்தாள்.
நாகியைத் தேடியது கண்கள். காணோம். சோகமானாள் கனி. கண் விழிப்பதே நாகி முகத்தில் தான். இன்று ஏன்அவள் வரவில்லை. நேற்றைய வேதனை பாரமாய் அழுத்த பயத்தில் உடல் குலுங்கி குலுங்கி அடங்கியது. அழுகை எந்நேரமும் வெடிக்க தயாராக இருந்தது. அழுதால் ஏன் என்று கேட்க நாகி தான் வந்தாக வேண்டும் . இடது தொடை தீயென எரிச்சலுடன் கடுகடுவென வலித்தது. குளிக்க வைக்கும் போது நாகி கேட்பாள். மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது.
மறுபடி மேலே சென்று வழக்கமாக அமரும் ஜன்னல் அருகே அமர்ந்து மஞ்சனத்தி மரத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். இரட்டை வால் குருவி இரண்டும் வந்து விட்டது. வெண்ணிற மஞ்சனத்தி பூக்கள் நட்சத்திரம் போல அழகாக மலர்ந்திருந்தன.
பெல்லாரி கண் முன்னால் வந்தாள். பரட்டையான செம்பட்டை முடி. வெயிலில் சிவந்த வெள்ளைத்தோல். மஞ்சள் நிற பற்கள். கணுக்கால் வரை நீண்ட அழுக்கு கவுன்.தலையில் பாதியும் முதுகில் பாதியுமாக ஒரு கந்தல் துணி.
அரையிருட்டு.
அந்தப் புனிதர் தனது சாய்வு நாற்காலியில் பல்லை விகாரமாக இளித்தபடி தன்னை சுற்றியிருந்த ஐந்தாறு ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும் புனிதரை விட வயதில் சிறியவர்கள். ஆனால் நிச்சயமாக நடுத்தர வயது கடந்தவர்கள். பெருமாள் இளைஞன்.ராமன் சிறுவன். 15 வயது கூட இருக்காது.ஆடு மாடு மேய்ப்பவன். மகா அயோக்யன். கெட்ட செய்கை கெட்ட பேச்சு என்று தவறான நடத்தையால் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பான்.புனிதர் தனது மடியில் கனியை அமர்த்தியிருந்தார். பார்த்தால் அன்பாய் அமர வைத்திருப்பதாகத் தோன்றும். ஆனால் அவள் இறங்கி விடாதபடிக்கு இரும்புப் பிடி இடுப்பை சுற்றி இறுகியிருந்தது. காட்சிகள் அரங்கேறத் துவங்கின. புனிதரும் பாதிக் கிழங்களும் அரை வட்டமாய் சாய்வு நாற்காலி சேர் சந்தைக்கடையின் மண் மேடை என்று சுற்றி அமர்ந்திருக்க, பெருமாளுக்கு விதவிதமான சொற்களால் வெறியேற்றியது கூட்டம் . நாயிடம் சிக்கிய பூனைக்குட்டியானாள் பெல்லாரி. வெறியேறிய கூட்டம் சாராய நாற்றத்தோடு கெட்ட வார்த்தைகளை உதிர்த்து சிரித்துக்களித்தது.புனிதரின் கை கனியின் உடலில் பலவிதமாய் அலைந்து அலைந்து வலியேற்றியது. பெல்லாரியை மேலும் ஏதோ செய்ய பெருமாள் முயற்சிக்கும் அந்த நிமிடத்தில் புனிதர் “டேய் பெருமாள்…” என்று அதட்டலோடு கத்தி நிறுத்தினார் . வெறியோடு கோபம் கொண்டவனாக சுற்றியிருந்த யாரோ ஒருவர் மடியில் விழுந்தான். அங்கு வேறு வித காட்சிகள் அரங்கேறியது. ராமன் பெல்லாரி முன் அனுப்பப்பட்டான் . “நீ…” என்று புனிதர் கட்டளையிட பே பே என பெல்லாரி ஊளை அதிகமானது. புனிதரின் எச்சில் நாவு கனியின் கழுத்தில். அவள் மென்விரல்களை எங்கெங்கோ இழுத்துச் சென்றன புனிதரின் கைகள். இன்று எல்லாமே அதிகமாகத் தெரிந்தது கனிக்கு. இதற்கு முன் இரண்டு மூன்று முறை விளையாட்டுப் போல ஏதேதோ செய்து கொண்டிருந்தவர்கள் இன்று பெல்லாரியை மிகவும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். ராமனை பிடித்து வெறியோடு தள்ளிய பெருமாள் அவன் இடத்தை பிடித்துக் கொண்டான். இப்போது ஒவ்வொருவராக. ஐயோ யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று மனதுள் கதறி நடுநடுங்கி எழுந்து ஓட முயன்றவளை, “ஏய் ….“என அடிக் குரலில் உறுமி அடக்கிய கிழட்டுப் புனிதர் கனியில் சாறு பிழிந்து கொண்டிருந்தார். கேவிக்கேவி அழுத கனி வலியிலும் இதெல்லாம் அசிங்கம் என்ற அருவெறுப்பு உணர்விலும் துடித்துப் போய் மயக்க நிலைக்குப் போனாள். பெல்லாரி கிழிந்த கந்தலாய் வீழ்ந்தாள். ஊளை அடங்கி விம்மல் சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது.
கனியை நோக்கித் திரும்பிய தடியனொருவன் அவள் தொடையில் நறநறவென அழுந்தக் கிள்ளினான். வலியில் விழித்துக் கொண்டவளைப் பார்த்து “யார் கிட்டயும் சொல்லக் கூடாது. சொன்னின்னா குடலை
உருவிறுவேன்” என்று அடிக்குரலில் மிரட்டினான் . பயத்திலும் அருவெறுப்பிலும் பிணம் போல ஆகியிருந்தாள் கனி. கிழட்டுப் புனிதர் எழுந்து நீண்ட உடுப்பை சரி செய்து கொண்டு நிதானமாக அவளை தூக்கிக் கொண்டு “வா வீட்ல விடறேன். வாயைத் திறக்கக்கூடாது யார் கிட்டயும்…” என்றவாறு திரும்பி “டேய் பெல்லாரியை கைய கால கழுவி விட்டு சந்தை மூலைல கொண்டு போய் விட்ருங்க” என்று சொல்லி விட்டு சொம்பிலிருந்த தண்ணீரால் கனியை தேய்த்து கழுவி பெருமாளின் நாற்றமடிக்கும் துண்டால் துடைத்து நல்லவராக தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கி விட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல் பாட்டியைப் பார்த்து வணக்கமொன்றை சொல்லி விட்டுச் சென்றார். கண்களை உருட்டி விழித்து மீண்டும் ஒருமுறை கனியை எச்சரித்தார் .
பெரிய வீட்டின் பெரும் பகுதி அதிக ஒளியின்றி பாதி இருட்டாயிருந்தது. அப்படியே வெளிச்சமடித்தாலும் முகத்தை உற்றுப் பார்க்க நாதியற்ற வீடு. குளியலறைக்குப் போய் கைகால்களைக் கழுவிக்கொண்டு அருவருப்பான உடையை தூக்கி எறிந்து விட்டு கொடியில் காய்ந்துகொண்டிருந்த வேறொன்றை மாட்டிக்கொண்டாள். யாரிடமாவது சொல்லலாமா கூடாதா என்ற குழப்பத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கீழேயிருந்து அலறல். உற்றுக் கேட்ட போது வீட்டுக்கு கீழேயிருந்து அதிக சப்தமும் வடக்குத் தோட்டத்தில் இருந்து கூக்குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தது. தம்பியும் கனியும் அம்மா அருகே வந்து நின்று கொண்டனர். சாமி என்றழைக்கப்பட்ட அப்பா காலையில் வடக்கே போனவர் இன்னும் வரவில்லை.சப்தம் அங்கிருந்து தான்.நேற்று இரவு வடக்கேயிருந்து கேட்ட கூக்குரல்களையும் இங்கு வெண்டிமுத்து குடும்பம் கத்திக்கொண்டிருந்ததையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தாள் கனி. தான் அங்கிருந்து மேலே வந்து விட்டதும் நினைவு வந்தது. பாட்டி கீழே போகவே இல்லை என்பதும் அம்மா தனியாக அங்கே நின்று கொண்டிருந்ததையும் நினைத்து மீண்டும் பய உணர்வு தொற்றிக்கொண்டது. மேலே வந்த பின் அங்கே என்ன நடந்திருக்கும் என்று யோசித்தாள். யூகிக்க முடியவில்லை. ஆனால் இப்போதும் காலையில் வடக்கே போய்ட்டு இருந்தாரே அப்பா. அப்படியானால் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை போல என்று எண்ணிக்
கொண்டிருந்தவளுக்கு பெரிதாக நடந்து யார் கவனத்துக்கும் வராமலே போன நேற்றைய மாலை மீண்டும் கண் முன் வந்து கலவரப்படுத்தியது. பெல்லாரி என்ன ஆனாளோ. இந்த நாகி ஏன் இன்னும் வரவேயில்லை?
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி சொல்லிக்கொண்டே கனியைக் கடந்து கீழே இறங்கினாள் பாட்டி. இதைக் கேட்டாலே கனிக்கு முகம் சிவந்து ஒரு வித வெறுப்புணர்வு உள்ளே படர்வது இயல்பாகியிருந்தது. இதை தேவதை போன்ற அம்மாவுக்கு முன்னாடி அடிக்கடி எதற்கு இந்தப் பாட்டி சொல்கிறாள் ?
நாகியின் அண்ணன் வருவது ஜன்னல் வழியே தெரிந்தது. மனதிற்குள் சிறு மகிழ்ச்சி. அவர்களைக் கண்டால் மட்டுமே மலரும் மலர். இந்த அம்மா அப்பா பாட்டி எல்லாம் யார் என்ற சிந்தனை இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. வேலைக்காரங்க நம்மை பார்த்துக்கறாங்க. பாட்டி ஏதோ ஒன்றை உச்சரித்துக்கொண்டே நாள் முழுதும் நடக்கிறாள். அம்மா எனும் சத்திம்மா சதா சோகமாகவும் அப்பா வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் கோபமாகவும் இருக்கிறாள். அப்பா எப்போதும் வடக்கே போகிறார். இங்கிருக்கும் நேரத்தில் அம்மாவிடம் அடிக்குரலில் எதையோ விவாதிக்கிறார். யோசித்துக்
கொண்டிருந்தவளுக்கு கீழேயிருந்து வந்த பேச்சுக் குரல் கேட்கத் துவங்கியது. “பெல்லாரி…”
அய்யோ… பெல்லாரி பேரைச் சொல்லி என்னவோ பேசுகிறார்களே. கீழே ஓடி வந்த கனி மாடிப் படிக்கட்டில் எப்போதும் மறைவாய் உட்காரும் இடத்தில் உட்கார்ந்து பயத்துடன் கேட்க ஆரம்பித்தாள். பெல்லாரி காய்ச்சலோடும் மேலெல்லாம் புண்ணாண உடம்போடும் படுத்திருப்பதாக மணியாரும் சத்திரத்துக்காரரகளும் பேசிக்கொண்டிருப்பதாகவும், அப்பாவைப் பார்க்க அவர்கள் எல்லோரும் வரப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான். நடுங்கிப் போன கனி கத்தி அழ ஆரம்பித்தாள். அழுது கொண்டே திரும்பியவளின் கண்களில் நாகனின் பின்னாடியே வந்து நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த பெருமாள் இப்போது தான் கண்ணில் பட்டான். வெடவெடவென்று நடுங்கியபடி கத்திய கனியை “ஏஞ்சாமி அழுகறீங்க…”
என்றபடி தூக்கிய நாகன் பதறினான். “காய்ச்சல் அனலா கொதிக்குதுங்க சாமிக்கு” என்று பாட்டி இருந்த பக்கம் தூக்கிக்கொண்டு போனான். பெருமாள் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். போகிற போக்கில் கனியை பார்த்து கண்ணை உருட்டி எச்சரித்து விட்டுப்போனான். கனியின் பக்கம் திரும்பாமலேயே அம்மா உள்ளே போய்விட்டாள். கேட்டிருந்த செய்திகளால் அவள் முகம் கலவரமாகியிருந்தது. பாட்டி விபூதி எடுத்து பூசினாள். “கொண்டு போய் படுக்க வை நாகா… பார்த்துக்கலாம்” என்றவள் “போய் சாமிய கூட்டிட்டு வா வடக்க இருப்பாக” என்றாள்.
அப்பா வந்து சேர்ந்த சற்றைக்கெல்லாம் பல மனிதக்குரல்கள். நாகியும் இருந்தாள்.
“ஏன்ஞ்சாமி காச்சலாமே…” என்று கேட்டுக்கொண்டே தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டு மாடிக்கு தூக்கிப்போனாள். ஜன்னல் அருகே உட்கார வைக்கும் படி முனகிய கனியை மடியில் அமர்த்தி அணைத்து பிடித்தபடி உட்கார்ந்தாள். தாழ்வான பழங்காலத்து இரும்பு கிரில் ஐன்னல் அது. கீழே நடப்பது தெரியும். கேட்கும். எட்டிப்பார்த்த கனிக்கு உதறலெடுத்தது. பெல்லாரி அலங்கோலமாய் ஊளையிட்டு கையை ஆட்டி ஆட்டி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சைகையாலேயே நேற்றைய கும்பலின் அங்க அடையாளங்களை காட்ட முயற்சித்துக்கொண்டிருந்தாள்.
கிழட்டுப் புனிதர் கனியின் குடும்பம் வாடகைக்கு விட்டிருந்த லைன் வீடுகளில் குடியிருந்தார். அந்த திசையை கை காட்டி அவரது உடையை அடையாளம் காட்டினாள். அதற்கு நேரெதிர் திசையில் கனியின் தோட்டங்களை குத்தகைக்கு விவசாயம் செய்து கொண்டிருந்த பெருமாள் குடும்பத்து வீட்டை கை காட்டினாள். அசிங்கமான செய்கைகள் மற்றும் அங்க அசைவுகள் மூலம் தன் உடல் மேல் நிகழ்ந்த வன்முறையை விளக்க முயன்றாள். சற்றே மனநிலை பிறழ்ந்த ஊமை வேறென்னத்தான் செய்ய முடியும் ?
அவள் குறிப்புகளை உணர்ந்த அப்பா சட்டென்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு விறுவிறுவென அவர் அறைக்கு நடந்து போய் வெண்டிமுத்துவின் அருவாளை விட ஒரு மடங்கு பெரியதை தூக்கிக்கொண்டு பெருமாள் வீட்டை நோக்கி நடந்தார். பாம்படக்கிழவி் “சாமீ ……” என்று நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் வீழ்ந்தாள். “கிறுக்கிப்பய மவளுக்காக என் பயிறுகள பாழாக்கீராதீக சாமீ. சாராய மெதப்புல தப்பு பண்ணிட்டானுங்கய்யா. குத்தம் கட்டீர்ரமுங்கய்யா. அந்த ஊமச்சிறுக்கிக்கு காசு பணம் குடுத்து வயித்தயம் பாத்து விட்டுர்ரோம் சாமீ…” என்று நடிப்பும் கத்தலுமாக பாதங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். வேறு இரண்டு பேர் சென்று கிழட்டுப் புனிதரை இழுத்து வந்து நிறுத்தி இருந்தனர். “மாரிப்பா… அவனுகளயும் இழுத்திட்டு வாடா போய்” என்று அவரது கையாளைப் பார்த்து கத்த நான்கைந்து பேர் போய் பெருமாள், அவன் சகோதரர்கள், ராமன் எல்லோரையும் இழுத்து வந்து வரிசையாய் அலங்காரமாய் நின்ற நெட்டிலிங்க மரங்களில் தனித்தனியாக கட்டி வைத்தனர். புனிதரைக் கட்டவில்லை. காவல் நிலையத்துக்கு ஆள் அனுப்பினார்கள். பெல்லாரி நிமிர்ந்து மேலே இரும்பு கிரில்லை பார்த்து தலையிலடித்துக்கொண்டு “ஊ… ஊ…” என்று கத்தினாள். இரண்டு கைகளையும் அகல விரித்து வளைத்து தலையில் சொடுக்கி திருஷ்டி கழிப்பது போலொரு பாவனை செய்தாள். குற்றவாளிகளை துளைத்துக் கொண்டிருந்த கூட்டம் அவளை கவனிக்க தவறியிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த நாகிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் கனியை இறுக அணைத்துக் கொண்டாள். உயிரோடு இருக்கிறோமா என்பதே தெரியாமல் உறைந்து கிடந்தாள் கனி. பெல்லாரி தளர்ந்து ஒரு மூலையில் சரிந்து அமர்ந்து தலையை தாழ்த்திக்கொண்டாள். அன்றிரவு நடு ராத்திரியில் பெல்லாரி தன் குடிசையில் தீ வைத்துக் கொண்டு எரிந்த செய்தி வந்தது. புனிதரை சபை காப்பாற்றியது. பெருமாள் சகோதரர்களை சாதி காப்பாற்றியது. ராமன் மட்டும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். கனி வெளிச்சமற்ற நீண்ட இருளுக்குள் புதைந்தாள் உதடுகள் மட்டும் “குத்து குத்து… கூர் வடிவேலால்… பற்று பற்று பகலவன் தணலெறி..” என்று அடிக்கடி வீட்டில் ஒலிக்கும் பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணமிருந்தது.
– தொடரும்
ஆருத்ரா எழுதி திருத்தங்கள் செய்ய அனுப்பியிருந்த அந்த தாள்களை மடித்து ஓரமாய் வைத்தான் அகிலன்.ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுத ஆரம்பித்தான்.
டியர் ஆருத்ரா,
குட்…
வெரி குட்.
மனதை அசைக்கும் எழுத்து.உணர்வின் மீது விழும் சாட்டையடியாய் இறங்குகிறது.கலக்கம் சில நொடிகளுக்குத்தான்.
தெளிந்த நீரோடையாய் சலனமற்ற மனதாய் புனிதப்படுகிறது எழுத்தும் எண்ணமும்.
உண்மையிலேயே “மழையாகிறேன்”.
அன்பு அன்பு அன்பு…
அன்பு மட்டுமே பிரதானம்
என்னையே எழுதத்தூண்டும் வசியம் உங்களுக்கு கைக்கூடியுள்ளது. தொடரவும்.
நானும் எதாவது அறுவடை செய்து கொள்கிறேன்.
இனியும் தாமதம் கூடாது.எல்லாவற்றையும் எழுதிவிடவும்.
திஸ் இஸ் “ஆர்டர்”….
அன்புடன்,
அகிலன்
ஆருதராவிடமிருந்து பதில் வந்த்து.
“இறைவா
இந்த உலகம் என்னுடையதா உன்னுடையதா ? இந்த உடல் சர்வ நிச்சயமாய் என்னுடையதில்லை. நாலு வயதில் என் உடல் மேல் படர்ந்த பல கைகள் என் உதட்டில் உமிழப்பட்ட வெற்றிலைச் சாறு. என் உடலை நக்கிய ஈர நாவுகள். என் காலிடுக்கிலும் அக்குலிலும் ஒழுக்கப்பட்ட நாற்றம் மிகுந்த பிசுபிசுப்புகள். சாராயக் கவிச்சி. கோரமான சிரிப்புகள். அசிங்கமான வார்த்தைகள். மிரட்டி மிரட்டி பயமுறுத்தி பணிய வைத்த பேச்சுகள். எல்லாமே இந்த நிமிடம் கழுவிச் செல்லப்பட்டது. எதுவுமே என்னுடையதில்லை.
புத்தகம் என் அழுக்கு நீக்க நீட்டப்பட்ட சவுக்காரக் கட்டி. பெண்ணுடல் என்ற பொருள் பூமிக்கு பொதுமையானது. அதன் மீது செய்யப்பட்ட வன்முறை என் மீதானதல்ல. இறைவனின் பொருள் மீது செய்யப்பட்ட வன்முறை.
தப்பு பண்றேன்.இந்த விசயங்களை என்றாவது நேரில் தான் …மொட்டை மாடி இருட்டுக்குள் ஒளிந்து கொண்டு உங்க பக்கத்தில் நடுக்கம் குறைய ஒட்டி உட்கார்ந்து சொல்வேன் என்று பல நாட்களாய் நினைத்திருந்தேன். இப்படி எழுதி தப்பு பண்றேன். எவ்வளவு சமாதானப் படுத்தினாலும் நிகழ்வின் அதிர்வை தாங்க முடியலை.
நேரில் சந்திப்போம்.
அன்பாலான,
ஆருத்ரா
இதற்கு சிறு குறிப்பை போல் நான்கு வரிகளை எழுதி அனுப்பினான் அகிலன்.
ஆருத்ரா,
மாந்தநேயப்பார்வையில் ஒரு அரவணைப்பு தான் இது.
எல்லாவற்றையும் கழற்றி எறியவும்.
மனம் விசாலமடையும்.
நீங்கள் நிற்கும் இடம் கேள்விகளை எழுப்பும் தான்.
பதிலாய் மாறவும்.
தொடர்ந்து எழுதவும்
வாழ்த்துகள்.
நேரில் சந்திப்போம்.
அன்புடன்,
அகிலன்
சில நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்தனர்.
ஆனாலும் பாருங்கள்…எழுதப்பட வேண்டிய அந்த புதினம் இன்னும் முழுமைப்பெறாமல் தொடர்கிறது…