ஆயிரம் கால் மண்டபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 5,174 
 
 

எல்லாரும் கெட்டவர்கள் என்ற முடிவிற்கு வந்த பிறகு செண்பகக் குழல்வாய்மொழி ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தாள். அங்குதான் யாருமே இல்லை. பெரியவட்டமாக மண்டபம். படிகளும் வட்டம்தான். மொத்தம் ஏழு படிகள். மண்டபத் தளம் கறுப்பாக, பளபளவென்று இருந்தது. கழுவி விட்டதனால் ஈரமாக இருக்கிறதா என்று காலால் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருந்தது. ஆனால், ஈரமில்லை. கல்லாலான மரங்கள் மண்டிய பெரியகாடு போலிருந்தது மண்டபம். நாலாதிசையிலிருந்தும் நிழல்கள் உள்புறமாகச் சாரிந்து, கலைந்து கிடந்தன. ஒரு வண்டு ரீங்காரித்தபடி தூணில் மோதி மோதிப் பறந்து கொண்டிருந்தது.

பிறகுதான் எல்லாத் தூண்களிலும் நிறைய கற்சிலைகள் ஒட்டிக் கொண்டிருப்பதை செண்பகக் குழல்வாய்மொழி கவனித்தாள். வெளிப்பக்கத் தூண்களில் பெரியமீசை வைத்த சாமிகள் வாய் திறந்து, கண்களை உருட்டி, விழித்தபடி, குதிரைகள் மீது அமர்ந்திருந்தன. குதிரைகள் முன்கால்களை மேலே தூக்கி, வாய் திறந்து, பற்களால் வாரைக் கடித்தபடி, சிரித்துக் கொண்டிருந்தன. குதிரைகளுக்குக் கீழே சித்திரக் குள்ளன்கள் மாதிரி தொப்பை உள்ள சிலர் நின்றிருந்தார்கள். மண்டபத்தின் மறுபக்கம் ஒரு தூணருகே பித்தளைத் தாம்பாளம் ஒன்று இருந்தது. அதில் சாமந்திப்பூ மாலைகள் இருந்தன. அருகே குத்துவிளக்குகள். திடீரென்று அவளுக்குப் பயமாக இருந்தது. யாரோ மூச்சு விடுவது கேட்பதுபோலத் தோன்றியது. திரும்ப நாலாபக்கமும் பார்த்தாள். யாருமே இல்லை. பிறகு தன் அருகே நின்ற குதிரைவீரன் தன்னை அவனது கோழி முட்டை போன்ற கண்களால் உருட்டி விழித்துப் பார்ப்பதைக் கண்டாள். அவன் பெரியவாயை இளித்துத் திறந்திருந்தான். பற்கள் நாயின் பற்கள் போல இருந்தன. பயத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எல்லாக் குதிரை வீரர்களும் தலையைத் திருப்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்கள் அவளுடைய அசைவுகளுக்கு ஏற்ப அசைந்தன. சிலர் சிரிப்புடன் பார்க்க, சிலர் முறைத்தனர். ஒருவன் என்னவோ சொல்ல வருபவன்போல இருந்தான். திடீரென்று ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் செண்பகக் குழல்வாய்மொழிக்கு ஏற்பட்டது. ஆனால், கால்கள் அசையவில்லை. பின்பக்கமிருந்த தூணில் அவளும் ஒரு சிலையாக ஒட்டியிருந்தாள். ‘அம்மா பயமாக இருக்கே’ என்று அவள் மனசுக்குள் கத்தினாள். அவ்வளவு பயம்! பிறகு அவள் ஓட ஆரம்பித்தாள். ஓடுவது அவளாலேயே நம்ப முடியாததாக இருந்தது.

வெளியில் வெயில் கண்கூசியது. கோயிலின் கோபுரம் சுதை கறுத்து பொரிதாக நின்றது. அதன் நிழல் பக்கவாட்டில் விழுந்து கிடந்தது. செண்பகக் குழல்வாய்மொழி அங்குபோய் நின்று கொண்டாள். ராணிச் சித்தியும் கமலா அத்தையும் கையில் ஒரு கறுப்புப் பெட்டியுடன் போனார்கள். அத்தை, ‘எதுக்குடி செம்பா இங்கே நிக்கிறே?’ என்று கேட்டாள். செண்பகக் குழல்வாய்மொழி இல்லை என்று தலையை அசைத்தாள். அங்கேயே நின்றபடி மண்டபத்தையே வெறித்துப் பார்த்தாள். ராமு மாமாவும், சிவன் மாமாவும் அவ்வழியாகப் போனார்கள். வேறு யார் யாரோ போனார்கள். எல்லாரும் அவளை ஏதோ கேட்டு விட்டுத்தான் போனார்கள். கோயிலின் உள்ளே ‘டணாய்ங்’ என்று கண்டாமணி ஒலித்தது. உடனே கோபுரத்தில் புறாக்கள் சிறகடித்து எழுந்து பறப்பது கீழே நிழலில் தொரிந்தது. பிறகு அவை மெல்ல கோபுரத்தில் போய் பதிந்தன. செண்பகக் குழல்வாய்மொழி அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்தாள். கண் கூசியது. புறாக்கள் தென்படவில்லை. அப்போது மீண்டும் மணி அடித்தது. புறாக்கள் கலைந்து எழுந்து பறந்தன.

பதற்றத்துடன் செண்பகக் குழல்வாய்மொழி மண்டபத்தைப் பார்த்தாள். அங்கு அசைவே இல்லை. அவளுக்கு மெதுவாக அமைதி ஏற்பட்டது. குதிரைகளும் அந்த அரக்கர்களும் அசைய முடியாது. லதா அக்கா நோட்டுப் புத்தகத்தில் பட்டுப் பூச்சிகளையும், விட்டில் பூச்சிகளையும் ஒட்டி வைத்திருப்பது போல சாமி அவர்களைக் கல்தூண்களோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்கிறார்.

மீண்டும் மண்டபத்திற்கு வந்தாள். தயங்கித் தயங்கிப் படிகளில் ஏறினாள். குதிரை ஆசாமிகள் அவளை ஏளனமாகப் பார்த்தார்கள். சிறிது நேரம் அப்படியே நின்றாள். பிறகு படியருகே நின்றபடி ஒருவனிடம், ‘தடியா’ என்றாள். அவன் முகம் சிறுத்து அவளை உற்றுப் பார்த்தான். செண்பகக் குழல்வாய்மொழி சிறிது யோசித்து விட்டு, ‘தெண்டத்தடியா’ என்று அழுத்டமாகக் கூப்பிட்டாள். அவன் கால்களும் கைகளும் அசைந்தன. ஏதோ பேச முயல்பவைபோல உதடுகள் நெளிந்தன. ஆமாம். அவர்களால் திருப்பித் திட்டக்கூட முடியாது. அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. பக்கத்தில் நெருங்கி, அவன் காலைத் தொட்டாள். அவன் மார்பு விம்மித் தணிந்தது. குதிரையின் சேணத்தைப் பற்றியிருந்த கையில் நரம்புகள் இறுகிப் புடைத்தன. குதிரையின் விலாப் பக்கம் தோல் துடிதுடித்தது. அது காதுகளை லேசாகப் பின்னால் மடித்து, கண்களை உருட்டி அவளைப் பார்த்தது. அவள் அவனுடைய வாளைப் பிடித்து இழுத்தாள். அப்படியே இறுகி இருந்தது. அவன் வயிற்றில் தன் கைகளை மெதுவாக வைத்துவிட்டு அவன் கண்களைப் பார்த்தாள். அவன் சங்கடத்துடன் முகத்தைச் சுளித்தான். ‘கிச்சிக்கிச்சு’ என்றபடி அவனைக் குத்தினாள். சிரிக்காமல் வயிற்றைச் சுருக்கிக் கொண்டான். குதிரையின் தோளில் எலும்பு புடைத்து அசைந்தது. ‘தீவட்டித் தடியா’ என்று அவள் உரக்கக் கூப்பிட்டாள். மண்டபத்தில் வேறு இரண்டு இடத்திலிருந்து யாரோ ‘தீவட்டித் தடியா’ என்று திருப்பிக் கூப்பிட்டார்கள். செண்பகக் குழல்வாய்மொழி எல்லாக் குதிரை வீரர்களையும் பார்த்தாள். எல்லாரும் சங்கடத்துடனும், கோபத்துடனும் அவள் கண்களைப் பார்க்காமல் நின்று கொண்டிருந்தனர்.

அவள் மண்டபத்திற்கு உள்ளே ஓடினாள். தண்ணீருக்குள் தொரிவதுபோல சிவப்புப் பாவாடை தரைக்குள் தொரிந்தது. கையை வீசியபடிச் சுற்றும்போது குடை மாதிரி விரிந்தது. அப்படியே தரையில் உட்கார்ந்து பலூன் உண்டு பண்ணினாள். அப்போதுதான் சாமி எதற்காக இவர்களை இப்படி வைத்து ஒட்டவேண்டும் என்று தோன்றியது. சாமி வேறு எவரையுமே அப்படி ஒட்டவில்லையே? மந்திரவாதிகள் அவர்களை அப்படி ஆக்கியிருக்க வேண்டும். அவர்கள் குதிரைமீது ஏறி எங்கோ போகக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மந்திரவாதி தன் கோலை அசைத்து எல்லோரையும் கற்சிலையாக மாற்றிவிட்டான். அவர்களும் ரொம்ப காலமாக இப்படியே நிற்கிறார்கள். செண்பகக் குழல்வாய்மொழிக்கு அந்த மந்திரம் நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லிப் பார்த்தால் என்ன? அத்தனைபேரும் குதிரைகளைத் தட்டிவிடுவார்கள். அவை தடதடவென்று பாய்ந்து ஓடும். ‘க்னேஏ! க்னேஏ!’ என்று கனைத்தபடி, தூசி பறக்க வாலைச் சுழற்றியபடி, துள்ளிப் பாயும். சினிமாவில் பார்த்தது போல! எல்லாரும் பயந்து போவார்கள். கமலா அத்தைகூட பயந்து அலறுவாள். எல்லாரும் நன்றாக அழட்டும். எல்லாரும் ரொம்பக் கெட்டவர்கள். செண்பகக் குழல்வாய்மொழி திரும்பி நாலு பக்கமும் பார்த்தாள். யாரும் கவனிக்கவில்லை. கைகளைத் தூக்கி அழுத்தமான குரலில், ‘ஓம்! கிரீம்! நமஹா’ என்றாள். அசைவு ஏதும் இல்லை. எல்லாக் குதிரைக்காரர்களும் அவளைப் பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தனர். ‘ஓம் கிரீம் ஓம்’ என்று அவள் மீண்டும் மீண்டும் சொன்னாள். அவர்கள் கால்மாற்ரி நின்றபடி தவித்தபடிக் காத்திருந்தனர். மேலும், உக்கிரமாக அவள் ‘ஓம்! கிரீம்! ஓடு!’ என்றாள். அவள் குரல் அவளையே திடுக்கிர வைத்தபடி வெளியே வந்துவிட்டது. வேறு குரல்கள் மண்டபத்துக்குள் இருந்து ‘ஓடு! ஓடு!’ என்று கூவின. ‘டபடப’வென்று சத்தம். வௌவால்கள் எழுந்து முட்டி மோதிச் சிறகடித்தன.

செண்பகக் குழல்வாய்மொழி அதற்குள் ரொம்ப தூரம் ஓடிவிட்டிருந்தாள். அவளுக்கு மூச்சிரைத்தது. குதிரைகள் இந்நேரம் ஓட ஆரம்பித்திருக்கும். அவைகளை அவிழ்த்துவிட்டது அவள்தான் என்று தொரிந்தால் அப்பா தோலை உரித்துவிடுவார். அந்தக் குதிரை வீரர்களின் பார்வை அவளுக்கு நினைவு வந்தது. அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். நம்பியாரைப் போல அவர்கள் குதிரைகளில் வந்து பெண்களை இடுப்பைப் பிடித்துத் தூக்கி எடுத்துக்கொண்டு போவார்கள். அத்தை, கோமதியக்கா, சித்தி எல்லோரும் கதறி அழுவார்கள். அத்தையும் சித்தியும் குண்டு, தூக்க முடியாது. கோமதியக்காதான் பாவம். செண்பகக் குழல்வாய்மொழிக்கு திடீரென்று பயம் ஏற்பட்டது. அவர்கள் சித்திக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்களா? அவள்கூட அவர்களை ‘தெண்டத்தடியா’ என்று திட்டியிருக்கிறாள். சாமியே, அம்பாளே, எல்லாம் சாரியாகப் போய்விட வேண்டும். அவர்கள் மறுபடியும் கல்லாக ஆகிவிடவேண்டும். அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் ஒரு ராஜகுமாரியைக் குதிரையில்போய் தூக்கியபோது அவள்தான் சாபம் போட்டு அவர்களைக் கல்லாக ஆக்கிச் சுவரோடு ஒட்ட வைத்துவிட்டாள். செண்பகக் குழல்வாய்மொழி எட்டிப் பார்த்தாள். வேணும் நல்லா வேணும்! எல்லாத் தடியங்களும் சுவாரில் ஒட்டித் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்கள்.

சித்திக்குட்டியைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது சித்திக்குட்டியின் மடியில் உட்கார்ந்துதான் வந்தாள். ஆனால், சித்திக்குட்டி வழக்கம் போலன்றி ஒன்றுமே பேசவில்லை. அவளுக்கு வயிற்று வலியாக இருக்கும். அப்போதுதான் பேச மாட்டாள். சித்திக்குட்டி இப்போது எங்கே இருக்கிறாள்? செண்பகக் குழல்வாய்மொழி கோயிலுக்குள் போனாள். வெளித்திண்ணையில் தவுல், நாதசுரம் ஆகியவை துணி உறைக்குள் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மாமாக்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர், ‘பாப்பா இங்கே வா’ என்றார். ‘மாட்டேன் போ’ என்றபடி உள்ளே ஓடினாள். உள்ளே நிறைய ஆட்கள். இருட்டாக வேறு இருந்தது. தயங்கி நின்றபோது அருகே நின்ற ஒரு பெண் அவள் தலைமீது கை வைத்தாள். கோமதியக்கா! புதுப் புடவையும் பூவுமாக அவள் வேறுமாதிரி இருந்தாள்.

‘அக்கா சித்துட்டி எங்கே?’

‘கத்தாதேடி…’

கூட்டத்தில் சித்திக்குட்டியை மட்டும் காணோம். ரொம்பப் புழுக்கமாக இருந்தது. வெளியேயிருந்து ஆனந்தன் மாமா எட்டிப் பார்த்து, ‘மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாச்சு. பெண்டுகள்லாம் வாங்கோ’ என்றார். ‘அக்கா நானும்கா’ என்றாள் செண்பகக் குழல்வாய்மொழி. ‘சாரி, கையைப் பிடிச்சுக்கோ…’

எல்லாருமாக வெளியே வந்தனர். வெயிலில் கண்கூசி அவள் கண்களைப் பொத்திக்கொண்டாள். நாதசுரமும் தவுலும் ஒலித்தன. அப்பாவின் வழுக்கைத் தலை மட்டும் தொரிந்தது. சித்தியும் அத்தையும் முன்னால் சென்றனர். கையில் தாம்பாளத்தில் சிறிய அகல் எரிந்தது. பகல் வெளிச்சத்தில் ஒளியில்லாத சுடர் ஒரு பூ போல இருந்தது.

அப்பா ஒரு வழுக்கைத்தலை தாத்தாவிடம் பூச்செண்டைக் கொடுத்தார். பெரியமாலையைக் கழுத்தில் போட்டார். தாத்தாவின் தலைமீது ஒரு செவ்வந்தி இதழ் ஒட்டியிருந்தது. அந்தச் செண்டு ரொம்பப் பொரியது. வட்டமாக பச்சை இலை நடுவே செவ்வந்திப் பூக்கள். அதற்கு நடுவே ஒற்றை ரோஜா. அதை அப்படியே தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பாவிடம் கேட்டால் கொடுப்பார். கழுத்துதான் கொஞ்சம் வலிக்கும். குனிந்து பார்க்கவே முடியாது. அதற்குள் எல்லோரும் தேங்கி, கலைந்து, திரும்ப ஆரம்பித்தார்கள். செண்பகக் குழல்வாய்மொழி எட்டி எட்டிப் பார்த்தாள். ஒன்றுமே தொரியவில்லை. யாருமே அவளைத் தூக்கிக் காட்டவில்லை. அப்பாவாக இருந்தால், நிச்சயமா தூக்கிக் காட்டியிருப்பார். எல்லாரும் ரொம்பக் கெட்டவர்கள்.

எல்லாரும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். கோமதி அக்காகூடப் பிடியை விட்டுவிட்டாள். கோயிலுக்குள் நுழைந்ததும் நாதசுரம் உரக்க ஒலித்தது. தவுல் ஓசசை மேலும் முழங்கியது. செண்பகக் குழல்வாய்மொழி வெளியே தயங்கி நின்றாள். சுவாரில் காகங்கள் வாரிசையாக உட்கார்ந்திருந்தன. கரெண்ட் கம்பி மீதுகூட இரண்டு காகங்கள் இருந்தன. செண்பகக் குழல்வாய்மொழி மண்டபத்திற்குள் நுழைந்தாள். மண்டபத்தின் உள்ளே இன்னொரு மண்டபம் போல இருந்தது. அதன் தூண்கள் வேறுமாதிரி இருந்தன. தூண்களின் மேற்பகுதி வளைவாக பூபோல இருந்தது. ஒவ்வொரு தூணிலும் ஒரு அக்கா கையில் கோப்பையை வைத்துக்கொண்டு ஒட்டி நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் போய்ப் பார்த்தபோதுதான் அது கோப்பை இல்லை விளக்கு என்று தொரிந்தது. அதுவும் எரியவில்லை. கறுப்பாக எண்ணைப் பிசுக்கு. அத்துடன் அவர்கள் அக்காக்கள் இல்லை. மாமிகள் என்று தொரிந்தது. எல்லோருக்கும் மார்புகள் பொரிதாக உருண்டு இருந்தன. தலையில் பானையைக் கவிழ்த்ததுபோலப் பெரியகொண்டை. மூக்கில் பெரியவளையம். காதுகள் தோளைத் தொட்டுத் தொங்கின. கண்கள் நீளமாக, பொரிதாக இருந்தன. ஒரு மாமி தயக்கமாக வெளிப்பக்கம் குதிரைப்காரர்களைப் பார்த்த பிறகு, சினேகமாகப் புன்னகை புரிந்தாள். அவளும் சிரித்தாள். விளக்கைத் தொட்டுப் பார்த்தாள். காரி விரலில் படிந்தது. அதை நெற்றியில் பொட்டுபோல வைத்தாள். மாமி உடம்பும் மார்பும் குலுங்க, சத்தமின்றிச் சிரித்தாள். எல்லா மாமிகளும் திரும்பிப் பார்த்துச் சிரித்தனர்.

அப்போதுதான் அந்த விசும்பல் சத்தம் கேட்டது. தொடர்ந்து முணுமுணுப்புக் குரல் ஒன்றும். செண்பகக் குழல்வாய்மொழி ஒவ்வொரு மாமியாகப் பார்த்தாள். எல்லோரும் சிரிப்பை நிறுத்திவிட்டுப் புரியாமல் பார்த்தனர். பிறகு அவர்களின் கண்கள் ஒரு திசை நோக்கித் திரும்பின. அங்கே ஒரு தூணுக்குக் கீழே சித்திக்குட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் தாவணிக்குப் பதிலாக பட்டுச்சேலை கட்டியிருந்தாள். கழுத்தில் பாசிமணிக்குப் பதில் புதுச்சங்கிலி, சடைப்பில்லை வைத்து, கொண்டைப் பின்னல் போட்டு, நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள். அம்மாப் பாட்டி அவள் பக்கத்தில் அமர்ந்து என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

செண்பகக் குழல்வாய்மொழி அருகே போனாள். சித்திக்குட்டியின் நீல நிறப் பட்டுப்புடவை அழகாகப் பளபளத்தது. அவள் கன்னத்தில் பவுடர் வழியாக வியர்வை வழிந்தது. திடீரென்று அவள் உரத்த கேவல்களுடன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். அம்மாப் பாட்டியும் மூக்கைப் பிழிந்தபடி அழுதாள். சித்திக்குட்டிக்கு வயிற்று வலிதான். வயிறு வலிக்கும்போதுதான் இப்படி மடக்கி உட்கார்ந்து அழுவாள். அம்மாப்பாட்டி திரும்பி அவளைப் பார்த்தாள். ‘ஆருடி செம்பாவா? எல்லாம் ரெடியாச்சா அங்க?’
செண்பகக் குழல்வாய்மொழி, ஆமாம் என்று தலையசைத்தாள். அம்மாப்பாட்டி ‘சித்தியை விட்டுவிட்டு எங்கியும் போகக்கூடாது என்ன? பாட்டி இதோ வந்துட்டேன்’ என்றாள்.
‘சாரி பாட்டி.’ பாட்டி போன பிறகு என்ன செய்வது என்று தொரியாமல் செண்பகக் குழல்வாய்மொழி சிறிது நேரம் நின்றாள். பிறகு மெல்ல சித்திக்குட்டி அருகே அமர்ந்து, மெதுவான குரலில், ‘சித்துட்டீ’ என்று கூப்பிட்டாள்.

சித்திக்குட்டி அழுகையை நிறுத்திவிட்டு, நிமிர்ந்து புடவையால் கண்களைத் துடைத்தாள். கண்கள் சிவப்பாக வாரிவாரியாக இருந்தன. மூக்குச் சிவந்திருந்தது. புன்னகையுடன் ‘ஆருடா செம்பாக்குட்டியா? எங்கடா போயிருந்தே?’ என்றாள்.

செண்பகக் குழல்வாய்மொழிக்கு ஆறுதல் ஏற்பட்டது. ‘உனக்கு வயித்துவலியா சித்துட்டீ?’

‘இல்லடா’ என்றபடி சித்திக்குட்டி அவள் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டாள். ‘அதோ பாத்தியா? அந்தத் தூணிலே செலை இல்லை. உடஞ்சு போயிருக்கு. அதான் சித்தி அழுதேன்.’ உண்மைதான். எதிர்த்த தூண் மூளியாக உடைந்து நின்றிருந்தது. செண்பகக் குழல்வாய்மொழிக்கும் வருத்தம் ஏற்பட்டது.

சித்திக்குட்டி எழுந்தாள். ‘நீ இங்கியே இருடா கண்ணு. சித்தி ஒண்ணுக்குப் போயிட்டு வந்திடறேன்.’

‘நானும் வருவேன்.’

‘ஐயையோ. அப்ப இந்தத் தாம்பாளத்தை யார் பாத்துப்பா? பாட்டி சொன்னது ஞாபகமிருக்கில்லா?’

‘ம்.ம்…’

‘இங்கியே இருடா. சித்தி இதோ வந்திட்டேன்.’

சித்திக்குட்டி மண்டபத்தின் மறுபக்கம் போய்ப் படி இறங்கினாள். திடீரென்று கோயிலுக்குள் தவில் முழங்கியது. நாதசுரமும் குலவைச் சத்தமும் கேட்டது. எல்லாத் தூண்களில் இருந்தும் தவில் ஒலி கேட்பதுபோல இருந்தது.

செண்பகக் குழல்வாய்மொழிக்குப் பயமாக இருந்தது. எல்லா மாமிகளும் அப்படியே அவளைப் பார்த்தபடி நின்றார்கள். ‘சித்துட்டீ’ என்று கூப்பிட்டாள். பதில் இல்லை. அவள் குரலே மேள இரச்சலில் மேலே எழவில்லை. ஓரிருமுறை கூப்பிட்டு விட்டு ஓடி மறுபக்கம் போய்ப் பார்த்தாள். அங்கே கருகிய புற்கள் பரவிய பெரியகோட்டை மதில்தான் யானைகள் வாரிசையாக நிற்பதுபோல நின்றிருந்தது. இரண்டு பெரியஅரளி மரங்கள். தரை முழுக்க மிளகாய் வற்றல்போல அரளி இலைச் சருகுகள். சுவரோரமாக மிகப்பெரியகிணறு, வட்டமான கருங்கல் சுற்றுச் சுவருடன். சித்திக்குட்டி இல்லை. ‘சித்துட்டீ…’ – பதில் இல்லை.

‘சித்துட்டீ’ என்று கூவியபடி செண்பகக் குழல்வாய்மொழி மீண்டும் மண்டபத்தில் ஓடினாள். மாமிகள் பயத்துடன் அவளைப் பார்த்தனர். அவர்களில் ஒருத்தி கள்ளத்தனமாகப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். அங்கே மூளியான தூணில் இப்போது ஒரு சிலை ஒட்டியிருந்தது. அவளுக்கு உடனே எல்லாம் புரிந்தது. அதனருகே ஓடினாள். கல் உடம்பும், பெரியமார்புகளும், கொண்டையும் இருந்தாலும் அது சித்திக்குட்டிதான் என்பது முகத்தில் தொரிந்தது.

‘சித்துட்டீ’ என்றபடி அவள் அந்த விளக்கை எட்டிப் பிடித்தாள். சித்திக்குட்டி கீழே கண்களைச் சாரித்து வருத்தமாகப் புன்னகைத்தாள். சித்திக்குட்டி ஒளிந்து கொண்டிருக்கிறாள். அவளை அம்மாப்பாட்டி அடித்து, அழவிட்டிருக்க வேண்டும் அதனால் தான்.

‘சித்துட்டீ, நீ இன்மே எப்ப வீட்டுக்கு வருவே.’

சித்திக்குட்டி சிரித்தாள். பிறகு அழுகையை அடக்குவதுபோல உதடுகளை இறுக்கிக்கொண்டாள்.

கோயிலின் சிறிய வாசல் வழியாக அம்மாவும், பாட்டியும், ராணிச்சித்தியும் வருவது தொரிந்தது. சித்திக் குட்டியைத் தேடித்தான் வருகிறார்கள். ச்இத்திக்குட்டியை அழ வைத்தார்கள். நன்றாகத் தேடட்டும். நான் சொல்லவே மாட்டேன். செண்பகக் குழல்வாய்மொழிக்குச் சந்தோஷமாக இருந்தது.

-இந்தியா டுடே, 1995 (நன்றி: https://www.jeyamohan.in)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *